திவாகர்

திரைப்படப் பாடல்கள் எனும்போதே உடனடியாக நம் கவனத்தில் வருபவர்கள் கவியரசு கண்ணதாசனும் கவிஞர் வாலியும்தான். கவியரசை நாம் எல்லோருமே உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறோம் என்பது வாஸ்தவம்தான் என்றாலும் வாலியார் கூட எந்தவிதக் குறைவுமில்லாமல் நம் மனதில் நிறைந்தவர் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. பொதுவாக மக்களை நல்வழிப்படுத்தும் பாடல்களை எழுதுவதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் வாலியாரும் சற்று அதிகமாகவே பிரபலமடைந்திருந்தார்கள். அதிலும் வாலியார் மக்கள் நலப் பாடல்களை எழுதிய விதமும், அதைத் திரைப்படம் மூலமாக சொல்லும் விதமும் அந்தத் தமிழானது தமிழர்கள் நெஞ்சத்தில் எந்நாளும் பதியும் விதமும் எத்துணை சிறப்பானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. தமிழை வாலி அவர்கள் கையாண்ட விதமும், அதே விகிதத்தில் செம்மொழியான தமிழ் அவருக்கு வளைந்து கொடுத்துச் சென்றதும் மிகவும் சுவையானவைதான்.

கவிஞர் வாலியின் ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களில் அதுவும் மக்கள் நலனுக்காக எழுதிய பாடல்களில் அவருக்கென தனியிடத்தைக் கொடுத்த பாடல்கள் பல உண்டு. எண்ணிலடாங்கதவை. அவைகளில் ஒன்றுதான் ‘ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்’ பாடல். இதைப் பற்றி இந்த வார வல்லமை இதழில் கவிஞர் காவிரி மைந்தன் மிக அழகாக வர்ணித்திருக்கிறார். அதைச் சற்று பார்ப்போம். https://www.vallamai.com/?p=40993

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..

வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த
நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்..
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

photoகோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!

கவிஞர் வாலி அவர்களின் ஒரு அருமையான பாடலை முன் வைத்து அழகான முன்மாதிரியையும் தந்து வாழ்க்கைப் பாடமாக எடுத்தெழுதி மகிழ்வித்த கவிஞர் காவிரி மைந்தன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: தஞ்சை திரு வெ. கோபாலன் அவர்களின் ‘நாற்பது வருஷ வாழ்வும் தாழ்வும்’ என்பதிலிருந்து

இந்த பிரம்மச்சரியத்துக்குச் சில அரிய சக்தி உண்டு என்கின்றனர் பெரியோர். பன்னிரெண்டு வருடங்கள் கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் இடும் சாபம் பலிக்கும் என்பர். அதைப் போல மற்றுமொரு பன்னிரெண்டாண்டுகள் கழிந்தபின் அவன் வாழ்த்தினால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெற முடியுமாம். முப்பத்தியாறு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவன் வழங்கும் ஆசி பிறரது பாவங்களையும் நீக்கி அவனுக்கு நல்வாழ்வு தரமுடியும் என்பது பெரியோர் வாக்கு.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. திரைப்படப் பாடல்களையும் அவற்றை எழுதிய கவிஞர்களைப் பற்றியும் திகட்டத் திகட்ட எழுதி வழங்கி வரும் இந்தவார வல்லமையாளர் கவிஞர் காவிரி மைந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல சுவையான பாடல்களையும், அவை எழுதப்பட்ட்ட பின்னணி குறித்த தகவல்களையும் சுவைக்கும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மற்றும் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை ஒரு உண்மைக் கதையின் மூலம் எளிமையாக விளக்கி கடைசிப் பேராவில் இடம் பெற்றுள்ள தஞ்சை திரு. வெ.கோபாலன் ஐயா அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  2. இவ்வார வல்லமை விருதுபெற்ற நண்பர் கவிஞர் காவிரிமைந்தனுக்கு வாழ்த்துக்கள்.

    திரையிசைக் கவிஞர்கள் எழுதிய பல கருத்துள்ள பாடல்களை, நம் கண்முன்னே ஓவியமாகக் கொண்டுவருவதில் கைதேர்ந்தவர் கவிஞர் காவிரிமைந்தன் அவர்கள். ஒரு கவிஞர் ஒரு பாடலை எழுதும்போது அவருடைய மனதில் எவ்வித சிந்தனையோடு எழுதியிருப்பார் என்கிற விளக்கத்தை படிக்கும்போது, பாடல் எழுதிய கவிஞர் மற்றும் விளக்கமளிக்கும் காவிரிமைந்தன் ஆகிய இருவரது கற்பனைத்திறனையும் ஒருங்கே உணரமுடியும்.

    “பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள்” என்கிற தலைப்பில் ஒரு திரைப்படப்பாடல் எவ்வாறு உருவானது என்கிற விரிவான விவரிப்பைப் படிக்கும்போது, சில சமயம், எந்தக் கவிஞர் எழுதினாரோ அவரே விளக்கம் தருவதுபோல் எழுதுவது இவரது திறமைக்கு எடுத்துக்காட்டு.

    வல்லமை இதழோடு அறிமுகம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாக வல்லமை வார விருதைப் பெறுவதே இதற்குச் சான்றாகும். மீண்டும் வாழ்த்துக்கள் நண்பரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *