Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் – 103

நிர்மலா ராகவன்

 

பழகத் தெரியவேண்டும்

“எனக்குப் பல பெண்களுடன் நட்புடன் கூடிய தொடர்பு இருந்தது. ஆனால், எதுவுமே கல்யாணத்தில் முடியவில்லை!” என்று ஏக்கத்துடன் கூறினார் ஒருவர். பிறருடன் சரியான முறையில் பழகத் தெரியாததுதான் காரணம்.

`வாழ்நாள் முழுவதும் இப்படி ஒருவருடன் கழிக்க முடியுமா!’ என்று அயர்ந்தே பெண்கள் இவருடன் நீண்டகாலத் தொடர்பு வேண்டாமென ஒதுக்கியிருப்பார்கள்.

வெற்றிகரமான உறவுகள் அமைய வேண்டுமானால், பிறருடன் எப்படிப் பழகுவது என்று சிறுவயதிலிருந்தே போதிப்பது அவசியம். மூன்று வயதுக் குழந்தையிடம், `வணக்கம் சொல்லு!’ என்று சொல்லிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது இப்பழக்கம்.

`அப்பாவின் கையைமட்டும் குலுக்குகிறாரே!’ என்று தானே வலியப்போய் கையை நீட்டும் குழந்தை கலகலப்பானவனாக, பிறர் மெச்ச வளரும்.

ஏழு வயதானாலும், தாயின் பின்னால் ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டால் எங்கோ பிழை. “வெளியில் வந்தால் வெட்கப்படுவான்!’ என்று அவனை ஆதரித்துப் பேசும் பெற்றோர் அவனுக்கு நன்மை செய்வதில்லை.

கதை

“எனக்கு எப்படிப் பேச வந்தது?” என்று ஆச்சரியப்பட்டாள் நான்கு வயதான லதா.

“நாங்கள் உன்னுடன் பேசுவதைக் கேட்டு, தானே வந்துவிட்டது”.

இந்த விளக்கத்தைக் கேட்டபின், லதா எங்கு போனாலும் தன் `லேடி பொம்மை’யை எடுத்து வருவது வழக்கமாகப் போயிற்று. போகும் வழியில் அதனுடன் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பாள்.

“என்ன செய்யறே?” என்று யாராவது கேட்டால், “நான் பேசினா, அப்புறம் என்னோட பொம்மையும் என்கூட பேசும்!” என்று பதிலளித்தாள் சிறுமி. நமக்கு வேடிக்கையாக இருந்தாலும், அந்த வயதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த வருடம் அதை மறந்துவிட்டாள். வயதாக ஆக, குழந்தைகளின் தன்மையும் மாறுகிறதே!

கதை

நான்கு வயதான பாபு அவனுடைய இரண்டு வயதுத் தங்கையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவான். ஆண்பிள்ளை. அதிலும் வயதில் பெரியவன். நிச்சயம் அவன்தான் வெற்றி பெறுவான் என்று `பந்தயத்தை’ நடத்திய தந்தைக்குப் புரிந்துவிட்டது.

“தங்கை, பாவம், சின்னக்குழந்தை! அவள் முதலில் ஓட ஆரம்பிக்கட்டும்,” என்று தந்தை சொல்ல, ஏற்றுக்கொண்டான் பாபு. அவள் பாதி தூரம் போனதும், “இப்போ நீ ஓடு!” என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இருவரும் ஒரே சமயத்தில் இறுதிக்கட்டத்தில் வர, “இரண்டுபேருக்கும் வெற்றி!” என்று தந்தை மகிழ்ச்சியுடன் கூவினார்.

சற்று விழித்துவிட்டு, பாபுவும் அதை ஏற்றுக்கொண்டான், அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்குமென்று.

தினமும் பாபுவுடன் உட்கார்ந்து விளையாடுவாள் அவன் தாய். `இரு. இப்போது நான் ஆடவேண்டும். அப்புறம் நீ!’ என்று காத்திருக்க வேண்டிய அவசியத்தை மறைமுகமாக உணர்த்தினாள்.

பாலர் பள்ளியில் சேர்ந்தபோது, “என் மேசைக்கு வந்து கலர் பென்சில்களை எடுத்துப் போங்கள்,” என்று ஆசிரியர் அறிவித்தபோது, பாபு மட்டும் முண்டியடித்துக்கொண்டு ஓடவில்லை.

“ஜெண்டில்மேன்!” என்று ஆசிரியர் புகழ்ச்சியாகச் சொன்னதன் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ பாராட்டுகிறார் என்றவரை புரிந்தது.

“நீ என்ன செய்தாய்?” என்று வீட்டில் கேட்டபோது, “Wait my turn!” என்றான்.

இப்படி வளரும் குழந்தைகள் சிறுபிள்ளைத்தனமாக பிறருடன் போட்டி போடுவது கிடையாது. சிறு வயதிலேயே விட்டுக்கொடுத்துப் போவார்கள். இதனாலேயே பல நண்பர்கள் வாய்ப்பார்கள்.

பெற்றோருக்கு ஒரே குழந்தையாக வளர்பவர்களுக்கு பிறருக்கு விட்டுக்கொடுக்கும் அவசியம் இருப்பதில்லை. இதனாலேயே நல்ல நட்பை இழக்கக்கூடும்.

கதை

சகோதரர்கள் இருவர் ஒற்றுமையாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடுத்த வீட்டிலிருந்த பையன் அவர்களைவிட சற்றே சிறியவன். அவனும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வரும்போது, “சீக்கிரம் ஆரம்பி. அப்போதான் பாதி விளையாட்டிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லலாம்,” என்று பெரியவன் கூற, இருவர் மட்டுமே அவசரமாக விளையாட ஆரம்பித்தார்கள்.

“ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? பாவம்!” என்று நான் பரிதாபப்பட, “அவன் தப்பு தப்பா ஆடுவான். ஆனா, அவன் செய்யறதுதான் சரின்னு சண்டை பிடிப்பான், அழுவான்!’ என்று பதில் வந்தது. இவர்களுக்குச் சண்டை போட்டுப் பழக்கமில்லை. எல்லோருடனும் மரியாதையாகப் பழகவேண்டும் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

மரியாதையாகப் பேசுவது

பெற்றோரோ, வயதின் மூத்தவர்களோ மரியாதையாகப் பேசினால், குழந்தைகள் தாமே அப்படி நடப்பார்கள். நாம், `Please,” என்று ஒரு வேலை சொல்லி, அதைச் செய்து முடித்த சிறுவனிடம் `thank you,” என்று தவறாமல் நன்றி கூறினால் அவனுக்கும் அந்தப் பழக்கம் தன்னையுமறியாமல் வந்துவிடும்.

`நான் பெரியவன்! ஒரு குழந்தைக்கு நன்றி சொல்வதா!’ என்ற மனப்பான்மை பெரியவர்களுக்கு இருந்தால், எப்படி குழந்தைகளுக்கு நற்புத்தி புகட்டுவது?

நம்மைப்போல்தானே பிறரும்?

தன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது சிறுபிள்ளைகளின் இயல்பு. ஆறு அல்லது ஏழு வயதில் பிறரது உணர்ச்சிகளும் புரியவேண்டும். புரிய வைக்கவேண்டியது பெற்றோரின் கடமை.

புத்தகங்கள் படிக்கும்போதும், திரைப்படங்கள் படிக்கும்போதும் தென்படும் பாத்திரங்களைத் தாமாகவே பாவிக்கும்போது, பிறருடைய உணர்ச்சிகள் புரிந்துபோகும். மாறுபட்ட கருத்துக்களையும் ஏற்கும் பக்குவம் உண்டாகும்.

புதிய இடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளுடன் அப்படி எங்காவது செல்லும்போது, அவன் வயதொத்த குழந்தைகளுடன் பழக வழி செய்யலாமே!

“ஹலோ!” என்ற புன்சிரிப்புடன் ஆரம்பித்தாலே போதும். இன்னொருவர் மகிழ்ச்சியுடன் பேசுவார். `நீ எங்கிருந்து வந்தாய்? என்ன படிக்கிறாய்?’ என்று பேச்சை வளர்த்தினால், நட்பு வளரும்.

ஒன்றாகப் பிரயாணம் செய்யும்போது, `இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது!’ `இங்கு எல்லாரும் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்!’ என்று பொதுப்படையாகப் பேசுவது பிறரை நம் பால் ஈர்க்கும்.

புறம் கூறலாமா?

எட்டு வயதானபோது, “ஐயே! இவள் என்ன மாதிரி டீச்சர்!” என்று தன் வகுப்புத்தோழிகள் ஏளனமாக ஓர் ஆசிரியைப்பற்றிக் கூறுவதாக என்னிடம் தெரிவித்தாள் என் மகள்.

“ஒரு டீச்சரைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது,” என்று கண்டித்தேன்.

“நான் சொல்லலே. மத்த பொண்கள்தான்,” என்றாள் அழுத்தமாக. புறம் கூறினால், பிறர் நம்மைக் கவனிப்பார்கள் என்று தோன்றிப்போகும் பலருக்கும். இது கீழ்த்தரமான புத்தி.

“அதைத் திரும்பக்கூடச் சொல்லாதே. ஒங்கம்மாவும் டீச்சர். என்னைப்பத்தி மத்தவா அப்படிப் பேசினா ஒனக்கு எப்படி இருக்கும்?” என்றேன் சூடாக.

இருப்பினும், புறம் கூறுவதுகூட சில சமயங்களில் நன்மை பயக்கலாம். எப்போதென்றால், ஒருவரின் செய்கையால் அவருக்கோ, பிறருக்கோ தீங்கு விளையக்கூடும் என்னும்போது.

கதை

ஆரம்பப்பள்ளியில் படித்துவந்த சங்கர் பேரங்காடிகளுக்குச் சென்று ரப்பர், பென்சில் போன்ற சிறு சாமான்களை நோட்டமிடுவதுபோல் அபகரித்துவிடுவான். அவைகளைத் தன்னுடன் படிக்கும் பிற பையன்களுக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்பொருட்கள் தேவையே இல்லை. ஆனால், சாமர்த்தியமாக கடைக்காரர்களை ஏமாற்றுகிறோம் என்ற பெருமைக்காக அப்படிச் செய்துவந்தான்.

கோபி என்ற அவனுடைய சகமாணவன் தன் தாயிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தாள்.

நடந்தது தவறு என்று தெரிந்து, அதை நிறுத்த அச்சிறுவன் எடுத்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நட்பு நிலைக்க வேண்டும் என்பதற்காக அநீதிகளைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை.

யாரை ஒதுக்கலாம்?

பிறருடன் பழகுவது நல்ல குணம் என்றாலும், சிலரை விலக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

அதனால்தான், `புதிய இடத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் உன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்காதே!’ என்று குழந்தைகளைப் பழக்குகிறோம்.

ஆகாயவிமானத்தில் தனியாகப் பயணம் செய்யும் இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தால், பராமுகம்தான் பதிலாகக் கிடைக்கும். `புதியவர்களை நம்பாதே!’ என்று அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருப்பார்கள்!

முதல் முறையாகச் சந்திக்கும்போதே நம்மிடம் மிகுந்த நட்புடன் இனிமையாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருத்தல் நலம்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க