ராமன் வரும் வரை காத்திரு… (2)
ராமஸ்வாமி ஸம்பத்
மிதிலையை அடைந்த மூவரும் ஜனகரின் அரண்மனை நோக்கி நடந்தனர்.
வழியில் அரண்மனை கன்னிமாட வளாகத்தில் உள்ள பூம்பொழிலில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த இளவரசி ஸீதையின்மீது ராமனின் பார்வை படிந்தது. அண்ணலும் நோக்கினான்; ஏதோ ஒரு ஈர்ப்பினால் அவளும் நோக்கினாள். அவ்வளவுதான்! கவிச்சக்கிரவர்த்தியின் வர்ணனைபோல்
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ.
[இடையில்லை என்று சொல்லும்படி நுண்ணிய இடை உடைய ஸீதையும், இழிவு இல்லை என்று சொல்லும்படி புண்ணிய குணங்களை நண்ணிய ராமனும் தம்முடைய இரண்டு உடம்புகளுக்குப் பொருந்திய ஒரே உயிர் போல் ஆனார்கள். திருப்பாற்கடலின் பள்ளியிலே கூடியிருந்து புணர்ச்சி நீங்கிப் பிரிந்து போனவர்கள் மீண்டும் இங்கே சந்தித்தால் அவர்களது காதல் சிறப்பை வெளியிட வாய்ப்பேச்சும் தேவையோ?]
அக்கணத்திலிருந்து இருவரின் மனநிலை ’ஒருவருக்காகவே மற்றொருவர் பிறந்து இருக்கிறோமோ’ எனும் ஆலோசனையில் வீழ்ந்தது. தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்த வைதேகி (விதேக அரசனால் கண்டெடுக்கப்பட்ட நங்கையாதலால் ஸீதை இப்படியும் அழைக்கப்பட்டாள்) ‘என் மனம் ஏன் இப்படி அலை பாய்கிறது? ஒருவேளை இத்தனை நாள் இவருக்காகவே காத்திருக்கிறேனா? அதே நேரத்தில் இந்த இளைஞரால் அந்த பருத்த வில்லான சிவதனுசினை நாண் ஏற்றமுடியுமா எனும் ஐயமும் எழுகிறதே. இந்த வில் உள்ள, எவராலும் நகர்த்த முடியாதிருந்த, பெட்டியை சிறுவயதில் விளையாட்டாக நான் தூக்கியபின் தந்தை ஜனக மஹாராஜா இந்த சிவதனுசினை எவர் நாண் ஏற்றுகிறாரோ அவருக்கே என் பெண் ஏற்றவளாவள் என்று மொழிந்தபின் எத்தனை ராஜகுலத்தினைச் சேர்ந்தவர் முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளனர். இவ்விளைஞரால் முடியுமா? எதுவாகிலும் சரி. இவரிடம் மனத்தைப் பறிகொடுத்தபின் இவருக்கே நான் ஆட்செய்ய வேண்டும். வேறு எவர்க்கும் வாழ்க்கைப்படேன்’ என்று எண்னி எண்ணி விரக தாபத்தில் விம்மியவாறு இருந்தாள். அங்கே ராமனும் ஸீதையின் சந்திரபிம்ப வதனத்தை நினைந்தவாறே தூக்கமின்றி தவிக்கலுற்றான்.
மறுநாள் ஜனக மன்னன் யாகசாலையில் நடந்த ஸீதா சுயம்வரத்தில், விஸ்வாமித்திரரின் ஆணைப்படி ராமன் இதுவரை ஸீதையைத் தவிர எவராலும் ஏந்தப்படாத சிவதனுசினை லாவகமாகத் தூக்கி நாணேற்றியபோது ஒரு பலத்த ஓசையுடன் அந்த வில் இரண்டாக ஒடிந்தது. ‘ஆஹா, என் நெடுங்காலத் தவத்திற்குப் பலன் கிடைத்துவிட்டது’ என்ற மட்டற்ற மகிழ்ச்சியோடு ஜனகபுத்திரியான ஜானகி மின்னல் வேகத்தில் ஓடிவந்து ராமனுக்கு மாலை சூட்டினாள்.
தசரதனுக்குத் தகவல் கிடைத்தும் தன் பரிவாரம் சூழ மிதிலை வந்து சேர்ந்தான். அதன்பின் ஒரு நல்ல மங்களமான வேளையில் ராமன் ஸீதையையும், லக்ஷ்மணன் ஊர்மிளையையும் (ஜனகனின் இன்னொரு புதல்வி), பரதன் சத்ருக்கினன் முறையே மாண்டவியையும் சுருதகீர்த்தியையும் (இருவரும் ஜனகன் தம்பி குசத்துவன் குமாரிகள்) மணந்தனர். ராமன் வரும் வரை காத்திருந்த ஸீதையை அவனிடம் சேர்ப்பித்துவிட்டு விஸ்வாமித்திரர், நாரதர் தனக்கு இட்ட பணியினை செவ்வனே முடித்த மகிழ்வோடு, ‘போனான் வடதிசைவாய் உயர் பொன்மால்வரை புக்கான்’.
* * *
மஹேந்திரகிரியில் தவக்கோலம் பூண்டிருந்த பரசுராமான் செவியில் மிதிலையில் உடைபட்ட சிவதனுசின் பேரரவம் விழுந்தது. ‘என்ன, சிவதனுசு முறிந்து விட்டதா? அப்படியானால் நான் எதற்காகக் காத்திருக்கிறேனோ அவ்வேளை நெருங்கிவிட்டது’ என நினைந்தான் மஹாவிஷ்ணுவின் ஆவேச அவதாரமும் (ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் எடுக்கப்படும் அவதாரம்) சிரஞ்ஜீவியுமான பரசுராமன். உடனே கையில் நாராயணதனுசை ஏந்தி மிதிலை நோக்கிப் புறப்பட்டான்.
ஸீதாராம கல்யாணம் முடிந்து அயோத்தி திரும்பும் தசரத பரிவாரம் பயங்கரமான ஊளையோடு வீசும் பலத்த புயல் ஒன்றினால் தாக்கப்பட்டது. ”இது பரசுராமனின் வருகையை பறைசாற்றுகிறது” என்ற வசிஷ்டரின் கூற்றைக் கேட்ட அயோத்தி அரசன் நடுநடுங்கினான். அருகில் நெருங்கிய பரசுராமன் தாள் பணிந்து அவனிடம், ”க்ஷத்திரிய குலத்தின்மேல் கொண்ட கோபம் தங்களுக்கு இன்னும் தணியவில்லையா பிரபூ? தவக்கோலம் பூண்டிருக்கும் தாங்கள் மீண்டும் கொலைவெறி கொள்ளக் கூடாது. தயவு செய்து மணக்கோலத்தில் இருக்கும் என் மக்களை ஏதும் செய்யாதீர்” என்று கெஞ்சினான்.
அதனை லட்சியம் செய்யாத பரசுராமன், சினத்தினால் சிவந்த கண்களோடு ராமனை நோக்கி ‘ஓஹோ, நீதான் சிவதனுசை முறித்தவனோ? அன்றொரு நாள் சங்கர நாராயணரிடையே நடந்த போட்டியில் விரிந்தபோன சிவதனுசை ஒடித்துவிட்டு நீ உன்னை பெரிய வில்லாளியாக பாவிக்கிறாயோ?” என்று இடிமுழக்கம் செய்தான்.
[விஸ்வகர்மனால் உருவாக்கப்பட்ட இரு வில்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் அளிக்கப்பட்டன. அவ்விரு வில்களில் எது பலம் வாய்ந்தது என அறிய பிரமதேவன் அப்பரந்தாமர் மத்தியில் ஒரு போட்டியை ஏற்பாடு செய்தார். உக்கிரமான அப்போட்டியில் சிவதனுசு இலேசாக விரிந்தது. அதனால் சினமுற்ற சிவனார் இன்னும் கடுமையாகப் போரிட, பிரமதேவன் நடுநடுங்கி தன் தவற்றால் விளையாட்டு வினையாகவதை உணர்ந்து இருவரையும் சமாதானம் செய்து அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். அவ்வில் இரண்டும் காலப்போக்கில் முறையே ஜனகனையும் பரசுராமனையும் அடைந்தன]
ராமன் ஒரு இளநகையோடு, “பெருமை மிக்க ஜாமதக்னி முனிவரே (ஜமதக்னி மஹரிஷியின் மகன்), முதற்கண் இச்சிறுவன் ராமனின் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் என்னை என்ன செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?” என்றான் பணிவோடு.
