ராமஸ்வாமி ஸம்பத்

பெருமையும் சக்தியும் பொருந்திய காயத்திரி மஹாமந்திரத்தைத் அளித்து ’விஸ்வாமித்திரர்’ – உலகுக்கே நண்பர் – எனப் பெயர் பெற்றதோடு வசிஷ்டர் வாயால் ’பிரம்மரிஷி’ எனவும் கெளரவிக்கப் பட்டவர் கெளசிக முனிவர். அந்த மாமுனிவர் ஒரு நாள் தன் ஆசிரமத்தில் மனக்கவலையோடு காணப்பெற்றார். சீடர்களுக்கு அவரது துயரம் புரியவில்லை. அவர் அருகில் சென்று கேட்கவும் துணிவு வரவில்லை. நல்லவேளையாக தேவரிஷியான நாரதர் அப்போது அங்கு வந்து சேர்ந்தார். சீடர்கள் அம்முனீந்திரரை வணங்கி வரவேற்று, ஆசானின் மனக்கவலைபற்றி கூறினர்.

அவர்கள் முறையீட்டினைக் கேட்ட நாரதர், “கவலை வேண்டாம். அதனைப் போக்கவே இங்கு வந்திருக்கிறேன்” என்று சொல்லி மாமுனிவரிடம் சென்றவரை கெளசிகர் அடிபணிந்து வரவேற்றார்.

“பிரம்மரிஷே! தாங்கள் ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்ட தேவரிஷியிடம், “முனீந்திரரே, என்னுடைய கோரிக்கைகள் எல்லாம் விருப்பப்படி நிறைவேறியிருந்தாலும் என் மனம் சதா அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ இனம்புரியாத ஒரு சிந்தனை என்னை வாட்டி வதைக்கிறது. தங்களால்தான் அதனைப் போக்க முடியும்” என்றார் விஸ்வாமித்திரர்.

“எண்ணிலா அருந்தவத்தோனான தாங்கள் ஒரு மனிதனால் சாதிக்க முடியாத பல காரியங்களைத் செய்துவிட்டு பெரும் பெயர் பெற்றுவிட்டீர்கள். ஆனாலும் தாங்கள் செய்த ஒரு பாபம் தங்களை வாட்டுகிறது” என்றார் நாரதர்.

“நான் பாபம் செய்தேனா? திரிகால ஞானியான தாங்கள்தான் இப்புதிரை விடுவிக்க வேண்டும்.”

“சற்று யோசியுங்கள். தாங்கள் ராஜா அரிச்சந்திரனையும் அவன் பட்டத்து ராணி சந்திரமதியையும் பிரித்து துன்பத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா? அந்த வினைதான் தங்களைச் சுடுகிறது.”

“அதனால் அரிச்சந்திரனுக்கு பரமசிவ தரிசனம் கிடைத்ததோடு சத்தியசந்தன் என்ற பெருமையும் சேர்ந்ததல்லவா? அது எப்படி பாபமாகும்?”

“கெளசிகரே! என்னதான் அது நல்லபடியாக முடிந்தாலும், தம்பதிகளைப் பிரிப்பது ஒரு தீவினையே.”

“முற்றிலும் உண்மைதான். நான் அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதை தாங்கள்தான் சொல்லவேண்டும்.”

“இக்ஷ்வாகு குலத்தின் உன்னத ராஜ தம்பதிகளைப் பிரித்த வினையைப் போக்க, தாங்கள் அதே வம்சத்தில் உதிக்கவிருக்கும் ஒரு ‘மரியாதா புருஷோத்தமனுக்கு’  அவனுக்கேற்ற வாழ்க்கைத் துணையை மணம் செய்துவிக்க வேண்டும். அப்போதுதான் உமது மனக்கவலை மாறும்.”

”தேவரிஷே! பிள்ளைப் பேரற்ற வயது முதிர்ந்த தசரத மகராஜனுடன் இக்‌ஷ்வாகு குலம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இனி என்னால் எப்படி தங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியும்?”

