Featuredஇலக்கியம்பத்திகள்

ராமன் வரும் வ​ரை காத்திரு… (11)

ராமஸ்வாமி ஸம்பத்

மனக்கவலை நீங்கிய ராமனும் சுக்ரீவனும் அடுத்துச் செய்யவேண்டியதை ஆலோசித்தனர். அதன்படி ஒரு மாபெரும் வானர சேனையோடு அனைவரும் இலங்கை நோக்கிப் புறப்பட்டனர். கீழ்க்கடற்கரை ஓரம் அப்படை தண்டு கொண்டிருந்தபோது வானில் ராவணன் தம்பி விபீஷணனும் மேலும் நான்கு அரக்கர்களும் தோன்றி, “இலங்கேசனால் உதாசீனம் செய்யப்பட்ட நாங்கள் ராமனைச் சரண் அடைய நிச்சயித்துள்ளோம். அப்பிரபு எங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்றனர்.

இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்பதனைப் பார்ப்போமா? அனுமன் கடல் தாண்டி இலங்காபுரியை எரித்து நாசம் செய்தது ராவணனைக் கலங்க வைத்தது. தன் தம்பிமார்களையும் இந்திரஜித் உள்ளிட்ட தம் மக்களையும் அமைச்சர்களையும் வரவழைத்து அவசர ஆலோசனை செய்தான். விபீஷணனைத் தவிர அனைவரும் ”ராம லக்ஷ்மணரையும் வானரப்படையையும் அவர்கள் தண்டு கொண்டிருக்கும் இடத்திற்கே சென்று நாசம் செய்ய வேண்டும்” என்றனர்.

விபீஷணனோ, “ஸீதையை அபகரித்து வந்தது மாபெரும் குற்றமென்றும், நாமும் நம் அரக்கர் குலமும் நிச்சயமான அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி ராமபத்தினியை உரியவனிடம் ஓப்படைப்பதே” என்றான்.

ராவணன் சினத்தில் உடல் துடிக்க, “விபீஷணா, சில நாட்களாகவே உன் நடப்பு சரியாக இல்லை. நம் எதிரியை சிலாகித்துப் பேசுகிறாய். நீ அந்த குரங்கைக் கொல்ல விடாமல் தடுத்ததால் இலங்கை நகரமே தீக்கிரையாகி விட்டது. உன் மகள் திரிஜடையை அனுப்பி ஸீதைக்கு ஆறுதல் சொல்ல வைக்கிறாய். உன் நோக்கம் என்ன?” என்று கர்ஜித்தான்.

“அண்ணா, என் நோக்கம் தங்களையும் நம் அரக்கர் குலத்தையும் காப்பதே” என்ற விபீஷணனை ராவணன், “வேண்டுமானால் நீ ராமனிடம் அடைக்கலம் புகுந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய். உன்னை என் தம்பியென்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொல்லி மேலும் பல சுடுசொற்களால் அவனைச் சாடினான். அங்கு கூடியிருந்த அனைவரும் மன்னன் கூற்றினை ஆமோதித்தவாறு விபீஷணனை எள்ளி நகையாடினர். வருத்தத்தோடும் குனிந்த தலையோடும் அவன் அங்கிருந்து அகன்று தன் நண்பர்கள் நால்வரோடு ராமன் இருக்கும் இடத்தைச் சேர்ந்தான்.

அபயம் கோரும் விபீஷணனை தம்முடன் சேர்த்துக் கொள்ளலாமா என்று சுக்ரீவனையும் ஜாம்பவானையும் மூத்த வானர வீரர்களையும் ராமன் கேட்டபோது அனுமனைத் தவிர அனைவரும் தேவையில்லை எனக்கூறினர். அனுமனோ வீபீஷணனின் நற்பண்புகளைச் சுட்டிக்காட்டி “அவன் வரவு நமக்கு நல்வரவே” என்றான்.

முடிவில் ராமன் தன்னுடைய அடைக்கலம் அளிக்கும் பண்பினை ஒட்டி, “சரண் புகுந்தவரைக் காப்பது என் தர்மமாகும். ஒருவேளை ராவணனே மனம் திருந்தி என்னிடம் சரணடைந்தால், அவனையும் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறி, விபீஷணனை அழைத்து, லக்ஷ்மணனையும் சுக்ரீவனையும் அவ்வரக்கனுக்கு இலங்கை அரசனாக முடிசூட்டுமாறி பணித்தான்.

பின்னர் அவனோடும் சுக்ரீவனோடும் எவ்வாறு கடல் கடந்து இலங்கை சேர்வது என்று ஆலோசித்தான். அதன்படி கடலரசனை வழிவிடுமாறு வேண்டுவது என முடிவு செய்தான். இன்று திருப்புல்லாணி என வழங்கும் இடத்தில் ராமன் தர்ப்பைகளைப் பரப்பி மூன்று நாள் உபவாசத்தோடு சமுத்திரராஜனைப் பிரார்த்தித்தவாறு இருந்தான். அதற்கு பலன் இல்லாமல் போகவே, கோபம்கொண்ட கோதண்ட ராமன் அக்கடலினை வற்றி தரைமட்டமாக்கத் தன் வில்லின் நாணேற்றினான். இந்த சீற்றத்தைக் கண்டு கடலரசன் நடுநடுங்கி, ராமனிடம் சரண் புகுந்து, “இயற்கை நியதிகளுக்குக் கட்டுப்பட்டவனான என்னை மன்னித்தருள்வீர். என்னால் தங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். அதாவது என்மீது பெருங்கற்களைக் கொண்டு அணை ஒன்றைக் கட்டுங்கள். அதனை நான் தாங்குகிறேன். அந்த அணைமீதே நீங்க்ள் யாவரும் நடந்து இலங்கை சேரலாம்” என்று கூப்பிய கரங்களோடு பகர்ந்தான். திருப்புல்லாணி அருகாமையில் உள்ள ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து சேதுவை நிர்மாணிக்கலாம் என்றும் கூறினான்.

வானர வீரர்களில் ஒருவனான நளன் என்பான் முன்வந்து, “ஐயனே! நான் விஸ்வகர்மனிடம் அணைகள்  கட்டுவதற்கான பயிற்சி பெற்றிருக்கிறேன். அனுமன் போன்ற வலிமை கொண்ட வானரர்கள் அருகில் உள்ள மலைகளிருந்து பெரும் பாறாங்கற்களை எடுத்து வந்தால் இப்பணி எளிதாக முடிந்துவிடும்” என்றான். அவன் மேற்பார்வையில் வானரர்கள் ராம நாமத்தை ஜபித்தவாறு பெரும் பாறாங்கற்களையும் வெட்டப்பட்ட மரங்களையும் அணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்பாதையில் போட்டு சேதுவை உருவாக்குவதில் ஈடுபட்டனர். கடலரசன் கருணையால் அவைகள் ஒரு மிதவைப் பாலமாக அமைந்தன.

இதையெல்லாம் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சேதுராமன் ‘இந்த பளுவான கற்கள் எவ்வாறு மிதக்கின்றன’ என நினைத்து ஒரு மாலைப் பொழுது யாருமில்லாத சமயம் தானும் ஒரு கல்லை அவ்விடத்தில் போட்டான். அது ‘தொபுக்கடீர்’ என்று தண்ணீரில் அமிழ்ந்தது. திடீரென்று யாரோ ‘களுக்’ என்று நகைப்பது கேட்டது. அனுமன்தான் அங்கு நகைத்தபடி நின்றிருந்தான். “ஏன் சிரிக்கிறாய் அனுமா?” என்று ராமன் கேட்க அனுமன், “ஐயனே! நீ கைவிட்டால் கல் என்ன  எவர்க்குமே அதோகதிதான்” என்றான்.

சில நாட்களில் சேதுபந்தனம் முடிந்து வானரப் படை மொத்தமும் அந்த நீண்ட வீதியின்மேல் நடந்து இலங்கையை அடைந்தனர். ராமனை அனுமனும் லக்ஷ்மணனை அங்கதனும் சுமந்து அக்கரை சேர்ந்தனர். கடைசி முயற்சியாக ராமன் அங்கதனை தூதுவனாக ராவணனிடம் அனுப்பி “ஸீதையை என்னிடம் சமர்ப்பித்துச் சரண் புகுந்தால் போரினைத் தவிர்க்கலாம்” என்று சொல்ல வைத்தான். அகந்தைகொண்ட ராவணன் அதனை நிராகரிக்கப் போர் தொடங்கியது.

(​தொடரும்)

Print Friendly, PDF & Email
Share

Comments (9)

 1. Avatar

  பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம்
  தங்கள் அனுமதியுடன் என் சிற்றறிவுக்கெட்டியதைப் பதிவிட விரும்புகிறேன்.
  வான்மீகத்தில்
  “விபீஷணோ வா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம்
  ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா”
  என்று உள்ளது.
  இதில் ரூடியாகப் பொருள் கொள்வோமானால் என்னால் இவனுக்கு சரண் கொடுக்கப் பட்டது என்பதாகும்
  இதில் ஸ்வாபதேசமாக (உள்ளுறைப் பொருளாகக்) கொள்வதென்றால்
  மா என்பதற்கு இலக்குமியாகிய சீதை என்று பொருள் கொள்ள வேண்டும்
  பிராட்டியால் இவனுக்குச் சரண் கொடுக்கப் பட்டு விட்டது என்றாகும். அப்படியானால் பிராட்டி எப்பொழுது கொடுத்தாள் என்ற வினா எழும். அது தொடர்பாக சூர்பணகை அங்கபங்கம் நிகழ்ச்சியை நினைவு கூர வேண்டும்
  சூர்ப்பணகைத் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது விபீஷணனப்” பற்றி “விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித” என்று சொன்னபோதே பிராட்டி அவனைக் காக்கத் திருவுள்ளம் கொண்டாள். ஆகையால் விபீஷணனுக்கு அபயம் முன்னாலே கொடுக்கப் பட்டு விட்டது ஸ்ரீஇராகவன் என்றதாகவும் கொள்ளலாம்.
  தவறாயிருப்பின் தள்ளி விடவும்
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 2. Avatar

  அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நந்திதா அவர்களே!
  தங்கள் மெய்சிலிர்க்க வைக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. அன்னையின் கடாக்ஷம் விபீஷணனுக்கு முன்னமேயே கிடைத்துவிட்டது என்னும் தகவலை அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். அவள் கருணாகடாக்ஷத்தைப் பெற்ற சிரஞ்ஜீவிகள் இருவர்: அனுமன், விபீஷணன். உண்மையில் ராமாயண காவியம் ஸீதாயணமே.
  வால்மீகி ராமாயணத்தில் ஓவ்வொரு ஸ்லோகமும் ஒரு மந்திரம் என்றும் அவற்றைப் பாராயணம் செய்பவர் இம்மையிலும் ஏழேழ் பிறவிகளிலும் மறுமையிலும் திருவருள் பெற்று இன்புறுவர் என்றும் சான்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
  பகிர்வுக்கு மீண்டும் நன்றி
  வணக்கத்துடன்
  ஸம்பத்
  பி.கு.: பத்ராசல கோபண்ண (ராமதாஸர்) கோல்கொண்டா நவாபின் சிறையில் வாடும்போது அண்ணல்மீது பல அழகான கீர்த்தனைகளைப் பாடினார். அதில் ஒன்று, ஸீதம்மதல்லியிடம் கதறுவது போல் அமைந்துள்ளது. அதன் படி, கோபண்ணா கேட்கிறார்: ’உன் மணாளனுக்குத் தான் என்மீது இரக்கம் இல்லை. நீயாவது எனக்காக அவனிடம் பரிந்து பேசமாட்டாயா? உன் பொன்மேனியை அலங்கரிக்கும் ரத்தினமாலையை அவன் உனக்கு அளிக்கவில்லை. உன் தந்தை ஜனகன் அளிக்கவில்லை. நான் அளித்தேன் என்பதனை மறந்து விட்டாயா?’ உடனே அன்னை, ‘நாதா! நீங்கள் ஏன் உங்கள் பக்தனிடம் இன்னும் இப்படி பராமுகமக இருக்கிறிர்கள்?’ என்று ராமனிடம் கேட்க, அண்ணல் சொல்வார், “ப்ரியே, உன் கடாக்ஷம் கோபண்ணாமீது படுவதற்காகத்தான் காத்திருந்தேன். இதோ, இப்பொழுதே நானும் லக்ஷ்மணானும் புறப்படுகிறோம் கோல்கொண்டா நவாபிடம் என் பக்தன் பட்ட கடனைத் திர்க்க.”
  ஆக எந்நிலையிலும் அன்னையே இரக்கத்தின் இருப்பிடம்.
  ஸ.

 3. Avatar

  மிக அருமையான தொடர் பதிவு..

  //// “ஐயனே! நீ கைவிட்டால் கல் என்ன  எவர்க்குமே அதோகதிதான்” ////

  ‘சொல்லின் செல்வன்’ அல்லவா அனுமன்.!!!

  நந்திதா அவர்களின் பின்னூட்டம், தாயாரின் மகிமையை அழகாகச் சொல்லுகிறது..மிக்க நன்றி!..

 4. Avatar

  பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம்
  வணக்கத்துடன் ஸம்பத் என்பதற்குப் பதில் ஆசிகளுடன் என்று பதிவிட்டால் நன்றி உடையவள் ஆவேன். பெரியவர்களின் ஆசிக்காகக் காத்திருப்பவள் நான்.
  அபிவாதன சீலஸ்ய நித்யம் வ்ருத்தோப ஸேவின:
  சத்வாரி தஸ்ய வர்த்தந்தே ஆயுர் வித்யா யசோ பலம்
  பெரியவர்களின் ஆசியினால் ஆயுள் வித்யை புகழ்பெறும் வாழ்வு பலம் நான்கும் கிடைக்குமாம்
  அன்புடன்
  நந்திதா

 5. Avatar

  வணக்கத்துக்குரிய அம்மையீர்
  நன்றி. இது என் சொந்தக் கருத்தல்ல. எனக்கு இராமாயணம் கற்பித்த பெரியோர்கள் வாக்கு.
  அன்புடன்
  நந்திதா

 6. Avatar

  பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நந்திதா அவர்களே!
  தங்கள் பின்னூட்டத்திர்கு நன்றி. வெரும் வயோதிகன் என்பதால் மட்டும் என் ஆசிகளுக்கு நீங்கள் சொல்வதுபோல் பயன் இருக்குமென்றால் என் ஆசிகளைப் பொழியக் காத்திருக்கிறேன்.
  ஆசிகளுடன்
  ஸம்பத்

 7. Avatar

  மதிப்பிற்குரிய் பார்வதி ராமசந்திரன் அவர்களே!
  மிக்க நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு.
  வணக்கதுடன்
  ஸம்பத்

 8. Avatar

  நளனுக்கு இருந்த சாபத்தால் இங்கே ஒரு நன்மை விளைந்தது அல்லவா?  சாளக்கிராமத்தைக் கங்கையில் போட்டதால் நளன் எதைத் தண்ணீரில் போட்டாலும் மிதக்கும் என்று சாபம் கிடைக்கிறது, அது இங்கே வசதியாகப் போய் விட்டது. பாலம் கட்டிப் போயாச்சு.  அடுத்து ஒவ்வொருவராக சம்ஹாரம் தான்! :))))

 9. Avatar

  நன்றி கீதாம்மா நளனைப்பற்றிய அருமையான தகவலுக்கு. ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும்தான் எத்தனை உபகதைகள்! அவைகள் எவ்வளவு அழகாக உபநதி பெருநதியில் கலபதுபோல் அக்காவியங்களில் இணைகின்றன!
  அன்பு கலந்த வணக்கதுடன்
  ஸம்பத்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க