ராமன் வரும் வ​ரை காத்திரு… (13)

ராமஸ்வாமி ஸம்பத்

ராமன் அனுமனிடம், “ஸீதைக்கு ராவணனின் முடிவு பற்றிய செய்தியைச் சொல்வாயாக” என்றான். அன்னையிடம் இம்மகிழ்ச்சியான சம்பவத்தைக் கூறியதும் அவள் அனுமனை நோக்கி பரிவோடு “உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?” என்றாள், “அன்னையே, எனக்கு அனுமதி கொடுங்கள். தங்களைக் கொடுமைப் படுத்திய இந்த அரக்கிகளை துவம்சம்  செய்கிறேன்” என்றான். அவ்வாறு செய்யவேண்டாம் என அறிவுரை செயது, ஸீதை சொல்வாள்: ”இவ்வுலகில் யார்தான் தவறு செய்யவில்லை? மேலும் இவர்கள் தங்கள் யஜமானனின் ஆணைப்படிதானே நடந்தார்கள். எய்தவன் செய்த தவறுக்காக அம்பை நோகலாமா?”

ராவணனின் இறுதிச் சடங்கு முடிந்ததும் விபீஷணனுக்கு லக்ஷ்மணன் பொன்முடி சூட்டினான். பின்னர் ராமன் விபீஷணனை ஸீதா பிராட்டியை அழைத்து வருமாறு பணித்தான்.

ஸீதை வந்து சீற்றம் பொங்கும் முகத்தைக் கொண்ட ராமனைப் பணிந்தாள். “ஸீதே! உன்னைச் சிறை மீட்டதோடு எனது க்ஷத்திரியக் கடமை முடிந்து விட்டது. ஏறக்குறைய ஓர் ஆண்டு இன்னொருவனால் சிறைப்படுத்தப்பட்ட உன்னோடு என்னால் இனி வாழமுடியாது. நீ எவரோடு வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்” என்று அனல் கக்கும் சொற்களை மொழிந்தான்.

“ஆரியபுத்திரரே! உயர்ந்த குலத்தோன்றலான தங்களிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வரலாமா? என் கற்புநெறி தாங்கள் அறியாததா? தங்கள் நோக்கம் புரிகிறது. இதற்குப்பின் எனக்கு என்ன இருக்கிறது?” என்றாள் ஸீதை. கண்ணீர் அருவிபோல் பொங்கி எழ, “லக்ஷ்மணா, நீ உடனே உலர்ந்த கட்டைகளைக் கொண்டு வந்து தீ மூட்டு” என்று தன் கொழுந்தனுக்கு ஆணையிட்டாள்.

லக்ஷ்மணனுக்கும் அங்கு உள்ள அனைவருக்கும்  ஒன்றுமே புரியவில்லை. ‘இது என்ன விபரீதம்?’ என்று நினைத்து அண்ணனை நோக்கினான். ராமன் மெளனமாக இருந்தான். தீ மூட்டப்பட்டது. ஸீதை அக்கினிக்குள் பிரவேசித்தாள்.

அடுத்த கணம் அக்கினி தேவன் தோன்றி அன்னை ஸீதையை பவ்யமாக அழைத்துவந்து ராமனிடம் ஒப்படைத்தான். “ராமா, நெருப்பை நெருப்பு என்ன செய்யமுடியும்? இது உனக்குத் தெரியாமல் போய்விட்ட்தே! என் அன்னை புனிதத்தையே மேலும் மெருகேற்றக் கூடியவள்” என்றான்.

மலர்ந்த வதனத்தோடு ராமன் ஸீதையை மெல்ல அணைத்தவாறு, “என் ஆருயிரே! உன் கற்புநெறியை உலகுக்குப் பறைசாற்றவே இந்த நாடகத்தை ஆடினேன். என்னை புரிந்துகொள்” என்றான்.

பிரமன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களெல்லாம் வானில் கூடி ராமனையும் ஸீதையையும் வாழ்த்தி வணங்கினர். தசரதனும் அங்கு தோன்றி ராமனை தன் மடியில் அமர்த்தி உச்சிமுகர்ந்து, ஸீதையைப் பார்த்து ”என் மகனுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்றான்.

