Featuredபத்திகள்

தமிழார்வம் ‘திரிகடுகம்: நச்சு மூன்று

 

இன்னம்பூரான்

5. நச்சு மூன்று

 

கல்லார்க்கு இனனா ஒழுகலும், காழ்க் கொண்ட

இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்

சிறியாரைக் கொண்டு புகலும்,-இம் மூன்றும்

அறியாமையான் வரும் கேடு. [3]

 

5.1. கற்றறியாதவர்க்கு உறவினனாகி நடத்தலும், மனவுறுதிகொண்ட இல்லாளை   கோலினால் அடித்தலும், தம் வீட்டுள் சிற்றறிவினரை  உடன் கொண்டு, புகுதலும், இம் மூன்று செயல்களும் தன் அறியாமையினாலே விளைகின்ற கேடுகளாம்.

5.2. அதாவது, மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் தீமைகள் விளைவிப்பன.

5.3. நல்லறம் தீயதை விலக்கவும் வேண்டும். நச்சுப்பொருள்களை புறக்கணிக்கச்சொல்வதும் மருத்துவ நெறியே. கல்வி அறிவை வளர்க்கும். கற்று அதன் பயனாக அறிவை பெறாதவர்களுடன் நட்பும், உறவும் கொண்டாடுவதைத் தவிர்ப்பது நலம்.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம்.  (மூதுரை 4: ஒளவையார்)

5.4. இல்லாளை அடிப்பது என்பது அவளை எந்த வகையில் துன்புறுத்துவதையும், கொடுமைக்கு ஆளாக்குவதையும், அவளுக்கு மன உளைச்சலை கொடுப்பதையும் குறிக்கும். இல் வாழ்க்கையில் விலக்க வேண்டிய நச்சு, அத்தகைய நடவடிக்கை. அன்றாட வாழ்க்கையில் இல்லத்தரசியின் மனதை புண்படுத்தாமல் இருப்பது பண்பு. பிரியமாக இருப்பது இருவருக்கும் சுகம். இவ்வாறு நல்லாதன் அறிவுரைத்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும், பெண்கள் பலதுறைகளில் திகழ்ந்தாலும், பேச்சளவில் பெண்ணியம் ஆண்களால் போற்றப்பட்டாலும், இல்வாழ்க்கையில் ஆணாதிக்கத்தின் ஆளுமை இந்தியாவில் அதிகமாக காணப்படுவது துர்பாக்கியமே. அநேக இல்லங்களில் நல்லாதனின் அறிவுரை இயல்பாகவே பின்பற்றப்படுவதை காண்கிறோம். இருந்தபோதிலும், ‘இல்லாளை கோலால் புடைத்தல்’ பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆங்கிலத்தில் chattel என்ற சொல் உண்டு. அதன் பொருள்: ஜங்கம சொத்து/ அடிமை. ஆண்கள் இயற்றிய சட்டம் இல்லாளை chattel என்றது! சில வருடங்கள் முன்னால், அடையார் பிரதான சாலை ஒன்றில் ஒருவன் ஒரு பெண்பாலரை தெருவில் போட்டு அடித்துக்கொண்டிருந்தான், ஒரு உருட்டுக்கட்டையால். தடுக்கப்போன எனக்கு பலமான அடி. தெரிந்த கடைக்காரர் ஒருவர் ஓடோடி வந்து என்னை காப்பாற்றினார். ஆனால், ‘அவன் தன் பொண்டாட்டியை அடிக்கிறான். நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?’ என்று தான் என்னை கேட்டார். போலீசுக்குப் போனேன். அந்த ‘இல்லாளை கோலால் புடைத்தவனை’ தருவித்தார்கள். அவனுடைய கூற்று,’ என் மனைவியை அடிப்பேன். இவர் யார் கேட்பதற்கு?’ . போலீசும் தலையாட்டியது. சமூகம் பெண்பாலாரை சமமாக நடத்தும் வரை, நம் நாடு உருப்படாது.

5.5. நமது இல்லம் நமது உறைவிடம். அங்கு அறிவீனரை உபசரிப்பது தீங்கு விளைக்கும். அறியாமையினால் இந்த தீமைகள் விளைவதால், அறியாமையை ஒழிக்கவேண்டும் என்பது தான் அடிப்படை கருத்து. சமூகமே ஒன்று கூடி கல்வியை பரப்ப முயன்றால் தான் அறியாமையை குறைக்க முடியும். ஆரம்ப கல்வி அனைவரைக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும் என்று கூறும் இந்திய அரசியல் சாஸனம், அதை அடிப்படை மனித உரிமையாக பிரகடனம் செய்ய மறந்ததால், கோடிக்கணக்கான இந்தியர்கள் கல்வியைன் பயனை பெறாமலே இறந்து போனார்கள். இன்றைக்கும் சர்வ சிக்ஷா அப்யான் என்ற அரசு கல்வி இயக்கம் இழுபறியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா நமது இல்லம் என்று எடுத்துக்கொண்டால், நாம் நல்லாதனர் அறிவுரையை மதிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

(தொடரும்)

இன்னம்பூரான்

11 11 2012

உசாத்துணை:

திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

தமிழ் இணையக் கல்விக்கழகம்

திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

சித்திரத்துக்கு நன்றி: http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_63019526005.jpg

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க