நலம் .. நலமறிய ஆவல் (104)
நிர்மலா ராகவன்
நான் தனிப்பிறவி. நீயும்தான்!
அன்பாக வளர்க்கப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர்கிறார்கள். பிறரிடம் அன்பாக அவர்களால் நடக்க முடிகிறது. பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடந்தால் நற்பெயர் எடுக்க முடியும் என்று அவர்களுக்குத் தோன்றிப்போகிறது.
சற்றே பெரியவர்களானதும், பிறரது எதிர்பார்ப்பின்படி நடந்தால்தான் அவர்களுக்கும் நம்மைப் பிடிக்கும் என்று அதன்படி நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், பலர் பாராட்டினாலும், மனத்துள் ஒரு வெறுமை. ஏனென்றால், அவர்கள் தமக்குப் பிடித்ததுபோல் நடக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன உகந்தது என்றே அறியாது நடக்கிறார்கள்.
`நீ என்ன, இப்படி இருக்கிறாயே!’ என்று வித்தியாசமாக இருப்பவரைப் பிறர் கேலி செய்வார்கள். அவர்களை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி. ஏன் இப்படி இருக்கிறோம் என்று அனைவருக்கும் விளக்க வேண்டுவதோ, `ஏனோ இப்படி ஆகிவிட்டேன்!’ என்று வருந்துவதோ வேண்டாத காரியம்.
பெரும்பாலும் இளைய வயதினர்தாம் பிறர் ஏற்க மாட்டார்களோ என்ற அச்சத்தால் கண்மூடித்தனமாக மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்.
தமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, எங்காவது கிரிக்கெட் பந்தயம் நடக்கும்போது, அதைப்பற்றி விவாதிப்பார்கள் கல்லூரி மாணவிகள். எதுவும் புரியாவிட்டாலும், அல்லது ஆர்வம் இல்லாவிட்டாலும் கலந்துகொள்ள வேண்டும். வகுப்பிற்கு மட்டம் போட்டாவது வானொலியில் வர்ணனையை ரசித்துக் கேட்பார்கள்.
பிரபல நடிகர் அஜித் ஒரு படம் முழுவதிலும் வேஷ்டி அணிந்து நடிக்க, பண்டிகைக்கு எல்லா இளைஞர்களும் வேஷ்டி வாங்கினராம்!
`புகழ்பெற்ற திரைப்படத்தில் கதாநாயகி இந்தமாதிரி புடவையைத்தான் அணிந்திருந்தாள்!’ என்ற விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் புடவைகளுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது.
பிறரைப் பின்பற்றி நடந்தால் தம்மை யாரும் பழிக்க மாட்டார்கள், சங்கடம் எதுவும் வராது என்று அதிகம் யோசியாது எதையும் செய்பவர்கள்தாம் காப்பி அடிக்கிறார்கள். பிரபலமானவர்களின் உடையையோ, தலையலங்காரத்தையோ பின்பற்றினாற்போல், நாம் பிறர்போல் சிறந்துவிட முடியுமா?
`புடவை அழகாக இருக்கிறதே!’ என்று வாங்குவது வேறு. `எல்லாரிடமும் இருக்கிறது. நான் மட்டும் வாங்கக்கூடாதா?’ என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமான போட்டி.
இதைத் தவிர்க்க, `பிறர் கூறுவது எதையும் ஏற்காது எதிர்த்தால்தான் வெற்றி பெறலாமா?’ என்று யோசனை போனாலும் ஆபத்துதான். நம் குணத்திற்கும் திறமைகளுக்கும் எது உகந்தது என்று புரிந்து நம்பகமான பிறரது அறிவுரையை ஏற்பதே சிறந்தது.
நம்மை எதற்காகப் பழிக்கிறார்களோ, அதுவே வெற்றிக்கு வித்தாகலாம்.
கதை
என் பதின்ம வயதில், என் பாட்டி என்னை `நோணாவட்டம்’ என்று பழிப்பார். இயற்கையாகவே, எதிலும் என்ன குறை என்று உடனே என் யோசனை போய்விடும். அதை எப்படித் தீர்ப்பது என்று கேட்டால் அதற்கும் பதில் தயாராக இருக்கும். (இக்குணம் ஆசிரியர்களுக்கும் விமரிசகர்களுக்கும்தான் ஏற்றது).
என் மாமி ஒருத்தர் மிகச் சுமாராகச் சமைப்பார். விடுமுறை காலங்களில், நாத்தனார்களும் மைத்துனர்களும் கேலி செய்யப்போக, வெட்கமும் பயமும் எழுந்தன. ஒவ்வொரு நாளும் ரகசியமாக என்னைச் சமையலறைக்குக் கூப்பிட்டு அனுப்புவார்.
நான் ஒவ்வொன்றையும் ருசி பார்த்து, `சாம்பாரில உப்பு அதிகம்! ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, கொஞ்சம் கொதிக்க விடுங்கள்,’ `வெண்டைக்காய் (பயத்தங்காய்) பொரியலில் எண்ணை அதிகம். கொஞ்சம் ஓட்ஸ் போட்டு வதக்குங்கள்,’ என்று பலவாறாகக் கூறுவேன்.
பிற்காலத்தில், இந்திய பாரம்பரிய இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விமரிசகராக இருக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.
`நான் எழுதுவது blunt ஆக இருக்கும்,’ என்று மறுத்தேன், சிரிப்புடன்.
`இல்லை. நீ honest!” என்று வற்புறுத்தினாள் கலைப்பகுதியின் ஆசிரியை.
குறைகாணும் தன்மைகூட சில சமயங்களில் உபயோகமாகிவிடுகிறது. பிறர் ரசிக்கிறார்களே என்று எல்லாரையும்போல பாராட்டிவைத்தால் கலைஞர்கள் எப்படி முன்னேறுவார்கள்?
காற்றின் எதிர்த்திசையில் பறக்கும் பட்டம்தான் உயரத்திற்குச் செல்ல முடிகிறது. எதிர்ப்புகள் வரலாம். அவைகளைக் கண்டு மனம் தளராது இருப்பதுதான் வெற்றிக்கு வழி.
ஒரு சிறுவனுக்குச் சற்று விவரம் புரிந்ததும், பெற்றோர் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்காது, தன் எண்ணம்போல் செய்ய முயற்சிக்கும்போது தடை விதிக்காது, அல்லது கேலி செய்யாது இருந்தால் தன் திறமையில் அவனுக்கு நம்பிக்கை எழும். அவன் செய்ததில் வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ, சுயமாக யோசிக்கும் திறனைப் பெறுகிறான். குழப்பம் வரும்போது, எங்கே தவறு நேர்ந்தது என்று அவனுடன் அலசலாமே!
மாறாக, `நீ இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருக்கக்கூடாது!’ என்று ஒவ்வொருவர் கூறுவதையும் கேட்டு நடந்தால், சுயபுத்தியை உபயோகிக்கும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. பிறர் ஒப்பாததால் நாம் செய்வது தவறு என்றாகிவிடாது.
பிறருக்கு நம்மைப் பிடிக்கலாம். ஆனால் நமக்கே நம்மைப் பிடிக்காமல் போகும் அவல நிலை வரலாமா?
ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போதே அது மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு வித்தாகிவிடும்.
ஒரு வெற்றி அடைந்தவுடனேயே அடுத்து என்ன சாதிக்கலாம் என்று வெறி பிடித்து அலையாது, அவ்வப்போது சிறிது ஓய்வு பெறுவது அவசியம். எப்படிச் செய்தால் வெற்றி அடைய முடிகிறது, ஏன் சுணக்கம் ஏற்படுகிறது என்று அவ்வப்போது அலசுவது நன்று.
தவறு இழைத்துவிட்டோமா? அதனால் என்ன! நாம் என்ன, கடவுளா, தவறே செய்யாதிருக்க!
`இதை எப்படி செய்து முடிக்கப்போகிறோம்!’ என்று மலைக்காது, ஒரு காரியத்தில் ஈடுபடுவதே உற்சாகத்தை அளிப்பதாக இருந்தால் என்றாவது வெற்றி கிட்டும்.
வாழ்வில் மகிழ்ச்சி இல்லாது போவதற்கு போட்டி, பொறாமை, தன்னிரக்கம் ஆகியவை முக்கிய காரணங்கள்.
`எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’
`கலிகாலத்திலே நல்லவர்கள்தான் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’
என்று பலவாறாகப் புலம்பிக்கொண்டு, `என்னால் இப்படி இருக்க முடியவில்லை, அவளைப்போல் எல்லாம் செய்ய முடியவில்லை!’ என்று பிறருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, தன்னைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
ஒருவரிடம் திறமை இருந்தாலும், பிறர் பாராட்டவில்லையே என்ற தாபம் இருந்தால் இந்த நிலைமைதான் வரும்.
குறைகளுடன் தம்மைத்தாமே ஏற்றுக்கொள்பவர்களால்தான் ஆரோக்கியமான உறவுகளை அடைய முடிகிறது. இவர்களை எளிதில் வீழ்த்திவிட முடியாது. (ஆனால், குறைகளைப் பிறரிடம் சொல்லி, அவர்கள் நம்மை இளக்காரமாக நினைக்கச் செய்ய வேண்டாமே!)
Papa, he loves Mama.
Mama, she loves Papa.
என்றிருக்கும் ஓர் ஆங்கிலப்பாடலை, என் குழந்தை மூன்று வயதில் இப்படிப் பாடினான்:
Papa, he loves Sashi.
Mama, she loves Sashi!
அகம்பாவமா?
இல்லை. `என்னை எனக்குப் பிடிக்கிறது , மற்றவர்களுக்கும் பிடிக்கிறது,’ என்ற எண்ணம் இருந்தால்தான் மகிழ்ச்சி நிலைக்கும்.
நாம் நம்முடன்தான் எப்போதும் இருக்கிறோம். அந்த அருகாமை மகிழ்வூட்டுவதாக இருக்க வேண்டாமா?