ராமஸ்வாமி ஸம்பத்

சபரி கூறியதுபோல் ரிச்யமுகத்தில் நல்மனம் படைத்த வானர வீரன் அனுமன் ராமன் வருகைக்காகக் காத்திருந்தான். அனுமன் வாயு புத்திரன். பதினொரு ருத்திரர்களில் ஒருவன். ராமாவதாரம் எடுக்கும் முன் திருமால் எல்லா தேவர்களையும் தன் காரியத்திற்கு உதவும் பொருட்டு பூமியில் பிறக்குமாறு பணித்தார். இதைக்கேட்ட பரமேஸ்வரன் வைகுண்டத்திற்கு ஏகி நாரணனிடம் “நானும் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் பரமாத்மா” என்றார். பரமபதநாதன் மலர்ந்த முகத்தோடு, “பரம்பொருளே! உங்கள் ஆசி ஒன்றே போதும்” என்றார்.

“இல்லை இல்லை. நான் கட்டாயம் உங்களுக்கு உதவுவதற்கு பதினோராவது ருத்திரனாக அவதரிக்கப் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டார். அப்பரமனே அனுமனாக. வானர குலத்தைச் சேர்ந்த அஞ்சனாதேவிக்கு வாயு புத்திரனாக உதித்தார். பிறந்தவுடனே சூரியனை ஒரு பழமாகக் கருதி அதனை விழுங்கும் பொருட்டு அனுமன் வான்நோக்கித் தாவினான். சூரியனுக்கு ஆபத்தென இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கினான். நிலைகுலைந்து கீழே வீழ்ந்த அனுமனைக்கண்டு வாயு சினம் மேலோங்க மூவுலகிலும் காற்று இல்லாமல் செய்தான். இதனால் ஏற்பட்ட சீரழிவை நீக்க, பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் வாயுவை நாடினர். “என் மகனுக்கு உங்கள் சக்தியை அளித்தால்தான் என் கோபம் தணியும்” என்று வாயுதேவன் கூற அனைவரும் அவ்வாறே செய்ய அனுமன் மிக்க பலசாலியும் அறிவாளியுமானான். அவனுக்கு சூரியன்  ஆசானாகி வேதநெறிகளையும், ஏனைய சாஸ்திரங்களையும், நவவியாகரணங்களையும் கற்பித்தான். குருதக்ஷிணை அளிக்க முற்பட்ட அனுமனை நோக்கி, “நீ என் மகன் கிஷ்கிந்தை இளவரசன் சுக்ரீவனுக்கு அமைச்சனாகி சேவை புரி.  பின்னர் ஸ்ரீமந்நாராயணனின் அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவருக்கு துணையாகப் பணியாற்று” என்று ஆதவன் ஆணையிட்டான். அப்போதிலிருந்து ராமன் வருகையை எதிர்நோக்கியவாறே சுக்ரீவனின் அந்தரங்க அமைச்சனாகக் திகழ்ந்தான் அனுமன்.

ரிச்யமுகத்தின் எல்லையை நெருங்கிய ராம லக்ஷ்மணர்களை  வானர இளவரசன் சுக்ரீவன் சாரணர்கள் மூலம் அறிந்து, ‘அவர்கள் வாலியின் கையாட்களாக இருப்பார்களோ’ என பயந்து அனுமனை அழைத்து, ”யாரோ வில்லேந்திய இருவர் நமது மலை நோக்கி வருகிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல் எனக்கு வேண்டும். ஒருவேளை அவர்கள் வாலியின் ஆட்களாக இருந்தால் அவர்களை இங்கு வராமல் தடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டான்.

சுக்ரீவனை வணங்கி அனுமன் ஒரு அந்தணவேடம் பூண்டு ராம லக்ஷ்மணர் அருகே சென்றான். அவர்களது ஆக்ருதி அவனை வெகுவாகக் கவர்ந்தது. ‘இவர்களைப் பார்த்தால் வாலியின் ஆட்களாகத் தென்படவில்லை. இவர்கள் யாராக இருக்கும்?’ என சிந்தித்தவாறு,  அவர்களை நோக்கித் தன் இனிய குரலில் “கவ்வை இன்றாக நுங்கள் வரவு!” என்று முகமன் கூறி, மேலும் பேசலுற்றான்: ”வில்லேந்திய நீங்கள் ஒரு அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் உங்கள் சடைமுடிகளைப் பார்த்தால் துறவிகளோ என்றும் தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் ராஜரிஷிகளா … இல்லை தேவரிஷிகளா…? உங்கள் கனிவான பார்வையும் பொலிவு பொங்கும் முகங்களும் என்னைக் கிறங்க வைக்கின்றன. என்னைப் போலவே இந்த மலையில் உலாவும் விலங்குகளும் பறவைகளும் உங்களை வரவேற்பது போல ஆர்ப்பரிக்கின்றன. இப்பர்வதப் பொழில்களும் திடீரெனப் பூத்துக் குலுங்குகின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது துயர் இழையோடும் உங்கள் வதனங்கள் என் மனத்தைக் கலக்குகின்றன. நீங்கள் யார்? இக்குறிஞ்சிப் பகுதியில் எதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்?

“மகாபலம் பொருந்திய கிஷ்கிந்தை வானர அரசன் வாலி தன் இளவலான சுக்ரிவனைத் தவறாகப் புரிந்துகொண்டு நாடு கடத்தியதோடல்லாமல் அவன் மனைவி ருமையையும் தன்வயமாக்கிக் கொண்டுவிட்டான். அச்சம் கொண்டு சுக்ரீவன் இங்கு தஞ்சம் புகுந்துள்ளான். ஏனெனில் மதங்க முனிவரின் சாபத்தால் வாலி இப்பகுதிக்கு வரமுடியாது; வந்தால் உயிர் இழப்பான். நான் வாயு பகவானின் புத்திரன். என் பெயர் அனுமன். சுக்ரீவனின் அமைச்சன். நீங்கள் யாரென்று இப்போது தெரிந்துகொள்ளலாமா?.”

இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அனுமன் தன் உரையை முடித்தான்.

உள்ளத்தை அள்ளும் இவ்வினிய சொற்களைக் கேட்ட ராமன் தன் இளவலிடம் “தம்பி, நாம் யார் உதவியைக் கேட்க விழைகிறோமோ, இறை அருளால் அவன் அமைச்சனே நம் முன் வந்திருக்கிறான். இப்படிப்பட்ட அமைச்சனைப் பெறுவதற்கு சுக்ரீவன் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இவன் சாதாரணமானவன் அல்லன். ரிக், யஜுர், ஸாம வேதங்களையும் மற்றும் பிற சாஸ்திரங்களையும் கசடறக் கற்றவனாகத் திகழும் இந்த சொல்லின் செல்வன் ஒரு நவவியாகரண பண்டிதனாகவும் இருக்கவேண்டும். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளை அளந்து நம் நிலையை இவனுக்கு உணர்த்தி நாம் சுக்ரீவனின் நட்பை நாடி வந்திருக்கிறோம் என்று சொல்” என்றான்.

லக்ஷ்மணனும் தாங்கள் அயோத்தியை விட்டு நீங்கியது, நீண்ட வனவாசத்தில் ஸீதையைப் பறிகொடுத்தது, கபந்தன் மற்றும் சபரியின் அறிவுரைப்படி சுக்ரீவன் நட்பைக்கோரி வந்திருப்பது பற்றி விவரித்து, “இதோ இவர் தான் ராஜ்ய பட்டத்தைத் துறந்த ராமன். நான் அவர் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறினான்.

’ராமன்’ என்ற சொல்லை கேட்ட அனுமன் புளகாங்கிதம் அடைந்து, ‘தான் யாருக்காகக் இத்தனைக் காலம் காத்திருந்தோமோ அந்த தெய்வம் எதிர்பட்டுவிட்டது’ என மகிழ்ந்து, தன் அந்தண உருவை நீத்து சுயரூபத்தை அடைந்தான்.

பின்னர் ராமன் அடிபணிந்து, “ஐயன்மீர், இம்முட்புதர் அடர்ந்த மலையில் தாங்கள் பயணிப்பது கடினம். ஆகவே, நீவிர் என் புஜங்களில் அமருங்கள். நான் உங்களை எம்மன்னன் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன்” என்றான் அனுமன்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (6)

 1. பெருமதிப்புக்குரிய ஐயா
  வணக்கம்/
  நவ வியாகரணம் என்பது என்ன? நவ என்றால் ஒன்பது என்று எடுத்துக் கொள்வதா அல்லது புதிய என்று எடுத்துக் கொள்வதா? இராமாயண காலத்திற்கு வெகு காலத்திற்குப் பின் தான் பாணினி வியாகரணம் செய்தார் என்பது வழக்கு. பாணினிக்கு முன் ஏதாவது வியாகரணம் இருந்ததா? அப்படியானால் மூல நூலைப் பாணினி குறிப்பிட வில்லையே.

  கம்பனும் தன் முதல் நூலை ” நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை செய்தா அறிந்த வான்மீகி என்பான் என்றும் அதனைத் தொடர்ந்தே தாம் இராமகாதையை எழுதுவதாகவும்

  யோக சாஸ்திரத்தை எழுதிய பதஞ்சலியும் “அத யோக அனுசாஸனம்” என்றே குறிப்பிட்டார். காரணம் பதஞ்சலிக்கு முன் ஹிரண்ய கர்பர் யோக சாஸ்திரம் செய்தார் என்பது “ஹிரண்ய கர்போ யோகஸ்ய வக்தா நான்ய: புராதன: என்பதனால் விளங்கும்.

  என் ஐயத்தைப் போக்குமாறு வேண்டுகிறேன்
  அன்புடன்
  நந்திதா

 2. அனுமன் வந்துவிட்டான். இனி எல்லாம் ஜயமே.  ராமாயணத்தில் தான் எத்தனை முறை ராமகதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது!  அதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.  ராமனுக்காக எத்தனை பேர் காத்திருந்திருக்கிறார்கள்!

 3. அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய நந்திதா அவர்களே!
  வணக்கம் பல. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
  நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்களே. அவையாவன: இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம். இவற்றில் பாணிணீயம் ஒன்றே புழக்கத்தில் உள்ளது.
  “Wnen Lord Siva performed His primordial cosmic dance, Bharatha picked up the nuances of Naatyam, Patanjail the Yoga Sutras and Paanini the Vyaakaranam” என ஆன்றோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
  அனுமனை ராமன் நவவியாகரண பண்டிதன் எனப் புகழ்கிறான். வால்மீகி ராமாயணத்தில் சூரிய பகவானிடம் நவ வியாகரணங்களைக் கற்றுக்கொண்டதாக ஒரு குறிப்பு உள்ளது.
  அனுமனுக்குப்பின் ஸ்ரீவேதாந்த தேசிகர் ஒருவரே நவ வியாகரண பண்டிதர் எனப் பெயர் பெற்றார்.
  எளியேன் அறிந்தது இவ்வளவே. மேல் விவரங்களை வேத பண்டிதர்களே சொல்ல வல்லவராவர்.
  மீண்டும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
  இவண்
  ஸம்பத்

 4. அன்புள்ள கீதாம்மா!
  வணக்கம். ’அனுமன் வந்துவிட்டான்’ என தாங்கள் கூறுவதில் உங்கள் உவகையின் எழுச்சி தென்படுகிறது. எப்பேர்பட்டவன் அவன்! ஸீதா சோக நாசனன், லக்ஷ்மணப் பிராண தாதா, அறிஞர்களில் முன் நிற்பவன், நவ வியாகரண பண்டிதன், சொல்லின் செல்வன், புலன்களை வென்றவன், அதிபலசாலி, வீராதிவீரன், எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை எளியவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைபவன். அவன் இருக்கும் இடத்தில்தான் ஜயலக்ஷ்மியும் உறைவாள்.
  மூதறிஞர் ராஜாஜி சுந்தர காண்டத்தின் பெருமையை விளக்கும்போது
  அப்பகுதியில் அனுமனும் ஸீதாபிராட்டியும் ராமகதையைச் சொல்வதைக் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட தெவிட்டாத கதை ராமனின் கதை.
  மிக்க நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு.
  இவன்
  ஸம்பத்

 5. பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம்
  ..//இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம்//
  காசக்ருத்ஸ்னம் என்பது காகக்ருத்ஸ்னம் என்றும் சகதயம் சகடாயனம் என்றும் ஸாகலம் என்பது ஸாகல்யம் என்றும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாக்ஞ வல்க்யருடன் வாதம் புரிந்த விதக்த சாகல்யர் என்பவர் ஒரு வியாகரணம் எழுதினார் என்பதும் யாக்ஞ்ய வல்க்யரின் சாபத்தால் எரிந்து சாம்பலானார் என்றும் படித்திருக்கிறேன், ஆனால் அந்த வியாகரணம் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.
  ப்ராஹ்மணத்தில் இந்த்ரோ மத்யதோ வ்யாகரோத் என்ற வாக்கியம் உள்ளது. இதனால் இந்திரன் ஒரு வியாகரணம் செய்தான் என்று கொண்டுள்ளனரோ என்ற ஐயம் உள்ளது,
  ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பதற்கு விளக்கம் எழுதியவர்கள் கூட ஐந்திர வ்யாகரணம் ஒன்று இருந்ததாகக் கூறுகின்றனர், இந்திரன் செய்திருந்தால் அதற்கு ஐந்திரம் என்ற பெயர் வந்திருக்காது, காரணம் சிவனைப் பற்றியது சைவம் விஷ்ணுவைப் பற்றியது வைஷ்ணவம் என்பது போன்று இந்தினைப் பற்றியதாகத் தான் ஐந்திரம் என்பது இருக்க வேண்டும். பாணினி எழுதியது பாணினீயம் என்பது போல இந்திரனால் செய்யப் பட்டிருப்பின் இந்திரீயம் என்று தான் வந்திருக்க வேண்டும்,
  ஒரு பழம் பாடல்
  ஏழியன் முறையது எதிர் முக வேற்றுமை
  வேறென விளம்பான் பெயரது விகாரமென்
  றோதிய புலவன் உளன் ஒருவகையால்
  இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் என்பதே அப்பாடல்
  இதை வைத்துக் கொண்டும் இந்திரன் ஒரு வியாகரணம் செய்தான் என்றே கூறுகின்றனர், ஆனால் பாடலைச் சற்றுக் கவனித்துப் பார்த்தால் இந்திரன் என்ற சொல் பெயர் விகாரமடைந்து எட்டாம் வேற்றுமை ஆயிற்று என்று ஒரு அநாமதேயப் புலவன் கூறியுள்ளான் என்றே தேறும்.
  தவறு இருப்பின் தள்ளிவிட்டு மன்னிக்கவும்
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 6. அன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய நந்திதா அவர்களே!
  தங்கள் பின்னூட்டம் நவ வியாகரணங்களைப் பற்றி எனக்கு மேலும் பல அரிய தகவல்களை அளிக்கின்றது. வெறும் கேள்வி ஞானத்தால் மட்டும் இத்தகைய விஷயங்களைத் தெரிந்துகொண்ட இந்த அரைகுறைப் பாமரனின் தவறுகளைத் திருத்தியுள்ள தங்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வது போல் ‘ஐந்த்ரியம்’ என்றுதான் இருக்க வேண்டும். யாக்ஞ்ய வால்கியர் சாகல்யரைப் பற்றிய தங்களது இடுகைக்கும் எளியேனின் நன்றி.
  வணக்கத்துடன்,
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *