நிர்மலா ராகவன்

கோபம் பொல்லாத வியாதியா?

நலம்

பிறருக்கு என்ன துன்பம் வந்தபோதிலும், அதைக் கண்டும் காணாமல் அசட்டை செய்வது பயந்தவர்களின் சுபாவம். இவர்கள், `நான் பிறர் வழிக்கே போகமாட்டேன்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்வர்.

`எதுக்கு வீண் வம்பு! நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இரு!’ என்று பிறர்க்கும் அறிவுரை வழங்குவார்கள்.

இன்னொரு சாரார் தர்மத்துக்குப் புறம்பான நடப்புகளைக் கண்டு பொங்கி எழுவார். இத்தகையவர்கள் பாராட்டும், புகழும் எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு வன்முறை இல்லாத ஆக்ககரமான செய்கைதான் முக்கியம். மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் கத்தியையா தூக்கினார்கள்? இவர்களுடையது தார்மீக கோபம்.

தார்மீக கோபமா, என்ன அது?

பிறர் படும் அவதிக்கு, துயரத்திற்காக நாம் அடைவது.

சாத்வீக குணம்தான் சிறந்தது என்று மதங்கள் போதிக்கலாம். ஆனால் மற்றவருக்கு அநீதி இழுக்கப்படும்போது வாளாவிருக்கலாமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்களின் துன்பம் புரியும். `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயமோ, தயக்கமோ எழாது.

“அவன் சொன்னதைக் கேட்டு, எனக்குச் சரியான கோபம்!”

“எனக்குக் கெட்ட கோபம் வந்தது!” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

கோபத்தில் எது நல்லது, எது கெட்டது?

கதை

கடந்த ஜனவரி மாதம் பினாங்குத் தீவருகே இருக்கும் Nibong Tebal (நிபோங் தெபால்) என்ற ஊரில் நடந்த சம்பவம் மலேசிய நாட்டையே உலுக்கியது.

பதினான்கு வயதான வசந்தப்ரியா என்ற அழகிய பெண் தன் கைத்தொலைபேசியைத் திருடிவிட்டாள் என்று ஆசிரியை ரெமாலா ராமன் பழி சுமத்தி, ஐந்து மணி நேரம் அம்மாணவியை ஓர் அறையில் வைத்துப் பூட்டியிருக்கிறாள். (அதற்கு இரு தினங்களுக்குமுன்தான் அந்த ஆசிரியையின் பிறந்த நாளுக்காக சகமாணவிகளிடமிருந்து பணம் வசூல் செய்து, விருந்து வைத்திருக்கிறாள் அம்மாணவி).

தான் அப்பொருளை எடுக்கவில்லை என்று எழுதிவைத்துவிட்டு, தன் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டாள் சிறுமி. சில தினங்கள் கோமா நிலையில் இருந்தவள் நினைவு திரும்பாமலேயே இறந்துபோனாள்.

சம்பந்தப்பட்ட ஆசிரியையோ, மேசையில் உட்கார்ந்து செய்யும் வேறு வேலைக்கு மாற்றப்பட்டாள். அவ்வளவுதான்.

பதின்ம வயதினர் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள். அதுகூடப் புரியாது, பல மணி நேரம் அவளை வதைத்தது என்ன நியாயம்?

அற்பப் பொருள் ஒன்றுக்காக ஓர் உயிர் போயிருப்பது அநியாயம். இந்த அநியாயத்தைக் கண்டு பொங்கியெழுவது தார்மீக கோபம். சமூகம் சிறப்பாக நடக்க அவசியமானதும்கூட.

எது சரி, எது தவறு என்று பிரித்துப் பார்க்கும் திறமையை நாம் வளர்த்துக்கொண்டால் இது சாத்தியமாகும்.

கோபம் எழுந்தால், ஒருவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மன இறுக்கம், தலைவலி என்று பல்வித உடல் உபாதைகளும் ஏற்படலாம். நம் கோபம் தகுந்த நேரத்தில் வெளிப்பட வேண்டும். தகுந்த காரணத்துக்காக வெளிப்பட வேண்டும். அதற்குப் பலன் இருக்க வேண்டும். அப்போதுதான் கோபப்படுபவர் உடல் ரீதியில் பெரிதளவில் பாதிக்கப்படுவதில்லை.

`எங்கேயோ, யாரோ, எப்படியோ இறந்துபோனால் நமக்கென்ன!’ என்று இருந்தால், இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

பிறருக்கு விளைவிக்கப்படும் அநீதியால் கோபம் வந்தால், அது நாம் பிற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டுகிறது. தார்மீக கோபம் உள்ளவர்கள் தமது கோபம் தணிந்தபின் செயலில் ஈடுபடுவதால் இங்கு வன்முறை கிடையாது.

சிலருக்கு இத்தகைய கோபம் புரிவதில்லை.

`எழுதினால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’ இப்படிக் கேட்பவர்கள் தம் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று திருப்தி அடைபவர்கள். தமக்கு ஏதாவது சிறு துன்பம் நேர்ந்தாலும் இவர்களால் தாங்க முடியாது.

`உங்கள் எழுத்தால் ஏதாவது மாறப்போகிறதா, என்ன?’ என்று அலட்சியத்துடன் கேட்பார் இன்னொரு சாரார்.

கதை

சில வருடங்களுக்குமுன், கணவரால் உடல் ரீதியில் வதைபட்ட பெண்கள் இருக்கும் ஒரு சமூகநல இல்லத்திற்குப் போனேன். இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்டும் பொறுமை காத்த குமுதா கூறினாள், “அவர் மாறிடுவார்னு நம்பிக்கையா இருந்தேங்க!” அவள் உடலில் பல எலும்புகள் நொறுங்கி இருந்தன.

(`படித்தவர்கள் இப்படியெல்லாம் செய்வதில்லை!’ என்பவர்களுக்கு: குமுதாவின் கணவர் அரசாங்க நிறுவனம் ஒன்றில் இரண்டாவது இடம் வகித்த பெரிய அதிகாரி).

அந்த இல்லத்தில் தங்கியிருந்த பல பெண்களுடன் பேசியதில், தம் அனுபவித்த இன்னல்களை, அதனால் எழுந்த துயரத்தை, வெளிப்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை என்று புரிந்தது. சிலர் காலை விந்தி, விந்தி நடந்தார்கள். பற்களை இழந்தவர்கள் பலர். எல்லாம் கணவன்மார்களின் உபயம். (என் அதிர்ச்சியும், துயரமும் நீங்க இரு தினங்களாகின). அவர்கள் சார்பில், நான் அவர்களைப்பற்றி எழுதினேன்.

நிறைய எழுதினேன், `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று நம்பும் பெண்களின் மடமையைப்பற்றி. நமக்குச் சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்ட அகல்யா, அருந்ததி போன்ற `பத்தினித் தெய்வங்களின்’ தாக்கம் நம் பெண்களை எங்கு கொண்டு விட்டிருக்கிறதென்று. நான் எழுதியதை மேற்கோள் காட்டி, அதிர்ச்சியுடன் பல பெண்களும் தொடர்ந்து எழுதினார்கள்.

இறுதியில், கணவன் மனைவியை அடித்தால் தண்டனை என்று சட்டம் விதிக்கப்பட்டது. கத்தியைவிட பேனாவால் நிறையவே சாதிக்க முடியும்.

கோபத்திற்கும் சரியான இலக்கு இருத்தல் அவசியம்.

சமீபத்தில், எவனோ ஒருவன் தற்கொலை செய்துகொண்ட பெண் படித்த பள்ளிக்கூடத்தில் பெரிய கற்களைத் தூக்கி எறிந்திருக்கிறான். அவ்வளவு ஆத்திரமாம்!

இதனால் யாருக்கு என்ன பயன்?

பிடிபட்டால், அவன்தானே சட்டத்தால் தண்டிக்கப்படுவான்?

இம்மாதிரிதான் வெளிநாடுகளில் பணி புரிவோர் தம்மில் ஒருவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ஒன்று திரண்டு தம் எதிர்ப்பை வன்முறையால் வெளிப்படுத்துவார்கள். இன்னொரு முட்டாள்தனம்.

கதை

சிங்கப்பூரில் இருக்கும் அந்த இடத்திற்குப் பெயர் லிட்டில் இண்டியா. இந்தியர்களும், பங்களாதேஷிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருவாரியாக இங்கு காணப்படுவார்கள். அவர்கள் திரள பிற காரணங்கள்: கோயிலைத் தவிர, மதுபானக் கடைகளும் உண்டு.

டிசம்பர் 2013-ல் அந்த இடம் வேண்டாத பெருமை பெற்றது. திடீரென்று ஒருவன் தெருவின் குறுக்கே வர, அவன்மேல் தனியார் பேருந்து ஏற, அவன் தலத்திலேயே மாண்டு போனான். (அவன் குடிபோதையில் இருந்தான் என்று அப்போது வெளியிட்டிருந்தார்கள்).

அங்கிருந்த 400 தொழிலாளிகளுக்க ஆத்திரம். சிங்கப்பூரில் நாற்பது வருடங்களாகக் காணாத கலவரம் அவர்களால் மூண்டது. பத்து காவல்துறையினர் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்கள், பேருந்து, ஆம்புலன்ஸ் என்று எல்லாவற்றின்மேலும் கற்களை எறியப்பட பெருஞ்சேதம் உண்டாகியது.

பிடிபட்டவர்களில் 22 பேருக்கு சிறைத்தண்டனை. 57 பேர் தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த கோபத்தினால் அவர்கள் சாதித்தது என்ன? இந்திய கீழ்மட்டத் தொழிலாளிகளை ஏற்க ஒரு நாடே அஞ்சிவிட்டதுதான் கண்ட பலன்.

`சிங்கப்பூரிலேதான் எங்களை விட மாட்டேங்கிறாங்களே!’ என்று அண்மையில் ஒரு தையல்காரர் என்னிடம் புலம்பினார். அங்கு கூடுதல் சம்பளம் கிடைத்திருக்கும். சிலரது அவசர நடத்தையால் பலரது கனவுகள் பாழாகிவிட்டன. தம் செயலால் எழக்கூடும் விளைவை கலகக்காரர்கள் எக்காலத்திலும் எண்ணிப் பார்ப்பதில்லை.

கோபம் அடங்காமலே, ஆத்திரத்துடன் ஒருவர் செயல்பட்டால், அவரிடம்தான் ஏதோ கோளாறு. அவரது செயலால் எந்த பலனும் விளையப்போவதில்லை.

கோபத்தை அறவே தணிப்பதென்பது இயலாத காரியம். ஆனால் கோபம் வரும்போது, ஆழ்ந்த மூச்சு, உலாவப்போதல், உடற்பயிற்சி போன்றவற்றால் அதை ஆறப்போடலாம். ஆக்ககரமாக என்ன செய்வது என்ற தெளிவு தானே பிறக்கும்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.