ராமன் வரும் வ​ரை காத்திரு… (9)

ராமஸ்வாமி ஸம்பத்

இதுவே ராமாயண காவியத்தில் சுந்தர காண்டத்தின் துவக்கம். இதில் சுந்தரனான அனுமனே பிரதான பாத்திரம். இக்காண்டத்தின் இறுதியில்தான் ராமன் வருகிறான். ஆகவே இதனை சுந்தரனின் காண்டம் என்றும் சொல்லாம். ஏழு காண்டங்கள் கொண்ட இக்காவியத்தில் இந்த ஒரு காண்டத்தைத் தவிர ஏனைய காண்டங்கள் காரணப்பெயர் பெற்றவை. இதற்கு மட்டும் ஏன் ‘சுந்தர காண்டம்’ எனப்பெயர் சூட்டப்பட்டிருகிறது என்பதனைச் சற்று ஆராய்வோமா?

‘சுந்தரம்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு ’அழகு’ என்று பொருள். இக்காண்டத்தைப் பற்றி ஒரு வடமொழி ஸ்லோகத்தினை இங்கு நினைவுகூர்வது பயனளிக்கும்.

      ’சுந்தரே சுந்தரோ ராமஹ சுந்தரே சுந்தரி கதா

      சுந்தரே சுந்தரி ஸீதா சுந்தரே கிம் ந சுந்தரம்?’

[சுந்தர காண்ட்த்தில் சுந்தரன் ‘தோள் கண்டார் தோளே கண்டார், தாள் கண்டார் தாளே கண்டார்’ எனப் பார்த்தவர்கள் பரவசிக்கும் எழிலுடை ராமன். சுந்தர காண்டமே ஒரு கவின்மிகு கதை. சுந்தர காண்டத்தின் செளந்தர்ய தேவதை ஸீதை. சுந்தரகாண்டத்தில் எதுதான் அழகில்லாதது?]

விஸ்வகர்மாவால் குபேரனுக்காக நிர்மாணம் செய்யப்பட்ட எழில் கொஞ்சும் இலங்கை நகரையும், மலர்கள் பூத்துக்குலுங்கும் அசோகவன பூம்பொழில்களையும் வர்ணிப்பதாலும்; அனுமன் தான் முன்பின் பார்த்திராத ஸீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் அழகான அணுகுமுறையாலும்; ராமனின் பேரெழிலை அழகின் இருப்பிடமும் அவநி தனையையுமான ஸீதையிடம் அனுமன் சிலாகித்துக் கூறுவதாலும்;  அழகுக்கே அழகூட்டும் ஸீதையின் கற்புநெறியை ராமனிடம் விவரிப்பதாலும் இக்காண்டத்திற்கு ’சுந்தர காண்டம்’ எனப் பெயர் சூட்டியிருப்பது முற்றிலும் பொருத்தமானதே.

மஹேந்திரகிரியிலிருந்து கடலைத்தாவி அனுகூல சத்துருக்களான மைனாக பர்வதம் மற்றும் சுரஸை செய்யும் இடர்ப்பாடுகளையும் பிரதிகூலம் செய்ய விழைந்த அரக்கி ஸிம்ஹிகையின் முயற்சியையும் முறியடித்து அனுமன் இலங்கைத் தீவினை அடைந்தான்.

இலங்கைக் கரையில் குதித்ததும், தன் உருவை சிறிதாக்கிக்கொண்டு மதில்மேல் நடக்க ஆரம்பித்தான். திடீரென்று யாரோ தன் வாலைப்பற்றி இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப்பார்த்த அனுமனுக்கு அந்நாட்டின் காவல் தெய்வமான லங்கிணி கண்பட்டாள். மிக்க உயரத்தோடும் சினத்தினால் சிவந்த கண்களோடும் நீண்ட தெத்திப்பற்களோடும் திறந்த வாயிலிருந்து தொங்கும் நீண்ட நாக்கினாலும் பரட்டைத் தலையோடும் அவள் பயங்கரமாக இருந்தாள்.

”மிக தைரியமாக இலங்கை நகருக்குள் நுழையும் நீ யாரடா?” என்று அவள் கர்ஜித்தாள்.

“எப்படியோ இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். எனக்கு இலங்கை அரசனின் மாளிகையையும் இந்த அழகான நகரத்தையும் காண வெகு நாட்களாக ஆவல். ஆகவே என்னை உள்ளே போகவிடு” என்றான் அனுமன்.

பேய்போல் சிரித்த லங்கிணி, “அப்படியா, இங்கே வா” என்று கூறி அவனைத் தரதரவென்று இழுத்து அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். இதனை எதிர்பார்க்காத அனுமன் பொத்தென்று கீழே வீழ்ந்தான். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு தன் வலது கை முஷ்டியால் அவள் முகத்தின்மீது பலமாக குத்தினான்.

வலிபொறுக்காமல் நிலைகுலைந்து வீழ்ந்த லங்கிணிக்கு பழைய நினைவு ஒன்று திரும்பியது. ’ஆஹா! பிரமதேவன் கூறியதுபோல் ராவணனின் இறுதிகாலம் நெருங்கிவிட்டதுபோலும்’ என நினைத்து, அனுமனை வணங்கி, “வானரனே! உனக்கு மிக்க நன்றி. உன்னால் எனக்குச் சற்றும் பிடிக்காத இந்த சேவகத்திலிருந்து விடுதலை கிடைத்துவிட்ட்து” என்று பரிவோடு கூறினாள். வியப்போடு நோக்கிய அனுமனிடம் தன் கதையைச் சொல்லத்தொடங்கினாள்

….நான் ஒரு தேவமாது. விஸ்வகர்மாவால் குபேரனுக்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இலங்கை நகரத்திற்கு குபேரன் என்னை காவல் தெய்வமாக நியமித்தான். அவன் மாற்றுத் தாய் மகனான வலிமைமிக்க ராவணன் குபேரனைப் போரில் தோற்கடித்து இந்த ராஜதானியையும் அவனுடைய புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டான். ராவணனின் ஆக்கிரமிப்பைச் சகிக்காமல் நான் பிரமதேவனிடம் சென்று முறையிட்டேன். அவர், “லங்கிணி, நீ அங்கேயே காவல் தெய்வமாக தொடர்ந்து இரு” என்றார். ”எனக்கு பொல்லாத அரக்கனிடம் பணிபுரிய இஷ்டமில்லை” என்று சொன்னபோது, அவர் ”கவலை வேண்டாம். அவன் முடிவுகாலம் வந்ததும் நீ என்னிடம் வரலாம்” என்றார். “அது எப்பொழுது வருமோ?” என்ற என் வினாவிற்கு, பிரமதேவர், “எப்போது நீ ஒரு பலம்வாய்ந்த வானரனால் அடிபட்டுக் கீழே விழுகிறாயோ அப்போதே ராவணனின் முடிவு நெருங்கிவிட்டது என்பதனை அறிவாய். அதன்பின் நீ இங்கு வரலாம்” என்றார்….

”வானர நண்பனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எதற்காக கடல்தாண்டி இங்கு வந்திருக்கிறாயோ அம்முயற்சி திருவினையாகும்”  என்று கூறி பிரமலோகத்திற்கு ஏகினாள் லங்கிணி.

’ராமனின் அருளால் இந்நகரத்தில் நுழையும் எனக்கு நற்சகுனங்கள் எதிர்ப்படுகின்றன’ என நினைந்தவாறு மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும், நறுமணம் கமழும் மலர்ச்சோலைகளையும், விதவிதமான பறவைகள் கூடி விளையாடும் நீர்நிலைகளையும் கண்டு, ‘இதைத்தான் சொர்க்கபுரி என்பார்களோ?’ என்று அனுமன் வியந்தான். எல்லா மாளிகைகளையும் தேடியபின், அனுமன் ராவணனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அந்தப்புரத்தில் மதிய இளைப்பாறிக் கொண்டிருக்கும் மந்தோதரியைக் கண்டு ஒரு கணம் அவள் ஸீதைதானோ என எண்ணினான். ‘என்ன விபரீதமான எண்ணம். என் அன்னை ஸீதாதேவி அரக்கர்கோன் அந்தப்புரத்தில் எவ்வாறு இருப்பாள்?’ என சமாதானம் செய்துகொண்டு தன் தலையில் ஒரு குட்டு வைத்துக் கொண்டான். மாலை வந்தது. ஸீதையை எங்கும் காணாமல், ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு ‘இத்தனை முயற்சியும் வீண்தானா?’ என்ற வருத்தத்தோடு, ‘ராமா, என் தெய்வமே! இனி நீயே துணைபுரிய வேண்டும்’ என பிரார்த்தித்தான். அதன் விளைவோ என்னவோ, கிழக்கில் பூரணச்சந்திரன் எழுந்தான். அந்த ஒளியில் அனுமனுக்கு அசோகவனம் தென்பட்டது. ‘ஆஹா, இந்த இடத்தில் நாம் தேடவில்லையே’ என நினைத்து அங்கு சென்றான்.

ஒரு மரத்தின் இலைகளிடையே தன்னை மறைத்துக் கொண்டு, ஸீதை அரக்கிகளிடையே படும்பாட்டைக் கண்டான். அவர்களை கொன்றுவிட்டு அன்னையைக் காக்கவேண்டும் என நினைத்தபோது ராவணன் அங்கு வந்து சேர்ந்தான்.

வந்த அரக்கர் அரசன், ஸீதையை நோக்கி “என் மனத்தைக் கொள்ளை கொண்டவளே! என்னை ஏன் இப்படி வாட்டுகிறாய்? கடந்த பத்து மாதங்களாக உன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் என்னை ஏன் அலட்சியம் செய்கிறாய்? என் பத்து மணிமுடிகளையும் உன் பாதத்தில் வைக்க சித்தமாக இருக்கிறேன். என்னைத் தோற்கடிக்க மூன்று உலகங்களிலும் யாரும் இல்லை.  சாம கானம் செய்து சிவபெருமானின் அருள் பெற்று அவன் கொடுத்த வாளின் மூலம் எப்பேற்பட்ட எதிரியையும் என்னால் கொல்ல முடியும். நாடு கடத்தப்பட்டு படைபலம் ஏதுமில்லாமல் இருக்கும் உன் கணவனால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. அவனால் இந்த பலத்த பாதுகாப்போடு கூடிய இலங்கையை நெருங்கவும் முடியாது. அந்த மனித பூச்சியை மறந்து விடு. என்னைச் சேர். உன்னை மூவுலகுக்கும் ராணியாகச் செய்கிறேன்” என்றான்.

அரக்கனின் முகத்தைக் கூட பார்க்காமல், ஒரு துரும்பினை இடையில் நட்டு அதனை நோக்கியவாறு ஸீதை பேசலுற்றாள்: “சாம கானம் செய்து சிவபிரானின் அருள் பெற்றதாக பெருமை பேசுகிறாய். சாம வேததைக் கற்றவன் இப்படி பிறன் மனவியிடம் தகாது நடந்து கொள்ளலாமா? உனக்கு நல்லறிவு புகட்டுவர் யாரும் இலங்கையில் இல்லையா? என் மணாளன் திருமாலை ஒத்தவர். உன்போன்ற நரிகளை எளிதில் வெல்லக் கூடியவர். அது தெரிந்துதான் அவர் இல்லாத போது துறவி வேடம் பூண்டு என்னை ஏமாற்றிக் கடத்திக் கொண்டு வந்துவிட்டாய் போலும். தான் ஒருவராகவே ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் படையாட்கள் கொண்ட உன் சகோதரர்களான கரன், தூஷணன் மற்றும் திரிசிரஸை எல்லாம் தவிடுபொடியாக்கியவர். உன் அழிவு காலம் நெருங்கி விட்டது. நீயும் உன் அரக்கர் குலமும் பிழைக்க வேண்டும் என்றால் என் நாதனிடம் என்னை ஒப்படைத்து சரண் புகுவாய்.” இவ்வாறு ராமனின் பராக்கிரமாத்தையும் சரண் புகுந்தவருக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையையும் பலவாறு விளக்கி ஸீதை விம்மிய வண்ணம் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

