ராமஸ்வாமி ஸம்பத்

 

epi5

 

 

 

 

 

 

மாசிடோனிய மன்னன் புருஷோத்தமனை ஒரு கணம் நோக்கினான். ’விலங்குகளால் பிணைக்கப்பட்டபோதும் முகத்தின் பொலிவு சிறிதளவேனும் குறையவில்லையே! நீண்ட கைகள், பலம் பொருந்திய புஜங்கள், நிமிர்ந்த மேனி, வீறுகொண்ட பார்வை…அப்பப்பா… எல்லா விதத்திலும் இவன் உயர்ந்தவனே! ஏனைய நாட்டு அரசர்கள் எல்லாம் குனிந்த தலையோடு மண்டியிட்டு என் கருணைக்காக ஏங்கி இருப்பரே! போரஸ் உண்மையிலேயே ஒரு வித்யாசமான வீரன்தான்’ எனக் கருதினான் அலெக்சாண்டர்.

தன் வியப்பை மிக்க சிரமத்துடன் மறைத்துக்கொண்டு அவன் கேட்டான்: ”போரஸ், நீ போர்க்கைதியானாலும் வணங்காமுடியாக இருக்கிறாய். உனக்கு ஏதேனும் கூற விருப்பமா?”

“சிகந்தர் அவர்களே! ஒரு போர்க்கைதிக்கு என்ன சொல்ல இருக்கிறது?” என்றான் புருஷோத்தமன்.

இச்சமயத்தில் யவன மன்னனின் படைத்தலைவன் குறுக்கிட்டான்: “மன்னர் மன்னரே!, உங்களிடம் தோற்றுப் போன இவனுக்கு என்ன ஆணவம் பாருங்கள். தங்களை பேர்சொல்லி விளிப்பதோடல்லாமல் மாவீரன் என்றும் சொல்லவும் மறுக்கிறான். இவனை சும்மா விடக்கூடாது.”

”ஆம்! இவனைத் தண்டிக்கத்தான் வேண்டும். முதலில் அந்த விலங்குச் சங்கிலிகளை நீக்கு.”

epi66மெய்க்காப்பாளனுக்கு ஏதும் விளங்கவில்லை. இருந்தாலும் வேண்டா வெறுப்பாக புருஷோத்தமனின் தளைகளை கழட்டினான்.

“போரஸ், இப்போது சொல். என்னை ஏன் மாவீரன் என அழைக்க மறுக்கிறாய்?”

“சிகந்தரே! ரொக்ஸானாவின் விருத்தாந்தத்தைக் கேட்டபின் தந்திரத்தால்தான் என்னை வென்றிருக்கிறீர் என்பது தெளிவாகிவிட்டது. இந்நிலையில் நான் எப்படி உங்களை மாவீரன் என்று கூறமுடியும்?”

”போரஸ், நீ சொல்வது சரியல்ல. போர் என்பது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் புரியும் போட்டியைப் போன்றதல்ல. போர் தொடுக்கும் ஒரு அரசன் எவ்வாறாகிலும் வெல்லுவதற்குத்தான் முயல்வான். அதைத்தானே நானும் செய்தேன். உங்கள் பரத கண்ட்த்தில் யுத்த தந்திரஙகள் என்பவையே இல்லையோ?”

“உண்டு யவன மன்னரே! அதர்மம் தலை தூக்கி தர்மம் நிலைகுலையும்போது அதர்மத்திற்கு எதிராக யுத்த தந்திரங்களைப் பயன்படுத்தலாம். மற்றபடி, ’வில்லுக்கு வில், வாளுக்கு வாள், தோளுக்குத் தோள்’ என்பதுதான் நியதி.”

புருஷோத்தமனின் பதில் அலெக்சாண்டருக்குப் பிடித்தது.

“போரஸ், உன்னை நான் எவ்வாறு நடத்த வேண்டும் என நினைக்கிறாய்?”

“சிகந்தரே, என்னை ஒரு நாட்டின் மன்னனாக நடத்துங்கள்.”

அலெக்சாண்டரின் வியப்பு பன்மடங்கு கூடியது. ”இதுவரை என்னிடம் தோல்வியைத் தழுவிய எந்த அரசனும் இவ்வாறு பேசியதில்லை. அவ்வாறு எவனாவது கூறியிருந்தால் அவனது தலை கொய்யப்பட்டிருக்கும். உனக்கும் அதே கதி நேர்ந்திருக்கும். ஏனெனில், தோற்றுப் போனவர்கள் எல்லாம் என் அடிமைகள். ஆனால் உனக்கு அப்படிப்பட்ட தண்டனையை விதிக்க என் மனம் ஒப்பவில்லை. ரொக்ஸானாவால் எனக்கு மிக நெருங்கியவன் ஆகிவிட்டாய். நீ பலவகையிலும் வித்தியாசமானவனாகத் திகழ்கிறாய். இப்படிப்பட்ட நிலையில், அதாவது அடிமைப்படுத்தப் பட்டாலும், எப்படி உன்னால் பயமில்லாமல் இருக்க முடிகிறது? உன் வலிமைதான் என்ன?” என்றான் அவன்.

“சிகந்தரே! இருப்பது ஒரு உயிர்தானே! என்றைக்காவது ஒரு நாள் அது நீங்கத்தான் போகிறது. பயந்து பயந்து உயிர் வாழ்பவன் ஒரு கோழை. நான் அப்படிப் பட்டவன் அல்ல. போரில் வெற்றியோ தோல்வியோ சகஜம். எங்கள் அரசகுல ஆசாரப்படி, வென்றவர் தோற்றவர் நாட்டை ஆள்வர். தோற்றவர் போரில் மாண்டு போனால் வீர சுவர்க்கம் எய்துவர். ஆக, இதில் அச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

“என் ஆசான் அரிஸ்டாடில் சொன்னதுபோல் பரத கண்டத்தவர்கள் ஆன்மீக பலம் பொருந்தியவர்கள்தான். இதைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்வாயா?”

“சிகந்தரே! பரத கண்ட அரசர்களுக்கு அரண்யத்தில் வாசம் செய்துகொண்டு தவமியற்றும் முனிவர்களும் யோகிகளும் ஆசான்களாகத் திகழ்பவர்கள். அரியணை ஏறும் முன் அரசகுமாரர்கள் அவர்களிடம் பாடம் கற்பார்கள். அந்தத் தபஸ்விகள் அடிப்படைக் கல்விiயை இளவரசர்களுக்குப் புகட்டுவதோடு ஆன்மீக போதனையும் ஊட்டுவார்கள். இதனால் அவர்களுக்கு மரண பயம் என்பதே போய்விடும். இதுதான் எங்கள் வலிமை.”

“அப்படியானால், எனக்கும் அப்படிப்பட்ட ஆன்மீக பலம் பெறவேண்டும் எனும் ஆவல் இப்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு நான் என்ன செய்யவேண்டும் சொல் போரஸ்.”

”இங்கிருந்து ஒரு காத தூரத்தில் ஒரு அடர்ந்த காடு உள்ளது. அங்கு ஆசுதோஷர் எனும் ஒரு முனிவர் தன் ஆசிரமத்தில் தவம் இயற்றிய வண்ணம் இருப்பார். அவரிடம் நீங்கள் சரணடையுங்கள். கட்டாயம் ஆன்மீக பலம் பெறுவீர்கள்” என்றான் புருஷோத்தமன்.

“ரொக்ஸானா, போரஸ் சொல்லியவாறு நான் இப்போதே அந்த அடவிக்குச் செல்லப் போகிறேன். உன் உடன்பிறவா சகோதரன் இப்போது நம் விருந்தினன். அவனை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நான் திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகலாம்” என்றான் அலெக்சாண்டர்.

அந்த அடாத மழையிலும் புரவியேறி தனியே புறப்பட்ட அவனை நோக்கிய புருஷோத்தமன் “மாசிடோனிய மன்னரே! தாங்கள் தனியே செல்ல வேண்டாம். அந்தக் காட்டுப்பாதை கரடுமுரடானது. அத்தோடு மழையும் அதிகமாக உள்ளதால் நீங்கள் வழி தப்பிப்போக வாய்ப்புகள் அதிகம். ஆகவே, நாளை வரை பொறுத்திருந்தால் என் மெய்க்காப்பாளன் உங்களுக்கு வழி காட்டுவான். நீங்கள் ஆசுதோஷர் ஆசிரமத்தில் முனிவரிடம் பேசி முடியும் வரை இவன் வெளியே காத்திருந்து பின்னர் தங்களை பத்திரமாக அழைத்து வருவான்” என்றான்.

அந்த யோசனையை ஏற்று, மறுநாள் காலை புருஷோத்தமனின் மெய்க்காப்பாளனோடு அலெக்சாண்டர் புறப்பட்டான்..

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-5)

 1. கதைகளைப் படிப்பதற்கும், சரித்திரத் தொடர்களைப் படிப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சாதாரணக் கதைகளைப் படிக்கும்போது கவனம் சிதறும், சரித்திரக் கதைகளில் கவனம் சிதறாது. அது எழுத்தாளர்களின் திறமையைப் பொருத்தது. வாசகர்களைத் தொடர்ந்து படிக்க வைக்கும் அந்தத் திறமையை தங்களது அலெக்ஸாண்டர் தொடரில் உணருகிறேன்.

 2. அலெக்சான்டரைப் பற்றி இப்படி ஒரு கதை கேட்டதில்லை. முற்றிலும் புதியதொரு விஷயமாக உள்ளது.  அடுத்ததுக்குக் காத்திருக்கேன். 

 3. புருஷோத்தமனுக்கும் அலெக்ஸாண்டருக்கும் இடையிலான உரையாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. அடுத்த பகுதியை எதிர் நோக்கி ஆவலுடன் நானும்…

 4. ஆயுத பலத்தால் அகிலத்தை வெல்ல நினைத்தவன் ஆன்ம பலம் தேடி ஆரண்யம் செல்லும் காட்சி வியப்பாக உள்ளது.

 5. “சிகந்தரே, என்னை ஒரு நாட்டின் மன்னனாக நடத்துங்கள்.”
  இக்கதையின் சிகரமே இது தானே! இதற்குத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதி சுவாரசியமாகப் போகிறது. படிப்பதற்கும் எளிதாக உள்ளது. 
  இதனால் இவ்வருட வல்லமையாளராக நான் முன்மொழிகிறேன்
  திவாகர் தொடர்வார்! 
  நரசய்யா

 6. /அதர்மம் தலை தூக்கி தர்மம் நிலைகுலையும்போது அதர்மத்திற்கு எதிராக யுத்த தந்திரங்களைப் பயன்படுத்தலாம்/
  நன்று. சுவையும் விறுவிறுப்பும் மிகுந்த பகுதி. தொடருங்கள்.

 7. dear all:
  vanakkam. mikka nandri.
  since i am now in guntur, i am unable to reply in tamil. as soon as i reach chennai i shall respond.
  warm regards
  sampath

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *