தேர்ப்பாகன் மகன்…(பாகம்-4)
ராமஸ்வாமி ஸம்பத
”கண்ணா, நீங்கள் சொல்வதுபோல் தர்மன் என்னை அஸ்தினாபுர அரியணைக்கு உரியவனாக்கினாலும், என்னால் அந்த சிம்மாசனத்தில் அமரத்துடிக்கும் துரியோதனனுக்கு ஏமாற்றத்தை அளிக்க முடியாது. செங்கோல் என் கைக்குக் கிடைத்த உடனே அதனை துரியனுக்குத் தாரை வார்த்து விடுவேன். அது உங்களுக்கு சம்மதமாயிருக்குமா? மேலும், உங்களுக்கு எந்த அளவு தர்மம் முக்கியமோ அவ்வளவு எனக்கு என் தர்மமாகிய இடுக்கண் களையும் நட்பு முக்கியம். என்மீது அபரிமிதமான அன்பைப் பொழிவதோடு என்னை பூரணமாக நம்பியிருக்கும் துரியனை நான் எவ்வாறு கைவிட முடியும்? ’எல்லாவிதத்திலும் நட்பினால் பயனடைந்தபின் இறுதியில் ஆருயிர் நண்பனைக் கைவிட்டான் கர்ணன்’ என்ற அவலத்தை நான் சுமக்க வேண்டுமா? என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கோரிக்கையைத் தீர்க்க என்னால் இயலவில்லை,” என்றான் கர்ணன் முடிவாக.
மீண்டும் அவனுக்கே உரித்த மோஹனப் புன்னகையை உதிர்த்தான் கண்ணன். “எழுதிவைத்த விதியை ஈசனாலும் மாற்ற முடியாது என்பது சான்றோர்களின் வாக்கு. உன் மெச்சத்தகுந்த நிலைப்பாடு எனக்கு ஒருவிதத்தில் பெருமையாக இருக்கிறது. நீ குந்தியின் மகனல்லவா! அதனால்தான், உன் நிர்ணயம் ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதனை உலகுக்கு கொட்டி முழக்கும் வகையில் அமைந்துள்ளது. நான் வேண்டுமென்றே உனக்கு வைத்த சோதனையில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நாளைக்காலை உன்னை ஈன்ற அன்னை உன்னிடம் வரம் கோரி வருவாள். அவள்மீது சினம் கொள்ளாமல் அவள் நிலையைப் புரிந்து கொண்டு அவளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு செய்வாயாக,” என்ற கண்ணன், “வரம்வேண்டி உன்னிடம் வந்தேன். இப்போது நானே உனக்கு வரம் அளிக்க விழைகிறேன். கேள் கர்ணா,” என்றுரைத்தான்.
“நன்றி கண்ணா, நான் உங்களிடம் வேண்டுவது ஒரே ஒரு வரம்தான். தயவு செய்து நான் மூத்த பாண்டவன் என்பதனை அவ்வைவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான் கர்ணன் நீர்மல்கிய கண்களோடு.
”அப்படியே ஆகட்டும். நீ தன் முதல் புத்திரன் என்பதனை உலகுக்கு குந்தி மஹாராணியே பறைசாற்றுவாள். உன் உயர்ந்த உள்ளத்துக்கு இன்னொரு வரம் தர விரும்புகிறேன். கேள்.”
”கண்ணா, என்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் உங்களைப் பாராட்ட என்னிடம் சொற்களே இல்லை. உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவனை அவன் தந்தையின் தொழிலைக் கொண்டு இகழ்வது எவ்வகையில் நியாயம்?”
“கர்ணா, ‘செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்பதனை உணராத அற்பர்கள்தான் அப்படித் தூற்ற முனைவார்கள். எத்தனையோ பேர் என்னை மாட்டிடையன் என்று எள்ளி நகையாடினார்கள் என்பது உனக்குத் தெரியாததல்ல. ராஜசூய யாகசாலையில் பன்னாட்டு மன்னர்கள் குழுமியிருந்த சபையில் என்னை பசுபாலன் என்று பழித்தான் சிசுபாலன். அத்தகைய ஈனமானவர்களை பொருட்படுத்தக் கூடாது,”
“தெரியும் கண்ணா1 ஆனால் நான் அனுபவித்த வேதனை….’தேரோட்டி மகன், தேரோட்டி மகன்’ என கணக்கற்ற முறையில் என்னை இகழ்ச்சி செய்தார்களே.. என் வளர்ப்புத் தந்தை அதிரதன் ஒரு தேரோட்டி என்பது அவர் செய்த தவறா? தேரோட்டுவது இழிசெயலா? சொல் கண்ணா!.” உணர்ச்சிகளுக்கிடையே கண்களில் நீர்மல்கக் கேட்டு நின்ற ராதேயனை [கர்ணனின் வளர்ப்புத் தாயின் பெயர் ராதை என்பதால் அவன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான்] வருத்தமாகப் பார்த்தான் கண்ணன்.
”கவலைப் படாதே கர்ணா! எதற்கும் ஒரு தீர்வு உண்டு.. நீ எதை இழிநிலை என நினைத்து வருத்தப் பட்டாயோ, பிறர் எதை வைத்து உன்னை இழிவாகப் பார்த்தனரோ, அவைகளுக்கும் ஒரு முடிவுண்டு” என்று கூறி விடைபெற்றுக் கொண்டான் கண்ணன்….
நினைவலைகளின்று வெளிப்பட்ட கர்ணன், மானசீகமாகக் கண்ணனை வணங்கினான். ராஜசூய யாகத்தில் பங்குபெற்ற அந்தண சிரேஷ்டர்கள் விருந்து உண்டபின் அவர்கள் விட்டுச்சென்ற எச்சில் இலைகளை எவ்வளவு பவ்யத்துடன் கண்ணன் சேகரித்து ஆற்றில் கொண்டு சேர்த்தான் என்பதனை நினைவு கூர்ந்தான். “கண்ணா, இது என்ன விபரீதம்?” என்று கேட்டபோது. ”நான் எச்சிக்கலையும் எடுப்பேன்,” என்ற அவன் பதில் கர்ணன் செவிகளில் மீண்டும் ஒலித்தது.
“எச் சிக்கலையும் எடுக்க வல்லவரல்லவா இந்த வாசுதேவர்! தானே தேரோட்டியாகி, தேரோட்டும் தொழிலை வானளவுக்கு உயர்த்தியோடு மட்டுமல்லாமல் என்னுடைய ‘தேரோட்டி மகன்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் எவ்வளவு லகுவாகத் தொலைத்திருக்கிறார் இந்த பார்த்த சாரதி!” என்று மனதார அவரை வியந்து வாழ்த்தியதோடு, “இந்த விஜய சாரதியிடம் சரணடைந்த பாண்டவர்கள் எவ்வளவு பாக்யசாலிகள்! எங்கு கண்ணன் இருக்கிறாரோ அங்கு வெற்றிச் செல்வியும் கடாட்சிப்பாள் என்பதனை உணர மறுக்கிறானே துரியன்” என்று பச்சாதாபம் கொண்டான் அங்க நாட்டரசன்.
கர்ணன் மனம் துரியோதனனுக்காக ஒரு கணம் பரிதாபப்பட்டாலும் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து செயல்பட்டு தர்மத்தைக் காத்து வரும் கண்ணனின் கருணையையே நினைத்து நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கியது.
(முற்றும்)
படங்களுக்கு நன்றி :
http://www.tamilhindu.com/category/mahabharat/
சற்றும் எதிர்பார்க்காத அருமையான முடிவு.. கடைசி வரை விறுவிறுப்பாய்க் கொண்டு சென்றிருக்கிறீர்கள். நன்றியும், வாழ்த்துகளும். தீபாவளி வாழ்த்துகள்.
//தானே தேரோட்டியாகி, தேரோட்டும் தொழிலை வானளவுக்கு உயர்த்தியோடு மட்டுமல்லாமல் என்னுடைய ‘தேரோட்டி மகன்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் எவ்வளவு லகுவாகத் தொலைத்திருக்கிறார் இந்த பார்த்த சாரதி!”//
அட, அதுவும் அப்படியா! மிகவும் அருமை ஐயா. கண்ணனின் கருணையே கருணை. தேரோட்டி வாழ்க! தேரோட்டி மகனும் வாழ்க!
அன்புள்ள சின்னப்பெண் கவிநயா,
உன் மடலுக்கு நன்றி. சாதாரணமாக ஒரு சீருந்து நம்மைத் தாண்டி செல்லும்போது நாம் அந்த காரின் பின் இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார் என்றுதான் பார்ப்போம். ஆனால் அர்ஜுனன் அமர்ந்த ரதம் ஓடும்போது எல்லோர் பார்வையும் அவன் தேரோட்டிமீதுதான் பட்டது. கண்ணன் பார்த்தசாரதி மட்டும் அல்ல. எல்லோரும் பார்த்த சாரதி கூட!
தீபாவளி வாழ்த்துகளுடன்
ஸம்பத்
பிரமாதம். பாராட்ட மனமிருக்கும் அளவுக்கு வார்த்தைகள் இல்லை.
//கண்ணன் பார்த்தசாரதி மட்டும் அல்ல. எல்லோரும் பார்த்த சாரதி கூட!//
ச்வீட்! உங்களை நீங்களே மிஞ்சிக் கொண்டே இருக்கிறீர்கள் 🙂 கண்ணன் மீது காதலும் அதிகமாகிக் கொண்டே போகிறது 🙂 நன்றி ஐயா. இனிய தீபாவளி வாழ்த்துகள்!
ஈற்றடி: அதில் முரண் யாதுமில்லை. நீங்கள் சொன்னமாதிரி வியப்பு. இதிஹாசங்களில் குணாதிசயங்கள் பெரிதும் பேசப்படுகின்றன. அதிரதனும் ராதையும் அரங்கத்திற்கு வராத நிழல் பாத்திரங்கள் ஆனாலும், அவர்கள் வளர்த்த பிள்ளையாண்டான் பிரதான புருஷன் ஆகிவிட்டான், இங்கே. விதுரநீதி கர்ணனக்கு உதவவில்லை என்பது என்னை ஆயாசப்படுத்துகிறது.
வணக்கத்திற்குரிய திரு. அப்பாதுரை அவர்களே!
தங்கள் பாராட்டுச் சொற்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
ஸம்பத்