தசகண்ட ராவணன் முகங்கள் கோபத்தில் சிவந்தன. “என் சிறைக் கைதியாக இருந்தாலும் மூவுலகத்தையும் நடுங்க வைக்கும் என்னை மிகவும் அவமதித்து விட்டாய். இன்னும் இரு மாதங்கள் கெடு வைக்கிறேன். அதற்குள் உன் மனதை மாற்றிக்கொண்டு என் அந்தப்புரத்தைச் சேர்வாய். இல்லையேல் கெடு தீர்ந்தபின் நீ எனக்கு காலைச் சிற்றுண்டி ஆவாய். இதனை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு சரியான முடிவை நீ எடுக்கவேண்டும்” என்று உரத்த குரலில் கர்ஜித்துவிட்டு அங்குள்ள அரக்கிகளை நோக்கி, “நீங்கள் யாரும் உங்களுக்கு இட்ட பணியை சரியாகச் செய்யவில்லை. எப்படியாவது அவள் மனத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்” என்று அதட்டிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்ற பிறகு அரக்கிகள் ஸீதையிடம் ராவணனின் சிறப்பினை உயர்த்திப் பேசி, நைச்சியமாகவும் பயமுறுத்தியும் அவளை வழிக்குக் கொண்டுவர முயற்சித்தார்கள். “நீ எம்மானை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாங்களே உன்னை விழுங்கி விடுவோம்” என்றாள் அவர்களில் ஒருத்தி. அப்போதே அங்கு வந்த திரிஜடை – ராவணனின் தம்பி விபீஷணனின் மகள் – அவர்களை அதட்டி, “கொடூர மனம் படைத்தவர்களே! வாயை மூடுங்கள். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையின் நிலை மாறுவது உறுதி. நேற்று பிரம்ம முஹூர்த்ததில் நான் ஒரு கனாக்கண்டேன். அதில் ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் மூவரும் அரக்கர் பரிவாரம் புடை சூழ உடலெல்லாம் சாம்பல் பூசிக்கொண்டும் கோணி ஆடை அணிந்துகொண்டும் தென்திசை நோக்கி செல்கின்றார்கள். ஸீதை மணாளன் இங்கு வந்து அவளை ஒரு விமானத்தில் ஏற்றி செல்கிறான். இக்கனவின் பொருளை உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன். ராமனின் வெற்றியும் ராவணனின் வீழ்ச்சியும் உறுதி. அப்போது உங்கள் நிலையை நினத்துப் பாருங்கள்” என்றாள். இதைக்கேட்ட அரக்கிகள் அச்சம் கொண்டு வெளியேறினார்கள். திரிஜடை விம்மி விம்மி அழும் ஸீதையைப் பரிவோடு தேற்றிவிட்டு தன் தந்தையின் மாளிகை சேர்ந்தாள்.

தனித்து விடப்பட்ட ஸீதை துயரத்தில் ஆழ்ந்தவாறு தன் நிலை குறித்து ஆலோசனை செய்தாள்: ‘என் மனத்திற்கு இனியவரால் கடல் தாண்டி இங்கு வரமுடியுமா? அப்படி வந்து ராவணனைக் கொன்றாலும் அயலார் தேசத்தில் சிறைப்படுத்தப் பட்டிருந்த என்னை ஏற்றுக் கொள்வாரா? எது எப்படியானாலும் இரு திங்கள் கழித்து அந்த அரக்கனுக்கு சிற்றுண்டியாவதைவிட நான் ஏன் இப்போதே என்னை மாய்த்துக் கொள்ளக்கூடாது?’  மனத்தெளிவு கொண்டு ஸீதை அவ்வாறு செய்ய முற்பட்டாள்.

மறைந்திருந்த அனுமன் அவள் குருக்கத்தி மரத்தின் மெலிந்த கிளை ஒன்றினைத் தன் கழுத்தில் சுற்றிக்கொள்வதைக் கண்டான். ‘ஐயகோ! இது என்ன விபரீதம்? அன்னை தற்கொலை செய்து கொண்டால் ராமன் உள்ளிட்ட அனைவரும் அவ்வாறே செய்வார்கள் அல்லவா? உள்ளம் நைந்த நிலையில் அன்னை எடுத்த இம்முடிவை தடுத்தே ஆகவேண்டும்’ என நினைத்து மெல்ல தன் இனிய குரலில் பேச ஆரம்பித்தான், “ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமான்…”

இதனைக் கேட்ட  ஸீதை, ’இந்த கடல்சூழ் இலங்கையில் என் மாமனைப் பற்றி ஏதோ விவரணை கேட்கிறதே’ என்று சுற்றிலும் நோக்கினாள். ’அன்னை தற்கொலை முயற்சியைச் சற்று நிறுத்திவிட்டு என் குரலைக் கேட்கிறாள்’ என ஊர்ஜிதம் செய்து கொண்டு அனுமன் தொடர்ந்தான்:

“பலம் பொருந்திய மாபெரும் தேர் யானை குதிரை காலாட் படைகளைக் கொண்ட அயோத்தி மன்னன் தசரதனின் தவப்புதல்வனான ராமன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டி மகுடத்தைத் துறந்து இல்லாள் ஸீதை இளவல் லக்ஷ்மணனோடு பஞ்சவடியில் வனவாசம் செய்துகொண்டிருந்தான். அப்போது இலங்கை அரசன் ராவணன் வஞ்சகமாக ஸீதையைக் கடத்தி இங்கு சிறைப்படுத்தினான். இவ்விவரங்களை தசரதன் நண்பனான ஜடாயு எனும் பருந்தினிடமிருந்து தெரிந்து கொண்டு, சபரியின் ஆசியோடு தன்னைப்போல் மனைவியை இழந்து வாடும் வானர இளவரசன் சுக்ரீவன் நட்பை நாடி அவன் அண்ணன் வாலியைக் கொன்று அவனுக்குக் கிஷ்கிந்தை அரசு பதவி அளித்து அவன் மனைவி ருமையையும் மீட்டுத்தந்தான். சுக்ரீவன் ஆணைப்படி வானர வீரர்கள் நான்கு திக்குகளிலும் அன்னை ஸீதையைத் தேடுகின்றனர். தென்பகுதித் தேடலுக்கு அனுமன் எனும் பெயர்கொண்ட நான் நியமிக்கப்பட்டேன். ராமபிரானின் அருளால் நான் கடல் தாண்டி இங்கு வந்து அந்த கற்புக்கரசியைக் கண்டுகொண்டேன்.”

இவ்வாறு கூறி அவன் நிறுத்தியதும், ஸீதை நான்குபுறமும் நோக்கி மரத்தின்மீது அமர்ந்திருக்கும் அனுமனைக் கண்டாள். ‘இது கனவா, உண்மையா?’ என்று நினைத்து, ‘கனவில் வானரத்தைப் பார்த்தால் அபசகுனம் என்பார்களே’ என்று கலங்கினாள். ‘இல்லை இது கனவல்ல. இதோ அவ்வானரன் கீழே இறங்குகிறானே. ஒருவேளை இது அரக்கர்களின் மாயையோ?’ என்று அச்சம் கொண்டாள்.

அன்னையின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்த அனுமன், “அம்மா! நான் ராமனின் தூதன். வாயு புத்திரனான என் பெயர் அனுமன். என்னை நம்புங்கள். தங்களுக்கும் அவர்க்கும் மட்டும் தெரிந்த சில நிகழ்வுகளை அவர் கூறியபடியே சொல்கிறேன். அப்போதாவது என்னைப் பற்றிய உண்மை தங்களுக்கு தெரியவரும்” என்று சொல்லி அவற்றை ஒன்றொன்றாக விவரித்தான். அவற்றில் ஒன்றினை பெரியாழ்வாரின் பாசுரத்தில் பார்ப்போமா?

அல்லியம்பூ மலர்க்கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்

சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே!

எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓரிட வகையில்

மல்லிகை மாமாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

[அல்லிமலர் மாலை போன்றவரே! மலர்க்கண்களையும் மடப்ப குணமும் உடைய மான் போன்றவரே! அடியேன் விண்ணப்பம் கேட்டருள்க. பெருமானும் தேவரீரும் தனியாக இனிதிருந்த இடத்தே, இரவிலே ஒரு மல்லிகை மாலை கொண்டு அவரைத் தேவரீர் கட்டியதும் ஓர் அடையாளம் ஆகும்]

இங்கு ஒரு சிறிய விளக்கம். பஞ்சவடியில் ஒருமுறை அண்ணலும் அவளும் ஒரு போட்டியில் ஈடுபட்டனர். அதில் எவர் வெற்றி  பெறுகிறாரோ அவர் மற்றவரைக் ஒரு தூணில் கட்டவேண்டும். வெற்றிபெற்ற ஸீதை தன் மணாளனை கயிற்றினால் வலிக்க வலிக்கக் கட்டுவாளா? ஆகவே ஏகாந்தமான ஓரிரவில் யாரும் காணாவண்ணம் நீண்ட மல்லிகைச் சரம் ஒன்றினைக் கொண்டு அவனைக் கட்டினாள்.

