நாகேஸ்வரி அண்ணாமலை

எல்லாப் பொருள்களையும் வீணாக்குவதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.  அதிலும் உணவுப் பதார்த்தங்களை வீணாக்குவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.  அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் விளைவதில்லை.  அந்தந்த இடங்களில் விளையும் பொருள்களை வாங்குங்கள் என்று அவ்வப்போது விளம்பரங்கள் வந்தாலும் ஒரு இடத்தில் விளையும் பொருள்களை நாடு முழுவதும் அனுப்புவது அமெரிக்காவில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று.  இந்தியாவில் அப்படியில்லை.  தென் தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகள் கூட கர்நாடகாவில் உள்ள மைசூரில் கிடைப்பதில்லை.  காய்கறிகளையும் பழங்களையும் தூர இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் பண விரயமும் பொருள் விரயமும் நிறைய ஏற்படும்.  அதனால் இந்தியாவில் அப்படிச் செய்வதற்கு நமக்குக் கட்டுப்படியாகாது.  ஆனால் அமெரிக்காவில் அதைப் பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்? வருஷம் முழுவதும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் கிடைத்துக்கொண்டிருக்கும்.  சீசனுக்குத் தகுந்தபடி விலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.  அவ்வளவே.  இப்படிக் கொண்டு செல்வதில் நிறைய வீணாகின்றன என்கிறார்கள்.  இதில் ஆரம்பித்து அவற்றைச் சேமிப்பது, பின் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கித் தங்கள் குளிர்பெட்டியில் சேமிப்பது, பின் அவற்றைச் சமைப்பது என்று பல நிலைகளில் அவை வீணாவது தொடர்கிறது.  அது போதாது என்று சமைத்த உணவை வீணாக்குவதிலும் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.

டிசம்பர் மாதம் பிறந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள்.  ஏன் அதற்கு முன்பே நவம்பரிலேயே நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் வழக்கத்தை விட அதிகமாக உண்ணும் பழக்கம் ஆரம்பித்துவிடுகிறது.  டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள் நடக்கும்.  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் என்று எங்கும் பார்ட்டிகள்.  எல்லா நிறுவனங்களும் தங்களிடம் வேலைபார்ப்பவர்களுக்கு இப்படிக் கிறிஸ்துமஸையொட்டிபார்ட்டி கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது.  இதற்கு மேல் அந்தந்த டிப்பார்ட்மெண்ட மேனேஜர்கள் தங்களுக்குக் கீழ் வேலைபார்ப்பவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது.

அமெரிக்காவில் நிறைய வளம் இருக்கிறது.  உலகின் பல மூலைகளிலுமிருந்து மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்கள்.  அதனால் பல வகை உணவுகள் கிடைக்கின்றன.  அவற்றை அமெரிக்கர்கள் உண்டுமகிழ்வதில் தவறேதுமில்லை.  ஆனால் அம்மாதிரி பார்ட்டிகளில் வீணாக்கப்படும் உணவின் அளவைப் பார்க்கும்போதுதான் நெஞ்சம் பதறுகிறது.

டிசம்பர் மாதம் ஒவ்வொரு வெள்ளியன்றும் அவரவர்கள் வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு வெள்ளியில் மாலை ஆறு மணிக்கு இந்த வகைப் பார்ட்டிகளை நடத்துவார்கள்.  நாங்கள் வசிக்கும் எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் ஒவ்வொரு வருடமும் பார்ட்டி நடத்துவார்கள்.  கிறிஸ்துமஸை ஒட்டி பல வாடகைதாரர்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால் டிசம்பர் மாத முதல் வெள்ளியன்றே பார்ட்டி கொடுக்கும் வழக்கம் இங்கு இருக்கிறது.  பல வகை சாண்ட்விச்சுகள்,பாலாடைக்கட்டிகள்,(cheese),சாலட்கள், கார பிஸ்கட்டுகள், இனிப்பு பிஸ்கட்டுகள், கேக்குகள் என்று பல வகையான அயிட்டங்கள் இருக்கும்.  அசைவர்களுக்கென்று தனியாகச் சில அயிட்டங்கள் இருக்கும்.

பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தவுடனேயே என் கண்களில் படும் எனக்குப் பிடிக்காத விஷயம் உணவுகளைப் பரிமாறிக்கொள்ள வசதியாக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள், முள்கரண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தம்ளர்கள்.  ஒருவர் இவற்றில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  அதற்கு மேல் காகித நாப்கின்கள்.  ஒரு பிளேட்டை எடுத்து உபயோகித்துவிட்டு இன்னும் கொஞ்சம் உணவு வேண்டுமானால் இன்னொரு பிளேட்டை எடுத்துக்கொள்வார்கள்.  அதே பிளேட்டை மறுபடி எடுத்துச் சென்றால் உணவைப் பரிமாறிக்கொள்ளும்போது எப்படியாவது இவர்கள் பிளேட்டில் உள்ள எச்சில் உணவு – அதாவது அதில் கிருமிகள் இருக்கலாம் என்பதால் – பொதுவாக உள்ள உணவில்சேர்ந்துவிட வாய்ப்பு இருப்பதால் இந்த ஏற்பாடாம்!  அதன் பிறகு இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ள சிறிய பிளாஸ்டிக் தட்டுகள். எல்லோரும் வயிறார உண்டு முடித்த பிறகு குப்பைக் கூடை பிளாஸ்டிக்தட்டுகள் வகையறாக்களோடு  நிறைந்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் தட்டுகளும் தம்ளர்களும் குப்பைகளைப் போடும் புதைகுழிகளில் போய்ச் சேரும்.   இவை மக்காத குப்பைகள் என்பதால் ஆண்டுக் கணக்காக அங்கேயே இருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் உண்டு.

தட்டுகளில் பரிமாறிக்கொண்ட உணவுகளை எல்லாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைப்பதில்லை.  (இந்தியாவிலேயே பலர் அப்படி நினைப்பதில்லை.  அப்புறம் வளம் கொழிக்கும் அமெரிக்காவைப் பற்றி என்ன சொல்வது?)  முடிக்க விரும்பியதை மட்டும் முடித்துவிட்டு மீதியை அப்படியே கீழே போடுவார்கள்.

இம்மாதிரி பார்ட்டிகளில் சில அயிட்டங்களாவது மிஞ்சிவிடும்.  அவற்றைத் தங்கள் வீட்டிற்கு எடுத்துப் போக பல அமெரிக்கர்கள் விரும்புவதில்லை.  இந்தியாவில் என்றால் அங்கு வேலைபார்க்கும் ஏழைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள்.  ஏனெனில் அவர்களால் உணவுகளை எளிதில் வாங்க முடியாது.  அமெரிக்காவில் பார்ட்டிகளில் பரிமாறப்படும் உணவுகளை வாங்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.  தங்களுக்குப் பிடித்த அயிட்டம் என்று ஏதாவது இருந்தாலொழிய மற்றவற்றை எடுத்துச் செல்ல மாட்டார்கள்.  உணவு தயாரித்து இம்மாதிரி பார்ட்டிகளுக்குக் கொடுப்பதற்கென்று சில கம்பெனிகள் இருக்கின்றன.  அந்தக் கம்பெனி ஆட்கள் உணவுகளைக் கொண்டுவந்து மேஜைகளில் பரப்பிவிட்டுப் பின் கடைசியாக பரிமாறிய பாத்திரங்களை எடுத்துச் செல்வார்கள்.  என்ன மிஞ்சியிருந்தாலும் அவற்றை அப்படியே குப்பையில் கொட்டிவிடுவார்கள்.  விருந்திற்கு வந்தவர்களும் ஒரு முறை சாப்பிட்டதை மறு முறை வீட்டிற்கு எடுத்துப் போய்ச் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.  இவ்வளவு வீணாகிறதே, அதில் கொஞ்சமாவது வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா என்று ஒருவரும் நினைப்பதில்லை.  என்னால் முடிந்த அளவு நான் வீட்டிற்கு எடுத்து வருவதுண்டு.  அதை குளிர்பெட்டியில் வைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டால் என்ன குறைந்துவிடும்?

இத்தனை உணவுப் பொருள்கள் வீணாகின்றனவே, இதை என்னால் சகிக்க முடியவில்லையே, நான் பார்ட்டிக்கே வந்திருக்கக் கூடாதோ?  அப்படி வந்திருக்காவிட்டால் இதையெல்லாம் பார்த்திருக்கத் தேவையில்லையே என்று என் கணவரிடம் ஆதங்கப்பட்டேன்.  அமெரிக்காவில் இப்படி உணவுகள் வீணாக்கப்படுவதை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோதே இந்தியாவில் இம்மாதிரி பார்ட்டிகளில் மிஞ்சியதை சாப்பிடுவதற்காக எத்தனை ஏழைகள் காத்திருப்பார்கள் என்ற வேதனை தரும் நினைவும் கூடவே வந்தது.  இப்படி மிஞ்சிய உணவைச் சாப்பிடுவதற்கு ஆட்கள் இல்லாமல் இருப்பது உணவை வீணாக்குவதை விட மேல் அல்லவா என்ற நினைப்பும் எனக்கு ஏற்பட்டது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பதற்குச் சாத்தியமே இல்லையா?.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *