இலக்கியம்கவிதைகள்பொது

எல்லோரும் விரும்பி நிற்போம்!

-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

நரையொடு மூப்பு நமைவந்துசேரும்
நாள் அதை எண்ணிடாமல்
நாளுமே நல்லதை மனமதிலிருத்தியே
நாமுமே வாழ்ந்து பார்ப்போம்

தினமெலாம் புதிதென சிந்தனைபுகுத்தியே
நினைவதில் கொண்டு வாழ்வோம்
வருவது அனைத்தையும் மகிழ்வுடனேற்றுமே
வாழ்ந்திட  எண்ணி  நிற்போம்!

மற்றவர் வாழ்வினை மதிப்பிடும்வேலையை
வாழ்க்கையில் தவிர்த்து நிற்போம்
குற்றமே கண்டிடும் குணமதை நாளுமே
வெட்டியே எறிந்து நிற்போம்

பற்றுடன் நல்லதைப் பற்றியேநின்றிடும்
பக்குவம் பெற்று  நிற்போம்
உற்றவர் மற்றவர் உவப்புடனிருந்திட
உறுதுணை ஆகி  நிற்போம்!

வளமுடன் வாழ்ந்திட வகையினை நாளுமே
மனதினில் இருத்தி வைப்போம்
உளமதில் கருணையை ஊறிடச்செய்திட
இறைவனை நினைந்து  நிற்போம்

அளவிலா ஆசையை மனதிலிருந்துமே
அகற்றிட முயன்று நிற்போம்
இணையிலா வாழ்வினை என்றுமே வாழ்ந்திட
எல்லோரும் விரும்பி நிற்போம்!

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க