ஆதாமிண்டேமகன்அபு – மலையாளபடவிமர்சனம்

மோகன் குமார்

இயல்பான கதையும், இயற்கையான நடிப்பும்  சேர்ந்த படங்கள் மொழியையும் தாண்டி நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அத்தகைய ஒரு படம் தான் மலையாளத்தில் வெளியான -ஆதாமிண்டே மகன் அபு. 

இரண்டு கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 2010-ல் வெளியாகி விமர்சகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

கதை என்னவென்று பார்ப்போமா?

அபு – ஐஷு என்கிற வயதான  தம்பதி  – கேரள கிராமத்தில் தனியே வசிக்கின்றனர். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்களின் மகன் இவர்களை வந்து பார்ப்பதோ இவர்களுடன் பேசுவதோ கூட இல்லை. இதில் பெற்றோர் இருவருக்கும் ஏகமாய் வேதனை.

அத்தர் என்கிற வாசனை திரவியம் மற்றும் சில புத்தகங்கள் விற்று பிழைப்பு நடத்துகிறார் அபு. மனைவி வீட்டில் மாடுகள் வளர்த்து சற்று பணம் ஈட்டுகிறார். இருவருக்கும் இந்த தள்ளாத வயதில் ஒரே லட்சியம் – ஒரு முறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பதே! ஹஜ் மானியம் பெற்று பயணம் செல்வது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியாததால் தனியார் டிராவல்ஸ் மூலம் பயணிக்க முடிவு செய்கிறார்கள்.

அவர்கள் இத்தனை வருட சேமிப்பு பணம், மனைவியின்  நகைகள், மாட்டை விற்பது  என பணம் திரட்டுகிறார்கள். மீதமுள்ள பணத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள பலா மரத்தை விற்க முடிவு செய்து அதே ஊரில் உள்ள கலாபவன் மணியிடம் பேசுகிறார்கள். அவர் இவர்கள் ஹஜ் பயணத்துக்கு உதவும் எண்ணத்தில் அறுபதாயிரம் தர ஒப்புக்கொண்டு முன் பணமாக பத்தாயிரம் தருகிறார்.

பாஸ்போர்ட் வாங்குவதில் துவங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார்கள். ஹஜ் பயணத்துக்கான தடுப்பூசி போடுவது, ஒவ்வொரு நண்பராய் சந்தித்து அவர்களிடம் பிரியா விடை பெறுவது என அனைத்தும் சரியே நடக்கும் நிலையில், ஒரு விஷயம் இடியாய் வந்து இறங்குகிறது.

பலா மரத்துக்கு மீதம் பணமான ஐம்பதாயிரம் தரும் கலாபவன் மணி, அந்த மரம் பட்டு போய் விட்டது என்று கூறி விட்டு –  இருந்தாலும் நான் ஒப்பு கொண்ட படி  இந்த பணம் தருகிறேன் என்று சொல்ல, அபு அந்த பணத்தை வாங்க மறுத்து விடுகிறார்.

” நான் செல்வது நல்ல காரியத்துக்கு- கடனாகவோ, தவறான முறையிலோ பணம் ஈட்டி செல்ல கூடாது” என்று கூறி விடுகிறார்.

வீட்டின் அருகில் இருக்கும் நண்பர் நெடுமுடி வேணு, டிராவல்ஸ் மேனேஜர் உள்ளிட்டோர் பணம் தர முன் வந்தாலும் “சொந்த ரத்த சம்பந்தத்தினர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு உதவலாம்” என  மறுக்கிறார்.

“மரம் வெட்டியது கூட அல்லாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதுவும் ஒரு உயிர் தானே? அந்த மரத்தை நம்பி எத்தனை உயிர்கள் இருந்தன? அதனால் தான் ஹஜ் பயணம் வாய்க்க வில்லை;  அடுத்த முறை  நிச்சயம் செல்வோம்” என மனைவியிடம் கூறி விட்டு, பக்ரீத் அன்று  புதிதாய் ஒரு பலா மரம் நடுவதுடன் படம் நிறைவடைகிறது.

சலீம் குமார் அபுவாக வாழ்ந்துள்ளார். சிறந்த நடிகருக்காக மத்திய அரசின் விருதும் கேரள அரசின் விருதும் பெற்றுத் தந்த நடிப்பு. அந்த பாத்திரத்தின் எதிர்பார்ப்பு, ஏக்கம், கோபம், இயலாமை எல்லாமே மிக சரியே பிரதிபலிக்கிறது இவர் நடிப்பில். இவர் மட்டுமல்லாது குடை ரிப்பேர் செய்பவர் உள்ளிட்ட ஒழிந்து வரும் பல சிறு தொழில்கள் குறித்த வேதனை படத்தின் ஊடே தெரிகிறது.

கலாபவன் மணி, நெடுமுடி வேணு, முகேஷ் போன்ற பல பெரிய நடிகர்கள் முக்கியமான சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபுவின் மனைவியாக வருபவர் சலிமை விட நிச்சயம் மிக இளமையாக தெரிகிறார்.

படம் மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல துவங்கும் போது மிக போர் அடிக்குமோ என்று தோன்றுகிறது. போக போக அவர்களின் பயணத்தில் நாமும் இணைந்து விடுகிறோம். ” எப்படியாவது அவர் ஹஜ் சென்றால் நன்றாயிருக்கும்” என ஒரு பக்கம் நினைத்தாலும், மறு பக்கம் “இது மலையாள படம்; நிச்சயம் அப்படி முடிக்க மாட்டார்கள்” என்று தெளிவாகப் புரிகிறது.

படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. வரும் அத்தனை பாத்திரங்களும் நல்லவர்களே. ஒரு விதத்தில் பார்த்தால் கதை முழுக்க முழுக்க அபுவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் மற்றவர்களிடம் நல்ல விதமாய் நடந்து கொள்வதால், மற்றோரும் அப்படியே நடந்து கொள்கிறார்கள்.

கடைசியில் எல்லாரும் அபுவிற்கு உதவத் தயாராய் இருந்தும் கூட, யார் உதவியையும் அவர் பெற்று கொள்ளாத போது படம் பார்க்கும் நமக்கு அவர் மீதுதான் கோபம் வருகிறது. ஒவ்வொருவர் உதவியையும் பெறாமல் இருக்க ஒவ்வொரு காரணம் சொல்கிறார் அபு. ” நல்லவனாய் இருக்கலாம். ரொம்ப நல்லவனாய் இருக்கவே கூடாது”  (Too good  is bad ) என்பார்கள், அது தான் நினைவிற்கு வந்தது.

படத்தில் உஸ்தாத் என்று ஒரு ஞானி பாத்திரம். அவரிடம் அபு சென்று ” உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே ! நாங்கள் இந்த முறை ஹஜ் செல்வோமா?” என்று கேட்க, அதற்கு உஸ்தாத்  ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் “முயற்சி செய், முயற்சி செய்”  என்றே மறுபடி மறுபடி சொல்கிறார். நமக்கு இங்கேயே கூட அவர்கள் ஹஜ் செல்ல போவதில்லை என உணர்த்தப்படுகிறது.

உண்மையில் தங்களிடம் சிறு சிறு குறைகள் இருக்க, ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள் மனிதர்கள். ”  ஆண்டவன் நல்லவங்களை தான் சீக்கிரம் கூட்டிப்பான்” என்பது உதாரணத்துக்கு ஒன்று ! ஆனால் நல்லவனாய் இருப்பது சாதாரண விஷயமில்லை. அது முள் மேல் படுப்பது போன்ற ஒரு விஷயம். நல்லவர்களுக்கு தான் தொடர் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை மீறி நல்லவனாய் தொடர்ந்து இருப்பது சாதாரண விஷயமில்லை.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள், மத நல்லிணக்கம் (அபுவிற்கு உதவுவோர் இந்து அல்லது கிறித்துவர்கள்), சுற்று சூழல் பாதுகாப்பு (மரங்களை வெட்டாதீர்கள்) போன்ற பல விஷயங்களை பூடகமாய்ப் பேசிப் போகிறது படம். மத்திய அரசின் பல விருதுகளைத் தட்டிச் செல்ல இவையும் காரணங்களாய் இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் மனதை கனக்கச் செய்யும் இந்த படம் – ஒரு வித்தியாசமான அனுபவம். நீங்களும் ஒரு முறை இந்த படம் பார்ப்பதன்  மூலம் இதனை அனுபவியுங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி