Tag: ராமஸ்வாமி ஸம்பத்

  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-4)

    ராமஸ்வாமி ஸம்பத்

     porus

    “அன்பரே! ஜீலம் நதிக்கரையில் அடாது மழை பெய்தாலும் விடாது நடந்த யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த தருணத்தில், தினம் மாலையில் போர் நிலவரம் பற்றி என்னிடம் விவரிப்பீர்கள். போரஸின் பராக்கிரமத்தையும் சாகசத்தையும் வெகுவாக சிலாகித்து அவருடைய வீரத்தினைப் போற்றுவீர்கள். ‘உண்மையிலேயே போரஸ் எனக்குச் சரியான ஜோடி’ என்றெல்லாம் சொல்வீர்கள்.

    “ஒரு மாலை, இருபக்கங்களிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பற்றி விவரித்து, ‘போரஸை யுத்த தந்திரங்களால்தான் தோற்கடிக்க முடியும்’ என்று கூறினீர்கள். அதற்கான திட்டத்தையும் என்னிடம் விவரித்தீர்கள். ’அதன்படி புறமுதுகிட்டு ஓடுவதுபோல் பாசாங்கு செய்து, போர் முடிந்து விட்டதாக போரஸை நம்பவைத்து, அவன் படை அயர்ந்த நிலையில் இருக்கும்போது பின்பக்கமாகச் சென்று தாக்கப்போவதுதான் அந்த திட்டம். அதனால் அவன் குழப்பமடைந்து தன் படையின் பெரும் பகுதியை அங்கு நகர்த்துவான். அப்போது நான் இப்பக்கத்திலிருந்து போரஸைத் தாக்குவேன்’ என்றீர்கள். ’உங்கள் படையும் இரண்டாகி பாதுகாப்பு குறைந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ’ என்று எனக்கு அச்சம் மேலிட்டது.

    “பௌர்ணமி நாளான அன்றிரவு இதே போன்று கொட்டும் மழையில், நான் ஒரு பவுரவ ஒற்றன்போல் வேடமிட்டு சுலபமாக போரஸின் கூடாரத்திற்குள் நுழைந்தேன். கவலை தோய்ந்த முகத்தோடு அவர் அமர்ந்திருந்தார். வேடத்தைக் களைந்துவிட்டிருந்த என்னை அவர் வியப்புடன் நோக்கி, “பெண்ணே நீ யார்? எதற்கு இந்த நள்ளிரவில் கொட்டும் மழையில் என் கூடாரத்திற்கு தனியே வந்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?’’ என்றார். நான், ‘பவுரவ மன்னரே! இன்றைய தினம் சிரவண பூர்ணிமா அல்லவா? என் போன்ற பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் நாளல்லவா? எனக்கு உடன்பிறந்தவர் யாரும் இல்லை. ஆகவே, இந்த சகோதரியின் ரக்‌ஷையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறை அருளால் உங்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ என்றேன்.

    “போரஸ் மனம் மகிழ்ந்து, ‘தங்காய், உனக்கு இன்னும் மணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். நீ என் வலது கை மணிக்கட்டில் ரக்‌ஷை கட்டியதால் உன்னை மணக்கப்போகும் பாக்கியசாலிக்கு எத்தீங்கும் வராது காப்பேன்’ என்றார். ‘அண்ணா, அப்படியானால், உங்கள் எதிர் முகாமில் இருக்கும் அலெக்சாண்டரை போரில் கொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன். அவரே என்னை மணம்புரியப் போகிறார்” என்றேன்.

    “பவுரவ மன்னர் பேரதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து நின்றார். பின்பு சுதாரித்துக்கொண்டு, ‘தங்காய், நீ சாமர்த்தியசாலி. உன் காதலனைக் காக்க எப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். இந்த புருஷோத்தமன் வாக்களித்துவிட்டால் அதனை எக்காரணம் கொண்டும் மீறமாட்டான். நீ மன நிறைவோடு புறப்பட்டுச்செல்’ என்று கூறி தன் கழுத்தில் இருந்த வைரமாலையை எனக்கு அளித்தார். பின்னர் தன் மெய்க்காப்பாளனை அழைத்து என்னை ஜாக்கிரதையாக எங்கு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு விடுமாறு பணித்தார்.”

    இதைக்கேட்ட அலெக்சாண்டர் மிக்க ஆச்சரியமடைந்து, ‘ஓகோ, இதுதான் காரணமா அன்று போரஸின் தயக்கத்திற்கு?’ என நினைத்தான். பின்னர், “ரொக்ஸானா,  அது என்ன ரக்‌ஷை கட்டுவது? அது என்ன வழக்கம்” என்று வினவினான்.

    roxana“என் ஆருயிரே! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திரப்ரஸ்தம் எனும் தலைநகரிலிருந்து ஒரு சாம்ராஜ்யத்தை தர்மபுத்திரன் ஆண்டு வந்தான். அவன் நடத்திய ராஜசூய யாகத்தில் யாதவ குலத்தைச் சேர்ந்த கண்ணன் என்கிற வாசுதேவர் பங்கு கொண்டார். யாக முடிவில் அவருக்கே முதல் தாம்பூலம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்தருணத்தில் கண்ணனின் ஜன்ம வைரியான சிசுபாலன் அவரைப் பலவாறு வசைமாரி பொழிந்து அந்த யாகசாலையில் கலவரம் செய்தான். சினம்கொண்ட கண்ணன் தன் சுதர்சனம் என்கிற சக்கர ஆயுதத்தை அவன் மீது பிரயோகம் செய்தார். அந்தச் சக்கராயுதம் சிசுபாலன் தலையைக் கொய்து விட்டு கண்ணன் கையைத் திரும்பி வந்தடைந்தது. அப்போது கண்ணனின் வலது கை மணிக்கட்டு காயமுற்று குருதி பெருகியது. அதைக் கண்ட தர்மபுத்திரனின் பட்டத்து ராணியான துரோபதை தன் விலைமதிப்பான புடைவையின் முந்தானையைக் கிழித்து கண்ணன் மணிக்கட்டில் கட்டி குருதிப் பெருக்கை நிறுத்தினாள். கண்ணன்  மகிழ்ந்து, ‘தங்காய், இந்த பேருதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்? உன்னுடைய இந்த புடைவையில் எத்தனை நூலிழைகள் உள்ளதோ அத்தனை மதிப்புள்ள  புடைவைகளை உரிய காலத்தில் உனக்கு அளிப்பேன். அது மட்டுமல்ல. உன் கணவர்களான பஞ்ச பாண்டவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் காப்பேன்’ என்று வாஞ்சையுடன் வரமளித்தான். அன்று முதல் பரத கண்டத்தில் ஒவ்வொரு வருடமும் சிரவண பூர்ணிமா அன்று சகோதரிகள் தம்தம் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது” என்றுரைத்தாள் ரொக்ஸானா.

    இதைக்கேட்ட அலெக்சாண்டர், ‘எவ்வளவு உயர்ந்த மனிதன் இந்த போரஸ்! எதிரியின் காதலி தன்னை நயமாகப் பேசி மடக்கிவிட்டபோதிலும் தான் கொடுத்த வாக்கினை மீறாமல் இருந்திருக்கிறான். நல்மனம் படைத்தவன் இந்த பவுரவ மன்னன்’ என்று பெருமிதம் கொண்டான்.

    அதே நேரத்தில் ஒரு பெண்மூலம் தனக்கு உயிர்ப்பிச்சை கிடைத்திருக்கிறது என்ற எண்ணமே அவனுக்குக் கசந்தது.

    ”ரொக்ஸானா, அந்த நள்ளிரவில் நீ என் எதிரியின் முகாமுக்குச் சென்றது எனக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை. உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அதை என்னால் சகித்துக்கொள்ள முடியுமா?”

    “மன்னியுங்கள் மாமன்னரே! இப்பரத கண்ட மண்ணின் மகிமையோ என்னவோ தெரியவில்லை. காதலனுக்காக இந்த சிறிய சாகசத்தைச் செய்ய முற்பட்டேன்” என்றாள் அவள்.

    “அது சரி. பாரசீகத்தைச் சேர்ந்த உனக்கு இப்பரத கண்ட பழக்க வழக்கங்கள் எவ்வாறு தெரிந்தன?”

    “பாக்டிரீயா நாட்டில் எனக்கு நாட்டியம் கற்பித்த ஆசான் பரத கண்டத்தைச் சேர்ந்தவர். அவர் எனக்கு பாரதவர்ஷத்தின் இதிகாச புராணங்களையும் இந்நிலப்பகுதியின் கலாச்சாரங்களையும் அடிக்கடி விளக்குவார். அதனால் எனக்கு இந்த மண்மீது ஒரு பற்று ஏற்பட்டது. இதனைக் காணவேண்டும் என்ற தீவிரமான அவாவும் உண்டாயிற்று. இறை அருளால் தங்கள் மூலம் அந்த பாக்கியமும் கிட்டியது” என்றாள் ரொக்ஸானா.

    அலெக்சாண்டரின் கூடாரத்தில் சில நொடிகள் மவுனமாகக் கடந்தன.

    (தொடரும்)

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!..(பகுதி-3)

    ராமஸ்வாமி ஸம்பத்

    porus

     

    porus1

    அலெக்சாண்டரின் ஆணைமேல் கூடாரத்திற்கு வந்த ரொக்ஸானா, “மன்னர் மன்னா, தங்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும்” என்று இனிமையான குரலில் கேட்டாள்.

    “பிரியமானவளே, அந்த மருந்துப் பெட்டியில் உள்ள களிம்பினை இந்த புண்கள்மீது தடவு. மழைத் தண்ணீர் வேறு பலமாகப் பட்டுவிட்ட்து.. வலி பொறுக்க முடியவில்லை.”

    ”அப்படியே அரசே!” என்று சொல்லிய அவள் அலெக்சாண்டரின் உடலில் உள்ள காயங்களின்மீது தனது மெல்லிய வலதுகை விரல்களால் களிம்பினை தடவிவிட்டாள். அந்த ஸ்பரிசம் இதமாக இருந்தாலும், வலி குறையாத நிலையில் அதனால் அவனுக்கு பூரண நிவாரணம் கிட்டவில்லை.

    “ஐயோ, இந்த எரிச்சலில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?” என்று அலறினான் அம்மன்னன். வேதனையைப் புரிந்துகொண்ட ரொக்ஸானா மாசிடோனியப் படைகளுடன் வந்திருந்த மருத்துவரை அழைத்துவரச் சென்றாள்.

    அச்சமயம் ’மாவீரர் அலெக்சாண்டருக்கு வெற்றி உண்டாவதாக!’ என்று கூறியவாறு அவன் படைத்தலைவர்களில் ஒருவன் கூடாரத்தில் நுழைந்தான். “மன்னர் மன்னரே! தங்களால் தோற்கடிக்கப்பட்ட பவுரவ நாட்டரசரை தங்கள்முன் நிறுத்த அனுமதி தேவை” என்றான். வலி வேதனையாலோ என்னவோ, அலெக்சாண்டர் மவுனமாக இருந்தான். அதையே ஒப்புதலாகக் கருதி புருஷோத்தமனை மாசிடோனிய மன்னனின் முன் நிறுத்தினான்.

    விலங்குச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த புருஷோத்தமனைக் கண்ட அலெக்சாண்டர் ஒரு முனகலோடு, “ஓ நீதான் போரஸோ?” என்று கேட்டான்.

    “என் பெயர் புருஷோத்தமன். அதனைக் கொச்சைப்படுத்தி போரஸ் என அழைக்க வேண்டாம்.”

    “மன்னிக்க வேண்டும். ஒருவர் பெயரை இன்னொருவர் தன் இச்சைப்படி மாற்றிச் சொல்வது அநாகரீகமே! ஆனால் என் செய்வது? உங்கள் நாட்டுப் பெயர்கள் எங்கள் நாக்கில் சரியாக புரள மாட்டோம் என்கின்றனவே.”

    ”அப்படியென்றால், எங்களுக்கும் உங்கள் பெயரை உச்சரிப்பது கடினமாக உள்ளது. அதற்காக  நாங்கள் உங்களை ‘சிகந்தர்’ என அழைப்பதை ஒப்புவீர்களா?”

    ”தாராளமாக சிகந்தர் என்றே அழையுங்கள். எனக்கும் அப்பெயர் பிடித்திருக்கிறது.”

    அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் வலி தாங்காமல், “ரொக்ஸானா, எங்கு சென்றுவிட்டாய்? என்னால் எரிச்சலைப் பொறுக்க முடியவில்லையே. அந்த களிம்பினை இன்னொரு முறை தடவு இப்புண்களின் மேல்” என்று புலம்பினான் அலெக்சாண்டர்.

    கூடாரத்திற்கு விரைந்து வந்த ரொக்ஸானா, ஒரு கணம் புருஷோத்தமனைக் கண்டு, “அண்ணா, தாங்களா இந்த நிலையில்?” என்று தழதழக்கும் குரலில் விளித்து, அவன் அடி பணிந்தாள்.

    அலெக்சாண்டருக்கு வியப்பு மேலிட்ட்து. “அண்ணாவா, இது என்ன புது உறவு?” என்று அவளை வினவினான்.

    ரொக்ஸானா அதற்கு பதில் அளிக்காமல், “அண்ணா, என் வருங்காலக் கணவர் விழுப்புண்களின் வலி தாங்காமல் தவிக்கிறார். எங்கள் மருத்துவர் கொண்டு வந்திருக்கும் களிம்பு பயனில்லாமல் போய்விட்டது. உங்கள் நாட்டு மருந்து ஏதேனும் உள்ளதா இப்பிணியைத் தீர்க்க?” என்று கேட்டாள்.

    “தங்காய், என்னுடன் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் என் மெய்க்காப்பாளனை விடுவித்து இங்கு அழைத்து வந்தால், நான் அவனை ஒரு நல்ல மருந்தினைக் கொண்டுவரச் சொல்கிறேன்.”

    ரொக்ஸானா அலெக்சாண்டரை நோக்கிக் கூறினாள், “என் பிராண நாதரே! இவர் என் உடன்பிறவா சகோதரர். அந்த விவரங்களைப் பிறகு சொல்கிறேன். இப்போது இவருடைய மெய்க்காப்பளரை விடுவித்து இங்கு கொணர்ந்தால், உங்கள் தீராத வலிக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.”

    வலி நீங்கினால் போதும் என்ற நிலையில் இருந்த யவன மன்னன், அதற்கு ஒப்புதல் அளித்தான்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த மெய்க்காப்பாளன் செவியில் புருஷோத்தமன் ஏதோ கூறினான். அவனும் விரைந்து சென்று ஒரு களிம்பினை எடுத்துவந்து ரொக்ஸானாவிடம் கொடுத்தான்.

    அக்களிம்பினைத் தடவ விழைந்த அவளை, “நில், ரொக்ஸானா! முதலில் அம்மருந்தினை போரஸ் தன் புண்களில் தடவிக் காட்டட்டும். ஏனெனில் விரோதிகள் தங்கள் வைரிகளை நஞ்சு கலந்த விருந்தின் மூலமோ மருந்தின் மூலமோ கொல்ல முயற்சிப்பர்” என்று தடுத்தான் அலெக்சாண்டர்.

    ரொக்ஸானா அவன் சொன்னதை புருஷோத்தமனிடம் கூறி தன் காதலனின் சந்தேகத்தை நீக்கக் கோரினாள். புன்னகை முகத்தோடு அவனும் அவ்வாறே செய்தாள்.

    ‘போரஸுக்கு ஒன்றும் நேரவில்லையே. ஒருவேளை இக்களிம்பு உண்மையிலேயே சிறந்தது போலும்’ என நினைத்த அலெக்சாண்டர் அக்களிம்பினை தடவுமாறு அவளைப் பணித்தான்.

    ரொக்ஸானா மீண்டும் அந்த சேவையில் ஈடுபட்டாள். சில நொடிகளில் அலெக்சாண்டர் வலி நீங்கி பூரண குணமடைந்தான். மலர்ந்த முகத்தோடு, ‘”போரஸ், மிக்க நன்றி. இக்களிம்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?” என்று கேட்டான்.

    “சிகந்தர் அவர்களே! இது கத்தாழை எனப்படும் மூலிகைச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.”

    “அப்படியானால், அந்த மூலிகைச் செடியினை எனக்குக் கொடுங்கள். நான் அதனை எங்கள் நாட்டில் விளைவிக்க விரும்புகிறேன்.”

    “அது மிகவும் கடினம். எங்கள் பரத கண்டத்தின் தென்புலத்தில் உள்ள ‘திரமிள’ தேசத்தில்தான் இது விளையும். வேறு எங்கும் இதனை விளைவிப்பதற்கானச் சுற்றுச் சூழல் இல்லை. வேண்டுமென்றால் தாங்கள் இந்தக் களிம்பினை பெரிய அளவில் உங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.”

    “அப்படியா. ரொக்ஸானா இப்போது சொல். போரஸை எவ்வாறு நீ ‘அண்ணா’ என அழைக்கிறாய்?”

    அப்பாரசீகப் பேரழகி மலர்ந்த முகத்தோடு அந்த விருத்தாந்தத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

    ‘ திராவிட தேசத்தை’  அக்காலத்தினர் திரமிள தேசம் என்றே அழைத்தனர்.

    (தொடரும்)

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!..(பகுதி-2)

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    220px-Alexander_The_Greate_and_Roxane_by_Rotari_1756

    அலெக்சாண்டரின் திக்விஜயத்தில் தோல்வியுற்ற பாரசீக நாடுகளில் ஒன்றான பாக்டிரீயாவைச் சேர்ந்த நாட்டியக்காரி ரொக்ஸானா அவனுக்குக் கிடைத்த போர்ப்பரிசு. பாக்டிரீயாவை வீழ்த்தியதும் அதன் சிற்றரசன் அளித்த ஒரு மாலை விருந்தின்போது பதினாறு வயது நிரம்பிய அப்பேரழகியைக் கண்டவுடன் அவள் மீது மையல் கொண்டான் முப்பது பிராயத்தை எய்திய அலெக்சண் டர்,அவன் விருப்பத்தைப் புரிந்துகொண்ட பாக்டிரீயக் காவலன் அவளை அன்றிரவு மாசிடோனிய மன்னனின் கூடாரத்துக்கு அனுப்பி வைத்த்தும், அவளுடன் தான் அன்றிரவு நடத்திய சம்பாஷணைகளும் அவன் நினைவில் வந்ததும றக்கமுடியாதுதான்!

    அன்று அந்தக் கூடாரத்தில் உள்ள தீப்பந்த வெளிச்சத்தில், ரொக்ஸானா ஒரு தங்கச்சிலை போல் நின்றிருந்தாள். அலெக்சாண்டர் அந்த பதுமையின் அருகில் சென்று நோக்கினான். சற்றுமுன் பல இளம் பெண்டிர் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சியில் பார்த்தவளா இவள்! உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இப்பேரழகி உண்மையிலேயே எனக்கு ஒரு போர்ப்பரிசுதான்  என யோசித்தவாறு அவளைச் சுற்றி வந்தான். அவன் எண்ணத்தை அவள் பூரணமாக ஆக்கிரமித்தாள்.

    செம்பஞ்சு வண்ண மேனி, சிறிய பாதங்கள், அல்லித்தண்டுகளை ஒத்த கால்கள், குறுகிய இடை, பருவச் செழிப்பின் உந்துதலால் பூரித்திருந்த இனமலர்கள், கோலமயில் கழுத்து, அப்பொழுதே அலர்ந்த தாமரையை வெட்கிக்க வைக்கும் வதனம், படைத்த சிற்பியின் கைத்திறனால் நன்று செதுக்கப்பட்ட மூக்கு, செம்மை படர்ந்த இதழ்கள், தீக்‌ஷண்யமான கண்கள், மகுடம்போன்ற கரிய அளகம்… இவையெல்லாம் அவள் முன்னழகு என்றால், அவள் பின்னழகு அவனை மேலும் சொக்க வைத்தது.

    அந்த மெய்மறந்த நிலையில் அக்கூடாரத்தில் சற்று நேரம் மவுனம் ஆட்சி செய்தது. அவ்வமைதியை முடிக்கும் வகையில் அவள் பேசலுற்றாள்.

    “மாவீரரே! இப்போது  நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். தங்கள் இன்ப வேட்கைக்கு பலியாகத் தயாராக வேண்டுமா? எப்பொழுதெல்லாம் உங்களைப் போன்ற அரசர்கள் போர்வெறி கொண்டு ஒரு நாட்டை வீழ்த்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் காமவெறி கொண்டு பேதைப் பெண்களைத் துன்புறுத்துவதுதானே வழக்கம்!” என்று கண்ணீர் மல்கும் கண்களோடு தழுதழுத்த குரலில் கேவினாள் ரொக்ஸானா.

    ”பெண்ணே! என்னை ஏன் ஒரு காமாதுரனாக நினைக்கிறாய்? அழகினை ஆராதிக்கும் ஒரு இளைஞனாக ஏன் கருதக்கூடாது? மாலை விருந்தின்போது நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் உன்னைக் கண்டது முதல் என் மனம் என்னை உன் அடிமையாக ஆக்கிவிட்டது. நான் ஈராஸின் பாணத்துக்கு பலியாகிவிட்டேன். உன்னை முறைப்படி மணம்புரிய வேண்டும் என்பதே என் முடிவு, உனக்கு சம்மதமா? ஒரு உண்மையை உன்னிடம் கூறியாக வேண்டும். எனக்கு ஏற்கனவே இரு மனைவியர் உண்டு. அரசர்கள் பல தாரங்களை மணப்பது புதிதல்லவே. உனக்கு விருப்பம் இல்லை என்றால் உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். உன்னை மிக்க கவுரவமாக திருப்பி அனுப்பி வைப்பேன்.”

    அலெக்சாண்டரின் இந்த வெளிப்படையான கூற்று ரொக்ஸானாவின் மனத்தை நெகிழச் செய்தது.

    ”எனக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்டமா? மாமன்னர் அலெக்சாண்டருக்கு இந்த அபலை நாட்டியக்காரி மீது காதலா? இது என்னை ஏய்க்கும் பொருட்டு கூறப்படும் உபசார வார்த்தைகளா அல்லது மெய்யான சொற்களா?”

    “பெண்ணே உன் பெயர் என்ன? நான் கூறுவது இறைவன் மீது ஆணையாக முற்றிலும் உண்மை. உன் ஒப்புதலுடன் உன்னை என் பட்டமகிஷியாக்கிக் கொள்ளவே நான் விரும்புகிறேன்.”

    ”மன்னர் மன்னரே, என் பெயர் ரொக்ஸானா. என்னை தங்கள் பட்டத்து ராணியாக்கப் போகிறீர்களா? உங்கள் மனைவியரும், உறவினர்களும், அரசாங்க ஆலோசகர்களும் மற்றும் உமது நாட்டின் சான்றோர்களும் இதனை ஒப்புக் கொள்வார்களா?”

    “ரொக்ஸானா, என் விருப்பத்திற்கு விரோதமாக என் அன்னை ஒலிம்பியா ஏதும் சொல்லமாட்டார். மற்றவர்கள் அபிப்பிராயத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நம்முடைய திருமணம் என் அன்னையின் முன்னிலையில்தான் நடக்கவேண்டும். அதுவரை நீ காத்திருக்க வேண்டும்.”

    “என் மனத்திற்கு இனியவராகிவிட்டவரே, மணம் எப்போது நடந்தாலும், இனி நான் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுக்குத்தான் சேவை செய்வேன். நீங்கள் எங்கு சென்றாலும் நானும் ஒரு தோழியாக உங்களை நிழல்போல் தொடர்வேன்.”

    “ரொக்ஸானா, மிக்க மகிழ்ச்சி, நீ என் கூடவே இருந்தாலும், நம் திருமணம் நடக்கும்வரை  நான் வரம்பு மீறமாட்டேன்,  ‘இது உறுதி’  என்றான் அலெக்சாண்டர்.

    “எத்தனை உத்தமமானவர் நீங்கள்!” என்றாள் அவள் ஒரு பெருமூச்சோடு.

    அன்றிலிருந்து அப்பாரசீகப் பேரழகி அலெக்சாண்டரின் பாசறையிலேயே வசித்தாள். அவ்வப்போது அவன் கூடாரத்துக்குச் சென்று அவனுக்கு உணவளிப்பது, போர்க்காயங்களுக்கு களிம்பு தடவுவது, உரிய காலத்தில் மருத்துவர் சொல்லியபடி மருந்துகளைக் கொடுப்பது, நடனம் மற்றும் இனிய பேச்சுகளால் அவனை மகிழ்விப்பது போன்ற சேவைகளைப் புரிந்து வந்தாள்.

    கூடாரத்தின் வாயிலில் ஒரு இனிமையான வாசம் வந்து அவன் மூக்கைத் துளைத்த்தும் அவன் நிகழ்காலத்துக்கு வந்தான். அங்கே ரொக்ஸானா நின்றிருந்தாள்.

    eros

     

    ”ஈராஸ்” கிரேக்கர்களின் காதல் தேவன்.

     

     

     

     

    (தொடரும்)

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி – 1)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    Alexander-The-Great-1

                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

     

     jhelum“இது நதியா அல்லது கடலா’’ என்ற ஐயப்பாடு எழும் அளவில், அகண்ட ஜீலம் நதி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த்து. பருவக்காற்றினால் உந்தப்பட்டு அடாது கொட்டித்தீர்க்கும் மழை அந்த சிந்து மஹாநதியின் உபநதியை மேலும் மேலும் வெள்ளப்பெருக்கில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. உச்சிப் பொழுதாக இருந்தாலும் கார்மேகக் கூட்டம் வானத்தையே மூடிவிட்டதால் இயற்கை வெளிச்சம் வெகு குறைவாக இருந்தது. ’சல…சல..’. என்ற பலத்த அரவத்துடன் அலைமோதும் வெள்ளம், ‘விர்…விர்…’ என்று வீசும் அதிவேகக் காற்றின் பேரொலி, மற்றும் வான்முகில்களின் உருமல் அந்த பிராந்தியத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.

    அத்தகைய கண்கொள்ளாக் காட்சியைத் தனது போர்க் கூடாரத்திலிருந்து வெளிவந்து அந்த மழையினூடே நனைந்து கொண்டே ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான் மாசிடோனிய மாமன்னன் அலெக்சாண்டர். ஜீலத்தின் கிழக்குக் கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பே பவுரவ நாட்டு மன்னன் புருஷோத்தமனுடன் நடந்து ஓய்ந்திருந்த போரில் அந்த யவன மன்னன் உடலை சிராய்த்திருந்த விழுப்புண்களின் வலியைக்கூட  ஓரளவுக்கு அக்காட்சி மறக்கச் செய்தது.

    ‘ஆஹா, எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ஹைடஸ்பெஸ்!**. இந்த உபநதியே இப்படியிருந்தால் இண்டஸ் (சிந்து மாநதி) எவ்வளவு பெரிதாக இருக்கும்! அப்புகழ்பெற்ற காஞ்ஜெஸ் (கங்கை மாநதி) எப்படியிருக்குமோ!’  என அவன் மனம் ஆலோசனையில் வீழ்ந்தது. ‘எப்படியாவது காஞ்ஜெஸ் சமவெளி நாடான மகதத்தையும் வெல்ல வேண்டும்’ என்ற ஒரு மனத்துடிப்பு வெளிப்பட்டது. சிந்து-கங்கை சமவெளி நாடுகளை வென்று கீழை நாடுகளையும் வீழ்த்தி தன் உலக ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டவேண்டும் என்பதே அவன் அவா.

    ஆனால் அவன் படைவீரர்களோ வீட்டு நினைவு மேலிட்டதாலும், மாதக் கணக்கில் போர் புரிந்து பல நாடுகளை வீழ்த்திய களைப்பினாலும் மேற்கொண்டு போரிட விரும்பவில்லை. அதுவும் தவிர ஜீலம் போரில் தாங்கள் இதுவரை கண்டறியாத யானைப்படையின் எதிர்த்தாக்குதலால் அவர்கள் சற்று அச்சம் அடைந்ததும் அவர்கள் உற்சாகக் குறைவுக்கு ஒரு காரணம். மகத சாம்ராட்டின் யானைப்படை பவுரவ மன்னனின் படையைவிட பல மடங்கு பெரியது என்ற தகவல் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.  மேலும் பரத கண்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த முல்லைப் பிரதேசத்தில் உள்ள மரக்கிளைகளில் தலை கீழாகத் தொங்கியவாறு தவம் செய்யும் யோகிகள் அவர்களுக்கு வியப்போடு அச்சத்தையும் ஏற்படுத்தினர். “ஐயோ! இவர்கள் மாயாவிகளோ என்னவோ, என்ன செய்வார்க்ளோ?” என்ற பயம் அவ்வீரர்களைப் பீடித்து, ’போதும் இந்த ஓயாத சண்டை’ என்று எண்ண வைத்தது.

    ’என்ன வீரர்கள் இவர்கள்! நான் இவர்களுக்கு என்ன குறை வைத்தேன்? கை நிறைய ஊதியம் கொடுத்ததோடல்லாமல் மாசிடோனியாவில் உள்ள இவர்கள் குடும்பத்தாருக்கு உணவுப் பொருட்களோடு எல்லா வசதிகளையும் இலவசமாக அளித்திருக்கிறேன். இவற்றைத் தவிர, எனது திக்விஜயத்தில் வீழ்ந்த நாடுகளில் சூறையாடப்பற்ற விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் இவர்களுக்கே ஈந்தும் இவ்ர்கள் ஏன் இப்படி எனது ஆணையை மீறி நாடு திரும்ப விரும்புகிறார்கள்? நன்றி கெட்ட ஜன்மங்கள்!’ என அலெக்சாண்டர் பற்களைக் கடித்தான்.

    அதே நேரத்தில், ஜீலத்தின் கீழ்க்கரையில் நடந்து முடிந்த அந்த உக்கிரமான போரில் ’தான் மெய்யாக வெற்றி பெற்றோமா?’ எனும் சந்தேகம் அவனுள் எழுந்தது. ’…இந்த நாட்டு மன்னன் எப்பேற்பட்ட வீரன்! என்ன உயரம், ஏழடி இருப்பானோ? அவன் முன் நான் ஒரு சித்திரக்குள்ளனே. போர் யானையின் மீது அமர்ந்து எவ்வளவு லாவகமாக அம்புகளையும் ஈட்டிகளையும் மாற்றி மாற்றி என் மீது எறிந்து என்னை இப்படிக் காயப்படுத்தி உள்ளான். குருதி சொட்டும் காயங்களுடன் தரையில் வீழ்ந்த என்னை ஏன் அவன் கொல்லவில்லை? அவனது தயக்கத்தைப் பயன்படுத்தித்தானே என் மெய்க்காப்பாளர்கள் அவனை சிறைபிடித்தனர்! அப்படி அவன் தயக்கம் காட்டாதிருந்தால் வெற்றி அவனுடையதாக இருந்திருக்கும் அல்லவா…’ என்றெல்லாம் அலெக்சாண்டரின் சிந்தனை ஓடியது.

    ‘கீழைநாட்டாரை எவ்வளவு குறைவாக எடை போட்டிருந்தோம். இங்கு வாழும் மக்கள் காட்டுமிராண்டிகள் என்றும் இவர்களை வீழ்த்துவது மிக எளிது என்றல்லவா நினைத்திருந்தோம். நாம் இதுவரை கண்டிராத இவர் யானைப்படை எவ்வளவு நாசத்தை நம் படைகளுக்கு உண்டாக்கி விட்டிருக்கிறது. நஞ்சு தோய்க்கப்பட்டக் கணைகளைத் துதிக்கைகளால் எறிந்து அந்த யானைகள் எத்தனை சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக என் உயிருக்கு உயிரான புரவி பூசிபாலஸ் இப்படையின் யானையால்தான் கொல்லப்பட்டது. என் வலது கை போன்ற தளபதி நினேயியாவை இந்த யுத்தத்தில்தானே காவு கொடுத்தேன். இந்த என் வெற்றிக்கு எத்தனை பெரிய விலையைக் கொடுத்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இப்படை யானைகள் சகதியான தரையில் சரியாகக் கால் ஊன்றமுடியாமல் பவுரவ நாட்டுப் படைகள் மீதே திரும்பிப் பாய்ந்ததால் அல்லவா அவர்கள் பக்கமும் பலத்த இழப்பு ஏற்பட்டது. கடந்த மாதங்களில் கிரேக்கம், எகிப்து, சிரியா, மத்தியதரைக் கடல் நாடுகள், பாரசீக நாடுகளெல்லாம் எவ்வளவு எளிதாக என்னிடம் சரண் அடைந்தன! இங்கு மட்டும் என் பராக்கிரமம் ஏன் செல்லவில்லை..?.’ என்று எண்ணி அந்த யவன அரசன் மனம் ஒடிந்து போனான்.

    ‘மேலும், பவுரவ நாட்டின் விரோதியான தக்‌ஷசீல சிற்றரசன் அம்பியின் உதவியில்லாமல் இந்த ஹைடஸ்பஸின் மேற்குக் கரையைக் கடந்து அதன் கீழ்க்கரையில் இப்போரினை நடத்தியிருக்க முடியுமா? பொற்குவைகளால் அவனை மயக்கி அல்லவா நான் கைபர் கணவாய் வழியாக இந்த பரத கண்டத்தில் கால் வைத்தேன். பவுரவ நாட்டிற்கு இந்த நதி இயற்கை அளித்துள்ள பெரிய அரண். அம்பியின் யோசனைப்படி இரவோடு இரவாக ஜீலத்தின் வடக்கு திசை நோக்கி படைகளை நகர்த்தி அகலக்குறைவான ஓரிடத்தில் பரிசல்கள் மூலம் கீழ்க்கரைக்கு வந்து சேர்ந்திராவிட்டால் மழை ஓயும்வரை நம்மால் எதுவும் செய்திருக்க முடியாது.’

    இவ்வாறெல்லாம் ஆலோசனை செய்த அலெக்சாண்டருக்குத் தன் ஆசான் அரிஸ்டாடில் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது: ‘கீழைநாட்டவர்கள் ஆன்மீக பலம் மிகுந்தவர்கள். அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல.’ மேதை பிளாட்டோவின் முக்கிய சீடரான அவரது மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதனை உணர்ந்த நிலையில், மழையில் அதிக நேரம் நனைந்ததால் ஏற்பட்ட விழுப்புண்களின் வலி தாங்கமுடியாமல், உள்ளே வந்து மஞ்சத்தில் வீழ்ந்தான்.

    “யாரங்கே? ரொக்ஸானாவைக் கூப்பிடுங்கள்” என்று உரத்த குரலில் கர்ஜித்தான்.

     “ஜீலம் நதி”  கிரேக்கர்களால் “ஹைடஸ்பெஸ்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

    (தொடரும்)

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-4)

     

    ராமஸ்வாமி ஸம்பத

    ”கண்ணா, நீங்கள் சொல்வதுபோல் தர்மன் என்னை அஸ்தினாபுர அரியணைக்கு உரியவனாக்கினாலும், என்னால் அந்த சிம்மாசனத்தில் அமரத்துடிக்கும் துரியோதனனுக்கு ஏமாற்றத்தை அளிக்க முடியாது. செங்கோல் என் கைக்குக் கிடைத்த உடனே அதனை துரியனுக்குத் தாரை வார்த்து விடுவேன். அது உங்களுக்கு சம்மதமாயிருக்குமா? மேலும், உங்களுக்கு எந்த அளவு தர்மம் முக்கியமோ அவ்வளவு எனக்கு என் தர்மமாகிய இடுக்கண் களையும் நட்பு முக்கியம். என்மீது அபரிமிதமான அன்பைப் பொழிவதோடு என்னை பூரணமாக நம்பியிருக்கும் துரியனை நான் எவ்வாறு கைவிட முடியும்? ’எல்லாவிதத்திலும் நட்பினால் பயனடைந்தபின் இறுதியில் ஆருயிர் நண்பனைக் கைவிட்டான் கர்ணன்’ என்ற அவலத்தை நான் சுமக்க வேண்டுமா? என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கோரிக்கையைத் தீர்க்க என்னால் இயலவில்லை,” என்றான் கர்ணன் முடிவாக.

    மீண்டும் அவனுக்கே உரித்த மோஹனப் புன்னகையை உதிர்த்தான் கண்ணன். “எழுதிவைத்த விதியை ஈசனாலும் மாற்ற முடியாது என்பது சான்றோர்களின் வாக்கு. உன் மெச்சத்தகுந்த நிலைப்பாடு எனக்கு ஒருவிதத்தில் பெருமையாக இருக்கிறது. நீ குந்தியின் மகனல்லவா! அதனால்தான், உன் நிர்ணயம் ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதனை உலகுக்கு கொட்டி முழக்கும் வகையில் அமைந்துள்ளது. நான் வேண்டுமென்றே உனக்கு வைத்த சோதனையில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நாளைக்காலை உன்னை ஈன்ற அன்னை உன்னிடம் வரம் கோரி வருவாள். அவள்மீது சினம் கொள்ளாமல் அவள் நிலையைப் புரிந்து கொண்டு அவளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு செய்வாயாக,” என்ற கண்ணன், “வரம்வேண்டி உன்னிடம் வந்தேன். இப்போது நானே உனக்கு வரம் அளிக்க விழைகிறேன். கேள் கர்ணா,” என்றுரைத்தான்.

    “நன்றி கண்ணா, நான் உங்களிடம் வேண்டுவது ஒரே ஒரு வரம்தான். தயவு செய்து நான் மூத்த பாண்டவன் என்பதனை அவ்வைவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான் கர்ணன் நீர்மல்கிய கண்களோடு.

    ”அப்படியே ஆகட்டும். நீ தன் முதல் புத்திரன் என்பதனை உலகுக்கு குந்தி மஹாராணியே பறைசாற்றுவாள். உன் உயர்ந்த உள்ளத்துக்கு இன்னொரு வரம் தர விரும்புகிறேன். கேள்.”

    ”கண்ணா, என்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் உங்களைப் பாராட்ட என்னிடம் சொற்களே இல்லை. உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவனை அவன் தந்தையின் தொழிலைக் கொண்டு இகழ்வது எவ்வகையில் நியாயம்?”

    “கர்ணா, ‘செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்பதனை உணராத அற்பர்கள்தான் அப்படித் தூற்ற முனைவார்கள். எத்தனையோ பேர் என்னை மாட்டிடையன் என்று எள்ளி நகையாடினார்கள் என்பது உனக்குத் தெரியாததல்ல. ராஜசூய யாகசாலையில் பன்னாட்டு மன்னர்கள் குழுமியிருந்த சபையில் என்னை பசுபாலன் என்று பழித்தான் சிசுபாலன். அத்தகைய ஈனமானவர்களை பொருட்படுத்தக் கூடாது,”

    “தெரியும் கண்ணா1 ஆனால் நான் அனுபவித்த வேதனை….’தேரோட்டி மகன், தேரோட்டி மகன்’ என கணக்கற்ற முறையில் என்னை இகழ்ச்சி செய்தார்களே..  என் வளர்ப்புத் தந்தை அதிரதன் ஒரு தேரோட்டி என்பது அவர் செய்த தவறா? தேரோட்டுவது இழிசெயலா? சொல் கண்ணா!.” உணர்ச்சிகளுக்கிடையே கண்களில் நீர்மல்கக் கேட்டு நின்ற ராதேயனை [கர்ணனின் வளர்ப்புத் தாயின் பெயர் ராதை என்பதால் அவன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான்] வருத்தமாகப் பார்த்தான் கண்ணன்.

    ”கவலைப் படாதே கர்ணா! எதற்கும் ஒரு தீர்வு உண்டு.. நீ எதை இழிநிலை என நினைத்து வருத்தப் பட்டாயோ, பிறர் எதை வைத்து உன்னை இழிவாகப் பார்த்தனரோ, அவைகளுக்கும் ஒரு முடிவுண்டு” என்று கூறி விடைபெற்றுக் கொண்டான் கண்ணன்….
                               
    நினைவலைகளின்று வெளிப்பட்ட கர்ணன், மானசீகமாகக் கண்ணனை வணங்கினான். ராஜசூய யாகத்தில் பங்குபெற்ற அந்தண சிரேஷ்டர்கள் விருந்து உண்டபின் அவர்கள் விட்டுச்சென்ற எச்சில் இலைகளை எவ்வளவு பவ்யத்துடன் கண்ணன் சேகரித்து ஆற்றில் கொண்டு சேர்த்தான் என்பதனை நினைவு கூர்ந்தான். “கண்ணா, இது என்ன விபரீதம்?” என்று கேட்டபோது. ”நான் எச்சிக்கலையும் எடுப்பேன்,” என்ற அவன் பதில் கர்ணன் செவிகளில் மீண்டும் ஒலித்தது.

     “எச் சிக்கலையும் எடுக்க வல்லவரல்லவா இந்த வாசுதேவர்! தானே தேரோட்டியாகி, தேரோட்டும் தொழிலை வானளவுக்கு உயர்த்தியோடு மட்டுமல்லாமல் என்னுடைய ‘தேரோட்டி மகன்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் எவ்வளவு லகுவாகத் தொலைத்திருக்கிறார் இந்த பார்த்த சாரதி!”  என்று மனதார அவரை வியந்து வாழ்த்தியதோடு, “இந்த விஜய சாரதியிடம் சரணடைந்த பாண்டவர்கள்  எவ்வளவு பாக்யசாலிகள்! எங்கு கண்ணன் இருக்கிறாரோ அங்கு வெற்றிச் செல்வியும் கடாட்சிப்பாள் என்பதனை உணர மறுக்கிறானே துரியன்” என்று பச்சாதாபம் கொண்டான் அங்க நாட்டரசன்.

    கர்ணன் மனம் துரியோதனனுக்காக ஒரு கணம் பரிதாபப்பட்டாலும் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து செயல்பட்டு தர்மத்தைக் காத்து வரும் கண்ணனின் கருணையையே நினைத்து நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கியது.
                             

    (முற்றும்)

    படங்களுக்கு நன்றி :

    http://www.tamilhindu.com/category/mahabharat/

     

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-3)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

    “அன்றிலிருந்து எங்கள் நட்பு மேலும் மேலும் மெருகடைந்து நகமும் சதையும் போல் இணைபிரியாதவர் ஆனோம். எம் நட்பின் நெருக்கம் என்னை அவன் அந்தப்புரத்திற்குள்ளும் தங்கு தடையின்றி செல்லக்கூடிய உரிமையை அளித்தது. அஸ்தினாபுரத்தின் வருங்கால மஹாராணி எனக்கருதப்பட்ட இளவரசி பானுமதியுடன் நான் சொக்கட்டான் ஆடுவதையும் துரியன் வெகுவாக ரசித்தான்.

    “அவ்வாறு ஒருநாள் அவளுடன் தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அங்கு வந்த தன் நாயகனைக் கண்டு பானுமதி மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். அதை அறியாத நான் ‘ஓஹோ, தோல்விக்குப் பயந்து ஓட நினைக்கிறாயா?’என்று அவளைப் பிடித்து நிறுத்த முயன்றபோது அவள் மேகலாபரணம் சிதைந்து அதில் உள்ள முத்துக்கள் நாலாபுறமும் சிதறி ஓடின. அப்போது துரியன் மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கி ‘கர்ணா, முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?’ என்றான். கண்ணா, இப்போது சொல்லுங்கள். எந்த கணவன், அதுவும் இந்நாட்டின் அரசனாகப் போகிறவன், இப்படி கல்மஷம் இல்லாமல் நட்பைப் போற்றி நடந்துகொள்வான்? இந்த நிகழ்வு ஒன்று போதாதா எங்கள் நட்பின் ஆழத்தினைப் புரிந்துகொள்ள?”

    “நன்று கர்ணா, உண்மை நட்பின் இலக்கணத்தை உங்கள் இருவரின் தோழமை பறைசாற்றுகிறது. எனினும் அறம் பெரிதா நட்பு பெரிதா எனக்கேட்பின் தர்மத்திற்கே முதலிடம் கொடுக்கப் படவேண்டும். அதனையே உன்னிடம் யாசிக்கிறேன்,” என்றான் கண்ணன்.

    சினத்தில் கர்ணன் முகம் சிவந்தது. “நீங்கள் ’பாண்டவ பக்‌ஷபாதி’ என்பது அனைவரும் அறிந்ததல்லவா? அவ்வைவருக்காகத்தானே என்னை துரியனிடமிருந்து பிரிக்க முயலுகிறீர்கள்?”

    ”இல்லை கர்ணா! உன்னை உரியவர்களிடம் சேர்க்கத்தான் துடிக்கிறேன்.”

    கண்ணனின் கூற்று கர்ணனுக்கு விளங்கவில்லை. “என்ன, எனக்கு உரியவரா? யார் அவர்கள்? என்னை உயிருக்கும் மேல் நேசிக்கும் துரியோதனன்தான் எனக்கு உரியவன். இந்தத் தேரோட்டி மகனான ராதேயனுக்கு வேறு எவரும்  உரியவர்கள் இல்லை,” என்றான்.

    “அப்படி சொல்லாதே கர்ணா. உன் பிறப்பின் ரகசியம் உனக்குத் தெரியாது. அது தெரிந்தால் நீ இப்படி அதர்மத்திற்கு அடிவருடமாட்டாய்.”

    “என் பிறப்பின் ரகசியத்தை நீங்கள் அறிந்திருந்தால் அதைத்தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்தான். ஆனால் அதற்கும் துரியனுடன் என் நட்புக்கும் என்ன இணைப்பு?”

    கண்ணன் மிக நிதானமாகப் பேச ஆரம்பித்தான்.

    “கர்ணா! உனக்கு மிக்க அதிர்ச்சி அளிக்கப்போகும் அந்த ரகசியத்தை இப்போது வெளிப்படுத்துகிறேன். நீ மூத்த பாண்டவன். மஹாராணி குந்திக்கும் கதிரவனுக்கும் பிறந்தவன். நீ பாண்டவர்களுடன் இருக்கவேண்டியவன். ஆனால் நீயோ அதர்மத்தின் உருவான துரியனின் முகாமில் இருக்கிறாய்.”

    கண்ணனின் இக்கூற்றினைக் கேட்ட கர்ணனுக்குத் தொண்டையில் ஒரு அடைப்பு ஏற்பட்டதுபோல் இருந்தது. பூமி தன் கால்களைவிட்டு நழுவதுபோல் தோன்றியது. தன் முன் ப்ரபஞ்சமே சுற்றுவது போல உணர்ந்தான். ‘நான் குந்தி புத்திரனா?…..நான் குந்தி புத்திரனா?’ என்ற கேள்விக்கணைகள் அவன் உள்ளத்தை துளைக்கத் தொடங்கின.

    “கண்ணா, என்னைக் குழப்புவதற்காக தாங்கள் பிரயோகிக்கும் மாயை இது என நினைக்கிறேன். இதற்கு என்ன ஆதாரம்?” என்றான்.

    “இதற்கான ஆதாரத்தை நாளை காலை என் அத்தையே உன் ஜன்ம விருத்தாந்தத்தைக் கூறி உன் முன் வைப்பாள். நான் சொல்வதை நம்பு. இவ்வுண்மை சூரியனுக்கும் மஹாராணி குந்திக்கும் எனக்கும் விதுரர் மற்றும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரியும். பாண்டவர்களுக்குக்கூட இது தெரியாது. தெரிந்தால் தர்மபுத்திரன் உன்னையே அஸ்தினாபுரத்து அரசனாக்கி விடுவான். ஐவருக்கு ஊசிமுனை அளவு நிலம் கூட கொடுக்கமாட்டேன் என்று கொக்கரித்த துரியனும் உன்னை அஸ்தினாபுர அரசனாக்க அங்கிகாரம் அளித்து விடுவான். நாளை நடக்க இருக்கும் குருக்‌ஷேத்திரப் போரும் தொலைந்துவிடும். அப்படிப்பட்ட அமைதி நிலவவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு உன் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்” என்று கண்ணன் அடுக்கிக்கொண்டே போனான்.

    “இந்த உண்மையை இத்தனை நாள் ஏன் மறைத்து வைத்தீர்? என்னை எல்லோரும் தேரோட்டி மகன் என்று இழிவாக அழைத்த காலத்தில் நீங்கள் ஏன் அதனை மறுக்க முற்படவில்லை? இப்போது என்னை ஏன் குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்?”

    “குழப்பம் தேவையில்லை கர்ணா. உண்மையை என்றும் மறைக்க முடியாது. எவ்வாறாகிலும் அதற்குரிய நேரத்தில் தக்க சூழ்நிலையில் அது வெளிப்பட்டே ஆகவேண்டும். அத்தருணம் வந்துவிட்டது இப்போது.”

    “விதி சதி செய்து என்னை என் சகோதரர்களுக்கு எதிராக போரிட வைத்துள்ளதே! ’அண்மையில் வெளிப்பட்ட உடன்பிறப்புகளா அல்லது நெடுநாளைய உற்ற நண்பனா?’ என்ற கேள்வியால் நான் ஒரு  தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் பட்டுள்ளேனே. கண்ணா, இது என்ன கொடுமை? நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த ரகசியத்தை என்னிடம் ஏன் கூறினீர்கள்?”

    “நீ ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், நாம் எப்பாடுபட்டும் நலிந்த தர்மத்தை நிலைநாட்டவேண்டும். இதுதான் என் எண்ணம். அவ்வெண்ணம்  வெற்றி பெறவே இந்த முயற்சி. அது பலிப்பதற்கு உன் ஒத்துழைப்பு தேவை கர்ணா.”

    கண்ணனின் இக்கூற்று மூத்த கெளந்தேயனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் விரைவில் தெளிவு பெற்றான். சில நொடிகள் அமைதியாக இருந்தபின் கர்ணன் பேசலுற்றான்.

     (தொடரும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.tamilhindu.com/2010/06/chariot-great-hindu-cultural-symbol/

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-2)

    ராமஸ்வாமி ஸம்பத்

    “யாரது துவரகாதீசரா?” என்று வினவிய கர்ணன், “தாங்களா இந்த எளியேனிடம் வரம் கோரி வந்திருப்பது? தங்களிடம் இல்லாதது எதேனும் இந்த தேரோட்டி மகனிடம் இருக்குமா?” என ஆச்சரியத்துடனும் ஏளனத்துடனும் கேட்டான்.

    “ஆம் கர்ணா! உன்னிடம் தர்மத்திற்காக யாசிக்க வந்திருக்கிறேன்.”

    “கண்ணா, நீங்கள் மாயாவி என்பது ஜகப்பிரசித்தம். இந்நேரத்தில் யார் எதனை விரும்பினாலும் அளிப்பேன் என்பதனைத் தெரிந்துகொண்டுதானே இங்கு வந்துள்ளீர்? நீங்கள் யாசிக்கும் முன் நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எனக்கும்  என் இனிய நண்பனான துரியோதனனுக்கும் இடையே மித்திரபேதம் செய்ய முயலாதீர்.”

    “கர்ணா! நீ ’தானவான்’ எனப்பெயர் பெற்றுவிட்டாய். ‘கர்ணனுக்கு மிஞ்சிய கொடை வள்ளல் யாரும் இல்லை’ என்று உன்னை உலகம் புகழ்கிறது. தானவானாகிய நீ ’தர்மவான்’ என்று கீர்த்தி அடையவேண்டாமா?”

    ”நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?”

    கண்ணன் சற்று அமைதியாக இருந்தான். பின்னர், “கர்ணா! தர்ம-அதர்மங்கள் பற்றி உனக்கு நான் விவரிக்க வேண்டியதில்லை. உனக்கும் அவை தெரியாததல்ல. விதிவசத்தால் நீ அதர்மத்திற்குத் ஆதரவு தரவேண்டிய  நிலையில் உள்ளாய். தர்மத்தைச் சார்ந்து நிற்கும் பாண்டவர்களுக்கு துரியோதனன் துவேஷ பாவத்தோடு தீமை இழைக்க நினைக்கிறான். அப்படிப் பட்டவனுக்கு நீ துணைபோகலாமா?” என்றான்.

    ”கண்ணா, பாண்டவர்கள்மீது என் இனிய நண்பன் துரியோதனனுக்கு மிக்க வெறுப்பு இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய அரியணை ஏறும் ஆசைக்கு அந்த ஐவர் ஒரு தடையாக இருப்பதாக நினைத்து அவர்களை வெறுக்கிறான். எனினும் என் நண்பனின் எதிரிகள் எனக்கும் விரோதிகளே,” என்றான் கர்ணன்.

    “துரியோதனன் உன் உயிர்த்துணைவன் என்பதனை நான் அறிவேன். ஆனால் உண்மை நட்பின் இலக்கணத்தை நீ மறந்து விட்டாய். நட்பு என்பது  சிரித்து சல்லாபம் செய்வதற்கு மட்டும் பொருந்தாது. ஒருவன் தன் நண்பன் தவறு செய்யும்போது அதனைச் சுட்டிக்காட்டி, தேவையானால் உரிமையோடு இடித்துக்காட்டவும் சித்தமாக இருக்கவேண்டும். அதனை நீ செய்யத் தவறி விட்டாய்.”

    “கண்ணா, நீங்கள் எதனைச் சுட்டிகாட்டுகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் மாமன்னர் திருதாஷ்டிரர் முன்னிலையில் நடந்த சூதாட்ட்த்தில் சகுனி மாமா தர்மபுத்திரனைத் தோற்கடித்து அவரையும் அவர் தம்பிமார்களையும் பாஞ்சாலியையும் துரியனுக்கு அடிமைகள் ஆக்கிய சம்பவம் எனக்கும் ஒப்புதல் இல்லைதான். மாயச் சூதாடி அவர்கள் உடைமைகளைப் பறித்துப் பெற்றது ஒரு ஈனமான வெற்றி என்றே நான் கருதுகிறேன். அதைவிட ஐவருடன் போரிட்டு அவர்களை புறமுதுகிடச் செய்து இந்திரப்ரஸ்தத்தைக் கைப்பற்றி இருந்தால் துரியனை உலகமே போற்றியிருக்கும். என் வார்த்தைகளை அவன் கேட்கவில்லை. சகுனி மாமாவின் குறுக்குவழி அவனைக் கவர்ந்துவிட்டது,” என்ற கர்ணனை கண்ணன் இடைமறித்தான்.

    ”அது போகட்டும். பாண்டவமகிஷியான பாஞ்சாலியை அந்த மன்னர் அந்த மாபெரும் சபைதன்னில் மானபங்கம் செய்யத் தூண்டியது நீ தானே? அது எவ்வகையில் நியாயம்?”

    “கண்ணா, துரியோதனனை மகிழ்விப்பதுதான் எனது முதல் குறிக்கோள். இந்திரப்ரஸ்தத்தில் ராஜசூய யாகத்திற்குப்பின், அவன் தங்கியிருந்த மாளிகையில்  மயனால் நிர்மாணம் செய்யப்பட்ட விடுதியில் பாஞ்சாலியால் பரிகாசம் செய்யப்பட்ட நிகழ்வு அவன் மனதில் ஆழமாகப் பதிந்து, அவளைப் பழிவாங்கவேண்டும் என்ற ஒரு வெறி துரியனுக்கு ஏற்பட்டிருந்ததை நான் அறிவேன். அப்படிப் பழிவாங்கிவிட்டால் அவன் உள்ளம் உவகையடையும். அவனுக்கு அந்த மகிழ்ச்சி கிட்ட வேண்டும் என்று கருதியே நான் அவ்வாறு நடந்துகொண்டேன். அது அநீதி என்று தெரிந்தும் நண்பனின் மகிழ்ச்சிக்காக அப்பாபத்தினைச் செய்ய முற்பட்டேன்.”

    “பார்த்தாயா கர்ணா அப்பாபத்தின் விளைவை? எண்ணித் துணிக கருமம் என்று சான்றோர்கள் வெறும் வார்த்தை ஜாலமா செய்தார்கள்? துரியனுக்கு மகிழ்வூட்டுவதாகக் கருதி அவனை எமலோகத்தின் வாயிலுக்கே அனுப்ப முனைந்திருக்கிறாயே!”

    “என்னைப்போண்ற மஹாரதிகள் துரியனுக்குத் துணை நிற்கும்வரை அது ஒருநாளும் நடவாது. மாறாக பாண்டவர்களை நான் ஒருவனே எமனுக்கு இறையாக்குவேன்.”

    இதைக்கேட்ட கண்ணன் மோஹன புன்னகை புரிந்தான். ”அங்க அரசனே! உன் தன்னம்பிக்கை போற்றுதற்குரியதே. ஆயினும், நீ தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வினாலும் எப்படியும் தர்மம் மட்டுமே வெல்லும் என்பதனை மறந்து விட்டாயா?” என்றான்.

    ”கண்ணா, தர்மம் அதர்மம் என்ற கவைக்கு உதவாத விஷயங்களைப் பேசி என்னைக் குழப்பவேண்டாம். எனக்குத் தெரிந்த ஒரே தர்மம் என் ஆருயிர் மித்திரனைச் சார்ந்திருப்பதே,” என்று கர்ணன் உறுதியாக உரைத்தான்.

    கர்ணனின் நட்பு வெறி கண்ணனை வியக்க வைத்தது. “உன்னைப் போன்றவர் நட்பைப்பெற துரியோதனன் என் நோற்றான் கொலோ! உன்னை அங்கதேச அரசனாக்கினான் என்பதால் அவனை உன் எஜமானனாகக் கொள்வதில் தவறில்லை. அதுகூட உன்னைப் பாண்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் முயற்சிதான். ஆனால் இப்படிப்பட்ட கண்மூடித்தனமான விசுவாசம் தேவை தானா?” என வினவினான்.

    பனித்த விழிகளோடும் தழுதழுத்த குரலோடும் கர்ணன் கூறலுற்றான். “கண்ணா, எனக்கும் துரியனுக்கும் உள்ள நட்பின் ஆழம் புரிய என் பழங்கதையை உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கெளரவர்களும் பாண்டவர்களும் ஆச்சாரியர் துரோணரிடம் குருகுலவாசம் முடிந்ததும், மாமன்னர் திருதராஷ்டிரர் முன்னிலையில் தங்கள் தங்கள் போர்த்திறணை ஒரு போட்டி மூலம் தெரியப்படுத்தினர். அதன் இறுதியில் ‘வில்லுக்கோர் விஜயன்’ என்ற விருதினை துரோணாச்சாரியர் பார்த்தனுக்கு வழங்கினார். அவ்விழாவில் பார்வையாளனாக இருந்த நான் எழுந்து, ’அர்ஜுனன் என்னோடு விற்போட்டியிட்டு என்னை வெல்லும்வரை இந்த விருதுக்கு அருகதையற்றவன்’ என்று கூவினேன். அதனைக்கேட்ட பீமன் ஒரு தேரோட்டி மகனுக்கு அரசகுமாரனுடன் போட்டியிட உரிமையில்லை என கர்ஜித்தான். அந்த நேரத்தில்தான் துரியோதனன் எனக்கு அங்கதேச மன்னனாக ராஜ்யாபிஷேகம் செய்வித்தான். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஆச்சாரியர் என் அரசபரம்பரைபற்றிச் சொல்லச்சொன்னார். என் மூலம் தெரியாத நான் விழித்தேன். ‘க்‌ஷத்திரியன் இல்லாத நீ ஒரு அரசகுமாரனோடு எவ்வாறு போட்டியிட முடியும்?’ எனக்கேட்டு என்னை ஒதுக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து பீமன் ‘தேரோட்டிமகனே வெளியே போ’ என்று கூச்சலிட பல பார்வையாளர்களுட்ம் அவனுடன் சேர்ந்து கோஷமிட்டனர். அவமானத்தில் கூனிக்குறுகிப்போன என்னை துரியன் அணைத்தவாறு தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

    (தொடரும்)

    சித்திரத்துக்கு நன்றி:

    http://4.bp.blogspot.com/-YLd7LRURDcc/T72NXtbwO2I/AAAAAAAAAHU/XGeohOTO3AI/s1600/krishna1.jpg

    Share