”கவலை வேண்டாம் கெளசிகரே! மஹாவிஷ்ணுவே அந்த தசரதனுக்குப் புத்திரனாக அவதரித்து ‘ராமன்’ என்ற பெயரோடு செயற்கரிய செய்கைகள் பல புரியப் போகிறார். அந்த ராமனுக்காக, மஹாலக்ஷ்மியும் ’ஸீதை’ என்ற பெயரோடு அயோனிஜையாக சம்பவிக்கப் போகிறார். அந்த ஆதி தம்பதிகளை நீங்கள் சேர்த்து வைத்து, பெரும்புகழ் அடையப் போகிறீர்கள். ஆகவே தாங்கள் ராமன் வரும் வரை காத்திருக்கவேண்டும்” என்று கூறி கெளசிகரிடம் நாரதர் விடை பெற்றுக் கொண்டார்.

விஸ்வாமித்திரரும் பொறுமையாக ராமன் வரும் வரை காத்திருந்து, உரிய காலத்தில் அயோத்தி அடைந்து தசரதனிடம் அரக்கர்கள் நிறைந்த தருவனத்தில் தான் நடத்தப் போகும் வேள்வியைக் காக்க ”நின் சிறுவர் நால்வரிலும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று இறைஞ்சினார். விருப்பம் இல்லாவிட்டாலும் குலகுரு வசிஷ்டரின் உந்துதலால், தசரதன் ராமனையும் அவனுடன் லக்ஷ்மணனையும் விஸ்வாமித்திரருடன் அனுப்பி வைத்தான்.

அரசிளங்குமரர்களுக்கு பல அஸ்திரங்களின் பிரயோகங்களைப் புகட்டிய மாமுனிவர், ராமனை தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய வைத்து, பின்னர் தனது வேள்விச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அவர்களிடம், “இனி நான் யாக தீட்சையில் ஈடுபடப்போவதால் நீங்கள் இருவரும் அரக்கர்களால் இவ்வேள்விக்குத் தீங்கு வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்றார். இளவரசர் இருவரும் தங்கள் வில்லேந்தும் வலிமையால் இடர்ப்பாடு செய்யும் அரக்கர்களை கொன்று குவித்தனர். பின் வந்த அரக்கர் தலைவனும் தாடகையின் புதல்வனுமான சுபாகுவை ராமன் வீழ்த்தி, அவ்வரக்கனின் உடன்பிறப்பான மாரீசனை ஒரு அம்பின்மூலம்  பல யோசனை தூரத்தில் உள்ள கடலில் விழுமாறு உய்த்தான்.

வேள்வி வெற்றிகரமாக முடிந்ததும், மிக்க மகிழ்ச்சியோடு விஸ்வாமித்திரர் ராமனையும் இளவல் லக்ஷ்மணனையும் ஆசீர்வதித்து, “இப்போது நாம் மிதிலை நகர் நோக்கிச் செல்லப் போகிறோம். விதேக நாட்டு அரசன் ஜனகன் நடத்தும் யாகத்தைக் காண்போம்” என்றார். ‘யாகத்தைக் காணவா இந்த ராஜகுமாரர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்கிறேன்? அங்கு ஒரு பரிசு ராமன் வரும் வரை காத்திருக்கிறதல்லவா? அதனை அவனிடம் சேர்ப்பிக்க வேண்டாமா….’ என அவர் மனம் சிந்தனை செய்தது.

மிதிலைநகர் செல்லும் வழியில் ஒரு பாழடைந்த ஆசிரமத்தைக் கண்டனர். அங்கு நிலவிய மயான அமைதியைக் கண்டு ராமன் “மாமுனிவரே! இந்த ஆசிரமம் ஏனிப்படி பொலிவிழந்து காணப்படுகிறது?” என்று கேட்டான்.

”கெளசலை மைந்தனே! இது கெளதம முனிவரின் குடில். இதன் பிண்ணனியில் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது” என்று சொல்லி அக்கதையை அவர்களுக்கு விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்….

….ஒரு சமயம் பிரமதேவர் படைத்த அகலிகை எனும் பேரழகியைக் கண்டு தேவேந்திரன் அவளை மணம்புரிய ஆசைப்பட்டு நான்முகனை அணுகினான். ஆனால் அவர், ‘முன்னமே அவள் கெளதம முனிவருக்கு மனைவி ஆகிவிட்டாள். ஆகவே அவ்வாசையை அழித்துவிடு’ என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார். அகலிகைமீது கொண்ட காமவேட்கையால், இந்திரன் நெறி தவறி பிறன்மனை விழைய முற்பட்டான். சேவல் உருக்கொண்டு கெளதம முனிவரின் ஆசிரமத்தை நள்ளிரவில் அடைந்து, கூவலுற்றான். அதனை வைகறை அறைகூவலாகக் கருதி அம்முனிவர் நதிக்கரைக்குச் சென்ற தருணத்தில் முனிவர் வடிவம் கொண்டு அகலிகையை ஏமாற்றி அவளுடன் தகாத உறவு கொண்டான். வந்தவன் இந்திரன் என்பது அகலிகைக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் வானோரின் அரசனே மயங்கும் தன் பேரெழில்மீது ஒரு கணம் பெருமை கொண்டாள். உடனே தன் தவற்றையும் உணர்ந்து சோகமடைந்தாள். இதற்கிடையில், நதிக்கரைக்குச் சென்ற கெளதமர் இந்திரனின் கயவாளித்தனத்தைத் தன் ஞானப்பார்வையால் அறிந்து, குடிலுக்குத் திரும்பினார். பூனை உருக்கொண்டு தப்பிக்க முயன்ற இந்திரனை கொடுஞ்சினம் கொண்ட முனிவர் ‘பிடி சாபம். நீ எதனை நாடி இத்தீயசெயலைப் புரிந்தாயோ அவ்வாறு உன் உடல் முழுதும் ஆகக்கடவது’ என்றார். இந்திரன் தலைகுனிவோடு தன் உலகத்திற்குத் திரும்பினான். தடம் புரண்ட மனைவி அகலிகையை கெளதமர் ஒரு கல்லாக மாறும்படி சபித்தார். அகலிகை, ’இந்திரனால் வஞ்சிக்கப்பட்ட எனக்குச் சாப விமோசனம் கிடையாதா?’ என்று கண்ணீர் மல்க தன் கணவனை வினவினாள். முனிவரும் மனமிரங்கி, ‘எப்போது அயோத்தி இளவரசன் ராமன் கால் தூசி உன்மீது படுகிறதோ அப்போது நீ உன் பழைய உருவை அடைவாய். அந்த ராமன் வரும் வரை காத்திரு’ என்று பகர்ந்து அங்கிருந்து அகன்றார்….

அகலிகையின் கதையைக் கூறியபின், விஸ்வாமித்திரர், “ராமா, உன் பாததூளிக்காக குற்றமற்ற அவள் இங்கே காத்திருக்கிறாள். உன் வலது காலை அக்கல்லின்மேல் வை”  என்றார். ஆசானின்  ஆணைப்படி ராமன் பாதத்தை வைத்தவுடன் அகலிகை மீண்டும் பொலிவு பெற்று எழுந்து அந்த பதிதபாவனனின் தாள் பணிந்தாள். இக்காட்சியைக் கண்ட விஸ்வாமித்திர்ர் மனம் நெகிழ்ந்து, கம்பநாடர் மொழியில்

“இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

உய்வண்ணம் அன்றிமற்றுமோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ

மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து  அண்ணலே உன்

கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்”

என்று பெருமிதமாகக் கூறினார்.

[முக்காலத்தில் அகலிகை கல்லுருவத்தைப் பெற்ற நிகழ்ச்சி இவ்வாறு நடந்தது. நீ அவதரித்த பின்னர், இவ்வுலகத்தில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் விடுதலை பெறுவதன்றி, துன்பமடைவது என்பது உள்ளதாகுமோ? ஆகாது. மேகத்தின் கரிய வண்ணத்தைப் போன்ற ராமனே! மை போன்ற கருநிறத்து அரக்கியாகிய தாடகையுடன் நீ போரிட்ட அவ்விடத்தில் உன் கைத்திறமையைப் பார்த்தேன். இவ்விடத்தில் உன் கால் திறமையைப் பார்த்தேன்.]

அதன்பின் அப்போதே அங்கு வந்து சேர்ந்த கெளதமரை ராமன் அகலிகையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட அவரும்  அவளை மன்னித்து இல்லறம் நடத்த சித்தமானார்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ராமன் வரும் வரை காத்திரு… (1)

  1. அருமையான பகிர்வுக்கு நன்றி.  ஶ்ரீராமர் மட்டும் கர்ப்பத்திலே உதிக்க, சீதை மட்டும் ஏன் அயோநிஜையாகத் தோன்றினாள்?  பல ஆண்டுகளாக இந்த சந்தேகம் இருக்கிறது.  உங்களுக்குத் தெரிந்தால் விளக்கும்படி வேண்டுகிறேன்.  நன்றி.

  2. அன்புள்ள கீதாம்மா!
    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
    ஸீதை அயோநிஜையாக அவதரித்தற்குக் காரணம் எனக்குத் தெரிந்த வரையில் சொல்கிறேன். However, it is subject to confirmation by pundits.
    திரேதாயுக ஆரம்பத்தில்ஒரு சமயம் பிரணய கலகத்தினால் திருமாலும் திருமகளும் பிரிய நேரிட்டது. பின்னர் வருந்திய அன்னை வேதவதி என்னும் பெயரோடு அண்ணலைச்சேர தவமியற்றியவாறு இருந்தார். அப்போது ஆகாச மார்க்கமாக வந்த ராவணன் வேதவதியின் பேரழகைக் கண்டு மயங்கி கீழே இறங்கி தன்னைச் சேருமாறு வேண்டினான். திருமாலை நாடும் தன்னிடம் இப்படி அவன் நடந்து கொண்டதற்கு வேதவதி கோபம் கொண்டு ‘நானே மறுபடி பிறந்து உன் அழிவிற்குக் காரணமாவேன்’ என்று சூளுரைத்து தன் யோக மஹிமையால் தன்னை எரித்துச் சாம்பலாக்கிக் கொண்டாள். அந்த சாம்பலை ராவணனின் ஒரு பெட்டியில் சேகரித்து இலங்கையில் தன் அறையில் வைத்திருந்தான். யதேச்சையாக அப்பெட்டியைத் திறந்து பார்த்த் மந்தோதரி, அதற்குள் ஒரு பெண் சிசுவைக் கண்டாள். உடனே தன் சேவகர்களை அழைத்து அப்பெட்டியை வெகு தொலைவில் எரிந்துவிடுமாறு ஆணையிட்டாள். அவர்கள் அப்பெட்டியை மிதிலை நகருக்கருகே புதைத்து விட்டனர். அதனையே ஜனக மஹாராஜன் கண்டெடுத்து அந்த கொழுமுகத்துக் குழந்தைக்கு ஸீதை எனப்பெயரிட்டுத் தன் மகள் போல் வளர்த்து வந்தான். ஆனந்த ராமாயணத்தில், ‘ஸீதை பிறக்க இலங்கை அழிய’ என்னும் ஒரு குறிப்பு உள்ளது.
    சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் தனது சுந்தர காண்ட உரையில் ராமனும் ஸீதையும் ஒருமுறை வாக்குவாதம் செய்ததாக சொல்கிறார். ராமன் தான் புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் அவதரித்தால் தான் உயர்ந்தவன் என்றாராம். ஸீதை சும்மா விட்டுவிடுவாரா? தான் அயோநிஜை என்று பெருமையாகச் சொன்னாராம். இதனால் சினம் கொண்ட ராமன் ஸீதையோடு பல நாட்கள் பேசாமல் இருந்தாராம். அன்னையும் அமைதியாக இருந்தாராம். ’எப்படி இதற்கு ஒரு முடிவு கட்டுவது?’ என்று யோசித்த அண்ணல் தன் மோதிரத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு ஸீதை செவியில் விழுமாறு மோதிரம் தொலைந்து விட்டதை உரக்க்கச் சொன்னாராம். பதறிப்போன ஸீதை பல இடங்களில் தேடி கடைசியில் மோதிரத்தைக் கண்டெடுத்து மனாளனிடம் கொடுத்தாராம். ‘தொலந்துபோன மோதிரத்தைக் கண்டெடுத்த நீ தான் உசத்தி’ என்று சொல்லி அவளை அணத்துக் கொண்டாராம். அசோகவனத்தில் அனுமன் அதே மோதிரத்தைக் கொடுத்ததும் அன்னைக்குச் சந்தேகம் நீங்கியதாம்.
    வணக்கத்துடன்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.