ராமஸ்வாமி ஸம்பத்

அண்ணன் ஆணைப்படி லக்ஷ்மணன் சுக்ரீவனை கிஷ்கிந்தை அரசனாகவும் அங்கதனை அந்நாட்டின் இளவரசனாகவும் முடிசூட்டினான். மகிழ்ச்சிகொண்டு சுக்ரீவன் மது அருந்தியும் காம கேளிக்கைகளில் ஈடுபட்டும் அப்போதே தொடங்கிய கார்காலம் முழுதையும் கழித்தான். ராமனும் இளைய பெருமாளும் ஒரு குஹையில் வாசம் செய்தனர். சுக்ரீவனுக்குக் கார்காலம் பறந்து சென்றதென்றால் ராமனுக்கு ’இந்த ருதுவிற்கு ஒரு முடிவு உண்டோ’ என எண்ண வைத்தது. ஸீதையின் நினைவில் துயருற்ற அண்ணலை லக்ஷ்மணன் ஆறுதல் சொல்லி “அனுமன் போன்ற வானர வீரர்கள் உதவியுடன் ஜனகபுத்திரியை விரைவில் மீட்போம்” என்று சூளுரைத்தான்.

கார்காலம் ஓய்ந்து, ’மாரி மலை முழஞ்சில் மன்னிக்கிடந்த’ ராமன் மனக்கவலையோடு ’சுக்ரீவன் ஏன் இன்னும் ஸீதையைத் தேடுவதற்கு ஆயத்தம் செய்யவில்லை? ஒருவேளை அமிதமான கேளிக்கைகளில் ஈடுபட்டு கொடுத்த வாக்கினை மறந்து விட்டானோ?’ என நினைத்தான். லக்ஷ்மணனை அழைத்து “தம்பி, நீ உடனே சுக்ரீவன் அரண்மனைக்குச் சென்று, ’வாலியை வதைத்த அதே அம்பு நன்றி மறந்தவரையும் வீழ்த்த சித்தமாக உள்ளது’ என்று அவனிடம் சொல்” என ஆனையிட்டான்.

கோபக்கனல் தெரிக்க அரண்மனையில் நுழைந்த லக்ஷ்மணனை தாரை எதிர்கொண்டு, நிலைமையை தான் சரிசெய்வதாகச் சொல்லி இளவலின் சினத்தை அடக்கினாள். பின்னர் அங்கதனுடன் அந்தப்புரத்திற்குச் சென்று, சுக்ரீவனது  அலட்சியத்தைச் சாடி புத்தி புகட்டினாள். தெளிவுபெற்ற சுக்ரீவன், ராமனிடம் மன்னிப்புக் கோரினான். பாதம் பணிந்த வானரனைத் தழுவி ராமன் அடுத்து செய்ய வேண்டிய ஸீதை தேடல் முயற்சி குறித்து அவனுடன் ஆலோசனை செய்தான். அதன்படி சுக்ரீவன் நான்கு திக்குகளிலும் வானரப்படைகளை அனுப்பினான். தென் திசைக்கு அனுமன், அங்கதன், ஜாம்பவான் உள்ளிட்ட பெரும்படை அனுப்பப்பட்டது. ஒரு சில வாரங்களுக்குப்பின் கீழ், மேல், வட திசைகளுக்குச் சென்றவர் ஸீதையை எங்கும் காணாமல் கைவிரித்த வண்ணம் திரும்பினர்.

ராமனின் உள்ளுணர்வு ’அனுமன் நிச்சயம் வெற்றிபெறுவான்’ என்று கூறியதால், அவன் தனக்கும் ஸீதைக்கும் மட்டுமே தெரிந்த சில தகவல்களை அனுமனிடம் சொல்லி தன் மோதிரத்தையும் கொடுத்திருந்தான். “இவ்வடையாளங்களால் ஸீதைக்கு உன்மீது நம்பிக்கை ஏற்படும்” என்றும் கூறியிருந்தான்.

தென் திசை சென்ற வானரர்கள் பல அரண்யங்களிலும் மலைகளிலும் தேடி பசி தாகத்தால் களைத்தவராய் பிலம் என்னும் ஒரு குஹையை அடைந்தனர். குஹையின் உள்ளே குளிர்ந்த காற்று வீசியது. ஒரு அழகான சிறிய நகரம் காணப்பட்டது. பலவிதமான பழவகைகளைத் தாங்கும் தருக்கள்   நிறைந்திருந்தன. மனித, விலங்கு நடமாட்டமே அங்கு இல்லை. இவற்றின் நடுவே ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்த ஒரு தேவகன்னிகை அவர்களை கோபம் பொங்கும் கண்களோடு நோக்கினாள்.

அனுமன் அவள் அருகே சென்று, “அன்னையே, தாங்கள் யார்? இந்த அத்வானமான இடத்தில் தனிமையில் என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினான்.

“முதலில் நீ யார் என்று சொல். யாரும் நுழைய அச்சப்படும் இக்குஹையில் எவ்வாறு நுழைந்தீர்கள்? இங்கு வந்தவர் யாரும் வெளியே செல்லமுடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?”

“அன்னையே, சினம் வேண்டாம். நாங்கள் வானர அரசன் சுக்ரீவனின் ஆணைப்படி அவர் உற்ற நண்பன் ராமபிரானின் மனைவியான ஸீதையைத்தேடி அலைகிறோம். அவள் அரக்கர்கோன் ராவணனால் கடத்தப்பட்டு விட்டாள்.”

’ராமன்’ எனும் சொலைக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்த்து.

“வானரர்களே, வருக, வருக. உங்களுக்காகவே காத்திருக்கிறேன்” என்று சொல்லி, “முதலில் உங்கள் பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றாள். அதன்பின் அவள் தன் கதையைக் கூற முற்பட்டாள்.

….என் பெயர் சுயம்பிரபை. நான் இந்திரலோகத்தைச் சேர்ந்தவள். எனது உற்ற தோழி ஹேமையும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த மயன் என்னும் நகர நிர்மாண நிபுணனும் ஒருவரை ஒருவர் விரும்பி இந்த குஹையில் பலநாட்கள் ஆனந்தமாக்க் கழித்தனர். அவர்களுக்குக் காவலாக நான் இங்கிருந்தேன். காணாமற்போன  எங்களைத்தேடி வந்த இந்திரன் கோபமுற்று, அவ்வரக்கனைக் கொன்று, ஹேமையைச் சாடி, “நீ ஏன் வரம்பு மீறினாய்?” என்று கேட்டபோது, அவள் என்னைச் சுட்டிக்காட்டினாள். இந்திரன், “இந்த தகாத காரியத்திற்கு உடந்தையாக இருந்ததால், நீ இந்த பில நகரத்திலேயே தனித்திருந்து வாடுவாயாக” என்று என்னை சபித்தான். ”எனக்கு விடிவு கிடையாதா?” என்று மன்றாடிய என்னை நோக்கி, “என்றாவது ஒருநாள் வானரவீரர்கள் ராம காரியத்திற்கு உதவும் பொருட்டு இங்கு நுழைந்து வெளியே செல்ல வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு சகாயம் செய்தபின், நீ நம் உலகிற்கு வந்து சேரலாம்” என்றான் வானரசன். அன்றிலிருந்து உங்கள் வருகைக்காக தவமிருந்து வருகிறேன். என் தவம் பலித்தது இன்று….

பின்னர், சுயம்பிரபை தன் தவ வலிமையினால் வானர வீரர் அனைவரையும் கீழைக்கடலோரம் சேர்ப்பித்து வானுலகுக்கு ஏகினாள்.

கடற்கரை அருகே நின்ற வானரர்கள், வியப்போடும் கவலையேடும் ‘இனி என் செய்வோம்’ என ஆலோசனையில் வீழ்ந்தனர். அங்கதன், “நமக்குக் கொடுத்த கெடு தீர்ந்துவிட்டது. எனக்கு அன்னையைக் காண்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது. ஸீதையைக் குறித்த தகவலில்லாமல் கிஷ்கிந்தை சென்றால் சிற்றப்பன் என்னைக் கொன்றுவிடுவான். ஆகவே நான் இங்கேயே உண்ணாவிரதம் இருந்து உயிரை விடப்போகிறேன்” என்று சொல்லி தரையில் தர்ப்பைகளைப் பரப்பி அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அனைத்து வானரர்களும் அவ்வாறே செய்தனர்.

இவற்றையெல்லாம் அருகே உள்ள குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதிய பிராயத்தை அடைந்திருந்த மாபெரும் பருந்து மகிழ்ச்சியுடன், ’அப்பாடா, இந்த குரங்குக் கூட்டம் இவ்வாறு உயிர் நீத்துவிட்டால் எனக்குக் கொஞ்ச காலத்துக்கு உணவு பற்றிய கவலையே இருக்காது’ என நினைத்தது.

கடலில் நீராடிவிட்டு வந்த அனுமனும் ஜாம்பவானும் அங்கதனைச் சாடினர். “கிஷ்கிந்தை இளவரசனான நீயே நம்பிக்கை இழக்கலாமா? ஸீதையைக் காணாவிட்டால் என்ன? நாமெல்லாரும் எவ்வாறாகினும் இலங்கை சென்று அந்த ராவணனுடன் போராடுவோம். கிழப்பருந்தான ஜடாயு அச்சமில்லாமல் ராவணனுடன் உக்கிரமாக போராடி உயிர் விடவில்லையா? நாமும் அந்த பொல்லா அரக்கனைத் தாக்குவோம்” என்று அனுமன் கூறினான்.

ஜடாயுவின் பெயரை அனுமன் சொன்னதும், குன்றிலிருந்த பருந்து “என்ன? என் அருமைத் தம்பி ஜடாயு இறந்து விட்டானா?” என்று கதறி “வானரர்களே, இறக்கைகள் இல்லா என்னை இந்த குன்றிலிருந்து இறக்குங்கள். நான் உங்களுடன் பேசவேண்டும்” என்று அலறியது.

அனுமன் உடனே அதனை மெள்ள கீழே இறக்கினான். “வானரர்களே, என் பெயர் ஸம்பாதி. நானும் என் இளவல் ஜடாயுவும் அருணனின் புத்திரர்கள். என் தம்பியை ராவணன் கொன்றுவிட்டானா? அந்த விவரத்தை எனக்குக் கூறுங்கள்” என்றது அப்பருந்து.

ஜாம்பவான் ஜடாயு எவ்வாறு மரணமடைந்தான் என்பதை விளக்கினான். “ராமனின் மனைவி ஸீதையைக் கவர்ந்து செல்லும் ராவணனைத் தடுக்க அவனை ஜடாயு பலவிதமாக தன் அலகினாலும் இறக்கைகளாலும் தாக்கினான். கோபம் கொண்ட அரக்கன் தனக்கு சிவபெருமான் வரமாகக் கொடுத்த வாளினால் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டியதோடு அவனைக் குற்றுயிரும் கொலை உயிருமாக வீழ்த்தினான். ஸீதையைத் தேடி அங்கு வந்த ராமனிடம் உன் தம்பி நடந்ததைக் கூறி உயிர் நீத்தான்.”

ஸம்பாதி ஜடாயுவின் தீரத்தை மெச்சி, “நானும் அந்த அரக்கன் ஒரு பெண்ணைக் கடத்தி தென்கிழக்கு திசையில்  செல்வதைப் பார்த்தேன். ஓ! அவன் ராவணனா?” என்றான்.

அனுமன் ஸம்பாதியிடம், “நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்யவேண்டும். உங்கள் கூர்ந்த பார்வையால் ராவணன் சென்ற திக்கை நோக்கி அவன் ஸீதையை எங்கு சிறை வைத்துள்ளான் என்பதனைக் கண்டு சொல்லவேண்டும்” என்றான்.

ஸம்பாதி தன்னை மீண்டும் அக்குன்றில் ஏற்றிவைக்குமாறு பணித்தான். அனுமன் அவ்வாறே செய்ய, தனது தொலை நோக்கும் திறனால் இலங்கையில் அரக்கிகளைடையே ஸீதை படும் துயரினை விவரித்தான். அவ்வாறு அவன் சொல்லும்போதே அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸம்பாதியின் இறக்கைகள் மீண்டும் வளர ஆரம்பித்தன.

“ஆஹா! சூரிய பகவான் ’ராம காரியத்திற்கு உதவி செய்தால் எரிந்துபோன உன் இறக்கைகள் மீண்டும் முளைக்கும்’ என்று முன்பு சொன்னது பலித்து விட்ட்தே” என்று மகிழ்வோடு அந்த வரலாற்றை விவரிக்க ஆரம்பித்தான்.

