அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – 1

-பீ.பெரியசாமி

1.0 – முன்னுரை

எண்வகை மெய்ப்பாடுகளையும் அதன் விரிகளையும் periyasamiமுதலில் கூறிய தொல்காப்பியர், அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான, உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் எனும் மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார். ( தொல். மெய்-12)   இவ்வியலில் தொல்காப்பியர் கூறியுள்ள இம்மெய்ப்பாடுகளும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்களின் வழிநின்று ஆராயப்படவுள்ளன.

1:1. அகத்திற்கும் புறத்திற்குமுரிய நிலைகளன்கள்

மேலே கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளும் அதனைத் தொடர்ந்து கூறப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்குமான நிலைக்களன்களாகும் இதனை, “இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடெனக் கொள்க” (பேரா, மெய்.12) என பேராசிரியர் கூறியுள்ளார்.

1:1:1. உடைமை

உடைமையென்பது “யாதானு மொருபொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “உடைமையென்பது, செல்வம்; செல்வநுகர்ச்சியாயின் உவகைப் பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச்செல்வந்தன்னை நினைந்தின்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது நிதிமேனின்ற மரம்போலச் செல்வமுடைமையான்வரும் மெய்வேறுபாடு” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “மேற்கூறிய துய்க்கப்படும் செல்வத்தின் வேறுபட்டுப் பிறவாக வரும் கிழமைப் பொருள்களாம். இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும்” (பாலசுந், மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.  உடைமை என்பது யாதானும் ஒரு பொருளுக்கு உரிமை கொண்டவழி மனத்தில் தோன்றும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணரும், பாலசுந்தரரும், புறம்.72-ஆம் பாடலையும்; மேலும், பாலசுந்தரம் புறம்.188-ஆம் பாடலையும்;  தாசன், புறம்.2ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:2. இன்புறல்

இன்புறலாவது, “நாட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது” (இளம்., மெய்.12) எனவும், “அவ்வுடைமையை நினையுந்தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனநிகழ்ச்சி” (பேரா., மெய்.12) எனவும், “அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும்.” (பாரதி, மெய்.12) எனவும், “தமது உடைமைகளையும் செயல்களையும் பற்றித் தாமே எண்ணி மகிழ்தல் இதுவும் உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இன்புறலென்பது தனக்கு உரிமையுடைய நபரையும் உடைமைகளையும் செயல்களையும் எண்ணி தாமே தமக்குள் மகிழும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணர், நற்.182, 3  – ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் குறள். 66, 228 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:3. நடுவுநிலைமை

நடுவுநிலையாவது, “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” (இளம், தாசன், ராசா., மெய்.12) எனவும், “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது “செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு நெஞ்சோர்ந்தோடா நிலைமை” அது காம வெகுளி மயக்க நீங்கினோர் கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற்றாகலான் அவற்றோடு கூறினான்.” (பேரா.குழந்தை., மெய்.12) எனவும், “தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது நிற்கும் நயனுடைமையாகிய தகவு. இதனை வடமொழி நாடக நூலார் கூறும் சாந்தம் என்னும் சுவையாகக் கருதி விளக்குவர் உரையாசிரியன்மார். சாந்தம் வேறு; நடுவுநிலை வேறு என அறிக.”( பாலசுந்., மெய்.12) எனவும், “காதலும் கடனும் மோதக்  கோடா மனச் செப்பம்; விழைவுக்கடிமையாகாது அறமறவாக் காதற் செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமநிலை எனும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புக் காதலின் உணார்வையே  குறிக்கும்” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நடுவுநிலையென்பது எவற்றின் மீதும் பற்றில்லாத உணர்வுநிலை. இதனை சமநிலை என பேராசிரியரும் குழந்தையும் கூறுமிடத்து; பாலசுந்தரமும் பாரதியும் இதனை மறுத்துரைக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி, நடுவுநிலையென்பது அறநெறிதவறாமை. இதுவே சரியானது. ஏனெனில் நடுநிலைமை எனும் திருக்குறள் அதிகாரத்தை விளக்கும் பரிமேலழகர், “பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை.” (திருக்குறள், பரிமேலழகார்  உரை., ப.46) என்கிறார். ஆகவே, சமநிலையும், நடுவுநிலைமையும் வெற்வெறானவை.  இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறள்.118-ஐ எடுத்தாண்டுள்ளனர். மேலும், பாலசுந்தரம் புறம்.192-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:4. அருளல்

அருளலென்பது “எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “தவறுணரா அன்பின் பெருக்கம்.”( பேரா.குழந்தை, மெய்.12) எனவும், “எல்லா உயிர்களிடத்தும் அன்பின் முதிர்ச்சியாகிய கனிவுள்ளத்தாற் புரியும் செயல். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். வடநூலார் கூறும் கருணையை ஒப்புடை ஒக்கும். இரக்கம் வேறு; இவ்வருள் வேறு என அறிக.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலே அருள் எனப்படும். இது வடநூலார் கூறும் கருணையின் பாற்படும். இதனை விளக்க இளம்பூரணர், பேராசிரியர், தாசன் ஆகியோர் கலி.11-ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.141-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:5. தன்மை

தன்மையென்பது, “சாதியியல்பு” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடைகொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென்று இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க.” (பேரா., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்வழிப்படும் எனக்கொள்க. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், புறம்.13, 315, கலி.108 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.152, 154, முருகு.50-51, முருகு.126-137 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:6. அடக்கம்

அடக்கமென்பது, “மனமொழிமெய்யினடங்குதல். அது பணிந்தமொழியும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் போல்வன.” (இளம், பேரா, குழந்தை, தாசன், இராசா, மெய்.12) எனவும், “தன் தலைமை நிலை மறந்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல். “ஞாட்பினு ணண்ணாரும் உட்குமென்பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது” எனவும், “நாணொடு நல்லாண்மை காதலுக்கு முன் பண்டுடையேன்” எனவும் வருவனவற்றால் அன்பு அடக்கம் தருதலறிக. இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைக் குறிக்குமெனினும் அமையும்.” (பாரதி., மெய்.12) எனவும், “செல்வமும் ஒளியும் மிகினும், இகலும் இகழ்ச்சியும் நேரினும் பொங்காது நிற்கும் பொறையும் உயர்ந்தோர் மாட்டுப் பணிந்தொழுகும் ஒழுக்கமுமாம். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அடக்கமென்பது ஐம்புலன்களை அடக்குதலும், தன்னுடைய குறைகளைப் பிறர் அறியாதவாறு காத்தலும்; செல்வம் போன்றன மிகுந்தாலும் குறைந்தாலும் தன் நிலையிலிருந்து மாறாத இயல்பும்;  பெரியோரை மதித்து நடத்தலுமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.124, 126, 127 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.191, 216 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:7. வரைதல்

வரைதலென்பது “காப்பன காத்து கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்; அவை: பார்ப்பாராயினும் முத்தீ வேட்டலும் புரவுங்கள்ளும் முதலாயின கடிதலுமென்று இன்னோரன்ன கொள்க வரைதலென்பது தொழிலாதலான் இது தன்மையெனப்படாது.” (பேரா., மெய்.12)  என பேராசிரியர் கூறியுள்ளார். இளம்பூரணர், குழந்தை, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோரின் உரையும் இதன்வழிப்படும். மேலும் பாரதி, “நாணுவரை யிறந்துமுன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை; இது காதலினெழுவது.” (பாரதி, மெய்.12) என கூறியுள்ளார். வரைதலென்பது நாணம் ஏற்படும்வரை மகிழ்ந்த பலவும் நாணம் வந்தவழி விலகும் மனநிலை எனவும்; காதலுக்குரியது எனவும்; செய்யத்தகுவனவும் செய்யதகாதனவும் உணர்ந்து ஒழுக்கத்தோடு வாழும் நிலையெனவும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர் உரையாசிரியர்கள். இவற்றுள், வரைவு என்பது திருமணத்தை உணார்த்துவது எனவே வரைதலென்பது காதலுக்குரிய ஒழுக்கமாகக் கொள்வதே பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், திரிகடுகம்.29-ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:8. அன்பு

அன்பென்பது, “பயின்றார் மாட்டுச் செல்லுங் காதல்” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “அருட்கு முதலாகி மனத்தினிகழு நேயம்; அஃதுடையார்க்குப் பிறர் கட்டுன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாகலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவையெல்லாந் தத்த மனத்தினிகழ்ச்சியை வெளிப்படுவனவாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்றவற்றிற்கும் இஃதொக்கும்.” (பேரா, பாரதி, குழந்தை, மெய்.12) எனவும், “தொடார்புடையார் மாட்டும், நட்டார் மாட்டும் தம் விருப்புடைய பொருள்கள் மாட்டும் செலுத்தும் கைம்மாறு கருதாத நேயம் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அன்பென்பது தான் அறிந்தவர்களிடமும், உறவுகளிடமும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னிடம் வெளிப்படும் ஓர் மனிதநேய உணார்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.79-ஐயும்; பாலசுந்தரம் புறம்.91, குறுந்.181 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:9. கைம்மிகல்

