சட்டம் ஆலோசனைகள் (18)
மோகன் குமார்
கேள்வி: விஸ்வேஷ் , ராமாபுரம்
நாங்கள் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒரு பில்டரிடம் புக் செய்தோம். அப்போது அட்வான்ஸ் பணம் தருமாறும் அரசுடைமை ஆன வங்கி மூலம் லோன் பெறலாம் என்றும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் முதல் அட்வான்ஸ் பணமும் பின் அடுத்தடுத்து அட்வான்ஸ் தொகையும் கொடுத்து வந்தோம்.
இப்போது குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பிளான் அப்ரூவல் இல்லை என்றும், அதனால் அரசுடைமை ஆன வங்கிகள் லோன் தராது, தனியார் வங்கியில் லோன் பெற்று தருகிறேன் என்கிறார். எங்களுக்கு பிளான் அப்ரூவல் இல்லாமல் அந்த வீட்டை வாங்க விருப்பமில்லை. நாங்கள் இதுவரை பத்து லட்சத்துக்கும் மேல் பணம் தந்து விட்டோம். அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது?
பதில்:
வீடு புக் செய்யும் போது பிளான் அப்ரூவல் பற்றி என்ன கூறினார்? அப்போது பிளான் அப்ரூவல் உள்ள கட்டிடம் என்று எழுத்தில் தந்துள்ளாரா?
பிளான் அப்ரூவல் ஆகாத வீட்டை உங்களுக்கு விற்க முயல்வதும், அந்த தகவலை உங்களிடம் முதலில் மறைத்தும் அவரது தவறு தான். பிளான் அப்ரூவல் இல்லாத வீட்டை வாங்க விருப்பம் இல்லை என்றும், நீங்கள் கட்டிய பணத்தை உடன் வட்டியுடன் திருப்ப தருமாறும் அவருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்புங்கள்.
அவர் அதன் பின் உங்கள் பணத்தை தராவிடில் நீங்கள் கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நீங்கள் போட்ட அக்ரீமென்ட் செல்லாது என்றும், தவறான தகவல்கள் தந்து உங்களுக்கு இந்த வீட்டை விற்றுள்ளார் என்றும் நிரூபிக்க வேண்டியிருக்கும்.
உடனடியாக நீங்கள் இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் உங்களுக்கு நம்பிக்கையான வழக்கறிஞரை அணுகவும்.