…..இள வயதில் நானும் ஜடாயுவும் யார் உயர உயரப் பறக்க வல்லவர் என்று போட்டியிட்டோம். அவ்வாறு பறந்து சூரிய மண்டலத்தையே எட்டிவிட்டோம். கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியாத ஜடாயு “அண்ணா என்னைக் காப்பாற்றுங்கள்” என அலறினான். நான் உடனே அவனைவிட உயரப் பறந்து என் இறக்கைகளால் அவனை சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து காப்பாற்றினேன். இந்த முயற்சியில் என் இறக்கைகள் எரிந்து சாம்பலானதால் நான் இக்குன்றின்மீது வீழ்ந்து விட்டேன். இதை அறியாத ஜடாயு தன்னிடத்திற்குச் சென்றுவிட்டான். எரிச்சலில் கதறிய என்னை சூரிய பகவான் பரிவோடு பார்த்து, “ஸம்பாதி, கவலை வேண்டாம். என்றாவது ஒரு நாள் ஸீதையைத் தேடிக்கொண்டு இக்கடற்கரைக்கு வானரர்கள் வருவார்கள். அவர்களுக்கு நீ உதவி செய்தால் உன் இறக்கைகள் மீண்டும் வளர்ந்துவிடும்” என்றார். அதன்படி ராம காரியத்திற்கு சகாயம் செய்ய நானும் இத்தனை காலமாகக் காத்திருந்தேன். உங்கள் நல்வரவால் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. நானும் உய்ந்தேன்….

”வானரர்களே, நீங்கள் அனைவரும் இங்கிருந்து நூறு யோசனை தூரத்தில் உள்ள இலங்கை செல்வது கடினம். உங்களில் பலம் பொருந்திய ஒருவனை ஸீதையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்துங்கள்” என்று சொல்லி ஸம்பாதி தன்வழியே பறந்து சென்றான்.

அதன்பின் ஜாம்பவான் தலைமையில் ஆலோசனை நடந்தது. எல்லாருடைய சக்தியையும் ஆராய்ந்து அவன் இந்த செயற்கரிய செயலை செய்ய வல்லவன் அனுமனே என்ற முடிவுக்கு வந்தான். பின்னர், ஜாம்பவானே அனுமனைப் பலவாறு சிலாகித்து உற்சாக மூட்டினான். ’சுந்தரன்’ எனும் பெயரையும் பெற்றிருந்த அனுமன் பெரிய உருக்கொண்டு இந்த அசாத்திய செயலைச் சாதிக்க, ராம நாமத்தினை ஜபித்தவாறு  மஹேந்திர மலையிலிருந்து இலங்கை நோக்கித் தாவ முற்பட்டான்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (8)

  1. //ராமனும் இளைய பெருமாளும் ஒரு குஹையில் வாசம் செய்தனர். //

    உண்மையிலேயே இந்த குகை தங்க அருமையான இடம்.  எங்கிருந்தோ குளிர் காற்று அருமையாக வீசுகிறது.  நாங்க போனப்போ ஒரு துறவி, தமிழ் பேசுபவர் தான் ஆனால் மிக இளைஞர் இருந்தார். அவரின் சீடர் அவர் தந்தை வயதுக்காரர்! :))) தக்ஷிணாமூர்த்தி நினைவில் வந்தார். :))))

    அருமையான கட்டுரை. முழுதும் கம்பனை ஒட்டியே எழுதுகிறீர்களோ?

  2. அன்புள்ள கீதாம்மா!
    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. பெரும்பாலும் கம்பனின் தாக்கமே அதிகம். ஆதிகவி வால்மீகியின் சுந்தரகாண்டம் முழுவதும், இதர காண்டங்களில் சில சர்கங்களையும் படித்ததுண்டு. மூதறிஞர் ராஜாஜியின் ‘சக்கிரவர்த்தி திருமகன்’ மூலம் வால்மீகி காவியத்தின் சிறப்பை அறிந்து கொண்டேன். மற்றபடி, அண்ணாசாமி பாகவதர், எம்பார் விஜயராகவாச்சாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தூப்பில் லக்ஷ்மிநரஸிம்ஹன் முதலியோரின் தமிழ்க் கதா காலக்ஷேபங்கள், மற்றும் ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் அப்பாலாசார்யுலு, மல்லாதி சந்திரசேகர ஸாஸ்திரி, சாகண்டி கோடீஸ்வர ராவ், சாமவேதம் ஷண்முக சர்மா முதலியோரின் தெலுங்கு உபன்யாசங்களில் கேட்ட விஷயங்களும் கை கொடுத்துள்ளன. ஆழ்வார்கள் ஆண்டாள் பாசுரங்களும் வெகுவாகப் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.
    வணக்கத்துடன்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *