நிர்மலா ராகவன்

நலம்-1-1-1-1

நல்லதொரு தாம்பத்தியம் என்றால், இரு சாராரும் பிணைப்பால் நன்மை பெறுவதாக இருக்கவேண்டும்.

நமக்கு நெருங்கியவர்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பவர்களாக இருக்க வேண்டுவது அவசியம். மாறாக, `இப்படிச் செய்தால் அவர் என்ன சொல்வாரோ?’ என்ற பயமெழ, எந்த காரியம் செய்யுமுன்னரும் தயக்கம் ஏற்பட்டால், மன இறுக்கத்தைத் தவிர்க்க முடியாது.

கதை

முனைவர் பட்டம் வாங்கிய ஸாரா ஒரு மலாய் பெண். அவள் இருமுறை பத்திரிகையில் எழுதியவற்றிற்குப் நல்ல வரவேற்பு இருந்தது.

“ஏன் அதற்குப்பின் நீங்கள் எழுதவேயில்லை?” என்று கேட்டேன்.

“அவை வெளிவந்தபோது, பல தினங்கள் என் கணவர் என்னுடன் பேசவேயில்லை,” என்று பதிலளித்தாள். குரலில் வருத்தமில்லை. லேசான சிரிப்புடன், “ஆண்கள் அப்படித்தான்!” என்றாள்.

ஸாராவைப் பொறுத்தவரை, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமானால் கணவர் ஆத்திரப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவர் அவளைக் கட்டுப்படுத்தக் கையாண்ட வழி அவளை அலட்சியப்படுத்துவது.

`உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்!’ என்று ஆரம்பத்திலேயே ஸாரா திட்டவட்டமாகக் கூறியிருந்தால், கணவர் தொடர்ந்து எதிர்த்திருக்கமாட்டார்.

மனைவி தன்னைவிட அதிக வளர்ச்சியடைந்தால் தன்னை மதிக்க மாட்டாளோ என்ற பொறாமை கலந்த பயத்துடன், நண்பர்கள் கேலி செய்வார்களே என்பதும் சேர்ந்து ஒரு சில ஆண்களை இப்படி ஆட்டுவிக்கிறது.

அலட்சியம் காட்டுவது, ஆத்திரப்படுவது, மட்டம் தட்டுவது — இதெல்லாம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள். உடல் வதையைவிட உணர்ச்சிபூர்வமான வதையால்தான் பாதிப்பு அதிகம்.

முதலில் அடங்கிப்போனால், `என்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது!’ என்று அனுமதி கொடுத்தாற்போல் ஆகிவிடும் அபாயமுண்டு.

கதை

தன்னைவிட மனைவி பெரிய பதவியில் இருந்ததை ஆரம்பத்தில் பெருமையாக நினைத்த சந்திரன் தன் தொழிலில் தோல்வியுற்றதும் மாறிப்போனார். மனைவி தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடப்போகிறாளே என்றஞ்சி, தன் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முயன்றார். வார்த்தைக்கு வார்த்தை, `முட்டாள்’ என்று அவளைப் பழித்தார் — பலர் முன்னிலையில்.

தனிமையில், பேச்சாலோ, அழுகையாலோ எதிர்த்தால், “உனக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தெரியாது. சும்மா ஜோக்தானே!” என்றுவிடுவார், அலட்சியமாக. அவரைப் பொறுத்தவரை, அவருக்கு மட்டும்தான் உணர்ச்சிகள் உண்டு.

அவள் அவரது வார்த்தைகள் தன் காதில் விழாததுபோல் இருக்கத் தலைப்பட்டாள். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்ட மாட்டாள். தான் கோபித்துக் கத்தினாலோ, எதிர்த்துப் பேசினாலோ நிலவரம் இன்னும் மோசமாகிவிடும் என்று புரிந்து, அடங்கிப்போனாள். அதனால் பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

கணவர் எப்போதாவது அவளைப் புகழ்வார். பரிசுப்பொருட்கள் வாங்கியளிப்பார். இதனால் அவருக்கு அவளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதில்லை. தனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படாது பார்த்துக்கொள்கிறார். அவ்வளவுதான். பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம் என்பது இவரைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை.

தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, பிறரைக் கட்டுப்படுத்த நினைப்பவர் வீரரல்ல. இவர் பயந்தவர். ஒருக்கால் இவர் தவறு செய்தாலும், செய்யவே இல்லை என்று முதலில் சாதித்துவிட்டு, பிறகு பழியை வேறு ஒருவர்மேல் சுமத்துவார்.

ஆணோ, பெண்ணோ, தம்பதியரில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துதலில் வித்தியாசம் கிடையாது. யார் கை ஓங்கி இருக்கிறது, யார் அதிகமாக விட்டுக்கொடுத்துப்போவார் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

கதை

பத்து வயதுக்குமேல் வித்தியாசமாக இருந்த தம்பதிகளில் இளையவளான அருணா ஓயாமல் கணவரைப் பழிப்பாள். அவர் தனக்கு நிகரில்லை, வழுக்கை வேறு என்று ஏதேதோ குறைகள் அவளுக்கு.

தன்மேல்தான் குறை என்று மனைவிக்கு விட்டுக்கொடுத்தே பழகியவருக்கு இறுதியில் பொறுக்கவே முடியாது போய்விட, உணவு உட்கொள்ளவே மறுத்தார் — மரணம்தான் தனக்கு விடுதலை அளிக்கவல்லது என்று முடிவு செய்தவர்போல.

எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை. பலர், `அவள் அப்படித்தான்! எல்லாவற்றிற்கும் கத்துவாள்,’ என்று அலட்சியப்படுத்திவிட்டு வெளியே போய்விடுவார்கள். நண்பர்களுடனாவது உல்லாசமாக இருக்கலாமே! இதனால் இவர்களுடைய சுதந்திரம் குறைந்து போவதில்லை.

இவனா தலைவன்?!

குடும்பத்தில் மட்டுமின்றி, பொது அமைப்புகளில் இருப்பவர்களும் தம்மைத்தாமே தலைவன் என்று நினைத்துக்கொள்வது வழக்கம்.

`நான் சொல்வதுதான் சரி. ஏனெனில் நான் தலைவன்!’

தலைவன் என்ற ஆணவம் இருப்பதால் பிறர் என்ன செய்யவேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கும் உரிமையை எடுத்துக்கொள்வார். தன் கீழ் இருக்கும் அனைவரும் தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். யாராவது மறுத்தால், `தலைவரது’ கோபத்துக்கு ஆளாகத் தயாராக இருக்கவேண்டும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

கட்டுப்படுத்துபவர்களுக்குச் சில பொதுவான குணங்கள் உண்டு.

பிறர் பேசுவதைக் கேட்பதைவிடத் தாமே பேசுவது அதிகம். (ஆசிரியர்கள் விதிவிலக்கு!)

கோபம், எதிலும் எதிர்மறையான அணுகுமுறை, கூசாமல் பொய்யுரைப்பது இதெல்லாம் இவர்களுக்குக் கைவந்த கலை.

பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பார். ஆனால், அவர் செய்த தவற்றை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் தன்னை மோசமாக நடத்துவதுபோல் பாவனை செய்வார்.

தனக்குப் பயந்து நடக்காதவர்களை, அடிமையாக இருக்க விரும்பாதவர்களை இகழ்வார். (`அவங்க ஒருமாதிரி! ராங்கி பிடிச்சவங்க!’)

பிறருக்குத் தன்மேல் பரிதாபம் உண்டாக்க முயற்சி செய்வார். (`நான் உங்களுக்காக எவ்வளவு செய்யறேன்!’)

இந்தத் தலைவரைச் சார்ந்திருந்தால் நமக்குத்தான் நன்மை என்று பிறரும் அவருக்குப் பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவர். தனிமைப்படுத்தப்பட்டவர் பொறுக்க முடியாது, தாழ்ந்துபோவதும் உண்டு.

தப்பிக்க வழி உண்டா?

நம்மைப் பலகீனமாக ஆக்க பெருமுயற்சி எடுப்பவர்களுடன் மோதுவதோ, மாற்றுவதோ இயலாத காரியம். ஆனால், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும். நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் இம்மாதிரியான `விஷ ஜந்து’க்களிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும். பிடிக்காததை ஏற்பானேன்!

மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவர்கள்தாம் பிறர் மகிழ்ச்சியைப் பறிக்க நினைக்கிறார்கள். இது புரிந்தால், நாம் கோபப்பட்டு, நம்மையே வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள்மேல் பரிதாபம்கூட கொள்ள முடியும். பாவம், உடல் வளர்ந்தும், சிறுபிள்ளைத்தனம் மாறாது, வளர்ச்சி குன்றிப்போய் இருக்கிறவர்கள்!

தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகும் என்பது புரியாதவர்கள்!

தொடருவோம்

Leave a Reply

Your email address will not be published.