“உண்மையிலேயே நீ ஒரு உயர்ந்த தனுர்தரன் என்றால் இதோ இந்த விஷ்ணுதனுசை நாணேற்ற முடிகிறதா பார்.”
அதே புன்முறுவலுடன் ராமன் அவ்வில்லைப் பற்றி எளிதாக நாண் பூட்டி, கோதண்டத்தைப் பொறுத்தினான். அத்தருணம் பரசுராமனின் புஜத்திலிருந்து ஒரு மகத்தான திவ்யசக்தி ராமனுள் புகுந்தது. பரசுராமன், ‘நாராயணதனுசு உரிய இடத்தில் சேர்ந்துவிட்டது’ என தன்னுள் மகிழ்ச்சி கொண்டு, வெளிப்படையாக ராமனிடம் தோல்வியை ஒப்புக்கொண்டான்.
“அந்தண குலச்ரேஷ்டரே, உம்மை நான் கோதண்டத்திற்குப் பலியாக்க விரும்பவில்லை. ஆனால் வில்லேறிய கோதண்டத்திற்கு ஒரு காவு தேவை. சொல்லுங்கள் நான் எதனைக் குறிவைப்பது?” என்றான் ராமன்.
“ராமா, உன்போன்ற மாவீரனைக் காணத்தான் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் க்ஷத்திரியர்களை வென்று சேர்த்த ராஜ்யங்கள் அனைத்தையும் காச்யப முனிவருக்கு அளித்து விட்டேன். அதனால் இப்போது என்னுடையது எனச் சொல்லக்கூடியது எல்லாம் என் தவப்பலன்தான். அதைக் குறிவைத்து என்னை விட்டுவிடு. எனக்கென ஒரு நிலத்தை மேலைக்கடலில் உருவாக்கி, அங்கு தவம்புரிய விரும்புகிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தி, ராமன் வரும் வரை காத்திருந்த பரசுராமன் விடைபெற்றுக் கொண்டான்.
அருமையான கட்டுரை ஐயா! எளிதான, தெளிவான மொழியில் கதையையும், அதன் ஆன்மிகப் பொருளையும் அழகாகப் பிணைத்து வழங்கியுள்ளீர். நன்றி.
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. டோக்ரா அவர்களே!
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. காவல் துறையில் மிக உயர்ந்த பதவியில் உள்ள நீங்கள் பல பொறுப்புகளிடையே எளியேனின் படைப்பைப் படிக்கத் தங்கள் பொன்னான நேரத்தில் ஒரு பகுதியைச் செலவிட்டதோடல்லாமல் அடியேனை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டியிருப்பது ஒரு உன்னத உள்ளத்தின் செயலன்றி வேறு எவ்வாறு கருத முடியும்?
As an elder – that it is my only qualification – I can only bless your good self.
வணக்கத்துடன்
ஸம்பத்
சீதா கல்யாண மகத்துவத்தை உரைக்க எழுதப்பட்ட கவிதைக்கு (https://www.vallamai.com/?p=40809)
தெளிவுரையாய் உங்கள் உரைநடை அற்புதமான பொருத்தம்
திரு. சத்தியமணி அவர்களே தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ’ஸீதா கல்யாண வைபோகமே’ எனும் தங்கள் கவிதையை மிக்க ரசித்தேன். பிரிந்த ஆதி தம்பதிகள் மீண்டும் இணைவது வைபோகமே அல்லவா?
அன்பு கலந்த வணக்கத்துடன்
ஸம்ப்த்
நல்லதொரு பகிர்வு. உள்ளார்ந்த பொருளோடு கூடிய இந்தக் கட்டுரை படிக்கப் படிக்க மனம் நிறைகிறது. பகிர்வுக்கு நன்றி.