அவ்வைமகள்

 

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான பழமொழி. இதனை, இதன் சரியான பொருள் தெரியாமல் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்ற நிலையில் நம் சிந்தனையைக் கொஞ்சம் தமிழில் புலியின் பால் செலுத்துவது நல்லது.

(புல் + இ = புலி) புலி எனும் வனவிலங்கு வாழ, புல் இன்றியமையாத ஒன்று. புல் இன்றி வாழாப்புலி என்பதே புலியின் இலக்கணம். புல்வெளிகளும், புதர்களும், பெரிதான நீர்வளம் கொண்ட அடர்வனங்களும் நிறைந்து இருக்கும் சூரிய ஒளி மிகுந்த, விஸ்தாரமான, பூகோளப்பகுதியிலே மட்டும் புலிவாழும்.

புல்லையும், இலைதழைகளையும் உண்டு வாழும் மான்களும், காட்டுமாடுகளும், இலைதழைக்ளோடு, கிழங்குகளையும் பெயர்த்து உண்ணும் காட்டுப்பன்றிகளும், புலியின் பிரதான உணவு என்பதால் புல்லின்றிப் புலி இல்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்ல, புலியும் கூடப் புல்லை உண்ணும். புலி புல்லை உண்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு: (1) உண்ணும் உணவு – செரிக்க, (2) செரிமானக்கோளாறுகள் நீங்க, (3) விரதமிருந்து செரிமானமண்டலத்தைத் தூய்மைப்படுத்த.

பசிக்காக ஒரு மிருகத்தை வேட்டையாடி உண்ணும் புலி – தனது ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பின்னும் புல்வெளியில், புல்மெத்தையில் சாவதானமாய்ப் படுத்து அடிவயிறு புல்லில் நன்கு ஸ்பரிசுக்குமாறு உடலை லாவகம் செய்து மசாஜ் செய்தபடி, அங்குள்ள புல்லையும் பிடுங்கி உண்ணுகிறது. புல் மசாஜ் வெளிப்புறத் தூண்டுதலை உண்டாக்குகிறது, உள்ளே சென்ற புல்லோ, உண்ட உணவு செரிமானம் அடையவும் – கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உணவோடு சேரவும் உதவுகிறது; கால்சியம், மெக்னீசியம், மற்றும், உப்பு புலிக்குப் புல்லின் நன்கொடை.

அதுமட்டுமல்ல, செரிமானக்கோளாறு எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் புல்லை உண்பது புலியின் வாடிக்கை. இன்னொரு ஆச்சரியமான நிகழ்வு என்னவென்றால் புலி வகையறாக்கள், மாதத்தில் ஒருநாள் வேறெதையும் உண்ணாது புல்மட்டுமே உண்டு விரதமிருக்கும். வளர்பிறையில் பதினோராம் நாளான ஏகாதசியன்று பூனைகள் அருகம்புல்லும் கற்பூரவல்லியும் மட்டும் உண்டு விரதம் இருப்பதை நாமறிவோம். தங்கள் செரிமான மண்டலத்தைப் பூனைகள் இவ்வாறு தாமே சுத்தம் செய்து கொள்ளும். புல்லை அரைத்து மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீர் வளப்பமும், அரைத்து மென்ற புல்லின் கொரகொரப்பும் சக்கையும் சேர்ந்து, பூனைகளின் இரைப்பையையும் குடலையும் “பிரஷ்” போட்டுத் தூய்மை செய்வதுபோல் தூய்மை செய்துவிடும். ஆனால், புல்லை பிரதானமான உணவாக உண்ணும் செரிமான மண்டலம் புலிக்கு இல்லை. எனவே புல் என்பது புலியின் உணவல்ல – அது ஒரு உணவு உதவிப்பொருள் மட்டுமே – ஒரு சுத்திகரிப்புச் சாதனம் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

புல்லை உண்ணும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அசைபோடும் பிராணிகள் என்கிறோம். அவை முதலில் உணவை அவசர அவசரமாய் விழுங்கி – இரைப்பையில் முதல்தளப் பதனத்தை ஏற்படுத்திவிடுகின்றன; அடுத்து, அவ்வாறு இரைப்பையில் பதனமான உணவை மீண்டு வாய்க்குள் கொண்டுவந்து – சாவதானமாய் அசைபோட்டு அரைத்து, மீண்டும் இரைப்பைக்குள் செலுத்தி செரிக்கும் நுட்பமான செரிமான மண்டல அமைப்பைக் கொண்டவையாக அவை இருக்கின்றன. (அவற்றின் இரைப்பையில், டீசல் எஞ்சினில் இருப்பதுபோல் நான்கு அறைகள் உண்டு). ஆனால், புலியின் செரிமான மண்டலமோ மிகவும் எளிமையானது. எனவே அதற்கு, உணவை செரிக்க, கூடுதல் உதவி தேவைப்படுகிறது. எனவே, உணவின் மேலீடாக, புல்லையும் உடன் உண்ணவேண்டிய அவசியம் புலிக்கு உள்ளது. ஆக, புல்லின் துணையின்றி புலியால் வாழ இயலாது என்பது தெளிவு. புலி மட்டுமல்ல – பற்பல விலங்குகளுக்கும் – உணவின் மேலீடாக புல்லையும் இன்னபிற இலைதழைகளையும், (ஏன் கல்லையும் மண்ணையும் கூட) உண்ணவேண்டிய அவசியமும் – பரிணாம வழக்கும் உள்ளது.

உணவு மேலீடாக மட்டுமில்லாமல் காயங்களை ஆற்றிக்கொள்ளவும் கூட புல் உள்ளிட்ட இலைதழைகளை மிருகங்கள் நாடுகின்றன. இவ்வகையில் வல்லாரைக்கொடி, புலியின் உற்ற தோழன். வேட்டையிடும்போதும், வலிய மிருகத்தின் அழுத்தமான மாமிசத்தை எலும்புகளிலிருந்து இழுத்தும் கிழித்தும் உண்ணவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் புலிக்கு ஓயாமல் காயங்கள் ஏற்படும். இந்தக் காயங்களை, வல்லாரையின் மீது புரண்டும், அதன் இலை-தண்டுகளைக் கசக்கிக் காயத்தின் மேல் இட்டும் புலி தனக்குத் தானே சிகிச்சை செய்துகொள்ளுகிறது. இவ்வாறு, புலியின் ஆத்மார்த்த மருந்தாய் வல்லாரை விளங்குவதால் அதனை, “புலிப்புல்” என்றே தமிழுலகம் வழங்குகிறது. அதே போல, புலிக்கு, சமிக்ஞைகள் தருவதில் ஒரு குருவிக்கு பிரத்யேக அக்கறை இருக்கிறது. அக்குருவியை, “புலி வானம்பாடி” என்றே அழைக்கிறார்கள். அக்குருவியின் சிறகு கூட ஏறக்குறைய புலி வண்ணத்தில் கோடுகளுடன் காணப்படும். இவ்வாறு விலங்குகள் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதை, இன்றைய அறிவியல், “Zoopharmacognosy” என்று பெயரிட்டு, அதனை, ஒரு தனித்துறையாக வைத்து ஆய்வு செய்து ருசிகரமான தகவல்களை அறிந்து அறிவித்து வருகிறது.

ஆக, சாப்பாட்டிற்குப் பிறகு தாம்பூலம் என்கிற கதையாய், புல்லை உண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் புலி இருக்க, “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று பழமொழி வருகிறதே என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படுவது இயல்பே. இப்பழமொழியின் உண்மையான பொருளை அறிந்து கொள்ளவேண்டுமென்றால், “புலி ” என்னும் சொல் தமிழில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

பார்க்கப்போனால், “புலி” எனும் தமிழ் வழக்காடல் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் சுகானுபவத்தை அள்ளிஅள்ளித் தருகிறது . இதோ காணுங்கள் கவி ரசம் சொட்டும் ஓர் அற்புத புலிக் கவிதையை (தனிப்பாடற்றிரட்டு: இரண்டாம்பாகம்; திரட்டியவர்: கா இராமசாமி நாயுடு; வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1914; இந்நூலை சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நான் வாசித்திருக்கிறேன்; பெயர் தெரியாத கவிகள் பலர் இயற்றிய பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன).

புலியைக்கொடுத்து பசுவாங்கியோர் புலிப் பூங்குழலாள்
புலியைப்பசுத்தின்னவிட்டுப் புலியைத்தினாதகற்றிப்
புலியையரைத்துப் பலகாரஞ்செய்து பொருந்துமுகப்
புலியைக்களிப்புடன் சாறுவைத்தாடன் புருஷனுக்கே

புலி = பொன் ; புலி = புலி மலராம் வேங்கை மலர் ; புலி = நெல்லின் வைக்கோல்; புலி = சோளக்கதிர் ; புலி = துவரை-உளுந்து ; புலி = வடை

இப்பாடலின் பொருள் யாதெனில்: பொன்னைக் கொடுத்து ஒரு பசுவை வாங்கியவளான, வேங்கை மலரைக்குழலில் செருகியிருந்த ஒரு பெண், நெல்லின் வைக்கோலை அப்பசு உண்ணுமாறு செய்து, சோளக்கதிரை அப்பசு தின்னாதவாறு அதனை அகற்றி விட்டு, உளுந்தையும் துவரையையும் அரைத்துப் பலகாரம் செய்து – பொரித்ததால், பொருந்திய முகத்தை உடைத்தான வடையை நன்கு புளித்த மோராலான குழம்பிலிட்டு வைத்தாள் தனது புருஷனுக்காக.

ஆக, புலி என்பதற்கு பல பொருட்கள் உண்டு என்பது வெளிப்படை. இதுமட்டுமல்ல;

இதேபோல், புல் எனும் சொல் பசும்புல் என்பதைத்தவிர இன்னபிற பயன்பாடுகளையும், தமிழ் வழக்கில் கொண்டுள்ளதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக: புல்லர் (வேடர்), புல்லியர் (கீழோர்), புல்லார் (பகைவர்), புல்லல் (அணைத்தல்), புல்லிது (பாழ்பட்ட அல்லது பாவம் சோர்ந்த); புல் (களை) எனப் பல பயன்பாடுகள். புலி எனும் ஒற்றைச் சொல்லின் பயன்பாட்டையும்; புல் எனும் ஒற்றைச் சொல்லின் பயன்பாட்டையும் வைத்துப் பார்த்தால், தமிழை, மொழிகளில் புலி என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும்!

இது நிற்க.

இப்போது பழமொழிக்கு மீண்டும் வருவோம்: “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்கிற பழமொழியில் “புல்” என்பது பச்சைப்புல்லைக் குறிப்பதாகக் கொண்டால் – புல்லைத்தின்னும் பழக்கமுள்ள புலி என்ன பசித்தாலும், புல்லை, புலால் உண்ட பின் உணவு மேலீடாக மட்டும் உண்ணுமே தவிர ஆடுமாடுகள் போல் புல்லை, பிரதான உணவாகக் கொண்டு புல்மேய்ந்து வாழாது என்பதாகக் கொள்ளலாம்.

எனினும், தமிழ் தர்மமாகப் பார்த்தால், இப்பழமொழியில், புல் என்பதை பசும்புல் எனக்கொள்ளாமல், “தரம் தாழ்ந்த உணவு” என்று கொள்வது தான் பொருத்தம்.

என்னதான் பசித்தாலும் – அளவில் பெரிய – வலிய மிருகங்களை மட்டுமே புலி தானே வேட்டையாடி உண்ணுமே தவிர அற்பசொற்பமான மிருகங்களான – முயல் – எலி – பறவைகள் – பாம்பு போன்றவற்றை ஒருக்காலும் சீண்டாது. மேலும், புலியானது, என்னதான் பசித்தாலும், ஒருக்காலும் பிறர் வாய்வைத்த உணவை உண்ணவே உண்ணாது. அது மட்டுமோ? அதன் உணவை அதுவும் அதன் குடும்பமும் சுயமாக வேட்டையாடி வென்று உண்ணவேண்டும் என்பது கட்டளை. அதுவும், அது வேட்டையாடிய உணவை, அதுவும் அதன் குடும்பம் மட்டுமே முதலில் உண்ண வேண்டும் என்பது புலிக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, குழந்தைகளும், பெண்ணும் உண்டபின்பே ஆண் புலி உண்ணும். வேறு ஏதாவது மிருகம் அவர்கள் உண்ணும்போது வந்து, உணவில் வாயை வைத்துவிட்டால் கடுமையான சண்டை ஏற்படும். பிறர் வாய் வைத்த அந்த உணவை அப்படியே துறந்துவிட்டுப் போகவும் புலி தயங்காது.

இதுமட்டுமல்லாது- புல்லைத் தாண்டி, சில கூடுதல் செய்திகளையும் இங்கு தெரிந்து கொள்வது நல்லது. புலிக்கும், புல்வெளிக்கும், காடுகளுக்கும், வலிய மரங்களுக்கும்-காடுகளுக்கும் அதிநெருங்கியத் தொடர்புண்டு. முதன்மையாக, அடர்க்காடுகளும் அடர்ந்த புல்புதர்களும் புலிக்கு, உருமறைவுக்கு (Camouflage) உதவுகின்றன. (படம் காண்க: https://www.asiangeo.com/gallery/tiger-tiger-burning-bright/). ( பல உயிரிகளின் வாழ்வாதாரத்திற்ககு உருமறைவு இன்றியமையாதது என்பதை நாமறிவோம். அல்லவா?)


அடுத்து, மரக்கிளைகளில் அமர்ந்து கால்களை ஹாயாகத் தொங்கவிட்டபடி இளைப்பாறுவது என்பது புலிகளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு (படம் காண்க: dreamstime.com).

மரத்தின் மேல் இளைப்பாறும்போது தனது எல்லைவரையறையும் சுற்றுப்புறசூழலும் சரியாக இருக்கின்றனவா என்பதை புலி சரிபார்த்துக்கொள்ளும். தனது எல்லை வரையறையை, பிற புலிக்குடும்பம் ஏதாவது திருடிக்கொள்ள முயன்றால் அங்கே ரணகளம் ஆகிவிடும் உயிர்ச்சேதம் தடுக்கவியலாது. மேலும், மேலேறிப் பார்க்கும்போது அடுத்து தன வேட்டையை எங்கு துவக்கலாம் என்பதையும் புலி தனக்குள் தீர்மானித்துக்கொள்ளும்.

பொதுவாக, ஒரு புலிக்குடும்பம் தனக்கென்று விஸ்தாரமான பிரதேசத்தை வரையறுத்துக் கொள்கிறது; குறுகிய இடங்களில் புலியால் வாழ முடியாது. ஆடியும், சாடியும், ஒடியும், உடலுறவு கொள்ளவும், தன் குழந்தைகளுக்குப் பயிற்சி தரவும், என நிறைய இடம் தேவைப்படுகிறது ஒரு புலிக்குடும்பத்திற்கு. அதுவும் பெண் புலி, பிரசவத்திற்காக, தராளமான இடத்தை விரும்புகிறது. பிறந்த குட்டிகளை பெரிதாகும் வரை, மரங்களுக்கு கீழே – புதர்களில் குட்டிகளை மறைத்து வைப்பது புலியின் வழக்கம்.

புலிகளின் பரிணாம வளர்ச்சியிலேயே அவை காட்டின் அவதாரமாகவே – சூழ்நிலையின் பிள்ளைகளாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. புலித்தோலின் மேலுள்ள வரிச் சித்திரம் நெருங்கிய மரகிளைகளையே குறிக்கிறது. இதன் காரணமாகவே, நெருங்கிய காட்டுப்பகுதிகளை – (புலியே இல்லையென்றாலும் கூட) அவற்றைப் புலிக்காடுகள் – புலிப்புதர்கள் என்றே அழைப்பதுண்டு (படம் காண்க: https://en.wikipedia.org/wiki/Tiger_bush)

இறுதியாக, ஒன்றை நினைவிலூட்டிக்கொள்ளுவது நல்லது: வனங்களை நேசிக்கும் புலிகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது. மனிதர்களை விடுத்து வெகுதூரத்தில் வசிக்கவே அவை ஆசைப்படுகின்றன.+

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தமிழில் புலி

  1. டாக்டர் ரேணுகா ராஜசேகரன்,

    “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்னும் பழமொழிக்கு பன்மயப் பொருள் கூறியதற்குப் பாராட்டுகள்.

    ” புலி வருது ! புலி வருது !! ” என்னும் பழமொழிக்கு அதுபோல் பன்முகப் பொருள் உள்ளதா ?

    சி. ஜெயபாரதன்

  2. வணக்கம் ஐயா!
    சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் எழுப்புவதில் உங்களது தனித்திறமை கண்டு மகிழ்வடைகிறேன்.

    வினாக்கள் பொதுவாக ஒற்றையாகப் பிறப்பதில்லை. ஒருவினாவின் கரு முளைவிட்டதென்றால், அங்கே தொடர் சிருஷ்டியாக வேறு சிலவினாக்களும் பிறந்துவிடும்.

    இவ்வாறு ஒருவருக்கு வினாக்கள் தொகுதியாக வெளிப்படுகின்றதென்றால், அவர் சிந்தனை வளத்திலே, உயர்நிலை வகிப்பவர் என்று கொள்ளலாம். தங்களது உயர்வளச் சிந்தனையைப் பாராட்டுகிறேன் ஐயா!

    வினாக்களில் புலி என்றழைக்கப்படும் உயர் சிந்தனையாளர் ஒருவரை நம் புவியரசி ஈன்றெடுத்தாள். அவர்தான் அரிஸ்டாட்டில்.

    நாம் எத்தனைக் கேள்விகளைக் கேட்கமுடியும் என்றால், நமக்கு எத்தனைப் பொருட்களைத் தெரியுமோ அத்தனைக் கேள்விகளை நாம் எழுப்பமுடியும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. இங்கு பொருட்கள் என்பதில் உயர்திணை மற்றும் அக்றிணைப் பொருட்கள் யாவுமே அடக்கமாகும்.

