இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (30)

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

வாரங்கள் ஓடுகின்றன. வரம்பில்லா நிகழ்வுகள் வாழ்க்கையில் நடந்தேறுகின்றன. ஒரு மனிதன் மறைந்ததும் அவன் தன் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆற்றிய செயல்களிலே தான் அவனது புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அடங்கியிருக்கின்றது.

நாம் வாழும் மட்டும் வேஷம் போட்டு வாழ்ந்து ஊரையும், உலகத்தையும் ஏமாற்றி வாழ்ந்து விட்டு மறைந்ததும் எமது ஈனச்செயல்கள் அப்படியே எம்முடன் சேர்ந்து புதைக்கப்பட்டு விடுகிறதோ அன்றி எரிக்கப்பட்டு விடுகிறதோ எனும் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பின் அது எத்தகைய மாயையான நினைப்பு என்பது இன்றைய நடைமுறைகளின் படி நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மனிதர் இரட்டை வேடம் போட்டு வாழ்வதை சினிமாக்களில் பார்க்கிறோம். பார்த்து விட்டு சிலசமயங்களில் என்ன இது மிகைப்படுத்தப்பட்டு விட்டதோ என்று கூட எண்ணுகிறோம். ஆனால் இப்போ எமது கண்முன்னால் இங்கிலாந்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இத்தகைய இரட்டை வேட மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் இருப்பது யதார்த்தமே என்று எமக்கு புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எதற்காக இத்தனை ஆலாபனை என்று எண்ணுகிறீர்களா ?

ஜிம்மி சவைல் (Jimmy Saville) பிரித்தானிய ஊடகங்களில் கடந்த பத்து நாட்களாக வறுத்தெடுக்கப்படும் ஒரு பெயர். 

அது சரி யார் இந்த ஜிம்மி சவைல் ?

1926ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் திகதி இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் (Leeds) எனும் நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் 7 பிள்ளைகளில் கடைசிப்பிள்ளையாகப் பிறந்தார்.

இளவயது முதலே இசையில் நாட்டம் கொண்டு வளர்ந்த இவர் தானே இங்கிலாந்தில் வந்த டிஸ்க் ஜொக்கி (Disc Jokki or DJ) எனப்படும் வகையிலான இசைநிகழ்ச்சி தொகுப்பாளர்களில் முதன் முதலாக வந்தவர்களில் முன்னணியில் திகழ்ந்தவர் என்று கூறிக் கொள்கிறார்.

இரண்டாவது உலக  மகாயுத்தத்தின் போது நிலக்கரிச் சுரங்க வேலைக்காக கட்டாயப் பணியின் பேரில் சேர்க்கப்பட்டவரார். நாட்டிய ஹால்களிலும், பார்களிலும் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் DJ ஆக பணிபுரியத் தொடங்கிய இவரின் முதலாவது வானொலிப் பிரவேசம் 1958ம் ஆண்டு ரேடியோ லக்ஸம்பேர்க் (Radio Luxemburg) இலும் முதலாவது தொலைக்காட்சிப் பிரவேசம் டைன் டீஸ் தொலைக்காட்சி ( Tyne Tees Television) யில் 1960 இலும் நிகழ்ந்தது.

நகைச்சுவைப் பாணியிலும், மிகவும் விசித்திரமான வகையிலும் தனது நிகழ்ச்சித் தொகுப்புகளையும் வழங்கிய இவர் இங்கிலாந்து மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற காரணமாகவிருந்தது இவரது சமூக சேவையும், இவர் பலரது தீராக் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் தொலைக்காட்சி நிகழ்வான ஜிம் வில் ப்க்ஸ் இட் (Jim`ll Fix It) எனும் பி.பி.ஸி தொலைக்காட்சியில் வந்த நீண்ட தொடராலாகும்.

தொடர்ந்து பி.பி.ஸி நிறுவனத்தில் பல வருடங்கள் அவரது மறைவு வரைக்கும் பலவித நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்தார்.

இவரது சமூக சேவைக்காகவும், மக்களிடையே இவருக்கிருந்த செல்வாக்குக் காரணமாகவும் இவருக்கு இங்கிலாந்து மகாராணியால் “சர்” பட்டம் வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகள் முக்கியமாக “ஸ்டோக் மண்டர்வைல் (Stoke Mandervile) ஹாஸ்பிட்டல், “லீட்ஸ் ஜெனரல் இன்வேர்மரி (Leeds General Infermory)” ஹாஸ்பிட்டல், “பிராட்மோர் (Broadmoor) ஹாஸ்பிட்டல் போன்றவற்றில் பிரபலப்பட்டிருந்தன.

இத்தகைய ஹாஸ்பிட்டல்களில் மனநலம் குன்றிய குழந்தைகள் அதிகமாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி மனநலம் குன்றிய இளம் யுவதிகள், இளைஞர்களும் இவற்றில் அடங்குவர்.

சரி , எதற்காக இந்த ஜிம்மி சவைல் என்பவரைப் பற்றிய இவ்வளவு முன்னோட்டம் எனும் கேள்வி எழுந்திருக்குமே !

இங்கேதான் இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த சமுதாயப் பெரிய மனிதன், மகாராணியாரின் அதியுயர் விருதைப் பெற்றவர், சமுதாயத்தினால் முன்னோடியாகக் கருதப்பட்டவர் இரட்டை வாழ்வு வாழ்ந்திருக்கும் அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அப்படி என்னதான் செய்து விட்டார் என்கிறீர்களா?

யாராலும் எண்ணிப்பார்க்கவே கூசும் வகையில் சிறுவர், சிறிமிகளை இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பது அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.

இவரது ” Jimm`ll Fix It” எனும் நிகழ்ச்சி பொதுவாக சிறுவர் சிறுமியரின் மனதில் இருக்கும் கனவுகளை தொலைக்காட்சியில் நிறைவேற்றி வைக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இதிலே சம்பந்தப்பட்டிருந்த பல சிறுமியரின் கனவுகளை நிறவேற்றுவதற்குக் கூலியாக அவர்கள் மீது தனது பாலியியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது வெளிவந்துள்ளது.

இவரால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்  சிறுமியர் தற்போது வயது முதிர்ந்தவர்கள். பகிரங்கமாக இவர் தம்மீது நிகழ்த்திய பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றித் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் குறிப்பிட்டதன் பின்னாலேயே பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் உயிரோடு இருந்த காலங்களிலேயே இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்து, சில போலிஸ் பிரிவுகள் அவற்றை விசாரிக்க முற்பட்டு பின் அவ்விசாரணைகள் முடங்கிப் போய்விட்டன.

இவர் சமுதாயத்தில் வகித்த முன்னணி அந்தஸ்தும், பல சமூக நிறுவனக்களின் நிதிச் சேகரிப்பில் இவர் ஈடுபட்டு அவற்றிற்கு நிதி ஈட்டிக் கொடுக்கும் வல்லமை இவரிடம் இருந்ததுமே இவர் மீதான விசாரணைகள் முடங்கிப் போனதிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இவரது இந்த செய்கைகளினால் பாதிக்கப்பட்டது உலகப்பிரசித்தி பெற்ற பீ.பீ.சீ நிறுவனத்தின் நற்பெயருமேயாகும்.

ஏன் பீ.பீ.ஸி க்கு மட்டும் அதிகமான அவப்பெயர் என்கிறீர்களா?

1) பி.பி.ஸி யிலேயே இவர் அதிக காலம் பணியாற்றி வந்துள்ளார். இவரது பாலியல் துஷ்பிரயோகங்களில் பெரும்பாலானவை நிகழ்ந்தது பி.பி.ஸி ஸ்டூடியோவிலேயே.

2) இவர் மீது சந்தேகங்கள் பல காலகட்டங்களில் துளிர்த்து எழுந்தும் அதனை மேற்கொண்டு விசாரிக்கத் தவறியமை.

3) 2011ம் ஆண்டு பி.பி.ஸி யின் நியூஸ் நைட் எனும் நிகழ்வு இவரின் மீது இவரது நடத்தையின் மீதான சந்தேகங்களின் அடிப்படையில் ஆக்கிய ஒரு நிகழ்ச்சி பி.பி.ஸி மேலதிகாரிகளால் நிறுத்தப்பட்டதும், அதைத் தொடர்ந்து 2011 கிறீஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் இவருக்கான பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை பி.பி.ஸி நடத்தியமை.

இவைகளினால் பி.பி.ஸி மீது மக்களுக்கு ஒருவித நம்பிக்கையின்மை தோன்றியுள்ளதோ எனும் ஜயம் எழுந்துள்ளது.

சென்ற திங்கட்கிழமை பி.பி.ஸி தனது பனோரமா எனும் நிகழ்ச்சியில் இந்நபரின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமல் போனதிற்கும், 2011ம் ஆண்டு நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டதுக்குமான காரணங்களை ஆராய்ந்து தம்மைத் தாமே கடுமையான கண்ணோட்டத்துடன் விசாரித்துக் கொண்டது.

இவர் மீது கடந்த காலங்களில் எழுந்த குற்றச்சாட்டுகளை ஏன் அரசாங்க குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்கத் தவறியது என்பதை அரசாங்கக் குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

பி.பி.ஸி தமது நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு இரண்டு விசாரணைக் கமிஷன்களை நியமித்துள்ளது.

இதைத்தவிர பொலீசாரும்  தமது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இன்றைய கால்கட்டத்தில் குடும்பங்களின் பிரிவு என்பது சமுதாயத்தில் சாதாரண் நிகழ்வாகி விட்டது. இக்குடும்பங்களின் பிரிவாலும், திருமணமாகாமலே குழந்தைகளை பெற்றெடுக்கும் கலாச்சாரத்தினாலும் இங்கிலாந்து சமுதாயத்தில் மனநலம் குன்றிய பல சிறுவர், சிறுமியர் உருவாக்கப்படுகின்றனர். இவர்களைப் பாதுகாக்கப்படும் மையங்களில் இவர்களை இத்தகைய கொடுமையான மனிதர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியது இன்றைய சமூகத்தின் முக்கிய கடமையாகிறது. 

தம்க்கெதிராக நடக்கும் கொடுமைகளை, அக்கொடுமைகளைப் புரிபவரின் சமுதாய அந்தஸ்தின் காரணத்தினால் வெளிப்படுத்த முடியாத நிலை அன்றைய காலகட்டங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இத்தகைய கொடுமைகளை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்க‍ள் அனைவருக்கும் கிடைக்கின்றன. தம்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை மற்றையோருக்கும் நடக்கக்கூடாது என்னும் மனப்பான்மையை முன்வைத்து ஏதாவது ஒரு வகையில் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுப்பது அனைத்து மக்களின் கடமையாகிறது.

அனைத்து மக்களும் ஒன்றிணைவதே சமுதாயம். இவ்வமைப்பில் நம் அனைவரும் எமக்குரிய பங்கை உளசுத்தியுடன் ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

இவரது வாழ்க்கையும் அதன் பின்னால் இவருக்கு நடந்த நிகழ்வும் எமக்கு ஒரு விடயத்தை ஜயமின்றித் தெளிவு படுத்துகிறது. நாம் வாழும் வரைக்கும் தவறான வாழ்க்கைமுறையைத் திரைக்குப் பின்னால் வாழ்ந்துவிட்டு நாம் மறைந்ததும் அது எம்மோடு மறைந்து விடும் என்று எண்ணுவதோ அன்றி வெளிவந்தால் நமக்கென்ன என்று எண்ணுவதோ தவறானது. உண்மைகள் என்று மே அழிந்து விடாது. அவை நிச்சயம் வெளிவரத்தான் போகிறது. வாழும் வரைக்கும் மனசாட்சிக்கு விரோதமின்றி வாழ்வதுவே முறையான வாழ்வாகும்.

இதற்காகத்தான் கவிஞன்,

 “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்றானோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

படங்களுக்கு நன்றி ( விக்கி பீடியா இணையத்தளம் , பி.பி.ஸி இணையத்தளம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *