ராமன் வரும் வரை காத்திரு – முடிவுரை

    ராமஸ்வாமி ஸம்பத்

                                                                     முடிவுரை

”ஒரு எழுத்தாளர் கதையை எழுத ஆரம்பித்தபின் அக்கதையே அவரை ஆட்கொண்டு தன்போக்கில் அவரை எழுதவைக்கும்” என்று பேராசிரியர் கல்கி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். அதற்கு தன் அனுபவத்தையே மேற்கோளாகக் காட்டினார். ‘சிவகாமியின் சபதம்’ என்னும் வரலாற்று நெடுங்கதையை அவர் எழுத ஆரம்பித்தபோது நாகநந்தியெனும் பாத்திரத்தை ஒரு வழிப்போக்கனாகத்தான் அறிமுகம் செய்ய இருந்தாராம். ஆனால் கதை உருவெடுக்கும்போது நாகநந்தி ஒரு முக்கிய கதாபாத்திரமாகப் பரிணமித்து புலிகேசியின் அண்ணன் நீலகேசியாக மாறிவிட்டாராம். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ எனும் வரலாற்று நவீனத்தில் சேந்தனமுதன் என்னும் பாத்திரம் தஞ்சைத் தனிக்குளத்தார் ஆலயத்தில் புஷ்பகைங்கர்யம் செய்பவனாகத் துவங்கி இறுதியில் செம்பியன் மாதேவியாரின் ‘திருவயிறு உதித்த’ மதுராந்தக உத்தம சோழராக மாறிவிட்டதும் தன்னை மீறிய செயல் எனக்குறிப்பிட்டார் கல்கி   அதே நவீனத்தில் அவர் பிற்காலத்தில் ராஜராஜ சோழன் எனப்புகழ்பெற்ற அருள்மொழி வர்மன் தனக்கு எல்லாரும் மிக்க விரும்பி அளித்த மகுடத்தைத் திரஸ்கரித்து அதனை மதுராந்தகனுக்கு சூட்டியதை சிலாகித்து அந்த இறுதிப் பகுதிக்கு ‘தியாகசிகரம்’ என்று தலைப்பினை அளித்திருந்தார். பேராசிரியரின்  நோக்கம் அருள்மொழியின் வரலாற்றுப் புகழ்பெற்ற தியாகம் வாசகர்களின் மனத்தில் நிலைக்க வேண்டும் என்பதே. ஆனால் வாசகர்களின் மனத்தில் நிலை பெற்றது என்னவோ வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் பாத்திரமே.

‘ராமன் வரும் வரை காத்திரு…’ எனும் இத்தொடரை எளியேன் எழுத நினைத்தபோது ராமாயண காவியத்தில் எத்தனை பாத்திரங்கள் அவனுக்காகவும் ராமகாரியத்தில் உதவுவதற்காகவும் காத்திருந்தன என்பதனை ஒரு பட்டியல் போட்டு இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் முடித்துவிடலாம் எனக்கருதித் தொடங்கினேன். ஆனால் அது என் கைமீறி பதினைந்து (இந்த முடிவுரையையும் சேர்த்து) பகுதிகளில் கிட்டத்தட்ட மொத்த ராமகாதையையே சொல்ல வைத்துவிட்டது. இது ஸ்ரீ ஸீதாராமன் கிருபையால் மட்டுமே சாத்தியம். ஏனெனில், நான் பண்டிதன் அல்ல. வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் முழுவதையும் மற்றும் ஏனைய காண்டங்களில் சில சர்கங்களை மட்டும் படித்தவன் நான. அதேபோல் கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்ததில்லை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘சக்ரவர்த்தி திருமகன்’, மற்றும் ‘Ramayana’ என்ற நூல்களை முழுமையாகப் பலமுறை படித்திருக்கிறேன். மற்றபடி பிரபல பெளராணிகர்களான அண்ணாசாமி பாகவதர், எம்பார் விஜயராகவாசாரியார், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி, தூப்புல் லக்ஷ்மிநரசிம்மன், வேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோரது தமிழ் உபன்யாசங்களையும் ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் அப்பாலாசார்யுலு, மல்லாடி சந்திரசேகர சாஸ்திரி, சாகண்டி கோடீஸ்வரராவ், சாமவேதம் ஷண்முக சர்மா முதலானோரின் தெலுங்கு காலக்ஷேபங்களையும் கேட்ட பாக்கியத்தால் ராமாயணத்தில் புதைந்திருக்கும் தர்ம சூக்ஷ்மங்களையும் ஆன்மீக ரஹஸ்யங்களையும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன். ”ஒருவன் தர்மத்தின் மார்கத்தில் நடந்தால் மிருகங்கள், பட்சிகள், ஏன் அணில் கூட, அவனுக்கு உதவிக்கரம் நீட்டும். அறநெறி வாழ்க்கைக்கு புறம்பாக நடக்கும் ஒருவனை அவன் உடன்பிறப்பு கூட கைவிட்டுவிடுவான்”  என்று ராஜாஜி அவர்கள் ராமாயண சூக்ஷ்மத்தை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

இந்த தொடரை உன்னிப்பாகப் படித்துவந்த இனிய நண்பர் லக்ஷ்மிநாராயணன் ஒரு நாள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஸ்ரீ தியாகராஜரின் ‘மோஹன ராமா’ எனும் மோஹன ராக கீர்த்தனையில் வரும் சரணத்தைச் சுட்டிக்காட்டினார். அதன்படி ராமனின் திருமேனி அழகைக் காண எவரெவரெல்லாம் பூமியில் பிறந்தார்கள் என்று தியாகராஜர் இவ்வாறு கூறுகிறார்: ‘தரமனுஜாவதார மஹிம வினி சுர கின்னர கிம்புருஷ வித்யாதர சுரபதி விகி விபாகர சந்திராதுலு கரகுச்சு பிரேமதோ வர மிருக பக்ஷி வானர தனுவலசே கிரினி வேலயு ஸீதாவர! சிரகாலனு குறி தப்பக மெய்மறச்சி ஸேவிசிரி…’ [(ராமா) உன் உருவம் விவரிக்க முடியாத அளவில் என்னை ஈர்க்கிறது. ஸீதை மணாளனே! உன்னுடைய மானுட ரூபத்தின் மஹிமையைக் கேட்டறிந்து, ஆயிரக்கணக்கான தேவர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், வித்யாதரர்கள், பிரமன், இந்திரன், சூர்யன், சந்திரன் முதலானோர் பொங்கிவழியும் அன்போடு தாங்களாகவே இப்புவியில் விதவிதமான மிருகங்களாகவும், பறவைகளாகவும் வானரர்களாகவும் அவதரித்து உன் ரூப லாவண்யத்தை குறி தப்பாமல் இமை கொட்டாமல் பலகாலம் கண்டு மெய்மறந்து ஸேவித்து மகிழ்ந்தார்கள் அல்லவா….] ‘பும்ஸாம் மோஹன ரூபஹ’ என்று ராமனின் எழிலை சான்றோர்கள் வர்ணிப்பார்கள். அதாவது ஆண்களும் ‘ஆஹா! நாம் பெண்களாகப் பிறந்து இவ்வழகனை மணம் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று ராமனின் அழகை ஆராதிப்பார்களாம்!  செம்மொழியாம் தமிழில் இனிய ராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசல கவிராயர் ராமனின் திவ்ய ரூபத்தை முதன்முதலாகக் கண்ட விபீஷணனின் மனநிலையை இவ்வாறு வர்ணிக்கின்றார்: “ராமனைக் கண்ணாறக் கண்டானே, விபீஷணன் தன் மாமுடிமேல் வைத்துக் கொண்டானே!” அப்பேற்பட்ட மயக்கும் எழில் ராமனுடையது.