இப்படி பல அந்தரங்க அடையாளங்களைக் கூறியதோடு அனுமன் ராமன் கொடுத்த மோதிரத்தையும் அவளிடம் பவ்யமாகக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட ஸீதை உள்ளத்தில் மகிழ்ச்சி அலைமோத அனுமனை மனமார ஆசீர்வதித்து ”என் துயரைத் துடைத்த நீ நீடுழி வாழ்வாயாக!” எனறாள். அனுமனை ‘ஜானகி சோக நாசனன்’ என்று பக்தர்கள் போற்றுவார்கள். அவன் பெருமைதான் என்னே! இப்புவியில் ஆண் மக்கள் அனைவரும் அனுமனைப்போல் அபலை நங்கையரின் துயர் நீக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அதன் பின்னர் ஸீதை தன் கூந்தலில் இருந்த  சூளாமணியை அனுமனிடம் கொடுத்து அதனை ராமபிரானிடம் சேர்க்குமாறு வேண்டினாள். “என் மணாளனிடம் இன்னும் ஒரே மாதம்தான் அவர் வருகைக்குக் காத்திருப்பேன் என்று சொல்” என்றாள்.

இதற்கான அனுமனின் பதிலை ஆதிகவி வால்மீகி மொழியில் கேட்போம்:

நிவ்ருத்த வனவாசம் தம் த்வயா ஸார்தம் அரிந்தமம்

அபிஷிக்தம் அயோத்யாயாம் க்‌ஷிப்ரம் த்ரக்ஷ்யஸி ராகவம்.

[”மாது சிரோமணியே! உனது கணவன் சத்ருக்களை அழிக்கப்போகும் பராக்ரமசாலி. அவன் வெற்றி பெறுவான். நீ அவனுடன் இணைவாய்; வனவாசம் பூர்த்தியாகி வெற்றி வீரனாக அயோத்தி திரும்பியதும் நீங்கள் இருவரும் அரியணையில் இணைபிரியாது வீற்றிருக்க பட்டாபிஷேகம் நிகழப் போகிறது.” தீர்க்க தரிசனத்தோடு வெகு அழகாக  அனுமன் ராமன் முடிசூடப்போவதை அன்னையிடம் சொல்லிவிட்டான். சுந்தரம் பொருந்திய ராமனின் பட்டாபிஷேகத்தை முன்கூட்டியே சுந்தரமாக நடத்திவிட்டான் சுந்தர காண்ட நாயகனான சுந்தரன் எனப்பெயர் கொண்ட அனுமன்].

பின்னர் அசோகவனத்தை நீங்கி இலங்கை மன்னனின் பலத்தை அறிய நகருக்குள் சென்றான்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (9)

 1. //இங்கு ஒரு சிறிய விளக்கம். பஞ்சவடியில் ஒருமுறை அண்ணலும் அவளும் ஒரு போட்டியில் ஈடுபட்டனர். அதில் எவர் வெற்றி  பெறுகிறாரோ அவர் மற்றவரைக் ஒரு தூணில் கட்டவேண்டும். வெற்றிபெற்ற ஸீதை தன் மணாளனை கயிற்றினால் வலிக்க வலிக்கக் கட்டுவாளா? ஆகவே ஏகாந்தமான ஓரிரவில் யாரும் காணாவண்ணம் நீண்ட மல்லிகைச் சரம் ஒன்றினைக் கொண்டு அவனைக் கட்டினாள்.//

  இது முற்றிலும் புதியது.  கேள்விப் படாத ஒன்று.

 2. திரு ராமஸ்வாமி சம்பத் அவர்களே படிக்கப் படிக்க இன்பம் பெருகும் ” ராமன் வரும் வரை காத்திரு தொடர்ந்து படித்து வருகிறேன்

  சத் விஷயங்களைப் படித்தால் வரும் இன்பம் இந்தத் தொடரிலே இடையறாது கிடைக்கிறது

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 3. பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம்
  அருமையான பதிவு. மூன்று நான்கு முறை படித்து விட்டேன்.
  ஒரு சிறு குறிப்பு
  சீதாப்பிராட்டியைத் தேடிக் களைத்த அனுமன்
  “நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
  தேவ்யை தஸ்யை ஜனகாத்மஜாயை”
  என்று காணாப் பிராட்டியைத் துதித்தான் என்றும் அவள் அருளால் அவளைக் காண முடிந்தது என்று எனக்குக் கற்பித்த பெரியவர் கூறினார். ,மேலும் கம்பன் கூறுகையில்
  விற்பெரும் தடந்தோள் வீர
  வீங்குநீர் இலங்கை வெற்பின்
  நற்பெருந்தவத்தளாய
  நங்கையைக் கண்ட்டேனல்லேன்
  என்ற பாடலுக்கு
  நங்கையைக் கண்டேன் நல்லேன் என்று பொருள்கொண்டு , பிராட்டியைப்பணிதந்தனால் என்னுடைய நல்லூழ் துணை வர அம்மாதரசியைக் கண்டேன் என்றும் பொருள் கூறினார்.
  ஸ்ரீ நரசிம்மப் பெருமாளுக்கு உக்ரன் என்ற ஒரு திருநாமம் உண்டு. இதற்கு உக்கிரமானவன் என்று பொருள் கொள்வாரும், உச்சை: க்ருஹ்ணாதி என்றும் பொருள் கொள்வாரும் உளர்.
  ஆனால் எனக்குக் கற்பித்த ஆசிரியர் உகார வாச்யாம் க்ருஹ்ணாதி இதி உக்ர:
  உகார வாச்யையான ஸ்ரீ தேவியைப் பற்றியதால்)(ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன்) அவனுக்கு உக்ரன் என்ற பெயர் வந்தது என்பார், உ என்பது கடகச் சொல் (சேர்த்து வைக்கும் சொல்)காணார்க்குக் கண்கொடுத்துக் காட்டுபவள் ஆகையால் லக்ஷ்மி என்ற பெயர் பெற்றாள் (லக்ஷயதி இதி லக்ஷ்மி)
  என்பதனால் தேவியின் திருவருளைப் பெற்ற அனுமனுக்கும் சுந்தரன் என்ற பெயரும் உண்டு.
  தவறாயிருப்பின் என்னிடமே குறை என்று தள்ளி விடவும்.
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 4. வணக்கம்
  ஒரு சிறு திருத்தம்
  விற்பெரும் என்பதை விற்பெறும் என்று திருத்தி வாசிக்கவும். தவறு நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்
  அன்புடன்
  நந்திதா

 5. அன்புள்ள கீதாம்மா!
  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
  ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குமுன் ‘ஆனந்த விகடன்’ தீபாவளி மலர் ஒன்றில் திரு. கோபுலுவின் கைவண்ணத்தில், ஸீதை ராமனை மல்லிகைச் சரத்தால் கட்டும் ஒரு அருமையான, அழகான சித்திரம் வெளிவந்தது. அதற்கான விளக்கத்தில் பெரியாழ்வாரின் பாசுரத்தைச் சுட்டிக்காட்டி இந்த உபகதை (கற்பனையாகவும் இருக்கலாம்) சொல்லப்பட்டிருந்தது.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 6. அன்புள்ள தமிழ்த்தேனீ அவர்களே!
  தாங்கள் எளியேனின் முயற்சியை உன்னிப்பாக படித்து வருவது என் மனத்திற்கு உவகை ஊட்டுகிறது.
  ‘ரமயதி இதி ராமஹ’ என்று ஆன்றோர்கள் மனத்துக்கினியானான ராமனை வர்ணிப்பார்கள். ராமனின் உருவம் மட்டுமா இன்பம்? அவன் நாமமே இன்பம். அவன் கதையே ஒரு இன்ப காவியமாகக் காலத்தை வென்று நிற்கிறது. அந்த இன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் மேலும் மேலும் இன்பம் பெருகுகிறது.
  நன்றி கலந்த வணக்கத்துடன்
  ஸம்பத்

 7. அன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய நந்திதா அவர்களே!
  அனுமன் ஸீதையையும் வேண்டினான் என்பதனை மறந்த இந்த அரைகுறைப் பாமரனனை மன்னிக்க வேண்டுகிறேன். தாங்கள் பதிவு செய்திருக்கும் சுந்தர காண்ட ஸ்லோகமும் கம்பனின் பாடலும் இத்தகவலை சிறப்பாக அறுதியிட்டுக் கூறுகின்றன. அன்னையின் அருள் இன்றேல் எவர்க்கும் வெற்றி எப்படி சாத்தியமாகும்?
  என்னதான் சாத்வீகமாகக் காணப்பட்டாலும் ஸீதை அருகில் இல்லாத ராமன் உக்கிரமாகவே திகழ்கிறான். அதேபோல் லக்ஷ்மி உடன் உறையாத நாரணன் becomes a grabber (வாமனாவதாரம்). லக்ஷ்மி சகவாசம் இல்லாத பரசுராமன் உக்கிரமாகவே பரிணமிக்கிறான். வராகாவதாரத்திலும் நரசிம்மாவதாரத்திலும் எதிரிகள் மனம் திருந்த வாய்ப்புக் கொடுக்காததால், லக்ஷ்மி வருத்தமுற்று நாரணனின் அடுத்த இரு அவதாரங்களில் பங்கு கொள்ளவில்லை என்று பெரியோர்கள் சொல்லக் கேட்ட்டிருக்கிறேன். அதன் விளைவாகவே ராமன், தேர், தேர்ப்பாகன், படை மற்றும் ஆயுதங்களை இழந்திருந்த இலங்கை வேந்தனுக்கு ‘இன்று போய் நாளை வா’ என்று கூறியதாகவும்; கிருஷ்ணாவதரத்தில் சிசுபாலனின் நூறு தவறுகளைப் பொருத்த பின்னே அவனை வதம் செய்ததாகவும் ஆன்றோர்கள் சொல்வர்.
  ’காணார்க்குக் கண்கொடுத்துக் காட்டுபவள் ஆகையால் லக்ஷ்மி என்ற பெயர் பெற்றாள் (லக்ஷயதி இதி லக்ஷ்மி)’ என்னும் தங்கள் விளக்கம் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.
  வணக்கத்துடன்
  ஸம்பத்
  .

 8. சுந்தரகாண்டத்தை அற்புதமாகத் தந்திருக்கிறீர்கள்!!.. அறியாத பல விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலுகிறது.. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி!

 9. அன்புள்ள பார்வதி இராமச்சந்திரன் அவர்களே!
  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எல்லாப்புகழும் ஸ்ரீ ஸீதாரமனுக்கே!
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 10. பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம்
  திண்மையும் வன்மையும் சிறப்பும் எளிமையும்
  உண்மையும் உவப்பும் உளமார் வனப்பும்
  நுண்மையும் சேர்த்து உரைத்திடும் திறமை
  திண்ணமே இராம சாமியின் எழுத்திலே
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 11. அன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய நந்திதா அவர்களே!
  தங்கள் வாழ்த்துக் கவிதைக்கு மிக்க நன்றி.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 12. தாமதமாகப்பார்க்க நேர்ந்தாலும் நல்லதொரு இடுகையைக்கண்டேன் கண்டேன் கண்டேன் (சீதையை கண்டேன் ராகவா பாடல் நினைவுக்கு வருகிறது!) பெரியாழ்வார் பாசுரம் சுந்தரகாண்டத்துக்கே சுந்தரம்!(அழகு)!

 13. அன்புள்ள ஷைலஜா அவர்களே!
  அமரர் வி.வி. சடகோபன் அற்புதமாகப் பாடியுள்ள அருணாசல கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனையை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி. திருமாலுக்கே மங்களாசாசனம் செய்த் பெரியாழ்வாரின் பாசுரம் பல்வகையாலும் சுந்தரமே.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published.