ராமன் வரும் வ​ரை காத்திரு… (3)

ராமஸ்வாமி ஸம்பத்

மனநிறைவோடு அயோத்தி திரும்பினான் தசரத மன்னன். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் தசரதன் நன்கு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ‘வானில் கிரஹங்களின் நிலை தற்போது சரியில்லை. ஒருவேளை என் இறுதி காலம் நெருங்குகிறதோ என்னவோ? அதற்குள் என் தவப்புதல்வனை ராஜாராமனாகப் பார்க்கவேண்டும். அதற்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க வேண்டும். என் நிர்ணயத்தை யாரும் எதிர்க்கமாட்டார்கள். ஒருவேளை என் மாமன் கேகய நாட்டு மன்னன் நான் கைகேயியை மணக்கும்போது அவனுக்குக் கொடுத்த வாக்கினால் சற்று எதிர்க்கலாம். அவளுக்குப் பிறக்கும் புத்திரனே ஆட்சி செய்வான் என்று நான் அப்போது சொன்னதை நினைவூட்டலாம். அப்போதைய நிலை வேறு. புத்திர பாக்கியம் இல்லாத சமயத்தில் நான் ஏதேதோ கூறியிருக்கலாம். ஆனால் இப்போதைய நிலை வேறு. பட்டத்து அரசியான கெளசலையின் புதல்வன் தான் அரியணை ஏறவேண்டும். இதுவே இக்ஷ்வாகு குலத்தில் வாழையடி வாழையாக நடக்கும் நியதி. ஆகவே உடனே பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். பரதன் இல்லாதபோது ராமனுக்கு முடிசூட்டிவிட்டால் கேகயன் ஒன்றும் செய்ய முடியாது. கைகேயி பற்றி கவலை இல்லை. அவள் கெளசலையைவிட ராமன்மீது உயிரையே வைத்திருக்கிறாள்….’  என்றெல்லாம் எண்ணியவாறு அயோத்தி மன்னன் தன் இளைய மனைவியுடன் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்தான். ‘அவளுக்குப் பிடித்தது போர்க்காலத்திலும் வேட்டைக்குச் செல்லும் போதும் எனக்குத் தேர் ஓட்டுவதல்லவா? இப்போதே அவளுடன் அடவிக்குச் செல்வோம். வேட்டை முடிந்ததும் ஏகாந்தத்தில் அவள் ஒப்புதலைப் பெற்றுவிடலாம்’  என நினைந்து அவளுடன் வனத்திற்குப் புறப்பட்டான்.

வேட்டை நன்றாக நடந்தேறியது. ஆனால் வயோதிகனான தசரதன் களைப்புற்று ஒரு மரத்தின் கீழ் அவள் மடிமீது தலை வைத்து உறங்கி விட்டான். கைகேயி தசரதனின் உறங்கும் அழகை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அச்சமயம் அம்மரக்கிளையில் வீற்றிருந்த ஒரு ஜோடிப் பறவைகள் பேசிக் கொண்டிருந்தன. கைகேயிக்கு அப்பட்சிகளின் மொழி தெரியும். பொழுது போக்காக அப்பறவைகள் பேசுவதைக் கேட்டாள்.

ஆண் பறவை தன் பெட்டையிடம், “என்னுயிரே, கீழே மனைவியின் மடியில் படுத்துக் கொண்டிருப்பது யார் தெரியுமா? அவன் அயோத்தி மன்னன் தசரதன். அவள் அவனது இளைய மனைவி கைகேயி. இம்மன்னன் தன் பிரியமான மூத்த மகனுக்கு அவசர அவசரமாக முடிசூட்ட உள்ளான். பாபம்! இவனுக்கு வரப்போவது தெரிய வாய்ப்பு இல்லை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு பதினான்கு ஆண்டுகளுக்கு அயோத்தி சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் அவர் மரணிப்பது உறுதி. இந்நிலையில் அவன் மகன் அரியணை ஏறினால் என்ன ஆகும்?”

பெண் பறவை, “ஆருயிரே! சாதாரண பட்சியான உமக்கு இதெல்லாம் எப்படி தெரிகிறது?”  என்றது.

“அண்மையில் இவ்வரண்யத்தில் வேடன் ஒருவன் தன் அம்பை ஒரு பருந்தின்மீது எய்தான். அது குறிதவறி ஒரு முனிவர் மீது பாயவிருந்தது. அப்போது நான் அவர்முன் பறந்து அந்த அம்பினை என்மீது வாங்கிக்கொண்டு அவரைக் காப்பாற்றினேன். அவர் மனம் மகிழ்ந்து காயப்பட்ட என்னைத் தூக்கி பரிவோடு தடவிக் கொடுத்தார். உடனே என் காயம் ஆறிவிட்டது. மேலும் தன் தவ மகிமையால் எனக்கு வரப்போகும் நிகழ்வுகளை அறியும் சக்தியைக் கொடுத்தார்” என்றது ஆண் பட்சி.

இதற்குமேல் கைகேயிக்கு அப்பறவைகளின் உரையாடலில் பிடிப்பில்லாமல் போயிற்று. ஒரு கணம் தன் இதயத்துடிப்பு நின்றுவிட்டதுபோல் உணர்ந்தாள். ‘என் இனிய ராமன் உயிருக்கு ஆபத்தா? அதனை என்னால் தாங்க முடியாது. எப்பாடுபட்டாகிலும் ராமன் தற்சமயம் ஆட்சிப் பட்டம் பெறுவதைத் தடுத்தே ஆக வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தாள். ’அயோத்தி அரியணையே, இன்னும் பதினான்கு ஆண்டுகள் கடந்து, ராமன் வரும் வரை காத்திரு‘ என மானசீகமாக அதற்கு ஆணையிட்டாள்.

’ஆனால் மன்னர் இதற்கு ஒப்புவாரா? பறவையின் கூற்றினை நம்புவாரா?’ என்னும் ஐயம் அவளுக்கு ஏற்பட்டது. ‘அதனாலென்ன? என்னுயிர்ச் சேடி மந்திரை இதற்கு ஒரு நல்ல யோசனை சொல்வாள். அது வரை இதனை யாருக்கும் சொல்லவேண்டாம்’ என சமாதானம் செய்து கொண்டாள்.

உறக்கம் நீங்கி கண் விழித்த தசரதன் “கைகேயி உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசவேண்டும்” என்றான். “நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். மாலை வந்துவிட்ட்து. இப்போது நாம் ராஜதானி திரும்புவோம். இன்னொரு நாள் விவரமாக பேசுவோம்” என்று சொல்லி தசரதனை ரதத்தில் ஏற்றிக்கொண்டு அயோத்திக்கு விரைந்தாள்.

அடுத்தநாள் காலை தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ”நாளை ராமனுக்கு முடிசூட்ட வேண்டும். அதற்கான ஆயத்தங்களை தாங்கள் செய்ய வேண்டும்” என்றான். “அரசனின் ஆணைப்படியே” என்றார் முக்காலமும் அறிந்த அம்முனிவர் சுருக்கமாக. அதன்பின் புயல் வேகத்தில் செயற்பாடுகள் தொடர்ந்தன.

ராமனை தன் மாளிகைக்கு அழைத்து, “குழந்தாய், நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். நீ மைதிலியை (மிதிலையில் கண்டெடுக்கப்பட்ட ஸீதை) அழைத்துக்கொண்டு குலகுரு வசிஷ்டரிடம் சென்று அதற்கான நோன்பினை அனுஷ்டிக்க வேண்டும்” என்றான் தசரதன். ராமபட்டாபிஷேகம் எனும் செய்தி காட்டுத்தீபோல் பரவி அயோத்தி மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

மாநகரின் கோலாகலம் கண்டு மந்திரை கோபத்தோடு கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தாள். “அசட்டுப் பெண்ணே, குடி முழுகிவிட்டதடி. இனி உன் சகஇல்லத்தி கெளசலைக்கு நீ கொத்தடிமை செய்யவேண்டும்”  என்று அரற்றினாள் மந்திரை.

“என்ன சொல்கிறாய் மந்திரா” என்று வினவிய கைகேயியை நோக்கி, “ராமனுக்கு நாளை முடிசூட்டப் போகிறானடி உன் மன்னன். உன் மகன் பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிய போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உன் கணவன் ஒரு பெரிய சதிகாரன். இனி நீ ஒரு பொருட்டல்ல அயோத்தி மன்னனுக்கு” என்றாள் அவள் சேடி.

‘இப்போது மந்திரை என்ன உபாயம் சொல்லப்போகிறாள் என்று பார்ப்போம்’ என நினைத்த கைகேயி சொன்னாள்: “அதெல்லாம் போகட்டும். இப்போது முடிசூட்டலை எவ்வாறு நிறுத்துவது என்று சொல்.”

“உனக்கு உன் மணாளன் பண்டொருநாள் சம்பராசுரனுடன் நடந்த யுத்தத்தின் போது உன் தேரோட்டும் திறனைப் பாராட்டி இரண்டு வரங்களை அளித்தான் அல்லவா? அது நினைவிருக்கிறதா?”

“உம்….”

“இப்போது அந்த வரங்களைப் பயன்படுத்தி பரதனுக்குப் முடிசூட்டவேண்டும் என்றும் ராமன் நீண்டகாலம் வனவாசம் செய்யவேண்டும் என்றும் அரசனிடம் கேள்.”

கைகேயியின் உள்ளம் உவகை கொண்டது. ‘இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! என்ன இருந்தாலும் மந்திரை மந்திரைதான். ராமனைக் காப்பாற்ற எவ்வளவு எளிதான உபாயம். ஆனால் பரதனுயிருக்கு ஆபத்தாயிற்றே’ என நினைத்து,  பிறகு ‘பரதன் ஒரு நாளும் முடிசூட்டிக்கொள்ள ஒப்புதல் அளிக்கமாட்டான்’ என்று ஆறுதல் கொண்டாள்.

பின்னர் மாளிகைக்கு வந்த தசரதனிடம் இவ்விரு வரங்களைக் கேட்டு அவனை மூர்ச்சை அடையச் செய்தாள். மூர்ச்சை தெளிந்தபின் தசரதன் பலவாறாக அவளிடம் கெஞ்சிப்பார்த்தான். எவ்வாறு பலன் இருக்கும்? கைகேயிக்கு ராமனை எப்படியாவது காக்க வேண்டும் என்னும் வெறி கொழுந்துவிட்டு எரியும்போது அவள் பணிந்து போவாளா? மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ராமன் பதினான்கு ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ”இல்லையேல் உயிர் விடுவேன்”  என்றாள். மீண்டும் மூர்ச்சை அடைந்தான் மன்னன்.

உடனே ராமனைத் தருவித்து தான் பெற்ற வரங்கள் பற்றியும், அதன்படி ராமன் காட்டுக்குச் செல்லவேண்டிய அவசியத்தையும் விளக்கினாள். ’முதல் நாள் அரியணை அடுத்த நாள் அரண்யம்’ என்ற நிலை ராமனை எவ்வாறு பாதித்தது என்பதனை கம்பர் கவிதையில் கேட்போம்:

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே ஆகும்

செப்ப அருங்குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.

[வர்ணிக்கும் வல்லமை பெற்ற எவராலும் எடுத்துச்சொல்ல முடியாத அரும் பெருங்குணங்களைப் பெற்றுள்ள இராமனது திருமுகத்தின் பேரழகுச் சிறப்பை இப்போது பார்த்தால், அது எம்மைப் போன்றவர்களால் சொல்வதற்குரிய எளிமை பெற்றதோ? ஏனெனில் இதற்கு முன்பு அத்திருமுகம் செந்தாமரை மலரை ஒத்திருந்தது. கைகேயி கூறிய சொற்களை அவற்றின் பொருள் உணரக்கேட்ட பின்பு, அப்போதுதான் அலர்ந்துள்ள புத்தம் புதிய செந்தாமரை மலரை அத்திருமுகம் வென்றுவிட்ட்து]

சிறிதளவு மாற்றமும் வதனத்தில் இல்லாமல், ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனப்பகர்ந்து சிறிய தாயாரை வணங்கி ராமன் புறப்பட்டான்.

கோபாவேசம் கொண்ட இளவல் லக்ஷ்மணனை சீற்றமில்லாதானும் ஸீதைமணாளனுமான ராமன் இவ்வாறு சமாதானப்படுத்தினான்:

“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே

 பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

 மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த!

 விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டது”

[இளையவனே! நல்ல நீர் இல்லாமல் வற்றிப்போதல்  அந்நதியின் தவறு அன்று. அதைப்போலவே எனக்கு இப்போது நேர்ந்துள்ள நிலைக்குக் காரணம் தந்தையின் தவறு அன்று. நம்மைப் பெற்றவள் போலப் பேணி வளர்த்த அன்னை கைகேயி பெற்றுள்ள அறிவின் தவறும் அன்று. அவளுடைய மகனான பரதனின் தவறும் அன்று. பின்பு யாருடைய தவறு எனக்கேட்பின், இது ஊழ்வினை செய்த தவறாகும். இதற்காக நீ கோபம் கொண்டது ஏன்?]

பின்னர் அவனையும் தன் கூட வருமாறு பணித்தான். ஸீதையிடம் விடைபெற விழைந்தபோது, அவள் கணவனுடன் காட்டுக்குச் செல்வதே தன் தருமம் என்று பிடிவாதம் செய்து ராமனை தன் வழிக்குக் கொணர்ந்தாள். மூவரும் அன்னைமார் கெளசலை சுமித்திரை இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அமைச்சர் சுமந்திரன் தேரோட்ட வனத்திற்கு ஏகினர். திடீர் திருப்பத்தால் திடுக்கிட்ட அயோத்திவாழ் மக்கள் ஒரு படைபோல் திரண்டு அவர்களைத் தொடர்ந்தனர்.

’கங்கையிரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான்’ எனப்புகழ் பெற்ற படகோட்டி அரசனான குஹன் உதவியோடு தொடரும் மக்கள் யாரும் அறியாமல் மூவரும் இரவோடு இரவாக நதியினைக் கடந்து சித்திரகூடம் சேர்ந்தனர்.

இதற்கிடையில், புத்திரனின் பிரிவை தாங்கமுடியாமல் தசரதன் வானுலகம் எய்தினான். பரதனுக்கும் சத்ருக்கினனுக்கும் செய்தி அனுப்பி வரவழைத்தனர். நடந்தவற்றை அறிந்த பரதன் கடுஞ்சினமுற்று இத்தகைய களங்கத்தைத் தனக்கு ஏற்படுத்திய அன்னையை பல்வகையாலும் சாடினான். கைகேயி பொறுமையாக அவற்றைத் தாங்கி, தன் மகனின் உன்னதமான உள்ளத்தை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொண்டாள்.

அயோத்தி அரசனின் ஈமச்சடங்குகள் நடந்தேறியபின் வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வேண்டினார். அவன் அதனை மறுத்து காட்டிற்குச் சென்று அண்ணனை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கப்போவதாக பறை சாற்றினான். அனைவரும் புடைசூழ பரதன் காடு நோக்கிச் சென்றான். குஹன் உதவியோடு அனைவரும் சித்திரகூடம் சேர்ந்தனர்.

அயோத்தி நிகழ்வுகளை அறிந்த ராமன் தன்பொருட்டு தந்தை இயற்கை எய்த  நேர்ந்ததை எண்ணி வருந்தினான். பரதன் அண்ணனை நாடு திரும்பி ஆட்சி பொறுப்பினை ஏற்குமாறு வேண்ட, ராமன் தந்தையின் ஆணையை மீறுதல் தகாது என்று சொல்லி பரதனையே ஆளுமாறு பணித்தான்.

குலகுரு வசிஷ்டர்முன் சகோதரர்களின் வாக்குவாதங்கள் தீவிரமாக நடந்தன. அவர் பெருமிதத்தோடு பரதனை நோக்கி, “உன் போற்றத்தக்க நடப்பினால் ரகுகுலத்திற்கே திலகமெனத் திகழ்கிறாய். ராமன் தன் தருமத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான். நீதான் சற்று தழைந்து போகவேண்டும்”  என்றார்.

இறுதியில் பரதன் அண்ணனின் ஆணைப்படி நாடு திரும்புவதாகக் கூறி, பதினான்கு ஆண்டுகளுக்கு ராமனின் பிரதிநிதியாகவே செயல்படுவதாக உறுதி அளித்து, அவன் பாதுகைகளைப் பவ்யமாகப் பெற்று தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டான். ”அண்ணலே! நீங்கள் அன்புடன் ஈந்த உமது புனித அடிநிலையே இனி இந்நாட்டை ஆளப்போகிறது. சரியாக பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் நீங்கள் அயோத்தி அரியணை ஏறவேண்டும். அதுவரை நகர்ப்புறமான நந்திகிராமத்தில்தான் நான் ஒரு துறவிபோல் வசிப்பேன். குறிப்பிட்ட கெடு கடந்து தாங்கள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன்” என்று கண்ணீர் மல்கக் கூறிய பரதனை ராமன் அணைத்துக் கொண்டு ”உன்போன்ற தம்பியைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ” என்று சொல்லி விடைகொடுத்தான்.

‘அப்பாடா, என் மகனும் உயிர் பிழைத்தான். எங்கே ராமன் சொல்படி பரதன் அரியணை ஏறிவிடுவானோ என பயந்து கொண்டிருந்தேன்’ என்று கைகேயி பெருமூச்சு விட்டாள். ‘ஆருயிர்க் கணவனை இழந்ததோடு எவ்வளவு மகத்தான நிந்தனைக்கு ஆளாகிவிட்டோம். அதனாலென்ன, என் மனத்துக்கினிய ராமனுக்காக இந்த அபவாதத்தைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதற்குப் பரிசாக என் மைந்தன் ”படியிற் குணத்து பரத நம்பி” ஆகிவிட்டான்’  என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் நெகிழ்ந்தாள் அந்த அன்னை.

பாதுகா பட்டாபிஷேகம் நடந்தபின், நந்திகிராமத்தில் வசித்த பரதனும் சத்ருக்கினனும் தவக்கோலம் பூண்டு தங்கள் கடமைகளை, வசிஷ்ட மாமுனியின் அறிவுரைப்படி நிறைவேற்றி வந்தனர்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (3)

 1. ம்ம்ம்ம் கைகேயிக்கு ஜோதிடம் தெரியும் என்றும், அதனால் தான் அவள் இம்மாதிரிச் செய்தாள் என்றும் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.  என்றாலும் வால்மீகி இதை எல்லாம் சொல்லவில்லை. :))) இந்த உபகதை எந்த ராமாயணத்தில் வருகிறது?

 2. அருமை ஐயா! தெளிந்த நீரோடை போன்ற தங்களின் எழுத்துநடை கவனம் சிதறாமல் வாசிக்கப் பெரிதும் துணையாக இருக்கிறது. நன்றி!

  புதல்வர்களைக் காப்பதற்காகத் தான் வகுத்த வியூகத்தில் சிக்கித் தன் கணவனே இரையாவான் என்று கைகேயி கனவிலும் நினைத்திருக்க மாட்டாளோ?

 3. அன்புள்ள கீதாம்மா!
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  ’ராமனிடம் உயிரையே வைத்திருந்த கைகேயி எதற்காக அவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டாள்?’ எனும் ஐயம் என் உள்ளத்தைப் பல காலமாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. இது குறித்து ஒரு பெளராணிகரிடம் வினவியபோது அவர், “ராமனின் அவதார ரகசியத்தை அறிந்த சிலரில் கைகேயியும் ஒருவளாவாள். ராம காரியம் பூர்த்தியாக வேண்டுமானால் அவன் வனவாசம் செய்யவேண்டியது அவசியமே என்று கருதி அவள் அவ்வாறு நடந்து கொண்டாள்” என்றார்.
  சில ஆண்டுகளுக்கு முன் விசாகபபட்டினத்தில் வசித்துக் கொண் டிருந்த போது
  ராமாயணத்தின் ஒரு உபகதையை ஆதாரமாகக்கொண்ட ஒரு தெலுங்கு நாடகத்தை ஸப்தகிரி சானலின் ஒளிபரப்பில் பார்த்தேன். அதில் இந்த பறவைகளின் உரையாடல் இடம் பெற்றிருந்தது. கைகேயி தந்தையான கேகய ராஜனிடமிருந்து பக்ஷிகளின் மொழியை கற்றுக்கொண்டிருந்தாள் என்ற ஒரு தகவலும் எனக்குக் கிடைத்தது. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இந்த உபகதை எந்த ராமாயணத்தில் உள்ளது என்று ஒரு தெலுங்கு பெளராணிகரிடம் கேட்டேன். அவர் இது ஆனந்த ராமாயணத்தில் இருப்பதாகச் சொன்னார்.
  வணக்கத்துடன்,
  ஸம்பத்
  பி.கு.: நோய்வாய்ப் பட்டிருந்த உங்கள் குடும்பத்தினர் நலம் தானே!
  ஸ.

 4. அன்புள்ள திரு. சச்சிதானந்தம் அவர்களே!
  புத்தாண்டு வாழ்த்துகள்.
  தங்கள் பாராட்டிற்கு நன்றி.
  அப்பதினான்காண்டுகளில் யார் அயோத்தி அரியணையில் அமர்ந்திருந்தாலும் அவர் மரணிப்பது உறுதி என்பது ஆண் பறவையின் கணிப்பு. பரதன் அரியணையை திரஸ்கரித்தால் எஞ்சி இருப்பது தசரதன்தானே என்பதும் அவள் அறியாததல்ல. ஒரு உயர்ந்த நோக்கில் அத்தகைய செயலைக் கைகேயி புரியவேண்டிய கட்டாயத்திற்கு விதி அவளைத் தள்ளிவிட்டது.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published.