கைம்மிகலென்பது, “குற்றமாயினும் குணமாயினும் அளவில் மிகுதல்” (இளம், இராசா, தாசன், பாலசுந்., மெய்.12) எனவும், “ஒழுக்கக்கேடு; அது சாதித்தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல்.” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “அடங்காக் காதற்பெருக்கு.  “நோய் மவி நெஞ்சமொடு இணையல் தோழி” என்பதும், “ஆற்றார் காதல் நோயட இவளணி வாட” என்பதும் போல வருவன காண்க. “காதல் கைம்மிகல்” எனக் களவியலிலும் சூ.116 முன் இவ்வியலிலும் சூ-23 சுட்டுவதானுமுணர்க.” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கைம்மிகலென்பது, அளவில் மிகுதல் அது காதலாயினும் கடமையாயினும் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், மெய்.23, குறள்.868 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.44, குறள்.567, குறள்.539 ஆகியபாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:10. நலிதல்

நலிதல் என்பது, “பிறரை நெருக்குதல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினைமாக்கட்கண் நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தின்கண் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது.” (பேரா., மெய்.12) எனவும், “இடுக்கணுறுதலும் உறுத்தலுமாம். இஃது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய சொல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நலிதலென்பது பிறரை துன்புறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், நெடுநல்.இறுதிவெண்பாவும், பாலசுந்தரம், புறம்.19, 276 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:11. சூழ்ச்சி

சூழ்ச்சி என்பது, “எண்ணம்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “சுழற்சி, சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன்கட் டோன்றின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம்.” (பேரா, குழந்தை, மெய்.12)எனவும் “நேராக் கூட்டம் நிகழவழியாராய்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “புறநிகழ்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுதல். இஃது அச்சத்திற்குரிய பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். சூழ்ச்சி என்பது மனதில் உதிக்கும் ஆழ்ந்த சிந்தனை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.445 -ஐயும்; பாலசுந்தரம், புறம்.246, குறள்.639 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:12. வாழ்த்தல்

வாழ்த்தலென்பது, “பிறனை வாழ்த்துதல்” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறரால் வாழ்த்தப்படுதல்” (பேரா, குழந்தை, மெய்.12) எனவும், “இது பிறவினையன்றோவெனின், ஒருவனை நீடுவாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்பது” (பேரா., மெய்.12) எனவும், “காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல் “வாழி என்னெஞ்சே”, “நீ வாழிபொழுது”, “வாழிஅனிச்சமே”, “காதலை வாழிமதி”, “புண்கண்ணை வாழி மருண்மாலை” என வருவன காண்க”  (பாரதி, மெய்.12) எனவும், “உலகநலங் கருதி இறையையும் தெய்வ முதலியவற்றையும் போற்றுதல் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இவற்றுள் பிறனை வாழ்த்துதல் – பிறரால் வாழ்த்தப்படுதல் – தெய்வம் போற்றுதல் எனும் மூன்று வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியர்களிடையே காணப்படுகிறது. இவை மூன்றுமே வாழ்த்துதலின் பாற்படும். ஏனெனில், தான் பிறரை வாழ்த்துதலும், பிறர் தன்னை வாழ்த்தினாலும், தெய்வத்தை மக்கள் போற்றினாலும் அது வாழ்த்துதலின் பாற்படும். வாழ்த்து என்பதற்கு கழகத் தமிழராதி “ஆசி; துதி; மங்களம்” (க.த.அ.,ப.840) என பொருள் கூறியுள்ள வழி இதனை அறியலாம். இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர், ஐங்குறு.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், ஐங்குறு.1, சிலம்பு.கடவுள் வாழ்த்து பாடல்களையும்; தாசன் ஐங்குறு.1, புறம்.9 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:13. நாணல்

நாணலென்பது, “தமக்குப் பழி வருவன செய்யாமை” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “வெண்குதல், காமமும்; நாணும் உயிர்க்காவாத் தூங்கும் என்நோனா உடம்பினகத்து எனவும், “பல்லோர்கூற யாம் நாணுதுஞ்சிறிதே” எனவும், “யானோக்குங் காலை நிலனோக்கும்” எனவும், “கொண்க னுர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்…………………… காணவந்த நாணப்பெயரும்” எனவும் வருவன காண்க.”( பாரதி., மெய்.12) எனவும், “சான்றோர் பழிப்பனவற்றை ஏலாமையும் புரியாமையுமாம். தன்புகழ் கேட்டவழி எய்தும் மென்மையும் இதன்கண் அடங்கும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நாணலென்பது பழிவருவன செய்யாமை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1015, 1017 ஆகிய குறள்களையும்; பாலசுந்தரம், புறம்.65, 394, 43, கலி.119 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:14. துஞ்சல்

