ஒப்பீட்டு நோக்கில் சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும்(நிமித்தம், கனவுப் பகுதிகளை முன்வைத்து)

-முனைவர் பா.மனோன்மணி

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். மொழியாக்க இலக்கியத்தின் தலை சிறந்த காப்பியம் கம்பராமாயணம். இவ்விரு காப்பியங்களும் நிமித்தம், கனவு ஆகிய இரண்டையும் காப்பியக் கட்டமைப்புக் கூறுகளுள் சிலவாகக் கையாண்டுள்ளன. அவ்வகையில் இவை கையாளப்பட்டுள்ள திறத்தில் இவ்விரு காப்பியங்களும் எங்ஙனம் ஒன்றுபட்டும் வேறுபட்டும் நிற்கின்றன என்பதை ஒப்பீட்டு நோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது. ‘தனக்கு முன்பு தோன்றிய காப்பியங்களின் அமைப்பு நெறிகளை மனத்தில் வாங்கித் தம் புலமைத்திறம் விளங்கக் காப்பிய அமைப்பைப் புதுக்கி அமைத்தவர் கம்பர்’ என்று அ. பாண்டுரங்கன் குறிப்பிடுவார். இவர்தம் கூற்றுக்கிணங்கக் கம்பன் தம் காப்பியத்தில் கனவு நிமித்தங்களைக் கையாளுமிடங்களில் சிலப்பதிகாரத்தையே துணையாகக் கொண்டுள்ளார் என்பதற்குப் பல அகச் சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றை முன்னிறுத்தி இக்கட்டுரை அமைகின்றது.

கண் துடித்தல்

பழந்தமிழரின் தலைமை நிமித்தக் குறியீடுகளுள் கண் துடித்தலும் ஒன்றாக இருந்துவந்துள்ளது. ‘கண் துடித்தல்’ என்பது நன்நிமித்தத்தையும் தீநிமித்தத்தையும் அறிவுறுத்துவதாகும். பொதுவாக இடக்கண் துடிப்பது பெண்ணுக்கு நன்நிமித்தமாகவும் ஆணுக்குத் தீநிமித்தமாகவும் சுட்டப்படுகின்றன. அதுபோல் வலக்கண் துடிப்பது ஆணுக்கு நன்நிமித்தத்தையும் பெண்ணுக்குத் தீநிமித்தத்தையும் உணர்த்துவதாகப் பழந்தமிழ்க் காலம் முதல் இன்று வரையிலும் நம்பப்பட்டு வருகின்றன. இவ்வகை நிமித்தக் குறியீடு இரு காப்பியங்களிலும் பயின்று வருகின்றன. இரண்டிலும் பெண்ணுக்கான நிலையிலேயே இவ்வகை நிமித்தம் பொருத்தப்பட்டுள்ளது.

மாதவியை விட்டுக் கோவலன் பிரியப்போகிறான் என்பதை இளங்கோவடிகள் ‘இந்திர விழவு ஊரெடுத்த காதையில்’ கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிப்பது கொண்டு வருவதுரைக்கிறார்.

உள்ளகம் நறுந்தாமு உறைப்ப மீது அழிந்து
கள் உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்து அகத்து ஒளிர்த்து நீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன’ (சிலம்பு.இந்.விழ.ஊர் : 235-240)

இங்குக் காப்பியத் தலைவியான கண்ணகிக்கு நன்மையும் கணிகையர் குல  மங்கையான மாதவிக்குத் தீமையும் நேரப்போவதைக் ‘கண் துடித்தல்’ எனும் நிமித்தத்தின் வழி இளங்கோவடிகள் படைத்துச் செல்கிறார். இது போன்று அதிகப் பாடல்களால் காப்பியம் புனைந்த கம்பரும்,

புருவம் கண் நுதல் வலம் துடிக்கின்றில: வருவது ஓர்கிலேன்’

(கம்.சுந்தர காண்டம்,பா-360) என்று அசோகவனத்தில் தனக்குத் துணையான திரிசடையிடம் இடக்கண் துடித்தமை பற்றிச் சீதை குறிப்பிடுகிறாள். இதனைத் தொடர்ந்து வரும் அடுத்த இரு பாடல்களும் கூடச் சீதை பல இடங்களில் கண் துடித்ததால் அடைந்த நன்மை தீமைகளைப் பற்றித் திரிசடையிடம் விவரிப்பதாகக் கம்பரால் படைக்கப்பட்டுள்ளன. அதாவது விசுவாமித்திரர் மிதிலைக்கு வந்த போது துடித்ததைப் போன்றே புருவம், தோள், கண் ஆகியவை இடப்பக்கம் துடிக்கின்றன. அயோத்தியை விட்டு வனம் புகுந்த நாளில் என் வலப்பக்கம் துடித்தது. இராவணன் தண்டகாரணியத்தில் வஞ்சனை செய்ய வந்த நாளிலும் எனக்கு வலப்பக்கமே துடித்தது. இப்பொழுது இடப்பக்கம் துடிக்கிறது எனவே இப்பொழுது இந்நிமித்தம் உணர்த்தும் பொருண்மையை உணர்ந்து ‘அஞ்சாமல் நடக்கப்போவது யாது என’க் கூறுவாயாக என்று திரிசடையிடம் சீதை வினவுகிறாள். இங்குச் சீதை வினவும் திறம் நன்நிமித்தத்தை உள்ளடக்கியே என்பது வெளிப்படை.

மேற்சுட்டப்பட்ட இரு காப்பிங்களிலும் ‘கண் துடித்தல்’ என்னும் நிமித்தம் காப்பியத் தலைவிகளுக்கு விளையப்போகும் நன்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிமித்தம் சுட்டும் முறையால் இவ்விரு காப்பியங்களும் ஒன்றுபடுகின்றன. அதே நிலையில் சிலப்பதிகாரத்தில் கண் துடித்தமையை எடுத்துரைப்பது புலவர் கூற்றாகவும், கம்பராமாயணத்தில் பாத்திரத்தின் கூற்றாகவும் (சீதை கூற்று) பயின்றுவந்துக் ‘கூற்று’ ஆளுமை வகையான் வேறுபட்டு நிற்கின்றன.

கண்ணுறங்காமை

மலர் ஒன்றின் மீதான புனைக் கனவினை இளங்கோவடிகள் ‘கானல் வரி’யில் படைக்கிறார். கழிபரப்பில் கண்போல் மலர்ந்த நெய்தல் மலரின் மாலை நேர இயல்பான  குவிதலைத் தலைவி ஒருத்தி காண்கிறாள். அதன் மீது தலைவி தன் இரங்கலை ஏற்றியுரைக்கிறாள். நெய்தல் மலரின் இயல்பான குவிதலின்மீது உறக்கமும், உறக்கம் வந்தால் கனவு வரும் என்பதும் இதில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் கண் துயிலாததால் உறக்கம் கொள்ளாத தலைவி நெய்தல் மலரின் குவிதல் பண்பால் நீ காணும் கனவில் கானலில் வந்து செல்லும் தலைவனைக் ‘கண்டறிதியோ’ என்று அம்மலரிடம் இறைஞ்சி வினவுகிறாள். இதனை,

புன்கண்கூர் மாலைப் புலம்பு மென் கண்ணே போல்
துன்பம் உளவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக் கண்ட றிதியோ!’  (சிலம்பு. கானல் வரி.7:33-36)

என்ற அடிகள் எடுத்துரைக்கும். இதுபோன்றதொரு காட்சிப் பதிவினைக் கம்பனின் பாத்திரப்படைப்பிலும் காணமுடியும். இராமனைப் பிரிந்த சீதைக்கு உறக்கம் வாராமையால் அவள் காண வேண்டிய கனவைத் திரிசடை கண்டதாகக் கம்பர் படைக்கிறார். சீதைக்குத் துயில் வாராமையை,

துயில் எனக் கண்கள் இமைத்தலும் மகிழ்த்தலும் துறந்தாள்:’ (கம்.சுந்தர காண்டம்,பா:332)

எனும் அடி எடுத்துரைக்கும். அதோடு சீதை துயில் கொள்ளாத நிலையில் ‘உனக்குத் தோன்றாத கனா எனக்குத் தோன்றிற்று’ எனக் கூறுவதாய்த் திரிசடை தான் கண்ட கனவினை முன்னிறுத்துகிறாள். ஆக, தலைவனைப் பிரிந்த தலைவியர் பிரிவுச் சூழலில் கண்ணுறக்கம் கொள்ளார் என்பது இரு காப்பியங்களிலும் பொதுப்பட நிற்கும் கருத்தாகிறது. பெண்மையின் கற்பொழுக்கக் கூறுகளுள் ஒன்றாகத் தலைவனைப் பிரிந்த காலத்தே பெண்கள் கண்ணுறக்கம் கொள்ளார்  என்பது இளங்கோவடிகள் நெய்தல் தலைவியின் மீதும் கம்பர் சீதையின் மீதும் ஏற்றியுரைத்துள்ளனர். இது பெண்மையின் கற்புருவாக்கம் என்ற அடிப்படையில் இருவரும் ஒன்றுபடும் தன்மையைக் காட்டுகிறது.

கனவில் நம்பிக்கை

இரு காப்பியங்களும் கனவு மீதான நம்பிக்கையைத் திடமாக வெளிப்படுத்துகின்றன. இதற்குச் சிலம்பின் கனவு நாயகி கண்ணகியும், கம்பரின் கனவு நாயகி திரிடையுமே சான்று. அதாவது, கண்ணகி ‘கனாத்திறம் உரைத்த காதை’யில் தான் கண்டதாகச் சுட்டிய கனாவினை, ‘கொலைக்களக் காதை’யில் நினைவு கூர்ந்து செயல்படுகிறாள். இதனை,

என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண்நீர்சோரா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையாச்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்’ (சிலம்பு.கொலைக்களக் காதை: 72-75) என்ற அடிகள் எடுத்துரைக்கும். இது போல், திரிசடையும் ‘காட்சிப் படலத்தில்’ தாம்  கண்டுரைத்த கனாவினை, ‘நிந்தனைப் படலத்தில்’ நினைவு கூர்ந்து ஆறுதல் மொழியுரைக்கிறாள்.

இன்னோரன்ன வெய்திய காலத்திடை நின்றாள்
முன்னே சொன்னேன் கண்ட  கனாவின் முடிவு, அம்மா!
பின்னே,வாளா பேதுறு வீரேல், பிழை’ என்றாள்:’ (கம்.நிந்தனைப்படலம், பா:486)

கண்ணகி, திரிசடை இருவரும் நினைவு கூர்ந்து செயல்படல், மாறா நம்பிக்கையினர் என்ற தன்மையில் ஒத்த பண்புடையராய்ப் படைக்கப்பட்டுள்ளமை நோக்கற்குரியது.

கனவின் நம்பகத் தன்மை

கனவின் நம்பகத் தன்மை என்பது கனவு கண்டோரான கண்ணகி, திரிசடை ஆகியோரின் மொழி வழி முன்னிறுத்தப்பட்டுள்ளது. காட்சிப்படலத்தில், 

பயில் வன பழுதல்: பழுதுஇ நாடு என,
வெயிலினும் மெய்யென உரைத்தல் மேயினாள்’ (கம்.சுந்தர.கா.பா:367)

என்று கூறித் திரிசடை கனவுக் காட்சிகளை எடுத்துரைக்கத் தொடங்குவதாகக் கம்பர் படைக்கிறார். இது திரிடை, கனவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் புலப்படுத்தும் சொல்லாடலாக அமைகிறது. அதாவது ”குற்றங்கள் மலிந்துள்ள இந்நாட்டில் கனா முதலிய தோற்றங்கள் பழுதுபடுதல் இல்லை (நன்கு பலிக்கும்)’ என்று சொல்லி, சூரியனைக் காட்டிலும் தவறாதனவாகிய சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்’ என்று கனவின் மீதான நம்பிக்கையை முன்வைத்தே திரிசடை கனவினை விவரிக்கத் தொடங்கினாள் என்பது கம்பர் படைப்பு.

கண்ணகியும் தன் கனவினைக் கூறத் தொடங்கும் முன் தேவந்தி, தன்னைப் போல் கணவனைப் பிரிந்து வாடும் இவளுக்கு வருத்தம் தீர்க்க ‘அறுகு சிறு பூளை நெல்லொடு தூஉய்ச் சென்று, பெறுக கணவனோடு’ (சிலம்பு. கனா.தி.உ: 43-44) என்று வாழ்த்து மொழி கூறுகின்றாள். உடனே கண்ணகி மறுமொழியாகப் ‘பெறுகேன் கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்’ (சிலம்பு.கனா.தி.உ:44-45) என்கிறாள். இதனால் ‘பெறுவேன் என்ற நம்பிக்கையில்லை’ காரணம் நான் கண்ட கனவு அப்படிப்பட்டது என்பதாகும். இவ்வாறு கூறுவதன் மூலம் கனவின் மீதான கண்ணகியின் நம்பிக்கை வழி இளங்கோவின் மனமும் திரிசடையின் வழி கம்பனின் மனமும் ஒன்றிணைவதைக் காணமுடிகிறது.

உரையாடல் தன்மை

கம்பராமாயணத்தில் தீக்கனா அறிகுறிகள் சீதை திரிசடை ஆகியோரிடையே மகிழ்ச்சியோடு பகர்ந்து கொள்ளப்படுகின்றன. சீதை திரிசடை கண்ட கனவினைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்; கண்ட கனவைக் கண்டவிதம் சொல்லி முடித்த திரிசடை கனவு முடிவதற்கு முன் சீதை எழுப்பியதையும் சுட்டுகிறாள். உடனே,

அன்னையே யதன் குறை காணென்றாயிழை
இன்னமும் துயில்கென விருகை கூப்பினாள்’  (கம்.சுந்தர.கா: 382)

என்று சீதையைக் கம்பன் படைத்துள்ளதன் திறம் திரிசடை கூறும் கனவின் மீது  கொண்ட நம்பிக்கையும் அவள் மீதான அன்பையும் புலப்படுத்துகிறது.

சிலப்பதிகாரத்திலோ தேவந்தி உறுவது அறியமுடியாத பேதையாகிறாள். பரிகாரம் கூறுகிறாள். சோமகுண்டம் சூரியகுண்டத்தில் மூழ்குமாறு உரைக்கிறாள். அதற்கு ‘பீடு அன்று’ என்று கூறிக் கண்ணகி மறுக்கிறாள். இந்நிலையில் இவ்விருவருக்கிடையே கனவுப் பகிர்வு ஓர் அறியாமை நிலையினதாகவும் முரண்பட்ட வாதங்களுக்குள் கொண்டுவிடுவதாகவும் அமைகிறது. தேவந்தி தன் அறியாமை நிலையை வாழ்த்துக்காதையில் பின்வருமாறு சுட்டிப்புலம்புவது இதற்குச் சான்றாகிறது. 

செய்தவ தில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த வுணராதிருந்தேன் மற்றென்செய்தேன்’ (சிலம்பு.வாழ்.கா: 5-6)

இங்குக் கம்பனின் கதைத் தலைவி சீதையும் இளங்கோவின் கதைத் தலைவி கண்ணகியும் கனவுக்குத் தரும் முக்கியத்துவத்தில் ஒன்றுபடுவது குறிப்பிடத்தக்கது. சீதை ‘துயின்று தொடர் உம், கனவை’ என்கிறாள். கண்ணகி ‘ பீடு அன்று’ என்று கூறி வருவதை எதிர் கொள்ளத் தயாராகிறாள்.

தீக்கனா அறிகுறிகள்

கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டுள்ள தீய அறிகுறிகள் பலவும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணத்திலும் காணக்கிடைக்கின்றன. அவை முறையே பின்வருமாறு,

 1. இடுதேள் இட்ட வார்த்தை.
 2. கோவலற்கு உற்றது ஒரு தீங்கு.
 3. காவலன் முன் கட்டுரைத்தல்.
 4. ஊர்க்குத் தீங்கு உண்டாதல்.

என்பன கண்ணகி சுட்டும் தீக்கனா அறிகுறிகளாகும்.

 1. வெண் கொற்றக் குடையும் செங்கோலும் முறிந்து கீழே வீழல்.
 2. வாயிலில் இடைவிடாது அசையும் மணியின் ஓசை கேட்டல்.
 3. எட்டு திசைகளும் அதிரல்.
 4. இரவு நேரத்தில் வானவில் தோன்றல்.
 5. நண்பகலில் விண்மீன் எரி கொள்ளிகளாகக் கீழே விழல்.

என்பன அரசமாதேவி சுட்டும் தீக்கனா அறிகுறிகளாகும்.

 1. ஒரு கீழ்மகனால் நடுநடுங்கத் துயர் அடைதல்.
 2. உடுத்த ஆடை பிறரால் கொள்ளப்படுதல்.
 3. கொம்பினையுடைய எருமைக்கடா மீது ஏறி செல்லுதல்.
 4. மலர் அம்புகளை வெற்று நிலத்தில் வீசி மன்மதன் செயலற்று ஏங்கல்.
 5. அழகு விளங்கும் போதி மாதவனிடத்தில் மணிமேகலையை மாதவி அளித்தல்.

என்பன கோவலன் சுட்டும் தீக்கனா அறிகுறிகளாகும். மகளான மணிமேகலையைப் புத்ததேவனுக்கு அளித்தல் என்பது துறவியாக்கல் என்ற மனநிலையையே தந்தையாகிய  கோவலனுக்கு உணர்த்துவதால் வம்சவளர்ச்சிக்குத் தடையாகிறது. எனவே, அதுவும் இக்காப்பியத்தைப் பொறுத்தவரை தீநிமித்தமாகவே அமைகிறது. மேற்சுட்டப்பட்ட மூவரின் கனவுகளில் இருவரின் கனவுகள் ‘மேலுலகம் செல்லல்’ என்ற அடிப்படையில் வெளிப்படையான குறியீட்டுத் தன்மையில் நன்நிமித்தங்களாகப் பயின்று வந்துள்ளன. ‘கணவனோடு வானுலகம் செல்லல்’ என்பது கண்ணகி கனவில் வந்த நன்நிமித்தமாகவும் ‘பற்றற்றோர் பெறும் பேற்றினைப் பெற்றோம்’ என்பது கோவலன் கனவில் வந்த நன்நிமித்தமாகவும் அமைகின்றன. பெரும்பான்மை சிலப்பதிகாரத்தில் பயின்றுவந்த கனவுக் குறியீடுகள் தீ நிமித்தங்கள் பற்றியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதுபோல் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மைக் குறியீடுகள் தீநிமித்தம் பற்றியவைகளேயாகும். அவை பின்வருமாறு:

 1. (இராவணன்) தன் பத்து தலைகளிலும் எண்ணெய் தேய்த்தல்.
 2. கழுதைகள் பேய்கள் பூட்டப்பட்ட தேரில் (இராவணன்) செல்லல்
 3. சிவந்த ஆடை உடுத்தல்.
 4. தென் திசை நோக்கிச் செல்லல்.;
 5. (இராவணன்) வளர்க்கும் ஓமத்தீகள் அவிதல்.
 6. மாளிகைகள் வானத்திலிருந்து விழுந்து பேரிடியால் இடியுண்டாதல்.
 7. இராவணனின் பிள்ளைகள், சுற்றத்தார், அரக்கர் கூட்டத்தினர் அவன் சென்ற தென்திசையிலே செல்லுதல். சென்றவர்கள் மீண்டு வராமை.
 8. பெண்யானைகளுக்கு மத நீர் ஒழுகப்பெறுதல்.
 9. அடிப்போர் இன்றியே முரச வாத்தியங்கள் முழங்குதல்.
 10. மேகக் கூட்டங்கள் இல்லாமலேயே இடிஇடித்தல்.
 11. வானின் நட்சத்திரக் கூட்டங்கள் யாவும் தானே உதிர்ந்து விழுதல்.
 12. இரவு நேரத்திலே சூரியன் பாதியாக விளங்கி மீதி பாதி எரிந்தது போல விளங்குதல்.
 13. அரக்க வீரர்களின் கற்பக மலர்மாலை நறுமணம் வீசுதற்குப் பதிலாகப் புலால் நாற்றம் வீசுதல்.
 14. இலங்கை மாநகரமும் அதனைச் சூழ்ந்துள்ள மதில்களும் நெருப்பால் பற்றி எரிதல்.
 15. விண்ணுலகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கற்பகச் சோலைகள் கரிந்து தீதல்.
 16. மங்கல அடையாளமான பூரண கலசங்கள் வாய் விரிந்து உடைதல்.
 17. இருளானது ஒளியை மறைத்துக்கொண்டு ஒளிவீசாதவாறு மறைத்தல்.
 18. தோரணங்கள் முறிந்து துண்டுபடல்.
 19. யானைகளின் தந்தங்கள் ஒடிந்து விழுதல்.
 20. வேத அந்தணர்கள் நிறுவிய பூரண கும்பங்களின் புனித நீர் நாற்றமெடுத்து கள்ளாகப் பொங்கி வழிதல்.
 21. வானத்து சந்திரனைப் பிளந்து கொண்டு நட்சத்திரங்கள் வெளிப்படல்
 22. திரண்ட மேகங்கள் மழைக்குப் பதிலாகப் புண்ணிலிருந்து வழியும் குருதியைச் சொரிதல்.
 23. தண்டாயுதம், சக்கரம், வில் முதலானவை தமக்குள் தாமே சண்டையிட்டுக் கொள்ளல்.
 24. மகளிர் தம் மங்கல நாண் அறுப்பார் இன்றியே அற்று அவரவர் மார்பகங்களின் மேல் வீழ்தல்.
 25. மண்தோதரியின் கூந்தலின் பின்னல் அவிழ்ந்து பிரிந்து வீழ்தல்.
 26. மண்தோதரியின் மயிர்கள் அருகில் இருந்த பெரிய விளக்கின் ஒளியில் பற்றிச் சுறுசுறு என எரிதல்.’

மேற்சுட்டப்பட்டவை யாவும் திரிசடை தான் கண்ட கனவாகச் சீதையிடம்  விவரித்துக் கூறிய தீக்கனா அறிகுறிகளாகும். நன்நிமித்தங்கள் சிலவற்றையும் கம்பன் படைத்துள்ளார். அவற்றுள் ஒன்று திருமகள் அரக்கர் அரண்மனையிலிருந்து வீடணன் அரண்மனைக்குச் செல்லல் என்பதாகும். இது கோவலன், கண்ணகி பற்றுள்ள இவ்வுலக வாழ்வை விடுத்துப் பற்றற்ற வானுலகு செல்வதைச் சுட்டும் அறிகுறியை ஒத்ததாகும். இவ்வாறு பல கூறுகளும் இவ்விரு காப்பியங்களுக்கிடையே ஒத்து நிற்கின்றன.

சிலம்பில் கோவலன் எருமைக்கடா மீது ஏறிச் செல்கிறான். இராவணன் கழுதை, பேய்கள் பூட்டப்பட்ட தேரில் ஏறிச் செல்கிறான். சிலம்பில் உடுத்த ஆடை பிறரால் கொள்ளப்படுகிறது. கம்பராமாயணத்தில் சிவந்த ஆடை உடுத்தப்படுகிறது. திசை, விண்மீன், எரிமீன், செங்கோல் குறித்த செய்திகளும் இதுபோன்று பொது நிலையில் இருகாப்பியங்களிலும் தீநிமித்தக் குறிகளாய் இடம்பெறுகின்றன.

சுருங்கக் கூறின், கண் துடித்தல், கண்ணுறங்காமை, கனவின் மீதான பாத்திரங்களின் நம்பிக்கை, கனவின் நம்பகத்தன்மை, நிமித்தங்களைக் கையாளுதல் போன்ற பல கூறுகளில் சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் ஒப்பு நோக்கும் போது சிலம்பின் தாக்கம் கம்பனில் அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தகைய ஒப்பீட்டுத் தன்மையை, சிலம்பின் தாக்கத்தை பிறதமிழ் காப்பியங்களில் காண்பது அரிதான ஒன்றாகும். ஆக, கம்பன் தம் காப்பியப் படைப்புப் பின்னணிக்கு நிமித்தம் கனவுகளைக் கையாளுமிடங்களில் சிலம்பினைத் துணையாகக் கொண்டிருக்க வாய்ப்புண்டு என்பது பெறப்படுகிறது.

*****

கட்டுரையாளர்
இணைப் பேராசிரியர்,
தாகூர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *