பெற்றோருக்கு மரியாதை
பர்வத வர்தினி
அந்த நாள் அவளுக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது.
சங்கீதாவின் தந்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் மனத்தில் சந்தேகம் எனும் பேய் புகுந்துவிட்டிருந்தது. ஒருவேளை நம் மகளே நம்மிடம் பொய் சொல்கிறாளோ? இத்தனை நாளும் சுதந்திரம் கொடுத்து வளர்த்ததே நம் தவறுதானோ! தன் உறவினர்கள், நண்பர்களையெல்லாம் விட மகளுக்கு அதிகமாகவே சலுகைகள் வழங்கியவர். சிறு வயதிலிருந்தே மிகுந்த அக்கறையுடன் அவளுக்கு அனைத்தையும் கற்றுத் தந்தவர். ஒழுக்கமுள்ள பெண்ணாக வளர்த்திருக்கிறோம் என்று தனக்குத்தானே இறுமாந்திருந்தவர். இன்றோ அவர் மனம் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தது. கோ எட் பள்ளியில் தன் மகளை படிக்க வைத்திருந்தார். அப்போதெல்லாம் எந்த தொந்தரவும் அவருக்கில்லை. சந்தேகம் தோன்றியதில்லை. கம்ப்யூட்டர் கிளாசும் ஒரு வருடம் சென்று வந்தாளே, அப்போதும் ஏதும் தோன்றியதில்லை. எத்தனையோ நண்பர்கள் அவளுக்கு. ஆனால் அனைவரைப் பற்றியும் வீட்டில் சொல்லியிருக்கிறாள். தினம் தினம் எங்குசெல்கிறாள் என்ன செய்கிறாள் என்று மறைத்ததேயில்லை. தன் மகளைப் பற்றி எத்தனை கர்வம் அவருக்கு! படிப்பிலும் சுட்டி, ஒழுக்கத்திலும் கெட்டி! இப்படி நினைத்திருந்த அவர் மனத்தில் ஒரு மாயத்திரை விழுந்திருந்தது. ஒருவேளை நமக்குப் போக்குக்காட்டி கொண்டிருக்கிறாளா என்ன?!
சங்கீதாவின் ஆண் நண்பர்களை கூட வீட்டிற்கு அழைத்திருந்தாளே! அப்போதுகூட நாம் ஏதும் தடை சொல்லவில்லையே! எல்லாரிடமும் சகஜமாக இருந்ததாகத் தான் தோன்றியது. ஆனால் இப்போதெல்லாம் தொலைபேசியில் உரையாடுவது அதிகரித்திருக்கிறது. அதுவும் நானோ, அவளது அம்மாவோ அந்த அறையில் இருந்தால் குரல் மிகவும் குறைவாக ரகசியம் பேசுவது போல் பேசுகிறாளே! யாரிடம் அப்படி பேசுகிறாள்? கேட்டால் தன் தோழிகளில் யார் பெயரையாவது குறிப்பிடுகிறாள். தோழியுடன்பேசுவதற்கு குரல் சன்னமாக வேண்டிய அவசியம் என்ன?
தற்சமயம் அவள் படித்த கம்ப்யூட்டர் சென்டரில் மாலை நேரத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கிறாள். இவளது வேலை என்னமோ 4 மணி முதல் 8 மணி வரைதான். அதன் பின் கம்ப்யூட்டர் சென்டரை மூடி விடுவார்கள். இங்கிருந்து 3 கிமீ தொலைவிலிருக்கும் இடத்திற்கு செல்வதற்கும் திரும்ப வருவதற்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும்? 4 மணி வேலைக்குச் செல்ல 2.30 மணிக்கே கிளம்பி விடுகிறாள். திரும்பவும் இரவில் வீடு திரும்ப தினமும் 10 மணி ஆகிறது. என்ன தான் வேலையிருந்தாலும் 2 மணி நேரம் தாமதமாக வர வேண்டிய அவசியம் தான் என்ன?
அப்படியும் மனம் பொறுக்காமல் ஒருநாள் கேட்டபோது இப்போ எக்ஸாம் வரப்போகிறது அப்பா; அதற்கான ஏற்பாடுகள் செய்வதில் தாமதமாகிறது; இன்னும் நிறைய வேலை பாக்கியிருக்கிறது என்கிறாள்.
‘இல்லை, எனக்கு நம்பிக்கையில்லை. அவளுடன் வேலை பார்க்கும் அந்தலெனின் மீது தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.’ அவரது மனம் மீண்டும் அவரது சந்தேகத்தை கிளறியது.
லெனின் பற்றி சங்கீதா ஏற்கனவே சொல்லியிருக்கிறாள். தன்னுடைய நண்பனாக வீட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறாள்.
‘அப்படி ஏதும் இருந்தால் நம்மிடம் தைரியமாக நண்பன் என்று அறிமுகம் செய்திருப்பாளா?’ மனம் குழம்பியது.
‘இதுவும் இந்த பெண் பிள்ளைகளின் வித்தைதான்’ மனத்தின் மூலையிலிருந்து குரல் எழும்பியது. ‘ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டால் அவர்களைப் பற்றி நமக்கு தெரியப்படுத்திவிட்டால், பிற்பாடு மிக எளிதாக நம் சம்மதம் வாங்கி விடலாம் என்று நினைக்கிறாளோ?’
‘அப்படியொன்றும் இருக்காது! அவள் என் மகள் இல்லையா? அவளை நான் சந்தேகிக்கலாமா?’ மனத்திற்குள்ளேயே பெரிய போராட்டம் எழுந்தது.
ஆனால் இத்தனை நாளும் இந்த விஷயங்களெல்லாம் அவர் மனத்தில் சந்தேகத்தை விதைக்கவில்லை. ஆனால் இன்று வந்த போன்கால்… அது அல்லவா மனத்தை இந்தப் பாடுபடுத்துகிறது!
சங்கீதாவின் தந்தை கமலக்கண்ணன் சொந்தமாக ஒரு சிறிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருந்தார். சிறிய பெட்டிக்கடையாக தொடங்கி வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி தற்போதுள்ள நிலைக்கு உயர்ந்திருந்தார். அவருக்கு பல்வேறு இடங்களில் வணிகத் தொடர்புகள் இருந்தன. அவர்களில் ஒருவரான கோபாலன்தான் சங்கீதாவின் மீது சந்தேகம் வரக் காரணம்.
காலையில் போன் செய்த கோபாலன் கொஞ்சம் தயக்கத்துடன் “கண்ணன்! நீங்க பல காலமா என்னோட நண்பர். வியாபாரத்தையும் தாண்டி நாம நல்ல நண்பர்களா இருக்கோங்கற எண்ணத்துலயும் உங்க மேல உள்ள அக்கறையிலயும் சொல்றேன். நீங்க வியாபாரத்துல காட்டுற அக்கறையில கொஞ்சம் குடும்பத்துலயும் காட்டணும்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“என்ன விஷயம் கோபால்! ஒரு பெரிய பீடிகையே போடறீங்க? என்ன விஷயம்?” என்று சிரித்துக்கொண்டே கேட்ட கமலக்கண்ணனுக்கு அதற்குப்பின் பேசிய கோபாலனின் ஒவ்வொரு வார்த்தையும் அதிர்ச்சியளித்தன.
“நேத்து ராத்திரி ஒரு 9 மணி வாக்கில உங்க பொண்ணு சங்கீதாவைப் பார்த்தேன்; அதுவும் ஒரு பையனோட தெருவில நின்னு பேசிக்கிட்டிருந்தா. சரி ஏதோ தெரிஞ்சவங்க போலிருக்குன்னு என் வேலையைப் பார்க்க போயிட்டேன். என் வேலை முடிஞ்சி ஒரு 9.45 மணிக்கு திரும்பி போறேன், அப்போவும் அதே எடத்துல நின்னு அதே பையனோட பேசிக்கிட்டிருந்தா. ராத்திரி நேரத்துல தெருவுல நின்னு ஒரு பையனோட பேசிக்கிட்டிருந்தா நல்லாவா இருக்கு? எனக்கென்னமோ அவங்க ரெண்டு பேரு மேலயும் சந்தேகமா இருந்துது! இந்தக் காலத்துப் பசங்கதான் தடுக்கி விழுந்தா காதல், கத்திரிக்காய்னு நம்ம உசிரை வாங்குறாங்களே! எதுக்கும் உங்க காதுலபோட்டு வெச்சா முன்னெச்சரிக்கையா நடந்துக்குவீங்கன்னு தான் சொல்லிவெச்சேன். பார்த்துக்கோங்க… பொண்ண வளத்தியோ கண்ண வளத்தியோன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
அவருடன் பேசியதிலிருந்து கமலக்கண்ணனுக்கு வேலை சரியாக ஓடவில்லை. மனப் போராட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. முதலில் இதைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. கால்சென்டரில் வேலை செய்து கொண்டிருந்த மகன் வெற்றிச்செல்வனுக்கு போன் செய்து விஷயத்தைத் தெரிவித்தார்.
வெற்றி உடனே, “கவலைப்படாதீங்கப்பா! என் நண்பன் மூலமாக நான் விசாரிக்கறேன்” என்று கூறினான்.
என்னதான் விசாரிப்பதாக மகன் கூறியிருந்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. சீக்கிரமே தன் வேலைகளை முடித்துவிட்டு கடையில் இருந்த உதவியாளனை கடையை பூட்டி விட்டு செல்லும்படி சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்தார். மணி 9.30 ஆகிவிட்டிருந்தது. இன்னும் சங்கீதா வீட்டிற்கு வரவில்லை. ஆனால் அடுத்த10 நிமிடங்களில் சங்கீதாவும் வீட்டினுள் நுழைந்தாள். உள்ளே நுழையும் போதே அப்பாவைப் பார்த்தவளுக்கு அவர் ஏதோ கோபமாக இருக்கிறார் என்று தோன்றியது.
அதற்கேற்றார் போல் அவள் உள்ளே நுழைந்த மறுகணமே கமலக்கண்ணன்கோபமாக “மணி என்ன ஆகுது தெரியுமா? இது தான் வீட்டுக்கு வர்ற நேரமா? எங்க போய் ஊர் சுத்திட்டு வர்றே?” என்று சரமாரியாகக் கேள்விகளை கேட்டார்.
சப்தம் கேட்டு உள்ளிருந்து சங்கீதாவின் தாய் மணிமேகலையும் வெளியே வந்தாள். “ஏங்க பொண்ணு உள்ளே வந்ததும் வராததுமா கத்தறீங்க? என்னாச்சு?” என்றாள்.
அத்தனைக் கோபமும் மனைவி மீது திரும்ப, அவர் எரிமலையானார். “எல்லாம் நீ புள்ளைங்கள வளக்கற லட்சணம்தான். அவ எங்கே போறா, என்ன பண்றா, எப்போ வீட்டுக்கு வர்றா எதுவுமே நீ கவனிக்கறதில்லை. அதான் நான் கேக்க வேண்டியிருக்கு. சொல்லுடி, உன்னைத் தான் கேட்டேன்… எங்கே போயிட்டு வர்றே?” என்றார்.
சங்கீதா தன் தந்தையை இத்தனைக் கோபத்தில் கண்டதில்லை. “எப்போதும்போல வேலைக்குத்தான்பா போயிட்டு வரேன். வேறெங்கியும் போகலை” என்றாள்.
“8 மணிக்கு முடியற வேலைக்கு நீ தெனம் வீட்டுக்கு 10 மணிக்கு வர்றே. என்ன நினைச்சிருக்கே மனசுல?” என்றார் பதிலுக்கு.
“இல்லப்பா வேலை முடிய 9.15 ஆச்சு. எல்லாம் ஏறக்கட்டிட்டு சென்டரை பூட்டிட்டு லெனின் கூட பேசிக்கிட்டே வந்தேன். அவ்ளோ தான்பா… நீங்க ஏன் இன்னிக்கு இவ்வளோ கோவமா இருக்கீங்க?”
“நினைச்சேன், அந்த லெனின் பய கூட பேசி கும்மாளம் அடிச்சிட்டுதான் லேட்டா வர்றேன்னு… ஊர்ல போறவன் வர்றவன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான், பொண்ணை ஒழுங்கா வளக்கத் தெரியலைன்னு… தெருவில நின்னு நீ மணிக்கணக்கா பேசறது ஊரேப் பாக்குது. அப்டியென்னதான் பேசுவீங்க ராத்திரி நேரத்துல? அதுவும் தெருவுல நின்னுக்கிட்டு?” என்று உச்சஸ்தாயியில் கத்தினார் அவர்.
“அதெல்லாம் இல்லப்பா! யாரோ தப்பா சொல்லியிருக்காங்க. ஏதோ ஒரு 10 நிமிஷம் பேசியிருப்போம். அவ்ளோதான்” என்றாள் சங்கீதா.
கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர் “என்ன நினைச்சிருக்கே? அப்பனை ஏமாத்திபுடலாம்னா? அவனோட காதல் கண்றாவின்னு ஏதாவது பண்ணித்தொலைக்கறியா? அப்டி ஏதுமிருந்தா இப்போவே இந்த நிமிஷமே அந்த எண்ணத்தை மறந்துடு… புரிஞ்சுதா? இனி ஒரு தரம் உன்னை அங்கப் பார்த்தேன் இங்கப் பார்த்தேன்னு கேள்விப்பட்டேன்; நடக்கறதே வேற! ஜாக்கிரதை!!” என்று உறுமிவிட்டு உள்ளே சென்றார்.
சங்கீதா மிகவும் உடைந்து போனாள். கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்தது. வேண்டா வெறுப்புடன் உணவருந்திவிட்டு சென்று படுத்தாள்.
‘ஏன் நம் அப்பா நம்மை நம்பவில்லை. நான் ஏதும் பொய் சொல்லவில்லையே. லெனின் மிகவும் நல்ல நண்பன் என்பதில் சந்தேகமில்லை. அவனுடன் பேசுவதில் பொழுது போவதும் தெரியாது. கிண்டல், கேலி எல்லாம் செய்வான். இருப்பினும் கேலி என்கிற பெயரில் மனதைப் புண்படுத்தமாட்டான். ஆனால் தானோ, அவனோ ஒருமுறை கூட நட்பைத் தவிர வேறெந்த எண்ணத்துடனும் பழகியதில்லை என்பதை எப்படி அப்பாவிற்கு புரிய வைப்பது?’ குழப்பமான மனநிலையுடனும் அழுத கண்களுடனும் சங்கீதா தூங்கிப் போனாள்.
வீட்டில் நடந்த எதுவும் அறியாத அவளது சகோதரன் வெற்றிச்செல்வன் அலுவலகத்திலிருந்து தன் நண்பன் விக்னேஷைத் தொலைபேசியில் தொடர்புகொண்டான். அவனிடம் சுருக்கமாக நடந்ததைக் கூறினான்.
“டேய் நீதான் எனக்கு உதவி பண்ணனும். உனக்கு சங்கீதாவோட ஃப்ரெண்ட் லதாவை தெரியும்ல. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப கிளோஸ். சங்கீதா தன்னோட எல்லா பெர்சனல் விஷயமும் கண்டிப்பா லதா கிட்ட சொல்லியிருப்பா. லதா உனக்கும் ஃப்ரெண்ட்ங்கறதால அவ மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட சொல்லு. உண்மையிலேயே எதுவும் விஷயம் இல்லாம இருந்து நம்ம அவசரப்பட்டோம்னு இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் சொல்றேன்” என்றான்.
“கவலைப்படாதேடா! நான் லதாகிட்ட பேசிட்டு உன்னை நாளைக்குக் கூப்படறேன்” என்றான் விக்னேஷ்.
மறுநாள் காலை இன்னமும் தணியாத கோபத்துடன் சங்கீதாவிடம் முகம்கொடுத்து பேசாமல் வேலைக்குக் கிளம்பிச் சென்றார் கமலக்கண்ணன். கவலை தோய்ந்த முகத்துடனேயே தன் வேலைகளைச் செய்தாள் சங்கீதா.
மதியம் வீட்டிலிருந்த தொலைபேசி அலறியது. சங்கீதா எடுத்துப்பேசினாள். மறுமுனையில் லதா.
“சங்கீ, எப்படிடி இருக்கே? உன்கிட்டே பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு கூப்டேன்” என்றாள்.
சங்கீதாவிற்கு சந்தோஷமானது. என்ன இருந்தாலும் எந்த பிரச்சினையிருந்தாலும், நண்பர்களுடன் பேசினாலே ஒரு ஆறுதல் தான் என்று எண்ணிக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சங்கீதாவிற்கு மனம் லேசானது போலிருந்தது. லதாவிடம் நேற்று நடந்ததைச் சொல்லலாமா என்று நினைத்தாள் சங்கீதா. பிறகு அடுத்த நிமிடமே ‘அவளே ரொம்ப நாள் கழிச்சு பேசறா… எதுக்கு அவளையும் சங்கடப்படுத்தணும். பிறகு சொல்லிக்கலாம்’ என்று மனம்சொன்னது.
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே லதா கேட்டாள், “ஆமாம்… உன் வேலை எப்படி போயிட்டிருக்கு? வேற வேலை எதுவும் தேடறியா?”
“வேலை நல்லாப் போகுதுடி. ஆனா இது பார்ட் டைம் தானே. நானும் வேற வேலைக்கு முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன். கிடைச்சா மாறிடுவேன். இங்கே இப்போ எக்ஸாம், அது இதுன்னு லேட்டாகுது. ரொம்ப டயர்டாகிடுது” என்றாள்.
“ம்ம்… ஆனா, எதுவாயிருந்தாலும் நீ எதுக்கும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுடி. நம்ம நினைக்கற மாதிரி எல்லாரும் நம்மைப் பத்தி நினைக்கமாட்டாங்க. அநாவசிய பேச்சு வார்த்தைக்கெல்லாம் நாம இடம் வெச்சுக்கக்கூடாது. நம்மசெய்யாத தப்புக்கு பழி சொல்ல ஊரே தயாரா இருக்கும். அதனாலதான் சொல்றேன். நீ அதிக டைம் எடுத்து அங்கே வேலை செஞ்சு உனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை” என்றாள் லதா.
சங்கீதாவிற்கு குழப்பம் அதிகமானது. ‘என்ன சொல்ல வருகிறாள்? நேற்று வீட்டில் நடந்ததற்கும் இவள் இன்று பேசுவதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதுபோலிருக்கிறதே. ஏதோ பட்டும் படாமலும் சொல்ல முயற்சி செய்கிறாள்போல தோன்றுகிறது.
சங்கீதா சட்டென சுதாரித்துக் கொண்டு “என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு சம்பந்தமில்லாம் அட்வைஸ் பண்றே… என்ன விஷயம்?” என்றுகேட்டாள்.
“இல்ல இல்ல… அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லை. ஜஸ்ட் மனசுல தோணினதை சொன்னேன்” என்று மழுப்பினாள் லதா.
சங்கீதா விடுவதாக இல்லை. ”இல்லை, நான் நம்ப மாட்டேன். என்ன விஷயமோ அதைத் தெளிவா சொல்லு. இல்லைன்னா இதுக்கப்பறம் உன்கிட்ட பேசவே மாட்டேன்” என்றாள்.
லதா சற்று அமைதியானாள். பிறகு கூறினாள் “தப்பா எடுத்துக்காதேடி! இன்னிக்கு விக்னேஷ் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. உன்னைப் பத்தி ரொம்ப விசாரிச்சாரு. அப்படியே உன் ஃப்ரெண்ட் லெனினும் நீயும்…” என்று இழுத்தாள்.
“ம்ம்…சொல்லு” என்றாள் சங்கீதா.
“இல்லை… நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களான்னு என்கிட்டே கேட்டாரு. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு நான் தெளிவா சொல்லிட்டேன். பட், ஏன் இதெல்லாம் கேக்கறீங்கன்னு அவர்கிட்டே விசாரிச்சேன். அப்போ தான் தெரிஞ்சுது உங்க அண்ணன் தான் விசாரிக்க சொன்னாராம். நீ தினமும் லேட்டா வர்றியாம். உன்னை லெனின் கூட யாரோ பார்த்தாங்களாம். உன் வீட்ல உன்னை ஏதோ சந்தேகப்படறாங்க போலிருக்கு. விக்னேஷ் வந்து போனதிலிருந்து எனக்கு மனசு கேக்கலை. உன்னை முன்னெச்சரிக்கைப் பண்ணலாம்னுதான் போன் பண்ணேன். நீ இதுல இன்வால்வ் ஆகலைன்னு எனக்கு நிச்சயமா தெரியும். ஆனா தேவையில்லாத பழி உன் மேல விழக் கூடாதேன்னுதான் சொன்னேன்” என்று முடித்தாள் லதா.
சங்கீதாவிற்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. ‘என் மீது சந்தேகம் வந்ததே எனக்கு கஷ்டமாயிருந்தது. போதாதென்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் என்னைப் பற்றி விசாரிக்கிறார்களே’ என்று அவளுக்கு வேதனையாக இருந்தது.
“சரி லதா! நான் பாத்துக்கறேன்… பை” என்று கூறி போனை வைத்தாள் சங்கீதா.
அன்று மாலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றாள். வேலையில் மனம் சரியாக ஒப்பவில்லை. தலைவலி என்று கூறிவிட்டு 7 மணிக்கெல்லாம் கிளம்பினாள். அங்கிருந்து பக்கத்திலிருந்த கோவிலுக்குச் சென்று மனம் அமைதியடைய அமர்ந்திருந்தாள். பிறகு கிளம்பி நேரே வீடு வந்து சேர்ந்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு சீக்கிரமே உறங்கச் சென்றாள். மனம் மிகவும்சோர்வாக இருந்தது. நாளையே அப்பாவிடம் தெளிவாகப் பேசி விடவேண்டும். வீணான சந்தேகம் வாழ்க்கையை பெரும் பிரச்சினையாக்கிவிடும். அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.
யோசித்துக் கொண்டே எப்போது உறங்கினாளோ தெரியாது. சில தடமுட சத்தங்களினால் பாதியில் விழித்துக் கொண்டாள். சமையலறையில் சாப்பிட்டுக் கொண்டே அவளது அப்பா, அம்மாவிடம் பேசியது காதில் விழுந்தது.
“அவனைப் பார்த்துட்டுதான் வரேன் இப்போ”
“யாரைங்க?”
“அதான் அந்த லெனின்”
“ஏங்க, குடிச்சிருக்கீங்க போலிருக்கு. அப்படியேவா அங்கேப் போனீங்க? ஏங்க இப்டி பண்றீங்க?”
“அடிப்போடி! அவ என் பொண்ணுடீ. அவளை எப்டியெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்தோம். அவ நல்லாயிருக்கணும்னு நினைக்கறது தப்பா? அந்தப் பையன்கிட்டயே போய் நேருக்கு நேரா கேட்டுட்டேன். ஆனா அவனும் அப்படி எதுவும் இல்லைன்னு சொன்னான். நல்லா ஏறுஏறுன்னு ஏறிட்டேன்… கடைசியா அவன் ஒரு வாக்குக் கொடுத்தான். அதுக்கப்பறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்பி வந்தேன்”
“என்ன வாக்கு?”
“’கவலைப்படாதீங்க சார்! எனக்கு அப்படியொரு எண்ணம் இதுவரையிலும் இல்லை. ஒரு வேளை உங்கப் பொண்ணே வந்து என்னை விரும்பறதாசொன்னாலும் நான் அதை ஏத்துக்க மாட்டேன். இது நான் கும்பிடற தெய்வத்துமேல சத்தியம். சரியா? நீங்க என்னைப் பூரணமா நம்பலாம்’ அப்டின்னு சொன்னான். அவன் வார்த்தையை நம்பி நான் திரும்பி வந்துட்டேன்”
“ஏங்க உங்க புத்தி இப்டி போகுது? யார் என்ன சொன்னா என்ன? நம்ம பொண்ணை நாம நம்ப வேண்டாமா? எதுவாயிருந்தாலும் கண்டிப்பா நம்மகிட்ட சொல்லிடுவாங்க. அவளைப் போய் தேவையில்லாம கஷ்டப்படுத்திட்டீங்களே?”
“ஆமா மணி! உண்மைதான். இது வரை அவளை நான் ஒண்ணுமேசொன்னதில்ல. ஆனா, நேத்து அவளை கன்னாபின்னான்னு பேசிட்டேன். எனக்கே கஷ்டமா இருக்கு. அவளுக்கு என் பேர்ல கோவம்கூட இருக்கலாம். ஆனா ஒரு பொண்ணைப் பெத்தவனுக்குத்தான் அந்த பயம் புரியும். நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணுங்கறதைத் தவிர எந்தப் பெத்தவங்களும் வேறெதுவும் நினைக்கமாட்டாங்க. இன்னிக்கு அவளுக்கு என் பேர்ல கோவம் இருக்கலாம் ஆனா பின்னாடி நாம ஏன் இப்படி நடந்தோம்னு அவளுக்கே புரியும்” என்று வேதனையோடு கூறினார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சங்கீதாவிற்கு மனம் விம்மியது. ஓடி வந்து தன் தந்தையைக் கட்டிக்கொண்டாள். அவள் தூங்கிக்கொண்டிருந்ததாக நினைத்துப் பேசியவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சுதாரித்துக் கொண்டார். “நீ இன்னும் தூங்கலியாம்மா?” என்றார் ஆதரவாக.
“அப்பா! எது வேணா இருக்கட்டும். ஆனா என் மேல நம்பிக்கையில்லைன்னு மட்டும் சொல்லாதீங்கப்பா. எனக்கு அது ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்மேல சந்தேகப்படாதீங்கப்பா” என்று அழுதாள்.
“சாரிடா! நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்று சமாதானம் செய்தார்.
இவை நடந்து 2 வருடங்கள் இருக்கும். அந்த சம்பவத்திற்கு பிறகு சங்கீதா வேறு வேலைக்குச் சென்றபோதும் லெனினுடன் கூடிய நட்பு தொடர்ந்தது.
ஆனால் சில தினங்களாக அவளது மனதிற்குள் ஒரு போராட்டம்.லெனினுடனான நட்பு அந்த எல்லையைத் தாண்டி காதலாக மாறிவிட்டதோ என்கிற எண்ணம். இப்போதெல்லாம் லெனினுடன் பேசாமல் இருக்க முடிவதில்லை. எந்நேரமும் அவன் நினைப்பாகவே இருந்தது. அவனுடன் சேர்ந்து நேரம் செலவிடுவதில் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஒரு வேளை இப்போது அப்பாவிடம் பேசினால் தன் காதலுக்கு சம்மதிப்பாரா? ஆனால் முதலில் லெனினிடம் பேச வேண்டும். அவனுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்றே தெரியவில்லையே.
இந்த மனம்தான் எத்தனை விந்தையானது. ஒரு நாள் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறது. மறுநாளே சோகத்தின் ஆழத்திற்கு சென்று விடுகிறது. மனத்தை குரங்கு என்று சரியாகத்தான் வர்ணித்திருக்கிறார்கள்.
‘இப்போது என்ன செய்ய? குழப்பமோ குழப்பம். நம் மனதிற்குள் குழப்பத்தைவைத்துக் கொண்டு லெனினிடம் என்ன பேச? நான் விரும்புவது சரி தானா என்று எனக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லையே. ஒருவேளை இப்படியொரு நாள் வந்துவிடும் என்று பயந்துதான் அன்றைக்கு அப்பா அப்படி நடந்துகொண்டாரோ? என்னமோ இத்தனை நடந்தும் நான் காதல் வழியில் விழலாமா?’ மனம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டது. ‘இந்த நிலையிலேயே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.’
ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் அலைபேசியை எடுத்தாள். லெனினுக்குபோன் செய்தாள். “லெனின் எனக்கு உங்ககூட கொஞ்சம் பேசணும். மீட் பண்ணலாமா?” என்றாள்.
“ஓ பேசலாமே! எங்கே வரணும்?” என்று கேட்டான் லெனின்.
“சாயந்திரம் 6 மணிக்கு மெரீனா பீச்சுக்கு வர முடியுமா?”
“சரி வரேன்”
கடற்கரைக்கு வருவதே ஒரு சுகம் தான். பகலில் எத்தனைவெயில் இருந்தாலும் மாலையில் கடற்கரையின் குளிர்ந்த காற்று அத்தனையையும் மறக்கடித்துவிடும். ஓயாமல் சப்தமிட்டுக் கொண்டு கரையில் விழும் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. சிறியதும் பெரியதுமாய் பாயும் அலையில் காலை நனைத்துக்கொண்டே நடப்பதும் ஒரு தனி சுகம்தான்.
சங்கீதாவின்மனதிலும் இப்போது அலையடித்துக்கொண்டிருந்தது
லெனின் வந்து அமர்ந்தான். ஏதோ சிந்தனையில் தூரத் தெரியும் கப்பலைநோக்கியபடியிருந்தாள் சங்கீதா.
“என்ன? ஏதோ பலமான யோசனை போல?” என்று அவள் அமைதியைக் கலைத்தான் லெனின்.
லெனின் குரலைக் கேட்டு திரும்பியவள் “ஓ! வந்துட்டீங்களா? சாரி. நான் கவனிக்கலை” என்றாள்.
“ம்ம்… ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி தெரியுது? குரல் ஒண்ணும் சரியா இல்லையே?” என்றான்.
“ஆமாம். ஒரு குழப்பம்தான். அதுக்கு உங்ககிட்டதான் தீர்வு கிடைக்கும்னு நம்பி உங்களை வரச் சொன்னேன்” என்றாள்.
“அப்படியா! என்ன விஷயம்? முடிஞ்சவரை ஹெல்ப் பண்றேன்”
சங்கீதா சற்று நேரம் தயங்கினாள்.
பிறகு “நாம இத்தனை நாள் நண்பர்களா பழகியிருக்கோம். ஆனால் சில காலமா எனக்குள்ளே நம்முடைய நட்பைப் பத்தி ஒரு குழப்பம். ஒரு இனம் புரியாத உணர்வு. ஒருவேளை நான் உங்களை லவ் பண்றேனோன்னு தோணுது. நீங்களும் அதேபோல ஃபீல் பண்றீங்களான்னு எனக்குத் தெரியலை. நான் நினைக்கறது சரியா தப்பான்னும் புரியலை. அதான் உங்ககிட்டயே டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்தேன்” என்றாள் தெளிவாக.
லெனின் ஒரு விநாடி பிரமித்து நின்றான்.
சற்று சுதாரித்துக்கொண்டு “சங்கீதா! நீ நினைக்கறது சரியா தப்பான்னு என்னால சரியா சொல்ல முடியாது. ஃபீலிங்கறது ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விஷயம். ஆனா நானும் அதே போல நினைக்கறேனாங்கறதுக்குவேண்ணா பதில் சொல்ல முடியும். இதே வார்த்தையை ஒருவேளை நீ 2 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தா, நான் எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பேனோ தெரியாது. ஆனால் இன்னிக்கு என்னால அதை ஏத்துக்க முடியாது. நான் உங்கப்பாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன். உன்மேல நான் ஆசைப்பட்ட காலமும் உண்டு. ஆனால் இப்போ அதையெல்லாம் தாண்டி வந்துட்டேன். உங்கப்பா அன்னிக்கு என்கிட்ட வந்து பேசினப்போ அவருக்கு உன் மேல இருந்த அதீத அன்புதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. அதனாலதான் அவர்கிட்ட என்னிக்குமே நமக்குள்ள காதல்ங்கற உணர்வோ உறவோ இருக்காதுன்னு சத்தியம் பண்ணிக்கொடுத்தேன். என் வாக்கை நம்பித்தான் இன்னிக்கு வரைக்கும் உங்கப்பா நம்ம நட்புக்கு குறுக்கே வரலை. என்னிக்குமே நீ என் ஃப்ரெண்ட். அதுல சந்தேகம் இல்லை. உனக்கு எந்த நேரத்துலயும் உதவி செய்யத் தயாரா இருப்பேன். ஆனா நட்புக்கு அடையாளமா தானே தவிர, காதலுக்கு அடையாளமா இல்லை. நீ சில காலமா இருக்கற இந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கறதை விட நீ பிறந்ததிலேர்ந்து உன்னைப் பத்தியும் உன் வாழ்க்கை பத்தியும் கனவு காணற அவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடு. நிச்சயம் நமக்கு நல்லதைத் தான் அவங்க செய்வாங்க. மனசை கலங்க விடாம சந்தோஷமா இரு.”
அவனது தீர்க்கமான தெளிவான பேச்சு சங்கீதாவின் மனதில் பதிந்தது. முதலில் ஏமாற்றமாகத் தோன்றினாலும் அவன் கூறிய வார்த்தைகள் அனைத்தும் சரியென்று புத்தி அறிவுறுத்தியது.
“தேங்க்ஸ் லெனின். நீங்க சரியான முடிவு தான் சொல்லுவீங்கங்கற நம்பிக்கைல தான் என் குழப்பத்தின் ஆரம்பத்திலேயே உங்ககிட்ட வந்தேன். இனி என் மனசு அலைபாய விட மாட்டேன். தேங்க்ஸ் அகைன்!” என்று கூறி புன்னகைத்தாள் சங்கீதா.
படத்திற்கு நன்றி: http://reallyducksoup.blogspot.com/2011/04/sacred-child.html
Good one Parvadha….. enjoyed reading
Thank you Sharanya