ராமன் வரும் வரை காத்திரு… (10)
ராமஸ்வாமி ஸம்பத்
அனுமனுக்குப் பசி எடுத்தது. உடனே அருகே இருந்த ஈச்சமரத்தினை தன் பலத்தால் தழைத்தபோது அம்மரம் மளக்கென்று சாய்ந்தது. அச்சத்தத்தினைக் கேட்டு இரு அரக்கக் காவலாளர்கள் அங்கு வந்து அனுமனைக் கண்டு அவன்மீது பாய்ந்தனர். தன் கரத்தால் ஒரு குத்துவிட ஒருவன் மாய்ந்தான். மற்றவன் ஓடிச்சென்று ஒரு நூறு அரக்கர்களை அழைத்து வந்தான். அதற்குள் அனுமன் அந்த மரத்தைப் பெயர்த்து அவர்கள்மீது வீச ஒரிருவரைத் தவிர மற்ற எல்லோரும் மாண்டனர்.
ஒரு வானரத்தின் இந்த சாகசம் ராவணனின் செவிக்கு எட்டியது. கோபம் அனல் பறக்க தன் அமைச்சனின் மகனான ஜம்புமாலி எனும் வீரனை படையுடன் அனுப்பி ”அக்குரங்கினைத் தீர்த்துக்கட்டிவிட்டு வா” என்று பணித்தான். அனுமன் சில நொடிகளில் அப்படையை முறியடித்தான். ஜம்புமாலியின் மரணம் ராவணன் மனதில் முதல் முதலாக அச்சத்தை ஏற்படுத்தியது. உடனே தன் இளையமகன் அக்ஷகுமாரனை ஏவ அவனும் உற்சாகமாகப் போரிட்டாலும் முடிவில் அனுமனால் கொல்லப்பட்டான். துயரம் மேலோங்க ராவணன் தன் மூத்த மகன் இந்திரஜித் என்கிற மேகநாதனை அழைத்து, “நீ எப்படியாவது அந்த வானரனைக் கொன்றோ உயிருடன் சிறை பிடித்தோ வெற்றியோடு வரவேண்டும். இந்திரனையே தோற்கடித்த உனக்கு இது எளிதான பணியே” என்றான்.
இந்திரஜித் உக்கிரமாகப் போர் புரிந்து, இறுதியில் பிரம்மாஸ்திரத்தை ஏவ அனுமன் அதற்குக் கட்டுப்பட்டு கீழே வீழ்ந்தான். (பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு முஹூர்த்த காலம் அந்த அஸ்திரத்திற்குக் கட்டுப்படுவதாக அனுமன் முன்பு அவரிடம் வாக்களித்திருந்தான்). கீழே கிடந்த அனுமனை அரக்கர்கள் கயிற்றினால் கட்டி நகரெங்கும் தரதரவென்று இழுத்துச் சென்றனர். இதற்குள் முஹூர்த்த காலம் கடந்து விட்டது. இருந்தாலும் ராவணனைக் காணவேண்டி அவன் கட்டுபட்ட நிலையிலேயே இருந்தான்.
தன் முன் நிறுத்தப்பட்ட அனுமனிடம் சீற்றம்கொண்ட ராவணன் “ஏ குரங்கே! நீ யார் அனுப்பி இங்கு வந்தாய்? நீ இந்திரனை அல்லது குபேரனைச் சேர்ந்தவனா?” என வினவினான்.
செல்வச் செழிப்போடு கூடிய ராவண தர்பாரை கண்டதோடு ஸாம கானம் செய்து சிவபிரானை மகிழ்வித்த முகப்பொலிவொடு விளங்கும் இலங்கேசனை நோக்கி ஆச்சரியத்தோடு ‘இவ்வளவு உயர்நிலையில் இருந்தும் இவன் ஏன் பிறன் மனை விழையும் கீழ்த்தரமான செயலை புரிந்துள்ளான்?’ என நினைத்தான் அனுமன். பின்னர் தன்னை ராம தூதனாக அறிமுகம் செய்து கொண்டு, “இலங்கை வேந்தே! உனக்கு நற்புத்தி புகட்டவே இங்கு வந்திருக்கிறேன். உன்னைத் தன் வாலில் கட்டியவாறு ஏழு சமுத்திரங்களில் நீராடிய வாலியை எளிதாகக் கொன்றவர் என் தெய்வம் ராமன். உன்னைப் பாடாக படுத்திய கார்த்தவீரியார்ஜுனனைக் கொன்ற பரசுராமனின் கர்வத்தை அடக்கியவர் என் ஈசன். அவர் மனைவியான ஸீதையை வஞ்சகமாகக் கடத்தி வந்திருக்கிறாய். மஹாவீரனான ராமனிடம் அவர் மனைவியை ஒப்படைத்து அடைக்கலம் கோருவாயாக. அந்த சரணாகத வத்ஸலன் உன்னை மன்னிக்கத் தயங்கமாட்டார். இல்லாவிடில் நீயும் உன் அரக்கர் குலம் அனைத்தும் அழிவது உறுதி” என்றான். ராவணனின் இருபது கண்களிலும் தீப்பொறி பறந்தது. “யாரங்கே! இந்த மதம்கொண்ட குரங்கை வெட்டிப்போடுங்கள்” என்று கர்ஜித்தான்.
அப்போது அவன் இளவலான விபீஷணன், “அண்ணா, இவன் தன்னைத் தூதுவன் எனக் கூறுவதால் இவனைக் கொல்வது ராஜதர்மம் ஆகாது” என்றான். “ஓஹோ, அப்படியானால் இக்குரங்கின் வாலில் துணியைச் சுற்றி அதனை எரித்து விடுங்கள். அதுதான் இவனுக்குச் சரியான தண்டனை. ஒரு வானரனுக்கு வால்தானே பெருமை” என்றான் ராவணன்.
அரக்கர்கோனின் ஆணையைக் கேட்ட அசோகவனத்து அரக்கிகள் ஸீதையிடம் இதைச்சொல்லி, “எட்ட இருந்தாலும் நாங்கள் அந்த குரங்கு உன்னிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டோம். அத்துமீறி இங்கு நுழைந்த அந்த குரங்கின் வாலைக் கொளுத்தியது அதற்கு ஏற்ற தண்டனை தான்” என்றனர்.
இதைக்கேட்ட ஜானகி உள்ளம் பதைபதைத்து, ‘ஓ அக்கினி பகவானே! நான் கற்புடையவள் என்பது உண்மையாயின் என் மனாளன் என்னைத் தவிர எந்த மங்கையையும் ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பமாட்டான் என்பது உண்மையாயின் என் மகன் அனுமனைச் சுடாமல் குளிர்ச்சி தருவாய்’ என்று மனத்தில் சூளுரைத்தாள்.
அனுமனுக்கு ஒரே ஆச்சரியம். ‘இது என்ன வினோதம்? நெருப்பு என்னைச் சுடவில்லையே! ஓஹோ! இது அன்னையின் ஆசி போலும்’ என நினைத்தான். அடுத்த கணம் தன் தளைகளைத் தகர்த்தெரிந்து இலங்கை ராஜதானியில் உள்ள பல கட்டிடங்களையும் சோலைகளையும் அக்கினிக்கு இரையாக்கினான்.
’ஐயோ தவறு செய்துவிட்டோமே! அசோகவனமும் கொழுந்துவிட்டு எரிகிறதுபோல் இருக்கிறதே!’ என்று ஒரு கணம் வருத்தத்தில் ஆழ்ந்த அவன் செவிகளில் ‘என்னே அனுமனின் சாதுர்யம்! அசோகவனத்தின்மீது தீ பரவாமல் மற்றைய இடங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறானே!’ என வானில் உலவும் சாரணர்களின் உரையாடல் தேன்மாரியென விழுந்தது.
தன் வாலில் எரியும் நெருப்பை கடல் நீரில் தோய்த்து அணைத்தபின், அசோகவனத்திற்குச் சென்று அன்னையை வணங்கி, “தாயே! அண்ணலும் இளவலும் எம்மரசன் சுக்ரீவனும் வெகு விரைவில் தங்களை மீட்க இங்கு வருவார்கள். தயவு செய்து அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடாதீர்கள். ராமன் வரும் வரை காத்திருங்கள்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டான்.
பின்னர் இலங்கைக் கடற்கரையில் உள்ள அரிஷ்டம் எனும் குன்றின்மீதேறி அங்கிருந்து மேற்கு திசை நோக்கி விசும்பில் தாவினான். இனி, ராமன் உள்ளிட்ட அனைவர்க்கும் அனுமனுக்காகக் காத்திருக்கும் நிலைதான். ’திரும்பிவரும்போது உன்மீது இளைப்பாறுவேன்’ என்று சொல்லியதால் காத்திருந்த மைனாகக் குன்றினை செல்லமாகத் தடவிகொடுத்து, அனுமனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கீழ்க்கடற்கரையில் காத்திருக்கும் அங்கதன், ஜாம்பவான் முதலோரை மகிழ்விக்கும் வண்ணம் “கண்டேன் ஸீதையை” என உரக்க சப்தமிட்டவாறு தரையில் இறங்கினான்.
வானரர் அனைவரும் அனுமனை ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அனைத்தையும் விவரமாகக் கூறி, “இனி தாமதம் செய்யக்கூடாது. அண்ணல் இந்நற்செய்திக்காகக் காத்திருக்கிறார். நாம் உடனே கிஷ்கிந்தை சொல்லவேண்டும்” என்று அனுமன் சொல்லவும், அவர்கள் புறப்பட்டனர்.
விரைவில் கிஷ்கிந்தை அடைந்த பின், கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட ராமனிடம் அனுமன் தனது இலங்கை அனுபவங்களை ஒன்று விடாமல் விளக்கி, ”கற்புக்கரசியான ஸீதையைக் காணும் பாக்கியத்தை தங்கள் அருளால் பெற்றேன்” என்றான். கம்பன் நடையில் அதனைக் காண்போம்:
உன் குலம் உள்ளதாக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னதாக்கி தன்னை இத்தனிமை செய்தாள்
வன் குலம் கூற்றுக்கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து
என் குலம் எனக்குத்தந்தாள் என்இனிச்செய்வது எம்போய்?
[என் அன்னையான ஸீதை உனது குலம் உன் புகழால் சிறப்பு பெறுமாறு செய்தாள். உயர்ந்த புகழை உடையவள் தான் ஒருத்தியே என்னும் சிறப்பைப் பெற்ற தான்பிறந்த குலத்தை தன்னால் சிறப்பு பெற்றதாகச் செய்தாள். தன்னைப் பிரித்துத் தனித்து வருந்தும்படி செய்த ராவணனது கொடிய குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர்கள் குலம் நல்வாழ்வு பெறச்செய்தாள். எனது வானர குலத்தை உயர்த்தியதோடு, எவரும் புகழும் சிறப்பை எனக்குக் கொடுத்தாள். இவற்றைவிட இனி அவள் செய்யத்தக்கது வேறு என்ன இருக்கிறது?]
மேலும் அனுமன் கூறுவான்: “அண்ணலே! தாங்கள் அவள் கண்ணிலும் உள்ளீர், கருத்திலும் உள்ளீர், காயத்தின் எப்பகுதியிலும் உள்ளீர். கற்பிற்கே அணிகலனாகத் திகழும் அன்னையின் புனித மேனி புழுதி படிந்திருந்தாலும், அல்லும் பகலும் அனவரதமும் தங்களைப் பற்றிய சிந்தனையால் பொலிவு பெற்று விளங்குகிறது. இலங்கையர் கோமானின் ஆர்ப்பாட்டத்தையும் அதட்டலையும் அரக்கிகளின் மிரட்டல்களையும் துரும்பெனக் கருதி லட்சியம் செய்யாவிட்டாலும் ஒருகணம் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்ற அவள் எண்ணத்தை தங்கள் அருளால் இவ்வெளியேன் தடுத்து நிறுத்த முடிந்தது. இன்னும் ஒரு மாதமே காத்திருப்பதாக அன்னை என்னிடம் கூறினாள். ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் அரக்கர் குலத்தை அழித்து அன்னையை மீட்கும் பணியில் ஈடுபடவேண்டும்.”
பின்னர் ஸீதை கொடுத்த சூளாமணியை அனுமன் பவ்யமாகக் கொடுக்க அதனைப் பெற்றுக்கொண்ட ராமன் தன் மார்பில் வைத்துக் கொண்டன். அவன் கண்கள் குளமாகின. கண்ணீர் ஆறெனப் பெருகிவர, ராமன் “ஸீதையும் நானும் இன்று உயிரோடு இருக்கின்றோம் என்றால் அப்பெருமை உன்னையே சாறும்” என்று சொல்லி அனுமனை அணைத்துக் கொண்டான்.
முக்திதரும் களிப்பைவிட ராமனின் இந்த அரவணைப்பு மகத்தானது என்பதனை அனுமன் உணர்ந்தான். எவராலும் செயற்கரிய செயலைப் புரிந்து ஸீதை மற்றும் ராமனின் துயர் தீர்த்த இந்த வாயு புத்திரனை ஒரு கணம் கம்ப ராமாயணத் தனியன்களில் ஒன்றான கீழ்க்கண்ட பாடலோடு துதிப்போம்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கினைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
[ஐம்பூதங்களில் ஒன்றான வாயு தேவனால் பெற்றெடுக்கப்பட்டு, ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் வழியே, ஐம்பூதங்களில் ஒன்றான நீரை (கடலை) தாண்டி இராமனுக்காக்ச் சென்று, ஐம்பூதங்களில் ஒன்றான பூமாதேவி பெற்றெடுத்த ஸீதையைக் கண்டு, பின்பு பகைவர் ஊரான இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தவனான அந்த அனுமன் எம் செயல் இனிதே முடியக் கருணையோடு காப்பானாக.]
(தொடரும்)
//கீழே கிடந்த அனுமனை அரக்கர்கள் கயிற்றினால் கட்டி நகரெங்கும் தரதரவென்று இழுத்துச் சென்றனர். இதற்குள் முஹூர்த்த காலம் கடந்து விட்டது. இருந்தாலும் ராவணனைக் காணவேண்டி அவன் கட்டுபட்ட நிலையிலேயே இருந்தான்.//
கயிற்றால் கட்டியதில் கூட பிரம்மாஸ்திரக் கட்டுத் தளர்ந்தது எனப் படித்த நினைவு. சுருக்கமாகவும் எளிமையாகவும் உள்ளது உங்கள் கட்டுரை.
அன்புள்ள கீதாம்மா!
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஒரு அவிழ்க்க முடியாத கட்டை இன்னொரு கட்டின்மூலம் தளர்த்த முடியும் என்று அறிவியல் அறிஞர் கூறுவர். அரக்கர்கள் அனுமனை கயிற்றினால் கட்டியதைக் கண்ட இந்திரஜித் முகம் சுளித்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
வணக்கத்துடன்
ஸம்பத்