ராமஸ்வாமி ஸம்பத்   

முன்னுரை

அன்றாட வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால் அது காத்திருப்பதே. ஒருவருக்காகவோ அல்லது ஒரு நிகழ்விற்காகக் நாம் காத்திருக்கும்போது காலம் விரயம் ஆவதுபோல் தோன்றுவது சகஜமான ஒரு அனுபவம். காதலனுக்காகக் காத்திருக்கும் காதலி, கணவன் வரவை  வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் மனைவி, பிள்ளை இன்னும் பள்ளியிலிருந்து வரவில்லையே என்று ஏங்கும் அன்னை, பேருந்தினையோ ரயில் வண்டியையோ எதிர்பார்க்கும் பயணி, அரசாங்க அலுவலகத்தில் ஒரு சான்றிதழுக்காக தவிக்கும் ஒரு சாதாரண மனிதன், மருத்துவ மனையில் வைத்தியருக்காகத் தவமிருக்கும் நோயாளி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரும் கோயிலில் இறைவன் தரிசனத்திற்குக் காத்த்திருக்கும் பக்தன் – இவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு ‘க்ஷணம் க்ஷணம் நிரீக்ஷணம்’  தான். ஆவலோடு ஆரம்பிக்கும் காத்திருப்பு சடுதியில் சலிப்பாகவும் பின்னர் எரிச்சலாக மாறுவதும் இயற்கையே. மொத்தத்தில் காத்திருப்பது என்பது வேதனையே. அப்படிப்பட்ட அனுபவம் ஒன்று அடியேனின் இக்குருந்தொடருக்கு அடிகோலியிருக்கிறது.

ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்  ஒரு நாள், ஆந்திராவில் உள்ள குண்டூர் நகரத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் ஸ்ரீ காளி வனாஸ்ரமத்தில் அடியேன் குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஹனுமத் காளி வரபிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்களைக் காண விஜயவாடாவிலிருந்து நானும் என் உற்ற நண்பன் சிரஞ்ஜீவியும் சென்றிருந்தோம். ஆஸ்ரமத்தின் மாலை பிரார்த்தனையில் கலந்து கொண்டபின் குருமஹராஜ் அவர்களுக்கு நாங்கள் வந்திருக்கும் செய்தியைத் தெரியப்படித்து விட்டு, அவர் அறையின் வெளியே அழைப்புக்காகக் காத்திருந்தோம்.

சற்று நேரத்திற்குப் பின், சிஷ்யர் ஒருவர் வந்து, “குருமஹராஜ் முதலில் உங்களை உணவு அருந்துமாறு பணிக்கிறார்; பின்னர் சந்திக்கலாம் என சொல்லச் சொன்னார்” என்றார்.

எட்டு மணி அளவில் இரவு உணவு முடிந்து, நாங்கள் இருவரும் தியான மந்திரத்தில் காத்திருந்தோம். காலம் கடந்து இரவு பதினொன்று மணியை எட்டியது. ஸத்குருவிடமிருந்து எங்களைச் சந்திப்பது பற்றி ஒரு தகவலும் இல்லை. நள்ளிரவு நெருங்கிய அளவில், எங்களுக்கு குருநாதரைச் சந்திக்க முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ‘சரி, இன்னொரு நாள் வரலாம்’ என நினைத்தாலும், அவர் உத்தரவு இல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகல எங்கள் மனம் ஒப்பவில்லை.

திடீரென்று, “உங்களை வெகு நேரம் காக்க வைத்துவிட்டேனா?” என்ற குருநாதரின் இனிமையான குரல் கேட்டது. பாபுஜி மஹராஜ் தியான மந்திரத்தில் அப்போதுதான் நுழைந்து கொண்டிருந்தார்.

“உங்கள் நேரம் விலை மதிப்பற்றதல்லவா? மன்னிக்கவும். என்ன செய்வது? எனக்கும் சில அனுஷ்டானங்கள் இருக்கின்றன அல்லவா? அதனால்தான் தாமதம். ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? அமைச்சர்களையும் பெரும் பதவியில் உள்ளவர்களையும் காண மணிக்கணக்கில் காத்திருக்கும்போது நமக்கு அலுப்பு தட்டுவதில்லை. ஆனால் ஏழுமலையான் தரிசனத்திற்குக் காத்திருக்கும்போது மட்டும் நமக்கு ‘போர்’ அடிக்கிறது” என்று குருநாதர் சொன்னதும், எங்களுக்குச் சற்று வெட்கமாக இருந்தது. வதனத்தில் குறுநகையோட எங்கள் அருகில் வந்து பரிவுடன் ஆசீர்வதித்து, “உங்களுக்கு வசிஷ்ட மாமுனிவர் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்” என்றார். ஸத்குரு மஹராஜ் கதை சொல்கிறார் என்றால் அதில் நமக்கு அவசியம் தெரிய வேண்டிய ஒரு மாபெரும் உண்மை பொதிந்திருக்கும். அவர் மெல்லத் தொடர்ந்தார்….

ஒரு சமயம் வசிஷ்டர் தன் மானசீகத் தந்தையான பிரமதேவரிடம் சென்று, ‘ஐயனே! தங்கள் ஆணைப்படி சூரிய வம்சத்தோன்றலான இக்ஷ்வாகு மன்னன் முதல் ககுஸ்தன், மாந்தாதா, முசுகுந்தன், திரிசங்கு, ஹரிச்சந்திரன், சகரன், பகீரதன், அம்பரீஷன், ருதுபர்ணன், திலீபன் உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட அயோத்தி அரசர்களுக்கு ஆசானாக செயல் புரிந்துவிட்டேன். புத்திர பாக்கியம் இல்லாத திலீபனும் என் ஆசிரம பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு ஒரு மண்டலம் பணிவிடை செய்து சாபம் நீங்கி ரகு என்னும் உத்தம புத்திரனுக்கு தந்தையாகும் பாக்கியம் பெற்றுவிட்டான். இத்துடன் என் கடமை முடிந்து விட்டது என நினைக்கிறேன். எனக்கும் இப்புவி வாழ்க்கை அலுத்து விட்டது. தயவு செய்து என்னை தங்கள் சத்தியலோகத்திற்குத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்” என்றார்.

பிரமதேவரின் முகத்தில் ஒரு இளநகை ஓடியது. “மைந்தா, ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை என்று சொல்வார்கள். உன் விஷயத்தில் அது உண்மை போலும். உனக்காகக் காத்திருக்கும் ஒரு கிடைத்தற்கரிய மாபெரும் பேறு பற்றி உனக்குத் தெரியவில்லை. ஆதலால் அந்தப் பேறினை எதிர்நோக்கி ரகுவம்சத்தில் வரப்போகும் இன்னும் சில தலைமுறைகளுக்கு நீ ஆசானகத் திகழவேண்டும்” என்றார்.

“அப்படி என்ன பெரும் பேறு தந்தையே?”

“உன் ஆணைப்படி விரதம் இருந்த திலீபனுக்குப் பிறந்த ரகுவின் குலத்தில் ஆதிவிஷ்ணுவே அவதரித்து உன்னால் ‘ராமன்’ எனும் பெயர் சூட்டப்பட்டு உனக்கு சீடனாக அமையப் போகும் நல்வாய்ப்பினை கைவிடலாமா?”

“திருமால் எனக்கு சீடனா? அந்த சர்வக்ஞனுக்கு நான் ஆசானா? இது என்ன கொடுமை பிரபூ?”

”ஆம், இது திருமாலின் லீலா வினோதம். தான் எடுக்கப்போகும் மானிட அவதாரத்தில் உன்னைப் பெருமை படுத்த அவர் நிர்ணயித்துள்ளார். பூலோகத்தில் உன் கடமை இன்னும் முடியவில்லை. ஆகவே, ராமன் வரும் வரை காத்திரு”…..

இவ்வாறு வசிஷ்டரின் கதையைக் கூறிமுடித்த குரு மஹராஜ், ”பிரமதேவன் ஆணைப்படி வசிஷ்டர் ராமன் வரும் வரை காத்திருந்தார். ரகுவிற்கு அஜன் பிறந்தான்.  அஜனுக்கு தசரதன் மைந்தனான். மக்கட்பேறு இல்லாத தசரதனுக்கு புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் ராமன் மற்றும் பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கினன் புதல்வர்களாக வாய்த்தனர். அந்நால்வரும் வசிஷ்டருக்கு சீடர்களாயினர். பல்லாண்டுகளாக ராமன் வரும் வரை காத்திருந்த அவர்தம் பெருமைதான் என்னே!  எப்பொழுதும், இறைவனைக் குறித்தோ ஆன்மீக விஷயத்திலோ காத்திருப்பதைப்பற்றி சலிப்பு தட்டக்கூடாது. ஏனெனில் அதுவும் ஒருவகையில் தவமே. வெகு காலம் காத்திருந்து அதன் முடிவில் ஒருவன் அடையும் ஆனந்தம் அளவிடர்க்கரியது” என்று எங்கள் உள்ளத்தில் ஏற்பட்ட தவறான எண்ணத்தை நீக்கினார் ஸத்குருநாதர்.

மோதிரக்கையால் குட்டுபட்ட எங்களுக்கு அதன் பின் ஒரு மணி நேரம் தன் ஆணிமுத்து போன்ற நல்லுரையை நல்கி, “நேரம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நெடுஞ்சாலையில் ஒரு ‘லாரி’  காத்திருக்கிறது. அதில் ஏறி நீங்கள் சுகமாகப் பயணிக்கலாம்” என்று கூறி விடை கொடுத்தார். அவர் சொன்னது போல எங்களுக்காக விஜயவாடா செல்லும் ‘லாரி’ ஒன்று ஆசிரமத்தின் அருகே காத்திருந்தது.

செல்லும் வழியில் பாபுஜி மஹராஜ் சொன்ன வசிஷ்டரின் கதையைப்பற்றி விவாதித்தவாறு நாங்கள் விஜயவாடா சேர்ந்தோம்.

வீடு திரும்பிய என்னுள் எண்ண அலைகள் மோதியவாறு இருந்தன…..

’வசிஷ்டர் மட்டுமா ராமன் வருகைக்குக் காத்திருந்தார்? ராமாயண காவியத்தில் எத்தனை பேர் அவ்வண்ணலின் வருகைக்காகவும் ராம காரியத்திற்குத் துணைபோவதற்கும் காத்திருந்தனர்? உண்மையில் ஆதிகவி வால்மீகி இயற்றிய காவியமே அத்தகைய காத்திருப்போர் கதைகளின் தொகுப்பே அல்லவா…?’

அதனைச் சற்று அசை போடுவோமா?

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ராமன் வரும் வரை காத்திரு……

  1. அன்பு நண்பர் திரு ராமஸ்வாமி சம்பத் அவர்களுக்கு நமஸ்காரம்

    , ராமனுக்காகவும் ராமஸ்வாமிக்காகவும் காத்திருக்கத் தயார்

    , லோக மாதா சீதாதேவியே ஶ்ரீ ராமனுக்காகத்தானே காத்திருந்தாள்

    .அப்படி இருக்க நாமெல்லோரும் காத்திருக்க குடுத்து வைத்திருக்க வேண்டுமே

    , தொடருங்கள் காத்திருப்போம்

    ஶ்ரீ ராமனும் சீதா தேவியும் நம்மைக் காத்து அருளட்டும்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

  2. வணக்கம் திரு ராமஸ்வாமி சம்பத்
    ‘ராமன் வரும் வரை காத்திரு’ என்ற தொடர் மூலம் உங்கள் எழுத்தக்களை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வல்லமை இதழுக்கு நன்றி.

    ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. உங்கள் தொடருக்காக நானும் காத்திருக்க தயாராக இருக்கிறேன். 

  3. ’கண்ணன் வருவான்’ எனும் தொடர் மூலம் அனைவரையும் மகிழ்விக்கும் கீதா அம்மா, தமிழ்த்தேனீ ஐயா மற்றும் ரஞ்சனி நாராயணன் அவர்களே! எளியேனின் ‘ராமன் வரும் வரை காத்திரு’ குறுந்தொடருக்கு தங்கள் போன்ற அன்பு உள்ளங்களின் வரவேற்பு உண்மையில் ராமபிரான் அருளின் வெளிப்பாடு என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகின் குழந்தையான என்னை உற்சாகமூட்டும் தங்கள் பின்னூட்டங்கள் நான் பெற்ற பேறே!
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    இவண்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.