இருபதிற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் மற்றும் அசேதனப் பொருட்கள் ராமன் வரும் வரை காத்திருந்ததைக் கண்டோம். இவற்றிற்கும் மேலாக எனது பட்டியலில் இரு பெரும் பாத்திரங்களான ராவண கும்பகர்ணர்கள் கூட ராமன் வரும் வரை காத்திருந்தார்கள் என்பது சேர்க்கப்பட வேண்டும். பண்டிதர்கள் இக்கருத்தை ஒப்புக் கொள்வார்களோ என்னவோ? சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்ஜாதர் என்னும் பிரம புத்திரர்களான யோகிகளின் சாபத்தால் பூமியில் பிறப்பெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினால் மும்முறை திருமால்மீது வைரபாவத்துடன் புவியில் தோன்றிய ஜயன் விஜயன் என்னும் வைகுந்த காவலாளர்கள் தமது இரண்டாம் ஜன்மத்தில் ராவண கும்பகர்ணர்களாக விளங்கி திருமாலின் மானிட அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவன் கையால் விடுதலை பெற்றனர் அல்லவா?

கவியரசர் கண்ணதாசன் ‘வானம்பாடி’ என்னும் திரைப்படத்திற்காக “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்” என்ற ஓர் பாடலை காதலியைப் பிரிந்த காதலனின் புலம்பலாக இயற்றினார். திருமால் ராமன் எனும் ஓர் மானிடனாக அவதரித்து இருமுறை தன் இனிய மனைவி ஸீதையை பிரிந்து பட்ட துயரத்தை அப்பாடல் பிரதிபலித்தது.

’வேதம் தமிழ் செய்த மாறன் குருகூர் சடகோபன்‘ என்று பக்தர்களால் போற்றப்படும் நம்மாழ்வார் இவ்வாறு கூறுவார்:

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ

நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா

நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு

நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?

[கர்மங்களுக்குக் கட்டுப்படாத திருமால் இராமனாக அவதரித்த பொழுது படாத பாடுபட்டு நல்லோர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களைக் கொன்று நாட்டாரைக் காப்பாற்றினான். தன்னடி சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவன் அவர்களைத் தன்னுடன் அழைத்துப்போனான். இதைக் கேட்டபின் நாராயணனுக்கு ஆட்படுவதை விட்டு வேறு யாருக்கு ஆட்படுவார்கள்?]

மானிடர் தாம் படும் துயரங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டவே திருமால் ராமனாக அவதரித்தார் என்பது எளியேனின் கருத்து. ராவண வதம் ஒரு வியாஜமே. ரகு குல திலகனாக சக்ரவர்த்தித் திருமகனாகத் திகழ்ந்தாலும் ஒரு சாமான்யன் போல் எல்லா கொடுமைகளுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டான் ராமன். ஆசை காட்டி மோசம் செய்வது  (முதல் நாள் அரியணை, அடுத்த நாள் அரண்யம்), ஒருவன் மனைவியை அவனிடமிருந்து பிரிப்பது போன்றவை எந்த மானிடனுக்கும் இழைக்கப்படும் இரு பெரும் அநீதிகளாகும். அப்படிபட்ட சந்தர்ப்பங்களில் ராமன் நடந்துகொண்டவிதம் மானிடர் அனவருக்கும் ஒரு பாடமாகும். அறநெறியில் வாழ்க்கை நடத்துவது எவ்வளவு கடினமானாலும், அதனை எவ்வாறு சாதிப்பது என்பதற்கு ராமனின் வரலாறே அத்தாட்சி.

காவிய ராமனைக் குறை கூறுவோருக்கு, தாளும் தடக்கையும் கூப்பி அடியேன் விடுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அவனிடம் குறைகண்டால் அதற்கு பொறுப்பு அக்கதாநாயகனைப் படைத்த வால்மீகியே என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும். ராமனை தெய்வத்தின் அவதாரமாகக் கருதினால், அந்த தெய்வத்தைக் குறை கூற நமக்கு அருகதை இல்லை என்பதையும் உணரவேண்டும். வாலி வதமாகட்டும், ஸீதையை நாடுகடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஆகட்டும், ராமனுக்கு ஏற்பட்ட பழிகளின் பிண்ணனியில் பல சூக்ஷ்மங்கள் மறைந்திருக்கின்றன என்பதற்குப் புராணங்களில் சான்றுகள் உள்ளன. அவற்றைத் தீவிரமாக ஆலோசிக்காமல் வெறும் குப்பையெனக் கருதுவது ராமனுக்குச் செய்யும் அநீதியாகும். “தும்பைப் பூவை ஒத்த வெண்பட்டில் ஒரு சிறு கறைபட்டாலும் பார்ப்பவற்கு அந்த கறைதான் பளிச்சென்று தெரியும்” என்று ராஜாஜி கூறுவார். ஆகவே ராமனின் தர்மசங்கடங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வவதார புருஷனுக்கு எவருடைய – முக்கியமாக அடியேனுடைய – வக்காலத்தும் வாங்கவேண்டிய அவசியம் கட்டாயமாக இல்லை. அதே நேரத்தில் யுக தர்மங்களை மறந்து நமது சிற்றறிவுடன் அம்மஹாபுருஷனை எளிதாக எடைபோடும் devil’s advocate ஆகவும் நாம் திகழக்கூடாது.

ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முனைவர் (அவர் ஒரு முனிவரைப் போன்றவர் கூட) கே. ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒருமுறை நாகர்ஜுனா பல்கலைக் கழகத்தில் ‘Irony’ (புரியாத புதிர்) என்ற தலைப்பில் உரையாற்றும்போது கீழ்கண்டவாறு கூறினார்:

…..ஒருநாள் ராஜாராமன் அன்றைய அரசு அலுவல்களை முடித்தபின், அந்தப்புரத்திற்கு வருகிறான். நிறை மாதத்தில் இருக்கும் பட்டமஹிஷி ஸீதையின் பேரழகு அவனை மெய்மறக்கச் செய்கிறது. உடனே, ‘என் கண்ணே! உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன். கேள்’ என்கிறான். ‘ஆருயிரே! எனக்கு மீண்டும் கானகத்தில் முனிவர்களின் ஆசிரமத்திற்குச் செல்ல விருப்பம்’ என்கிறாள் ஸீதை. அவளிடம் இல்லாதது என்ன? மாயப் பொன்மானுக்கு ஆசைபட்டு அதனால் ஏற்பட்ட பிரிவாற்றாமையை அவள் மறந்திருப்பாளா? ராமன் ஏன் ஸீதைக்கு வரம் கொடுக்க விரும்ப வேண்டும்? சூலுற்றிருக்கும் ஸீதை ஏன் கானகம் செல்ல ஆசைப்பட வேண்டும்? இக்கேள்விகளை விடுவிக்க முடியாத புதிர்கள் அன்றி வேறெவ்வாறு கொள்வது?

லண்டன் மாநகரில் உள்ள ஷேக்ஸ்பியர் நாடக மன்றத்தில் அன்னார் படைத்த ‘ஒதெல்லோ’  நாடகம் வெற்றிகரமாக நாட்கணக்கில் நடந்து கொண்டிருந்தது. அந்த நாடகத்தின் நாயக நாயகி பாத்திரங்களில் நடித்தவர்கள் இயல் வாழ்க்கையில் கணவன் மனைவி ஆவர். நாடகத்தின் உச்சகட்டத்தில் ஒதெல்லோ தன் மனைவி டெஸ்டிமோனாவின் கற்பினை சந்தேகித்து அவள் கழுத்தினை நெரிக்க முற்படவேண்டும். ஒருநாள், தன் பாத்திரத்தில் ஒன்றிப்போன அவன் மெய்யாகவே அவள் கழுத்தை பலத்துடன் நெரிக்க, அவள் மெல்லிய குரலில் ’இது நாடகம் என்பதை மறந்துவிட்டீரா?’ என்று கேட்க அவன் சுதாரித்துக் கொள்கிறான். நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது கணவன் மனைவியிடம், ‘அன்பே உன்னை வலிக்க வலிக்க நெரித்து விட்டேனா?’ என்று கேட்கிறான்.

ஆதிதம்பதிகளான் லக்ஷ்மி நாராயணர் புவியில் ராமன் ஸீதையாக அவதரித்து நம் வாழ்க்கை நெறியை செப்பனிடுவதற்காக ஒரு நாடகத்தினைச் சிறப்பாக நடத்திவிட்டு வைகுந்தம் ஏகியுள்ளனர். இதைப் புரிந்து கொண்டால் நாம் ’ராமன் ஸீதையிடம் கடுமையாக நடந்தான்’ என்று குறை சொல்ல இயலாது…..

கைகேயி பாத்திரத்தைப் பற்றி ஒரு விளக்கம். ஈன்ற கெளசலையைவிட ராமன்மேல் கைகேயி அதீதமான அன்பைப் பொழிந்தவள். தன் மகன் பரதன்கூட அவளுக்கு இரண்டாம் பட்சம் தான். அப்படிப்பட்டவள் எப்படி மனம் மாறி ராமன் நாடு கடத்தப்பட வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தாள்? சேடியான மந்திரையின் துர்ப்போதனையால் மட்டும் அத்தகைய மனமாற்றம் ஏற்பட்டிருக்குமா? இக்கேள்விகள் என் மனத்தில் பிறந்து ஆண்டாண்டுகளாக என்னை வாட்டி வதைத்தவாறு இருந்தன. அவற்றிற்கு பதில் கிடைக்காமல் போகவில்லை. ஸப்தகிரி என்னும் தூர்தர்ஷன் தெலுங்குத் தொலைகாட்சியில் (நமது பொதிகை போன்றது) பல ஆண்டுகளுக்கு முன் ஓளிபரப்பான கைகேயியைப் பற்றிய ஒரு ஓரங்க நாடகம் எனக்கு அந்த பதிலைத் தந்தது. அதன்படி கைகேயி ஒரு ஜோடிப்பறவைகளின் சம்பாஷனையின் மூலம் அடுத்த பதினான்கு ஆண்டுகட்கு அயோத்தி அரியணையில் யார் அமர்ந்திருந்தாலும் அவர் மாள்வார் என்ற முன்கூட்டிய தகவலைத் தெரிந்து கொண்டு எவ்வகையிலாவது ராமன் அரியணை ஏறுவதைத் தடுக்க வேண்டும் எனத்தீர்மானிக்கிறாள்.

மற்றொரு புராணத் தகவல்படி, தண்டகாரண்யம் வரை தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்த ராவணன் அயோத்தியை ஆக்கிரமிக்க தசரதனுடன் போர் புரிந்தபோது கைகேயி தன் கணவனுக்கு தேரோட்டியாக இருந்தாள். அப்போரில் ராவணன் எய்த அம்பினால் தசரதன் மூர்ச்சை அடைந்தான். அவன் மாண்டுவிட்டான் எனக்கருதி போர்க்களத்தை நீங்க நினைத்த ராவணன்மீது கைகேயி ஒரு சபதம் செய்தாள். “இலங்கை அரசனே! எம் ரகு வம்சத்தில் உதிக்கப்போகும் ஒருவனால் உனக்கு மரணம் நிச்சயம்” என்று சூளுரைத்தாள். ராவணன் சிரித்து, “மலட்டுத் தன்மையினால் வாடிய உன் கணவன் மாண்டுவிட்டான். இனி அவனுக்கு ஏது வாரிசு?” எனப்பகர்ந்து அங்கிருந்து அகன்றான். இது நடந்து பல ஆண்டுகளுக்குப்பின் புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் பிறந்த ராமன் தன் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவனை வனவாசம் செய்ய வைத்தாள் கைகேயி. இதனை எனக்குக் கூறிய ஒரு தெலுங்கு பெளராணிகர், “ராமனின் பிறப்பு ரகசியத்தை அறிந்தவர்களில் கைகேயியும் ஒருவள்”  என்ற தகவலையும் அளித்தார். ஆக, ராமகாரியத்திற்கு உதவியவர்களில் கைகேயி முதன்மையானவள்.

இத்தொடரில் ஆங்காங்கு காணப்படும் கம்பனின் சொல்லோவியங்களின் தெளிவுரைகள் பேராசிரியர் முனைவர் பூவண்ணனின் கைவண்ணம். அதேபோல் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முனைவர் மதி ஸ்ரீனிவாசன் அவர்களின் தெளிவுரைகள் கைகொடுத்தன. சுந்தர காண்டப் பகுதியில் வரும் ஒரு வடமொழி சுலோகத்திற்கான விளக்கத்தை திரு மா.கி. வெங்கடராமன் அளித்துள்ளார். இவர்களுக்கு அடியேன் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

’ராமன் வரும் வரை காத்திரு…’ என்ற தலைப்போடு கூடிய இத்தொடரை மிக்க விருப்பத்துடன் காத்திருந்து படித்துவந்த கீதா சாம்பசிவம், பார்வதி ராமச்சந்திரன், நந்திதா, தஞ்சை வி. கோபாலன், தமிழ்த்தேனீ, ஷைலஜா, சதீஷ் குமார் டோக்ரா, மற்றும் ‘வல்லமை’ ஆசிரியர் பவள சங்கரி போன்ற மேதைகளும் மனத்துக்கு இனியவர்களும் தங்கள் பின்னூட்டங்களின் மூலம் மேலும் பல அரிய தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டது நான் பெற்ற வரமே. அவர்களுக்கு என் நன்றி. ஸ்ரீ ஸீதாராமனின் பேரருள் அவர்கள்மீதும் ‘வல்லமை’ குழுமத்தின்மீதும் அல்லும் பகலும் அனவரதமும் பொழிய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

ஒருமுறை அடியேனின் ஆசான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஹனுமத் காளி வர பிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்களை ”இப்புவியில் ராமராஜ்யம் மீண்டும் மலருமா?” என்று கேட்டபோது அவர் தனக்கே உரிய மந்தஹாசத்துடன், “ஓஹோ! உனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா? அப்படிப்பட்ட பரிபாலனம் வேண்டுமானால், ஸ்ரீ ராமபிரானே மறுபடி அவதரிக்க வேண்டும். அல்லது ஒவ்வொருவரும் அவன் காட்டிய அறநெறியில் தம்தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். இவ்விரண்டும் சாத்தியமா? ’இல்லை’ என்பதே என் முடிவு. ஒரே ஒரு வழி உண்டு. ஸ்ரீ ராமனின் கருணைக்காக உன் ஏக்கம் உச்ச நிலையை அடையவேண்டும். ஆகவே ராமன் கருணைக்காகக் காத்திரு” என்றார்.

நாமும் ஸ்ரீ ஸீதாராமனின் கருணைக்காகக் காத்திருப்போம்!

         நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

    இம்மையே ‘இராம’ என்ற இரண்டு எழுத்தினால்.

                         —கம்ப ராமாயண தனியன் 

   

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ராமன் வரும் வரை காத்திரு – முடிவுரை

 1. மிகப் பொருத்தமான, அற்புதமான முடிவுரை.  ராமனின் புகழை எவராலும் அழிக்க முடியாது.  ஆகையால் ஆங்காங்கே சிலர் சொல்லும் அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் இருப்பதே நலம்.  உங்கள் முடிவுரையில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.  உள்ளத்திலிருந்து வந்திருக்கும் வார்த்தைகள், உங்கள் உள்ளத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. 

 2. அன்புள்ள்ள கீதாம்மா!
  தங்கள் பின்னூட்டம் என் கண்களைக் குளங்களாக்கி விட்டது. மிக்க நன்றி.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 3. மிக அழகாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துகள். மணவாளன் இராமகாதையும் இராமாயணங்களுமென்ற சரஸ்வதி சம்மான் பெற்ற நூலில், (இதுவரை தமிழில் இருவருக்குத்தான் இவ்விருது கிடைத்துள்ளது; இ. பா வுக்கு, அவரது ராமானுஜர் நாடகத்திற்கு, 1999 ல்; 2011ல் மணவாளனுக்கு இந்நூலுக்கு) மொத்தமாக 48 ராமாயணங்களை ஆய்ந்துள்ளார், அவற்றில் 11 சமஸ்கிர்தம்; தெலுங்கு 2; ஜப்பான் மொழியில் 2; தாய் மொழியில் 1 மற்றும் பல மொழிகளி. முதல் ராமாயணம் கி. மு 5 ல் பாலி மொழியில் எழுதப்பட்டது பெயர்  தசரத ஜாதகம்; இர்ண்டாவதும் பாலி மொழியில் கி. மி 3 ஆம் நூற்றாண்டில் அநாமக ஜாதகம். மூன்றாவ்து தான் வால்மீகி ராமாயணம்.
  ஜப்பன் மொழியில் கி. பி 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
  ஆகையால் சிறப்பாகப் படிக்கப்பட்டும் பல மாற்றங்களுடனும் ராமாயணம் உலவி வந்துள்ளது இத்திருவுலாவில் உங்களுடனதையும் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம்!  அதாவது 49 வதாக!
  தக்கை ராமாயணம் என்பது எம்பெருமான் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதன் முதல் பகுதி மட்டுமதான் அச்சில் வந்துள்ளது. அத்ன் பிரதி என்னிடம் உள்ளது. நீங்கள் பெற்றுப் படிக்கலாம்.
  காங்கேயன் குலத்தோன்றல் நல்லதம்பி காங்கேயன். இந்த ராமாயணம் எழுத வழி வகுத்தான். எழுதிய எம்பெருமான் அவதானியைச் சில பொறாமைக் கார புலவர்கள் தடுக்கப் பார்ததனராம். அப்போது நல்லதம்பியே அழைத்துச் சென்று தக்கை ராமாயணம் பாடுவித்தான்
  திருச்செங்கோடு கோவிலில் நல்லதம்பி செய்த திருப்பணீகளுக்கான கல்வெட்டு (1599)  உள்ளது.
  தெலுங்கில் புர்ர கத என்பது போலத்தான் தக்கை கதையும் தக்கையும் ஒரு கருவி!

  சம்பத்து என்றாலே செல்வம் என்றுதானே பொருள்! ராமாயணத்திற்குச் செலவம் சேர்த்துள்ளீர்கள்! 

  ராமன் (திரு ராஸ்வாமி) பெற்ற சம்பத் மற்றொரு ராமனைப் பெற்றெடுத்துள்ளார்!
  வாழ்த்துகள்
  நரசய்யா

   

 4. தங்கள்  முடிவுரையில் எளியவளாகிய என்னையும் சேர்த்து ஆசீர்வதித்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி!.. உண்மையில் மனம் மிகவும் வருந்தியிருந்த சூழலில் இந்தத் தொடர் வந்தது.. அருள் மழையைப் பொழிந்து, பரவசப்படுத்தி அமைதி தந்தது!..இறையருளுக்கும் தங்களுக்கும் என் நமஸ்காரங்கள் என்றென்றும்..

 5. அன்புள்ள நரசய்யா காரு!
  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! என்னை எங்கேயோ உயர்த்தி வைத்து விட்டீர்கள். பயமாகத்தான் இருக்கிறது. எல்லாப்புகழும் ஸ்ரீ ஸீதாராமனுக்கே!
  மனவாளன் நூல் குறித்து தாங்கள் தந்த விவரங்கள் என்னை வியப்படையச் செய்கின்றன. அவ்வளவு ராமாயணங்களா? அவசியம் அவர்தம் நூலைப் படித்தே ஆகவேண்டும். அதற்குத் தங்கள் உதவி தேவை.
  அதேபோல் எம்பெருமானின் தக்கை ராமாயணத்தையும் படிக்க ஆவலாக இருக்கிறது.
  நன்றி கலந்த வணக்கங்களுடன்
  ஸம்ப்த்.

 6. அன்புள்ள பார்வதி ராமச்சந்திரன் அவர்களே!
  எளியேனின் தொடர் தங்களுக்கு மன அமைதியை அளித்ததென்றால் அது ஸ்ரீ ஸீதாராமன் அருளே. என்னை ஒரு கருவியாக்கித் தங்களுக்கு மன மகிழ்ச்சியை
  பிரசாதித்துள்ளார் அந்த கல்யாண குணங்கள் பொருந்திய கல்யாண ராமன்.
  ’ரமிஞ்சுவாரெவருரா ரகூத்தமா நின்னு வினா?’ (ஹே ரகோத்தமா, உன்னைவிட மகிழ்ச்சியை அளிப்பவர் யாவர்?’) எனத் தியகராஜர் போற்றிப் புகழ்ந்த அவன் அருள் அனைவருக்கும் மழையெனப் பொழியும்.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published.