இந்த வார வல்லமையாளர்!

திவாகர்

தமிழ்மொழி தேனினும் இனிய மொழி. பல்வகை சிறப்புகளைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டும், காலத்துக்கேற்ற மாறுதல்களையும் தனக்கெனத் தனியாக உள்வாங்கிக் கொண்டும் எக்காலத்துக்கும் சிறந்த மொழியாகத் திகழ்கிறது என்பதில் கருத்து வேற்றுமையே கிடையாதுதான். அதே சமயத்தில் தமிழ் மொழியின் சிறப்பு அதன் பழைய இலக்கியங்களிலேயே அடங்கிக் கிடப்பதும், புத்தம் புதிய இலக்கியங்கள் என வரும்போது அதன் தன்மை இன்னமும் அதிகமாக வெளிப்படவில்லையென்றுதான் தற்சமயம் நமக்குப் படுகின்றது. எதிர்காலத்தில் இன்றைய தமிழ் உலகம் தமிழுக்குக் கொடுத்த சிறப்புகள் என்னென்ன என்பதை வாழ்வாங்கு வாழ்விக்குமா என்பதும் நமக்கு இப்போதைக்குத் தெரியாதுதான்.

இன்றைய தமிழ் இலக்கியங்கள் எதிர்காலத்தில் பேசப்பட வேண்டும் என்று நினைத்து எழுதும் எண்ணம் நம் தமிழ் மண்ணில் இருப்பதை விட தமிழ்நாடு தவிர்த்த பிற மண்ணில் வாழும் தமிழரிடையே பரவலாக இருப்பதைக் காண்கிறேன். தமிழ் எல்லோருக்கும் பரவலாகவே வளைந்து கொடுக்கும் மொழி எனும்போது புலம்பெயர்ந்த மண்ணில் இருந்தாலும் தமிழில் நல்ல நூல்கள் சமீப காலங்களில் படைக்கப்பட்டுள்ளன. இவை காலம் கடந்து நிற்கவேண்டுமென்பதே நம் ஆசை. அதே சமயத்தில் இப்படி புலம்பெயர்ந்த மண்ணில் தோன்றும் தமிழ் நூல்களையும் எழுத்தாளர்களையும் தமிழ்நாடு எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இப்படி ஒரு உற்சாக விழாவாக சமீபத்தில் கோவையில் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் மாநாடு ஒன்று நடந்ததும் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த திரு மாலன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், திரு மாலன் அவர்களின் செயல்பாடு குறித்தும் திருமதி பவளசங்கரி அவர்களின் கட்டுரை வல்லமையில் வெளியாகி உள்ளது. அதிலிருந்து சில பகுதி..

Maalan//கருத்தரங்க அமைப்புக்குழுவின் தலைவர், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற *திரு மாலன்* தனது பதினாறாம் வயதில் , எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி, சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல், ‘ஜனகணமன’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறுகதை, ‘தப்புக் கணக்கு’ பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளதோடு, திரு பாலுமகேந்திரா அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பரந்துபட்ட, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொடர்புகளை மிகச் சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இக்கருத்தரங்கை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் திரு மாலன் அவர்களின் வல்லமை பாராட்டிற்குரியது.
“புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது, என்கின்ற நண்பர் ஜெயமோகனின் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அது போன்றே, உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர் இலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்’ என எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால் இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைத் தாயகம் கடந்த தமிழும், தமிழர்களும் கணிசமாகப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு” என்ற யதார்த்தமான வாதங்களைக் கருத்தில் கொண்ட இவருடைய செயல்பாடுகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றும் போற்றுதலுக்குரியது//

இப்படிப் போற்றுதலுக்குரிய திரு மாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு மாலன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் தமிழ்நாடு தவிர பாரதத்திலேயே உள்ள பிற பாகங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களில் இலக்கியப் பணிகளையும் வெளிக்கொணர உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி பாரா: தஞ்சை திரு வே. கோபாலன் அவர்களின் பின்னூட்டம் வல்லமையில்:
64 வயது ஆன இந்திய குடியரசு இன்னமும் ஜனநாயக நெறிகளைப் பின்பற்றவில்லையென்றால், நம்மை நாமே ஆளும் தகுதி நமக்கு வரவில்லை என்று பொருள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.