Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

வாழ்ந்து பார்க்கலாமே 15

க. பாலசுப்பிரமணியன்

 

நலமான வாழ்க்கைக்கு ஒரு நடைப்பயணம் !

வாழ்க்கையில் பல சாதனையாளர்களை நாம் சந்தித்திருக்கின்றோம். இவர்கள் அனைவருக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள் என்ன? – வாழ்க்கைக்கு ஒரு இலக்கு, தெளிவான சிந்தனை, பயணத்திற்கேற்ற பாதை, முயற்சி, கடின உழைப்பு, பொறுமை, தோல்விகளை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் மனப்பான்மை, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுவதற்கான துணிச்சல் மற்றும் வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம்….

இத்தனையும் இருந்தாலும் ஒருவருக்கு உடல் நலமும் மனநலமும் இல்லையென்றால் வெற்றிப்பாதையில் முன்னேறுவதற்கான பல தடைகள் வந்துகொண்டே இருக்கும். இவற்றையும் ஏற்று சந்தித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.. ஏராளம்…

உலகில் பாதியை தன் வீரத்தால் வென்ற ரோமாபுரி அரசன் ஜூலியஸ் சீசர் வலிப்பு நோயால் பாதிக்கப் பெற்றவர். இந்த நோய் அவருடைய வீரத்தையும் இலக்கினையும் வீழ்த்தவில்லை…தன்னுடைய திறமையினால் உலகை வியக்க வைத்த பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் சற்றே உயரம் குறைவாக இருந்ததால் சிறிது தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையானதாக சரித்திரம் கூறுகின்றது… ஆனால் அதுவே அவனுக்கு  உழைப்பாலும் முயற்சியாலும் வெற்றிக்கனியை பறித்திட வழி வகுத்தது. ஏழு முறை ஆஸ்கார் பரிசுகள் வென்ற விருது பெற்ற ரிச்சர்ட் பர்டன் என்பவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். பல நேரங்களில் படப்பிடிப்பின் போது மயங்கி கீழே விழுந்தவர்.. தடைகள் அவர் முன்னேற்றத்திற்கு தடையிடவில்லை.

உலகப் பிரசித்தி பெற்ற பீத்தோவன் என்ற இசைமேதைக்கு சரியாக காது கேட்கவில்லை. பல நேரங்களில் மேடைகளில் கிடைத்த கர ஒலிகளைக்கூட அவரால் கேட்கமுடியவில்லை… ஆனால் இசையில் உலக சாதனை படைத்தவர்… தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் என்பவருக்கு சரியாகக் காது கேட்கவில்லை. ஆனால்  உலகில் ஒருவர் பேசுவதை மற்றவர் தூரத்தில் இருந்தே கேட்பதற்கான நுண்கலையைத் தந்தவர்…பைரன் என்ற மிகச் சிறந்த கவிஞருக்கு மூளையில் நரம்புக்கோளாறு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தான் எழுதிய படைப்புகளையே அவர் மறந்தார்.ஆனால் அவர் படைப்புத் திறன் குறையவில்லை. புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ் என்பவர் மனநோயால் பாதிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் மூன்று முறை வைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு முறை திரும்பி வந்ததும் ஒரு புதிய பதிப்பைத் தந்தார்..

இது போன்ற பல சாதனையாளர்களின் சரித்திரங்கள் நமக்கு முன்னோடியாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்த வரை வாழ்வில் அன்றாட வாழ்க்கையை சமாளித்து வெற்றிநடை போடுபவர்க்குத் தேவையானவை – உடல் நலமும் மன நலமும்.

“சுவரிருந்தால் தானே சித்திரம் எழுத?” என்பது வழக்கு மொழி. “உன்னுடைய உடலைப் பாதுகாத்துக்கொள். உன் வாழ்க்கை அதற்குள்தான் அடங்கியிருக்கின்றது.” என்று உலகளாவிய தத்துவ மேதைகளும் அறிவியல் வாதிகளும் மருத்துவர்களும் கூறிவருகின்றனர். இந்த உடல் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு மிகப் பெரிய பரிசு. எத்தனை எலும்புகள்.. எத்தனை நரம்புகள்.. எத்தனை வேதியல் பொருட்கள்.. எத்தனை விதமான அசைவுகள்…வியப்பைத்தரக்கூடிய மனித மூளை… பல நூறு கணினிகள் சேர்ந்தாலும் ஒரு மூளை செயல்படுத்தும் சாதாரணச் செயல்களைக் கூட ஈடுபடுத்த முடியாத விந்தை… இந்த மூளையின் படைப்புத்திறன்… அதனுடன் சேர்ந்த உணர்வுகள்.. ஆசைகள்.. விருப்பங்கள்.. கனவுகள்… எண்ணங்கள்.. கருத்துக்கள்… அறுசுவையை ரசிக்கின்ற நாக்கு.. எத்தனை விதமான உணவுகளை செரிக்கின்ற திறன்… இது ஒரு மிகப்பெரிய பரிசல்லவா? இதை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா…?

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இதைப் பற்றி நாம் சிறிது கூட கவலைப்படுவதில்லை. இந்த உடலில் சில உபாதைகளும் நோய்களும் வந்து நம்மைத் தாக்கும் பொழுதுதான் இதற்குத் தேவையான மரியாதை கிடைக்கின்றது..

பணத்துக்கும் பதவிக்கும் உறவுக்கும் புகழுக்கும் கொடுக்கின்ற கவனத்தை நாம் நம்முடைய உடலுக்கு ஏன் கொடுப்பதில்லை? இந்த உடல் நலமாக  இல்லையென்றால் மீதி அத்தனைக்கும் மதிப்பு ஏது? உடல் நலம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்கின்ற அனைவரும் தான் மரணத்தை எய்தும் முன் ஒரு நோய் நொடியின்றி படுக்காமல் போக வேண்டும் என்றுதானே நினைக்கின்றார்கள்? எனவே, வாழ்க்கையின் வெற்றிக்கும் மிக அத்தியாவசியத் தேவை உடல் நலம்.

உடல் நலத்திற்கும் மூளைத் திறன்களும் உள்ள நெருங்கிய உறவு பற்றிய பல ஆராய்ச்சிகள் நம்மை வியப்படையச் செய்கின்றன. வளர்ச்சி உயிரியல் (Developmental Biologists) பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மற்ற உயிரினங்களைவிட மனித இனத்தின் மூளை சிறப்பாக இருப்பதற்கான காரணம் மனிதர்களின் வளர்ச்சியில் உடல் பயிற்சியும் உடல் உழைப்புமே என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்கள். ஒரு காலத்தில் ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளில் பன்னிரண்டு மைல்கள் நடைப்பயணம் செய்ததாகவும் அதற்கான பலனே திறன் வாய்ந்த மூளை என்றும்  கூறுகின்றனர். உடற் பயிற்சியும் உடல் உழைப்பும் பல நோய்களிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றது.

மூளையின் நியதிகள் (Brain Rules)   என்ற ஒரு புத்தகத்தில் எழுதியுள்ள ஜான் மெடினா (John Medina)  என்ற மூளை-நரம்பியல் அறிவியல் நிபுணர் கூறுகின்றார்

உடற் பயிற்சி ஒரு மனிதனுடைய உடலைக் கோப்பாகவும், பாதுகாப்பாகவும், அழகாகவும் வைப்பது மட்டுமின்றி, அவனுடைய மூளையின் வலிமை, சிந்திக்கும் திறன், நினைவுத் திறன், படைப்பாற்றல் ஆகிய பலவற்றை  வளர்க்கவும், வலுப்படுத்தவும் காரணமாக அமைகின்றது.”

எனவே, வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்குவது மட்டுமல்லாது பல விதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வைப்பதும் அவர்களுடைய பிற்காலத்தின் வளத்திற்கு கொடுக்கப்படும் உரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உடற்பயிற்சி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மட்டுமே என்ற எண்ணம் கொள்ளாது அனைத்து வயதுகளைச் சார்ந்தோருக்கும், அனைத்துப் பாலினங்களுக்கும் பொதுவானது என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம்.

வாழ்க்கை என்றும் சிறப்பாகவும் புத்தொளியுடனும் இருக்க நாம் உடல் நலத்தில் சற்றே  அதிக கவனம்  செலுத்தினால் என்ன?

வாழ்வதை சிறப்பாக வாழ்ந்து பார்க்கலாமே !

(தொடரும்)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க