துஞ்சலென்பது, “உறக்கம் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று.” (இளம்., மெய்.12) ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். துஞ்சலென்பது உறக்கம். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.2, 159 – ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:15. அரற்று

அரற்றென்பது, “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு அதுவும் ஏனைச் சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது.” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “அழுகையன்றிப் பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்; அது காடுகெழு செல்விக்கும் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “அறிவொடுபடாது வெருவுதலும் உறக்கத்தின்கண் வாய் சோர்தலுமாம். இது மருட்கைக்கும் உவகைக்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அரற்று என்பது உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு ஆகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.24ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.198 -ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை

1:1:16. கனவு

கனவென்பது, “நனவுபோலாமையின் மெய்ப்பாடாயிற்று” (இளம்., மெய்.12) எனவும், “வாய்வெருவுதல்; அதனானும் அவனுள்ளத்து நிகழ்கின்ற தொன்று உண்டென்டறறியப்படும்.”(பேரா, குழந்தை, தாசன், மெய்.12)  எனவும், “தூக்கத்திற்றோற்றுவது இதுவும் காதலில் கனிவது”(பாரதி., மெய்.12)  எனவும், “உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. இது பெரும்பாண்மை உவகைக்கும் சிறுபான்மை மருட்கைக்கும் ஏனையவற்றிற்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கனவென்பது உறக்கத்தின்போது நனவுபோல வெளிப்படுவதோர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1215-ஐயும்; பாரதி குறுந்.147-ஐயும்; பாலசுந்தரம்       கலி.49-ஆம் பாடல் மற்றும்,

கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து” (அகம்-170)

எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், தாழையின் தாழ்ந்த கிளையில் கடல்காக்கைத் தன் பெடையோடு பசிக்கு ஒன்றும் பெறாமல் சோர்வாய் அமர்ந்திருக்கும். அப்போது கடலில் பரதவர் வேட்டையாடாத இடத்தில் சுறாமீனைத் தான் பிடித்துத் தின்பதாகக் கனவுக் காணும் என தலைவி நண்டிடம் கூறியுள்ளாள். இதில் கனவு எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது. “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி தலைவனுடன் கூடி, முன்பு, பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு,(மணிமிடைபவளம்), ப.11) என நா.மீனவன் கூறியுள்ளார்.

1:1:17. முனிதல்

முனிதலென்பது, “வெறுத்தல்” (இளம், பேரா, குழந்தை, இராசா, தாசன், மெய்.12) எனவும், “அஃது அருளுஞ் சினமுமின்றி இடைநிகர்த்தாதல். ‘வாழ்க்கை முனிந்தா’ எனவும், “உறையுண் முனியுமவன் செல்லுமூரே” எனவுஞ் சொல்லுபவாகலின்” (பேரா., மெய்.12) எனவும், “உளம் கொள்ளாவழியும் மாறுபட்ட வழியும் எய்தும் வெறுப்பு. இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். முனிதலென்பது ஒன்றனை வெறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.45-ஆம் பாடலையும், பேராசிரியர், புறம்.96-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.208, 176 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:18. நினைத்தல்

நினைத்தலென்பது, “கழிந்ததனை நினைத்தல் அது மறந்தாங்கு மறவாது பின்புந் தோன்றுதலின் மெய்ப்படாயிற்று” (இளம், தாசன், மெய்.12) எனவும், “விருப்புற்று நினைத்தல், நின்னை மிகவும், நினைத்தேனென்பது, வழக்காதலின்; அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடாயிற்று”( பேரா., மெய்.12) எனவும், “ஒன்றனது பயனை விரும்பி அதனை இடைவிடாது எண்ணுதல் கழிந்ததனை மீள எண்ணுதலுமாம். இஃது உவகைக்கும் சிறுபான்மை அச்சத்திற்கும் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர் ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். நினைத்தலென்பது நீங்கிய நினைவுகளை மீள நினைக்கும்போது ஏற்படும் உணர்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1203-ஐயும்; பாரதி, குறுந்.102, 99, நற்.253 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:19. வெரூஉதல்

வெரூஉதலென்பது, “அச்சம் போல நீடுநில்லாது  கதுமெனத் தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது.” (இளம்., தாசன், மெய்.12) எனவும், “விலங்கும் புள்ளும் போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி; அஃது அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “பிரிவும் ஊறும் அஞ்சுதல்”( பாரதி., மெய்.12) எனவும், “விரும்பத்தகாதன கண்டுழியும் நிகழ்வழியும் எய்தும் விதிர்ப்பு. இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். வெரூஉதல் என்பது பிரிவின் கண்ணும், துன்பத்தின் கண்ணும் அச்சம் போல தோன்றி திடிரென மறையும் ஓர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,           கலி.87-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.117, 300, 217, நற்.253 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம்,

காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்
அதற்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனந்தலை மயங்கிய நனந்தலைப்” (அகம்-39)

எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், உன்னை மறக்கவில்லை என்பதற்கு ஒரு சான்று தருகிறேன் கேள். காட்டுவழியில் மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தேய்வதால் மூங்கில் சொரியும் தீப்பொறிகள் அங்கு கீழே விழுந்துள்ள சறுகுகள் மறையும்படி தீப்பற்றி எழுந்து ஊகம் புல்லின் பகுதிகளையும் எரியில் உண்டாக்கிக் காற்று பரவும் இடமெல்லாம் பறந்து எரிந்தது. அதைக்கண்டு அலறி அழும் வணிகக் கூட்டம் பயந்து ஓடியது. அதோடு செருக்கை உடைய புலியைக் கண்டு யானைக் கூட்டம் பல இடங்களுக்கும் சென்றது. அந்நிலையில் கதிரவன் மறைந்தான் என தலைவன் தலைமகளிடம் கூறினான். இதில் வெரூஉதல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

1:1:20. மடிமை

மடிமையென்பது, “சோம்புதல்” (இளம், பேரா, குழந்தை, தாசன், மெய்.12) எனவும், “ஆற்றாமையின் அயர்வு” (பாரதி., மெய்.12) எனவும், “செய்தற்குரியவற்றைச் செய்யாது சோர்ந்திருத்தல். அஃதாவது முயற்சியின்றிக் கிடத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். மடிமையென்பது செய்ய வேண்டிய செயலை செய்யாது சோம்பி கிடத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.608-ஐயும்; பாரதி, குறுந்.396, 316 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம்,

அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில்”  ( அகம்.173)

எனும் அகப் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேலே கூறப்பட்ட அகப்பாடலில், இல்வாழ்வை முறைப்படி நடத்துதல், சுற்றத்தாரின் துன்பம் நீக்குதல் ஆகிய இரண்டும் முயற்சி இன்றி ஊக்கமின்றி இருந்தவர்க்கு இல்லை என்று கருதி நம் தலைவர் பொருள் ஈட்டும் முயற்சியை மேற்கொண்டார் எனத் தோழி தலைமகளுக்குக் கூறியது. இதில் மடிமையினால் என்ன நேரும் என்பது வெளிப்பட்டுள்ளது.

1:1:21. கருதல்

கருதலென்பது, “குறிப்பு” (இளம், பாரதி, இராசா, தாசன்., மெய்.12) எனவும், “மறந்ததனை நினைத்தல்” (பேரா, குழந்தை., மெய்.12) எனவும், “ஒன்றைச்சுட்டி ஆழ்ந்து எண்ணுதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். கருதலென்பது, குறிப்பு  – ‘மனக்குறிப்பு’ ஆகும். மனதில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையே மனக்குறிப்பு எனவே இவைகள் இங்கே பொருத்தமுடையன. ஆனால், பேராசிரியரும் குழந்தையும் ‘மறந்ததனை நினைத்தல்’ என பொருள் கொள்வர். ஏற்கனவே நினைத்தல் என்பதற்கு இவ்வாறு பாடம் கொண்டுள்ளதால் இங்கு இது பொருந்தாது. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1095-ஐயும்; பாரதி, குறள்.1097, குறுந்.298 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.236-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:22. ஆராய்ச்சி

ஆராய்ச்சியென்பது, “ஒரு பொருளைக் குறித்த அதன் இயல்பு எத்தன்மைத்தென வாராய்தல்” (இளம், இராசா, தாசன்., மெய்.12) எனவும், “ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல்.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “காதலரன்பு கனி வழிசூழ்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “ஒன்றனது நலந்தீங்குகளை நடுவுநின்று நோக்கியறிதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். ஆராய்ச்சி என்பது ஒரு செயலினால் பின்விளையும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.73 ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.276, கலி.84 ஆகியப் பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

(தொடரும்)

*****

கட்டுரையாளர்
தமிழ்த்துறைத்தலைவர்
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம், ஆற்காடு

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *