நிர்மலா ராகவன்

 

`விட்டுக்கொடுப்பதும் அதிகாரம் செலுத்துவதும்

அவனைப் பார்த்தால் இருபத்து நான்கு வயதுபோல் தெரியவில்லையே! சின்னக்குழந்தைமாதிரி அல்லவா நடந்துகொண்டான்?!’

`பாட்டியிடம் வளர்ந்த பிள்ளை அவன்!’

`ஓ! மேலே சொல்லாதீர்கள். புரிகிறது’.

இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்ட இளைஞன் இந்திரன். அவனது நடத்தையைக் கண்டு அதிசயப்பட்டு என்னிடம் விசாரித்தவர் ஒரு மருத்துவர்.

பாட்டி, தாத்தாவைவிட எந்தக் குழந்தையும் மிகச் சிறியதுதான். அதற்காக, `பாவம், குழந்தை!’ என்று விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

இந்திரன் தான் தனக்காகச் செய்ய வேண்டிய வேலைகளிலிருந்து தப்புவதற்காக நெளிந்து, குழைவான். பாட்டிக்கு மனம் இளகிவிடும். தானே அதைச் செய்துமுடிப்பாள்.

அவன் என்ன தவறு செய்தாலும், `சின்னப்பையன்! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று உடனே மன்னிப்பு கிடைத்துவிடும்.

இப்படி வளர்ந்தவனுக்கு பிறருடன் பழகத் தெரிநாது போயிற்று. எல்லாரும் அவனுக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான். பிற சிறுவர்கள் அவனுடன் விளையாட விரும்பாது ஒதுங்கிப்போனார்கள்.

பதின்ம வயதில், இந்திரன் மனம்போனபடி நடக்க ஆரம்பித்தான். எது சரி, எது தவறு என்று தெரியவில்லை. யாரிடம் எப்படிப் பழகுவது என்று புரியாததால், `மரியாதை தெரியாதவன்!’ என்று பெயரெடுத்தான்.

அவனைப்போன்ற பிறரிடம் பழகி, தீய நடத்தை கொண்டவனாக மாற, `எவ்வளவு அருமையாக வளர்த்தேன்!’ என்று அவனுடைய பாட்டி வருந்தினாள், அதுதான் தான் செய்த தவறு என்று புரியாது.

ஒருவன் பெரியவன் ஆனதும் எப்படி நடக்கவேண்டுமோ, அக்குணங்களைச் சிறு வயதிலேயே புகட்டவேண்டியது அவசியம்.

`நீ இப்படி நடந்தால், அவர்களுக்குப் பிடிக்காது,’ என்று பிறர் வீட்டுக்குப் போகுமுன்னர் அவனை யாரும் எச்சரித்து வளர்க்கவில்லை. `அங்கே உரக்கப் பேசக்கூடாது. அவர்கள் வீட்டுச் சாப்பாடு நன்றாக இல்லையென்றாலும் வாயைத் திறக்காதே! அரைமணிக்கொருமுறை, `காப்பி!’ என்று அதிகாரம் செலுத்தாதே! கோபம் வந்தாலும் வெளியே காட்டாதே! மரியாதையாக இரு!’ என்று பலவாறாக அறிவுரை கூறப்பட்டு வளர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை கிடையாது.

கதை

ஒரு வயதாக இருந்த பேரனுடன் நான் எங்கோ போயிருந்தபோது, ஒருவர் என்னிடம், “நீங்க செல்லம் குடுத்துக் கெடுக்கறீங்களாக்கும்!” என்றார், விளையாட்டாக. உடனே, நான் தப்பாக நினைத்துக்கொள்ளப்போகிறேனோ என்று, “எங்க வீட்டில அப்படித்தான் நடக்குது!” என்று சேர்த்துக்கொண்டார்.

நான் சிரித்தபடி, “நானில்லை, என் பெண்தான் அப்படி நடக்கிறாள்,” என்றேன்.

பக்கத்திலிருந்தவரிடம், “Very strict teacher!’ (மிகவும் கண்டிப்பான ஆசிரியை) என்று சிலாகித்தார்.

தகுந்த வளர்ப்புமுறை இல்லாததால் எவரிடமும் மரியாதையற்று, அல்லது மிகவும் பயந்த சுபாவமாக ஆகிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தம் குழந்தைகளும் பிறர் குறை கூறும்படி அம்மாணவர்கள்போல் ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. அதனால், அளவுக்கு அதிகமாகவே கண்டிப்பாக இருப்பார்கள்!

ஆனால், எல்லா ஆசிரியைகளும் இப்படி நடப்பதில்லை.

`என்னைச் சிறுவயதில் மிகவும் கண்டிப்பாக வளர்த்தார்கள். பெரியவர்கள் முன்னால் நிற்பதற்கே நடுங்குவேன். அதனால், இப்போது என் மகளும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது என்று அவளை வளர்த்திருக்கிறேன்!’ என்பாள் கமாரியா. இதை அவள் பெருமையுடன் சொல்லவில்லை. ஏனென்றால், கடைசிக்குழந்தையான அவள் மகளுக்கு – அளவுக்கு மீறிய செல்லத்தினால், சுதந்திரத்தினால் — யாருக்கும் மரியாதை கொடுத்து நடக்கத் தெரியவில்லை. எதிர்த்துப் பேசுவாள். சக ஆசிரியைகளிடமிருந்து ஒரே புகார் வர, கமாரியாவுக்கு வருத்தம் மிகுந்தது. பெண்ணை எப்படி அடக்குவதென்றும் தெரியவில்லை.

குழந்தைகள் ஒழுங்காக வளர சில வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம். அவை:

1) நிலைமையைப் புரிந்து நடப்பது

2 )உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது

3) பிரச்னைகள் எழுந்தால், அவைகளுக்குப் பொருத்தமான தீர்வைக் கண்டுபிடித்து, அதன்படி நடப்பது.

இக்கட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க எந்த வயதானாலும், ஒரு புதிய சூழ்நிலையில் பிறருடன் எப்படிப் பழகுவது என்று புரியவேண்டும். இருப்பினும், நம்மை அளவுக்கு மீறி துன்புறுத்துபவர்களின் தொடர்பை அறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

கதை

நான் ஆசிரியப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, வள்ளி என்பவள், `நான் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறேன், மந்திரி எங்கள் குடும்ப நண்பர்,’ என்றெல்லாம் ஒரேயடியாக அலட்டிக்கொள்வாள். அவளைப்போலவே, சிற்றூரிலிருந்த வந்திருந்த சிலர் அவளைத் தலைவியாக ஏற்றனர். அவள் சொற்படிதான் எல்லாரும் நடக்கவேண்டும் என்று மிரட்டுவது அவள் வழக்கம்.

அந்த சர்வாதிகாரம் பிடிக்காது, நான் மட்டும் அவளிடமிருந்து விலகிப்போனேன். வள்ளிக்கு ஒரே ஆத்திரம். காரணமின்றி என்னிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். இறுதிவரை நான் பொறுமை இழக்காமல் அவளிடம் பேசியது அவளுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த, ஒரு சமயம் ஒரேயடியாக இரைந்தாள். வேறொருவர் வந்து அவளை விலக்கும்படி நிலைமை மோசமாக ஆயிற்று!

மனம்போனபடி எல்லாரையும் நடத்தலாம் என்று எண்ணி நடந்தது வள்ளி செய்த தவறு. உணர்ச்சிகளை அடக்கத் தெரியாததால் வந்த வினை. ஒருவருடைய நட்பு வேண்டுமானால் உதவிக்கரத்தை நீட்டினாலே போதுமே! அதிகாரமும் அலட்டலும் எதற்கு?

இப்படி நடக்காமலிருக்க, சிறு வயதினரை பலர் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்கையில், `அவர் எப்படி சந்தோஷமா நடக்கிறார், பார்!’ `பொம்மையை அந்தக் குழந்தை எப்படி உற்றுப் பார்க்கிறது, வேறு எந்த நினைப்பும் இல்லாமல்!’ என்று எதிர்ப்பட்டவர்களைக் காட்டி விளக்குவது பிறரது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

“பதின்ம வயதினர் தம் வயதொத்தவர்களுடன்தான் வெளியில் போகப் பிரியப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடப்பதால்தான் கெட்டுப்போகிறார்கள்!” பெரியவர்களின் புகார்.

இதைப்பற்றி நான் விசாரித்தபோது, `எங்கள் தந்தையுடன் வெளியில் போனால், அங்கே இங்கே திரும்பாமல், அவர் பின்னாலேயே நடக்கவேண்டும் என்கிறார்! அவரது பின்புறத்தையேதான் பார்த்தாகவேண்டும்!’ என்று அலுத்துக்கொண்டாள் ஒரு மாணவி.

பிற மாணவ மாணவிகளும் அவளை ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

`நான் சொல்கிறபடியே நட!’ என்று மிரட்டினால், முதலில் பயந்திருப்பவர்கள்கூட ரகசியமாக பெற்றோருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வார்கள். அதற்காக தண்டித்தால் விவகாரம் முற்றும். அப்பா கத்த, மகனும் கத்த, செய்யக்கூடாத காரியத்தில் பற்று அதிகமாகிவிடும் அபாயம் உண்டு.

கதை

எட்டு வயது மகன் தாயின் சம்மதத்துடன் தன்னுடைய I pad-ஐக் கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோருடன் காரில் நீண்ட பயணம் செய்யப் புறப்பட்டான்.

சில நிமிடங்கள் கழித்து, “போதும் விளையாடியது. மூடு,” என்றாள் தாய்.

மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்த பையன் காதில் அது விழவில்லை.

அவளுடைய குரல் ஓங்கிக்கொண்டே போயிற்று. அவனும் எதிர்த்துக் கத்தினான்.

தாய் ஒரேயடியாக மிரட்ட, “இந்தா!” என்று குரலில் வெறுப்புடன், அவள்மேல் தன் விளையாட்டுச்சாமானைத் தூக்கி எறிந்தான்.

“ஒனக்கு இருக்கு, வீட்டிலே!” என்று தாய் கறுவினாள். நாங்கள் சிலரும் காரில் இருக்க, பிறர்முன் மகன் தலைகுனிய வைத்துவிட்டானே என்ற அவமானம் அவளுக்கு.

இந்தச் சூழ்நிலையை எப்படித் தவிர்த்திருக்கலாம்?

`காரில் போகும்போது, ஆடும். வெகு நேரம் ஒன்றையே உற்றுப் பார்த்தால் தலை வலிக்கும். கண்ணும் கெட்டுவிடும்,” என்று முதலிலேயே எச்சரித்துவிட்டு, `இவ்வளவு நேரம்தான் பார்க்கலாம். நான் சொல்கிறபோது நிறுத்திவிட வேண்டும்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்க வேண்டும்.

அவள் தெளிவாக, கண்டிப்பாக முதலிலேயே விளக்காது, தன்னை மகன் மதிக்கவில்லையே என்று ஆத்திரப்படுவது என்ன நியாயம்?

ஒரு குறிப்பிட்ட செயலுக்கான தண்டனை எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும். சில முறை திட்டுவது, பல முறை அலட்சியம் செய்வது என்பது சிறியவர்களைக் குழப்பத்திற்குத்தான் ஆளாக்கும்.

உடற்குறையுள்ள குழந்தைகளையும் இதே கண்டிப்புடன் வளர்ப்பதுதான் சரியான முறை. பரிதாபப்பட்டு, அல்லது குற்ற உணர்ச்சியுடன், அவர்கள் என்ன செய்தாலும் வளர்ப்பவர்கள் பொறுத்துப்போகலாம். வளர்ந்தபின், உலகமும் அவர்களை அப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *