Tag: மோகன் குமார்

  • தொல்லைகாட்சி: நாஞ்சில் சம்பத் :உங்களில் யார் பிரபுதேவா

     

    மோகன் குமார்

    உங்களில்  யார் பிரபு தேவா

     

    விஜய் டிவி நடத்தும் உங்களில் யார் பிரபு தேவா – சீசன் டூ முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது . டிவிக்கள்  ஒவ்வொன்றிலும் பாட்டு நிகழ்சிகள், டான்ஸ் நிகழ்சிகள் உள்ளன ஆனால் விஜய் டிவி போல பலரும் பார்க்கும் விதமாய் சண், கலைஞர், ஜெயா போன்ற டிவிக்களால் செய்ய முடிவதில்லை என்பதே நிஜம் !

     

    ஒய்ல்ட் கார்டில் கண்ணை கட்டி கொண்டு ஒருவர் ஆடினார். கிட்டத்தட்ட செட் முழுதும் போய் ஆடினார். அவ்வப்போது கண்ணை கட்டியதால் லேசாய் தடுமாறினாலும் அருமையான ஆட்டம் ! நாங்கள் எப்போதுமே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தேல்லாம் பார்ப்பதில்லை. சானல் மாற்றி மாற்றி பார்க்கிறது தான். அதனால் அன்று மற்றவர்கள் ஆடியதை அதிகம் பார்க்கலை

     

    இந்நிகழ்ச்சி பிரபலம்  என்றாலும் சூப்பர் சிங்கர்  அளவு ஹிட் ஆகலை என்று தான் சொல்லணும்

     

    ரோடில்  செயினை திருடிய போலிஸ் ஏட்டு

     

    சண் நியூஸ் செய்தியில் காட்டிய செய்தி இது (இத்தகைய  செய்தி ஜெயா டிவியிலா வரும்?) மதுராந்தகத்தில் சாலையில் நடந்து வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழு பவுன் செயினை அறுத்து கொண்டு தப்ப முயற்சித்துள்ளார் ஒருவர். அந்த பெண்மணி அந்த திருடர் வந்த பைக்கை விடாமல் பிடித்து கொண்டு ஓட விடாமல் தடுத்துள்ளார். சாலையில் இருவருக்கும் பெரும் சண்டை நடந்துள்ளது. அப்போது அந்த வழியே போலிஸ் வர, அவர்கள் முதலில் புருஷன் பெண்டாட்டி சண்டை என நினைத்துள்ளனர் அப்புறம் இந்த பெண் செயினை அறுத்துகிட்டு ஓடுறார் திருடன் திருடன் என கத்தவும், போலிஸ் அந்த திருடனை வந்து பிடித்துள்ளது

     

    ” நான் போலிஸ் ஏட்டுயா; விட்டுடுங்க ” என கெஞ்சியுள்ளார் அவர். விடாமல் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்றால் நிஜமாவே அவர் போலிஸ் ஏட்டு தான் என்று தெரிந்துள்ளது. டிவி யில் காட்டும் போது அவரது முகத்தை முழுதும் மறைத்து காட்டினர் போலீசார் ! (தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா?)

     

    யாராச்சும் திருடன்  வந்தா போலிஸ் கிட்டே போகலாம்  அந்த போலிசே திருடன் ஆனா  நாம யார் கிட்டே போறது ?

     

    டிவி யில் பார்த்த படம் : Taken

     

    எல்லாரும் இப்போது  ரிலீஸ் ஆன Taken – II பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் அதன் முதல் பார்ட் இப்போதான் ஸ்டார் மூவிஸில் பார்த்தோம்.

     

    அட இந்த கதையை  நாம முதல்லேயே பாத்திருக்கோமே ! நம்ம கேப்டன் இயக்கி நடிச்ச விருதகிரி இதே கதை தானே என தோணியது. சும்மா சொல்லக்கூடாது  கேப்டன் பல சீன் டிப்பி காப்பி அடிச்சிருக்கார்

     

    ஹீரோவின் டீன் ஏஜ் பெண்ணை ஒரு கூட்டம்  கடத்தி விற்க பார்க்க, ஹீரோ பல தடைகளை தாண்டி எப்படி மீட்டார் என்பது தான் கதை. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். தெரிந்த கதை என்றாலும் gripping ஆக இருந்தது பார்க்க.

     

    ஸ்டார் மூவிஸில் படம் பார்ப்பதில் ஒரு நல்ல விஷயம். விளம்பரம் போடும்போது மறுபடி படம் வர எவ்வளவு நிமிடம் ஆகும் என சைடில் தெரியும் அதை பொறுத்து நாம் மற்ற சானல் போய்விட்டு ஜாலியா வரலாம் !

     

    அமில மழை  பொழிந்த நாஞ்சில் சம்பத்  
     
    ம.தி.மு.க வில் வைக்கோவிற்கு அடுத்த இடம் என்று கருதப்பட்ட நாஞ்சில் சம்பத்திற்கும் வைக்கோவுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.  இதையடுத்து  சன் டிவி நாஞ்சில் நாஞ்சில் சம்பத்திடம்  விரிவான பேட்டி எடுத்தது. வைக்கோவின் மினியேச்சர் போலவும், சிராக்ஸ் போலவும் தோற்றமும், பேச்சும்  கொண்ட அவர் பேசியதிலிருந்து சில பகுதி:  
     
    – அஞ்சு வருஷம் திட்டி விட்டு, நான்கு சீட் அதிகம் என்றதால் கடைசி நேரத்தில் அணி மாறியவர் வைகோ. அவர் எந்த கட்சியுடன் சேர்வது என்று கடைசி நிமிடம் வரை தடுமாறியதால் தான் நாங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் தடுமாற வேண்டியிருந்தது.
     
    – தேர்தலின்போது நடந்த ஒரு திருமணத்தில் என்னை தனி அறைக்கு அழைத்து சென்று ” ஸ்டாலினை முதல்வராக்க நான் உழைக்கணுமா?” என்று பேசியவர் வை.கோ.  
     
    – இந்த கட்சிக்காக வைகோவை விட அதிகம் உழைத்தவன் நான். அதிகம் பேரை ஈர்த்தவன் நான். நானாக கட்சியை விட்டு விலக மாட்டேன் அந்த பழி சொல் எனக்கு வேண்டாம். அவராக வேண்டாமானால் என்னை நீக்கட்டும்.  
     
    – அவரை விட மிக அதிககூ ட்டங்களில் என்னை பேச அழைக்கிறார்கள். தன்னை விட இன்னொருவர் அதிக புகழ் பெறுவது பிடிக்காமல் அவர் செய்யும் செயல் தான் இது  
     
    – நாஞ்சிலை கொளுத்தியது போல் இதையும் கொளுத்துங்கள் என்று சர்ச்சைக்குரிய புத்தகம் பற்றி பேசுகிறார் என் மீது இவ்வளவு வன்மம் அவருக்கு உண்டு என இப்போது தான் தெரிகிறது. இப்படி வன்மத்துடன் உள்ளவரை எப்படி என் மகள் கல்யாணத்துக்கு அழைக்க முடியும்? அதனால் தான் அழைக்க வில்லை  
     
    – என் வீட்டார் என்னை எந்த கட்சியிலும் சேராதே. இலக்கிய பணி மட்டும் செய் என்கிறார்கள். 18 வருடமாய் எந்த சொந்தகாரர் கல்யாணம், சாவுக்கும் செல்லாமால் கட்சி, கட்சி என்று இருந்து விட்டேன். நான் இறந்தால் எந்த சொந்த காரரும் வர மாட்டார் கட்சி காரர்கள் வந்தால் தான் உண்டு  
     
    பிளாஷ்பேக் : ரயில் சிநேகம்  
     
    சண் டிவியில் முதன் முதலில் சீரியல் என்று ஆரம்பித்த போது பாலச்சந்தர் செய்த தொடர் ரயில் சிநேகம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. “ரயில் சிநேகம் ..ரயில் சிநேகம் ” என்று ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றும், ஒரு வரி விடாமல் நியாபகம் இருக்கிறது. குழந்தையை வைத்து கொண்டு பாடும் ” இந்த வீணைக்கு தெரியாது” கூட மிக அழகான இன்னும் பலர் விரும்பி கேட்கும் பாடல் தான்.  
     
    நிழல்கள் ரவியின் பெண்ணாக வளரும் இந்திராவிற்கு திடீரென அவர் தன் தந்தை இல்லை என தெரிய வருகிறது. அப்போ நிழல்கள் ரவி ஏன் அவரை வளர்க்கிறார் என சொல்வது தான் ரயில் சிநேகம்.  

    வாரம் ஒரு பகுதி மட்டுமே  வரும் இந்த தொடரை எவ்வளவோ  பேர் விரும்பி பார்த்தோம். நல்ல சினிமா பார்க்கிற சந்தோசம் அப்போது இந்த சீரியலில் கிடைத்தது !

     

    ஒரு நாள் போதுமா?  
     
    விஜய் டிவியின் மியூசிக் அவார்ட்சில் நிகழ்ச்சி துவக்கி வைத்து ” ஒரு நாள் போதுமா? ” பாட்டை முழுமையாய் பாடினார் பாலமுரளி கிருஷ்ணா. ஏறக்குறைய நிஜ பாட்டை கேட்கும் விதத்திலேயே இன்றும் அவர் பாடுவது ஆச்சரியமாய் இருந்தது. ஜானகி, சுசீலா, டி.எம். எஸ் போன்றோர் குரலில் மிக அதிக நடுக்கமும் முன்பு போல் இப்போது பாட முடியாததையும் காண்கிறோம். ஆனால் இவரால் எண்பது வயதுக்கு மேலும் எப்படி அருமையாய் பாட முடிவதுடன், குரலும் அப்படியே இருக்கிறது ?  
     
     
    இக்கேள்விக்கு ஒரு விடை தான் இருக்கமுடியும் ! பயிற்சி ! விடாமல் தினம் பயிற்சி மேற்கொள்கிறார் என நினைக்கிறேன்.  
     
     
    நம் வாழ்க்கைக்கும் இது பொருந்தும் தானே ! நாம் மனதில் கொண்ட லட்சியத்திற்கு தினம் உழைத்தால், பயிற்சி எடுத்தால் நினைத்ததை அடைய முடியும் தானே !

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (19)

    மோகன் குமார்

    கேள்வி: முரளி தரன், மடிப்பாக்கம் 

    எங்கள் தந்தை ஒரு கிரவுண்டில் வீடு வைத்திருந்தார். அவர் மரணத்துக்கு பின் அந்த வீட்டை அண்ணன்- தம்பியான நாங்கள் இருவரும் பிரித்து கொண்டோம். இப்போது வீடு எங்கள் இருவர் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டில் நான் மட்டும் குடியிருக்கிறேன். எனது அண்ணன் இன்னொரு இடத்தில் உள்ளார். 

    இந்த வீடு பழசாகி விட்டதால், இதனை இடித்து விட்டு புதிதாக இங்கு வீடு கட்டி கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால் எனது அண்ணன் தற்போது வீடு கட்டி கொள்ள போவதில்லை. 40 X 60  உள்ள இந்த இடத்தை வீட்டுடன் சேர்த்து நாங்கள் பிரித்து கொள்ள முடியுமா? 

    பதில்:  

    உங்கள் தந்தை இறந்த பின் அவரது உயில்படி, வீடு அவரது வாரிசுகளுக்கு வந்துள்ளது. அதை நீங்கள் ஏற்கனவே உங்கள் இருவர் பெயருக்கும் மாற்றி கொண்டு விட்டீர்கள். இப்போது அதே சொத்தை சரி பாதியாக பிரித்து கொள்ள நினைக்கிறீர்கள். 

    இப்படி பிரிக்கும் போது ஒரு பக்கம் வீட்டின் கட்டிடம் அதிகமாகவும், இன்னொரு பக்கம் காலி இடம் அதிகமாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதில் அண்ணன் -தம்பிக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றால் நீங்கள் நிலத்துடன் இருக்கும் ஒரு கிரவுண்ட் வீட்டை அப்படியே இரு பாதியாக பிரித்து கொள்ளலாம். உங்கள் இருவருக்கும் இடையே ஒரு அக்ரிமென்ட் போல் போட்டு அதில் அனைத்து தகவல்களும் சொல்லி இருவர் பெயரிலும் தனித்தனியே பிரித்து எழுதி கொள்ளவும்.

    இதனை பிறகு ரிஜிஸ்டரும் செய்து விட்டால் இடம் இருவருக்கும் தனித்தனியே கிடைத்து விடும். 

    மேலும் சந்தேகம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை அணுகவும் 

     

    Share
  • தொல்லைகாட்சி – வாகைசூடவா-செல்லமேசெல்லம்

    மோகன் குமார்

    தொல்லைகாட்சி – வாகைசூடவா-செல்லமேசெல்லம்

    டிவி யில் பார்த்த படம் – வாகை சூடவா

    வாகை சூடவா – சன் டிவியில் மறுபடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை மிக வியந்த விஷயம் ஹீரோயின் நடிப்பு தான் ! தமிழில் இனியாவுக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. என்ன ஒரு எக்ஸ்பிரஷன். உடல் மொழி..மிக அட்டகாசமான நடிப்பு.

     இயக்குனர் சற்குணம் மனதை தைக்கும் விதத்தில் படத்தை எடுத்திருந்தார். எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்த இவர் குடும்பத்துடன் பார்க்க கூடிய தரமான படங்களை மட்டுமே வழங்கி வருவது மிக மகிழ்ச்சி தருகிறது.

     

    வெறுப்பேற்றும் விளம்பரம்

    கோல்ட்வின்னருக்கு ஒரு மொக்கை விளம்பரம் வருகிறது. பார்த்தாலே பற்றி கொண்டு வருகிறது. ரம்யா என்று ஓர் தொகுப்பாளினி இருக்கிறாரே அவர் ” இந்த தீபாவளி….” என்று சொல்லி விட்டு வேகமாய் எதோ பிதற்றுகிறார். பின் இது தான் சொன்னேன் என்று ஒரு விளக்கம் வேறு. கொடுமையான விளம்பரத்துக்கு போட்டி வைத்தால் இந்த விளம்பரம் டப் பைட் கொடுக்கும் . மாத்தி யோசிங்க சாரே !

    சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ்

    சென்ற சூப்பர் சிங்கர் சீசன் முடிந்ததும் சிவ கார்த்திகேயன் அடித்த கூத்துகளும், அவரின் புலோப்பர்ஸ்சும் தனியாக ஓரிரு நாள் போட்டார்கள். பலரும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாக அது இருந்தது. பின் யூ டியூபிலும் ஆயிரகணக்கானோர் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் இப்போது முடிந்த சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ் இந்த வாரம் போட்டார்கள். மரண மொக்கை ! அஞ்சு நிமிஷம் கூட பார்க்க முடியாமல் சானல் மாற்றி விட்டோம். சிவ கார்த்திகேயன் சினிமாவுக்கு போனது தமிழ் காம்பியரிங் உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்லணும் !

     

    மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம்

     

    தினம் ஏன் தாமதமாய் வருகிறாய் என ஆசிரியர் கேட்டதால் அவரை பின்னாலிருந்து கத்தியால் பதிமூன்று வயது மாணவன் குத்திய சம்பவம் இந்த வாரம் நடந்தது. இது பற்றி அந்த ஏரியாவின் கல்வி அதிகாரி பேசியதை நியூஸ்களில் காட்டினார்கள்

     

    ” சின்ன கத்தி தான் அது. ஒண்ணும் பிரச்சனை இல்லை. லேசா தான் குத்தினான். பெருசா பாதிப்பில்லை. ஆசிரியரை ஆஸ்பத்திரியில் சேத்துருக்கோம். அவரு நார்மலா நல்லாருக்கார். பையனை போலீசில் வச்சு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். எல்லாம் கண்ட்ரோல்லே இருக்கு. எல்லாத்தையும் சரி பாத்துட்டோம் . ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை”

     

    வரிக்கு வரி ப்ராப்ளம் இல்லை; சரி பண்ணியாச்சு; கண்ட்ரோலில் இருக்கு என அவர் பேசியது, சீரியஸ் விஷயத்தை காமெடி ஆக்கிடுச்சு. எல்லாம் சொன்ன அவர், ” என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிடாதீங்க” என்ற கவுண்டர் டயலாக் மட்டும் சொல்லவே இல்லை 🙂

     

    பிளாஷ்பேக் : செல்லமே செல்லம்

     

    முன்பு டிவிக்களில் வந்து பலரும் ரசித்த சில நிகழ்சிகளை இந்த வரிசையில் பார்ப்போம்.

     

    ஜெயா டிவியில் உமா பத்மநாபன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி செல்லமே செல்லம். அம்மா மற்றும் குழந்தை பங்கு பெரும் இதில் குழந்தைக்கு என்ன வித உணவு பிடிக்கும், அவன் பெஸ்ட் நண்பன் யார் போன்ற எளிதான கேள்விகள் தான் கேட்பார்கள். அதற்கு குழந்தையும் அம்மாவும் பெரும்பாலும் மாற்றி தான் பதில் சொல்வார்கள். பார்க்க காமெடியாய் இருக்கும். சின்ன சின்ன குழந்தைகளை பார்க்கும் ஆவலிலேயே விடாமல் பார்ப்போம். துவக்கத்தில் வரும் “செல்லமே செல்லம்” என்கிற பாட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நினைவில் இருக்கு ! இது போன்ற குழந்தைகள் நிகழ்ச்சி இப்போது ஏதும் வருதா என தெரிய வில்லை.

     

    ரசித்த முகநூல் செய்தி

     

    ஓராண்டு ஆட்சியில் நூறாண்டு சாதனை புரிந்த அம்மாவின் ஜெயா டிவியில் “நீங்களும் செல்லலாம் தெருக்கோடி” என்ற விளம்பரம் அடிக்கடி வருகிறது !

     

     படத்துக்கு நன்றி

    vaagai-sooda-vaa-wallpaper-05.jpg

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (18)

    மோகன் குமார்

    கேள்வி: விஸ்வேஷ்  , ராமாபுரம் 

    நாங்கள் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒரு பில்டரிடம் புக் செய்தோம். அப்போது அட்வான்ஸ் பணம் தருமாறும் அரசுடைமை ஆன வங்கி மூலம் லோன் பெறலாம் என்றும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் முதல் அட்வான்ஸ் பணமும் பின் அடுத்தடுத்து அட்வான்ஸ் தொகையும் கொடுத்து வந்தோம்.

    இப்போது குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பிளான் அப்ரூவல் இல்லை என்றும், அதனால் அரசுடைமை ஆன வங்கிகள் லோன் தராது, தனியார் வங்கியில் லோன் பெற்று தருகிறேன் என்கிறார். எங்களுக்கு பிளான் அப்ரூவல் இல்லாமல் அந்த வீட்டை வாங்க விருப்பமில்லை. நாங்கள் இதுவரை பத்து லட்சத்துக்கும் மேல் பணம் தந்து விட்டோம். அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது? 

    பதில்:  

    வீடு புக் செய்யும் போது பிளான் அப்ரூவல் பற்றி என்ன கூறினார்? அப்போது பிளான் அப்ரூவல் உள்ள கட்டிடம் என்று எழுத்தில் தந்துள்ளாரா?  

    பிளான் அப்ரூவல் ஆகாத வீட்டை உங்களுக்கு விற்க முயல்வதும், அந்த தகவலை உங்களிடம் முதலில் மறைத்தும் அவரது தவறு தான்.  பிளான் அப்ரூவல் இல்லாத வீட்டை வாங்க  விருப்பம் இல்லை என்றும், நீங்கள் கட்டிய பணத்தை உடன் வட்டியுடன் திருப்ப தருமாறும் அவருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்புங்கள். 

    அவர் அதன் பின் உங்கள் பணத்தை தராவிடில் நீங்கள் கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நீங்கள் போட்ட அக்ரீமென்ட் செல்லாது என்றும், தவறான தகவல்கள் தந்து உங்களுக்கு இந்த வீட்டை விற்றுள்ளார் என்றும் நிரூபிக்க வேண்டியிருக்கும். 

    உடனடியாக நீங்கள் இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் உங்களுக்கு நம்பிக்கையான வழக்கறிஞரை அணுகவும்.

    Share
  • தொல்லை காட்சி – விஜய் டிவி யும் புது படங்களும்

     

     

    விஜய் டிவி யும் புது படங்களும் 

     

    ஒரு புது படம் டிவி யில் போட்டால் எவ்வளவு நாள் கழித்து மறுபடி அதே படத்தை போடலாம்? ஆறு மாசம்? ஒரு மாசம்? ஒரு வாரம்? போட்ட மறு நாளே போடுறாங்க சார் விஜய் டிவி யில் ! மெரீனா படம் இந்த ஆயுத பூஜை அன்று போட்டனர். மறுபடி அடுத்த நாளே வேறு புரோகிராம் இல்லாமல் மீண்டும் மெரினாவை ஓட விட்டார்கள் ! அம்மா – ஐயா இருவர் சார்பின்றி இருக்கு என விஜய் டிவி பக்கம் ஒதுங்கினால் அங்கும் இப்படி ஒரு கொடுமை நடக்குது !!

     

    இதே விஜய் டிவியில் போட்ட இன்னொரு புது படம்: தோனி ! இதுக்கு என் பெண்ணோட கமன்ட்: விஜய தசமி அன்னிக்கு படிக்கணும்ன்னு சொல்லுவாங்க. இவங்க என்னா படிக்க  வேண்டாம்னு மெசேஜ் சொல்ற படத்தை  இன்னிக்கு போடுறாங்க !” 

     

    “வா பெண்ணே வா.. வருங்கால ப்ளாகர் ஆகி சமூக பங்காற்று ! அந்த கெப்பாசிட்டி உன்கிட்டே இருக்கு” என்று சொல்லி, வாங்கி கட்டி கொண்டேன் !

     

    ஜெயா டிவியில் மின் பற்றாக்குறை

     

    முதல்வர் அம்மா ஜெயா டிவியில் வந்து “மின் பற்றாக்குறை” (மின்வெட்டு இல்லிங்களாம்;மின் பற்றாக்குறையாம் ) பற்றி நிறைய பேசினார். இதற்கு முந்தைய தி.மு.க மற்றும் இப்போதைய மத்திய அரசு தான் காரணம். மேலும் தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் பலிக்காமல் போக என்னென்ன காரணம், etc, etc

     

    சென்னை தாண்டி மற்ற ஊர்களில் இதை பார்த்திருப்பார்களா என்றே தெரியலை (கரண்ட் இருந்தால் தானே பார்க்க? இருக்கும் நேரம் மற்ற உருப்படியான வேலை பார்ப்பார்களா? ஜெயா டிவி போடுவார்களா)

     

    நிற்க அம்மா பேசிய விஷயத்துக்கு வருவோம்

     

    ” பிரசவ வலி எவ்ளோ கஷ்டம் என்பதை கேட்க யாரும் தயாராய் இல்லை. குழந்தை எப்படி இருக்கு; அதை சொல்லுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.

     

    மக்களுக்கு தேவை மின்சாரம். விளக்கங்கள் கேட்க, நம்ப யாரும் தயாராய் இல்லை.

     

    சீரியல் பக்கம் – ஜான்சி ராணி 

     

    ஜீ (Zee )  டிவி மிக பாப்புலர் ஆகா விட்டால் கூட, அதில் வந்த நல்லதொரு சீரியல் ஜான்சி ராணி. 

    ஜான்சி என்கிற ஊருக்கு ராணியாக இருந்த ஜான்சி ராணி கதையை சற்று மசாலா தூவி எடுத்துள்ளனர். ஹிந்தி டப்பிங் சீரியலான இது முன்பு தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. அதன் பெரும் வெற்றியை அடுத்து மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எத்தனை கஷ்டங்களை தாண்டி எடுத்த குறிக்கோளில் உறுதியாய் நிற்கும் இந்த நிஜ கதை நிச்சயம் inspitrational story  !

     

    மனதோடு மனோ 

     

    ஜெயா டிவியில் ” மனதோடு மனோ ” நிகழ்ச்சி பாடகர் அல்லது இசை அமைப்பாளர் ஒருவரின் திரை உலக அனுபவங்கள் பற்றி ஜாலியாய் பேசுகிறது. 

     

    இதில் சமீபத்தில் LR ஈஸ்வரி  வந்து பேசினார்/ பாடினார். “மாலை நேரத்து மயக்கம் “,  ” பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” போன்ற சில மறக்க முடியாத பாடல்கள் பாடினாலும் ஆடி மாதம் ஸ்பீக்கரில் இவர் பாட்டுகளை கேட்டு கேட்டே மிரண்டு போன தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். என் நண்பன் வழக்கறிஞர் பாலா இவர் பாட்டு கேட்டாலே டென்ஷன் ஆகிடுவான். இப்படி இவரை முழுசாய் வெறுப்போரும் உண்டு. 

     

    குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தெரிய வந்த ஆச்சரிய விஷயம்: பல மகமாயி பாட்டுகள் பாடி பெரும் புகழடைந்த, எப்போதும் பெரிய அளவு குங்குமம் வைக்கும் ஈஸ்வரி நிஜத்தில் ஒரு கிருத்துவர் ! ஈஸ்வரி என்பதே சினிமாவிற்கு மட்டும் தான் போலும் !  

     

     

     

    மாற்றான் பற்றி  KV ஆனந்தும் சூர்யாவும் 

     

    KV ஆனந்தும் சூர்யாவும் வெவ்வேறு சானல்களில் மாற்றான் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். (நம்ம பதிவர்கள் பார்த்தா போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என கமன்ட் அடித்திருப்பர்; பின்னே அனைவரும் இணையத்தில் துவைத்து காய போட்ட படம் ஆயிற்றே ) 

     

    படம் பார்த்து விட்டாலும், மிக சுமார் என்றாலும், அதனை எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளனர் என்று பார்க்க பாவமாய் தான் உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை (வெவ்வேறு தினங்களில்) நடிக்கும் சூர்யா, லொகேஷன் சிரமங்கள், சண்டையில் உள்ள பிரச்சனை என ரொம்ப உருக்கமாய் பேசினார்கள். திரைக்கதையிலும் அதே மாதிரி மெனக்கேட்டிருக்கலாமே  சார் !

     படங்களுக்கு நன்றி :

    http://www.in.com/l-r-eswari/profile-167679.html

    http://tamil.oneindia.in/movies/review/2012/10/maatran-movie-review-163139.html

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (17)

    மோகன் குமார்

    கேள்வி : சுதாகர் சென்னை 

    வணக்கம். என் பெயர் சுதாகர். என் மாமனார் பெயரில் அவருடைய அப்பா எழுதி வைத்த வீடு உள்ளது. தற்போது அவருடைய தம்பி அந்த வீட்டில் குடி இருந்து கொண்டு வீடு எனக்கு வேண்டும் என்று சண்டைஇடுகிறான். அதனால் அந்த சொத்தை என் அப்பா பெயரில் எழுதி வைத்து விற்று கொடுக்கும் படி கூறினார். தற்போது எல்லா ஆவணங்களும் என் அப்பா பெயரில் உள்ளது. இருப்பினும் என் மாமனாரின் தம்பி அந்த வீட்டை விட்டு போக மறுக்கிறான். தயவு செய்து உரிய ஆலோசனை கூறவும்.

    பதில் : 

    ஒரு தந்தை சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார். இன்னொரு மகன் அங்கு இருந்து கொண்டு காலி செய்ய மாட்டேன் என்று சொத்தில் உரிமை கோருகிறார். 

    தற்போது சொத்து உங்கள் தந்தை பெயரில் உள்ளது என்கிறீர்கள். உங்கள் தந்தை குறிப்பிட்ட நபரை காலி செய்ய சொல்லி நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அவர் ஒரு Permissive occupier தான். அவரை தற்காலிகமாக தான் அங்கு தங்க அனுமதி தரப்பட்டது என்றும், உடனடியே தங்கள் உபயோகத்துக்கு தேவை என்பதால் காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டிஸ் அனுப்புதல் நலம்.  

    அவர் காலி செய்யாத பட்சத்தில்  Ejection -க்கு   வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும். முதலில் செய்ய வேண்டியது அவருக்கு நோட்டிஸ் அனுப்பவது தான். 

    நீங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகி இது சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கவும். 

    **********

    Share
  • தொல்லை காட்சி பெட்டி

    மோகன் குமார்

    தொல்லை காட்சி : 7 C –யும்ஹவுஸ்புல்லும் 

    ஜெயா தொலை காட்சியில் புதிய நிகழ்ச்சி ஹவுஸ்புல்   

    ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிப்புடன் பரபரப்பாய் வருகிறது ஜெயா டிவியில் ஹவுஸ்புல் என்கிற புது நிகழ்ச்சி. அலுவலகம் மற்றும் கல்லூரியில் ” தம்போலா ” என்கிற பெயரில் விளையாடுவோமே அதே விளையாட்டு தான் இது ! தம்போலா ஒரே அறையில் அமர்ந்து ஆடுவோம். இங்கு நடத்துவோர் டிவியிலும், கலந்து கொள்வோர் வீட்டிலும் இருக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் !

    அவர்கள் சொல்கிற தொலைபேசி எண்ணுக்கு நாம் போன் செய்ய வேண்டும். அவர்கள் ” விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டில் புகழ் பெற்றவர் ” போன்ற மிக கடின கேள்விகள் கேட்கிறார்கள். போன் செய்யும் அனைவருமே அவர்கள்  கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பரிசு தருகிறார்கள். 

    பார்க்கிற என் பெண்ணே “என்னப்பா இது கால் பண்ற எல்லாருக்கும், ஒவ்வொரு நிமிஷத்துக்கும் பல ஆயிரம் ரூபாய் தர்றாங்க. இது டூப்பு” என்கிறாள். பார்க்கலாம் நிகழ்ச்சி மக்களிடம் எடுபடுகிறதா என !

    டிவியில் பார்த்த படம் – சேது 

    கே டிவியில் சேது படம் பார்த்தோம். பொதுவாய் கே டிவி பக்கம் போவதே இல்லை. ஒரு படம் பார்க்க ஆரம்பித்தால் விளம்பரத்துடன் சேர்த்து மூன்று மணி நேரம் வீணாகி விடும் என்பதால். அதுவும் பெரும்பாலும் பார்த்த படங்களாக வேறு இருக்கும் ! வார இறுதியில் வேறு நல்ல படம் இல்லாததால் கே டிவி பக்கம் செல்ல வேண்டியதாயிற்று. 

    சேது – இரண்டாம் பகுதி -ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் மனதை பிசைந்து விடும். விக்ரமுக்கு இந்த படத்துக்கு சிறந்த நடிகர் விருது மத்திய அரசு எப்படி தராமல் போனது என்று புரிய வில்லை !

    பி. ஆர். பந்துலு குறித்த நிகழ்ச்சி

    பி. ஆர். பந்துலு ! மாபெரும் இயக்குனர். சிவாஜி மற்றும் எம். ஜி . ஆரை வைத்து பல ஹிட் படங்கள் தந்தவர். இவரைப்பற்றி இவரது மகள் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி மற்றும் மகன் ஜெயா டிவியின் “திரும்பி பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் பேசினர்.

    சுதந்திர போராட்டம் குறித்த நல்ல படங்கள் என இந்தியாவில் பத்து படங்கள் தான் உண்டு என்றும் அதில் மூன்றை இயக்கியவர் தங்கள் தந்தை என்றும் கூறியவர்கள், கப்பலோட்டிய தமிழன் பெரும் தோல்வி என்றும் அதில் தங்கள் தந்தைக்கு பெரும் நஷ்டம் என்றும் கூறினர். மேலும் இன்று 125 நாளுக்கு மேல் ஓடும் கர்ணன் படம் வெளிவந்த காலத்தில் பெரும் தோல்வி படமாய் இருந்ததை சற்று வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டனர்.

    ஆரம்பத்தில் சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றிய பந்துலு ஏனோ தனது கடைசி பத்து வருடங்களில் எந்த சிவாஜி படமும் இயக்க வில்லை. 1964 – ல் பந்துலு -சிவாஜி காம்பினேஷனில் வெளியான கர்ணன் மற்றும் முரடன் முத்து தான் இந்த ஹிட் காம்பினேஷன் இணைந்து பணியாற்றிய கடைசி படங்கள் !

    சீரியல் பக்கம்:  7 C

    சமீபத்தில் வந்த சாட்டை படத்தின் கதையும் இந்த தொடரின் அவுட்லைனும் ஏறக்குறைய ஒன்று தான் என நினைக்கிறேன். அவ்வப்போது விஜய் டிவி யில் காட்டும் டிரைலரிலேயே இந்த சீரியலின் கதை மற்றும் போக்கை  ஊகிக்க முடிகிறது. வழக்கமாய் சீரியல் பார்க்கும் குடும்ப தலைவிகள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து விட்டு பள்ளி செல்லும் சிறு வயது மக்கள் பார்த்தால் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியல் பற்றி விரிவாக நண்பர் முரளிதரன் எழுதிய பதிவை இங்கு வாசியுங்கள் !

    ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்

    பல டிவிக்களும்  ஆயுத பூஜைக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் காத்திருக்கின்றன. சண் டிவியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதால் கலைஞர் டிவியில் தானே வரும்? எப்படி சண் டிவி போனது என தெரியவில்லை. மற்றபடி ஏற்கனவே போட்ட பல படங்கள் தான் போடுகிறார்கள். விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள் நடித்த வெடி படம் போடும்போது அந்த படம் போடும் சானல் பக்கமே போகாமல் இருக்கவும் என எச்சரிக்கை தருகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் !

    சூப்பர் சிங்கர் அப்டேட் 

    அதென்னவோ தெரியலை .. ஜுனியரோ , சீனியரோ எந்த சீசன் நடந்தாலும் சூப்பர் சிங்கரில் இறுதி போட்டிக்கு முன் சென்னை சிட்டி செண்டர் சென்று மாடியில் நின்று கொண்டு பாடி தீத்துடுவாங்க. இம்முறையும் அதும் தொடர்ந்தது. 

    இறுதி போட்டியில் பிரகதி அல்லது சுகன்யா வெல்ல வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தோன்றுகிறது. பார்க்கலாம் .. என்ன நடக்கிறது என !

    Share
  • தொல்லை காட்சி பெட்டி

    மோகன் குமார்

     

    ஜெயா டிவியில் ஆட்டோகிராப்

    ஜெயா டிவி நிகழ்ச்சியின் ஆட்டோகிராபில் மிக பெரும் வெற்றி இயக்குனரான எஸ். பி.முத்துராமன் வந்து பேசினார். ரஜினி, கமலின் பல ஹிட் படங்களின் இயக்குனர். ஏ. வி. எம் முக்கு ஆஸ்தான இயக்குனர். இவரை பல வருடம் முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்து பேசினோம். மிக எளிமையானவர். நாங்கள் கேட்டே கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் தந்தார். 

    இந்த நிகழ்ச்சியில் சில படங்களை அவர் ஒரு மாசத்தில் எடுத்து முடித்ததும், மனைவி இறந்த செய்தி வந்த பின் கூட ஷூட்டிங் முடித்து விட்டே வீட்டுக்கு சென்றார் போன்ற தகவல்களும் தெரிய வந்தன. 

    ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு 

    தினமும் காலையில் விஜய் டிவியிலும் அப்புறம் ராஜ் உள்ளிட்ட பிற டிவிக்களிலும் ரியல் எஸ்டேட் காரர்கள் நிலத்தை விற்க விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் போடுறாங்க. பாத்துருக்கீங்களா? ஊரில உள்ள பல சின்னத்திரை நட்சத்திரங்களையும் கூட்டி வந்து ” இதை விட சிறந்த இடம்; சீப்பான இடம் உலகிலேயே இல்லை” என பேச வைப்பாங்க. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பார்த்தா அடுத்து இன்னொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதிலும் அதே ஆட்கள் வந்து ” இது தான் சிறந்த இடம்; மறக்காம வாங்குங்க” அப்படின்னு சொல்லுவாங்க ! 

    ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு என சொன்னாலும் அவையெல்லாம் ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டிங் என்பது நன்கு தெரிகிறது. இது தெரியாமல் எத்தனை பேர் நம்பி வாங்கி ஏமாறுகிறார்களோ !! 

    சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை

    ராஜ் டிஜிடல் பிளஸ் மற்றும் வின் டிவி உள்ளிட்ட பல சானல்களில் “சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை ” என்று சொல்லி ஒருவர் வந்து பேசோ பேசுன்னு பேசிக்கிட்டிருப்பார். ஒரு முறை என்ன தான் அப்படி சொல்றார்னு பார்த்தேன். 

    “இளைஞர்களுக்கு கெட்ட பழக்கம் சொல்லி தருவதே நண்பர்கள் தான். அதனால் நண்பர்களே வச்சிக்காதீங்க (!!!??). உங்களுக்கு ‘முடியாம போகும்போது’ நண்பர்கள் வந்து உதவி செய்ய போவதில்லை” என்றார் ! மேலும் ஆண்மை குறைவுக்கு ஒரே தீர்வு இந்தியாவிலேயே தங்கள் நிறுவனத்தில் தான் கிடைப்பதாகவும், இளைஞர்கள் நண்பர்களிடம் இது பற்றி பேசாமல் தங்களை வந்து நாடுங்கள் என்றும் சொல்லி கொண்டிருந்தார். 

    இளைஞர்கள் மனதில் பயத்தை விதைத்து, அதை வைத்து வியாபாரம் செய்றாங்க ! ஹும் :(( 

    புது நிகழ்ச்சி : ராஜ் டிவியில் கோல்ட் கேசினோ

    சுகாசினி நடத்தும் புது நிகழ்ச்சி இது. கவுன் பனேகா க்ரோர்பதி ஸ்டைல் தான். வேறொண்ணும் இல்லை ! பத்து கேள்விகள்.. ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆப்ஷன்ஸ் தந்து, சரியான விடை தேர்ந்தெடுக்கணும். என்ன ஒன்று தப்பாய் சொன்னாலும் தொடர்ந்து ஆட விடுகிறார்கள். தருமி சொல்ற மாதிரி ” எவ்வளவு பிழை இருக்கோ அதற்கு தகுந்த மாதிரி பரிசில் குறைத்து கொள்ளுங்களேன்” தான் ! 

    ஆனால் அதிகப்படியான ரூல்ஸ் சொல்லி குழப்பி தள்றாங்க. முதல்லே தங்க காயின் தருகிறார்கள். கடைசியில் ஜெயித்த பின் கடனை திருப்பி தாங்க என்கிறார்கள். ஒரே குஷ்டமப்பா சே கஷ்டமப்பா ! 

    முரசு, சன் லைப் டிவிக்கள்

    சன் மியூசிக் வகை சானல்கள் அநேகமாய் புது பாடல்களையே ஒளிபரப்பும் நிலையில் பழைய பாடல்களுக்கென்றே ” முரசு” என ஒரு சானலை துவக்கியது கலைஞர் டிவி குழுமம். பழைய பாடல் விரும்பிகள் அதனை இரு கரம் நீட்டி வரவேற்க, இப்போது சன் டிவியும் சன் லைப் என ஒரு சானலை துவக்கி விட்டது. பழைய பாடல் விரும்பிகளுக்கு இப்போதெல்லாம் கொண்டாட்டம் தான் ! 

     

    சூப்பர் சிங்கர் இறுதி போட்டி 

    ஒய்ல்ட் கார்ட் சென்று சொல்லியே இரண்டு வாரம் இழு இழு என இழுத்து ஆஜித் மற்றும் யாழினி இருவரும் பைனல் செல்வதாக அறிவித்தனர். 

    இந்த வாரத்தின் ஹை லைட் அனு என்கிற சிறுமி மற்றும் அவள் தாயுடன் அவர்கள் பாட்டி போனில் பேசியது தான். அனு தாய் காதல் திருமணம் செய்ததால் 19 வருடமாய் பேசாமல் இருந்தவர், விஜய் டிவி முயற்சியால் பேசினார். அப்புறமென்ன ஒரே அழுகை மயம் தான் !

    ரக்ஷிதா பைனல் செல்லாததில் சிறு வருத்தமே. இருப்பினும் எப்படியும் அவள் ஒரு நல்ல பாடகியாக நிச்சயம் வருவாள் என நினைக்கிறேன். 

     

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (16)

    மோகன்குமார்
     
    கேள்வி: ரவிச்சந்திரன் சென்னை
     

    வணக்கம்.  எனது தந்தையின் தந்தை (தாத்தா)வின் பெயரில் ஒரு வீடு உள்ளது.  அதில் எனது அண்ணன் தற்காலிகமாக குடிஇருந்தார். அப்போது அவர் வீட்டு வரி கட்டினார். அதில் வரி கட்டியவர் என அவர் பெயர் போட்டு, பின்பு அவர் பெயர் மட்டும் வருவது போல் செய்து இருக்கிறார். தற்போது அந்த வீட்டை தனக்கே உரிமை என்றும் அவருக்கே தர வேண்டும் அனைவரையும் கட்டாயப்படுத்துகிறார்.  

    நாங்கள் நான்கு  சகோதரர்கள். என்ன செய்வது? 

    பதில்: 

    உங்கள் தாத்தா சொத்தில் உங்கள் அண்ணன் இருந்து கொண்டு அவர் பெயரில் வரி கட்டுவதாக கூறி உள்ளீர்கள். உங்கள் தந்தை பற்றி ஏதும் சொல்லவில்லை. உங்கள் தாத்தா உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை என கருதுகிறேன். 

    மற்ற சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து சொத்தை பாகப்பிரிவினை செய்து தரச் சொல்லி அவர் மேல் வழக்கு தொடர்வது தான் இதற்கு சிறந்த வழி. இப்படி வழக்கு தொடர்ந்தாலே அவர் இறங்கி வர வாய்ப்புண்டு. 

    வழக்கு நடக்கும் போது அவர், தான் தான் வரி கட்டுவதாகக் கூறினால். அவர் தான் மூத்த  மகன் எனில் வரி அவர் பெயரில் கட்ட நீங்கள் தற்காலிக அனுமதி தந்ததாகக்  கூறலாம். 

    நீங்கள் அவசியம் உங்களுக்கு தெரிந்த நல்ல வழக்கறிஞரை நாடி உடனே வழக்கு தொடர ஏற்பாடு செய்யுங்கள்.

    Share
  • தொல்லை காட்சி பெட்டி – அது இது எது- சச்சின் பற்றி கங்குலி

     மோகன் குமார்

    அது இது எது சொதப்பல்

    ஒரு நிகழ்ச்சியின் வெற்றி எதை பொறுத்து இருக்கும்? அநேகமாய் அந்த நிகழ்ச்சியின் பார்மட் /  Content இவற்றை பொறுத்து தானே இருக்கும் ! 

    ஆனால்  அது இது எது நிகழ்ச்சி என விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி முன்பு சிவகார்த்திகேயன் compere செய்தார். செம நக்கல், வந்திருப்போரை இவர் அடிக்கும் கிண்டலே நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்க வைக்கும். நான் மட்டுமல்ல பலரும் விரும்பி பார்த்த நிகழ்ச்சி அது.

    சிவகார்த்திகேயன் சினிமாவில் பிசி ஆகி விட, ………. இதனை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அவ்வளவு தான் ! நிகழ்ச்சி சுத்தமாக படுத்து விட்டது. ஓரிரு முறை பார்த்ததிலேயே வெறுத்து விட்டது ! TRP மிக இறங்கி, விஜய் டிவி இதனை அடியோடு தூக்கினாலும் ஆச்சரியப்பட வேண்டாம் !

     

    டிவியில் பார்த்த படம் : காந்தி 

    கலைஞர் டிவியில்   காந்தி ஜெயந்தி அன்று காந்தி தமிழ்ப் படம் ஒளிபரப்பினர். என்ன தான் ஆங்கிலப் படம் பார்த்தாலும் தமிழில் பார்க்கையில் முழுதாய் புரிந்து ரசிக்க முடிந்தது. பள்ளியில் படிக்கும் என் பெண் மிக ஆர்வமாய் படம் பார்த்தாள். அது தான் நிஜ மகிழ்ச்சி ! காந்தி படத்தை இம்முறை பார்த்த போது அதன் பல காட்சிகள் டில்லியில் உள்ள நேரு இல்லத்தில் படம் பிடித்திருப்பது தெரிந்தது. சிறைச் சாலை என காட்டப்படுவதும் சரி, ஆங்கிலேயர்கள் அலுவலகமானாலும் சரி நேரு இல்லத்தையே வெவ்வேறு ஆங்கிளில் காண்பித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நெகிழ வைக்கும் படம் – காந்தி  

     

    விஜய் டிவியில் அனுஷ்கா

    தாண்டவம் பற்றி பேச விக்ரமுடம் விஜய் டிவி வந்திருந்தார் அனுஷ்கா. திவ்ய தர்ஷினி அவரிடம் சில கேள்விகள் கேட்க அவர் பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் அவருக்கு பதில் விக்ரம் பதில் சொல்ல, அதையே கிளி பிள்ளை போல ஒப்பித்தார் அனுஷ்கா. தனக்கென்று சுய புத்தியே இருக்காதா? என்ன தான் தலைவி என்றாலும் ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது ! ஜெயா, சன் என எல்லா பக்கமும் இவர்கள் வந்து ” தாண்டவம் வெற்றி விழாவை” கொண்டாடி மகிழ்ந்தனர்.

     

    காந்தி பிறந்த நாள் சிறப்பு நிகழ்சிகள்

    லாரன்சின் காஞ்சனா, சிம்பு நடித்த ஒஸ்தி, பாலாவின் அவன்- இவன் இவையெல்லாம் காந்தி கொள்கைகளை  விளக்க  பல்வேறு டிவிக்கள் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் ! ஹே ராம் மட்டுமே ஓரளவு இந்த நாளுக்கான சரியான படமாய் இருந்தது. 

    மெகா டிவியில் அரை மணி நிகழ்வாக காந்தி வாழ்க்கையை அழகாக காட்டினர். அவர் வாழ்விலிருந்து எடுத்த படங்கள், வீடியோவுடன் கூடிய இந்த நிகழ்ச்சி காந்தி பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லி மிக நிறைவாய் இருந்தது. 

    மற்றபடி வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் அன்று பார்க்கலை ( காந்தி படம்- கிரிக்கெட் மாட்ச்கள் இவை தான் இன்று ஆக்ரமித்தன)

    சீரியல் பக்கம் – மண்வாசனை 

    ராஜ் டிவியில் வெளிவரும் டப் ஆன  சீரியல் ! பத்து வயசுக்குள்ளயே கல்யாணம் ஆன ஒரு சிறுமியின் கதை. பெயர் தான் ஆனந்தி. ஆனால் அவள் காண்பதோ அனைத்தும் கஷ்டங்களே ! எல்லாருக்கும் மாமியார் கொடுமை என்றால் இவருக்கு கணவரின் பாட்டி கொடுமை ! 

    நம் வீட்டில் இதை பார்க்கிறாங்க. வீட்டுக்கு வரும்போது இந்த சீரியல் நடந்துகிட்டு இருக்கும். ஒரே அழுகை சத்தமா இருக்கும் ! நான் அங்கிருந்து ஓடிடுவேன் 🙂

    சச்சின் பற்றி கங்குலி 

    இரண்டாம் செமி பைனல் முடிந்ததும் ஸ்டூடியோவில் கங்குலி, பீட்டர்சன், அக்ரம் ஆகியோர் பேசும் போது கங்குலி ஒரு விஷயம் சொன்னார். ” நான் ஒரு வீரருடன் இருநூறு மேட்சுக்கு மேல் துவக்க ஆட்ட காரரா இறங்கியிருக்கேன். எப்பவும் என்னை தான் முதல் பந்து எதிர்கொள்ள சொல்வார். எனது ஆட்டம் சரியாக இல்லாத சில நேரம் “முதல் பந்தை நீங்கள் விளையாடுங்கள்” என்றாலும் அவர் நோ என்றே சொல்லுவார். கேப்டனாக இருந்த போதும் சில முறை கேட்டுள்ளேன் ( என்னது ? கேப்டன் சொன்னதையும் அவர் கேட்கலியா?-அதிர்ச்சியுடன் அக்ரம் கேள்வி)”

    “சில தடவை நான் கேட்டு பார்த்துட்டு கிரீஸ் அருகே போயிட்டு யார் முதலில் ஆடுறதுன்னு பார்த்துக்கலாம்” என சொல்லிடுவேன் அப்புறம் கிரீஸ் அருகே சென்றதும், நான் போய் நான் ஸ்ட்ரைக்கர்  இடத்தில நின்று கொள்வேன்; அங்கு வந்து அவர் ஆர்கியூ செய்ய மாட்டார்.  பேசாமல் முதல் பந்தை எதிர்கொள்ள போயிடுவார். அந்த நேரம் நான் ஸ்ட்ரைக்கர் ஆக நிற்கும் நான் அவரை பார்க்கவே மாட்டேன். வேறு எங்கோ பார்த்து கொண்டு நிற்பேன்; இப்படி ஓரிரு முறை அவர் முதல் பந்தை எதிர் கொண்டார்”

    இப்படி சச்சின் பேரை சொல்லாமலே சச்சின் பற்றி அவர் பேசியது செம காமெடியா இருந்தது. அதுவும் சின்ன குழந்தை மாதிரி கிரீஸ் அருகே வந்த பின் சச்சினை ஏமாற்றியது பற்றி அவர் சொன்னது செம !

    Share
  • ஆதாமிண்டேமகன்அபு – மலையாளபடவிமர்சனம்

    மோகன் குமார்

    இயல்பான கதையும், இயற்கையான நடிப்பும்  சேர்ந்த படங்கள் மொழியையும் தாண்டி நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அத்தகைய ஒரு படம் தான் மலையாளத்தில் வெளியான -ஆதாமிண்டே மகன் அபு. 

    இரண்டு கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 2010-ல் வெளியாகி விமர்சகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

    கதை என்னவென்று பார்ப்போமா?

    அபு – ஐஷு என்கிற வயதான  தம்பதி  – கேரள கிராமத்தில் தனியே வசிக்கின்றனர். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்களின் மகன் இவர்களை வந்து பார்ப்பதோ இவர்களுடன் பேசுவதோ கூட இல்லை. இதில் பெற்றோர் இருவருக்கும் ஏகமாய் வேதனை.

    அத்தர் என்கிற வாசனை திரவியம் மற்றும் சில புத்தகங்கள் விற்று பிழைப்பு நடத்துகிறார் அபு. மனைவி வீட்டில் மாடுகள் வளர்த்து சற்று பணம் ஈட்டுகிறார். இருவருக்கும் இந்த தள்ளாத வயதில் ஒரே லட்சியம் – ஒரு முறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பதே! ஹஜ் மானியம் பெற்று பயணம் செல்வது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியாததால் தனியார் டிராவல்ஸ் மூலம் பயணிக்க முடிவு செய்கிறார்கள்.

    அவர்கள் இத்தனை வருட சேமிப்பு பணம், மனைவியின்  நகைகள், மாட்டை விற்பது  என பணம் திரட்டுகிறார்கள். மீதமுள்ள பணத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள பலா மரத்தை விற்க முடிவு செய்து அதே ஊரில் உள்ள கலாபவன் மணியிடம் பேசுகிறார்கள். அவர் இவர்கள் ஹஜ் பயணத்துக்கு உதவும் எண்ணத்தில் அறுபதாயிரம் தர ஒப்புக்கொண்டு முன் பணமாக பத்தாயிரம் தருகிறார்.

    பாஸ்போர்ட் வாங்குவதில் துவங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார்கள். ஹஜ் பயணத்துக்கான தடுப்பூசி போடுவது, ஒவ்வொரு நண்பராய் சந்தித்து அவர்களிடம் பிரியா விடை பெறுவது என அனைத்தும் சரியே நடக்கும் நிலையில், ஒரு விஷயம் இடியாய் வந்து இறங்குகிறது.

    பலா மரத்துக்கு மீதம் பணமான ஐம்பதாயிரம் தரும் கலாபவன் மணி, அந்த மரம் பட்டு போய் விட்டது என்று கூறி விட்டு –  இருந்தாலும் நான் ஒப்பு கொண்ட படி  இந்த பணம் தருகிறேன் என்று சொல்ல, அபு அந்த பணத்தை வாங்க மறுத்து விடுகிறார்.

    ” நான் செல்வது நல்ல காரியத்துக்கு- கடனாகவோ, தவறான முறையிலோ பணம் ஈட்டி செல்ல கூடாது” என்று கூறி விடுகிறார்.

    வீட்டின் அருகில் இருக்கும் நண்பர் நெடுமுடி வேணு, டிராவல்ஸ் மேனேஜர் உள்ளிட்டோர் பணம் தர முன் வந்தாலும் “சொந்த ரத்த சம்பந்தத்தினர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு உதவலாம்” என  மறுக்கிறார்.

    “மரம் வெட்டியது கூட அல்லாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதுவும் ஒரு உயிர் தானே? அந்த மரத்தை நம்பி எத்தனை உயிர்கள் இருந்தன? அதனால் தான் ஹஜ் பயணம் வாய்க்க வில்லை;  அடுத்த முறை  நிச்சயம் செல்வோம்” என மனைவியிடம் கூறி விட்டு, பக்ரீத் அன்று  புதிதாய் ஒரு பலா மரம் நடுவதுடன் படம் நிறைவடைகிறது.

    சலீம் குமார் அபுவாக வாழ்ந்துள்ளார். சிறந்த நடிகருக்காக மத்திய அரசின் விருதும் கேரள அரசின் விருதும் பெற்றுத் தந்த நடிப்பு. அந்த பாத்திரத்தின் எதிர்பார்ப்பு, ஏக்கம், கோபம், இயலாமை எல்லாமே மிக சரியே பிரதிபலிக்கிறது இவர் நடிப்பில். இவர் மட்டுமல்லாது குடை ரிப்பேர் செய்பவர் உள்ளிட்ட ஒழிந்து வரும் பல சிறு தொழில்கள் குறித்த வேதனை படத்தின் ஊடே தெரிகிறது.

    கலாபவன் மணி, நெடுமுடி வேணு, முகேஷ் போன்ற பல பெரிய நடிகர்கள் முக்கியமான சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபுவின் மனைவியாக வருபவர் சலிமை விட நிச்சயம் மிக இளமையாக தெரிகிறார்.

    படம் மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல துவங்கும் போது மிக போர் அடிக்குமோ என்று தோன்றுகிறது. போக போக அவர்களின் பயணத்தில் நாமும் இணைந்து விடுகிறோம். ” எப்படியாவது அவர் ஹஜ் சென்றால் நன்றாயிருக்கும்” என ஒரு பக்கம் நினைத்தாலும், மறு பக்கம் “இது மலையாள படம்; நிச்சயம் அப்படி முடிக்க மாட்டார்கள்” என்று தெளிவாகப் புரிகிறது.

    படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. வரும் அத்தனை பாத்திரங்களும் நல்லவர்களே. ஒரு விதத்தில் பார்த்தால் கதை முழுக்க முழுக்க அபுவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் மற்றவர்களிடம் நல்ல விதமாய் நடந்து கொள்வதால், மற்றோரும் அப்படியே நடந்து கொள்கிறார்கள்.

    கடைசியில் எல்லாரும் அபுவிற்கு உதவத் தயாராய் இருந்தும் கூட, யார் உதவியையும் அவர் பெற்று கொள்ளாத போது படம் பார்க்கும் நமக்கு அவர் மீதுதான் கோபம் வருகிறது. ஒவ்வொருவர் உதவியையும் பெறாமல் இருக்க ஒவ்வொரு காரணம் சொல்கிறார் அபு. ” நல்லவனாய் இருக்கலாம். ரொம்ப நல்லவனாய் இருக்கவே கூடாது”  (Too good  is bad ) என்பார்கள், அது தான் நினைவிற்கு வந்தது.

    படத்தில் உஸ்தாத் என்று ஒரு ஞானி பாத்திரம். அவரிடம் அபு சென்று ” உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே ! நாங்கள் இந்த முறை ஹஜ் செல்வோமா?” என்று கேட்க, அதற்கு உஸ்தாத்  ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் “முயற்சி செய், முயற்சி செய்”  என்றே மறுபடி மறுபடி சொல்கிறார். நமக்கு இங்கேயே கூட அவர்கள் ஹஜ் செல்ல போவதில்லை என உணர்த்தப்படுகிறது.

    உண்மையில் தங்களிடம் சிறு சிறு குறைகள் இருக்க, ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள் மனிதர்கள். ”  ஆண்டவன் நல்லவங்களை தான் சீக்கிரம் கூட்டிப்பான்” என்பது உதாரணத்துக்கு ஒன்று ! ஆனால் நல்லவனாய் இருப்பது சாதாரண விஷயமில்லை. அது முள் மேல் படுப்பது போன்ற ஒரு விஷயம். நல்லவர்களுக்கு தான் தொடர் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை மீறி நல்லவனாய் தொடர்ந்து இருப்பது சாதாரண விஷயமில்லை.

    பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள், மத நல்லிணக்கம் (அபுவிற்கு உதவுவோர் இந்து அல்லது கிறித்துவர்கள்), சுற்று சூழல் பாதுகாப்பு (மரங்களை வெட்டாதீர்கள்) போன்ற பல விஷயங்களை பூடகமாய்ப் பேசிப் போகிறது படம். மத்திய அரசின் பல விருதுகளைத் தட்டிச் செல்ல இவையும் காரணங்களாய் இருந்திருக்கலாம்.

    மொத்தத்தில் மனதை கனக்கச் செய்யும் இந்த படம் – ஒரு வித்தியாசமான அனுபவம். நீங்களும் ஒரு முறை இந்த படம் பார்ப்பதன்  மூலம் இதனை அனுபவியுங்கள் !

    Share
  • தொல்லை காட்சி பெட்டி

     மோகன் குமார்

     

    வல்லமையில் புது பகுதியாக இன்று முதல் துவங்குகிறது தொல்லை காட்சி பெட்டி. 

    டிவியில் பார்க்க கூடிய நிகழ்ச்சிகள், ரசித்த சில விஷயங்கள் என எழுத ஆசை. இதனை எழுத அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை என்பதும் (பார்க்கிற எல்லா நிகழ்சிகளுக்கும் தான் நமக்கு ஒரு ஒபினியன் இருக்குமே ! ) , இத்தகைய  விமர்சனம் இணையத்தில் இப்போது யாரும் எழுத வில்லை என்பதும் தொடங்க காரணங்கள். 

    சில வாரங்கள் முடியாமல் போகலாம் பொறுத்தருள்க ! 

    நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : களம் இறங்கியவர்கள்

    புதிய தலைமுறை டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை “களம் இறங்கியவர்கள்” என்ற நல்ல நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கபிலன் வைரமுத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு தொழில்களை செய்யும் வித்யாசமான மனிதர்களை அறிமுகம் செய்கிறது. பஸ் ஓட்டும் பெண்மணி, கல்விக்கு உதவும் குழு என வித்யாசமாய் இருக்கும். இயலும்போது பாருங்கள் இந்த நல்ல நிகழ்ச்சியை ! 

    லக்கா கிக்கா

    திங்கள் முதல் புதன் வரை ஜி தமிழ் டிவி யில் இரவு 9.30 முதல் 10.30 வரை “லக்கா கிக்கா” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. “செம்பருத்தி” புகழ் நடிகை ரோஜா இதனை தொகுத்து வழங்குகிறார். நான்கு ரவுண்டுகள் உள்ள நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் நால்வர் கலந்து கொள்கிறார்கள். கையில் ரூபாய் வைத்து கொண்டு இந்தாங்க ஐநூறு ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க , ஆயிரம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க என ரூபாய் நோட்டுகளை கலந்து கொள்பவர்களுக்கு ரோஜா தருகிறார். ரொம்ப சுமார் நிகழ்ச்சி இது ! ரோஜா முகமும் சிரிப்பும் அப்படியே இருப்பது மட்டுமே ஆறுதல் !

    கிரிக்கெட்

    சில வாரங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஐ. சி. சி T -20 ல் சூப்பர் 8 ஆரம்பமாகி விட்டது. தினம் இரு அட்டகாசமான மேட்சுகள்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மேட்சில் கெயில் வழக்கம் போல் விளாசினார். கூடவே சார்லஸ் என்கிற இன்னொரு இளைஞரும் வெளுத்து வாங்கினார். இங்கிலாந்து நிச்சயம் மோசமாய் தோற்கும் என நினைத்தால் கடைசி வரை போராடி இறுதி பந்துகளில் தோற்றனர். மார்கன் ஆட்டம் அட்டகாசம் !

    இந்தியாவின் ஆட்டம் தான் ரசிகர்களை செம டென்ஷன் ஆக்கி கொண்டிருக்கிறது ஹூம் 🙁 

    சீரியல் பக்கம்: சிந்து பைரவி 

    வடக்கில் வரும் சில சீரியல்கள் தமிழில் டப் ஆகி ஒளிபரப்பாகிறது. அந்த வரிசையில் ராஜ் டிவியில் வரும் சீரியல் தான் சிந்து பைரவி. சிறு வயது முதல் தோழிகளாக இருக்கும் இருவர் வளர்ந்த பின் ஒரே கணவனை மணக்கிறார்கள். இருவரில் சிந்து நல்லவள். பைரவி வில்லி. பைரவி மட்டும் கர்ப்பமாகிறாள். இருவரும் மணந்த கணவர் குழந்தை பாக்கியம் தர முடியாது என்று தெரிய வருகிறது. இப்படி போகிறது கதை. 

    நான் என்னவோ இந்த சீரியல் பார்ப்பதாக நினைத்து விடாதீர்கள். வீட்டில் எப்பவும் நடக்கும் டிஸ்கஷன் வைத்து தெரிஞ்சு கிட்ட கதை தான் இது. பெரும்பாலும் இந்த சீரியல் முடிந்த பின் தான் வீட்டுக்கே வருவேன். பைரவி ஓரளவு அழகு. எப்பவாவது பார்த்தால் ரசிப்பதோடு சரி 🙂

    பலரும் இந்த சீரியல் பார்ப்பதாகவும், பெண்கள் இதன் ஹீரோவை சைட் அடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் 🙂

    ஜெயா டிவியில் கே. பாலசந்தர் 

    திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் சில வாரங்களாக தினம் இரவு பத்து மணிக்கு பேசி வருகிறார். இந்த வாரம் சில அற்புதமான படங்கள் பற்றி பேசினார். சிந்து பைரவி – முதல் முறையாக இளையராஜாவுடன் கே. பி இணைந்த படம். அதுவரை இசை அமைத்த எம். எஸ். வி யிடம் சொல்லி விட்டு அவர் மனம் நோகாமல் ராஜா பக்கம் வந்ததை சொன்னார். அப்படத்துக்கு ராஜா மற்றும் சுகாசினிக்கு கிடைத்த விருது, ஒவ்வொரு பாடலும் எப்படி வித்யாசமாய் அமைந்தது என சுவாரஸ்யமாய் இருந்தது 

    இன்னொரு நாள் கே. பி யின் படத்தில் என்றும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மன்மத லீலை பற்றி பேசினார். ரஜினிக்கு எப்படி தில்லு முல்லுவோ அதே போல் கமலுக்கு இந்த படம் ! நான் ஸ்டாப் காமெடி ! இது வரை பார்க்கா விடில் டீ. வி. டி யாவது வாங்கி ஒரு முறை பாருங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி படம் – ஞாபகம் இருக்கட்டும்) 

    சூப்பர் சிங்கர் அப்டேட் 

    செமி பைனல் இந்த வாரம் நடந்தது. கிளிப்பிங்கில் பிரகதி அழுகிற மாதிரி காண்பித்து அவர் தான் அவுட் ஆக போகிறார் என்கிற மாதிரி பில்ட் அப் தந்தனர். ஆனால் அவுட் ஆனது யாழினி. சுகன்யா, பிரகதி மற்றும் கெளதம் பைனல் சென்று விட்டனர்.

    இது முடிந்த மறு நாளே பத்து குழந்தைகளை வைத்து கொண்டு ஒய்ல்ட் கார்ட் நடத்துகிறார்கள். இனி மக்களை ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நல்லா காசு பார்க்கும் !

    Share