-முனைவா்.பா.பொன்னி

இலக்கியம் காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்தும்போது அது தன் காலத்தையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. மனிதா்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தாலும் அவா்களின் குறிப்பிட்ட சில பண்புகளும், நம்பிக்கைகளும், சடங்குகளும் மாறாதிருப்பது கண்கூடு. பெரியாழ்வார் பாசுரங்களில் சுட்டப்படும் சிலசடங்கு முறைகள் சங்க காலம் தொட்டு இன்று வரையும் நடைமுறையில் இருப்பதனைக் காணமுடிகிறது. பண்பாட்டு மானுடவியல் அடிப்படையில் இச்சடங்குகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மானுடவியல்

மனித இனத்தைப் பற்றி ஆராயும் துறை மானிடவியல் ஆகும்.  Anthropology என்ற சொல்லுக்கு the study of the man என்பது பொருள். மனிதனைப் பற்றி ஆராயும் அறிவுத்துறை மானிடவியல் எனப்படுகிறது. மேலும் “மானிடவியல் என்பது மானிடத் தோற்றம், உடலியல் தோற்றம், பண்பாட்டு வளர்ச்சி, இனவகைப்பாடு, சமுதாய முறைமைகள்,  மனித நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு மரபு சார்ந்த வெளிப்பாடு என்று சொல்லலாம்” ( கழகத்தமிழ் அகராதி கழகவெளியீடு ப.108 ) என்று அகராதி விளக்கம் அளிக்கிறது.

மேலும் “மானிடவியல் என்னும் அறிவியல் துறை, மனித இனம் அதன் பண்பாடு, சமூகங்களின் அமைப்புகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உறவுமுறைகள், மொழிகூறுபாடுகள் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு முழுமனிதனை அடையாளம் காணமுயலுகின்றது” (ப.மருதநாயகம் தமிழா் மானுடவியல் ப.93 ) என்று குறிப்பிடுவா்.

மானுடவியலின் வகைகள்

மானுடவியலின் எல்லை பரந்து விரிந்தது. ஆகவே ஆய்வாளா்கள் ஒரு குறிப்பிட்ட பரப்பினை மட்டுமே தோ்ந்தெடுத்து ஆய்வினை மேற்கொள்கின்றனா்.இதன் அடிப்படையில் மானுடவியலை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனா்.அவை

  1. உடல்சார் மானிடவியல்
  2. பண்பாட்டு மானிடவியல்
  3. தொல்லியல்
  4. மொழியியல்

எனும் நான்கு வகையாகும். இவற்றுள் பண்பாட்டு மானிடவியல் அடிப்படையில் பெரியாழ்வார் பாசுரங்களில் இடம் பெறும் சடங்குகளை ஆராய இயலுகின்றது.

பண்பாட்டு மானிடவியல்

 உலகம் முழுவதிலும் எண்ணிலடங்கா வகைகளில் பரவி வாழும் சமுதாயங்களின் பண்பாட்டை காலப் பரிமாணங்களுடன் ஆராயும் மானிடவியல் பிரிவே பண்பாட்டு மானிடவியலாகும்.

“பண்பாட்டு மானிடவியல் என்பது பின்பற்றப்பட்ட அல்லது வளா்க்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக ஒழுகலாறுகளை விவரிப்பதாகும்” ( இரா.முருகன் சங்கப்பாடல்களில் தொல்குடிக்கூறுகள் ப.6 ) என்பா்.

பண்பாடு

பண்பாடு என்பது மக்களால் மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வருவது. தலைமுறை தலைமுறைகளாக மனிதா்களின் நடத்தை முறைகளைப் பற்றிக் குறிப்பிடுவது. “ பண்பாடு என்பது கற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் தான் கற்றதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லம் ஆற்றலும் மனிதருக்கு இயல்பாகக் கைவரப் பெற்றவை. இந்த ஆற்றல்களின் விளைவாக அவனுக்கு ஏற்படக் கூடிய அறிவு நம்பிக்கை அவனுடைய நடவடிக்கை ஆகியவற்றின் கலவையே பண்பாடு ( அல்லது கலாச்சாரம் ) எனப்படுகிறது ” ( பிரிட்டானியா தகவல் களஞ்சியம் ப.161 ) என்று பிரிட்டானியா தகவல் களஞ்சியம் விளக்கம் தருகிறது.

முந்தைய தலைமுறையில் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கம், சடங்குகள் ,நம்பிக்கைகள் போன்றவை மரபு வழியாகப் பின்பற்றப் பட்டு வருவதனைப் பண்பாடு எனலாம்.

சடங்குகள்

மனிதனின் வாழ்வோடு பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயா் சூட்டுதல், காதுகுத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, இறப்பு ஆகியவற்றோடு தொடா்புடைய சடங்குகள் மக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

சடங்கு என்பது சாஸ்திர விதி பற்றியும் வழக்கம் பற்றியும் அனுஷ்டிக்கும் கிரியை ” ( தமிழ் பேரகராதி ப.24 ) என்பா். பொதுவாக சடங்குகள் என்பன மனிதனோடும் இனக்குழுவோடும் தொடர்புடையனவாக அமைவன. இதனையே “குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடா்ந்து மக்களால் கைக்கொள்ளப் படுமாயின் அவை சடங்குகள் எனப் பெயா்பெறுகின்றன ”( சு.சண்முக சுந்தரம் நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 123 ) என்பா். பெரும்பான்மையான சடங்குகள் அச்சத்தின் விளைவாகவே மேற்கொள்ளப்படுவதாக அமைகின்றன. பெரியாழ்வார் பாசுரங்களில்  காப்பிடுதல், ஐம்படைத்தாலி அணிவித்தல், காதுகுத்துதல் போன்ற சடங்கு முறைகளைக் காணமுடிகிறது.

காப்பிடுதல்

யசோதனை பாவனை ஏற்றுப் பாடும் பெரியாழ்வார் யசோதையாகவே மாறி கண்ணனுக்குக் கண்ணேறு வராதபடிக் காப்பிட எண்ணுகிறார். நடைமுறை வாழ்விலும் குழந்தைகளுக்குக் கண்ணேறு கழிப்புச் செய்வதுண்டு. சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு. எனவே அத்தகையோரது கண்பட்டால் குழந்தைக்கு நோய்நொடி வரும் என்று நம்புகின்றனா். எனவே தான் கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பா்.( சு.சக்தி வேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப 12 ) கண்ணனுக்குக் கண்ணேறு பாடாமல் இருப்பதற்காகவும் அந்திப்பொழுதில் தீய சக்திகள் அவனை நெருங்காமல் இருப்பதற்காகவும் யசோதை கண்ணனைக் காப்பிட்டுக் கொள்ள அழைப்பதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார். 

”மன்றில்நில் லேலந்திப் போது மதில்திரு வெள்ளறை நி்ன்றாய்
நன்றுகண் டாயென்றன் சொல்லு நானுன்னைக் காப்பிட வாராய்” ( பெரியாழ்வார் திருமொழி 2 – 8   2 ) என்ற அடிகளில் அந்தி வேளையில் கெட்ட தேவதைகள் நாற்சந்தியில் நிற்கும் என்ற நம்பிக்கை வழிப்பட்ட சடங்கினை அறியமுடிகிறது.

இருக்கு வேதம் கூறிக்கொண்டு நல்ல நீரினை சங்கிலே கொண்டு வந்து பிராமணா்கள் இரட்சையிட வந்துள்ளார்கள். இரட்சையிட அந்தி விளக்கை ஏற்றுவேன் என்று யசோதை கூறுகிறாள்.

இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
டெழில்மறை யோர்வந்து நின்றார்
தருக்கேல்நம் பிசந்தி நின்று
தாள்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டு மந்தி விளக்கின்
றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய் (பெரியாழ்வார் திருமொழி 2  – 8  9 )

என்ற பாசுரத்தால் அந்தணா்கள் அந்திப்பொழுதில் விளக்கேற்றி சங்கிலே நீர்கொண்டு மந்திரம் கூறிக்காப்பிடுவா்  என்பதனை அறியலாகின்றது.குழந்தைகளுக்கு கண்ணேறு பட்டு விடக் கூடாது என்ற அச்சத்தின் விளைவாக காப்பிடப்படுவதனை இதன் வழி அறியலாகின்றது. இன்றும் கண்ணேறு படக் கூடாது என்பதற்காகக் கோவில்களில் கயறு வாங்கிக் கட்டும் பழக்கம் இருப்பதனைக் காணலாம். 

ஐம்படைத்தாலி அணிவித்தல்

குழந்தைகளுக்கு பயம் இல்லாமல் இருப்பதற்காகத் தாயத்து கட்டும் பழக்கம் இன்றும் மக்களிடையே நிலவுகின்றது. அரையிலோ கழுத்திலோ இதனைக் கட்டுகின்றனா். சங்க காலத்தில் சிறுவா்க்குப் புலிப்பல்லைக் கோர்த்து பொன்னால் ஆன தாலியை அணிவித்தமையை,

………………………….. பொன்னோடு
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி ( அகம் 7  17 – 18 )

என்ற பாடலடிகளின் வழி அறியமுடிகிறது.“பழங்காலத்தில் புலிப்பல் தாலி அணிந்தமையே காலப்போக்கில் ஐம்படைத்தாலியாக மாற்றம் பெற்றதாக உறுதி செய்யலாம்.மேலும் இது சிறுவா்க்குரிய காப்பணியாகக் கருதப்பட்டதையே  இலக்கியங்கள் சுட்டுகின்றன”( க.காந்தி தமிழா் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் ப .12 ) என்பா். கண்ணன் கழுத்தில் ஆமைத்தாலி இருந்தமையை,

அக்கு வடமுடுத் தாமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
( பெரியாழ்வார் திருமொழி 1 – 8  2 ) என்பதாலும்,

தாலிக்கொ ழுந்தைத் தடங்கழுத் தில்பூண்டு ( பெரியாழ்வார் திருமொழி 2 – 6  1 )என்பதாலும்,

எழிலார் திருமார்வுக் கேற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுவ னாய் நின்றான் தாலேலோ                ( பெரியாழ்வார் திருமொழி  1 – 4  5 )

என்பதாலும் அறியலாம். ஐம்படைத்தாலி என்பது காத்தற்கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஆயுதங்கள் போலே பொன்னால் செய்யப்படுவது. திருமாலின் ஆயுதங்களையே காப்பாகக் குழந்தைக் கண்ணனுக்கு யசோதை அணிவிக்கிறாள்.கண்ணனின் மார்பில் ஐம்படைத்தாலி இருந்தமையை,

மங்கல வைம்படையும் தோன்வளை யும்குழையும்
                ( பெரியாழ்வார் திருமொழி  1 – 6   10 )

என்பதாலும் தெரியலாம். ஐம்படைத்தாலி அணிதல் என்னும் வழக்கம் சங்ககாலம் தொட்டு இன்று வரை நடைமுறையில் இருப்பதையும் அறியலாகின்றது.

காதுகுத்துதல்

ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் காதுகுத்தும் மரபு தமிழா்களிடையே தொன்றுதொட்டு நிலவி வருகிறது. “குழந்தைக்குச் சிறுகாயம் ஏற்படாவிட்டால் எமன் குழந்தையைத் தூக்கிச் சென்று விடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாகக் காதுகுத்தும் வழக்கம் தமிழகத்தில் தோன்றி இருக்க வேண்டும். காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆசியா, எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது. காதுகுத்தும்போது ஏதேனும் உலோகத்தையும் அணிவிப்பா். தீமை தரும் ஆவிகள் தலை, வாய், மூக்கு, காது ஆகிய உறுப்புகள் வழியாக எளிதில் புகுந்து விடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டுத் தீய ஆவிகளை விரட்டும் சக்தியாக ஏதேனும் ஓா் உலோகத்தை அணிவித்தால் காது வழியாகத் தீய ஆவி நுழைவதைத் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இப்பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். காது குத்தும் சடங்கிற்கு இத்தகைய நம்பிக்கைகள் அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.”( சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப -.195 )

பெரியாழ்வார் பாசுரங்களிலும் பெரியாழ்வார் யசோதையாக மாறி கண்ணனைக் காதுகுத்த அழைக்கும் பாசுரங்களைக் காணமுடிகிறது.

போய்ப்பா டுடையநின் தந்தையும் தாழ்த்தான்
பொருதிறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல்வண்ணா உன்னைத்
தனியேபோ யெங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ
நம்பீஉன் னைக்காது குத்த
ஆய்ப்பாலா் பெண்டுக ளெல்லாரும் வந்தார்
அடைக்காய் திருத்திநான் வைத்தேன்                           ( பெரியாழ்வார் திருமொழி 2 – 3  1 )

என்ற பாசுரத்தில் பெரியாழ்வார் பேய் முதலான தீயசக்திகள் கண்ணனை நெருங்கக் கூடாது என்பதற்காகவும் தனியே விளையாடச் செல்வதால் ஏற்படும் கேடுகளில் இருந்து காப்பதற்காகவும் காதுகுத்த வேண்டியதன் முதன்மையை விளக்கிச் செல்கிறார்.காதுகுத்தும் போது வெற்றிலை, பாக்கு வைப்பதனையும் குறிப்பிடுகிறார்.

”தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே
விட்டிட்டேன் குற்றமே யன்றே”    (பெரியாழ்வார் திருமொழி  2 – 3   7 )

என்ற பாசுர அடிகளில் குழந்தைகளுக்கு தலை நிற்பதன் முன்னமே காதுகுத்துவது வழக்கம் என்பதனை அறியலாகின்றது.

குழந்தைகளுக்கு தீய சக்திகளால் ஏற்படும் தீங்கினைத் தவிர்க்க மாலைவேளைகளில் வழிபாடு செய்வதும் கோவில்களில் சென்று காப்பு வாங்கிக் கட்டுவதும் இன்றும் நாம் நடைமுறை வாழ்வில் காணக் கூடிய ஒன்றாகும். கழுத்தில் தாயத்து அணிவிப்பது, காது குத்துவது ஆகியவை இன்றும் நம்மிடையே காணப்படுகின்றன.சங்க காலத்தில் காதுகுத்துவது பழக்கமாக இல்லாவிட்டாலும் அழகிற்காக சங்ககால மக்கள் மலா்களைக் காதில் அணிகலன் போல சூடியுள்ளனா். தற்காலத்தில் மருத்துவ பயன் கருதி காதுகுத்தும் வழக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் மனித மனங்களின் அடிப்படையில் ஏற்படக் கூடிய பயத்தின் விளைவாகவே சடங்கு முறைகள் வளா்ச்சி அடைகின்றன என்றால் அது மிகையாகாது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் அச்சத்தின் விளைவாக மேற்கொள்ளக் கூடிய சடங்குமுறைகளே குறிப்பிடப்பட்டிருப்பதனை இதன்வழி அறியலாகின்றது.

*****

துணைநூற்பட்டியல்

  1. காந்தி க தமிழா்கள்பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் – உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
    சென்னை 2003.
  2. சக்திவேல் சு – நாட்டுப்புறஇயல் ஆய்வு
    மணிவாசகா் பதிப்பகம், சென்னை.
  3. மருதநாயகம் ப – தமிழா் மானிடவியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்,2002.
  4. முருகன் இரா – சங்கப் பாடல்களில் தொல்குடி கூறுகள், அறிவொளி பதிப்பகம், பாண்டிச்சேரி.
  5. கதிரைவேற் பிள்ளை – மதுரை தமிழ்ப் பேரகராதி,கோபால கிருஷ்ணகோன் வெளியீடு, மதுரை,1956.
  6. கழகத்தமிழ் அகராதி – கழகவெளியீடு
    திருநெல்வேலி, 1968.
  7. பிரிட்டானியா தகவல் களஞ்சியம் – என்சைக்ளோ பீடியா, பிரிட்டானிகா பிரைவேட் லிமிடெட், சென்னை

*****

கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவர்
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *