Tag: ராமஸ்வாமி ஸம்பத்

  • ராமன் வரும் வரை காத்திரு – முடிவுரை

        ராமஸ்வாமி ஸம்பத்

                                                                         முடிவுரை

    ”ஒரு எழுத்தாளர் கதையை எழுத ஆரம்பித்தபின் அக்கதையே அவரை ஆட்கொண்டு தன்போக்கில் அவரை எழுதவைக்கும்” என்று பேராசிரியர் கல்கி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். அதற்கு தன் அனுபவத்தையே மேற்கோளாகக் காட்டினார். ‘சிவகாமியின் சபதம்’ என்னும் வரலாற்று நெடுங்கதையை அவர் எழுத ஆரம்பித்தபோது நாகநந்தியெனும் பாத்திரத்தை ஒரு வழிப்போக்கனாகத்தான் அறிமுகம் செய்ய இருந்தாராம். ஆனால் கதை உருவெடுக்கும்போது நாகநந்தி ஒரு முக்கிய கதாபாத்திரமாகப் பரிணமித்து புலிகேசியின் அண்ணன் நீலகேசியாக மாறிவிட்டாராம். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ எனும் வரலாற்று நவீனத்தில் சேந்தனமுதன் என்னும் பாத்திரம் தஞ்சைத் தனிக்குளத்தார் ஆலயத்தில் புஷ்பகைங்கர்யம் செய்பவனாகத் துவங்கி இறுதியில் செம்பியன் மாதேவியாரின் ‘திருவயிறு உதித்த’ மதுராந்தக உத்தம சோழராக மாறிவிட்டதும் தன்னை மீறிய செயல் எனக்குறிப்பிட்டார் கல்கி   அதே நவீனத்தில் அவர் பிற்காலத்தில் ராஜராஜ சோழன் எனப்புகழ்பெற்ற அருள்மொழி வர்மன் தனக்கு எல்லாரும் மிக்க விரும்பி அளித்த மகுடத்தைத் திரஸ்கரித்து அதனை மதுராந்தகனுக்கு சூட்டியதை சிலாகித்து அந்த இறுதிப் பகுதிக்கு ‘தியாகசிகரம்’ என்று தலைப்பினை அளித்திருந்தார். பேராசிரியரின்  நோக்கம் அருள்மொழியின் வரலாற்றுப் புகழ்பெற்ற தியாகம் வாசகர்களின் மனத்தில் நிலைக்க வேண்டும் என்பதே. ஆனால் வாசகர்களின் மனத்தில் நிலை பெற்றது என்னவோ வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் பாத்திரமே.

    ‘ராமன் வரும் வரை காத்திரு…’ எனும் இத்தொடரை எளியேன் எழுத நினைத்தபோது ராமாயண காவியத்தில் எத்தனை பாத்திரங்கள் அவனுக்காகவும் ராமகாரியத்தில் உதவுவதற்காகவும் காத்திருந்தன என்பதனை ஒரு பட்டியல் போட்டு இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் முடித்துவிடலாம் எனக்கருதித் தொடங்கினேன். ஆனால் அது என் கைமீறி பதினைந்து (இந்த முடிவுரையையும் சேர்த்து) பகுதிகளில் கிட்டத்தட்ட மொத்த ராமகாதையையே சொல்ல வைத்துவிட்டது. இது ஸ்ரீ ஸீதாராமன் கிருபையால் மட்டுமே சாத்தியம். ஏனெனில், நான் பண்டிதன் அல்ல. வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் முழுவதையும் மற்றும் ஏனைய காண்டங்களில் சில சர்கங்களை மட்டும் படித்தவன் நான. அதேபோல் கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்ததில்லை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘சக்ரவர்த்தி திருமகன்’, மற்றும் ‘Ramayana’ என்ற நூல்களை முழுமையாகப் பலமுறை படித்திருக்கிறேன். மற்றபடி பிரபல பெளராணிகர்களான அண்ணாசாமி பாகவதர், எம்பார் விஜயராகவாசாரியார், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி, தூப்புல் லக்ஷ்மிநரசிம்மன், வேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோரது தமிழ் உபன்யாசங்களையும் ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் அப்பாலாசார்யுலு, மல்லாடி சந்திரசேகர சாஸ்திரி, சாகண்டி கோடீஸ்வரராவ், சாமவேதம் ஷண்முக சர்மா முதலானோரின் தெலுங்கு காலக்ஷேபங்களையும் கேட்ட பாக்கியத்தால் ராமாயணத்தில் புதைந்திருக்கும் தர்ம சூக்ஷ்மங்களையும் ஆன்மீக ரஹஸ்யங்களையும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன். ”ஒருவன் தர்மத்தின் மார்கத்தில் நடந்தால் மிருகங்கள், பட்சிகள், ஏன் அணில் கூட, அவனுக்கு உதவிக்கரம் நீட்டும். அறநெறி வாழ்க்கைக்கு புறம்பாக நடக்கும் ஒருவனை அவன் உடன்பிறப்பு கூட கைவிட்டுவிடுவான்”  என்று ராஜாஜி அவர்கள் ராமாயண சூக்ஷ்மத்தை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

    இந்த தொடரை உன்னிப்பாகப் படித்துவந்த இனிய நண்பர் லக்ஷ்மிநாராயணன் ஒரு நாள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஸ்ரீ தியாகராஜரின் ‘மோஹன ராமா’ எனும் மோஹன ராக கீர்த்தனையில் வரும் சரணத்தைச் சுட்டிக்காட்டினார். அதன்படி ராமனின் திருமேனி அழகைக் காண எவரெவரெல்லாம் பூமியில் பிறந்தார்கள் என்று தியாகராஜர் இவ்வாறு கூறுகிறார்: ‘தரமனுஜாவதார மஹிம வினி சுர கின்னர கிம்புருஷ வித்யாதர சுரபதி விகி விபாகர சந்திராதுலு கரகுச்சு பிரேமதோ வர மிருக பக்ஷி வானர தனுவலசே கிரினி வேலயு ஸீதாவர! சிரகாலனு குறி தப்பக மெய்மறச்சி ஸேவிசிரி…’ [(ராமா) உன் உருவம் விவரிக்க முடியாத அளவில் என்னை ஈர்க்கிறது. ஸீதை மணாளனே! உன்னுடைய மானுட ரூபத்தின் மஹிமையைக் கேட்டறிந்து, ஆயிரக்கணக்கான தேவர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், வித்யாதரர்கள், பிரமன், இந்திரன், சூர்யன், சந்திரன் முதலானோர் பொங்கிவழியும் அன்போடு தாங்களாகவே இப்புவியில் விதவிதமான மிருகங்களாகவும், பறவைகளாகவும் வானரர்களாகவும் அவதரித்து உன் ரூப லாவண்யத்தை குறி தப்பாமல் இமை கொட்டாமல் பலகாலம் கண்டு மெய்மறந்து ஸேவித்து மகிழ்ந்தார்கள் அல்லவா….] ‘பும்ஸாம் மோஹன ரூபஹ’ என்று ராமனின் எழிலை சான்றோர்கள் வர்ணிப்பார்கள். அதாவது ஆண்களும் ‘ஆஹா! நாம் பெண்களாகப் பிறந்து இவ்வழகனை மணம் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று ராமனின் அழகை ஆராதிப்பார்களாம்!  செம்மொழியாம் தமிழில் இனிய ராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசல கவிராயர் ராமனின் திவ்ய ரூபத்தை முதன்முதலாகக் கண்ட விபீஷணனின் மனநிலையை இவ்வாறு வர்ணிக்கின்றார்: “ராமனைக் கண்ணாறக் கண்டானே, விபீஷணன் தன் மாமுடிமேல் வைத்துக் கொண்டானே!” அப்பேற்பட்ட மயக்கும் எழில் ராமனுடையது.

    இருபதிற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் மற்றும் அசேதனப் பொருட்கள் ராமன் வரும் வரை காத்திருந்ததைக் கண்டோம். இவற்றிற்கும் மேலாக எனது பட்டியலில் இரு பெரும் பாத்திரங்களான ராவண கும்பகர்ணர்கள் கூட ராமன் வரும் வரை காத்திருந்தார்கள் என்பது சேர்க்கப்பட வேண்டும். பண்டிதர்கள் இக்கருத்தை ஒப்புக் கொள்வார்களோ என்னவோ? சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்ஜாதர் என்னும் பிரம புத்திரர்களான யோகிகளின் சாபத்தால் பூமியில் பிறப்பெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினால் மும்முறை திருமால்மீது வைரபாவத்துடன் புவியில் தோன்றிய ஜயன் விஜயன் என்னும் வைகுந்த காவலாளர்கள் தமது இரண்டாம் ஜன்மத்தில் ராவண கும்பகர்ணர்களாக விளங்கி திருமாலின் மானிட அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவன் கையால் விடுதலை பெற்றனர் அல்லவா?

    கவியரசர் கண்ணதாசன் ‘வானம்பாடி’ என்னும் திரைப்படத்திற்காக “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்” என்ற ஓர் பாடலை காதலியைப் பிரிந்த காதலனின் புலம்பலாக இயற்றினார். திருமால் ராமன் எனும் ஓர் மானிடனாக அவதரித்து இருமுறை தன் இனிய மனைவி ஸீதையை பிரிந்து பட்ட துயரத்தை அப்பாடல் பிரதிபலித்தது.

    ’வேதம் தமிழ் செய்த மாறன் குருகூர் சடகோபன்‘ என்று பக்தர்களால் போற்றப்படும் நம்மாழ்வார் இவ்வாறு கூறுவார்:

    நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ

    நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா

    நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு

    நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?

    [கர்மங்களுக்குக் கட்டுப்படாத திருமால் இராமனாக அவதரித்த பொழுது படாத பாடுபட்டு நல்லோர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களைக் கொன்று நாட்டாரைக் காப்பாற்றினான். தன்னடி சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவன் அவர்களைத் தன்னுடன் அழைத்துப்போனான். இதைக் கேட்டபின் நாராயணனுக்கு ஆட்படுவதை விட்டு வேறு யாருக்கு ஆட்படுவார்கள்?]

    மானிடர் தாம் படும் துயரங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டவே திருமால் ராமனாக அவதரித்தார் என்பது எளியேனின் கருத்து. ராவண வதம் ஒரு வியாஜமே. ரகு குல திலகனாக சக்ரவர்த்தித் திருமகனாகத் திகழ்ந்தாலும் ஒரு சாமான்யன் போல் எல்லா கொடுமைகளுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டான் ராமன். ஆசை காட்டி மோசம் செய்வது  (முதல் நாள் அரியணை, அடுத்த நாள் அரண்யம்), ஒருவன் மனைவியை அவனிடமிருந்து பிரிப்பது போன்றவை எந்த மானிடனுக்கும் இழைக்கப்படும் இரு பெரும் அநீதிகளாகும். அப்படிபட்ட சந்தர்ப்பங்களில் ராமன் நடந்துகொண்டவிதம் மானிடர் அனவருக்கும் ஒரு பாடமாகும். அறநெறியில் வாழ்க்கை நடத்துவது எவ்வளவு கடினமானாலும், அதனை எவ்வாறு சாதிப்பது என்பதற்கு ராமனின் வரலாறே அத்தாட்சி.

    காவிய ராமனைக் குறை கூறுவோருக்கு, தாளும் தடக்கையும் கூப்பி அடியேன் விடுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அவனிடம் குறைகண்டால் அதற்கு பொறுப்பு அக்கதாநாயகனைப் படைத்த வால்மீகியே என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும். ராமனை தெய்வத்தின் அவதாரமாகக் கருதினால், அந்த தெய்வத்தைக் குறை கூற நமக்கு அருகதை இல்லை என்பதையும் உணரவேண்டும். வாலி வதமாகட்டும், ஸீதையை நாடுகடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஆகட்டும், ராமனுக்கு ஏற்பட்ட பழிகளின் பிண்ணனியில் பல சூக்ஷ்மங்கள் மறைந்திருக்கின்றன என்பதற்குப் புராணங்களில் சான்றுகள் உள்ளன. அவற்றைத் தீவிரமாக ஆலோசிக்காமல் வெறும் குப்பையெனக் கருதுவது ராமனுக்குச் செய்யும் அநீதியாகும். “தும்பைப் பூவை ஒத்த வெண்பட்டில் ஒரு சிறு கறைபட்டாலும் பார்ப்பவற்கு அந்த கறைதான் பளிச்சென்று தெரியும்” என்று ராஜாஜி கூறுவார். ஆகவே ராமனின் தர்மசங்கடங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வவதார புருஷனுக்கு எவருடைய – முக்கியமாக அடியேனுடைய – வக்காலத்தும் வாங்கவேண்டிய அவசியம் கட்டாயமாக இல்லை. அதே நேரத்தில் யுக தர்மங்களை மறந்து நமது சிற்றறிவுடன் அம்மஹாபுருஷனை எளிதாக எடைபோடும் devil’s advocate ஆகவும் நாம் திகழக்கூடாது.

    ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முனைவர் (அவர் ஒரு முனிவரைப் போன்றவர் கூட) கே. ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒருமுறை நாகர்ஜுனா பல்கலைக் கழகத்தில் ‘Irony’ (புரியாத புதிர்) என்ற தலைப்பில் உரையாற்றும்போது கீழ்கண்டவாறு கூறினார்:

    …..ஒருநாள் ராஜாராமன் அன்றைய அரசு அலுவல்களை முடித்தபின், அந்தப்புரத்திற்கு வருகிறான். நிறை மாதத்தில் இருக்கும் பட்டமஹிஷி ஸீதையின் பேரழகு அவனை மெய்மறக்கச் செய்கிறது. உடனே, ‘என் கண்ணே! உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன். கேள்’ என்கிறான். ‘ஆருயிரே! எனக்கு மீண்டும் கானகத்தில் முனிவர்களின் ஆசிரமத்திற்குச் செல்ல விருப்பம்’ என்கிறாள் ஸீதை. அவளிடம் இல்லாதது என்ன? மாயப் பொன்மானுக்கு ஆசைபட்டு அதனால் ஏற்பட்ட பிரிவாற்றாமையை அவள் மறந்திருப்பாளா? ராமன் ஏன் ஸீதைக்கு வரம் கொடுக்க விரும்ப வேண்டும்? சூலுற்றிருக்கும் ஸீதை ஏன் கானகம் செல்ல ஆசைப்பட வேண்டும்? இக்கேள்விகளை விடுவிக்க முடியாத புதிர்கள் அன்றி வேறெவ்வாறு கொள்வது?

    லண்டன் மாநகரில் உள்ள ஷேக்ஸ்பியர் நாடக மன்றத்தில் அன்னார் படைத்த ‘ஒதெல்லோ’  நாடகம் வெற்றிகரமாக நாட்கணக்கில் நடந்து கொண்டிருந்தது. அந்த நாடகத்தின் நாயக நாயகி பாத்திரங்களில் நடித்தவர்கள் இயல் வாழ்க்கையில் கணவன் மனைவி ஆவர். நாடகத்தின் உச்சகட்டத்தில் ஒதெல்லோ தன் மனைவி டெஸ்டிமோனாவின் கற்பினை சந்தேகித்து அவள் கழுத்தினை நெரிக்க முற்படவேண்டும். ஒருநாள், தன் பாத்திரத்தில் ஒன்றிப்போன அவன் மெய்யாகவே அவள் கழுத்தை பலத்துடன் நெரிக்க, அவள் மெல்லிய குரலில் ’இது நாடகம் என்பதை மறந்துவிட்டீரா?’ என்று கேட்க அவன் சுதாரித்துக் கொள்கிறான். நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது கணவன் மனைவியிடம், ‘அன்பே உன்னை வலிக்க வலிக்க நெரித்து விட்டேனா?’ என்று கேட்கிறான்.

    ஆதிதம்பதிகளான் லக்ஷ்மி நாராயணர் புவியில் ராமன் ஸீதையாக அவதரித்து நம் வாழ்க்கை நெறியை செப்பனிடுவதற்காக ஒரு நாடகத்தினைச் சிறப்பாக நடத்திவிட்டு வைகுந்தம் ஏகியுள்ளனர். இதைப் புரிந்து கொண்டால் நாம் ’ராமன் ஸீதையிடம் கடுமையாக நடந்தான்’ என்று குறை சொல்ல இயலாது…..

    கைகேயி பாத்திரத்தைப் பற்றி ஒரு விளக்கம். ஈன்ற கெளசலையைவிட ராமன்மேல் கைகேயி அதீதமான அன்பைப் பொழிந்தவள். தன் மகன் பரதன்கூட அவளுக்கு இரண்டாம் பட்சம் தான். அப்படிப்பட்டவள் எப்படி மனம் மாறி ராமன் நாடு கடத்தப்பட வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தாள்? சேடியான மந்திரையின் துர்ப்போதனையால் மட்டும் அத்தகைய மனமாற்றம் ஏற்பட்டிருக்குமா? இக்கேள்விகள் என் மனத்தில் பிறந்து ஆண்டாண்டுகளாக என்னை வாட்டி வதைத்தவாறு இருந்தன. அவற்றிற்கு பதில் கிடைக்காமல் போகவில்லை. ஸப்தகிரி என்னும் தூர்தர்ஷன் தெலுங்குத் தொலைகாட்சியில் (நமது பொதிகை போன்றது) பல ஆண்டுகளுக்கு முன் ஓளிபரப்பான கைகேயியைப் பற்றிய ஒரு ஓரங்க நாடகம் எனக்கு அந்த பதிலைத் தந்தது. அதன்படி கைகேயி ஒரு ஜோடிப்பறவைகளின் சம்பாஷனையின் மூலம் அடுத்த பதினான்கு ஆண்டுகட்கு அயோத்தி அரியணையில் யார் அமர்ந்திருந்தாலும் அவர் மாள்வார் என்ற முன்கூட்டிய தகவலைத் தெரிந்து கொண்டு எவ்வகையிலாவது ராமன் அரியணை ஏறுவதைத் தடுக்க வேண்டும் எனத்தீர்மானிக்கிறாள்.

    மற்றொரு புராணத் தகவல்படி, தண்டகாரண்யம் வரை தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்த ராவணன் அயோத்தியை ஆக்கிரமிக்க தசரதனுடன் போர் புரிந்தபோது கைகேயி தன் கணவனுக்கு தேரோட்டியாக இருந்தாள். அப்போரில் ராவணன் எய்த அம்பினால் தசரதன் மூர்ச்சை அடைந்தான். அவன் மாண்டுவிட்டான் எனக்கருதி போர்க்களத்தை நீங்க நினைத்த ராவணன்மீது கைகேயி ஒரு சபதம் செய்தாள். “இலங்கை அரசனே! எம் ரகு வம்சத்தில் உதிக்கப்போகும் ஒருவனால் உனக்கு மரணம் நிச்சயம்” என்று சூளுரைத்தாள். ராவணன் சிரித்து, “மலட்டுத் தன்மையினால் வாடிய உன் கணவன் மாண்டுவிட்டான். இனி அவனுக்கு ஏது வாரிசு?” எனப்பகர்ந்து அங்கிருந்து அகன்றான். இது நடந்து பல ஆண்டுகளுக்குப்பின் புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் பிறந்த ராமன் தன் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவனை வனவாசம் செய்ய வைத்தாள் கைகேயி. இதனை எனக்குக் கூறிய ஒரு தெலுங்கு பெளராணிகர், “ராமனின் பிறப்பு ரகசியத்தை அறிந்தவர்களில் கைகேயியும் ஒருவள்”  என்ற தகவலையும் அளித்தார். ஆக, ராமகாரியத்திற்கு உதவியவர்களில் கைகேயி முதன்மையானவள்.

    இத்தொடரில் ஆங்காங்கு காணப்படும் கம்பனின் சொல்லோவியங்களின் தெளிவுரைகள் பேராசிரியர் முனைவர் பூவண்ணனின் கைவண்ணம். அதேபோல் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முனைவர் மதி ஸ்ரீனிவாசன் அவர்களின் தெளிவுரைகள் கைகொடுத்தன. சுந்தர காண்டப் பகுதியில் வரும் ஒரு வடமொழி சுலோகத்திற்கான விளக்கத்தை திரு மா.கி. வெங்கடராமன் அளித்துள்ளார். இவர்களுக்கு அடியேன் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

    ’ராமன் வரும் வரை காத்திரு…’ என்ற தலைப்போடு கூடிய இத்தொடரை மிக்க விருப்பத்துடன் காத்திருந்து படித்துவந்த கீதா சாம்பசிவம், பார்வதி ராமச்சந்திரன், நந்திதா, தஞ்சை வி. கோபாலன், தமிழ்த்தேனீ, ஷைலஜா, சதீஷ் குமார் டோக்ரா, மற்றும் ‘வல்லமை’ ஆசிரியர் பவள சங்கரி போன்ற மேதைகளும் மனத்துக்கு இனியவர்களும் தங்கள் பின்னூட்டங்களின் மூலம் மேலும் பல அரிய தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டது நான் பெற்ற வரமே. அவர்களுக்கு என் நன்றி. ஸ்ரீ ஸீதாராமனின் பேரருள் அவர்கள்மீதும் ‘வல்லமை’ குழுமத்தின்மீதும் அல்லும் பகலும் அனவரதமும் பொழிய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

    ஒருமுறை அடியேனின் ஆசான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஹனுமத் காளி வர பிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்களை ”இப்புவியில் ராமராஜ்யம் மீண்டும் மலருமா?” என்று கேட்டபோது அவர் தனக்கே உரிய மந்தஹாசத்துடன், “ஓஹோ! உனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா? அப்படிப்பட்ட பரிபாலனம் வேண்டுமானால், ஸ்ரீ ராமபிரானே மறுபடி அவதரிக்க வேண்டும். அல்லது ஒவ்வொருவரும் அவன் காட்டிய அறநெறியில் தம்தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். இவ்விரண்டும் சாத்தியமா? ’இல்லை’ என்பதே என் முடிவு. ஒரே ஒரு வழி உண்டு. ஸ்ரீ ராமனின் கருணைக்காக உன் ஏக்கம் உச்ச நிலையை அடையவேண்டும். ஆகவே ராமன் கருணைக்காகக் காத்திரு” என்றார்.

    நாமும் ஸ்ரீ ஸீதாராமனின் கருணைக்காகக் காத்திருப்போம்!

             நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

        தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

        சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

        இம்மையே ‘இராம’ என்ற இரண்டு எழுத்தினால்.

                             —கம்ப ராமாயண தனியன் 

       

     

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (13)

    ராமஸ்வாமி ஸம்பத்

    ராமன் அனுமனிடம், “ஸீதைக்கு ராவணனின் முடிவு பற்றிய செய்தியைச் சொல்வாயாக” என்றான். அன்னையிடம் இம்மகிழ்ச்சியான சம்பவத்தைக் கூறியதும் அவள் அனுமனை நோக்கி பரிவோடு “உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?” என்றாள், “அன்னையே, எனக்கு அனுமதி கொடுங்கள். தங்களைக் கொடுமைப் படுத்திய இந்த அரக்கிகளை துவம்சம்  செய்கிறேன்” என்றான். அவ்வாறு செய்யவேண்டாம் என அறிவுரை செயது, ஸீதை சொல்வாள்: ”இவ்வுலகில் யார்தான் தவறு செய்யவில்லை? மேலும் இவர்கள் தங்கள் யஜமானனின் ஆணைப்படிதானே நடந்தார்கள். எய்தவன் செய்த தவறுக்காக அம்பை நோகலாமா?”

    ராவணனின் இறுதிச் சடங்கு முடிந்ததும் விபீஷணனுக்கு லக்ஷ்மணன் பொன்முடி சூட்டினான். பின்னர் ராமன் விபீஷணனை ஸீதா பிராட்டியை அழைத்து வருமாறு பணித்தான்.

    ஸீதை வந்து சீற்றம் பொங்கும் முகத்தைக் கொண்ட ராமனைப் பணிந்தாள். “ஸீதே! உன்னைச் சிறை மீட்டதோடு எனது க்ஷத்திரியக் கடமை முடிந்து விட்டது. ஏறக்குறைய ஓர் ஆண்டு இன்னொருவனால் சிறைப்படுத்தப்பட்ட உன்னோடு என்னால் இனி வாழமுடியாது. நீ எவரோடு வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்” என்று அனல் கக்கும் சொற்களை மொழிந்தான்.

    “ஆரியபுத்திரரே! உயர்ந்த குலத்தோன்றலான தங்களிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வரலாமா? என் கற்புநெறி தாங்கள் அறியாததா? தங்கள் நோக்கம் புரிகிறது. இதற்குப்பின் எனக்கு என்ன இருக்கிறது?” என்றாள் ஸீதை. கண்ணீர் அருவிபோல் பொங்கி எழ, “லக்ஷ்மணா, நீ உடனே உலர்ந்த கட்டைகளைக் கொண்டு வந்து தீ மூட்டு” என்று தன் கொழுந்தனுக்கு ஆணையிட்டாள்.

    லக்ஷ்மணனுக்கும் அங்கு உள்ள அனைவருக்கும்  ஒன்றுமே புரியவில்லை. ‘இது என்ன விபரீதம்?’ என்று நினைத்து அண்ணனை நோக்கினான். ராமன் மெளனமாக இருந்தான். தீ மூட்டப்பட்டது. ஸீதை அக்கினிக்குள் பிரவேசித்தாள்.

    அடுத்த கணம் அக்கினி தேவன் தோன்றி அன்னை ஸீதையை பவ்யமாக அழைத்துவந்து ராமனிடம் ஒப்படைத்தான். “ராமா, நெருப்பை நெருப்பு என்ன செய்யமுடியும்? இது உனக்குத் தெரியாமல் போய்விட்ட்தே! என் அன்னை புனிதத்தையே மேலும் மெருகேற்றக் கூடியவள்” என்றான்.

    மலர்ந்த வதனத்தோடு ராமன் ஸீதையை மெல்ல அணைத்தவாறு, “என் ஆருயிரே! உன் கற்புநெறியை உலகுக்குப் பறைசாற்றவே இந்த நாடகத்தை ஆடினேன். என்னை புரிந்துகொள்” என்றான்.

    பிரமன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களெல்லாம் வானில் கூடி ராமனையும் ஸீதையையும் வாழ்த்தி வணங்கினர். தசரதனும் அங்கு தோன்றி ராமனை தன் மடியில் அமர்த்தி உச்சிமுகர்ந்து, ஸீதையைப் பார்த்து ”என் மகனுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்றான்.

    ”தந்தையே! அன்னை கைகேயியையும் தம்பி பரதனையும் தாங்கள் அவர்கள்மீது கொண்ட கோபத்தை நீக்கி ஏற்றுக் கொள்ளவேண்டும்“ என்று ராமன் கேட்க தசரதனும் “அப்படியே” என்றான்.

    பிரமதேவன் ராமனை நோக்கி, ஐயனே! தாங்கள் திருமால் என்பதை தாங்களே அறியவில்லை. அதனால்தான் இந்த குழப்பம்” என்றார்.

    அவரை வணங்கி ராமன் “நான் என்னை மனிதனாகவும் தசரதன் புத்திரனாகவும் மட்டுமே அறிவேன். மற்றவற்றை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றான்.

    இந்திரன் ராமனுக்கு ஒரு வரம் அளிப்பதாகச் சொன்னான். “அப்படியானால் இந்த போரில் எனக்காக உயிர்த்தியாகம் செய்த வானரர்களுக்கு புத்துயிர் அளிக்கவேண்டும்” என்றான் ராமன். உடனே மாண்ட வானரர் அனைவரும் உயிர் பெற்றனர்.

    ராமனுக்கு திடீரென்று பரதன் வைத்த கெடு நினைவுக்கு வந்த்து. ”எப்படி அக்கெடு தீர்வதற்குள் அயோத்தி சேர்வது?” என அனுமானத்தோடு கேட்ட ராமனிடம் விபீஷணன், “கவலை வேண்டாம். புஷ்பக விமானத்தின் மூலம் நாம் அனைவரும் நாளையே அயோத்தி சேர்வோம்” என்றான்.

    அனைவரும் விமானத்தில் ஏறினர். போகும் வழியில் ராமன் ஸீதைக்கு நளனால் கட்டப்பட்ட சேது அணை, வானரர்களின் கிஷ்கிந்தை முதலியவற்றை சுட்டிக்காட்டினான்.

    வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அவர் ஆசிகளைப் பெறுவதற்காக விமானம் அங்கு இறங்கியது. முனிவர் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்தார். ராமன் அனுமனை அழைத்து உடனே அயோத்தி சென்று பரதனிடம் தான் திரும்புவதை முன்னறிவிக்குமாறு பணித்தான்.

    பதினான்கு ஆண்டுகள் மனவருத்தத்தோடு ராமன் வரும் வரை காத்திருந்த பரதன்,  ‘அண்ணன் வருவதற்கான அறிகுறிகளே காணப்படவில்லையே’ என நினைந்து, பிராணத் தியாகம் செய்ய முயல்கையில் அனுமன் அங்கு தோன்றி “பரதா! அவசரப்படாதே. நம் அண்ணல் இன்னும் சில நொடிகளில் இங்கு அன்னையோடும் இளவலோடும் வந்து சேருவார்” என்ற மகிழ்ச்சிகரமான தகவலைச் சொன்னான். அரை நாழிகை கடந்தபின் புஷ்பக விமானம் நந்திகிராமத்தில் இறங்கியது. அண்ணனைக் கண்ட பரதனின் ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பல ஆண்டுகளுக்குப்பின் தன் மகனின் முகத்தில் புன்முறுவலைக் கண்ட கைகேயி மனம் மகிழ்ந்தாள்.

    பரதனைப் போலவே ராமன் வரும் வரை காத்திருந்த அசேதனப் பொருள்களான ராம பாதுகைகள் ”எம் ஐயன் காட்டிலும் மேட்டிலும் கற்கள்மீதும் முட்கள்மீதும் காப்பில்லா கால்களுடன் நடக்கையில் நாம் மட்டும் பதினான்கு ஆண்டுகள் பரதாழ்வாரின் பூஜாபீடத்தில் அமர்ந்திருக்கிறோமே! என்னே நம் தலைவிதி!” என்று வருந்தியவாறு இருந்தவை “ஆஹா, மீண்டும் அண்ணல் பாதங்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் நமக்கு விரைவில் கிடைக்கப் போகிறது”  என நினைந்து பொலிவு பெற்றன. இவ்வடிநிலை போல அயோத்தி அரியணையும் அரசாங்கக் கருவூலத்திலிருந்த ரகு வம்சத்தின் மணிமுடியும் “பதினான்கு ஆண்டுகள் ராமன் வரும் வரை காத்திருந்து தவமிருந்தோம். நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது” என மகிழ்ந்தன. சோகத்தின் உருவாக இருந்த அயோத்தி நகரமே இன்பக்கடலில் திளைத்தது.

    நாடு திரும்பிய ராமனைப் பரதன் கண்ணீர் ததும்பும் கண்களோடு ஆலிங்கனம் செய்து கொண்டான். பின்னர் அவருடைய பாதுகைகளை பூஜா விதானத்திலிருந்து எடுத்து பக்தி பரவசத்தோடு அவருக்கு அணிவித்தான். அன்னைமார்களில் ராமன் முதலில் கைகேயியை வணங்கினான். “ராமா, என் மீது கொண்ட கோபம் தீர்ந்துவிட்டதா?” என்று கேட்ட சிற்றன்னையிடம் ராமன், “அன்னையே தாங்கள் எதுசெய்தாலும் என் நன்மையை மனத்தில் கொண்டுதான் செயல்படுவீர் எனபது எனக்குத் தெரியாததா?”  என்றான்.

    ஒரு நல்ல நாள் பார்த்து ராமனுக்கு முடிசூட்ட குலகுரு வசிஷ்டர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ஸீதாராம பட்டாபிஷேக வைபவத்தை கம்பர் வர்ணனையில் காண்போமே!.

    அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த

    பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற

    விரை செறி கமலத்தாள்சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்

    மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான்  மெளலி.

    [அரியணையை அனுமன் தாங்கவும், அங்கதன் உடைவாளைக் கையில் கொண்டு நிற்கவும், பரதன் வெண்மையான கொற்றைக் குடை பிடிக்கவும், மற்ற இரண்டு தம்பியரான லக்ஷ்மணனும் சத்திருக்கனனும் வெண்சாமரை வீசவும், மணம் மிக்க செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளான திருமகள் பொருந்தப் பெற்றுள்ள திருவெண்ணெய்நல்லூர் தலைவனான சடையப்ப வள்ளலின் முன்னோராக உள்ளவர் எடுத்துக் கொடுக்க, ராமனுக்கு வசிஷ்டன் முடி சூட்டினான்]

    ஸ்ரீ  ஸீதாராமன் திருவடிகளே சரணம்!

    (முற்றும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (12)

    ராமஸ்வாமி ஸம்பத்

    எப்பேர்ப்பட்ட போர் அது! உவமைகளைக் கையாள்வதில் வல்லவனான வடமொழிப் புலவன் காளிதாசன் தன் ‘ரகுவம்சம்’ எனும் காப்பியத்தில் சரியான உவமை ஏதும் கிடைக்காமல், “ராம-ராவண யுத்தம் எவ்வாறு இருந்தது என்றால் ராம-ராவண யுத்தம் போன்றே இருந்தது” என்று குறிப்பிடுகிறான்.

    இலங்கையில் நடந்த போரில் ஏராளமான அரக்கர்களும் வானர வீரர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். ராமனின் போர்த்திறனை ராவணனின் சேனாதிபதிகள்கூட புகழ்ந்தனர். இதனால் சினமுற்ற இலங்கை அரசனுக்கு ஒரு விபரீதமான யோசனை தோன்றியது.

    ‘ராமன் வெற்றி பெறுவான் எனும் எண்ணத்தினாலே அல்லவா ஸீதை என்னைப் புறக்கணிக்கிறாள். மாயாஜாலம் செய்து ராமன் மாண்டுவிட்டான் என்று ஸீதையை நம்ப வைத்து விட்டால் அவளை நான் சுலபமாக அடைந்து விடலாம். பின்னர் ராமனும் மனம் நொந்து உயிரை விட்டு விடுவான் அல்லது போர்க்களம் நீங்கி நாடு திரும்பிவிடுவான்’ என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியவாறு வித்யுத்ஜிஹ்வா எனும் சூனியக்காரனை அழைத்து ”வெட்டப்பட்ட ராமனின் தலை போன்ற ஒரு மாயபிம்பத்தை அசோகவனத்தில் ஸீதைமுன் வை” என்று ஆணையிட்டான். அவன் அவ்வாறே செய்ய ஸீதை மனம் கலங்கி விம்மி அழுதாள். அப்போது அங்கு வந்த ராவணன், “ஜனகபுத்திரியே! இதோ போரில் மாண்டுபோன உன் கணவனின் தலை. இனி உனக்கு என்னைத்தவிர வேறு கதியில்லை”  இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு ஓற்றன் அவன் செவியில் வானர வீரர்கள் நகருக்குள் நுழைந்து விட்டதைக் கூறினான். உடனே ராவணன் அங்கிருந்து அகன்றான். இப்படிப்பட்ட சூனிய வேலைகளுக்கு ஏவல் செய்பவன் அத்தலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும். ராவணன் அங்கு இல்லாததால் அம்மாயை பிசுபிசுத்து அத்தலை மறைந்து விட்டது. திரிஜடை இந்த சூனியவேலையை விளக்க ஸீதை ஆறுதல் அடைந்தாள்.

    தன் தந்திரம் பலிக்கவில்லை என்ற கோபத்தோடு ராவணன் போர்க்களத்துக்கு விரைந்து ராமனை முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்தான். இருவரும் உக்கிரமான யுத்தத்தில் ஈடுபட்டனர். ராமனின் விற்கணைகளுக்கு ராவணனின் படைகளும் தேரோட்டியும் பலியானார்கள். அவன் தேர் சுக்குநூறானதோடு விற்களும் பற்பல ஆயுதங்களும் பொடியாக்கப் பட்டன. தன் கையில் மிகுதியாக இருந்த சங்கரன் வரமாகக் கொடுத்த வாளை ராமன்மேல் ராவணன் எறிந்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.

    நிராயுதபாணியாக நின்றிருந்த அரக்கர் கோமானை நோக்கி ராமன், “இலங்கை வேந்தே! தேர், தேரோட்டி, ஆட்படைகள், யுத்த தளவாடங்கள் அனைத்தையும் இழந்து களைப்பாக இருக்கிறாய். உன்னை இந்நிலையில் கொல்ல நான் விரும்பவில்லை. உனக்கும் ஓய்வு தேவை. ஆகவே இன்று போய் நாளை வா” என்றான்.

    ’என்னுடைய தற்போதைய நிலையைப் பார்த்தால் ஸீதை ஏளனம் செய்வாளே’ என்று நொந்த மனத்தோடு அரண்மனைக்குத் திரும்பிய ராவணன் தன் ஏகாந்தமான பூசை அறைக்குச் சென்று, “இறைவா! தவப்பலத்தால் எனக்குக் கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் வீணாகிவிட்டனவே. நீ கொடுத்த வாளும் பயனற்றுப் போய்விட்ட்தே. அவ்வாளினால் எந்த எதிரியையும் மாய்க்கலாம் என்ற உன் வாக்கு பொய்த்து விட்டதே” என்று புலம்பினான்.

    அப்போது அசரீரி பேசியது: “முட்டாளே! சிவபெருமான் உனக்குக் கொடுத்த வாளால் ஒரு விரோதியைத்தான் கொல்லமுடியும் என்ற நியதியை மறந்து விட்டாயா? எப்போது அவ்வாளால் ஜடாயுவைக் கொன்றாயோ அப்போதே அது தன் வலிமையை இழந்துவிட்டது.”

    அடுத்த நாள் காலை ராவணன் உறக்கத்தில் இருக்கும் தன் தம்பி கும்பகர்ணனை எழுப்புமாறு ஆனையிட்டான். பலத்த முயற்சி செய்து அவனை அரக்கர்கள் எழுப்பி அரசன் ஆணையை விவரித்தனர். அண்ணனிடம் வந்த தம்பி, “எதற்காக என்னை எழுப்பினாய். என்ன விபரீதம் நிகழ்ந்து விட்ட்து?” என வினவினான்.

    “தம்பி, உன் புஜபல பராக்கிரமத்தைக் காட்டவேண்டிய சமயம் வந்துவிட்டது. நீ உடனே போர்க்களத்துகுச் சென்று அந்த மனித பூச்சிகளையும் குரங்குகளையும் தவிடு பொடியாக்கி வெற்றியோடு வா.”

    ”அண்ணா, நான் முன்பே எச்சரிக்கை செய்தேன். ஸீதையை கபடமாகக் கடத்தி வந்தது பெருந்தவறென்று. அதன் விளைவே இப்போது நம் குலத்திற்கு வந்திருக்கும் சாபக்கேடு.”

    “கும்பகர்ணா, நியாய அநியாயங்களைப் பற்றி பேச இது தருணம் அல்ல. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உணவருந்திவிட்டு உறக்கம் கொள்.”

    “அண்ணா, சினம் கொள்ளாதே. என் உள்ளத்திற்குத் தோன்றியதை சொன்னேன். நான் உனக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக உள்ளேன் என்பது உனக்கும் தெரியும். போரில் ராம லக்ஷ்மணர்களை தோற்கடித்து விட்டபின்தான் உன்னிடம் வருவேன். ஒரு வேளை மாண்டுவிட்டால், நீ நம் அரக்கர்குலத்தைக் காப்பதற்காகவாவது ஸீதையை ராமனிடம் சேர்ப்பிக்க வேண்டும். நீயும் நம் குலமும் அழிவதில் எனக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.”

    இவ்வாறு உரைத்து கும்பகர்ணன் போர்க்களத்திற்குச் சென்றான். பலத்த சேதத்தை ராமனின் படைகளுக்கு ஏற்படுத்தினாலும், முடிவில் கோதண்ட பிரயோகத்தால் கூற்றத்தின் வாய் விழுந்தான் கும்பகர்ணன்.

    இனிய தம்பியின் பிரிவு தமையனை வாட்டியது. அதன்பின் பல அரக்க வீரர்களை அனுப்ப அவர்களும் வீரசொர்கம் எய்தினர். ‘யார் இந்த ராம லக்ஷ்மணர்கள்? எங்கிருந்து இத்தனை பலம் பெற்றார்கள்?’ என்று யோசித்தவாறு அருமை மகன் இந்திரஜித்தை அழைத்தான். “மகனே! இப்போது நீதான் என் மானத்தைக் காக்கவேண்டும்” என்ற தந்தையிடம் இந்திரஜித், “நான் ஒருவன் இருக்கும்வரை நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆசி அளியுங்கள். வெற்றியோடு வருகிறேன்” என்றான்.

    போர்த்திறனோடு மாயாஜாலம் புரிவதிலும் வல்லவனான இந்திரஜித் தான் இருப்பது தெரியாவண்ணம் ராம லக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டி வீழ்த்தி ”இனி அவர்கள் பிழைக்க முடியாது” என்று தந்தையிடம் பெருமையாகச் சொன்னான். சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான் என் செய்வது என்று தெரியாமல் வருத்தத்தோடு அமர்ந்திருந்தனர். அப்போது சிறிய திருவடியான அனுமன் பெரிய திருவடியான கருடனை வேண்ட, நாகங்களின் ஜன்ம வைரியான அப்பட்சிராஜன் அங்கு வந்த வேளையில் அவை அந்த  அம்புகளிலிருந்து தப்பி ஓடவும் ராம லக்‌ஷ்மணர்கள் மூர்ச்சை நீங்கினர்.

    அதன் பின், இந்திரஜித் ஸீதையைப் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, வானரர்கள் முன்னே அதன் தலையைக் கொய்து அவள் மாண்டுவிட்டது போன்ற ஒரு பிரமையை அவர்களிடையே உண்டாக்கினான். இதனால் மிக்கத்துயர்கொண்ட வானரர்கள் ராமனிடம் இந்த செய்தியைக் கூறியதும் ராம லக்ஷ்மணர் இருவரும் ஸ்தம்பித்துப் போயினர். பக்கத்தில் அமர்ந்திருந்த விபீஷணன் ராமனிடம், “அண்ணலே! கவலை வேண்டாம். ராவணன் ஒரு நாளும் அன்னை ஸீதையைக் கொல்வதை அனுமதிக்கமாட்டான். இது இந்திரஜித்தின் மாயாஜாலம்” என்றான்.

    மனம் தெளிந்த ராம லக்ஷ்மணர்கள் இந்திரஜித்தோடு மீண்டும் போர் செய்தனர். அவன் உக்கிரமாகப் போரிட்டு பிரம்மாஸ்திரத்தால் லக்ஷ்மணனை வீழ்த்தினான். தம்பியின் நிலை கண்டு ராமனின் துயரம் பொங்கும் கடல்போல் கட்டுமீறியது. அவன் கதறலைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார்:

     “மாண்டாய் நீயோ யான் ஒருபோதும் உயிர் வாழேன்

     ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன்தான்

     பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றார்

     வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றதால்”

    [”நீயோ இறந்துவிட்டாய். அதனால் நான் ஒரு நாளும் உயிர் வாழமாட்டேன். அதை அறிந்தால் பரதன் நாட்டினை ஆட்சி செய்யாமல் இறப்பான். என்னோடு உறவு பெற்றவர் அனைவரும் துன்பச்சுமையைத் தாங்க முடியாமல் இறப்பர். நான் சிறந்த தர்மத்துக்குப் பயந்து (பிரம்மாஸ்திரம் செலுத்தாதே என்று லக்ஷ்மணனைத் தடுத்து) தளர்ச்சி அடைந்ததால் அதன் விளைவாக இவ்வளவும் நடக்க வேண்டாவா” என்று ராமன் ஏங்கி விம்மினான்.]

    ராமனின் மாளாத்துயரத்தைக் கண்ட விபீஷணன் தன் அந்தரங்க மருத்துவனை அழைத்து வந்தான். “நாளைப் பொழுது விடிவதற்குள் இமயத்தில் உள்ள சஞ்ஜீவி மூலிகைகளைக்கொண்டுவந்தால்தான் லக்ஷ்மணன் பிழைக்க முடியும்” என்றான் அம்மருத்தவன். இதைக்கேட்ட அனுமன் சடுதியில் வடக்கு நோக்கிப் பாய்ந்து சஞ்ஜீவி பர்வதத்தையே கையில் ஏந்தி வந்தான். இளவல் மயக்கம் தெளிந்தான்.

    இதற்கிடையில் இந்திரஜித் துர்த்தேவதைகளின் உதவி கோரி நிகும்பலையில் ஒரு யாகம் செய்யமுற்பட்டான். இதை அறிந்த விபீஷணன், “இந்திரஜித்தின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அவன் மிக்க பலசாலி ஆகிவிடுவான். அவனை வெல்ல முடியாது” என்று சொன்னதும், லக்ஷ்மணனும் அனுமனும் பல வானரர்கள் புடைசூழ அந்த யாகசாலைக்குச் சென்று அதனைக் கலைத்தனர். பின்னர் அங்கு நடந்த போரில் லக்ஷ்மணன் இந்திரஜித்தின் தலையை வெட்டி வீழ்த்தினான். ராமன் உள்ளிட்ட அனைவரும் இளவல்மீது புகழ்மாரி பொழிந்தனர்.

    தனிமரமாகிவிட்ட ராவணன் ராமனுடன் இறுதிப் போருக்கு சித்தமானான். இந்திரன் தன் தேரை மாதலி எனும் சாரதியோடு ராமன் உதவிக்கு அனுப்பினான். எத்தனை அம்புகளை எய்தாலும் வெட்டப்பட்ட ராவணனின் தலைகள் மீண்டும் மீண்டும் முளைத்தன. வியப்படைந்த ராமன் செவியில், மாதலி “ஐயனே, இனியும் தாமதம் செய்யவேண்டாம். பிரம்மாஸ்திரத்தை ராவணனின் மார்பில் எய்க” என்றான்.

    ராமனால் எய்யப்பட்ட பிரம்மாஸ்திரம் தன் பணியைச் செவ்வனே செய்து ராவணனின் மார்பில் பாய்ந்து அவனை வீழ்த்தியது. வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.

    தானாடாவிட்டாலும் சதையாடும் என்பதற்கொப்ப துயரம் மேலிட்டாலும், அறநெறி மறந்த தமையனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்ய விபீஷணன் தயங்கினான். “சிறப்பாகப் போர் புரிந்த உன் அண்ணன் வானுலகம் சென்றுவிட்டான். அவனுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து அந்த ஆன்மாவைக் கடையேற்றுவது உன் கடமை. அதற்குத் தயங்கினால் நானே முன்னின்று அப்பணியைச் செய்வேன். ஏனினில் உன் சகோதரன் என் சகோதரன்கூட அல்லவோ?” என்றான் ராமன்.

    அப்பொழுதே அங்கு வந்த இலங்கை அரசி மந்தோதரி கணவன் சடலத்தின்மேல் விழுந்து இவ்வாறு புலம்பலுற்றாள்:

    வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்

    எள்ளிருக்குமிடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடி இழைத்தவாறோ

    கள்ளிருக்கும் மலர் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்

    உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.

    [ராமன் என்னும் ஒரு மனிதனுடைய அம்பு, வெண்மையான எருக்கமாலை அணிந்த, சடைமுடியை உடைய சிவன் அமர்ந்திருக்கும் கயிலை மலையைப் பெயர்த்த ராவணனின் அழகிய உடம்பு முழுவதையும் எள் இருப்பதற்கு சிறிய இடமும் இல்லாதவாறு அவன் உயிர் இருக்கும் இடம் தேடித் துளை செய்த தன்மையோ? அல்லது தேன் இருக்கும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய ஸீதையை இதயம் என்னும் சிறையில் மறைத்து வைத்த காதல், உள்ளே எங்கேயாவது மறைந்திருக்கும் என்று கருதி அவன் உடலில் புகுந்து தேடியவாறோ?]

    ”யார் இந்த மாதரசி?” என்று வினவிய ராமனுக்கு விபீஷணன் “அவர் என் அண்ணியார் மந்தோதரி” என்று பதிலுரைத்தான். அதன் பின்னர், விபீஷணன் அண்ணனுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதைகளைச் செய்து முடித்தான்.

    (தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (11)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மனக்கவலை நீங்கிய ராமனும் சுக்ரீவனும் அடுத்துச் செய்யவேண்டியதை ஆலோசித்தனர். அதன்படி ஒரு மாபெரும் வானர சேனையோடு அனைவரும் இலங்கை நோக்கிப் புறப்பட்டனர். கீழ்க்கடற்கரை ஓரம் அப்படை தண்டு கொண்டிருந்தபோது வானில் ராவணன் தம்பி விபீஷணனும் மேலும் நான்கு அரக்கர்களும் தோன்றி, “இலங்கேசனால் உதாசீனம் செய்யப்பட்ட நாங்கள் ராமனைச் சரண் அடைய நிச்சயித்துள்ளோம். அப்பிரபு எங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்றனர்.

    இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்பதனைப் பார்ப்போமா? அனுமன் கடல் தாண்டி இலங்காபுரியை எரித்து நாசம் செய்தது ராவணனைக் கலங்க வைத்தது. தன் தம்பிமார்களையும் இந்திரஜித் உள்ளிட்ட தம் மக்களையும் அமைச்சர்களையும் வரவழைத்து அவசர ஆலோசனை செய்தான். விபீஷணனைத் தவிர அனைவரும் ”ராம லக்ஷ்மணரையும் வானரப்படையையும் அவர்கள் தண்டு கொண்டிருக்கும் இடத்திற்கே சென்று நாசம் செய்ய வேண்டும்” என்றனர்.

    விபீஷணனோ, “ஸீதையை அபகரித்து வந்தது மாபெரும் குற்றமென்றும், நாமும் நம் அரக்கர் குலமும் நிச்சயமான அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி ராமபத்தினியை உரியவனிடம் ஓப்படைப்பதே” என்றான்.

    ராவணன் சினத்தில் உடல் துடிக்க, “விபீஷணா, சில நாட்களாகவே உன் நடப்பு சரியாக இல்லை. நம் எதிரியை சிலாகித்துப் பேசுகிறாய். நீ அந்த குரங்கைக் கொல்ல விடாமல் தடுத்ததால் இலங்கை நகரமே தீக்கிரையாகி விட்டது. உன் மகள் திரிஜடையை அனுப்பி ஸீதைக்கு ஆறுதல் சொல்ல வைக்கிறாய். உன் நோக்கம் என்ன?” என்று கர்ஜித்தான்.

    “அண்ணா, என் நோக்கம் தங்களையும் நம் அரக்கர் குலத்தையும் காப்பதே” என்ற விபீஷணனை ராவணன், “வேண்டுமானால் நீ ராமனிடம் அடைக்கலம் புகுந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய். உன்னை என் தம்பியென்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொல்லி மேலும் பல சுடுசொற்களால் அவனைச் சாடினான். அங்கு கூடியிருந்த அனைவரும் மன்னன் கூற்றினை ஆமோதித்தவாறு விபீஷணனை எள்ளி நகையாடினர். வருத்தத்தோடும் குனிந்த தலையோடும் அவன் அங்கிருந்து அகன்று தன் நண்பர்கள் நால்வரோடு ராமன் இருக்கும் இடத்தைச் சேர்ந்தான்.

    அபயம் கோரும் விபீஷணனை தம்முடன் சேர்த்துக் கொள்ளலாமா என்று சுக்ரீவனையும் ஜாம்பவானையும் மூத்த வானர வீரர்களையும் ராமன் கேட்டபோது அனுமனைத் தவிர அனைவரும் தேவையில்லை எனக்கூறினர். அனுமனோ வீபீஷணனின் நற்பண்புகளைச் சுட்டிக்காட்டி “அவன் வரவு நமக்கு நல்வரவே” என்றான்.

    முடிவில் ராமன் தன்னுடைய அடைக்கலம் அளிக்கும் பண்பினை ஒட்டி, “சரண் புகுந்தவரைக் காப்பது என் தர்மமாகும். ஒருவேளை ராவணனே மனம் திருந்தி என்னிடம் சரணடைந்தால், அவனையும் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறி, விபீஷணனை அழைத்து, லக்ஷ்மணனையும் சுக்ரீவனையும் அவ்வரக்கனுக்கு இலங்கை அரசனாக முடிசூட்டுமாறி பணித்தான்.

    பின்னர் அவனோடும் சுக்ரீவனோடும் எவ்வாறு கடல் கடந்து இலங்கை சேர்வது என்று ஆலோசித்தான். அதன்படி கடலரசனை வழிவிடுமாறு வேண்டுவது என முடிவு செய்தான். இன்று திருப்புல்லாணி என வழங்கும் இடத்தில் ராமன் தர்ப்பைகளைப் பரப்பி மூன்று நாள் உபவாசத்தோடு சமுத்திரராஜனைப் பிரார்த்தித்தவாறு இருந்தான். அதற்கு பலன் இல்லாமல் போகவே, கோபம்கொண்ட கோதண்ட ராமன் அக்கடலினை வற்றி தரைமட்டமாக்கத் தன் வில்லின் நாணேற்றினான். இந்த சீற்றத்தைக் கண்டு கடலரசன் நடுநடுங்கி, ராமனிடம் சரண் புகுந்து, “இயற்கை நியதிகளுக்குக் கட்டுப்பட்டவனான என்னை மன்னித்தருள்வீர். என்னால் தங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். அதாவது என்மீது பெருங்கற்களைக் கொண்டு அணை ஒன்றைக் கட்டுங்கள். அதனை நான் தாங்குகிறேன். அந்த அணைமீதே நீங்க்ள் யாவரும் நடந்து இலங்கை சேரலாம்” என்று கூப்பிய கரங்களோடு பகர்ந்தான். திருப்புல்லாணி அருகாமையில் உள்ள ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து சேதுவை நிர்மாணிக்கலாம் என்றும் கூறினான்.

    வானர வீரர்களில் ஒருவனான நளன் என்பான் முன்வந்து, “ஐயனே! நான் விஸ்வகர்மனிடம் அணைகள்  கட்டுவதற்கான பயிற்சி பெற்றிருக்கிறேன். அனுமன் போன்ற வலிமை கொண்ட வானரர்கள் அருகில் உள்ள மலைகளிருந்து பெரும் பாறாங்கற்களை எடுத்து வந்தால் இப்பணி எளிதாக முடிந்துவிடும்” என்றான். அவன் மேற்பார்வையில் வானரர்கள் ராம நாமத்தை ஜபித்தவாறு பெரும் பாறாங்கற்களையும் வெட்டப்பட்ட மரங்களையும் அணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்பாதையில் போட்டு சேதுவை உருவாக்குவதில் ஈடுபட்டனர். கடலரசன் கருணையால் அவைகள் ஒரு மிதவைப் பாலமாக அமைந்தன.

    இதையெல்லாம் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சேதுராமன் ‘இந்த பளுவான கற்கள் எவ்வாறு மிதக்கின்றன’ என நினைத்து ஒரு மாலைப் பொழுது யாருமில்லாத சமயம் தானும் ஒரு கல்லை அவ்விடத்தில் போட்டான். அது ‘தொபுக்கடீர்’ என்று தண்ணீரில் அமிழ்ந்தது. திடீரென்று யாரோ ‘களுக்’ என்று நகைப்பது கேட்டது. அனுமன்தான் அங்கு நகைத்தபடி நின்றிருந்தான். “ஏன் சிரிக்கிறாய் அனுமா?” என்று ராமன் கேட்க அனுமன், “ஐயனே! நீ கைவிட்டால் கல் என்ன  எவர்க்குமே அதோகதிதான்” என்றான்.

    சில நாட்களில் சேதுபந்தனம் முடிந்து வானரப் படை மொத்தமும் அந்த நீண்ட வீதியின்மேல் நடந்து இலங்கையை அடைந்தனர். ராமனை அனுமனும் லக்ஷ்மணனை அங்கதனும் சுமந்து அக்கரை சேர்ந்தனர். கடைசி முயற்சியாக ராமன் அங்கதனை தூதுவனாக ராவணனிடம் அனுப்பி “ஸீதையை என்னிடம் சமர்ப்பித்துச் சரண் புகுந்தால் போரினைத் தவிர்க்கலாம்” என்று சொல்ல வைத்தான். அகந்தைகொண்ட ராவணன் அதனை நிராகரிக்கப் போர் தொடங்கியது.

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (10)

    ராமஸ்வாமி ஸம்பத்

    அனுமனுக்குப் பசி எடுத்தது. உடனே அருகே இருந்த ஈச்சமரத்தினை தன் பலத்தால் தழைத்தபோது அம்மரம் மளக்கென்று சாய்ந்தது. அச்சத்தத்தினைக் கேட்டு இரு அரக்கக் காவலாளர்கள் அங்கு வந்து அனுமனைக் கண்டு அவன்மீது பாய்ந்தனர். தன் கரத்தால் ஒரு குத்துவிட ஒருவன் மாய்ந்தான். மற்றவன் ஓடிச்சென்று ஒரு நூறு அரக்கர்களை அழைத்து வந்தான். அதற்குள் அனுமன் அந்த மரத்தைப் பெயர்த்து அவர்கள்மீது வீச ஒரிருவரைத் தவிர மற்ற எல்லோரும் மாண்டனர்.

    ஒரு வானரத்தின் இந்த சாகசம் ராவணனின் செவிக்கு எட்டியது. கோபம் அனல் பறக்க தன் அமைச்சனின் மகனான ஜம்புமாலி எனும் வீரனை படையுடன் அனுப்பி ”அக்குரங்கினைத் தீர்த்துக்கட்டிவிட்டு வா” என்று பணித்தான். அனுமன் சில நொடிகளில் அப்படையை முறியடித்தான். ஜம்புமாலியின் மரணம் ராவணன் மனதில் முதல் முதலாக அச்சத்தை ஏற்படுத்தியது. உடனே தன் இளையமகன் அக்‌ஷகுமாரனை ஏவ அவனும் உற்சாகமாகப் போரிட்டாலும் முடிவில் அனுமனால் கொல்லப்பட்டான்.  துயரம் மேலோங்க ராவணன் தன் மூத்த மகன் இந்திரஜித் என்கிற மேகநாதனை அழைத்து, “நீ எப்படியாவது அந்த வானரனைக் கொன்றோ உயிருடன் சிறை பிடித்தோ வெற்றியோடு வரவேண்டும். இந்திரனையே தோற்கடித்த உனக்கு இது எளிதான பணியே” என்றான்.

    இந்திரஜித் உக்கிரமாகப் போர் புரிந்து, இறுதியில் பிரம்மாஸ்திரத்தை ஏவ அனுமன் அதற்குக் கட்டுப்பட்டு கீழே வீழ்ந்தான். (பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு முஹூர்த்த காலம் அந்த அஸ்திரத்திற்குக் கட்டுப்படுவதாக அனுமன் முன்பு அவரிடம் வாக்களித்திருந்தான்). கீழே கிடந்த அனுமனை அரக்கர்கள் கயிற்றினால் கட்டி நகரெங்கும் தரதரவென்று இழுத்துச் சென்றனர். இதற்குள் முஹூர்த்த காலம் கடந்து விட்டது. இருந்தாலும் ராவணனைக் காணவேண்டி அவன் கட்டுபட்ட நிலையிலேயே இருந்தான்.

    தன் முன் நிறுத்தப்பட்ட அனுமனிடம் சீற்றம்கொண்ட ராவணன் “ஏ குரங்கே! நீ யார் அனுப்பி இங்கு வந்தாய்? நீ இந்திரனை அல்லது குபேரனைச் சேர்ந்தவனா?” என வினவினான்.

    செல்வச் செழிப்போடு கூடிய ராவண தர்பாரை கண்டதோடு ஸாம கானம் செய்து சிவபிரானை மகிழ்வித்த முகப்பொலிவொடு விளங்கும் இலங்கேசனை நோக்கி ஆச்சரியத்தோடு ‘இவ்வளவு உயர்நிலையில் இருந்தும் இவன் ஏன் பிறன் மனை விழையும் கீழ்த்தரமான செயலை புரிந்துள்ளான்?’ என நினைத்தான் அனுமன். பின்னர் தன்னை ராம தூதனாக அறிமுகம் செய்து கொண்டு, “இலங்கை வேந்தே! உனக்கு நற்புத்தி புகட்டவே இங்கு வந்திருக்கிறேன். உன்னைத் தன் வாலில் கட்டியவாறு ஏழு சமுத்திரங்களில் நீராடிய வாலியை எளிதாகக் கொன்றவர் என் தெய்வம் ராமன். உன்னைப் பாடாக படுத்திய கார்த்தவீரியார்ஜுனனைக் கொன்ற பரசுராமனின் கர்வத்தை அடக்கியவர் என் ஈசன். அவர் மனைவியான ஸீதையை வஞ்சகமாகக் கடத்தி வந்திருக்கிறாய். மஹாவீரனான ராமனிடம் அவர் மனைவியை ஒப்படைத்து அடைக்கலம் கோருவாயாக. அந்த சரணாகத வத்ஸலன் உன்னை மன்னிக்கத் தயங்கமாட்டார். இல்லாவிடில் நீயும் உன் அரக்கர் குலம் அனைத்தும் அழிவது உறுதி” என்றான். ராவணனின் இருபது கண்களிலும் தீப்பொறி பறந்தது. “யாரங்கே! இந்த மதம்கொண்ட குரங்கை வெட்டிப்போடுங்கள்” என்று கர்ஜித்தான்.

    அப்போது அவன் இளவலான விபீஷணன், “அண்ணா, இவன் தன்னைத் தூதுவன் எனக் கூறுவதால் இவனைக் கொல்வது ராஜதர்மம் ஆகாது” என்றான். “ஓஹோ, அப்படியானால் இக்குரங்கின் வாலில் துணியைச் சுற்றி அதனை எரித்து விடுங்கள். அதுதான் இவனுக்குச் சரியான தண்டனை. ஒரு வானரனுக்கு வால்தானே பெருமை” என்றான் ராவணன்.

    அரக்கர்கோனின் ஆணையைக் கேட்ட அசோகவனத்து அரக்கிகள் ஸீதையிடம் இதைச்சொல்லி, “எட்ட இருந்தாலும் நாங்கள் அந்த குரங்கு உன்னிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டோம். அத்துமீறி இங்கு நுழைந்த அந்த குரங்கின் வாலைக் கொளுத்தியது அதற்கு ஏற்ற தண்டனை தான்” என்றனர்.

    இதைக்கேட்ட ஜானகி உள்ளம் பதைபதைத்து, ‘ஓ அக்கினி பகவானே! நான் கற்புடையவள் என்பது உண்மையாயின் என் மனாளன் என்னைத் தவிர எந்த மங்கையையும் ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பமாட்டான் என்பது உண்மையாயின் என் மகன் அனுமனைச் சுடாமல் குளிர்ச்சி தருவாய்’ என்று மனத்தில் சூளுரைத்தாள்.

    அனுமனுக்கு ஒரே ஆச்சரியம். ‘இது என்ன வினோதம்? நெருப்பு என்னைச் சுடவில்லையே! ஓஹோ! இது அன்னையின் ஆசி போலும்’ என நினைத்தான். அடுத்த கணம் தன் தளைகளைத் தகர்த்தெரிந்து இலங்கை ராஜதானியில் உள்ள பல கட்டிடங்களையும் சோலைகளையும் அக்கினிக்கு இரையாக்கினான்.

    ’ஐயோ தவறு செய்துவிட்டோமே! அசோகவனமும் கொழுந்துவிட்டு எரிகிறதுபோல் இருக்கிறதே!’ என்று ஒரு கணம் வருத்தத்தில் ஆழ்ந்த அவன் செவிகளில் ‘என்னே அனுமனின் சாதுர்யம்! அசோகவனத்தின்மீது தீ பரவாமல் மற்றைய இடங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கி  இருக்கிறானே!’ என வானில் உலவும் சாரணர்களின் உரையாடல் தேன்மாரியென விழுந்தது.

    தன் வாலில் எரியும் நெருப்பை கடல் நீரில் தோய்த்து அணைத்தபின், அசோகவனத்திற்குச் சென்று அன்னையை வணங்கி, “தாயே! அண்ணலும் இளவலும் எம்மரசன்  சுக்ரீவனும் வெகு விரைவில் தங்களை மீட்க இங்கு வருவார்கள். தயவு செய்து அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடாதீர்கள். ராமன் வரும் வரை காத்திருங்கள்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டான்.

    பின்னர் இலங்கைக் கடற்கரையில் உள்ள அரிஷ்டம் எனும் குன்றின்மீதேறி அங்கிருந்து மேற்கு திசை நோக்கி விசும்பில் தாவினான். இனி, ராமன் உள்ளிட்ட அனைவர்க்கும் அனுமனுக்காகக் காத்திருக்கும் நிலைதான். ’திரும்பிவரும்போது உன்மீது இளைப்பாறுவேன்’ என்று சொல்லியதால் காத்திருந்த மைனாகக் குன்றினை செல்லமாகத் தடவிகொடுத்து, அனுமனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கீழ்க்கடற்கரையில் காத்திருக்கும் அங்கதன், ஜாம்பவான் முதலோரை மகிழ்விக்கும் வண்ணம் “கண்டேன் ஸீதையை” என உரக்க சப்தமிட்டவாறு தரையில் இறங்கினான்.

    வானரர் அனைவரும் அனுமனை ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அனைத்தையும் விவரமாகக் கூறி, “இனி தாமதம் செய்யக்கூடாது. அண்ணல்  இந்நற்செய்திக்காகக் காத்திருக்கிறார். நாம் உடனே கிஷ்கிந்தை சொல்லவேண்டும்” என்று அனுமன் சொல்லவும், அவர்கள் புறப்பட்டனர்.

    விரைவில் கிஷ்கிந்தை அடைந்த பின், கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட ராமனிடம் அனுமன் தனது இலங்கை அனுபவங்களை ஒன்று விடாமல் விளக்கி, ”கற்புக்கரசியான ஸீதையைக் காணும் பாக்கியத்தை தங்கள் அருளால் பெற்றேன்” என்றான். கம்பன் நடையில் அதனைக் காண்போம்:

    உன் குலம் உள்ளதாக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய

    தன் குலம் தன்னதாக்கி தன்னை இத்தனிமை செய்தாள்

    வன் குலம் கூற்றுக்கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து

    என் குலம் எனக்குத்தந்தாள் என்இனிச்செய்வது எம்போய்?

    [என் அன்னையான ஸீதை உனது குலம் உன் புகழால் சிறப்பு பெறுமாறு செய்தாள். உயர்ந்த புகழை உடையவள் தான் ஒருத்தியே என்னும் சிறப்பைப் பெற்ற தான்பிறந்த குலத்தை தன்னால் சிறப்பு பெற்றதாகச் செய்தாள். தன்னைப் பிரித்துத் தனித்து வருந்தும்படி செய்த ராவணனது கொடிய குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர்கள் குலம் நல்வாழ்வு பெறச்செய்தாள். எனது வானர குலத்தை உயர்த்தியதோடு, எவரும் புகழும் சிறப்பை எனக்குக் கொடுத்தாள். இவற்றைவிட இனி அவள் செய்யத்தக்கது  வேறு என்ன இருக்கிறது?]

    மேலும் அனுமன் கூறுவான்: “அண்ணலே! தாங்கள் அவள் கண்ணிலும் உள்ளீர், கருத்திலும் உள்ளீர், காயத்தின் எப்பகுதியிலும் உள்ளீர். கற்பிற்கே அணிகலனாகத் திகழும் அன்னையின் புனித மேனி புழுதி படிந்திருந்தாலும், அல்லும் பகலும் அனவரதமும் தங்களைப் பற்றிய சிந்தனையால் பொலிவு பெற்று விளங்குகிறது. இலங்கையர் கோமானின் ஆர்ப்பாட்டத்தையும் அதட்டலையும் அரக்கிகளின் மிரட்டல்களையும் துரும்பெனக் கருதி லட்சியம் செய்யாவிட்டாலும் ஒருகணம் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்ற அவள் எண்ணத்தை தங்கள் அருளால் இவ்வெளியேன் தடுத்து நிறுத்த முடிந்தது. இன்னும் ஒரு மாதமே காத்திருப்பதாக அன்னை என்னிடம் கூறினாள். ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் அரக்கர் குலத்தை அழித்து அன்னையை மீட்கும் பணியில் ஈடுபடவேண்டும்.”

    பின்னர் ஸீதை கொடுத்த சூளாமணியை அனுமன் பவ்யமாகக் கொடுக்க அதனைப் பெற்றுக்கொண்ட ராமன் தன் மார்பில் வைத்துக் கொண்டன். அவன் கண்கள் குளமாகின. கண்ணீர் ஆறெனப் பெருகிவர, ராமன் “ஸீதையும் நானும் இன்று உயிரோடு இருக்கின்றோம் என்றால் அப்பெருமை உன்னையே சாறும்” என்று சொல்லி அனுமனை அணைத்துக் கொண்டான்.

    முக்திதரும் களிப்பைவிட ராமனின் இந்த அரவணைப்பு மகத்தானது என்பதனை அனுமன் உணர்ந்தான். எவராலும் செயற்கரிய செயலைப் புரிந்து ஸீதை மற்றும் ராமனின் துயர் தீர்த்த இந்த வாயு புத்திரனை ஒரு கணம் கம்ப ராமாயணத் தனியன்களில் ஒன்றான கீழ்க்கண்ட பாடலோடு துதிப்போம்:

    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கினைக் கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

    [ஐம்பூதங்களில் ஒன்றான வாயு தேவனால் பெற்றெடுக்கப்பட்டு, ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் வழியே, ஐம்பூதங்களில் ஒன்றான நீரை (கடலை) தாண்டி இராமனுக்காக்ச் சென்று, ஐம்பூதங்களில் ஒன்றான பூமாதேவி பெற்றெடுத்த ஸீதையைக் கண்டு, பின்பு பகைவர் ஊரான இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தவனான அந்த அனுமன் எம் செயல் இனிதே முடியக் கருணையோடு காப்பானாக.]

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (9)

    ராமஸ்வாமி ஸம்பத்

    இதுவே ராமாயண காவியத்தில் சுந்தர காண்டத்தின் துவக்கம். இதில் சுந்தரனான அனுமனே பிரதான பாத்திரம். இக்காண்டத்தின் இறுதியில்தான் ராமன் வருகிறான். ஆகவே இதனை சுந்தரனின் காண்டம் என்றும் சொல்லாம். ஏழு காண்டங்கள் கொண்ட இக்காவியத்தில் இந்த ஒரு காண்டத்தைத் தவிர ஏனைய காண்டங்கள் காரணப்பெயர் பெற்றவை. இதற்கு மட்டும் ஏன் ‘சுந்தர காண்டம்’ எனப்பெயர் சூட்டப்பட்டிருகிறது என்பதனைச் சற்று ஆராய்வோமா?

    ‘சுந்தரம்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு ’அழகு’ என்று பொருள். இக்காண்டத்தைப் பற்றி ஒரு வடமொழி ஸ்லோகத்தினை இங்கு நினைவுகூர்வது பயனளிக்கும்.

          ’சுந்தரே சுந்தரோ ராமஹ சுந்தரே சுந்தரி கதா

          சுந்தரே சுந்தரி ஸீதா சுந்தரே கிம் ந சுந்தரம்?’

    [சுந்தர காண்ட்த்தில் சுந்தரன் ‘தோள் கண்டார் தோளே கண்டார், தாள் கண்டார் தாளே கண்டார்’ எனப் பார்த்தவர்கள் பரவசிக்கும் எழிலுடை ராமன். சுந்தர காண்டமே ஒரு கவின்மிகு கதை. சுந்தர காண்டத்தின் செளந்தர்ய தேவதை ஸீதை. சுந்தரகாண்டத்தில் எதுதான் அழகில்லாதது?]

    விஸ்வகர்மாவால் குபேரனுக்காக நிர்மாணம் செய்யப்பட்ட எழில் கொஞ்சும் இலங்கை நகரையும், மலர்கள் பூத்துக்குலுங்கும் அசோகவன பூம்பொழில்களையும் வர்ணிப்பதாலும்; அனுமன் தான் முன்பின் பார்த்திராத ஸீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் அழகான அணுகுமுறையாலும்; ராமனின் பேரெழிலை அழகின் இருப்பிடமும் அவநி தனையையுமான ஸீதையிடம் அனுமன் சிலாகித்துக் கூறுவதாலும்;  அழகுக்கே அழகூட்டும் ஸீதையின் கற்புநெறியை ராமனிடம் விவரிப்பதாலும் இக்காண்டத்திற்கு ’சுந்தர காண்டம்’ எனப் பெயர் சூட்டியிருப்பது முற்றிலும் பொருத்தமானதே.

    மஹேந்திரகிரியிலிருந்து கடலைத்தாவி அனுகூல சத்துருக்களான மைனாக பர்வதம் மற்றும் சுரஸை செய்யும் இடர்ப்பாடுகளையும் பிரதிகூலம் செய்ய விழைந்த அரக்கி ஸிம்ஹிகையின் முயற்சியையும் முறியடித்து அனுமன் இலங்கைத் தீவினை அடைந்தான்.

    இலங்கைக் கரையில் குதித்ததும், தன் உருவை சிறிதாக்கிக்கொண்டு மதில்மேல் நடக்க ஆரம்பித்தான். திடீரென்று யாரோ தன் வாலைப்பற்றி இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப்பார்த்த அனுமனுக்கு அந்நாட்டின் காவல் தெய்வமான லங்கிணி கண்பட்டாள். மிக்க உயரத்தோடும் சினத்தினால் சிவந்த கண்களோடும் நீண்ட தெத்திப்பற்களோடும் திறந்த வாயிலிருந்து தொங்கும் நீண்ட நாக்கினாலும் பரட்டைத் தலையோடும் அவள் பயங்கரமாக இருந்தாள்.

    ”மிக தைரியமாக இலங்கை நகருக்குள் நுழையும் நீ யாரடா?” என்று அவள் கர்ஜித்தாள்.

    “எப்படியோ இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். எனக்கு இலங்கை அரசனின் மாளிகையையும் இந்த அழகான நகரத்தையும் காண வெகு நாட்களாக ஆவல். ஆகவே என்னை உள்ளே போகவிடு” என்றான் அனுமன்.

    பேய்போல் சிரித்த லங்கிணி, “அப்படியா, இங்கே வா” என்று கூறி அவனைத் தரதரவென்று இழுத்து அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். இதனை எதிர்பார்க்காத அனுமன் பொத்தென்று கீழே வீழ்ந்தான். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு தன் வலது கை முஷ்டியால் அவள் முகத்தின்மீது பலமாக குத்தினான்.

    வலிபொறுக்காமல் நிலைகுலைந்து வீழ்ந்த லங்கிணிக்கு பழைய நினைவு ஒன்று திரும்பியது. ’ஆஹா! பிரமதேவன் கூறியதுபோல் ராவணனின் இறுதிகாலம் நெருங்கிவிட்டதுபோலும்’ என நினைத்து, அனுமனை வணங்கி, “வானரனே! உனக்கு மிக்க நன்றி. உன்னால் எனக்குச் சற்றும் பிடிக்காத இந்த சேவகத்திலிருந்து விடுதலை கிடைத்துவிட்ட்து” என்று பரிவோடு கூறினாள். வியப்போடு நோக்கிய அனுமனிடம் தன் கதையைச் சொல்லத்தொடங்கினாள்

    ….நான் ஒரு தேவமாது. விஸ்வகர்மாவால் குபேரனுக்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இலங்கை நகரத்திற்கு குபேரன் என்னை காவல் தெய்வமாக நியமித்தான். அவன் மாற்றுத் தாய் மகனான வலிமைமிக்க ராவணன் குபேரனைப் போரில் தோற்கடித்து இந்த ராஜதானியையும் அவனுடைய புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டான். ராவணனின் ஆக்கிரமிப்பைச் சகிக்காமல் நான் பிரமதேவனிடம் சென்று முறையிட்டேன். அவர், “லங்கிணி, நீ அங்கேயே காவல் தெய்வமாக தொடர்ந்து இரு” என்றார். ”எனக்கு பொல்லாத அரக்கனிடம் பணிபுரிய இஷ்டமில்லை” என்று சொன்னபோது, அவர் ”கவலை வேண்டாம். அவன் முடிவுகாலம் வந்ததும் நீ என்னிடம் வரலாம்” என்றார். “அது எப்பொழுது வருமோ?” என்ற என் வினாவிற்கு, பிரமதேவர், “எப்போது நீ ஒரு பலம்வாய்ந்த வானரனால் அடிபட்டுக் கீழே விழுகிறாயோ அப்போதே ராவணனின் முடிவு நெருங்கிவிட்டது என்பதனை அறிவாய். அதன்பின் நீ இங்கு வரலாம்” என்றார்….

    ”வானர நண்பனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எதற்காக கடல்தாண்டி இங்கு வந்திருக்கிறாயோ அம்முயற்சி திருவினையாகும்”  என்று கூறி பிரமலோகத்திற்கு ஏகினாள் லங்கிணி.

    ’ராமனின் அருளால் இந்நகரத்தில் நுழையும் எனக்கு நற்சகுனங்கள் எதிர்ப்படுகின்றன’ என நினைந்தவாறு மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும், நறுமணம் கமழும் மலர்ச்சோலைகளையும், விதவிதமான பறவைகள் கூடி விளையாடும் நீர்நிலைகளையும் கண்டு, ‘இதைத்தான் சொர்க்கபுரி என்பார்களோ?’ என்று அனுமன் வியந்தான். எல்லா மாளிகைகளையும் தேடியபின், அனுமன் ராவணனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அந்தப்புரத்தில் மதிய இளைப்பாறிக் கொண்டிருக்கும் மந்தோதரியைக் கண்டு ஒரு கணம் அவள் ஸீதைதானோ என எண்ணினான். ‘என்ன விபரீதமான எண்ணம். என் அன்னை ஸீதாதேவி அரக்கர்கோன் அந்தப்புரத்தில் எவ்வாறு இருப்பாள்?’ என சமாதானம் செய்துகொண்டு தன் தலையில் ஒரு குட்டு வைத்துக் கொண்டான். மாலை வந்தது. ஸீதையை எங்கும் காணாமல், ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு ‘இத்தனை முயற்சியும் வீண்தானா?’ என்ற வருத்தத்தோடு, ‘ராமா, என் தெய்வமே! இனி நீயே துணைபுரிய வேண்டும்’ என பிரார்த்தித்தான். அதன் விளைவோ என்னவோ, கிழக்கில் பூரணச்சந்திரன் எழுந்தான். அந்த ஒளியில் அனுமனுக்கு அசோகவனம் தென்பட்டது. ‘ஆஹா, இந்த இடத்தில் நாம் தேடவில்லையே’ என நினைத்து அங்கு சென்றான்.

    ஒரு மரத்தின் இலைகளிடையே தன்னை மறைத்துக் கொண்டு, ஸீதை அரக்கிகளிடையே படும்பாட்டைக் கண்டான். அவர்களை கொன்றுவிட்டு அன்னையைக் காக்கவேண்டும் என நினைத்தபோது ராவணன் அங்கு வந்து சேர்ந்தான்.

    வந்த அரக்கர் அரசன், ஸீதையை நோக்கி “என் மனத்தைக் கொள்ளை கொண்டவளே! என்னை ஏன் இப்படி வாட்டுகிறாய்? கடந்த பத்து மாதங்களாக உன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் என்னை ஏன் அலட்சியம் செய்கிறாய்? என் பத்து மணிமுடிகளையும் உன் பாதத்தில் வைக்க சித்தமாக இருக்கிறேன். என்னைத் தோற்கடிக்க மூன்று உலகங்களிலும் யாரும் இல்லை.  சாம கானம் செய்து சிவபெருமானின் அருள் பெற்று அவன் கொடுத்த வாளின் மூலம் எப்பேற்பட்ட எதிரியையும் என்னால் கொல்ல முடியும். நாடு கடத்தப்பட்டு படைபலம் ஏதுமில்லாமல் இருக்கும் உன் கணவனால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. அவனால் இந்த பலத்த பாதுகாப்போடு கூடிய இலங்கையை நெருங்கவும் முடியாது. அந்த மனித பூச்சியை மறந்து விடு. என்னைச் சேர். உன்னை மூவுலகுக்கும் ராணியாகச் செய்கிறேன்” என்றான்.

    அரக்கனின் முகத்தைக் கூட பார்க்காமல், ஒரு துரும்பினை இடையில் நட்டு அதனை நோக்கியவாறு ஸீதை பேசலுற்றாள்: “சாம கானம் செய்து சிவபிரானின் அருள் பெற்றதாக பெருமை பேசுகிறாய். சாம வேததைக் கற்றவன் இப்படி பிறன் மனவியிடம் தகாது நடந்து கொள்ளலாமா? உனக்கு நல்லறிவு புகட்டுவர் யாரும் இலங்கையில் இல்லையா? என் மணாளன் திருமாலை ஒத்தவர். உன்போன்ற நரிகளை எளிதில் வெல்லக் கூடியவர். அது தெரிந்துதான் அவர் இல்லாத போது துறவி வேடம் பூண்டு என்னை ஏமாற்றிக் கடத்திக் கொண்டு வந்துவிட்டாய் போலும். தான் ஒருவராகவே ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் படையாட்கள் கொண்ட உன் சகோதரர்களான கரன், தூஷணன் மற்றும் திரிசிரஸை எல்லாம் தவிடுபொடியாக்கியவர். உன் அழிவு காலம் நெருங்கி விட்டது. நீயும் உன் அரக்கர் குலமும் பிழைக்க வேண்டும் என்றால் என் நாதனிடம் என்னை ஒப்படைத்து சரண் புகுவாய்.” இவ்வாறு ராமனின் பராக்கிரமாத்தையும் சரண் புகுந்தவருக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையையும் பலவாறு விளக்கி ஸீதை விம்மிய வண்ணம் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

    தசகண்ட ராவணன் முகங்கள் கோபத்தில் சிவந்தன. “என் சிறைக் கைதியாக இருந்தாலும் மூவுலகத்தையும் நடுங்க வைக்கும் என்னை மிகவும் அவமதித்து விட்டாய். இன்னும் இரு மாதங்கள் கெடு வைக்கிறேன். அதற்குள் உன் மனதை மாற்றிக்கொண்டு என் அந்தப்புரத்தைச் சேர்வாய். இல்லையேல் கெடு தீர்ந்தபின் நீ எனக்கு காலைச் சிற்றுண்டி ஆவாய். இதனை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு சரியான முடிவை நீ எடுக்கவேண்டும்” என்று உரத்த குரலில் கர்ஜித்துவிட்டு அங்குள்ள அரக்கிகளை நோக்கி, “நீங்கள் யாரும் உங்களுக்கு இட்ட பணியை சரியாகச் செய்யவில்லை. எப்படியாவது அவள் மனத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்” என்று அதட்டிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

    அவன் சென்ற பிறகு அரக்கிகள் ஸீதையிடம் ராவணனின் சிறப்பினை உயர்த்திப் பேசி, நைச்சியமாகவும் பயமுறுத்தியும் அவளை வழிக்குக் கொண்டுவர முயற்சித்தார்கள். “நீ எம்மானை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாங்களே உன்னை விழுங்கி விடுவோம்” என்றாள் அவர்களில் ஒருத்தி. அப்போதே அங்கு வந்த திரிஜடை – ராவணனின் தம்பி விபீஷணனின் மகள் – அவர்களை அதட்டி, “கொடூர மனம் படைத்தவர்களே! வாயை மூடுங்கள். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையின் நிலை மாறுவது உறுதி. நேற்று பிரம்ம முஹூர்த்ததில் நான் ஒரு கனாக்கண்டேன். அதில் ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் மூவரும் அரக்கர் பரிவாரம் புடை சூழ உடலெல்லாம் சாம்பல் பூசிக்கொண்டும் கோணி ஆடை அணிந்துகொண்டும் தென்திசை நோக்கி செல்கின்றார்கள். ஸீதை மணாளன் இங்கு வந்து அவளை ஒரு விமானத்தில் ஏற்றி செல்கிறான். இக்கனவின் பொருளை உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன். ராமனின் வெற்றியும் ராவணனின் வீழ்ச்சியும் உறுதி. அப்போது உங்கள் நிலையை நினத்துப் பாருங்கள்” என்றாள். இதைக்கேட்ட அரக்கிகள் அச்சம் கொண்டு வெளியேறினார்கள். திரிஜடை விம்மி விம்மி அழும் ஸீதையைப் பரிவோடு தேற்றிவிட்டு தன் தந்தையின் மாளிகை சேர்ந்தாள்.

    தனித்து விடப்பட்ட ஸீதை துயரத்தில் ஆழ்ந்தவாறு தன் நிலை குறித்து ஆலோசனை செய்தாள்: ‘என் மனத்திற்கு இனியவரால் கடல் தாண்டி இங்கு வரமுடியுமா? அப்படி வந்து ராவணனைக் கொன்றாலும் அயலார் தேசத்தில் சிறைப்படுத்தப் பட்டிருந்த என்னை ஏற்றுக் கொள்வாரா? எது எப்படியானாலும் இரு திங்கள் கழித்து அந்த அரக்கனுக்கு சிற்றுண்டியாவதைவிட நான் ஏன் இப்போதே என்னை மாய்த்துக் கொள்ளக்கூடாது?’  மனத்தெளிவு கொண்டு ஸீதை அவ்வாறு செய்ய முற்பட்டாள்.

    மறைந்திருந்த அனுமன் அவள் குருக்கத்தி மரத்தின் மெலிந்த கிளை ஒன்றினைத் தன் கழுத்தில் சுற்றிக்கொள்வதைக் கண்டான். ‘ஐயகோ! இது என்ன விபரீதம்? அன்னை தற்கொலை செய்து கொண்டால் ராமன் உள்ளிட்ட அனைவரும் அவ்வாறே செய்வார்கள் அல்லவா? உள்ளம் நைந்த நிலையில் அன்னை எடுத்த இம்முடிவை தடுத்தே ஆகவேண்டும்’ என நினைத்து மெல்ல தன் இனிய குரலில் பேச ஆரம்பித்தான், “ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமான்…”

    இதனைக் கேட்ட  ஸீதை, ’இந்த கடல்சூழ் இலங்கையில் என் மாமனைப் பற்றி ஏதோ விவரணை கேட்கிறதே’ என்று சுற்றிலும் நோக்கினாள். ’அன்னை தற்கொலை முயற்சியைச் சற்று நிறுத்திவிட்டு என் குரலைக் கேட்கிறாள்’ என ஊர்ஜிதம் செய்து கொண்டு அனுமன் தொடர்ந்தான்:

    “பலம் பொருந்திய மாபெரும் தேர் யானை குதிரை காலாட் படைகளைக் கொண்ட அயோத்தி மன்னன் தசரதனின் தவப்புதல்வனான ராமன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டி மகுடத்தைத் துறந்து இல்லாள் ஸீதை இளவல் லக்ஷ்மணனோடு பஞ்சவடியில் வனவாசம் செய்துகொண்டிருந்தான். அப்போது இலங்கை அரசன் ராவணன் வஞ்சகமாக ஸீதையைக் கடத்தி இங்கு சிறைப்படுத்தினான். இவ்விவரங்களை தசரதன் நண்பனான ஜடாயு எனும் பருந்தினிடமிருந்து தெரிந்து கொண்டு, சபரியின் ஆசியோடு தன்னைப்போல் மனைவியை இழந்து வாடும் வானர இளவரசன் சுக்ரீவன் நட்பை நாடி அவன் அண்ணன் வாலியைக் கொன்று அவனுக்குக் கிஷ்கிந்தை அரசு பதவி அளித்து அவன் மனைவி ருமையையும் மீட்டுத்தந்தான். சுக்ரீவன் ஆணைப்படி வானர வீரர்கள் நான்கு திக்குகளிலும் அன்னை ஸீதையைத் தேடுகின்றனர். தென்பகுதித் தேடலுக்கு அனுமன் எனும் பெயர்கொண்ட நான் நியமிக்கப்பட்டேன். ராமபிரானின் அருளால் நான் கடல் தாண்டி இங்கு வந்து அந்த கற்புக்கரசியைக் கண்டுகொண்டேன்.”

    இவ்வாறு கூறி அவன் நிறுத்தியதும், ஸீதை நான்குபுறமும் நோக்கி மரத்தின்மீது அமர்ந்திருக்கும் அனுமனைக் கண்டாள். ‘இது கனவா, உண்மையா?’ என்று நினைத்து, ‘கனவில் வானரத்தைப் பார்த்தால் அபசகுனம் என்பார்களே’ என்று கலங்கினாள். ‘இல்லை இது கனவல்ல. இதோ அவ்வானரன் கீழே இறங்குகிறானே. ஒருவேளை இது அரக்கர்களின் மாயையோ?’ என்று அச்சம் கொண்டாள்.

    அன்னையின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்த அனுமன், “அம்மா! நான் ராமனின் தூதன். வாயு புத்திரனான என் பெயர் அனுமன். என்னை நம்புங்கள். தங்களுக்கும் அவர்க்கும் மட்டும் தெரிந்த சில நிகழ்வுகளை அவர் கூறியபடியே சொல்கிறேன். அப்போதாவது என்னைப் பற்றிய உண்மை தங்களுக்கு தெரியவரும்” என்று சொல்லி அவற்றை ஒன்றொன்றாக விவரித்தான். அவற்றில் ஒன்றினை பெரியாழ்வாரின் பாசுரத்தில் பார்ப்போமா?

    அல்லியம்பூ மலர்க்கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்

    சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே!

    எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓரிட வகையில்

    மல்லிகை மாமாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

    [அல்லிமலர் மாலை போன்றவரே! மலர்க்கண்களையும் மடப்ப குணமும் உடைய மான் போன்றவரே! அடியேன் விண்ணப்பம் கேட்டருள்க. பெருமானும் தேவரீரும் தனியாக இனிதிருந்த இடத்தே, இரவிலே ஒரு மல்லிகை மாலை கொண்டு அவரைத் தேவரீர் கட்டியதும் ஓர் அடையாளம் ஆகும்]

    இங்கு ஒரு சிறிய விளக்கம். பஞ்சவடியில் ஒருமுறை அண்ணலும் அவளும் ஒரு போட்டியில் ஈடுபட்டனர். அதில் எவர் வெற்றி  பெறுகிறாரோ அவர் மற்றவரைக் ஒரு தூணில் கட்டவேண்டும். வெற்றிபெற்ற ஸீதை தன் மணாளனை கயிற்றினால் வலிக்க வலிக்கக் கட்டுவாளா? ஆகவே ஏகாந்தமான ஓரிரவில் யாரும் காணாவண்ணம் நீண்ட மல்லிகைச் சரம் ஒன்றினைக் கொண்டு அவனைக் கட்டினாள்.

    இப்படி பல அந்தரங்க அடையாளங்களைக் கூறியதோடு அனுமன் ராமன் கொடுத்த மோதிரத்தையும் அவளிடம் பவ்யமாகக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட ஸீதை உள்ளத்தில் மகிழ்ச்சி அலைமோத அனுமனை மனமார ஆசீர்வதித்து ”என் துயரைத் துடைத்த நீ நீடுழி வாழ்வாயாக!” எனறாள். அனுமனை ‘ஜானகி சோக நாசனன்’ என்று பக்தர்கள் போற்றுவார்கள். அவன் பெருமைதான் என்னே! இப்புவியில் ஆண் மக்கள் அனைவரும் அனுமனைப்போல் அபலை நங்கையரின் துயர் நீக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    அதன் பின்னர் ஸீதை தன் கூந்தலில் இருந்த  சூளாமணியை அனுமனிடம் கொடுத்து அதனை ராமபிரானிடம் சேர்க்குமாறு வேண்டினாள். “என் மணாளனிடம் இன்னும் ஒரே மாதம்தான் அவர் வருகைக்குக் காத்திருப்பேன் என்று சொல்” என்றாள்.

    இதற்கான அனுமனின் பதிலை ஆதிகவி வால்மீகி மொழியில் கேட்போம்:

    நிவ்ருத்த வனவாசம் தம் த்வயா ஸார்தம் அரிந்தமம்

    அபிஷிக்தம் அயோத்யாயாம் க்‌ஷிப்ரம் த்ரக்ஷ்யஸி ராகவம்.

    [”மாது சிரோமணியே! உனது கணவன் சத்ருக்களை அழிக்கப்போகும் பராக்ரமசாலி. அவன் வெற்றி பெறுவான். நீ அவனுடன் இணைவாய்; வனவாசம் பூர்த்தியாகி வெற்றி வீரனாக அயோத்தி திரும்பியதும் நீங்கள் இருவரும் அரியணையில் இணைபிரியாது வீற்றிருக்க பட்டாபிஷேகம் நிகழப் போகிறது.” தீர்க்க தரிசனத்தோடு வெகு அழகாக  அனுமன் ராமன் முடிசூடப்போவதை அன்னையிடம் சொல்லிவிட்டான். சுந்தரம் பொருந்திய ராமனின் பட்டாபிஷேகத்தை முன்கூட்டியே சுந்தரமாக நடத்திவிட்டான் சுந்தர காண்ட நாயகனான சுந்தரன் எனப்பெயர் கொண்ட அனுமன்].

    பின்னர் அசோகவனத்தை நீங்கி இலங்கை மன்னனின் பலத்தை அறிய நகருக்குள் சென்றான்.

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (8)

    ராமஸ்வாமி ஸம்பத்

    அண்ணன் ஆணைப்படி லக்ஷ்மணன் சுக்ரீவனை கிஷ்கிந்தை அரசனாகவும் அங்கதனை அந்நாட்டின் இளவரசனாகவும் முடிசூட்டினான். மகிழ்ச்சிகொண்டு சுக்ரீவன் மது அருந்தியும் காம கேளிக்கைகளில் ஈடுபட்டும் அப்போதே தொடங்கிய கார்காலம் முழுதையும் கழித்தான். ராமனும் இளைய பெருமாளும் ஒரு குஹையில் வாசம் செய்தனர். சுக்ரீவனுக்குக் கார்காலம் பறந்து சென்றதென்றால் ராமனுக்கு ’இந்த ருதுவிற்கு ஒரு முடிவு உண்டோ’ என எண்ண வைத்தது. ஸீதையின் நினைவில் துயருற்ற அண்ணலை லக்ஷ்மணன் ஆறுதல் சொல்லி “அனுமன் போன்ற வானர வீரர்கள் உதவியுடன் ஜனகபுத்திரியை விரைவில் மீட்போம்” என்று சூளுரைத்தான்.

    கார்காலம் ஓய்ந்து, ’மாரி மலை முழஞ்சில் மன்னிக்கிடந்த’ ராமன் மனக்கவலையோடு ’சுக்ரீவன் ஏன் இன்னும் ஸீதையைத் தேடுவதற்கு ஆயத்தம் செய்யவில்லை? ஒருவேளை அமிதமான கேளிக்கைகளில் ஈடுபட்டு கொடுத்த வாக்கினை மறந்து விட்டானோ?’ என நினைத்தான். லக்ஷ்மணனை அழைத்து “தம்பி, நீ உடனே சுக்ரீவன் அரண்மனைக்குச் சென்று, ’வாலியை வதைத்த அதே அம்பு நன்றி மறந்தவரையும் வீழ்த்த சித்தமாக உள்ளது’ என்று அவனிடம் சொல்” என ஆனையிட்டான்.

    கோபக்கனல் தெரிக்க அரண்மனையில் நுழைந்த லக்ஷ்மணனை தாரை எதிர்கொண்டு, நிலைமையை தான் சரிசெய்வதாகச் சொல்லி இளவலின் சினத்தை அடக்கினாள். பின்னர் அங்கதனுடன் அந்தப்புரத்திற்குச் சென்று, சுக்ரீவனது  அலட்சியத்தைச் சாடி புத்தி புகட்டினாள். தெளிவுபெற்ற சுக்ரீவன், ராமனிடம் மன்னிப்புக் கோரினான். பாதம் பணிந்த வானரனைத் தழுவி ராமன் அடுத்து செய்ய வேண்டிய ஸீதை தேடல் முயற்சி குறித்து அவனுடன் ஆலோசனை செய்தான். அதன்படி சுக்ரீவன் நான்கு திக்குகளிலும் வானரப்படைகளை அனுப்பினான். தென் திசைக்கு அனுமன், அங்கதன், ஜாம்பவான் உள்ளிட்ட பெரும்படை அனுப்பப்பட்டது. ஒரு சில வாரங்களுக்குப்பின் கீழ், மேல், வட திசைகளுக்குச் சென்றவர் ஸீதையை எங்கும் காணாமல் கைவிரித்த வண்ணம் திரும்பினர்.

    ராமனின் உள்ளுணர்வு ’அனுமன் நிச்சயம் வெற்றிபெறுவான்’ என்று கூறியதால், அவன் தனக்கும் ஸீதைக்கும் மட்டுமே தெரிந்த சில தகவல்களை அனுமனிடம் சொல்லி தன் மோதிரத்தையும் கொடுத்திருந்தான். “இவ்வடையாளங்களால் ஸீதைக்கு உன்மீது நம்பிக்கை ஏற்படும்” என்றும் கூறியிருந்தான்.

    தென் திசை சென்ற வானரர்கள் பல அரண்யங்களிலும் மலைகளிலும் தேடி பசி தாகத்தால் களைத்தவராய் பிலம் என்னும் ஒரு குஹையை அடைந்தனர். குஹையின் உள்ளே குளிர்ந்த காற்று வீசியது. ஒரு அழகான சிறிய நகரம் காணப்பட்டது. பலவிதமான பழவகைகளைத் தாங்கும் தருக்கள்   நிறைந்திருந்தன. மனித, விலங்கு நடமாட்டமே அங்கு இல்லை. இவற்றின் நடுவே ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்த ஒரு தேவகன்னிகை அவர்களை கோபம் பொங்கும் கண்களோடு நோக்கினாள்.

    அனுமன் அவள் அருகே சென்று, “அன்னையே, தாங்கள் யார்? இந்த அத்வானமான இடத்தில் தனிமையில் என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினான்.

    “முதலில் நீ யார் என்று சொல். யாரும் நுழைய அச்சப்படும் இக்குஹையில் எவ்வாறு நுழைந்தீர்கள்? இங்கு வந்தவர் யாரும் வெளியே செல்லமுடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?”

    “அன்னையே, சினம் வேண்டாம். நாங்கள் வானர அரசன் சுக்ரீவனின் ஆணைப்படி அவர் உற்ற நண்பன் ராமபிரானின் மனைவியான ஸீதையைத்தேடி அலைகிறோம். அவள் அரக்கர்கோன் ராவணனால் கடத்தப்பட்டு விட்டாள்.”

    ’ராமன்’ எனும் சொலைக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்த்து.

    “வானரர்களே, வருக, வருக. உங்களுக்காகவே காத்திருக்கிறேன்” என்று சொல்லி, “முதலில் உங்கள் பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றாள். அதன்பின் அவள் தன் கதையைக் கூற முற்பட்டாள்.

    ….என் பெயர் சுயம்பிரபை. நான் இந்திரலோகத்தைச் சேர்ந்தவள். எனது உற்ற தோழி ஹேமையும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த மயன் என்னும் நகர நிர்மாண நிபுணனும் ஒருவரை ஒருவர் விரும்பி இந்த குஹையில் பலநாட்கள் ஆனந்தமாக்க் கழித்தனர். அவர்களுக்குக் காவலாக நான் இங்கிருந்தேன். காணாமற்போன  எங்களைத்தேடி வந்த இந்திரன் கோபமுற்று, அவ்வரக்கனைக் கொன்று, ஹேமையைச் சாடி, “நீ ஏன் வரம்பு மீறினாய்?” என்று கேட்டபோது, அவள் என்னைச் சுட்டிக்காட்டினாள். இந்திரன், “இந்த தகாத காரியத்திற்கு உடந்தையாக இருந்ததால், நீ இந்த பில நகரத்திலேயே தனித்திருந்து வாடுவாயாக” என்று என்னை சபித்தான். ”எனக்கு விடிவு கிடையாதா?” என்று மன்றாடிய என்னை நோக்கி, “என்றாவது ஒருநாள் வானரவீரர்கள் ராம காரியத்திற்கு உதவும் பொருட்டு இங்கு நுழைந்து வெளியே செல்ல வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு சகாயம் செய்தபின், நீ நம் உலகிற்கு வந்து சேரலாம்” என்றான் வானரசன். அன்றிலிருந்து உங்கள் வருகைக்காக தவமிருந்து வருகிறேன். என் தவம் பலித்தது இன்று….

    பின்னர், சுயம்பிரபை தன் தவ வலிமையினால் வானர வீரர் அனைவரையும் கீழைக்கடலோரம் சேர்ப்பித்து வானுலகுக்கு ஏகினாள்.

    கடற்கரை அருகே நின்ற வானரர்கள், வியப்போடும் கவலையேடும் ‘இனி என் செய்வோம்’ என ஆலோசனையில் வீழ்ந்தனர். அங்கதன், “நமக்குக் கொடுத்த கெடு தீர்ந்துவிட்டது. எனக்கு அன்னையைக் காண்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது. ஸீதையைக் குறித்த தகவலில்லாமல் கிஷ்கிந்தை சென்றால் சிற்றப்பன் என்னைக் கொன்றுவிடுவான். ஆகவே நான் இங்கேயே உண்ணாவிரதம் இருந்து உயிரை விடப்போகிறேன்” என்று சொல்லி தரையில் தர்ப்பைகளைப் பரப்பி அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அனைத்து வானரர்களும் அவ்வாறே செய்தனர்.

    இவற்றையெல்லாம் அருகே உள்ள குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதிய பிராயத்தை அடைந்திருந்த மாபெரும் பருந்து மகிழ்ச்சியுடன், ’அப்பாடா, இந்த குரங்குக் கூட்டம் இவ்வாறு உயிர் நீத்துவிட்டால் எனக்குக் கொஞ்ச காலத்துக்கு உணவு பற்றிய கவலையே இருக்காது’ என நினைத்தது.

    கடலில் நீராடிவிட்டு வந்த அனுமனும் ஜாம்பவானும் அங்கதனைச் சாடினர். “கிஷ்கிந்தை இளவரசனான நீயே நம்பிக்கை இழக்கலாமா? ஸீதையைக் காணாவிட்டால் என்ன? நாமெல்லாரும் எவ்வாறாகினும் இலங்கை சென்று அந்த ராவணனுடன் போராடுவோம். கிழப்பருந்தான ஜடாயு அச்சமில்லாமல் ராவணனுடன் உக்கிரமாக போராடி உயிர் விடவில்லையா? நாமும் அந்த பொல்லா அரக்கனைத் தாக்குவோம்” என்று அனுமன் கூறினான்.

    ஜடாயுவின் பெயரை அனுமன் சொன்னதும், குன்றிலிருந்த பருந்து “என்ன? என் அருமைத் தம்பி ஜடாயு இறந்து விட்டானா?” என்று கதறி “வானரர்களே, இறக்கைகள் இல்லா என்னை இந்த குன்றிலிருந்து இறக்குங்கள். நான் உங்களுடன் பேசவேண்டும்” என்று அலறியது.

    அனுமன் உடனே அதனை மெள்ள கீழே இறக்கினான். “வானரர்களே, என் பெயர் ஸம்பாதி. நானும் என் இளவல் ஜடாயுவும் அருணனின் புத்திரர்கள். என் தம்பியை ராவணன் கொன்றுவிட்டானா? அந்த விவரத்தை எனக்குக் கூறுங்கள்” என்றது அப்பருந்து.

    ஜாம்பவான் ஜடாயு எவ்வாறு மரணமடைந்தான் என்பதை விளக்கினான். “ராமனின் மனைவி ஸீதையைக் கவர்ந்து செல்லும் ராவணனைத் தடுக்க அவனை ஜடாயு பலவிதமாக தன் அலகினாலும் இறக்கைகளாலும் தாக்கினான். கோபம் கொண்ட அரக்கன் தனக்கு சிவபெருமான் வரமாகக் கொடுத்த வாளினால் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டியதோடு அவனைக் குற்றுயிரும் கொலை உயிருமாக வீழ்த்தினான். ஸீதையைத் தேடி அங்கு வந்த ராமனிடம் உன் தம்பி நடந்ததைக் கூறி உயிர் நீத்தான்.”

    ஸம்பாதி ஜடாயுவின் தீரத்தை மெச்சி, “நானும் அந்த அரக்கன் ஒரு பெண்ணைக் கடத்தி தென்கிழக்கு திசையில்  செல்வதைப் பார்த்தேன். ஓ! அவன் ராவணனா?” என்றான்.

    அனுமன் ஸம்பாதியிடம், “நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்யவேண்டும். உங்கள் கூர்ந்த பார்வையால் ராவணன் சென்ற திக்கை நோக்கி அவன் ஸீதையை எங்கு சிறை வைத்துள்ளான் என்பதனைக் கண்டு சொல்லவேண்டும்” என்றான்.

    ஸம்பாதி தன்னை மீண்டும் அக்குன்றில் ஏற்றிவைக்குமாறு பணித்தான். அனுமன் அவ்வாறே செய்ய, தனது தொலை நோக்கும் திறனால் இலங்கையில் அரக்கிகளைடையே ஸீதை படும் துயரினை விவரித்தான். அவ்வாறு அவன் சொல்லும்போதே அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸம்பாதியின் இறக்கைகள் மீண்டும் வளர ஆரம்பித்தன.

    “ஆஹா! சூரிய பகவான் ’ராம காரியத்திற்கு உதவி செய்தால் எரிந்துபோன உன் இறக்கைகள் மீண்டும் முளைக்கும்’ என்று முன்பு சொன்னது பலித்து விட்ட்தே” என்று மகிழ்வோடு அந்த வரலாற்றை விவரிக்க ஆரம்பித்தான்.

    …..இள வயதில் நானும் ஜடாயுவும் யார் உயர உயரப் பறக்க வல்லவர் என்று போட்டியிட்டோம். அவ்வாறு பறந்து சூரிய மண்டலத்தையே எட்டிவிட்டோம். கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியாத ஜடாயு “அண்ணா என்னைக் காப்பாற்றுங்கள்” என அலறினான். நான் உடனே அவனைவிட உயரப் பறந்து என் இறக்கைகளால் அவனை சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து காப்பாற்றினேன். இந்த முயற்சியில் என் இறக்கைகள் எரிந்து சாம்பலானதால் நான் இக்குன்றின்மீது வீழ்ந்து விட்டேன். இதை அறியாத ஜடாயு தன்னிடத்திற்குச் சென்றுவிட்டான். எரிச்சலில் கதறிய என்னை சூரிய பகவான் பரிவோடு பார்த்து, “ஸம்பாதி, கவலை வேண்டாம். என்றாவது ஒரு நாள் ஸீதையைத் தேடிக்கொண்டு இக்கடற்கரைக்கு வானரர்கள் வருவார்கள். அவர்களுக்கு நீ உதவி செய்தால் உன் இறக்கைகள் மீண்டும் வளர்ந்துவிடும்” என்றார். அதன்படி ராம காரியத்திற்கு சகாயம் செய்ய நானும் இத்தனை காலமாகக் காத்திருந்தேன். உங்கள் நல்வரவால் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. நானும் உய்ந்தேன்….

    ”வானரர்களே, நீங்கள் அனைவரும் இங்கிருந்து நூறு யோசனை தூரத்தில் உள்ள இலங்கை செல்வது கடினம். உங்களில் பலம் பொருந்திய ஒருவனை ஸீதையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்துங்கள்” என்று சொல்லி ஸம்பாதி தன்வழியே பறந்து சென்றான்.

    அதன்பின் ஜாம்பவான் தலைமையில் ஆலோசனை நடந்தது. எல்லாருடைய சக்தியையும் ஆராய்ந்து அவன் இந்த செயற்கரிய செயலை செய்ய வல்லவன் அனுமனே என்ற முடிவுக்கு வந்தான். பின்னர், ஜாம்பவானே அனுமனைப் பலவாறு சிலாகித்து உற்சாக மூட்டினான். ’சுந்தரன்’ எனும் பெயரையும் பெற்றிருந்த அனுமன் பெரிய உருக்கொண்டு இந்த அசாத்திய செயலைச் சாதிக்க, ராம நாமத்தினை ஜபித்தவாறு  மஹேந்திர மலையிலிருந்து இலங்கை நோக்கித் தாவ முற்பட்டான்.

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (7)

    ராமஸ்வாமி ஸம்பத்

    ரிச்யமுக மலையில் அச்சத்தோடு காத்திருந்த சுக்ரீவனுக்கு அனுமன் ராம லக்ஷ்மணர்களை அறிமுகம் செய்வித்து ”இவர்கள் ஸீதாதேவியை அரக்கன் ராவணனிடமிருந்து மீட்க தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறார்கள்” என்று பகர்ந்தான். அச்சம் நீங்கிய சுக்ரீவனும் தான் வாலியிடம் பட்டபாடு அனைத்தையும் விவரித்தான்..

    …..நானும் அண்ணன் வாலியும் ரத்தபாசத்தோடு கிஷ்கிந்தையில் வாழ்ந்த நாட்களில் பலசாலியான மாயாவி என்னும் அரக்கன் வாலியை மல்யுத்தத்திற்கு அழைத்தான். இருவருக்குமிடையே நடந்த உக்கிரமான போரில் இருவரும் ஒரு குஹைக்குள் நுழைந்தனர். அண்ணன் என்னை வெளியே காத்திருக்கச் சொன்னான். நாட்கள் உருண்டோடின. ஒருநாள் குஹையிலிருந்து பெருகிவந்த குருதியைப் பார்த்து வாலியை மாயாவி கொன்றுவிட்டான் எனக்கருதி அவ்வரக்கன் வெளியே வராதபடி அக்குஹையை ஒரு பெரிய பாறையால் மூடிவிட்டு நகர் திரும்பினேன். வானர மூத்தோர் கேட்டுக்கொண்டபடி கிஷ்கிந்தை அரியணை ஏறினேன். திடீரென ஒரு நாள் வாலி நாடுதிரும்பி என்மீது சினம் கொண்டு, ‘மோசக்காரா, என்னைக் குஹையில் அடைத்துவிட்டு என்னரசை கைப்பற்றிவிட்டாயா’ என்று கூறி என்னை நையப்புடைத்து, ‘இனி உன் உறவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி என் மனைவி ருமையையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டே துரத்திவிட்டான். நானும் ஏனைய அமைச்சர்களும் எவ்வளவு விளக்கியும் வாலியின் கோபம் அடங்கவில்லை. மேலும் நான் எங்கு சென்றாலும் அங்கு வந்து என்னைத் துன்புறுத்த ஆரம்பித்தான். முன்பு துந்துபி எனும் அரக்கனைக் கொன்றபின் வாலி தன் காலால் அந்த சவத்தை உதைத்தபின் அது அருகாமையில் உள்ள மதங்கரின்  ஆசிரமத்தில் வந்து வீழ்ந்த்து. அதனால் சினம்கொண்ட அம்முனிவர், ‘எவனால் இப்புனித ஆசிரமம் கறையடைந்ததோ அவன் இம்மலையில் அடியெடுத்து வைத்தால் அவன் தலை சுக்குநூறாக உடையக்கடவது’ என சாபமிட்டார். அதனால் இங்கு வாலி வரமுடியாது. ஆகவே நான் இங்கு ஒளிந்து வாழ்கிறேன்…

    “ராமா! நம்மிருவர் சோகமும் சமமாக இருப்பதால் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். முதலில் நீங்கள் வாலியைக் கொன்று என் ருமையை மீட்டுக் கொடுத்தபின், நான் உங்களுக்கு ஸீதாதேவியை மீட்க உதவுகிறேன்” என்றான் சுக்ரீவன்.

    “அப்படியே” என்றான் ராமன். பின்னர் அவர்கள் இருவரும் அக்கினி சாட்சியாக நட்பு செய்துகொண்டனர். அதேநேரத்தில் இலங்கைச் சிறையில் உள்ள ஸீதை, வாலி மற்றும் அரக்கர்கோன் ராவணன் இம்மூவரின் இடது கண்களும் துடித்தன.

    இருந்தாலும் சுக்ரீவனுக்கு ’ராமனால் மகாபலம் பொருந்திய வாலியை வதம் செய்யமுடியுமா?’ எனும் ஓர் ஐயம் ஏற்பட்டது. மலைப்பகுதியில் கிடந்த துந்துபியின் எலும்புக்கூட்டினைக் காட்டி, ”தொலை தூரத்தில் உள்ள கிஷ்கிந்தையிலிருந்து வாலி தன் காலால் அவ்வரக்கனின் சடலத்தை இங்கு விழச்செய்தான். அத்தகைய பலசாலி என் அண்ணன்” என்றான். அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ராமன் தன் வலது கால் கட்டைவிரலால் அந்த எலும்புக்கூட்டினை பல யோசனை துரத்திற்கப்பால் விழச்செய்தான். “இது இப்போது காய்ந்துபோன எலும்புக்கூடல்லவா?” என்று கூறிய சுக்ரீவன்மீது சினம் கொள்ளாமல், “நண்பா, உன் ஐயப்பாடு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்தால் உனக்கு என் பராக்கிரமத்தின்மீது நம்பிக்கை உண்டாகும்?” என்றான் ராமன்.

    சுக்ரீவன் அம்மலையில் வளர்ந்திருக்கும் ஏழு மரா மரங்களைச் சுட்டிக்காட்டி, “சிறுவயதில் நானும் அண்ணனும் இங்கு விளையாட வருவோம். அப்போதெல்லாம் வாலி ஒரு மரத்தைப் பற்றி  வேகமாக ஆட்டுவான். உடனே ஏனைய மரங்களும் புயலில் சிக்கியதுபோல் ஆடும். அப்படிப்பட்ட வல்லவன் வாலி” என்றான்.

    முகத்தில் இளநகையோட ராமன் தன் வில்லிலிருந்து ஒரு அம்பை எய்ய, ஒரே சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக இருந்த அவ்வேழு மரங்களும் சடசடவென சாய்ந்தன. மகிழ்ச்சியில் திளைத்த சுக்ரீவன், “ராமா என்னை மன்னியுங்கள். வாலியின் வலிமையை  நன்கறிந்த நான் அதனை உங்களுக்குச் சொல்ல முற்பட்டேன்” என்று கூறி அவன் அடிபணிந்தான்.

    அவ்வளவில் அம்மரங்களின் வேரடியில் உறங்கிக் கொண்டிருந்த வாசுகி என்னும் அரவரசன் எழுந்து ராமன் கண்களுக்கு மட்டும் தெரிந்தவாறு, “அண்ணலே, கிருத யுகத்தில் அமிர்தத்திற்காக பாற்கடலில் வடவரையை மத்தாக்கி என்னை நாணாக்கிக் கடைந்தபோது, என் உடலில் ஏற்பட்ட காயங்களைத் தங்கள் திருக்கரத்தின் ஸ்பர்சத்தினால் ஆறவைத்தீர்கள். அப்போது நான் என் களைப்பு நீங்க உறங்க ஒரு இடம் தேவை என்றேன். ‘யாரும் சுலபமாக நெருங்க முடியாத ரிச்யமுகத்தில் உறக்கம்கொள். அடுத்த திரேதா யுகத்தில் நான் மானிடனாக ராமன் எனும் பெயரோடு அவதரித்து அங்கு வருவேன். அந்த ராமன் வரும் வரை காத்திரு. நெளிந்திருக்கும் உன் உடல்மீது ஏழு மரா மரங்கள் வளர்ந்து எனக்கு அடையாளம் காட்டியவாறு நிற்கும்  (அதனால்தான் வாலி ஒரு மரத்தை ஆட்டும்போது வாசுகியின் நெளிவால் இதர மரங்களும் ஆடின). உன்மீது வளர்ந்த அம்மரங்களை நான் வீழ்த்தியதும் நீ களைப்பு நீங்கி உன் இடத்திற்குச் செல்லலாம்’ என்றீர்கள். உங்கள் கருணைக்கு நன்றி. இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று கூறி வணங்கி தன்னிடம் சேர்ந்தான்.

    வாசுகி அகன்றதும், ராமன், “சுக்ரீவா, இனி தாமதிக்க வேண்டாம். நாளை காலை நீ வாலியை வலுச்சண்டைக்கு இழு. நீங்கள் இருவரும் மல்யுத்தம் செய்யும்போது நான் வாலியைக் கொல்கிறேன்” என்றான்.

    அப்படியே சுக்ரீவன் செய்ய, ராமன் சற்று ஆலோசனையில் விழுந்த அளவில் வாலி சுக்ரீவனை பலவாறு தாக்கி மண்ணில் புரட்டி எடுத்தான். அடிபட்ட இளவானரன் அலறியடித்துக் கொண்டு ராமனிடம் ஓடி வந்து, “உன்னால் வாலியைக் கொல்ல முடியாதென்றால் எதற்கு என்னை ஏவிவிட்டாய்? நான் பேசாமல் இங்கேயே இருந்திருப்பேன் அல்லவா?” என்று குரோதம் பொங்கக் கதறினான்.

    ராமன் அவனை பரிவோடு தடவிக்கொடுத்து, “நண்பா, என்னை மன்னிக்கவேண்டும். இதற்கு முன் நான் வாலியைப் பார்த்ததில்லை. இரட்டையாரான நீங்கள் ஒரே உரு கொண்டிருப்பதால் என்னால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இப்போது லக்ஷ்மணன் உனக்கு ஒரு மலர்க்கொடியை மாலையாக அணிவிப்பான். இந்த வித்யாசத்தால் நான் வாலியை இலகுவாக அடையாளம் கண்டு கொண்டு அவனை வீழ்த்துகிறேன் பார்” என்றான்.

    சுக்ரீவன் வாலியை மீண்டும் யுத்தம்புரிய விளித்தான். மனைவி தாரை தடுத்தும் கேளாமல் வாலி வெளிவந்து சுக்ரீவனோடு மல்யுத்தம் செய்தபோது ராமனின் அம்பு கிஷ்கிந்தை மன்னனைத் தாக்கி வீழ்த்தியது. தன்னைக் கொல்ல வல்லவன் யார் என்று நினைத்து அந்த அம்பினை வாலி நோக்கியபோது, கம்ப நாட்டாழ்வார் வர்ணிப்பது போல்,

    மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

    தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

    இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

    செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்.

    [மூன்று உலகங்களுக்கும் முக்கிய மந்திரமாக உள்ளதும், தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தம்மையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவதும், இப்பிறவியிலேயே இனிவரும் ஏழு பிறவி என்னும் நோய் வராது, தான் தனியே தடுக்கவல்ல உயர்ந்த மருந்து போன்றதுமான ‘இராம’ என்ற சிறப்பு பொருந்திய பெயரைத் தன் கண்களால் அந்த அம்பிலே வாலி கண்டான்]

    உடனே சினம் மேலோங்க, “மறைவிலிருந்து கொல்வதுதான் சத்யபராக்கிரமனான உன் தர்மமோ?” என்று வாலி பரிகசித்து ராமன்மீது வசைமாரி பொழிந்தான். பின்னர் இருவருக்கும் நடந்த வாக்குவாத முடிவில் வாலி தன் பிறன் மனைவியைக் கவர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, “ராமா, நாங்கள் வானரர்கள். தவறு செய்வது எங்கள் இயல்பு. வருங்காலத்தில் என் தம்பி தவறேதேனும் செய்தால் அவன்மீது இதே அம்பை எய்துவிடாதே. அவனுக்கும் என் மகன் அங்கதனுக்கும் இனி நீதான் காப்பு” என்று சொல்லி உயிர் நீத்தான்.

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (6)

    ராமஸ்வாமி ஸம்பத்

    சபரி கூறியதுபோல் ரிச்யமுகத்தில் நல்மனம் படைத்த வானர வீரன் அனுமன் ராமன் வருகைக்காகக் காத்திருந்தான். அனுமன் வாயு புத்திரன். பதினொரு ருத்திரர்களில் ஒருவன். ராமாவதாரம் எடுக்கும் முன் திருமால் எல்லா தேவர்களையும் தன் காரியத்திற்கு உதவும் பொருட்டு பூமியில் பிறக்குமாறு பணித்தார். இதைக்கேட்ட பரமேஸ்வரன் வைகுண்டத்திற்கு ஏகி நாரணனிடம் “நானும் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் பரமாத்மா” என்றார். பரமபதநாதன் மலர்ந்த முகத்தோடு, “பரம்பொருளே! உங்கள் ஆசி ஒன்றே போதும்” என்றார்.

    “இல்லை இல்லை. நான் கட்டாயம் உங்களுக்கு உதவுவதற்கு பதினோராவது ருத்திரனாக அவதரிக்கப் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டார். அப்பரமனே அனுமனாக. வானர குலத்தைச் சேர்ந்த அஞ்சனாதேவிக்கு வாயு புத்திரனாக உதித்தார். பிறந்தவுடனே சூரியனை ஒரு பழமாகக் கருதி அதனை விழுங்கும் பொருட்டு அனுமன் வான்நோக்கித் தாவினான். சூரியனுக்கு ஆபத்தென இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கினான். நிலைகுலைந்து கீழே வீழ்ந்த அனுமனைக்கண்டு வாயு சினம் மேலோங்க மூவுலகிலும் காற்று இல்லாமல் செய்தான். இதனால் ஏற்பட்ட சீரழிவை நீக்க, பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் வாயுவை நாடினர். “என் மகனுக்கு உங்கள் சக்தியை அளித்தால்தான் என் கோபம் தணியும்” என்று வாயுதேவன் கூற அனைவரும் அவ்வாறே செய்ய அனுமன் மிக்க பலசாலியும் அறிவாளியுமானான். அவனுக்கு சூரியன்  ஆசானாகி வேதநெறிகளையும், ஏனைய சாஸ்திரங்களையும், நவவியாகரணங்களையும் கற்பித்தான். குருதக்ஷிணை அளிக்க முற்பட்ட அனுமனை நோக்கி, “நீ என் மகன் கிஷ்கிந்தை இளவரசன் சுக்ரீவனுக்கு அமைச்சனாகி சேவை புரி.  பின்னர் ஸ்ரீமந்நாராயணனின் அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவருக்கு துணையாகப் பணியாற்று” என்று ஆதவன் ஆணையிட்டான். அப்போதிலிருந்து ராமன் வருகையை எதிர்நோக்கியவாறே சுக்ரீவனின் அந்தரங்க அமைச்சனாகக் திகழ்ந்தான் அனுமன்.

    ரிச்யமுகத்தின் எல்லையை நெருங்கிய ராம லக்ஷ்மணர்களை  வானர இளவரசன் சுக்ரீவன் சாரணர்கள் மூலம் அறிந்து, ‘அவர்கள் வாலியின் கையாட்களாக இருப்பார்களோ’ என பயந்து அனுமனை அழைத்து, ”யாரோ வில்லேந்திய இருவர் நமது மலை நோக்கி வருகிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல் எனக்கு வேண்டும். ஒருவேளை அவர்கள் வாலியின் ஆட்களாக இருந்தால் அவர்களை இங்கு வராமல் தடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டான்.

    சுக்ரீவனை வணங்கி அனுமன் ஒரு அந்தணவேடம் பூண்டு ராம லக்ஷ்மணர் அருகே சென்றான். அவர்களது ஆக்ருதி அவனை வெகுவாகக் கவர்ந்தது. ‘இவர்களைப் பார்த்தால் வாலியின் ஆட்களாகத் தென்படவில்லை. இவர்கள் யாராக இருக்கும்?’ என சிந்தித்தவாறு,  அவர்களை நோக்கித் தன் இனிய குரலில் “கவ்வை இன்றாக நுங்கள் வரவு!” என்று முகமன் கூறி, மேலும் பேசலுற்றான்: ”வில்லேந்திய நீங்கள் ஒரு அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் உங்கள் சடைமுடிகளைப் பார்த்தால் துறவிகளோ என்றும் தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் ராஜரிஷிகளா … இல்லை தேவரிஷிகளா…? உங்கள் கனிவான பார்வையும் பொலிவு பொங்கும் முகங்களும் என்னைக் கிறங்க வைக்கின்றன. என்னைப் போலவே இந்த மலையில் உலாவும் விலங்குகளும் பறவைகளும் உங்களை வரவேற்பது போல ஆர்ப்பரிக்கின்றன. இப்பர்வதப் பொழில்களும் திடீரெனப் பூத்துக் குலுங்குகின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது துயர் இழையோடும் உங்கள் வதனங்கள் என் மனத்தைக் கலக்குகின்றன. நீங்கள் யார்? இக்குறிஞ்சிப் பகுதியில் எதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்?

    “மகாபலம் பொருந்திய கிஷ்கிந்தை வானர அரசன் வாலி தன் இளவலான சுக்ரிவனைத் தவறாகப் புரிந்துகொண்டு நாடு கடத்தியதோடல்லாமல் அவன் மனைவி ருமையையும் தன்வயமாக்கிக் கொண்டுவிட்டான். அச்சம் கொண்டு சுக்ரீவன் இங்கு தஞ்சம் புகுந்துள்ளான். ஏனெனில் மதங்க முனிவரின் சாபத்தால் வாலி இப்பகுதிக்கு வரமுடியாது; வந்தால் உயிர் இழப்பான். நான் வாயு பகவானின் புத்திரன். என் பெயர் அனுமன். சுக்ரீவனின் அமைச்சன். நீங்கள் யாரென்று இப்போது தெரிந்துகொள்ளலாமா?.”

    இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அனுமன் தன் உரையை முடித்தான்.

    உள்ளத்தை அள்ளும் இவ்வினிய சொற்களைக் கேட்ட ராமன் தன் இளவலிடம் “தம்பி, நாம் யார் உதவியைக் கேட்க விழைகிறோமோ, இறை அருளால் அவன் அமைச்சனே நம் முன் வந்திருக்கிறான். இப்படிப்பட்ட அமைச்சனைப் பெறுவதற்கு சுக்ரீவன் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இவன் சாதாரணமானவன் அல்லன். ரிக், யஜுர், ஸாம வேதங்களையும் மற்றும் பிற சாஸ்திரங்களையும் கசடறக் கற்றவனாகத் திகழும் இந்த சொல்லின் செல்வன் ஒரு நவவியாகரண பண்டிதனாகவும் இருக்கவேண்டும். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளை அளந்து நம் நிலையை இவனுக்கு உணர்த்தி நாம் சுக்ரீவனின் நட்பை நாடி வந்திருக்கிறோம் என்று சொல்” என்றான்.

    லக்ஷ்மணனும் தாங்கள் அயோத்தியை விட்டு நீங்கியது, நீண்ட வனவாசத்தில் ஸீதையைப் பறிகொடுத்தது, கபந்தன் மற்றும் சபரியின் அறிவுரைப்படி சுக்ரீவன் நட்பைக்கோரி வந்திருப்பது பற்றி விவரித்து, “இதோ இவர் தான் ராஜ்ய பட்டத்தைத் துறந்த ராமன். நான் அவர் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறினான்.

    ’ராமன்’ என்ற சொல்லை கேட்ட அனுமன் புளகாங்கிதம் அடைந்து, ‘தான் யாருக்காகக் இத்தனைக் காலம் காத்திருந்தோமோ அந்த தெய்வம் எதிர்பட்டுவிட்டது’ என மகிழ்ந்து, தன் அந்தண உருவை நீத்து சுயரூபத்தை அடைந்தான்.

    பின்னர் ராமன் அடிபணிந்து, “ஐயன்மீர், இம்முட்புதர் அடர்ந்த மலையில் தாங்கள் பயணிப்பது கடினம். ஆகவே, நீவிர் என் புஜங்களில் அமருங்கள். நான் உங்களை எம்மன்னன் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன்” என்றான் அனுமன்.

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (5)

    ராமஸ்வாமி ஸம்பத்  

    ’ஸீதையை எப்படியாவது ராமனிடம் இருந்து பிரிக்க வேண்டும். பிரியமான அழகு மனைவியை இழந்துவிட்டால் ராமன் அந்த பிரிவாற்றாமை தாங்காமல் உயிரையே விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படிச் செய்தால் ஸீதையையும் அடையலாம். அரக்கர் குலத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பை பழியும் வாங்கலாம்’ என நினைந்து ராவணன் தன் மாமனான மாரிசன் தவம் புரியும் ஆசிரமத்தை அடைந்தான்.

    “மாமனே, யாரோ அயோத்தி இளவரசன் ராமனாம், மனவி தம்பியோடு நாடு கடத்தப்பட்டு தண்டகாரண்யத்தில் ஒரு போலித்துறவிபோல் வாழ்கிறானாம். அவன் என் தங்கை சூர்ப்பணகையை அவமதித்து, அதற்கு பழிவாங்கப் புறப்பட்ட என் தம்பிகளான கரன் தூஷணன் திரிசிரஸ் மூவரையும் அவர்கள் படைகளையும் நாசம் செய்து விட்டான். இதற்கெல்லாம் நான் அவனுக்குப் பாடம் புகட்டவேண்டும். அதற்காக முதலில் அவன் மனைவி ஸீதையை அபஹரிக்கப் போகிறேன். அதற்கு உன் உதவி தேவை” என்று மாரீசனிடம் ராவணன் கூறினான்.

    “மருகா, நெருப்போடு விளையாடாதே. ராமன் தர்மத்தின் மறு உரு மட்டுமல்ல. அவன் உண்மையிலேயே பராக்கிரமம் பொருந்தியவன். உன் விரோதி எவனோ உன்னுடைய நம் அரக்கர் குலத்துடைய நாசத்தை நாடி இப்படிப்பட்ட யோசனையை உனக்கு கொடுத்திருக்கிறான். ராமன் பாலகனாக இருந்தபோதே அவன் வில் வலிமையை நான் அனுபவித்துத் தப்பிப் பிழைத்து வாழ்கிறேன். இந்த தற்கொலை முயற்சியைக் கைவிடு” என்றான் மாரீசன்.

    ”மாமனே, உன் அறிவுரையை நாடி நான் இங்கு வரவில்லை. நான் சொன்னபடி செய்யாவிட்டால் இப்போதே உன்னை கொன்றுவிடுவேன்.”

    ”வேண்டாம் அப்படிச் செய்யாதே. உன் கையில் சாவதைவிட ஒரு யோக்கியமான விரோதி கையில் மாள்வதே மேல். சொல். நான் என்ன செய்யவேண்டும்?”

    “அப்படி வா வழிக்கு. நீ ஒரு பொன்மயமான மான் வடிவம் எடுத்துக்கொண்டு பஞ்சவடியில் ராமனின் ஆசிரமத்துக்கு அருகில் திரிய வேண்டும். பொன்மானைப் பார்த்த வைதேகி ராமனிடம் உன்னைப் பிடித்துத் தருமாறு கேட்பாள். ராமன் உடனே உன்னைப் பிடிக்க முயல்வான், துரத்துவான். நீ அவன் கையில் பிடிபடா வண்ணம் எட்ட எட்ட ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வெகு தொலை தூரம் சென்றதும் அவன் உன்னைப் பிடித்து விட்டாலோ அல்லது உன்மீது அம்பை எய்து விட்டாலோ நீ ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’ என்று பயங்கரக் கூச்சலிடவேண்டும். மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

    ’ராவணனுக்குக் காலன் பாசத்தில் சிக்கவேண்டிய் வேளை நெருங்கிவிட்டது’ என நினைந்து மாரீசன் அவ்வாறே நடக்க ஆயத்தமானான்.

    இலங்கை மன்னனின் திட்டப்படியே பொன்மான் வேட்டை துவங்கியது. அண்ணனைத் தடுக்க முயன்ற லக்ஷ்மணனை ராமன் சமாதானம் செய்தான். “லக்ஷ்மணா, என் மனத்திற்கினியவள் இது வரை என்முன் எந்தவிதமான கோரிக்கையும் வைத்ததில்லை. அவள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்ய வேண்டாமா? அது என் கடமையல்லவா? ஆகவே, நீ ஸீதையைவிட்டு அகலாதே, நான் இந்த பொன்மானைப் பிடித்து வரும் வரையில்” என்று ராமன் கூறி மானைத் துரத்தத் தொடங்கினான். திடீரென்று ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’  எனும் பெரும் கதறலைக் கேட்ட ஸீதை, “லக்ஷ்மணா, உன் தமையனாருக்கு ஏதோ ஆபத்து போலிருக்கிறது. உடனே அவர் உதவிக்குச் செல்” எனப் பதறினாள்.

    “அன்னையே, இது அரக்கர்களின் மாயம் போல் தெரிகிறது. பதற்றம் வேண்டாம். அண்ணனுக்கு எத்தகைய கேடும் விளையாது. தவிர, அண்ணன் என்னை தங்களைவிட்டு அகலக்கூடாது என ஆணையிட்டிருக்கிறார் ” என்றான் லக்ஷ்மணன்.

    ராமனுக்கு ஆபத்து என்ற சிந்தனையால் அவள் லக்ஷ்மணன் கூற்றினைத் தவறாக புரிந்துகொண்டு தகாத சொற்களால் அவனைச் சாடி, “நீ இப்போது இங்கிருந்து அண்ணனைத்தேடி போகாவிட்டால் நான் உயிர்த்தியாகம் செய்வேன்” என்று அழுது ஆகாத்தியம் செய்தாள்.

    செவியில் நாராசம்போல் வீழ்ந்த அவள் சொற்களால் லக்ஷ்மணன். “என் அன்னைபோன்ற அண்ணியே, என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். இப்போதே அண்ணனைத் தேடி ஓடுகிறேன். தயவு செய்து தாங்கள் மட்டும் இக்குடிலை விட்டு வெளிவரவேண்டாம்” என்று கண்ணீர்மல்க அங்கிருந்து அகன்றான்.

    இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராவணன் ஒரு துறவி வேடம் தரித்து, பிச்சை வாங்குபவன்போல் நடித்து குடிலைவிட்டு வெளியே வராத ஸீதையை அக்குடிலோடு பெயர்த்துக் கடத்தி இலங்கை நோக்கிப் தன் புஷ்பக விமானத்தில் பறக்கலுற்றான்.

    “யாரடா என் மகளை கடத்துவது?” என்ற குரலைக் கேட்ட அரக்கர் மன்னன் திரும்பிப்பார்க்க ஜடாயு தன்னை நோக்கி சினத்தோடு வருவதைக் கண்டான்.

    ‘இது என்ன விபரீதம்? ராம லக்ஷ்மணர்கள் வருவதற்குள் ஸீதையைக் கடத்திச் செல்லலாம் என்றால் இப்பருந்து இடையூறாக இருக்கிறதே’ என நினைந்து, விமானத்தைக் கீழே இறக்கி, அந்த நல்ல உள்ளம்கொண்ட  பட்சியைக் கொல்ல முயன்றான். ஆனால் பலம் பொருந்திய ஜடாயு அவனைப் பலவாறு தன் கூர்மைமிக்க அலகினால் தாக்கி அந்த ’ஓராதன் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்’ உருட்டித் தள்ளினான். இனியும் தாமதித்தால் ராமன் வந்துவிடுவான் என்று பயந்து, ராவணன் தனக்கு சங்கர பகவான் வரமாகக் கொடுத்த வலிமைமிக்க வாளினால் ஜடாயுவின் இறகுகளை வெட்டி வீழ்த்தினான்.

    “ஹா! ராமா..!” என்று கதறியபடி ஜடாயு கீழே விழ்ந்தான். உடனே ராவணன், தந்தைபோன்ற ஜடாயுவை அணைத்தபடி இருந்த ஸீதையை தர தர வென்று அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு விமானம் ஏறி இலங்கை நோக்கிப் பறந்தான்.

    குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்த ஜடாயு, “ராமா சீக்கிரம் இங்கு வந்து சேர். உனக்கு ஸீதாபஹரணத்தைப் பற்றிய தகவலை அளிக்கவேண்டும். ஐயோ! என் பிராணன் போய்விடப் போகிறதே…” என்று கதறியவாறு கிடந்தான். “என் ஆருயிரே! அவசரப்பட்டு என் உடலைவிட்டு நீங்கி விடாதே. தயவு செய்து சற்று நேரம் ராமன் வரும் வரை காத்திரு…” என்று கதறியவாறு கிடந்தான்.

    மாயமானால் மோசம் செய்யப்பட்ட ராமன் லக்ஷ்மணனின் வருகை கண்டு, “தம்பி, ஏன் ஸீதையைத் தனியே விட்டுவிட்டு வந்தாய்?” என்று கேட்க இளவல் தான்பட்ட துயரத்தை விவரித்தான். இருவரும் பயந்தபடியே குடிலும் காணவில்லை. ஸீதையையும் காணவில்லை.

    வருத்தம் மேலோங்க இருவரும் அவளைத் தேடியவாறு ஜடாயுவின் அருகில் வந்து சேர்ந்தனர். “ராமா வந்து விட்டாயா? உனக்காகவே உயிரைக் கையில் பிடித்தபடி உள்ளேன். நீங்கள் ஏன் ஜானகியைத் தனியேவிட்டுச் சென்றீர்கள்? அரக்கனான இலங்கை மன்னன் அவளைக் குடிலோடு பெயர்த்துக் கொண்டு தென் திசையாகப் பறந்து சென்றுவிட்டான். என்னால் முயன்றவரை அதனைத் தடுக்க விரும்பினேன். ஆனால் ராவணன் தன் வாளால் என் இறகுகளை வெட்டி வீழ்த்திவிட்டான். இனி நீங்கள் அந்த ’பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்து’, உங்கள் குலவிளக்கினை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்று சொல்லி ஜடாயு உயிர் நீத்தான்.

    ஸீதையைப் பறிகொடுத்ததோடு தந்தைபோன்ற ஜடாயுவையும் இழந்த ராமன், அப்பருந்திற்கு அந்திம சம்ஸ்காரம் செய்தான். தசரதனுக்குக் கிடைக்காத பேறு ஜடாயுவிற்குக் கிடைத்தது.

    மைதிலியின் கடத்தலைப் பற்றிய தகவல் கிடைத்த ராம லக்ஷ்மணர்கள் கோதாவரி நதியின் பாதையில் தென் திசையாக அவளைத்தேடி அலைந்தனர். வழியில் திடீரென்று கண்ணில்படாத ஒரு அரக்கனின் நீண்ட கைகளில் சிக்கித் தவித்தனர். ஒருவாறு சுதாரித்துக் கொண்டு இருவரும் அக்கரங்களை வெட்டி வீழ்த்தினர்.

    “ஐயோ, வலி தாங்கவில்லையே” என்று கதறும் அரக்கனை நோக்கினர். அவன் தலை, கால்கள் இல்லாமல் வயிற்றில் ஒற்றைக் கண்ணோடு கோரமாகக் காணப்பட்டான். எவ்வளவு முயற்சி செய்தாலும் அவனைக் கொல்ல முடியவில்லை.

    இறுதியில் அவ்வரக்கன் அழுதபடி, ”வீரர்களே, நீங்கள் யார்?” என்று வினவினான்.

    ”என் பெயர் ராமன். இவன் என் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறிய ராமனை, அவ்வரக்கன், “என்னை மன்னித்து விடுங்கள். கைகள் வெட்டப்பட்ட நிலையில் என்னால் உங்களுக்கு வந்தனம் கூட செய்ய முடியவில்லை. உண்மையில் நான் உங்களை எதிர்பார்த்தபடிதான் உள்ளேன்” என்று சொல்லி தன் விருத்தாந்தைக் கூற ஆரம்பித்தான்….

    …”நான் பலம் பொருந்திய ஒரு கந்தர்வன். என் பெயர் கபந்தன். பிரமனை வேண்டி வெகுநீண்ட ஆயுளைப் பெற்றவன். இதனால் கர்வம் தலைக்கேறி எல்லோரையும் ஹிம்சித்து வந்தேன். ஒரு சமயம் இந்திரனைக் கண்டு அவனுடன் போரிடவும் முயன்றேன். அவன் தன் வஜ்ராயுதத்தினால் என்னைக் கொல்லமுடியாமல் என் தலையையும் கால்களையும் வயிற்றுக்குள் போகுமாறு செய்தான். இந்திரனிடம் மன்னிப்புக் கோரி, ’நான் இனி எவ்வாறு உணவு உண்ணமுடியும்?’ என்று கேட்டேன். என்மீது இரக்கம்கொண்டு வானரசன் இந்த நீண்ட கரங்களையும் வயிற்றில் ஒரு கண்ணையும் கொடுத்து ’இவை மூலம் உன் இரையைப் பிடித்து ஜீவித்திரு’ என்றான். எனக்கு விமோசனம் எப்போது என்று கேட்டதும் ’கவலை வேண்டாம். அயோத்தி இளவரசர்களான ராம லக்ஷ்மணர்கள் ஓருநாள் இப்பக்கம் வந்து உன்னை விடுவிப்பார்கள். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு’ என்று ஆறுதல் சொல்லி அகன்றான்”…

    ராமன், ”கபந்தரே, இப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் உங்களை இந்த பயங்கர நிலையிலிருந்து விடுவிக்க?” என்றான்.

    “ராமா, என் இந்த சரீரத்தை மண்ணில் புதைத்து விடு. அது போதும்.”

    இருவரும் அவ்வாறே செய்ய, அம்மண்ணிலிருந்து ஒரு அழகான கந்தர்வன் எழுந்தான். “மிக்க நன்றி ராமா. உனக்கு ஒரு உதவி செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றான்.

    “ஐயா, என் மனைவி ஸீதையை ராவணன் எனும் அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான். அவளை மீட்க உங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா?”

    “கவலையை விடு ராமா. உன்னைப் போலவே மனைவி ருமையை இழந்து வாடும் கிஷ்கிந்தையைச் சேர்ந்த வானர வீரன் சுக்ரீவனுடம் நட்பு செய்துகொள். அவன் தற்சமயம் தன் அண்ணன் வாலிக்குப் பயந்து ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து வாழ்கிறான். ரிச்யமுக மலை கோதாவரிக்கு தென் மேற்குப் திசையில் உள்ளது. மனைவியை மீட்பதில் சுக்ரீவனுக்கு நீ உதவினால் அவன்மூலம் நீயும் ஸீதையைத் திரும்பப் பெறலாம்” என்று கூறி கபந்தன் அகன்றான்.

    அங்கிருந்து ராமனும் லக்ஷ்மணனும் கோதாவரியின் கரைதாண்டி கிஷ்கிந்தை நோக்கி நடந்து மதங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அவரைப் பற்றி விசாரித்தபோது  அம்முனிவர் மோட்சம் எய்திவிட்டார் என்றும் அவர்தம் குடிலில் சபரி எனும்பெயர் கொண்ட ஒரு வேட்டுவ குலத்தைச் சேர்ந்த மூதாட்டி இருப்பதாகவும் தெரிந்த்து. “அக்கிழவி பைத்தியம் பிடித்தவள்போல் ’ராமன் இன்னும் வரவில்லையே’ என்று வருடக்கணக்கில் புலம்பிக் கொண்டிருக்கிறாள்” என்று ஒரு வழிப்போக்கன் அவர்களிடம் தெரிவித்தான்.

    ஆச்சரியம் அடைந்த ராமன் ”முன்பின் தெரியாத என்னைப் பார்க்க ஆசைப்படும் அந்த மூதாட்டியை அவசியம் நாம் சந்திக்கவேண்டும் லக்‌ஷ்மணா” என்று சொல்லி அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

    ஆசிரமத்தில் சபரி தியான நிலையில் இருந்தாள். அவள் மோனம் நீங்கும் வரை ராமன் காத்திருந்தான். கண் விழித்த சபரி இருவரையும் வியப்போடு நோக்கினாள். “நீங்கள் யார்?” என்று கேட்டதும் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

    “ராமா, வந்து விட்டாயா? உன் தரிசனத்திற்காகவே எவ்வளவு காலம் தவமிருந்திருப்பேன்”  என்று சபரி சொல்லி அவர்களை உபசரித்தாள். சபரி அளித்த எளிமையான இலந்தை போன்ற பழங்களை ராமன் விரும்பி உண்டான்.

    “அன்னையே, முன்பின் தெரியாத என்னைக் காண தாங்கள் ஏன் விரும்ப வேண்டும்?”

    ”ராமா, இந்த ஆசிரமத்தில் வெகுகாலம் மதங்க முனிவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அவருக்கு வேண்டிய மலர்கள், காய்கறிகள், பழங்கள், ஹோமத்திற்குத் தேவையான சமித்துகள் இவற்றையெல்லாம் தினம் கொண்டு வந்து கொடுப்பதோடு இந்த குடிலையும் துப்புரவாக வைக்கும் சேவையையும் செய்து வந்தேன். எழுதப்படிக்கத் தெரியாத, ஆன்மீக அறிவு அறவே அற்ற எனக்கு அம்மஹான் தீட்சை கொடுத்து என்னை ஓர் உயர்நிலைக்குக் கொண்டுவந்தார். ஓரு நாள் அவர், ‘சபரி, நான் இறைவனடி சேரும் காலம் வந்துவிட்ட்து. இனி நீயே இந்த ஆசிரமத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். ’எனக்கும் இறைவனடி சேரும் பாக்கியத்தை அளிக்க்க் கூடாதா?’ என்று கேட்ட என்னை நோக்கி, ‘சபரி, கட்டாயம் உனக்கு அந்தப் பேறு கிடைக்கும். அதற்கு உனக்கு ராம தரிசனம் அவசியம். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு” என்று சொல்லி தன் யோக வலிமையினால் மோட்சமடைந்தார். அன்றிலிருந்து நான் உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன். இம்மலைவாழ் மக்கள் என்னை பரிகசித்தனர். அவர்களை லட்சியம் செய்யாமல், ஆசான் ஆணைப்படி உன் வருகையை ஆண்டாண்டுகளாக எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,  ராமா” என்றாள் சபரி.

    ராமன் தனது சமீபகால நிகழ்வுகளை விவரித்து கபந்தன் கூறியபடி சுக்ரீவனைத் தேடுவதாக சொன்னான். சபரி பரிவுடன் ராமனைத் தடவி ஆசியளித்தாள். “சுக்ரீவனுக்கு உன் நட்பு கிடைப்பது அவன் செய்த பூஜாபலனே. அவன் உதவியால் உன் மனைவியை நீ திரும்ப பெறுவது உறுதி.  ஆனால் அவன் தற்சமயம் வசிக்கும் ரிச்யமுக பர்வதத்தை அடைவது மிக கடினமான செயல். அடர்ந்த முட்புதர்கள் அம்மலைக்கு ஒரு அரணாக திகழ்கின்றன.  கவலை வேண்டாம். உனக்கு உதவி செய்ய ஒரு நல்மனம் படைத்தவன் அங்கு காத்திருக்கிறான்.  ராமா, உனக்காகக் காத்திருந்தேன். அரிய பெரும்பேறைப் பெற்றேன். இனி உன் அனுமதியுடன் நான் என் ஆசானின் திருவடியை அடைய விரும்புகிறேன்.” என்று சொல்லி சபரி தன் யோக வலிமையினால் அக்கினியை உருவாக்கி அதில் கலந்து மோட்சம் அடைந்தாள்.

    இதன்பின் ராமனும் லக்ஷ்மணனும் பம்பையாற்றின் வழியாக ரிச்யமுக மலை நோக்கி நடந்தனர். வழியில் கண்பட்ட சிலரை வழிகாட்ட வேண்டினர். ஆனால் அவர்கள் அங்கு செல்வது  ஒரு அபாயகரமான முயற்சி என்று சொல்லித் தப்பித்துக் கொண்டனர். ஸீதையின் பிரிவுத் துயரத்தாலும் நெடுவழி நடந்த களைப்பினாலும் ராமனின் கால்கள் தள்ளாடின.

    பம்பை நதியின் இருகரைகளிலும் ராமன் கண்ட இயற்கை காட்சிகள், ஸீதை அருகில் இல்லாததால், அவன் துயரை மேலும் மிகைப்படுத்தின. கம்பர் ராமனின் சோகத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.

    பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாளென்

    நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த

    மஞ்சு பூத்த மழையனைய குழலாள் கண்போல் மணிக்குவளாய்

    நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ

    [செம்ப்ஞ்சு குழம்பு ஊட்டம் பெற்ற விரல்களால் தாமரை மலரில் பவழம் பொருந்தினது போன்ற பாதங்களை உடையவளும், என் மனமான தாமரை மலரில் வாழ்பவளும், கரிய மேகத்தைப் போன்ற மலர்கள் அணிந்த கூந்தலை உடையவளுமாகிய ஸீதையின் கண்களைப் போன்றிருக்கும் கருங்குவளை மலரே! நஞ்சு படர்ந்த்துபோல நகைத்து (மலர்ந்து) என்னை வருத்துவாயோ?]

    பொங்கிவரும் தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு, லக்ஷ்மணன் பலவகையாக அண்ணனை உற்சாகப் படுத்தியவாறு உடன் நடந்தான்.

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (3)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மனநிறைவோடு அயோத்தி திரும்பினான் தசரத மன்னன். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் தசரதன் நன்கு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ‘வானில் கிரஹங்களின் நிலை தற்போது சரியில்லை. ஒருவேளை என் இறுதி காலம் நெருங்குகிறதோ என்னவோ? அதற்குள் என் தவப்புதல்வனை ராஜாராமனாகப் பார்க்கவேண்டும். அதற்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க வேண்டும். என் நிர்ணயத்தை யாரும் எதிர்க்கமாட்டார்கள். ஒருவேளை என் மாமன் கேகய நாட்டு மன்னன் நான் கைகேயியை மணக்கும்போது அவனுக்குக் கொடுத்த வாக்கினால் சற்று எதிர்க்கலாம். அவளுக்குப் பிறக்கும் புத்திரனே ஆட்சி செய்வான் என்று நான் அப்போது சொன்னதை நினைவூட்டலாம். அப்போதைய நிலை வேறு. புத்திர பாக்கியம் இல்லாத சமயத்தில் நான் ஏதேதோ கூறியிருக்கலாம். ஆனால் இப்போதைய நிலை வேறு. பட்டத்து அரசியான கெளசலையின் புதல்வன் தான் அரியணை ஏறவேண்டும். இதுவே இக்ஷ்வாகு குலத்தில் வாழையடி வாழையாக நடக்கும் நியதி. ஆகவே உடனே பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். பரதன் இல்லாதபோது ராமனுக்கு முடிசூட்டிவிட்டால் கேகயன் ஒன்றும் செய்ய முடியாது. கைகேயி பற்றி கவலை இல்லை. அவள் கெளசலையைவிட ராமன்மீது உயிரையே வைத்திருக்கிறாள்….’  என்றெல்லாம் எண்ணியவாறு அயோத்தி மன்னன் தன் இளைய மனைவியுடன் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்தான். ‘அவளுக்குப் பிடித்தது போர்க்காலத்திலும் வேட்டைக்குச் செல்லும் போதும் எனக்குத் தேர் ஓட்டுவதல்லவா? இப்போதே அவளுடன் அடவிக்குச் செல்வோம். வேட்டை முடிந்ததும் ஏகாந்தத்தில் அவள் ஒப்புதலைப் பெற்றுவிடலாம்’  என நினைந்து அவளுடன் வனத்திற்குப் புறப்பட்டான்.

    வேட்டை நன்றாக நடந்தேறியது. ஆனால் வயோதிகனான தசரதன் களைப்புற்று ஒரு மரத்தின் கீழ் அவள் மடிமீது தலை வைத்து உறங்கி விட்டான். கைகேயி தசரதனின் உறங்கும் அழகை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அச்சமயம் அம்மரக்கிளையில் வீற்றிருந்த ஒரு ஜோடிப் பறவைகள் பேசிக் கொண்டிருந்தன. கைகேயிக்கு அப்பட்சிகளின் மொழி தெரியும். பொழுது போக்காக அப்பறவைகள் பேசுவதைக் கேட்டாள்.

    ஆண் பறவை தன் பெட்டையிடம், “என்னுயிரே, கீழே மனைவியின் மடியில் படுத்துக் கொண்டிருப்பது யார் தெரியுமா? அவன் அயோத்தி மன்னன் தசரதன். அவள் அவனது இளைய மனைவி கைகேயி. இம்மன்னன் தன் பிரியமான மூத்த மகனுக்கு அவசர அவசரமாக முடிசூட்ட உள்ளான். பாபம்! இவனுக்கு வரப்போவது தெரிய வாய்ப்பு இல்லை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு பதினான்கு ஆண்டுகளுக்கு அயோத்தி சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் அவர் மரணிப்பது உறுதி. இந்நிலையில் அவன் மகன் அரியணை ஏறினால் என்ன ஆகும்?”

    பெண் பறவை, “ஆருயிரே! சாதாரண பட்சியான உமக்கு இதெல்லாம் எப்படி தெரிகிறது?”  என்றது.

    “அண்மையில் இவ்வரண்யத்தில் வேடன் ஒருவன் தன் அம்பை ஒரு பருந்தின்மீது எய்தான். அது குறிதவறி ஒரு முனிவர் மீது பாயவிருந்தது. அப்போது நான் அவர்முன் பறந்து அந்த அம்பினை என்மீது வாங்கிக்கொண்டு அவரைக் காப்பாற்றினேன். அவர் மனம் மகிழ்ந்து காயப்பட்ட என்னைத் தூக்கி பரிவோடு தடவிக் கொடுத்தார். உடனே என் காயம் ஆறிவிட்டது. மேலும் தன் தவ மகிமையால் எனக்கு வரப்போகும் நிகழ்வுகளை அறியும் சக்தியைக் கொடுத்தார்” என்றது ஆண் பட்சி.

    இதற்குமேல் கைகேயிக்கு அப்பறவைகளின் உரையாடலில் பிடிப்பில்லாமல் போயிற்று. ஒரு கணம் தன் இதயத்துடிப்பு நின்றுவிட்டதுபோல் உணர்ந்தாள். ‘என் இனிய ராமன் உயிருக்கு ஆபத்தா? அதனை என்னால் தாங்க முடியாது. எப்பாடுபட்டாகிலும் ராமன் தற்சமயம் ஆட்சிப் பட்டம் பெறுவதைத் தடுத்தே ஆக வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தாள். ’அயோத்தி அரியணையே, இன்னும் பதினான்கு ஆண்டுகள் கடந்து, ராமன் வரும் வரை காத்திரு‘ என மானசீகமாக அதற்கு ஆணையிட்டாள்.

    ’ஆனால் மன்னர் இதற்கு ஒப்புவாரா? பறவையின் கூற்றினை நம்புவாரா?’ என்னும் ஐயம் அவளுக்கு ஏற்பட்டது. ‘அதனாலென்ன? என்னுயிர்ச் சேடி மந்திரை இதற்கு ஒரு நல்ல யோசனை சொல்வாள். அது வரை இதனை யாருக்கும் சொல்லவேண்டாம்’ என சமாதானம் செய்து கொண்டாள்.

    உறக்கம் நீங்கி கண் விழித்த தசரதன் “கைகேயி உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசவேண்டும்” என்றான். “நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். மாலை வந்துவிட்ட்து. இப்போது நாம் ராஜதானி திரும்புவோம். இன்னொரு நாள் விவரமாக பேசுவோம்” என்று சொல்லி தசரதனை ரதத்தில் ஏற்றிக்கொண்டு அயோத்திக்கு விரைந்தாள்.

    அடுத்தநாள் காலை தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ”நாளை ராமனுக்கு முடிசூட்ட வேண்டும். அதற்கான ஆயத்தங்களை தாங்கள் செய்ய வேண்டும்” என்றான். “அரசனின் ஆணைப்படியே” என்றார் முக்காலமும் அறிந்த அம்முனிவர் சுருக்கமாக. அதன்பின் புயல் வேகத்தில் செயற்பாடுகள் தொடர்ந்தன.

    ராமனை தன் மாளிகைக்கு அழைத்து, “குழந்தாய், நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். நீ மைதிலியை (மிதிலையில் கண்டெடுக்கப்பட்ட ஸீதை) அழைத்துக்கொண்டு குலகுரு வசிஷ்டரிடம் சென்று அதற்கான நோன்பினை அனுஷ்டிக்க வேண்டும்” என்றான் தசரதன். ராமபட்டாபிஷேகம் எனும் செய்தி காட்டுத்தீபோல் பரவி அயோத்தி மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

    மாநகரின் கோலாகலம் கண்டு மந்திரை கோபத்தோடு கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தாள். “அசட்டுப் பெண்ணே, குடி முழுகிவிட்டதடி. இனி உன் சகஇல்லத்தி கெளசலைக்கு நீ கொத்தடிமை செய்யவேண்டும்”  என்று அரற்றினாள் மந்திரை.

    “என்ன சொல்கிறாய் மந்திரா” என்று வினவிய கைகேயியை நோக்கி, “ராமனுக்கு நாளை முடிசூட்டப் போகிறானடி உன் மன்னன். உன் மகன் பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிய போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உன் கணவன் ஒரு பெரிய சதிகாரன். இனி நீ ஒரு பொருட்டல்ல அயோத்தி மன்னனுக்கு” என்றாள் அவள் சேடி.

    ‘இப்போது மந்திரை என்ன உபாயம் சொல்லப்போகிறாள் என்று பார்ப்போம்’ என நினைத்த கைகேயி சொன்னாள்: “அதெல்லாம் போகட்டும். இப்போது முடிசூட்டலை எவ்வாறு நிறுத்துவது என்று சொல்.”

    “உனக்கு உன் மணாளன் பண்டொருநாள் சம்பராசுரனுடன் நடந்த யுத்தத்தின் போது உன் தேரோட்டும் திறனைப் பாராட்டி இரண்டு வரங்களை அளித்தான் அல்லவா? அது நினைவிருக்கிறதா?”

    “உம்….”

    “இப்போது அந்த வரங்களைப் பயன்படுத்தி பரதனுக்குப் முடிசூட்டவேண்டும் என்றும் ராமன் நீண்டகாலம் வனவாசம் செய்யவேண்டும் என்றும் அரசனிடம் கேள்.”

    கைகேயியின் உள்ளம் உவகை கொண்டது. ‘இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! என்ன இருந்தாலும் மந்திரை மந்திரைதான். ராமனைக் காப்பாற்ற எவ்வளவு எளிதான உபாயம். ஆனால் பரதனுயிருக்கு ஆபத்தாயிற்றே’ என நினைத்து,  பிறகு ‘பரதன் ஒரு நாளும் முடிசூட்டிக்கொள்ள ஒப்புதல் அளிக்கமாட்டான்’ என்று ஆறுதல் கொண்டாள்.

    பின்னர் மாளிகைக்கு வந்த தசரதனிடம் இவ்விரு வரங்களைக் கேட்டு அவனை மூர்ச்சை அடையச் செய்தாள். மூர்ச்சை தெளிந்தபின் தசரதன் பலவாறாக அவளிடம் கெஞ்சிப்பார்த்தான். எவ்வாறு பலன் இருக்கும்? கைகேயிக்கு ராமனை எப்படியாவது காக்க வேண்டும் என்னும் வெறி கொழுந்துவிட்டு எரியும்போது அவள் பணிந்து போவாளா? மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ராமன் பதினான்கு ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ”இல்லையேல் உயிர் விடுவேன்”  என்றாள். மீண்டும் மூர்ச்சை அடைந்தான் மன்னன்.

    உடனே ராமனைத் தருவித்து தான் பெற்ற வரங்கள் பற்றியும், அதன்படி ராமன் காட்டுக்குச் செல்லவேண்டிய அவசியத்தையும் விளக்கினாள். ’முதல் நாள் அரியணை அடுத்த நாள் அரண்யம்’ என்ற நிலை ராமனை எவ்வாறு பாதித்தது என்பதனை கம்பர் கவிதையில் கேட்போம்:

    இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே ஆகும்

    செப்ப அருங்குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்

    ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

    அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.

    [வர்ணிக்கும் வல்லமை பெற்ற எவராலும் எடுத்துச்சொல்ல முடியாத அரும் பெருங்குணங்களைப் பெற்றுள்ள இராமனது திருமுகத்தின் பேரழகுச் சிறப்பை இப்போது பார்த்தால், அது எம்மைப் போன்றவர்களால் சொல்வதற்குரிய எளிமை பெற்றதோ? ஏனெனில் இதற்கு முன்பு அத்திருமுகம் செந்தாமரை மலரை ஒத்திருந்தது. கைகேயி கூறிய சொற்களை அவற்றின் பொருள் உணரக்கேட்ட பின்பு, அப்போதுதான் அலர்ந்துள்ள புத்தம் புதிய செந்தாமரை மலரை அத்திருமுகம் வென்றுவிட்ட்து]

    சிறிதளவு மாற்றமும் வதனத்தில் இல்லாமல், ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனப்பகர்ந்து சிறிய தாயாரை வணங்கி ராமன் புறப்பட்டான்.

    கோபாவேசம் கொண்ட இளவல் லக்ஷ்மணனை சீற்றமில்லாதானும் ஸீதைமணாளனுமான ராமன் இவ்வாறு சமாதானப்படுத்தினான்:

    “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே

     பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

     மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த!

     விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டது”

    [இளையவனே! நல்ல நீர் இல்லாமல் வற்றிப்போதல்  அந்நதியின் தவறு அன்று. அதைப்போலவே எனக்கு இப்போது நேர்ந்துள்ள நிலைக்குக் காரணம் தந்தையின் தவறு அன்று. நம்மைப் பெற்றவள் போலப் பேணி வளர்த்த அன்னை கைகேயி பெற்றுள்ள அறிவின் தவறும் அன்று. அவளுடைய மகனான பரதனின் தவறும் அன்று. பின்பு யாருடைய தவறு எனக்கேட்பின், இது ஊழ்வினை செய்த தவறாகும். இதற்காக நீ கோபம் கொண்டது ஏன்?]

    பின்னர் அவனையும் தன் கூட வருமாறு பணித்தான். ஸீதையிடம் விடைபெற விழைந்தபோது, அவள் கணவனுடன் காட்டுக்குச் செல்வதே தன் தருமம் என்று பிடிவாதம் செய்து ராமனை தன் வழிக்குக் கொணர்ந்தாள். மூவரும் அன்னைமார் கெளசலை சுமித்திரை இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அமைச்சர் சுமந்திரன் தேரோட்ட வனத்திற்கு ஏகினர். திடீர் திருப்பத்தால் திடுக்கிட்ட அயோத்திவாழ் மக்கள் ஒரு படைபோல் திரண்டு அவர்களைத் தொடர்ந்தனர்.

    ’கங்கையிரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான்’ எனப்புகழ் பெற்ற படகோட்டி அரசனான குஹன் உதவியோடு தொடரும் மக்கள் யாரும் அறியாமல் மூவரும் இரவோடு இரவாக நதியினைக் கடந்து சித்திரகூடம் சேர்ந்தனர்.

    இதற்கிடையில், புத்திரனின் பிரிவை தாங்கமுடியாமல் தசரதன் வானுலகம் எய்தினான். பரதனுக்கும் சத்ருக்கினனுக்கும் செய்தி அனுப்பி வரவழைத்தனர். நடந்தவற்றை அறிந்த பரதன் கடுஞ்சினமுற்று இத்தகைய களங்கத்தைத் தனக்கு ஏற்படுத்திய அன்னையை பல்வகையாலும் சாடினான். கைகேயி பொறுமையாக அவற்றைத் தாங்கி, தன் மகனின் உன்னதமான உள்ளத்தை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொண்டாள்.

    அயோத்தி அரசனின் ஈமச்சடங்குகள் நடந்தேறியபின் வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வேண்டினார். அவன் அதனை மறுத்து காட்டிற்குச் சென்று அண்ணனை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கப்போவதாக பறை சாற்றினான். அனைவரும் புடைசூழ பரதன் காடு நோக்கிச் சென்றான். குஹன் உதவியோடு அனைவரும் சித்திரகூடம் சேர்ந்தனர்.

    அயோத்தி நிகழ்வுகளை அறிந்த ராமன் தன்பொருட்டு தந்தை இயற்கை எய்த  நேர்ந்ததை எண்ணி வருந்தினான். பரதன் அண்ணனை நாடு திரும்பி ஆட்சி பொறுப்பினை ஏற்குமாறு வேண்ட, ராமன் தந்தையின் ஆணையை மீறுதல் தகாது என்று சொல்லி பரதனையே ஆளுமாறு பணித்தான்.

    குலகுரு வசிஷ்டர்முன் சகோதரர்களின் வாக்குவாதங்கள் தீவிரமாக நடந்தன. அவர் பெருமிதத்தோடு பரதனை நோக்கி, “உன் போற்றத்தக்க நடப்பினால் ரகுகுலத்திற்கே திலகமெனத் திகழ்கிறாய். ராமன் தன் தருமத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான். நீதான் சற்று தழைந்து போகவேண்டும்”  என்றார்.

    இறுதியில் பரதன் அண்ணனின் ஆணைப்படி நாடு திரும்புவதாகக் கூறி, பதினான்கு ஆண்டுகளுக்கு ராமனின் பிரதிநிதியாகவே செயல்படுவதாக உறுதி அளித்து, அவன் பாதுகைகளைப் பவ்யமாகப் பெற்று தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டான். ”அண்ணலே! நீங்கள் அன்புடன் ஈந்த உமது புனித அடிநிலையே இனி இந்நாட்டை ஆளப்போகிறது. சரியாக பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் நீங்கள் அயோத்தி அரியணை ஏறவேண்டும். அதுவரை நகர்ப்புறமான நந்திகிராமத்தில்தான் நான் ஒரு துறவிபோல் வசிப்பேன். குறிப்பிட்ட கெடு கடந்து தாங்கள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன்” என்று கண்ணீர் மல்கக் கூறிய பரதனை ராமன் அணைத்துக் கொண்டு ”உன்போன்ற தம்பியைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ” என்று சொல்லி விடைகொடுத்தான்.

    ‘அப்பாடா, என் மகனும் உயிர் பிழைத்தான். எங்கே ராமன் சொல்படி பரதன் அரியணை ஏறிவிடுவானோ என பயந்து கொண்டிருந்தேன்’ என்று கைகேயி பெருமூச்சு விட்டாள். ‘ஆருயிர்க் கணவனை இழந்ததோடு எவ்வளவு மகத்தான நிந்தனைக்கு ஆளாகிவிட்டோம். அதனாலென்ன, என் மனத்துக்கினிய ராமனுக்காக இந்த அபவாதத்தைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதற்குப் பரிசாக என் மைந்தன் ”படியிற் குணத்து பரத நம்பி” ஆகிவிட்டான்’  என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் நெகிழ்ந்தாள் அந்த அன்னை.

    பாதுகா பட்டாபிஷேகம் நடந்தபின், நந்திகிராமத்தில் வசித்த பரதனும் சத்ருக்கினனும் தவக்கோலம் பூண்டு தங்கள் கடமைகளை, வசிஷ்ட மாமுனியின் அறிவுரைப்படி நிறைவேற்றி வந்தனர்.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (2)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மிதிலையை அடைந்த மூவரும் ஜனகரின் அரண்மனை நோக்கி நடந்தனர்.

    வழியில் அரண்மனை கன்னிமாட வளாகத்தில் உள்ள பூம்பொழிலில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த இளவரசி ஸீதையின்மீது ராமனின் பார்வை படிந்தது. அண்ணலும் நோக்கினான்; ஏதோ ஒரு ஈர்ப்பினால் அவளும் நோக்கினாள். அவ்வளவுதான்! கவிச்சக்கிரவர்த்தியின் வர்ணனைபோல்

           மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்

           ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்

           கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

           பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ.

    [இடையில்லை என்று சொல்லும்படி நுண்ணிய இடை உடைய ஸீதையும், இழிவு இல்லை என்று சொல்லும்படி புண்ணிய குணங்களை நண்ணிய ராமனும் தம்முடைய இரண்டு உடம்புகளுக்குப் பொருந்திய ஒரே உயிர் போல் ஆனார்கள். திருப்பாற்கடலின் பள்ளியிலே கூடியிருந்து புணர்ச்சி நீங்கிப் பிரிந்து போனவர்கள் மீண்டும் இங்கே சந்தித்தால் அவர்களது காதல் சிறப்பை வெளியிட வாய்ப்பேச்சும் தேவையோ?]

    அக்கணத்திலிருந்து இருவரின் மனநிலை ’ஒருவருக்காகவே மற்றொருவர் பிறந்து இருக்கிறோமோ’ எனும் ஆலோசனையில் வீழ்ந்தது. தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்த வைதேகி (விதேக அரசனால் கண்டெடுக்கப்பட்ட நங்கையாதலால் ஸீதை இப்படியும் அழைக்கப்பட்டாள்) ‘என் மனம் ஏன் இப்படி அலை பாய்கிறது? ஒருவேளை இத்தனை நாள் இவருக்காகவே காத்திருக்கிறேனா? அதே நேரத்தில் இந்த இளைஞரால் அந்த பருத்த வில்லான சிவதனுசினை நாண் ஏற்றமுடியுமா எனும் ஐயமும் எழுகிறதே. இந்த வில் உள்ள, எவராலும் நகர்த்த முடியாதிருந்த, பெட்டியை சிறுவயதில் விளையாட்டாக நான் தூக்கியபின் தந்தை ஜனக மஹாராஜா இந்த சிவதனுசினை எவர் நாண் ஏற்றுகிறாரோ அவருக்கே என் பெண் ஏற்றவளாவள் என்று மொழிந்தபின் எத்தனை ராஜகுலத்தினைச் சேர்ந்தவர் முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளனர். இவ்விளைஞரால் முடியுமா? எதுவாகிலும் சரி. இவரிடம் மனத்தைப் பறிகொடுத்தபின் இவருக்கே நான் ஆட்செய்ய வேண்டும். வேறு எவர்க்கும் வாழ்க்கைப்படேன்’ என்று எண்னி எண்ணி விரக தாபத்தில் விம்மியவாறு இருந்தாள். அங்கே ராமனும் ஸீதையின் சந்திரபிம்ப வதனத்தை நினைந்தவாறே தூக்கமின்றி தவிக்கலுற்றான்.

    மறுநாள் ஜனக மன்னன் யாகசாலையில் நடந்த ஸீதா சுயம்வரத்தில், விஸ்வாமித்திரரின் ஆணைப்படி ராமன் இதுவரை ஸீதையைத் தவிர எவராலும் ஏந்தப்படாத சிவதனுசினை லாவகமாகத் தூக்கி நாணேற்றியபோது ஒரு பலத்த ஓசையுடன் அந்த வில் இரண்டாக ஒடிந்தது. ‘ஆஹா, என் நெடுங்காலத் தவத்திற்குப் பலன் கிடைத்துவிட்டது’ என்ற மட்டற்ற மகிழ்ச்சியோடு ஜனகபுத்திரியான ஜானகி மின்னல் வேகத்தில் ஓடிவந்து ராமனுக்கு மாலை சூட்டினாள்.

    தசரதனுக்குத் தகவல் கிடைத்தும் தன் பரிவாரம் சூழ மிதிலை வந்து சேர்ந்தான். அதன்பின் ஒரு நல்ல மங்களமான வேளையில் ராமன் ஸீதையையும், லக்ஷ்மணன் ஊர்மிளையையும் (ஜனகனின் இன்னொரு புதல்வி), பரதன் சத்ருக்கினன் முறையே மாண்டவியையும் சுருதகீர்த்தியையும் (இருவரும் ஜனகன் தம்பி குசத்துவன் குமாரிகள்) மணந்தனர். ராமன் வரும் வரை காத்திருந்த ஸீதையை அவனிடம் சேர்ப்பித்துவிட்டு விஸ்வாமித்திரர், நாரதர் தனக்கு இட்ட பணியினை செவ்வனே முடித்த மகிழ்வோடு, ‘போனான் வடதிசைவாய் உயர் பொன்மால்வரை புக்கான்’.

               *                                          *                                                         *

    மஹேந்திரகிரியில் தவக்கோலம் பூண்டிருந்த பரசுராமான் செவியில் மிதிலையில் உடைபட்ட சிவதனுசின் பேரரவம் விழுந்தது. ‘என்ன, சிவதனுசு முறிந்து விட்டதா? அப்படியானால் நான் எதற்காகக் காத்திருக்கிறேனோ அவ்வேளை நெருங்கிவிட்டது’ என நினைந்தான் மஹாவிஷ்ணுவின் ஆவேச அவதாரமும் (ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் எடுக்கப்படும் அவதாரம்) சிரஞ்ஜீவியுமான பரசுராமன். உடனே கையில் நாராயணதனுசை ஏந்தி மிதிலை நோக்கிப் புறப்பட்டான்.

    ஸீதாராம கல்யாணம் முடிந்து அயோத்தி திரும்பும் தசரத பரிவாரம் பயங்கரமான ஊளையோடு வீசும் பலத்த புயல் ஒன்றினால் தாக்கப்பட்டது. ”இது பரசுராமனின் வருகையை பறைசாற்றுகிறது” என்ற வசிஷ்டரின் கூற்றைக் கேட்ட அயோத்தி அரசன் நடுநடுங்கினான். அருகில் நெருங்கிய பரசுராமன் தாள் பணிந்து அவனிடம், ”க்ஷத்திரிய குலத்தின்மேல் கொண்ட கோபம் தங்களுக்கு இன்னும் தணியவில்லையா பிரபூ? தவக்கோலம் பூண்டிருக்கும் தாங்கள் மீண்டும் கொலைவெறி கொள்ளக் கூடாது. தயவு செய்து மணக்கோலத்தில் இருக்கும் என் மக்களை ஏதும் செய்யாதீர்” என்று கெஞ்சினான்.

    அதனை லட்சியம் செய்யாத பரசுராமன், சினத்தினால் சிவந்த கண்களோடு ராமனை நோக்கி  ‘ஓஹோ, நீதான் சிவதனுசை முறித்தவனோ? அன்றொரு நாள் சங்கர நாராயணரிடையே நடந்த போட்டியில் விரிந்தபோன சிவதனுசை ஒடித்துவிட்டு நீ உன்னை பெரிய வில்லாளியாக பாவிக்கிறாயோ?” என்று இடிமுழக்கம் செய்தான்.

    [விஸ்வகர்மனால் உருவாக்கப்பட்ட இரு வில்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் அளிக்கப்பட்டன. அவ்விரு வில்களில் எது பலம் வாய்ந்தது என அறிய பிரமதேவன் அப்பரந்தாமர் மத்தியில் ஒரு போட்டியை ஏற்பாடு செய்தார். உக்கிரமான அப்போட்டியில் சிவதனுசு இலேசாக விரிந்தது. அதனால் சினமுற்ற சிவனார் இன்னும் கடுமையாகப் போரிட, பிரமதேவன் நடுநடுங்கி தன் தவற்றால் விளையாட்டு வினையாகவதை உணர்ந்து இருவரையும் சமாதானம் செய்து அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். அவ்வில் இரண்டும் காலப்போக்கில் முறையே ஜனகனையும் பரசுராமனையும் அடைந்தன]

    ராமன் ஒரு இளநகையோடு, “பெருமை மிக்க ஜாமதக்னி முனிவரே (ஜமதக்னி மஹரிஷியின் மகன்), முதற்கண் இச்சிறுவன் ராமனின் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் என்னை என்ன செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?” என்றான் பணிவோடு.

    “உண்மையிலேயே நீ ஒரு உயர்ந்த தனுர்தரன் என்றால் இதோ இந்த விஷ்ணுதனுசை நாணேற்ற முடிகிறதா பார்.”

    அதே புன்முறுவலுடன் ராமன் அவ்வில்லைப் பற்றி எளிதாக நாண் பூட்டி, கோதண்டத்தைப் பொறுத்தினான். அத்தருணம் பரசுராமனின் புஜத்திலிருந்து ஒரு மகத்தான திவ்யசக்தி ராமனுள் புகுந்தது. பரசுராமன், ‘நாராயணதனுசு உரிய இடத்தில் சேர்ந்துவிட்டது’ என தன்னுள் மகிழ்ச்சி கொண்டு, வெளிப்படையாக ராமனிடம் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

    “அந்தண குலச்ரேஷ்டரே, உம்மை நான் கோதண்டத்திற்குப் பலியாக்க விரும்பவில்லை. ஆனால் வில்லேறிய கோதண்டத்திற்கு ஒரு காவு தேவை. சொல்லுங்கள் நான் எதனைக் குறிவைப்பது?” என்றான் ராமன்.

    “ராமா, உன்போன்ற மாவீரனைக் காணத்தான் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் க்ஷத்திரியர்களை வென்று சேர்த்த ராஜ்யங்கள் அனைத்தையும் காச்யப முனிவருக்கு அளித்து விட்டேன். அதனால் இப்போது என்னுடையது எனச் சொல்லக்கூடியது எல்லாம் என் தவப்பலன்தான். அதைக் குறிவைத்து என்னை விட்டுவிடு. எனக்கென ஒரு நிலத்தை மேலைக்கடலில் உருவாக்கி, அங்கு தவம்புரிய விரும்புகிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்”  என்று வாழ்த்தி, ராமன் வரும் வரை காத்திருந்த பரசுராமன் விடைபெற்றுக் கொண்டான்.

    Share
  • ராமன் வரும் வரை காத்திரு… (1)

    ராமஸ்வாமி ஸம்பத்

    பெருமையும் சக்தியும் பொருந்திய காயத்திரி மஹாமந்திரத்தைத் அளித்து ’விஸ்வாமித்திரர்’ – உலகுக்கே நண்பர் – எனப் பெயர் பெற்றதோடு வசிஷ்டர் வாயால் ’பிரம்மரிஷி’ எனவும் கெளரவிக்கப் பட்டவர் கெளசிக முனிவர். அந்த மாமுனிவர் ஒரு நாள் தன் ஆசிரமத்தில் மனக்கவலையோடு காணப்பெற்றார். சீடர்களுக்கு அவரது துயரம் புரியவில்லை. அவர் அருகில் சென்று கேட்கவும் துணிவு வரவில்லை. நல்லவேளையாக தேவரிஷியான நாரதர் அப்போது அங்கு வந்து சேர்ந்தார். சீடர்கள் அம்முனீந்திரரை வணங்கி வரவேற்று, ஆசானின் மனக்கவலைபற்றி கூறினர்.

    அவர்கள் முறையீட்டினைக் கேட்ட நாரதர், “கவலை வேண்டாம். அதனைப் போக்கவே இங்கு வந்திருக்கிறேன்” என்று சொல்லி மாமுனிவரிடம் சென்றவரை கெளசிகர் அடிபணிந்து வரவேற்றார்.

    “பிரம்மரிஷே! தாங்கள் ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்ட தேவரிஷியிடம், “முனீந்திரரே, என்னுடைய கோரிக்கைகள் எல்லாம் விருப்பப்படி நிறைவேறியிருந்தாலும் என் மனம் சதா அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ இனம்புரியாத ஒரு சிந்தனை என்னை வாட்டி வதைக்கிறது. தங்களால்தான் அதனைப் போக்க முடியும்” என்றார் விஸ்வாமித்திரர்.

    “எண்ணிலா அருந்தவத்தோனான தாங்கள் ஒரு மனிதனால் சாதிக்க முடியாத பல காரியங்களைத் செய்துவிட்டு பெரும் பெயர் பெற்றுவிட்டீர்கள். ஆனாலும் தாங்கள் செய்த ஒரு பாபம் தங்களை வாட்டுகிறது” என்றார் நாரதர்.

    “நான் பாபம் செய்தேனா? திரிகால ஞானியான தாங்கள்தான் இப்புதிரை விடுவிக்க வேண்டும்.”

    “சற்று யோசியுங்கள். தாங்கள் ராஜா அரிச்சந்திரனையும் அவன் பட்டத்து ராணி சந்திரமதியையும் பிரித்து துன்பத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா? அந்த வினைதான் தங்களைச் சுடுகிறது.”

    “அதனால் அரிச்சந்திரனுக்கு பரமசிவ தரிசனம் கிடைத்ததோடு சத்தியசந்தன் என்ற பெருமையும் சேர்ந்ததல்லவா? அது எப்படி பாபமாகும்?”

    “கெளசிகரே! என்னதான் அது நல்லபடியாக முடிந்தாலும், தம்பதிகளைப் பிரிப்பது ஒரு தீவினையே.”

    “முற்றிலும் உண்மைதான். நான் அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதை தாங்கள்தான் சொல்லவேண்டும்.”

    “இக்ஷ்வாகு குலத்தின் உன்னத ராஜ தம்பதிகளைப் பிரித்த வினையைப் போக்க, தாங்கள் அதே வம்சத்தில் உதிக்கவிருக்கும் ஒரு ‘மரியாதா புருஷோத்தமனுக்கு’  அவனுக்கேற்ற வாழ்க்கைத் துணையை மணம் செய்துவிக்க வேண்டும். அப்போதுதான் உமது மனக்கவலை மாறும்.”

    ”தேவரிஷே! பிள்ளைப் பேரற்ற வயது முதிர்ந்த தசரத மகராஜனுடன் இக்‌ஷ்வாகு குலம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இனி என்னால் எப்படி தங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியும்?”

    ”கவலை வேண்டாம் கெளசிகரே! மஹாவிஷ்ணுவே அந்த தசரதனுக்குப் புத்திரனாக அவதரித்து ‘ராமன்’ என்ற பெயரோடு செயற்கரிய செய்கைகள் பல புரியப் போகிறார். அந்த ராமனுக்காக, மஹாலக்ஷ்மியும் ’ஸீதை’ என்ற பெயரோடு அயோனிஜையாக சம்பவிக்கப் போகிறார். அந்த ஆதி தம்பதிகளை நீங்கள் சேர்த்து வைத்து, பெரும்புகழ் அடையப் போகிறீர்கள். ஆகவே தாங்கள் ராமன் வரும் வரை காத்திருக்கவேண்டும்” என்று கூறி கெளசிகரிடம் நாரதர் விடை பெற்றுக் கொண்டார்.

    விஸ்வாமித்திரரும் பொறுமையாக ராமன் வரும் வரை காத்திருந்து, உரிய காலத்தில் அயோத்தி அடைந்து தசரதனிடம் அரக்கர்கள் நிறைந்த தருவனத்தில் தான் நடத்தப் போகும் வேள்வியைக் காக்க ”நின் சிறுவர் நால்வரிலும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று இறைஞ்சினார். விருப்பம் இல்லாவிட்டாலும் குலகுரு வசிஷ்டரின் உந்துதலால், தசரதன் ராமனையும் அவனுடன் லக்ஷ்மணனையும் விஸ்வாமித்திரருடன் அனுப்பி வைத்தான்.

    அரசிளங்குமரர்களுக்கு பல அஸ்திரங்களின் பிரயோகங்களைப் புகட்டிய மாமுனிவர், ராமனை தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய வைத்து, பின்னர் தனது வேள்விச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அவர்களிடம், “இனி நான் யாக தீட்சையில் ஈடுபடப்போவதால் நீங்கள் இருவரும் அரக்கர்களால் இவ்வேள்விக்குத் தீங்கு வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்றார். இளவரசர் இருவரும் தங்கள் வில்லேந்தும் வலிமையால் இடர்ப்பாடு செய்யும் அரக்கர்களை கொன்று குவித்தனர். பின் வந்த அரக்கர் தலைவனும் தாடகையின் புதல்வனுமான சுபாகுவை ராமன் வீழ்த்தி, அவ்வரக்கனின் உடன்பிறப்பான மாரீசனை ஒரு அம்பின்மூலம்  பல யோசனை தூரத்தில் உள்ள கடலில் விழுமாறு உய்த்தான்.

    வேள்வி வெற்றிகரமாக முடிந்ததும், மிக்க மகிழ்ச்சியோடு விஸ்வாமித்திரர் ராமனையும் இளவல் லக்ஷ்மணனையும் ஆசீர்வதித்து, “இப்போது நாம் மிதிலை நகர் நோக்கிச் செல்லப் போகிறோம். விதேக நாட்டு அரசன் ஜனகன் நடத்தும் யாகத்தைக் காண்போம்” என்றார். ‘யாகத்தைக் காணவா இந்த ராஜகுமாரர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்கிறேன்? அங்கு ஒரு பரிசு ராமன் வரும் வரை காத்திருக்கிறதல்லவா? அதனை அவனிடம் சேர்ப்பிக்க வேண்டாமா….’ என அவர் மனம் சிந்தனை செய்தது.

    மிதிலைநகர் செல்லும் வழியில் ஒரு பாழடைந்த ஆசிரமத்தைக் கண்டனர். அங்கு நிலவிய மயான அமைதியைக் கண்டு ராமன் “மாமுனிவரே! இந்த ஆசிரமம் ஏனிப்படி பொலிவிழந்து காணப்படுகிறது?” என்று கேட்டான்.

    ”கெளசலை மைந்தனே! இது கெளதம முனிவரின் குடில். இதன் பிண்ணனியில் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது” என்று சொல்லி அக்கதையை அவர்களுக்கு விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்….

    ….ஒரு சமயம் பிரமதேவர் படைத்த அகலிகை எனும் பேரழகியைக் கண்டு தேவேந்திரன் அவளை மணம்புரிய ஆசைப்பட்டு நான்முகனை அணுகினான். ஆனால் அவர், ‘முன்னமே அவள் கெளதம முனிவருக்கு மனைவி ஆகிவிட்டாள். ஆகவே அவ்வாசையை அழித்துவிடு’ என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார். அகலிகைமீது கொண்ட காமவேட்கையால், இந்திரன் நெறி தவறி பிறன்மனை விழைய முற்பட்டான். சேவல் உருக்கொண்டு கெளதம முனிவரின் ஆசிரமத்தை நள்ளிரவில் அடைந்து, கூவலுற்றான். அதனை வைகறை அறைகூவலாகக் கருதி அம்முனிவர் நதிக்கரைக்குச் சென்ற தருணத்தில் முனிவர் வடிவம் கொண்டு அகலிகையை ஏமாற்றி அவளுடன் தகாத உறவு கொண்டான். வந்தவன் இந்திரன் என்பது அகலிகைக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் வானோரின் அரசனே மயங்கும் தன் பேரெழில்மீது ஒரு கணம் பெருமை கொண்டாள். உடனே தன் தவற்றையும் உணர்ந்து சோகமடைந்தாள். இதற்கிடையில், நதிக்கரைக்குச் சென்ற கெளதமர் இந்திரனின் கயவாளித்தனத்தைத் தன் ஞானப்பார்வையால் அறிந்து, குடிலுக்குத் திரும்பினார். பூனை உருக்கொண்டு தப்பிக்க முயன்ற இந்திரனை கொடுஞ்சினம் கொண்ட முனிவர் ‘பிடி சாபம். நீ எதனை நாடி இத்தீயசெயலைப் புரிந்தாயோ அவ்வாறு உன் உடல் முழுதும் ஆகக்கடவது’ என்றார். இந்திரன் தலைகுனிவோடு தன் உலகத்திற்குத் திரும்பினான். தடம் புரண்ட மனைவி அகலிகையை கெளதமர் ஒரு கல்லாக மாறும்படி சபித்தார். அகலிகை, ’இந்திரனால் வஞ்சிக்கப்பட்ட எனக்குச் சாப விமோசனம் கிடையாதா?’ என்று கண்ணீர் மல்க தன் கணவனை வினவினாள். முனிவரும் மனமிரங்கி, ‘எப்போது அயோத்தி இளவரசன் ராமன் கால் தூசி உன்மீது படுகிறதோ அப்போது நீ உன் பழைய உருவை அடைவாய். அந்த ராமன் வரும் வரை காத்திரு’ என்று பகர்ந்து அங்கிருந்து அகன்றார்….

    அகலிகையின் கதையைக் கூறியபின், விஸ்வாமித்திரர், “ராமா, உன் பாததூளிக்காக குற்றமற்ற அவள் இங்கே காத்திருக்கிறாள். உன் வலது காலை அக்கல்லின்மேல் வை”  என்றார். ஆசானின்  ஆணைப்படி ராமன் பாதத்தை வைத்தவுடன் அகலிகை மீண்டும் பொலிவு பெற்று எழுந்து அந்த பதிதபாவனனின் தாள் பணிந்தாள். இக்காட்சியைக் கண்ட விஸ்வாமித்திர்ர் மனம் நெகிழ்ந்து, கம்பநாடர் மொழியில்

    “இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

    உய்வண்ணம் அன்றிமற்றுமோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ

    மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து  அண்ணலே உன்

    கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்”

    என்று பெருமிதமாகக் கூறினார்.

    [முக்காலத்தில் அகலிகை கல்லுருவத்தைப் பெற்ற நிகழ்ச்சி இவ்வாறு நடந்தது. நீ அவதரித்த பின்னர், இவ்வுலகத்தில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் விடுதலை பெறுவதன்றி, துன்பமடைவது என்பது உள்ளதாகுமோ? ஆகாது. மேகத்தின் கரிய வண்ணத்தைப் போன்ற ராமனே! மை போன்ற கருநிறத்து அரக்கியாகிய தாடகையுடன் நீ போரிட்ட அவ்விடத்தில் உன் கைத்திறமையைப் பார்த்தேன். இவ்விடத்தில் உன் கால் திறமையைப் பார்த்தேன்.]

    அதன்பின் அப்போதே அங்கு வந்து சேர்ந்த கெளதமரை ராமன் அகலிகையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட அவரும்  அவளை மன்னித்து இல்லறம் நடத்த சித்தமானார்.

    (​தொடரும்)

    Share
  • ராமன் வரும் வரை காத்திரு……

    ராமஸ்வாமி ஸம்பத்   

    முன்னுரை

    அன்றாட வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால் அது காத்திருப்பதே. ஒருவருக்காகவோ அல்லது ஒரு நிகழ்விற்காகக் நாம் காத்திருக்கும்போது காலம் விரயம் ஆவதுபோல் தோன்றுவது சகஜமான ஒரு அனுபவம். காதலனுக்காகக் காத்திருக்கும் காதலி, கணவன் வரவை  வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் மனைவி, பிள்ளை இன்னும் பள்ளியிலிருந்து வரவில்லையே என்று ஏங்கும் அன்னை, பேருந்தினையோ ரயில் வண்டியையோ எதிர்பார்க்கும் பயணி, அரசாங்க அலுவலகத்தில் ஒரு சான்றிதழுக்காக தவிக்கும் ஒரு சாதாரண மனிதன், மருத்துவ மனையில் வைத்தியருக்காகத் தவமிருக்கும் நோயாளி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரும் கோயிலில் இறைவன் தரிசனத்திற்குக் காத்த்திருக்கும் பக்தன் – இவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு ‘க்ஷணம் க்ஷணம் நிரீக்ஷணம்’  தான். ஆவலோடு ஆரம்பிக்கும் காத்திருப்பு சடுதியில் சலிப்பாகவும் பின்னர் எரிச்சலாக மாறுவதும் இயற்கையே. மொத்தத்தில் காத்திருப்பது என்பது வேதனையே. அப்படிப்பட்ட அனுபவம் ஒன்று அடியேனின் இக்குருந்தொடருக்கு அடிகோலியிருக்கிறது.

    ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்  ஒரு நாள், ஆந்திராவில் உள்ள குண்டூர் நகரத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் ஸ்ரீ காளி வனாஸ்ரமத்தில் அடியேன் குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஹனுமத் காளி வரபிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்களைக் காண விஜயவாடாவிலிருந்து நானும் என் உற்ற நண்பன் சிரஞ்ஜீவியும் சென்றிருந்தோம். ஆஸ்ரமத்தின் மாலை பிரார்த்தனையில் கலந்து கொண்டபின் குருமஹராஜ் அவர்களுக்கு நாங்கள் வந்திருக்கும் செய்தியைத் தெரியப்படித்து விட்டு, அவர் அறையின் வெளியே அழைப்புக்காகக் காத்திருந்தோம்.

    சற்று நேரத்திற்குப் பின், சிஷ்யர் ஒருவர் வந்து, “குருமஹராஜ் முதலில் உங்களை உணவு அருந்துமாறு பணிக்கிறார்; பின்னர் சந்திக்கலாம் என சொல்லச் சொன்னார்” என்றார்.

    எட்டு மணி அளவில் இரவு உணவு முடிந்து, நாங்கள் இருவரும் தியான மந்திரத்தில் காத்திருந்தோம். காலம் கடந்து இரவு பதினொன்று மணியை எட்டியது. ஸத்குருவிடமிருந்து எங்களைச் சந்திப்பது பற்றி ஒரு தகவலும் இல்லை. நள்ளிரவு நெருங்கிய அளவில், எங்களுக்கு குருநாதரைச் சந்திக்க முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ‘சரி, இன்னொரு நாள் வரலாம்’ என நினைத்தாலும், அவர் உத்தரவு இல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகல எங்கள் மனம் ஒப்பவில்லை.

    திடீரென்று, “உங்களை வெகு நேரம் காக்க வைத்துவிட்டேனா?” என்ற குருநாதரின் இனிமையான குரல் கேட்டது. பாபுஜி மஹராஜ் தியான மந்திரத்தில் அப்போதுதான் நுழைந்து கொண்டிருந்தார்.

    “உங்கள் நேரம் விலை மதிப்பற்றதல்லவா? மன்னிக்கவும். என்ன செய்வது? எனக்கும் சில அனுஷ்டானங்கள் இருக்கின்றன அல்லவா? அதனால்தான் தாமதம். ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? அமைச்சர்களையும் பெரும் பதவியில் உள்ளவர்களையும் காண மணிக்கணக்கில் காத்திருக்கும்போது நமக்கு அலுப்பு தட்டுவதில்லை. ஆனால் ஏழுமலையான் தரிசனத்திற்குக் காத்திருக்கும்போது மட்டும் நமக்கு ‘போர்’ அடிக்கிறது” என்று குருநாதர் சொன்னதும், எங்களுக்குச் சற்று வெட்கமாக இருந்தது. வதனத்தில் குறுநகையோட எங்கள் அருகில் வந்து பரிவுடன் ஆசீர்வதித்து, “உங்களுக்கு வசிஷ்ட மாமுனிவர் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்” என்றார். ஸத்குரு மஹராஜ் கதை சொல்கிறார் என்றால் அதில் நமக்கு அவசியம் தெரிய வேண்டிய ஒரு மாபெரும் உண்மை பொதிந்திருக்கும். அவர் மெல்லத் தொடர்ந்தார்….

    ஒரு சமயம் வசிஷ்டர் தன் மானசீகத் தந்தையான பிரமதேவரிடம் சென்று, ‘ஐயனே! தங்கள் ஆணைப்படி சூரிய வம்சத்தோன்றலான இக்ஷ்வாகு மன்னன் முதல் ககுஸ்தன், மாந்தாதா, முசுகுந்தன், திரிசங்கு, ஹரிச்சந்திரன், சகரன், பகீரதன், அம்பரீஷன், ருதுபர்ணன், திலீபன் உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட அயோத்தி அரசர்களுக்கு ஆசானாக செயல் புரிந்துவிட்டேன். புத்திர பாக்கியம் இல்லாத திலீபனும் என் ஆசிரம பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு ஒரு மண்டலம் பணிவிடை செய்து சாபம் நீங்கி ரகு என்னும் உத்தம புத்திரனுக்கு தந்தையாகும் பாக்கியம் பெற்றுவிட்டான். இத்துடன் என் கடமை முடிந்து விட்டது என நினைக்கிறேன். எனக்கும் இப்புவி வாழ்க்கை அலுத்து விட்டது. தயவு செய்து என்னை தங்கள் சத்தியலோகத்திற்குத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்” என்றார்.

    பிரமதேவரின் முகத்தில் ஒரு இளநகை ஓடியது. “மைந்தா, ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை என்று சொல்வார்கள். உன் விஷயத்தில் அது உண்மை போலும். உனக்காகக் காத்திருக்கும் ஒரு கிடைத்தற்கரிய மாபெரும் பேறு பற்றி உனக்குத் தெரியவில்லை. ஆதலால் அந்தப் பேறினை எதிர்நோக்கி ரகுவம்சத்தில் வரப்போகும் இன்னும் சில தலைமுறைகளுக்கு நீ ஆசானகத் திகழவேண்டும்” என்றார்.

    “அப்படி என்ன பெரும் பேறு தந்தையே?”

    “உன் ஆணைப்படி விரதம் இருந்த திலீபனுக்குப் பிறந்த ரகுவின் குலத்தில் ஆதிவிஷ்ணுவே அவதரித்து உன்னால் ‘ராமன்’ எனும் பெயர் சூட்டப்பட்டு உனக்கு சீடனாக அமையப் போகும் நல்வாய்ப்பினை கைவிடலாமா?”

    “திருமால் எனக்கு சீடனா? அந்த சர்வக்ஞனுக்கு நான் ஆசானா? இது என்ன கொடுமை பிரபூ?”

    ”ஆம், இது திருமாலின் லீலா வினோதம். தான் எடுக்கப்போகும் மானிட அவதாரத்தில் உன்னைப் பெருமை படுத்த அவர் நிர்ணயித்துள்ளார். பூலோகத்தில் உன் கடமை இன்னும் முடியவில்லை. ஆகவே, ராமன் வரும் வரை காத்திரு”…..

    இவ்வாறு வசிஷ்டரின் கதையைக் கூறிமுடித்த குரு மஹராஜ், ”பிரமதேவன் ஆணைப்படி வசிஷ்டர் ராமன் வரும் வரை காத்திருந்தார். ரகுவிற்கு அஜன் பிறந்தான்.  அஜனுக்கு தசரதன் மைந்தனான். மக்கட்பேறு இல்லாத தசரதனுக்கு புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் ராமன் மற்றும் பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கினன் புதல்வர்களாக வாய்த்தனர். அந்நால்வரும் வசிஷ்டருக்கு சீடர்களாயினர். பல்லாண்டுகளாக ராமன் வரும் வரை காத்திருந்த அவர்தம் பெருமைதான் என்னே!  எப்பொழுதும், இறைவனைக் குறித்தோ ஆன்மீக விஷயத்திலோ காத்திருப்பதைப்பற்றி சலிப்பு தட்டக்கூடாது. ஏனெனில் அதுவும் ஒருவகையில் தவமே. வெகு காலம் காத்திருந்து அதன் முடிவில் ஒருவன் அடையும் ஆனந்தம் அளவிடர்க்கரியது” என்று எங்கள் உள்ளத்தில் ஏற்பட்ட தவறான எண்ணத்தை நீக்கினார் ஸத்குருநாதர்.

    மோதிரக்கையால் குட்டுபட்ட எங்களுக்கு அதன் பின் ஒரு மணி நேரம் தன் ஆணிமுத்து போன்ற நல்லுரையை நல்கி, “நேரம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நெடுஞ்சாலையில் ஒரு ‘லாரி’  காத்திருக்கிறது. அதில் ஏறி நீங்கள் சுகமாகப் பயணிக்கலாம்” என்று கூறி விடை கொடுத்தார். அவர் சொன்னது போல எங்களுக்காக விஜயவாடா செல்லும் ‘லாரி’ ஒன்று ஆசிரமத்தின் அருகே காத்திருந்தது.

    செல்லும் வழியில் பாபுஜி மஹராஜ் சொன்ன வசிஷ்டரின் கதையைப்பற்றி விவாதித்தவாறு நாங்கள் விஜயவாடா சேர்ந்தோம்.

    வீடு திரும்பிய என்னுள் எண்ண அலைகள் மோதியவாறு இருந்தன…..

    ’வசிஷ்டர் மட்டுமா ராமன் வருகைக்குக் காத்திருந்தார்? ராமாயண காவியத்தில் எத்தனை பேர் அவ்வண்ணலின் வருகைக்காகவும் ராம காரியத்திற்குத் துணைபோவதற்கும் காத்திருந்தனர்? உண்மையில் ஆதிகவி வால்மீகி இயற்றிய காவியமே அத்தகைய காத்திருப்போர் கதைகளின் தொகுப்பே அல்லவா…?’

    அதனைச் சற்று அசை போடுவோமா?

    (​தொடரும்)

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-5)

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    epi5

     

     

     

     

     

     

    மாசிடோனிய மன்னன் புருஷோத்தமனை ஒரு கணம் நோக்கினான். ’விலங்குகளால் பிணைக்கப்பட்டபோதும் முகத்தின் பொலிவு சிறிதளவேனும் குறையவில்லையே! நீண்ட கைகள், பலம் பொருந்திய புஜங்கள், நிமிர்ந்த மேனி, வீறுகொண்ட பார்வை…அப்பப்பா… எல்லா விதத்திலும் இவன் உயர்ந்தவனே! ஏனைய நாட்டு அரசர்கள் எல்லாம் குனிந்த தலையோடு மண்டியிட்டு என் கருணைக்காக ஏங்கி இருப்பரே! போரஸ் உண்மையிலேயே ஒரு வித்யாசமான வீரன்தான்’ எனக் கருதினான் அலெக்சாண்டர்.

    தன் வியப்பை மிக்க சிரமத்துடன் மறைத்துக்கொண்டு அவன் கேட்டான்: ”போரஸ், நீ போர்க்கைதியானாலும் வணங்காமுடியாக இருக்கிறாய். உனக்கு ஏதேனும் கூற விருப்பமா?”

    “சிகந்தர் அவர்களே! ஒரு போர்க்கைதிக்கு என்ன சொல்ல இருக்கிறது?” என்றான் புருஷோத்தமன்.

    இச்சமயத்தில் யவன மன்னனின் படைத்தலைவன் குறுக்கிட்டான்: “மன்னர் மன்னரே!, உங்களிடம் தோற்றுப் போன இவனுக்கு என்ன ஆணவம் பாருங்கள். தங்களை பேர்சொல்லி விளிப்பதோடல்லாமல் மாவீரன் என்றும் சொல்லவும் மறுக்கிறான். இவனை சும்மா விடக்கூடாது.”

    ”ஆம்! இவனைத் தண்டிக்கத்தான் வேண்டும். முதலில் அந்த விலங்குச் சங்கிலிகளை நீக்கு.”

    epi66மெய்க்காப்பாளனுக்கு ஏதும் விளங்கவில்லை. இருந்தாலும் வேண்டா வெறுப்பாக புருஷோத்தமனின் தளைகளை கழட்டினான்.

    “போரஸ், இப்போது சொல். என்னை ஏன் மாவீரன் என அழைக்க மறுக்கிறாய்?”

    “சிகந்தரே! ரொக்ஸானாவின் விருத்தாந்தத்தைக் கேட்டபின் தந்திரத்தால்தான் என்னை வென்றிருக்கிறீர் என்பது தெளிவாகிவிட்டது. இந்நிலையில் நான் எப்படி உங்களை மாவீரன் என்று கூறமுடியும்?”

    ”போரஸ், நீ சொல்வது சரியல்ல. போர் என்பது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் புரியும் போட்டியைப் போன்றதல்ல. போர் தொடுக்கும் ஒரு அரசன் எவ்வாறாகிலும் வெல்லுவதற்குத்தான் முயல்வான். அதைத்தானே நானும் செய்தேன். உங்கள் பரத கண்ட்த்தில் யுத்த தந்திரஙகள் என்பவையே இல்லையோ?”

    “உண்டு யவன மன்னரே! அதர்மம் தலை தூக்கி தர்மம் நிலைகுலையும்போது அதர்மத்திற்கு எதிராக யுத்த தந்திரங்களைப் பயன்படுத்தலாம். மற்றபடி, ’வில்லுக்கு வில், வாளுக்கு வாள், தோளுக்குத் தோள்’ என்பதுதான் நியதி.”

    புருஷோத்தமனின் பதில் அலெக்சாண்டருக்குப் பிடித்தது.

    “போரஸ், உன்னை நான் எவ்வாறு நடத்த வேண்டும் என நினைக்கிறாய்?”

    “சிகந்தரே, என்னை ஒரு நாட்டின் மன்னனாக நடத்துங்கள்.”

    அலெக்சாண்டரின் வியப்பு பன்மடங்கு கூடியது. ”இதுவரை என்னிடம் தோல்வியைத் தழுவிய எந்த அரசனும் இவ்வாறு பேசியதில்லை. அவ்வாறு எவனாவது கூறியிருந்தால் அவனது தலை கொய்யப்பட்டிருக்கும். உனக்கும் அதே கதி நேர்ந்திருக்கும். ஏனெனில், தோற்றுப் போனவர்கள் எல்லாம் என் அடிமைகள். ஆனால் உனக்கு அப்படிப்பட்ட தண்டனையை விதிக்க என் மனம் ஒப்பவில்லை. ரொக்ஸானாவால் எனக்கு மிக நெருங்கியவன் ஆகிவிட்டாய். நீ பலவகையிலும் வித்தியாசமானவனாகத் திகழ்கிறாய். இப்படிப்பட்ட நிலையில், அதாவது அடிமைப்படுத்தப் பட்டாலும், எப்படி உன்னால் பயமில்லாமல் இருக்க முடிகிறது? உன் வலிமைதான் என்ன?” என்றான் அவன்.

    “சிகந்தரே! இருப்பது ஒரு உயிர்தானே! என்றைக்காவது ஒரு நாள் அது நீங்கத்தான் போகிறது. பயந்து பயந்து உயிர் வாழ்பவன் ஒரு கோழை. நான் அப்படிப் பட்டவன் அல்ல. போரில் வெற்றியோ தோல்வியோ சகஜம். எங்கள் அரசகுல ஆசாரப்படி, வென்றவர் தோற்றவர் நாட்டை ஆள்வர். தோற்றவர் போரில் மாண்டு போனால் வீர சுவர்க்கம் எய்துவர். ஆக, இதில் அச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

    “என் ஆசான் அரிஸ்டாடில் சொன்னதுபோல் பரத கண்டத்தவர்கள் ஆன்மீக பலம் பொருந்தியவர்கள்தான். இதைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்வாயா?”

    “சிகந்தரே! பரத கண்ட அரசர்களுக்கு அரண்யத்தில் வாசம் செய்துகொண்டு தவமியற்றும் முனிவர்களும் யோகிகளும் ஆசான்களாகத் திகழ்பவர்கள். அரியணை ஏறும் முன் அரசகுமாரர்கள் அவர்களிடம் பாடம் கற்பார்கள். அந்தத் தபஸ்விகள் அடிப்படைக் கல்விiயை இளவரசர்களுக்குப் புகட்டுவதோடு ஆன்மீக போதனையும் ஊட்டுவார்கள். இதனால் அவர்களுக்கு மரண பயம் என்பதே போய்விடும். இதுதான் எங்கள் வலிமை.”

    “அப்படியானால், எனக்கும் அப்படிப்பட்ட ஆன்மீக பலம் பெறவேண்டும் எனும் ஆவல் இப்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு நான் என்ன செய்யவேண்டும் சொல் போரஸ்.”

    ”இங்கிருந்து ஒரு காத தூரத்தில் ஒரு அடர்ந்த காடு உள்ளது. அங்கு ஆசுதோஷர் எனும் ஒரு முனிவர் தன் ஆசிரமத்தில் தவம் இயற்றிய வண்ணம் இருப்பார். அவரிடம் நீங்கள் சரணடையுங்கள். கட்டாயம் ஆன்மீக பலம் பெறுவீர்கள்” என்றான் புருஷோத்தமன்.

    “ரொக்ஸானா, போரஸ் சொல்லியவாறு நான் இப்போதே அந்த அடவிக்குச் செல்லப் போகிறேன். உன் உடன்பிறவா சகோதரன் இப்போது நம் விருந்தினன். அவனை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நான் திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகலாம்” என்றான் அலெக்சாண்டர்.

    அந்த அடாத மழையிலும் புரவியேறி தனியே புறப்பட்ட அவனை நோக்கிய புருஷோத்தமன் “மாசிடோனிய மன்னரே! தாங்கள் தனியே செல்ல வேண்டாம். அந்தக் காட்டுப்பாதை கரடுமுரடானது. அத்தோடு மழையும் அதிகமாக உள்ளதால் நீங்கள் வழி தப்பிப்போக வாய்ப்புகள் அதிகம். ஆகவே, நாளை வரை பொறுத்திருந்தால் என் மெய்க்காப்பாளன் உங்களுக்கு வழி காட்டுவான். நீங்கள் ஆசுதோஷர் ஆசிரமத்தில் முனிவரிடம் பேசி முடியும் வரை இவன் வெளியே காத்திருந்து பின்னர் தங்களை பத்திரமாக அழைத்து வருவான்” என்றான்.

    அந்த யோசனையை ஏற்று, மறுநாள் காலை புருஷோத்தமனின் மெய்க்காப்பாளனோடு அலெக்சாண்டர் புறப்பட்டான்..

    (தொடரும்)

    Share