நான் அறிந்த சிலம்பு – 102
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
உழவரின் ஒலியும் பாட்டும்
உழப்படாத நுண்ணிய சேற்றில் புரண்டதால்
உடலில் பூசியுள்ள சேறு;
கழுவப்படாத முடியினையுடைய உடல் மற்றும்
சிவந்த கண்களுடன் இருந்தன எருமைகள்.
அவைதாமும் தம்
தினவைப் போக்கிக் கொள்வதற்காக
களத்து மேட்டில் உழவர்கள்
வைக்கோற் புரியால்
கட்டிவைத்த நெற்கூடுகளில்
முதுகை உராய்ந்தன.
வலிமையான கைகளையுடைய
கூலியாட்களும் நில உரிமையாளரும்
அவற்றை விரட்ட
ஒருங்கே எழுப்பும் ஒலி
ஒருபுறம் ஒலிக்கும்.
மணமிக்க ஆம்பல் முதலிய
மலர்களையும் களைகளையும் பறித்தெறிந்து
களைத்து நின்ற உழத்தியர்
நாற்று முடிகளைப் பிரித்து அழுத்தி நட்டனர்.
அப்போது,
வளைந்த வளையணிந்த அவர்தம்
தோளிலும் மார்பிலும்
சேறு பூசிய கோலம் அழகு செய்தது.
இதே கோலத்தில் அந்த உழத்தியர்
கள்ளுண்டு களித்தனர்.
அதனால் செக்கச்சிவந்த கண்களுடன்
அவர்கள் தாமும்
கொச்சை மொழியில்
புதுப்பாடல்கள் பாடிக்களித்த ஒலி
ஒருபுறம் ஒலிக்கும்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120 – 131
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html