தாயில்லாமல் நானில்லை – கவிஞர் ஆலங்குடி சோமு
கவிஞர் ஆலங்குடி சோமு
தாயில்லாமல் நானில்லை
பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் எனும் தலைப்பில் வெள்ளி தோறும் வருகின்ற இந்தத் தொடரில் … பல்வேறு பாடலாசிரியர்களின் பாடல்கள் இடம் பெறவிருக்கின்றன. சென்ற வாரம் புலவர் புலமைப்பித்தன். இந்த வாரம் கவிஞர் ஆலங்குடி சோமு.
தாயின் காலடியில் உள்ளதடா சொர்க்கம் என்று நபிகள் நாயகம் கூறுகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது நன்னெறி! தாய் எந்த உயிருக்கும் ஆதாரமானவள்! தாயை வணங்குதல் தரணியில் சிறந்ததென சான்றோர் முதலாய் சரித்திரம் சொல்லும்! தாய்க்கு ஈடாக இவ்வுலகில் ஏதும் கிடையாது என்பதும் யாவரும் அறிந்ததே!
அன்பு, கருணை, பரிவு, பாசம் இவைகளின் மொத்தப்படைப்பு தாய்மை! ‘அவள் அன்னை மட்டுமல்ல! வாழ்வின் ஆதாரம்! கடவுள் ஒவ்வொரு உயிருடனும் இணைந்திருக்க இயலாத காரணத்தால் ‘தாயை’ படைத்தான் இறைவன் என்பார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாயன்பு மிக்கவராய் வாழ்ந்தார் என்பது மட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ‘தாய்’ என்கிற உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து தனது கோடான கோடி ரசிகர்களின் இதயங்களிலெல்லாம் தாய் மீது பாசம் மேலிட காரணமானார் என்பதுவும் மிகையில்லை!
எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அடிமைப் பெண், கே. சங்கர் இயக்கத்தில் வெற்றிப் படைப்பாக வரலாற்றுப் பின்னணியில் வரையப்பட்ட கதை, திரைக்கதையில் முதல் பாடல் தாயைப் பற்றி அமைய வேண்டுமென எண்ணி பல்வேறு பாடலாசிரியர்களை வரவழைத்து எழுதிப்பெற்றார். வரையப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கம்போலவே அதற்கான பணத்தை அள்ளித்தந்தார். ஆனாலும் தான் திருப்தியடைகிற அளவு பாடல் வரப்பெறாமல் மேலும் மேலும் கவிஞர்களை எழுத வைத்தார். 40 பாடல்கள் எழுதப்பெற்ற பின் 41வது பாடலாக கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய இப்பாடல் வரிகளில் ஒரு தெய்வ தரிசனம் கண்டார். அதையே படத்தில் இடம் பெறச் செய்தார்.
தாயில்லாமல் நான் இல்லை
தானேஎவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)
- ·
ஜீவநதியாய் வருவாள்
என்தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தாயில்லாமல்)
தூயநிலமாய் கிடப்பாள்
தன்தோளில் என்னைசுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலேமனம்கனிந்திடுவாள் (தாயில்லாமல்)
மேகவீதியில் நடப்பாள்
உயிர்மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள்
மலர்மணம் தருவாள்
மங்கலவாழ்வுக்கு துணைஇருப்பாள்
மலர்மணம்தருவாள் (தாயில்லாமல்)
ஆதிஅந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலைகொடுப்பாள்
அவள்தான் அன்னை மகாசக்தி(தாயில்லாமல்)
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நான்இல்லை
திரைக்கதையின்படி, தன்னைப் பெற்ற தாயை முதன் முறையாகப் பார்க்கச் செல்லும் காட்சி! அத் தாயின் காலில் அடிமை விலங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது! அதை அகற்றும் முயற்சியில் தனயன் ஈடுபட, தாயோ.. இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் கால்களில் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது.. அவைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடைசியாக உன் அன்னையின் விலங்கை அகற்ற வா மகனே.. என்று ஆணையிடுகிறார்.
அம்மாவின் காலடியில் ஆசிபெற்று மகன் தன் கடமையாற்றப் புறப்படுகிற உணர்ச்சிகரமான கட்டம்! உயிரூட்டும் பாடல் வரிகள் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஓங்கார நாதத்துடன் பாடிட டி.எம்.செளந்திரராஜன்!
திரையில் ஐந்து வடிவங்களாய் தோன்றும் எங்கள் எம்.ஜி.ஆர்.. அங்கே அன்னையின் முகம் விண்ணில் தோன்றி வாழ்த்துச் சொல்ல.. தாயைப் போற்றி.. அவள் சக்தியை எடுத்துரைக்க.. இந்த ஒற்றைப்பாடலுக்கு சக்தி உண்டு என்று எந்த சபையிலும் என்னால் கூற முடியும்!
எம்.ஜி.ஆர் பாடல்களில் இந்தப்பாடல்.. தாய்க்காக தனயன் முழக்கும் ராஜபாட்டை!
எம்.ஜி.ஆர் – தாய் பற்றி எடுத்துக்கூறிய எத்தனையோ சிகரங்களில் இப்பாடல் நிச்சயம் ஒரு இமயம்!
http://www.youtube.com/watch?v=2K096xYEtsY
மேற்கண்ட பாடல் பற்றிய தங்கள் உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கிறேன். இன்னும் இன்னும் இனிய பல தகவல்களோடு உங்கள் வாசலில் காத்திருப்பேன்.
அன்புடன்..
காவிரிமைந்தன்
ஆஹா! அருமை! தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பாடல்களை மீண்டும் வாசித்து மகிழும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமைக்கு நன்றி ஐயா!
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலேமனம்கனிந்திடுவாள்
இந்தப் பண்பினைத் தாயைத் தவிர பிறரிடம் காண்பது மிக அரிது.
தவறுதலாகச் செய்துவிட்டாலும் பாதிக்கப்பட்டவர் இறுதிவரை வன்மம் பாராட்டுவார்கள்.
ஆனால் தாயுள்ளம் மட்டுமே தெரிந்தே செய்யும் குற்றங்களையும் மறந்து அன்பு செலுத்தும்.
கவிஞர் மிகச் சரியாக அந்தப் பண்பினைச் சுட்டிக்காட்டி மக்கள் திலகத்தின் மனதை நெகிழச் செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
தவறினைப் பொறுப்பாள் …என்ற வரியும் அதனை சுட்டுகிறது. பல பாடல்களில் வருவது போல அம்மா என்றால் அன்பு என்பதை வலியுறுத்தும் வழக்கத்தையும் மீறி, அகந்தையை அழிப்பாள் என்று நெறிப்படுத்தும் செய்கைகளையும் கவனத்தில் கொண்டு வந்துள்ளார் கவிஞர்.
தாயைப் பற்றிய பாடல்களில் இந்தப் பாடல் தனித்து நிற்கிறது.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு.காவிரிமைந்தன்.
அன்புடன்
….. தேமொழி
எம்.ஜி.ஆரையும் , அவரின் தாய் பாசத்தையும் அனைவரும் அறிந்ததுதான்.அந்த எம்.ஜி.ஆரே தாயைப் போற்றி பாடுவதாக வரும் இந்தப்பாடல் , யார் வேண்டுமானாலும் தன் தாய்க்காக பாடிக்கொள்ளலாம். அத்தனை அருமையான பாடல்.
புகழ் பெற்ற கவிஞர்களின் வரிசையில் இன்று சோமு அவர்கள். தாங்களின் ஆலாபனை தொடரட்டும்.