”தந்தையே! அன்னை கைகேயியையும் தம்பி பரதனையும் தாங்கள் அவர்கள்மீது கொண்ட கோபத்தை நீக்கி ஏற்றுக் கொள்ளவேண்டும்“ என்று ராமன் கேட்க தசரதனும் “அப்படியே” என்றான்.

பிரமதேவன் ராமனை நோக்கி, ஐயனே! தாங்கள் திருமால் என்பதை தாங்களே அறியவில்லை. அதனால்தான் இந்த குழப்பம்” என்றார்.

அவரை வணங்கி ராமன் “நான் என்னை மனிதனாகவும் தசரதன் புத்திரனாகவும் மட்டுமே அறிவேன். மற்றவற்றை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றான்.

இந்திரன் ராமனுக்கு ஒரு வரம் அளிப்பதாகச் சொன்னான். “அப்படியானால் இந்த போரில் எனக்காக உயிர்த்தியாகம் செய்த வானரர்களுக்கு புத்துயிர் அளிக்கவேண்டும்” என்றான் ராமன். உடனே மாண்ட வானரர் அனைவரும் உயிர் பெற்றனர்.

ராமனுக்கு திடீரென்று பரதன் வைத்த கெடு நினைவுக்கு வந்த்து. ”எப்படி அக்கெடு தீர்வதற்குள் அயோத்தி சேர்வது?” என அனுமானத்தோடு கேட்ட ராமனிடம் விபீஷணன், “கவலை வேண்டாம். புஷ்பக விமானத்தின் மூலம் நாம் அனைவரும் நாளையே அயோத்தி சேர்வோம்” என்றான்.

அனைவரும் விமானத்தில் ஏறினர். போகும் வழியில் ராமன் ஸீதைக்கு நளனால் கட்டப்பட்ட சேது அணை, வானரர்களின் கிஷ்கிந்தை முதலியவற்றை சுட்டிக்காட்டினான்.

வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அவர் ஆசிகளைப் பெறுவதற்காக விமானம் அங்கு இறங்கியது. முனிவர் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்தார். ராமன் அனுமனை அழைத்து உடனே அயோத்தி சென்று பரதனிடம் தான் திரும்புவதை முன்னறிவிக்குமாறு பணித்தான்.

பதினான்கு ஆண்டுகள் மனவருத்தத்தோடு ராமன் வரும் வரை காத்திருந்த பரதன்,  ‘அண்ணன் வருவதற்கான அறிகுறிகளே காணப்படவில்லையே’ என நினைந்து, பிராணத் தியாகம் செய்ய முயல்கையில் அனுமன் அங்கு தோன்றி “பரதா! அவசரப்படாதே. நம் அண்ணல் இன்னும் சில நொடிகளில் இங்கு அன்னையோடும் இளவலோடும் வந்து சேருவார்” என்ற மகிழ்ச்சிகரமான தகவலைச் சொன்னான். அரை நாழிகை கடந்தபின் புஷ்பக விமானம் நந்திகிராமத்தில் இறங்கியது. அண்ணனைக் கண்ட பரதனின் ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பல ஆண்டுகளுக்குப்பின் தன் மகனின் முகத்தில் புன்முறுவலைக் கண்ட கைகேயி மனம் மகிழ்ந்தாள்.

பரதனைப் போலவே ராமன் வரும் வரை காத்திருந்த அசேதனப் பொருள்களான ராம பாதுகைகள் ”எம் ஐயன் காட்டிலும் மேட்டிலும் கற்கள்மீதும் முட்கள்மீதும் காப்பில்லா கால்களுடன் நடக்கையில் நாம் மட்டும் பதினான்கு ஆண்டுகள் பரதாழ்வாரின் பூஜாபீடத்தில் அமர்ந்திருக்கிறோமே! என்னே நம் தலைவிதி!” என்று வருந்தியவாறு இருந்தவை “ஆஹா, மீண்டும் அண்ணல் பாதங்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் நமக்கு விரைவில் கிடைக்கப் போகிறது”  என நினைந்து பொலிவு பெற்றன. இவ்வடிநிலை போல அயோத்தி அரியணையும் அரசாங்கக் கருவூலத்திலிருந்த ரகு வம்சத்தின் மணிமுடியும் “பதினான்கு ஆண்டுகள் ராமன் வரும் வரை காத்திருந்து தவமிருந்தோம். நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது” என மகிழ்ந்தன. சோகத்தின் உருவாக இருந்த அயோத்தி நகரமே இன்பக்கடலில் திளைத்தது.

நாடு திரும்பிய ராமனைப் பரதன் கண்ணீர் ததும்பும் கண்களோடு ஆலிங்கனம் செய்து கொண்டான். பின்னர் அவருடைய பாதுகைகளை பூஜா விதானத்திலிருந்து எடுத்து பக்தி பரவசத்தோடு அவருக்கு அணிவித்தான். அன்னைமார்களில் ராமன் முதலில் கைகேயியை வணங்கினான். “ராமா, என் மீது கொண்ட கோபம் தீர்ந்துவிட்டதா?” என்று கேட்ட சிற்றன்னையிடம் ராமன், “அன்னையே தாங்கள் எதுசெய்தாலும் என் நன்மையை மனத்தில் கொண்டுதான் செயல்படுவீர் எனபது எனக்குத் தெரியாததா?”  என்றான்.

ஒரு நல்ல நாள் பார்த்து ராமனுக்கு முடிசூட்ட குலகுரு வசிஷ்டர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ஸீதாராம பட்டாபிஷேக வைபவத்தை கம்பர் வர்ணனையில் காண்போமே!.

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற

விரை செறி கமலத்தாள்சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான்  மெளலி.

[அரியணையை அனுமன் தாங்கவும், அங்கதன் உடைவாளைக் கையில் கொண்டு நிற்கவும், பரதன் வெண்மையான கொற்றைக் குடை பிடிக்கவும், மற்ற இரண்டு தம்பியரான லக்ஷ்மணனும் சத்திருக்கனனும் வெண்சாமரை வீசவும், மணம் மிக்க செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளான திருமகள் பொருந்தப் பெற்றுள்ள திருவெண்ணெய்நல்லூர் தலைவனான சடையப்ப வள்ளலின் முன்னோராக உள்ளவர் எடுத்துக் கொடுக்க, ராமனுக்கு வசிஷ்டன் முடி சூட்டினான்]

ஸ்ரீ  ஸீதாராமன் திருவடிகளே சரணம்!

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (13)

 1. அருமையான தொகுப்புக்கு நன்றி.  சமீபத்தில் அயோத்தி சென்றபோது நந்திகிராமமும் சென்று பரதன் தவம் இருந்த குகையும், பாதுகைகளை வைத்திருந்த சிம்மாசனம் (என்று சொல்கின்றனர்) இருக்குமிடமும், அங்கே இரு பாதுகைகள் இப்போதும் வைக்கப்பட்டிருக்கின்றன.  பரதன், ஶ்ரீராமன் ஆலிங்கனம் செய்து கொண்ட இடம், அநுமன் வந்து இறங்கிய இடம்னு எல்லாமும் பார்த்தோம். உங்கள் கட்டுரை அவற்றை எல்லாம் நினைவூட்டி மீண்டும் கண்ணெதிரே தோன்றச் செய்தது. 

 2. பரதன் அங்கே காத்திருக்க, இங்கே ராமன் சாவகாசமாக பரத்வாஜர் ஆசிரமத்தில் விருந்துண்டதால் தான் “சாப்பாட்டு ராமன்” என்று பெயர் வந்ததாக ஒரு உபந்நியாசத்தில் சொல்லிக் கேட்டிருக்கேன்.  விளையாட்டுக்குச் சொன்னாரோ என்னவோ! 🙂

 3. சீதையின் அக்னிப்ரவேசம் குறித்த என்னோட கருத்தை ஒரு பதிவாகப் போட்டேன். அதன் சுட்டி இங்கே. http://sivamgss.blogspot.in/2008/07/blog-post_16.html  நேரம் இருந்தால் பார்த்து உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும்.  நன்றி.

 4. மிக அற்புதமான தொடர் நலமாக நிறைவுற்றது!..  ஸ்ரீராமாயணம் முழுவதும் பாராயணம் செய்த உணர்வு மேலோங்கியது.. இந்த அரிய வாய்ப்பைத் தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி!.. 

 5. அன்புள்ள கீதாம்மா!
  தங்கள் மூன்று பின்னூட்டங்களையும் இன்றுதான் பார்த்தேன். மிக்க நன்றி. அயோத்தி, நந்திகிராமம், பரதன் தவமிருந்த குஹை , ராம பாதுகைகள் அமர்ந்திருந்த சிம்மாசனம் இவற்றைப் பார்த்திருந்த நீங்கள் பாக்யசாலி. எனக்கு அந்தப் பேறு இப்பிறவியில் கிட்டுமா எனும் ஏக்கம் மேலிடுகிறது. ஸ்ரீ ராமன் அருளால் அவ்வதிர்ஷ்டம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
  வேடிக்கையாகச் சொன்னாலும் ராமனை ‘சாப்பாட்டு ராமன்’ என்று சொல்வது அநியாயம். ஸ்ரீ ராம நவமியன்று அவனுக்கு வெறும் பானகமும் நீர்மோரும்தான் படைக்கிறோம். ஆனால் கிருஷ்ண ஜயந்தியன்று அந்த குரும்புக்காரக் குழந்தைக்கு எத்தனை விதவிதமான பக்ஷணங்கள், பழவகைகள், அவல், நவனீதம் ஆகியவற்றை நிவேதிப்பதோடு வடை பாயசத்தோடு விருந்தையும் சமர்ப்பிக்கிறோம். ஆனால் அவனை ‘சாப்பாட்டுக் கிருஷ்ணன்‘ என்று யாரும் சொல்வதில்லை!
  பரத்வாஜர் ஆசிரமத்திலிருந்து ராமன் அனுமனை நந்திகிராமத்திற்கு முன்னதாக அனுப்பிய செயல் ’பதினான்குஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்த பரதனுக்கு ஒருவேளை அரியணைமீது பற்று ஏற்பட்டிருக்குமோ?’ எனபதனை தெரிந்து கொள்ளவே என்று அமரர் ரா. கணபதி ஒரு கட்டுரையில் கூறியுள்ளார். படியிற்குணத்து பரத நம்பியை கோசலை, அயோத்தி மக்கள், பரத்வாஜர், குஹன், லக்ஷ்மணன் சந்தேகித்ததைக்கூட ஒரளவுக்கு நாம் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ராமனே அனுமானித்தது மனத்திற்கு வேதனையளிக்கிறது.
  தங்கள் ஸீதையின் அக்னிப்ரவேசம் குறிதத கருத்துப் பதிவை இன்னும் பார்க்கவில்லை. நாளை பார்த்து அடியேனின் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
  வணக்கத்துடன்
  ஸம்பத்.

 6. அன்புள்ள பார்வதி இராமச்சந்திரன் அவர்களே!
  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எளியேனின் எழுத்தை வெகுவாக உயர்த்திவிட்டீர்கள். எல்லாப் புகழும் ஸ்ரீ ஸீதாராமனுக்கே, அனுமனுக்கே, வால்மீகிக்கே, கம்பனுக்கே, ஸத்குருநாதருக்கே!
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 7. நான் தொடர்ந்து படிக்கவில்லை ஆயினும் பட்டாபிஷேகக் கட்டத்தைப் படித்தேன் மிகவும் சிறப்பாக படைத்துள்ளீர்கள். அதற்கு முத்லாவதாக நன்றியும் வாழ்த்துகளும்.
  அக்னிப் பிரவேசம் என்ற தலைப்பில் முதலில் ஜெயகாந்தனும் பின்னர் நானும் ஆனந்தவிகடனில் கதைகள் எழுதியுள்ளோம். இரண்டுமே நல்லவரவேற்பைப் பெற்றன. சீதாபிராட்டியின் அக்னிப் பிரவேசத்தை எதிர்த்து ராமனே அகின்ப்பிரவேசம் செய்தது போல என் கதையின் ஒரு பகுதி கூறும். எனது கதையின் நாயகி ராமன் அக்னியில் பிரவேசித்தது போல ஒரு காட்சியைப் பார்த்து அகமகிழ்வாள். இக்கதை வந்தவுடன் பல கடிதங்கள் எனக்கு விகடன் மூலமாக வந்தன். அதில் ஒரு பெண்மனி சேலத்திலிருந்து எழுதியது இன்னும் நினைவை விட்டகல மறுக்கிறது. “ஒரு ஆண் இவ்வளவு துல்லியமாக பெண்ணின் மனதைத் தெரிந்து கொள்ள முடிவதைக் கண்டு மகிழ்கிறேன்” அப்பெண்மணீ ஒரு வங்கி அதிகாரி. விகடன் ஆசிரியர் என்னுடன் பேசி வாழ்த்துகள் தெரிவித்தார்.
  நான் இப்போது கூறுவது உங்களுக்கே வியப்பை அளிக்கலாம். எனது சிந்தனையின் படி ஆண்களின் சமுதாய்த்தில் பெண்கள் எப்போதுமே அவதிப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறாகள். இருந்தும் வந்திருக்கிறார்கள். 
  ராமனுக்காக சீதா தேவியும், அரிச்சந்திரனுக்காக சந்திர்மதியும், பீஷ்மறுக்காக அம்பாவும் துன்பப் படவில்லையா? ஏன் தர்மரின் காரணத்திற்காக திரெள்பதியும் தான்!
  எனது அக்னிப்பிரவேசம் 1982ல் வந்தது என நினைக்கிறேன். அது மிகவும் நீண்டகதை. அது ப்வருவதைக் குறித்து முதல் வாரமே ஆசிரியர் குறிப்பு வெளியிட்டிருந்தார். விகடனில் சுமார் 8 பக்கங்களில்! 
  இருப்பினும் இன்று உங்கள் இடுகை புதிதாகவே எனக்குப் பட்டது!
  பிடித்துமிருந்தது.
  ஏ. ஏ. மணவாளனின் இராமனும் இராமாயணங்க்ளும் என்ற் சரஸ்வதி சம்மானம் பெற்ற் நூல் நீங்கள் படிக்கவேண்டும். 
  வாழ்த்துகள்
  நரசய்யா

 8. அன்புள்ள நரசய்யா காரு:
  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
  நான் தங்களது ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையை நான் விஜயவாடாவில் பணி புரிந்தபோது படித்து மகிழ்ந்த நினைவிருக்கிறது. நீங்கள் கூறுவதுபோல் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்களின் நிலை மாறவே இல்லை. ’கிருத யுகத்தில் ரேணுகா, திரேதா யுகத்தில் ஸீதா, துவாபர யுகத்தில் பாஞ்சாலி போன்று கலி யுகத்தில் வீட்டுக்கு வீடு பெண்கள் அவதிப் படுகிறார்கள்’ என்பது சான்றோர் வாக்கு. ஜமதக்னி ஆகட்டும் ராமன் ஆகட்டும் தர்மன் ஆகட்டும் எல்லார்க்கும் feminine purityயே முக்கியம்.
  ஏ.ஏ. மணவாளனின் ‘ராமனும் ராமாயணங்களும்’ படிக்க ஆவல். தங்களிடம் அந்த நூல் இருந்தால் எனக்கு கொடுக்கவும்.
  வணக்கத்துடன்.
  ஸம்பத்
  பி.கு.: இன்று ‘ராமன் வரும் வரை காத்திரு… ‘ தொடரின் முடிவுரை வெளியாகியிருக்கிறது. அதன்மீது தங்கள் கருத்தினைப் பதிவு செய்யவும்.
  ஸ்.

 9. அன்புள்ள கீதாம்மா!
  தங்களது அக்னிப்ரவேசம் பதிவினை நீங்கள் கொடுத்த சுட்டியில் எவ்வளவு சொடுக்கினாலும் என்னால் திறக்க முடியவில்லை. பவள சங்கரி அவர்கள் சொல்லிக்கொடுத்தாலும் அது என் மூளைக்கு எட்டவில்லை. ஏனெனில் நான் ஒரு கணினி நிரக்ஷரகுக்ஷி. அப்பகிர்வினை மின் அஞ்சல் இணைப்பாக அனுப்பி வைத்தால் எனக்கு செளகரியமாக இருக்கும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
  வணக்கத்துடன்
  ஸம்பத்
  பி.கு.: என் மின்னஞ்சல்: ramaswami.sampath@gmail.com
  ஸ.

 10. அதனால் பரவாயில்லை ஐயா.  நான் உங்களுக்குத் தனியாக அனுப்பி வைக்கிறேன்.  சிரமம் கொடுத்தமைக்கு மன்னிக்கவும். 

Leave a Reply

Your email address will not be published.