தமிழ்த்தேனீ

 

ரொம்பக் குழப்பம்.. இல்லை இனி குழப்பமே இல்லை, தெளிவுதான், இனி வாழ்க்கையில் எந்தக் கடவுளையும் நம்பப் போவதில்லை, கும்பிடப் போவதே இல்லை தீர்மானமான முடிவுக்கு வந்திருந்தார் சபேசன். ஏன் ஏன் இவ்வளவு விரக்தி. எதனால் வந்தது இப்படி ஒரு நிலை? யோசித்து யோசித்து மனம் வெறுத்துப் போனது அவருக்கு.

ஆமாம் வாழ்க்கையில் ஒவ்வொரு படி ஏறும் போதும் இறைவா நீயே துணை என்று அவர் கடவுளை நினைக்காத நேரமே இல்லை. காலையில் எழுந்தவுடன் அவர் படுக்கையின் எதிரே இருக்கும் கடவுள் படத்தில் தான் முழிப்பார். அந்தக் கடவுளைப் பாராமல் மற்ற எதையுமே பார்க்க மாட்டார்.

இரவு படுத்துத் துங்கும்போது மானசீகமாக எல்லாக் கடவுளரையும் கும்பிட்டுவிட்டு உறவினர் அத்துணை பேரையும் மனப்பாடமாக சொல்லி எல்லோரையும் நல்லா வைய்யின்னு வேண்டிக்கிட்டுத்தான் தூங்கப் போவார்.

ஆன்மீகம் ஆன்மீகம் என்று எப்போதும் ஆன்மீகத்தில் ஆழ்ந்து கடவுளைக் கும்பிட்டு கும்பிட்டு ஒரு சில நேரங்களில் அவருக்கே தோன்றும் நாம் அதிகமாக கடவுளக் கும்பிடுகிறோமோ என்னும் அளவுக்கு கடவுள்களைக் கும்பிட்டு ஆயினும் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று நினைத்து என்ன உபயோகம் நடப்பதெல்லாம் பார்க்கப் பார்க்க மனம் வெறுத்துப் போயிற்று அவருக்கு.

அவருக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று எங்குமே யாருமே பார்க்கவில்லை. எங்கே போனாலும் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் அவரைக் கேவலமாகப் பார்ப்பதும். அவரை மட்டும் மட்டம் தட்டுவதுமாகவே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

கடவுளைத் திட்டுபவன், கடவுளை மறுப்பவன் எல்லா இட்த்திலும் முன்னே இருக்கிறான், அவந்தான் முன்னுக்கு வருகிறான். கடவுளரின் கோயில்களிலே கொள்ளை அடிப்பவர்கள் உயர் பதவியிலே இருக்கிறார்கள். கடவுளுடைய கோயிலைக் கொள்ளை அடிப்பவர்களைக் கூட தண்டிக்காமல் கடவுள் வெறுமனே இருக்கிறான். என்ன ஆயிற்று?

அவனுக்கென்று ஏற்படுத்தி வைத்திருக்கும் உண்டியலை ஒருவன் உடைத்து பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போகிறான். அந்த உண்டியலைக் காவல் காக்க இருக்கும் கவலரைக் கொலை செய்துவிட்டு, இத்தனையையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறானே கடவுள். கடவுளுக்கே சக்தி போய் விட்டதா? எல்லோரையுமே காக்கும் சக்தி கொண்ட கடவுளுக்கு தன்னைத் தானே காத்துக்கொள்ளும் வலிமை கூட குன்றிப் போய்விட்டதா?

காலமெல்லாம் இறைவா!.. இறைவா!.. என்று வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு கூட கருணை காட்டாமல், யார் அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவனுக்கு எல்லா வித வசதிகளும் செய்து கொடுத்து தன்னருகே நிற்க வைத்து மாலை போட்டு, அருளுகிறானே.

கோயில்களிலும் அதிகமாகப் பணம் யார் கொடுக்கிறார்களோ அவருக்குத்தானே முதல் மரியாதை கிடைக்கிறது? பணம் இருந்தால் எப்படிப் பட்ட குற்றத்தையும், கொலைகளையும் செய்துவிட்டு சுதந்திரமாக இருக்கிறான் மனிதன்.

ஒரு வேளை கடவுளுக்கே புரிந்துவிட்டது போலும் உலகத்திலே பணம்.. பணம்.. பணம் அது இல்லாவிடில் மதிப்பே கிடையாது என்று. ஒவ்வொரு இடத்திலும் நியாயமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகளையும், மரியாதையையும் எந்தத் தகுதியும் இல்லாதவருக்கே கொடுத்து, அந்தத் தகுதி இல்லாத மனிதர்கள் இவரையே கேவலமாகப் பார்த்து எள்ளி நகையாடச் செய்கிறானே, எந்த இடத்துக்குச் சென்றாலும் பாதகம் செய்யும் மனிதர்களுக்கே பதவியும் மரியாதையும் தந்து உண்மையான பக்தி செய்பவரை அவமானப் படுத்துகிறானே. இப்படி இருந்தால் எப்படி பக்தி வளரும், எப்படிக் கடவுளை மக்கள் நம்புவார்கள். அவருக்கு சுத்தமாகவே நம்பிக்கை போய்விட்டது. கடைசீ வரையில் எல்லாம் உனக்குத்தான் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு ஒரே அடியாக அடித்துக் கீழே தள்ளி அதள பாதாளம் வரையில் அழுத்தி மேலே சுற்றிலும் மற்றவர்கள் நின்று அவரை ஏளனப் படுத்தி கெக்கெலி கொட்டிச் சிரிக்க வைக்கிறானே.

இனி இவனை எப்படி நம்புவது. நாம் எடுத்த முடிவுதான் மிகச் சிறந்த முடிவு. இனி இந்தக் கடவுளை நம்பப் போவதில்லை.கும்பிடப் போவதில்லை. தீர்மானமாக முடிவெடுத்து நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார் சபேசன்.

சொல்லி வைத்தாற்போல் மறு நாளிலிருந்து அவருக்கு வாழ்க்கையில் எல்லாமே வெற்றிகள்தான், ஆமாம் எங்கோ செல்பவர் கூட வலிய வந்து அவருக்கு உதவி அவருடைய எல்லாக் காரியங்களிலும் அவருக்கே வெற்றி வர வழி செய்கிறார்கள். அப்பாடா ! சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்தோம். இனி இந்தக் கடவுள் வேண்டாம் நம்முடைய மன உறுதியே போதும். அவருக்கு மனம் மிகத் தெளிவாக இருந்தது.

அன்று அவருடைய ஆத்ம நண்பர் வெங்கடாசலம் வருகிறான். இன்று முழுவதும் அவனோடு கழிக்க வேண்டும். ஆமாம் மனதிலே உற்சாகம், எடுத்த காரியம் யாவினும் வெற்றி. இனி என்ன வேண்டும்

என்ன சபேசன் நல்லா இருக்கியா என்று கேட்டபடி வந்தார் வெங்கடேசன்.
வா வா நல்லா இருக்கேன்,எனக்கென்ன குறைச்சல் இந்தக் கடவுளோட அருளே வேண்டாம்னு என்னிக்கு முடிவெடுத்தேனோ அன்னிலேருந்து நல்லா இருக்கேன் என்றார். என்ன சபேசன் என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்பிடிப் பேசறே என்றார் வெங்கடேசன்.

பேச்சு மட்டும் இல்லே, இனி எல்லா செயலும் என்னை நம்பித்தான், இனி எந்தக் கடவுளையும் நம்பப் போவதில்லைன்னு தீர்மானமே எடுத்துட்டேன். அதான் இப்போ நல்லா இருக்கேன் என்றார்.

அன்று இருவரும் மிக மகிழ்ச்சியோடு அவர்களுடைய இளமைப் பருவங்களையும் நினைத்து ,அதைப் பற்றி விவாதித்து பலவகை உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக இருந்தனர், மாலை ஐந்து மணி சரி சபேசா நான் இன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன், அதுவும் என்னோட எல்லா வேலைகளையும் ஒதுக்கிட்டு இவ்ளோ நேரம் மகிழ்ச்சியா பேசிகிட்டு இருந்தியே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி , சரி நான் கிளம்பறேன் என்றவர்,

சபேசனையே அவரையே உற்றுப் பார்த்து, சபேசன் என் மனசிலே ஒண்ணு தோணுது அதைச் சொல்லிட்டுப் போறேன். இப்போ நீ எல்லாக் காரியத்திலேயும் வெற்றி அடையறே, மகிழ்ச்சியா இருக்கே. இதுக்கெல்லாம் நீ கடவுளை நம்பாம அவரைக் கும்பிடாம இருக்கியே அதுதான் காரணம்னு நெனைக்கிறியா?

ஒரு வேளை இவ்வளவு நாள் பக்தியா கடவுளைக் கும்பிட்டியே அதனோட விளவாக் கூட இருக்கலாம் இல்லையா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், விதை போட்ட உடனே பலன் வருமா. அந்த விதை செடியா வளர்ந்து மரமா ஆகி அதுக்கப்புறம் பூத்துக் காய்ச்சு அதுக்குப் பின்னாடிதானே கனியாப் பலன் தருது

நல்ல கனியற நேரத்திலே நீ தப்பான முடிவெடுத்துட்டு, அந்தத் தப்பான முடிவுனாலேதான் இந்தக் கனி எனக்கு கிடைச்சிருக்குன்னு நெனைக்கிறியோன்னு எனக்கு தோணுது.

சரி எப்பிடி இருந்தாலும் நீ நம்பினாலும் நம்பாம இருந்தாலும் கடவுளுக்கு ஒரு நஷ்டமும் இல்லே, என்னைப் பொறுத்த வரை நீ நல்லா இருந்தா எனக்கு அது போதும். கடவுள் இருக்கா இல்லையான்னு எனக்கும் தெரியலே, ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியுது. எனக்கு கடவுளை விட நீதான், உன்னோட நட்புதான் முக்கியம், உன்னோட நலன்தான் முக்கியம், சரி நான் வரேன் என்றபடி கிளம்பினார்… வெங்கடேசன்..

மறுபடியும் குழம்ப ஆரம்பித்தார்!…சபேசன்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on ““ஆணிவேர்”

 1. குருச்சேத்திரப் போரில் கர்ணனுக்கு மரணம் ஏற்படாதிருக்க அவன் கடந்த காலத்தில் செய்த அரிய கொடைகளே கவசமாய்க் காத்து நிற்கின்றன.

  கடந்த கால வினைப்பயனே நமது நிகழ்காலப் பலாபலன்  அதுபோல் நிகழ்கால வினைகளின் தாக்கம் எதிர்காலத்தில் நம்மைப் பாதிக்கும்.  

  கடந்த காலம் ஒரு சேமிப்பு வங்கி.  அது நிகழ் காலத்தில் முதலுடன் வட்டியோடு பலம் தருகிறது.

  நல்ல இனிய சிறுகதை.  பாராட்டுகள் தமிழ்த்தேனீ.

  சி. ஜெயபாரதன்.  

 2. மிக்க நன்றி திரு ஜெயபரதன் அவர்களே

  அன்புடன்

  தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published.