தில்லை நடராசன்
சு. கோபாலன்
எல்லை இல்லா ஆகாயமெனும் பஞ்சபூதத்திற்கு உரிய தலமாம் சிதம்பரம்
தில்லை மரக்காட்டில் ஆதியில் இருந்ததால் தில்லையென்றும் அறியப்படும்.
கண்டதில்லை இத்தலம்போல் என தில்லை கண்ட பக்தர்கள் திகைப்பர்
கொண்டதில்லை இத்தகைய ஆனந்தம் என நடராசன் தரிசனத்தில் திளைப்பர்.
விண்ணுலகில் தேவர் முனிவர் கண்டு மகிழ்ந்த தன் நடனத்தை
மண்ணுலகில் மானிடரும் கண்டு மகிழ தில்லை வந்தாரே சிவபெருமான்
அரவம் அணியாய் அமைந்த வலக் கரமொன்றால்
உடுக்கடித்து ஊராரை எல்லாம் தன்னிடம் அழைத்து
இடக்கையொன்றினால் எழுந்தாடும் இடக்காலினைக் காட்டி
”உய்திடுவீர்” இப்பதம் பக்தியுடன் பற்றிடில் என்றருளி
”இது சத்தியம்” என வாக்களிக்கும் வகையினில்
மற்றொரு இடச் செங்கையில் வெந்தழல் ஏந்திடுவார்.
வல்லசுரன் முயலகனை வலக்காலடியில் துகைத்து
வலக்கரத்தால் அபய முத்திரை அளித்திடும்
தில்லைத் தாண்டவன் தரிசனம் கண்டு
எல்லை இல்லா இன்பம் பெறுவோமே!
நந்தன் எனும் கீழ்குல பக்தன் ஆலயத்துள் அணுக முடியாதவன்
சிந்தை எல்லாம் சிவ பக்தியைத் தேக்கி எக்கணமும் தொழுபவன்
எந்தனைக் காண வாவென தில்லை நடராசன் நந்தனை அழைத்திட
விந்தை விளைந்தது நந்தன் ஜோதியாய் இறைவனுடன் ஐக்கியமாயிட!
சிதம்பர நாதன் பதங்களைப் பணிந்து
இகபர வாழ்வுக்கு நல்வழி தேடுவோமே!
படத்திற்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/10/chidambaram-nataraja-temple-tamilnadu.html