    ஆனால் இவ்வினாக்கள் யாவற்றையும் நான்கே நான்கு வினாக்களுக்குள் அடக்கிவிடமுடியும் என்பார் அரிஸ்டாட்டில்.

    இதனை அவர் எத்தனை அழகாகக் கூறுகிறார் பாருங்கள்

    ஒரு பொருள் உள்ளது என்று தெரிந்துவிட்டால், அதனது தன்மையை நாம் வினவுகிறோம், அப்பொருள் இத்தன்மையது என்று அறிந்துகொண்ட பின் அதனது விவரங்களை வினவுகிறோம். விவரங்கள் யாவற்றையும் அறிந்த பின், அடுத்து அது ஏன் அவ்வாறு உள்ளது என வினவுகிறோம்.
    (தனது போஸ்டீரியர் அனலிடிகா என்ற நூலில் அரிஸ்டாட்டில் இவ்வாறு கூறியுள்ளார்).
    எனவே தங்கள் கேள்வி வழி, நானறிந்த சேதிகளை இங்க பகிர்ந்து கொள்கிறேன்

    “புலி வருது! புலி வருது!” என்பது நேரடியான வாசகம் என்பதே எனது தாழ்மையான கருத்து.
    வயோதிகத் தளர்ச்சி, வியாதி, அல்லது உடல் ஊனம் ஆகிய காரணங்களால் காட்டுவிலங்குகளை வேட்டையாடும் தேகபலம் இல்லாத புலிகள், காட்டையொட்டிய நாட்டுப்பகுதிகளுக்குள் பிரவேசம் செய்து அங்குள்ள வீட்டு விலங்குகளை (மனிதர்கள் உள்ளிட்ட) சுலப வேட்டையில் அள்ளிக்கொண்டுப் போவது இயல்பே.

    மேலும், மற்ற விலங்குகளின் மாமிசத்தை விட நரமாமிசமே மெத்த ருசி என மனிதர்களை மட்டுமே குறிவைக்கும் விசேட நர இச்சைப் புலிகளும் உண்டு. அத்தகு புலிகள் மனித வாழ் இடத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் நுழைபவை. இவ்வாறு புலிக்கு பலியாகி இருக்கிற மனித உயிர்க்ளின் எண்ணிக்கை ஏராளம். எனவே புலி பயம் என்பது மக்களுக்கு காலந்தொட்டு இருந்து வந்திருக்கிற பயம் தான். புலி எந்த நேரமும் வரும் என்கிற எச்சரிக்கை உணர்வோடு புலியை எந்த நிமிடமும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்கிற விழிப்புணர்ச்சியோடு மக்கள் வாழ்ந்திருக்கிற கால்காட்டங்கள் உண்டு.

    இவ்வாறான பின்ணணியில், புலியின் பால் உள்ள பய உணர்வை, ஒரு கபட நாடகமாய் , விளையாட்டுப்போக்காய் எவரேனும் எடுத்தாள்வர் எனில், அதனால், ஏற்படும் விளைவுகளை எடுத்துக்காட்டும் நோக்குடன் இவ்வாசகம் நடைமுறைக்கு வந்திருக்கலாம்.

    வாய்ப்புக்கு மிக்க நன்றி ஐயா
    வணக்கம்

  3. டாக்டர் ரேணுகா ராஜசேகரன்,

    வணக்கம்.

    புலிக் காவியம் சுவையாக நீள்கிறது.

    பேராசிரியர் எந்தப் பாடங்கள் நடத்துகிறார் என்று தெரிந்தால், அந்த வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று ஓர் ஆர்வம் எழுகிறது. எந்த வயதிலும் ஒருவர் கற்கலாம். எந்த வயதிலும் ஒருவர் கல்வி புகட்டலாம். கற்றது கடுகு அளவு. கற்க வேண்டியது கால் பந்து அளவு. கற்றாரைக் கற்றாரே காமுறுவர். கற்றதனால் பெற்ற பயன் ஏது, புவிச்சிற்பி நற்படைப்பைக் காணாத போது ? கற்றதை விற்கும் போது, கல்லூரி மீன் சந்தை ஆகிறது ! கல்வி கரையில, கற்பவர் நாட் சில !

    புலிக் காவியத்தில் இன்னும் இரு பழமொழிகள் : விளக்கம் எழுதுங்கள்

    1. ” புலிக்குப் பயந்தவர் என்மீது படுத்துக் கொள்வீர் “. என்று இடம் கொடுத்தான் ஒருவன்.

    2. “புலி வால் பிடித்த நாயர்”

    சி. ஜெயபாரதன், கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.