இந்த வார வல்லமையாளர்
சென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடன் படித்த மாணவ நண்பனை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது. நரை திரையாக பெரிய மீசை வைத்து பயங்கரமாக என் கண்களுக்குக் காட்சியளித்தான். இத்தனைக்கும் நான் அவனை ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட சந்தித்திருந்தேன். என்னடா உனக்கு இப்படி வயசாகிவிட்டதே என்று அவனை கிண்டலடித்ததற்கு, ஆமாம்.. இவர் என்றும் மார்க்கண்டேயராக்கும்’ என்று பதிலடி கொடுத்தான்.. கூடவே என்னை அருகேயே இருந்த அவன் வீட்டுக்கும் அழைத்துப்போய் தூசி தட்டப்பட்டு அலமாரியில் வைத்திருந்த என் புத்தகங்களையும் (பெருமையாக) காண்பித்தான். அவன் மனைவிக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தான்..
அந்தப் பெண்மணி என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, உங்கள் புத்தகத்தில் உள்ள புகைப்படத்தைப் போலத்தான் இருக்கிறீர்கள்.. ஆனால் சின்னப்ப மட்டும் கொஞ்சம் அழகாகத்தான் இருந்தீர்கள்’ என சீரியஸ்ஸாகச் சொன்னதும் என் நண்பனை கேள்விக் குறியாகப் பார்த்தேன்..
’அட, அது வேற ஒண்ணுமில்லே.. நம்ம ஸ்கூல் போட்டோவைச் சொல்றாடா.. ’எங்கே இவனுக்கும் கொஞ்சம் காண்பியேன்.. இவன் அழகை இவனே மெச்சிக்கட்டும்’ என்று மனைவியைப் பார்த்துச் சொன்னதும் அவர் உள்ளே சென்று ஒரு பழைய ஆல்பம் கொண்டு வந்தார். என் நண்பனின் சித்திர சுய வரலாறு என்று பார்த்தவுடனே புரிந்தது. என்னுடனும் இன்னும் இரண்டு நண்பர்களுடனும் அந்தப் பள்ளி வயதில் போட்டோ எடுத்துக் கொண்டதை நான் அந்த நேரத்திலேயே மறந்திருந்தாலும், இவன் மறக்காமல் ஆல்பத்தில் இன்னும் வைத்துக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தாலும், அதே சமயத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் உள்ள அந்த நான், நான்தானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்ததும் வாஸ்தவம்தான்.. நானேதான் என்பதை சத்தியம் செய்தான் அவன் என்பது இன்னொரு விஷயம்.
இந்த விஷயங்கள் கீழே உள்ள அந்த சுட்டிப் பெண்ணைப் பார்த்ததும் நினைவுக்கு வந்ததுதான். நாளை வயதானபின் இந்தப் போட்டோவைப் பார்த்துவிட்டு இந்தப் பெண் என்ன நினைப்பாளோ என்ற ஒரு கற்பனையும் கூடவே எழுந்ததுதான். இனி இந்த வார வல்லமையாளரைத் தேர்ந்தெடுக்கும் அமைதிச்சாரல் சாந்திக்கு வழிவிடுவோம். இதோ சாந்தியின் எழுத்தில்:
இந்த வார வல்லமையாளர்: திரு. சத்யா.
ஒளிப்படக்கலையில் வல்லுனரான இவர் எதைக் க்ளிக் செய்தாலும், அந்தப் படம் உயிர் பெற்று வந்ததைப்போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ஒளியமைப்பு, காட்சியமைப்பு, கோணங்கள், வண்ணங்களின் சேர்க்கை என்று இவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் அழகைக்கொண்டவை. இவரது படங்களை ரசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.
http://www.flickr.com/photos/snarayanank/with/9537102597
ஒளிப்படங்கள் அழகுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துவதாக அல்லாமல் சில சமயங்களில் தகவல்களின் இருப்பிடமாகவும் இருப்பதுண்டு. ஒளிப்படங்கள் வழியாக கலைஞன் அந்த நொடியில் தான் உணர்ந்ததை பார்வையாளனுக்கும் கடத்துகிறான். அந்த வகையில் சத்யாவின் இந்த ஒளிப்படம் சிறப்புப்பெறுகிறது. பார்க்கும் அந்த நொடியிலேயே பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான மனநிலை நமக்கும் ஏற்பட ஆரம்பிக்கிறது. அந்தப்பெண்ணின் குறும்புத்தனமான பார்வையும் வண்ணக்கலவையும், அழகான முகபாவமும் கவர்கின்றன. bokeh, dof போன்ற சிறப்பம்சங்களால் படம் மேலும் அழகுபெறுகிறது.
http://www.flickr.com/photos/snarayanank/11368702886
இந்த வார வல்லமையாளரான திரு. சத்யாவுக்கு வல்லமை சார்பில் என் வாழ்த்துகள்.
கடைசிப்பாரா: தேமொழியின் ”தமிழர்களின் மொழிக்கொள்கை – ஒரு பார்வை”
தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்ததல்ல என்ற கருத்தினை இறுகப் பற்றிக்கொண்டு பிறமொழி பேசுபவர்களை எதிர்க்கும் மொழி வெறியர்களும் நம்மில் உண்டு. இவ்வகையில் கண்மூடித்தனமாக மொழியின் மீது ஈர்ப்பு கொண்டவர்களில் பலருக்கு மிஞ்சிப் போனால் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்கலாம். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்தல்ல என்று கருதும் இவர்களது முடிவு பற்பல மொழிகளையும் ஒப்பிட்டு ஆராயும் மொழியியல் வல்லுனர்களைப் போல ஆராய்ந்து கொண்ட முடிவாக இருத்தல் அரிது.
உண்மையிலேயே எதிர் பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சி. வல்லமைக்கும், சாந்தி மற்றும் திவாகர் அவர்களுக்கும் மிக்க நன்றி!
அன்பின் திரு சத்யா,
மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து தங்களுடைய படைப்புகளை வரவேற்கிறோம்.
அன்புடன்
பவள சங்கரி
குழந்தையின் முகம் கண்ணையும் மனதையும் கவருகின்றது. அழகான புகைப்படம். ஒளி வல்லமையாளர் திரு,சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழர்களின் மொழிக் கொள்கை பற்றிய சாட்டையடிக் கட்டுரை வழங்கி பாராட்டைப் பெற்றுள்ள சிறப்புப் பதிவர் திருமதி.தேமொழி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பர் சச்சிதானந்தத்தின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
…..தேமொழி