வாழ்ந்து பார்க்கலாமே -8
க. பாலசுப்பிரமணியன்
வாழ்க்கைப் பயணமும் சவால்களும்
ஒரு முறை ஒரு இளைஞன் தன்னுடைய வாழக்கையில் ஏற்பட்ட பல சோதனைகளைக் கண்டு துயருற்று இறைவனிடம் சென்று முறையிடுகின்றான். “இறைவா.. ஏன் இந்த ஒர வஞ்சனை? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துயர் கொடுக்கின்றாய்? ஒரு நாள் கூட நான் மகிழ்ச்சியை அறிந்ததில்லையே? என்னுடை உறவினரைப் பார். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். என்னுடைய நண்பன் கூட எப்பொழுதும் சிரித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கின்றான். அவன் முகத்தில் துயரத்தின் நிழல் கூடத் தெரியவில்லையே . துயரத்தை மட்டும் சுமப்பதற்கு என்னைப் படைத்தாயா? இது நியாயமா? உனக்கு இது தகுமா? இது தான் உன்னுடைய நடுநிலைப்பாடா?”
இளைஞனின் துயரக்குரல் இறைவனையே சற்று அசைத்து விடுகின்றது. இறைவனும் இளைஞன் முன் தோன்றி :”மகனே. ஒரு வேலை செய். இன்று மாலை நான் இந்த ஊரில் இருக்கிற எல்லா இளைஞர்களையும் அவர்களுடைய துயரத்தை ஒரு மூட்டையில் கட்டி இந்தக் கோவில் மண்டபத்தில் வந்து வைத்துவிடச் சொல்கின்றேன். அதற்குப்பின் நீ வந்து உனக்கு எந்த மூட்டை வேண்டுமோ எதில் சுமை குறைவாக இருக்கின்றதோ அதை எடுத்துக்கொள்ளலாம்” எனக் கூறி மறைகின்றார்.
அந்த இளைஞனும் அன்று மாலை சொன்ன நேரத்தில் தன்னுடைய துயரச் சுமைமூட்டையைத் தூக்கிச் சென்று அந்தக் கோவில் வளாகத்தில் வைத்துவிடுகின்றான். அவனைப் போலவே மற்றவரும் அங்கே வந்து தங்கள் சுமைகளை இறக்கி வைக்கின்றனர். சிறிது நேரம் கழித்து, இறைவன் கூறிய நேரத்தில் அவன் அங்கே சென்று தனக்கு வேண்டிய மூட்டையைத் தேடுகின்றான். அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கின்றது. எல்லா மூட்டைகளையும் விட அவனது மூட்டைதான் மிகவும் சிறிதாகவும் எளிதில் தூக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
வாழ்க்கையின் உண்மையே இதுதான். பல நேரங்களில் நாம் வாழ்க்கையில் நமக்குத்தான் அதிகப் பிரச்சனைகளும் அதிகத் துயரங்களும் வந்து சேருகின்றது என்று நினைக்கின்றோம். உண்மையில் அது நம் மனதிற்கு நாம் கொடுக்கும் ஒரு எண்ணமே. ஒரு உருவகமே. இந்த மாதிரியான நினைப்புக்கள், கருத்துக்கள் பல நேரங்களில் நம்மை வெற்றிப்பாதையிலிருந்து கீழே விழுவதற்கும் தன்னம்பிக்கையை இழந்துவிடுவதற்கும் துணை போகின்றன. வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும் பொழுதுதான் முன்னேற்றப்பாதையில் செல்ல தைரியமும் துணிச்சலும் கிடைக்கின்றது.
பல நாட்களுக்கு முன்னே படித்த ஒரு கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு தோட்டக்காரன் தன்னுடைய நிலத்திலே சில விதைகளைத் தூவிச் செல்லுகின்றான். இரண்டு விதைகள் அருகில் விழுகின்றன. இவற்றில் ஒன்று தன்னுடைய மேலுறையைக் கிழித்துக்கொண்டு எட்டிப் பார்க்கிறது.
உடனே பக்கத்திலிருந்த விதையோ “ஏய், என்ன முட்டாள்தனம் செய்கின்றாய். உள்ளேயே அடங்கிக் கிட. நீ வெளியே வந்தால் இந்த மண்ணோடு உறவாட வேண்டியிருக்கும். மேலும் வெய்யில், மழை காற்று போன்ற பல இடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அமைதியாக இருக்கும் இடத்திலேயே இரு. சுகமாக இருக்கலாம்.”
ஆனால் இந்த விதையோ அதைக் காதில் வாங்கி கொள்ளாமல் இன்னும் கொஞ்சம் மேலே நோக்கியது. “அடேடே ! இதுதான் வெளிச்சமா?” விதைக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை வெளியே நீட்டியது.
“ஐயோ! உந்தன் முடிவை நீயே தேடிக்கொள்கின்றாய் நீ மேலே சென்றால் காற்றும் மழையும் உன்னைத் தாக்கும்”இந்த விதையோ கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் மேலே — காற்று, மழை, வெய்யில் போன்ற பல இடர்களைத் தொடர்ந்து எதிர்கொண்டது. ஒரு நாள் அது ஒரு பெரிய மரமாகிக் காய்கனிகளுடன் நின்றது.
“நான் அப்பொழுதே சொன்னேன் கேட்டாயா? எத்தனை பாரத்தைச் சுமந்து கொண்டு நிற்கின்றாய்.” என்று அந்த விதை இதை ஏளனம் செய்தது.
அந்த நேரத்தில் பக்கத்தில் சென்ற பறவை ஒன்று கீழே இறங்கி உணவைத் தேடும் பொழுது இந்த விதையைப் பார்த்து ஒரே கணத்தில் அதை உண்டு ஜீரணித்தது.
வாழ்க்கையும் அது போலத்தான். உழைத்து ஓடாவதா அல்லது துருப்பிடித்துத் தேய்வதா? முடிவு நம் கைகளின் தான். போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் பயந்து நின்றால் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது. வெய்யிலில் காய்வதும், மழையில் நனைவதும், புயல் காற்றை எதிர்கொள்வதும் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். துணிவே துணை என்று முதல் படியில் இருப்பவர்களுக்கு மீதிப்படிகள் இசைந்து விடும்.
ஒரு தத்துவ மேதை கூறுகின்றார் “உன்னுள் இருக்கும் சக்தி உன்னைத் தாக்கும் சக்திகளை விட மிக வலிமையானது என்ற நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும்.” ஒரு கப்பல் கடலில் செல்லும் பொழுது அடிக்கடி உயர்ந்து எழும் அலைகளையும் அசாதாரணமான வானிலையையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நங்கூரம் போடப்பட்ட கப்பலுக்கோ கவலை இல்லை.
“துறைமுகத்தில் கப்பல்கள் பாதுக்காப்பாக இருக்கும். ஆனால் அவைகள் அதற்காகக் கட்டப்படுவதில்லை ” என்பது உண்மையான கருத்து. வாழ்க்கைக் கடலில் நமது வாழ்வு என்ற கப்பல் செல்லும் பொழுது எதிர்பாராத சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பயணத்தைக் தொடங்கிவிட்டால் அது ஒரு இனிய பயணமாகத்தான் இருக்கும். ஒரு வினோதமான பயணமாகத்தான் இருக்கும். துணிந்து செல்பவனுக்கு வெற்றி முன்னாலேயே நிச்சயிக்கப்படுகின்றது. முயற்சி செய்யலாமே!
வாழ்ந்து பார்க்கலாமே !