பாவம் ஏன் பரிதாபப்படவில்லை?

​தேவா

 
பெண்ணே!!

 

உன் உடம்பு மட்டுமே

உல்லாச ஊஞ்சலாகிவிட்டது,

ஜாதி பேதமின்றி,

வயது வரம்பின்றி, அனைவரும் ஆடிமகிழ்கின்றனர்,

 

உன் ஆபரணத்தைத்தான் அபகரிக்கிறார்கள் என்றால்,

உன் அழகு பெட்டகத்தில், கற்பு கூட சூறையாடப்படுகிறது,

அமிலத்தில் அபிஷேகம் உனக்கு மட்டுமே செய்யப்படுகிறது,

வெறி நாய்களின்  இச்சைக்கு உன் சதைகள் சிதைக்கப்படுகிறது,

 

பாவம் கூட உனக்காக பரிதாபப்படவில்லையே!

 

பிரம்மன் உன் படைப்பில் வஞ்சனை செய்து விட்டானடி,

அழகைத் தந்தவன் ஆபத்தையும் தந்துவிட்டான்,

என் செய்வது,

 

ஆண்களின் பசிக்கு பெண்கள் இ​ரையாவது,

என்றோ ஆரம்பமாகிவிட்டது,

அடுத்தவன் பெஞ்சாதியை,

ஆண் ஜாதிதானே துகில் உரித்தது,

அன்று கண்ணன் சேலை தந்தான்,

இன்று உன் சடலத்திற்கு மட்டுமே போர்த்தப்படுகிறது,

 

ஆனாலும் ஆச்சரியம்!

எத்தனை நடந்தாலும் உன் பொறுமையின் பெருமைதான்

ஆச்சரியம், அதிசயம், நீ மட்டுமே அற்புதம்,

மற்றவை அப்புறம்,

 

போதுமம்மா போதும்,

பட்டது போதும், உன்னை தொட்டது போதும்,

நீ ​கெட்டது போதும்,

 

கவலைப்படாதே!

இனியொரு உலகு படைப்போம்,

உனக்கொரு விதி செய்வோம்…

அங்கு உன் சுதந்திரக்கொடியை மட்டுமே பறக்கவிடுவோம்…

 

1 thought on “பாவம் ஏன் பரிதாபப்படவில்லை?

 1. அருமையான கவிதை. நண்பருக்குப் பாராட்டுகள். 
  பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்று 
  நாம் எப்பொழுது கொண்டாடி மகிழப் போகிறோம்?
  சிறக்கட்டும் தங்கள் கவிதைப்பணி.
  அன்பன்
  ஜெயராஜ் டேனியல்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க