ராமஸ்வாமி ஸம்பத்

 

Alexander-The-Great-1

                                                                                                                                                                                                                                                                                                                                                                              

 

 jhelum“இது நதியா அல்லது கடலா’’ என்ற ஐயப்பாடு எழும் அளவில், அகண்ட ஜீலம் நதி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த்து. பருவக்காற்றினால் உந்தப்பட்டு அடாது கொட்டித்தீர்க்கும் மழை அந்த சிந்து மஹாநதியின் உபநதியை மேலும் மேலும் வெள்ளப்பெருக்கில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. உச்சிப் பொழுதாக இருந்தாலும் கார்மேகக் கூட்டம் வானத்தையே மூடிவிட்டதால் இயற்கை வெளிச்சம் வெகு குறைவாக இருந்தது. ’சல…சல..’. என்ற பலத்த அரவத்துடன் அலைமோதும் வெள்ளம், ‘விர்…விர்…’ என்று வீசும் அதிவேகக் காற்றின் பேரொலி, மற்றும் வான்முகில்களின் உருமல் அந்த பிராந்தியத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.

அத்தகைய கண்கொள்ளாக் காட்சியைத் தனது போர்க் கூடாரத்திலிருந்து வெளிவந்து அந்த மழையினூடே நனைந்து கொண்டே ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான் மாசிடோனிய மாமன்னன் அலெக்சாண்டர். ஜீலத்தின் கிழக்குக் கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பே பவுரவ நாட்டு மன்னன் புருஷோத்தமனுடன் நடந்து ஓய்ந்திருந்த போரில் அந்த யவன மன்னன் உடலை சிராய்த்திருந்த விழுப்புண்களின் வலியைக்கூட  ஓரளவுக்கு அக்காட்சி மறக்கச் செய்தது.

‘ஆஹா, எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ஹைடஸ்பெஸ்!**. இந்த உபநதியே இப்படியிருந்தால் இண்டஸ் (சிந்து மாநதி) எவ்வளவு பெரிதாக இருக்கும்! அப்புகழ்பெற்ற காஞ்ஜெஸ் (கங்கை மாநதி) எப்படியிருக்குமோ!’  என அவன் மனம் ஆலோசனையில் வீழ்ந்தது. ‘எப்படியாவது காஞ்ஜெஸ் சமவெளி நாடான மகதத்தையும் வெல்ல வேண்டும்’ என்ற ஒரு மனத்துடிப்பு வெளிப்பட்டது. சிந்து-கங்கை சமவெளி நாடுகளை வென்று கீழை நாடுகளையும் வீழ்த்தி தன் உலக ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டவேண்டும் என்பதே அவன் அவா.

ஆனால் அவன் படைவீரர்களோ வீட்டு நினைவு மேலிட்டதாலும், மாதக் கணக்கில் போர் புரிந்து பல நாடுகளை வீழ்த்திய களைப்பினாலும் மேற்கொண்டு போரிட விரும்பவில்லை. அதுவும் தவிர ஜீலம் போரில் தாங்கள் இதுவரை கண்டறியாத யானைப்படையின் எதிர்த்தாக்குதலால் அவர்கள் சற்று அச்சம் அடைந்ததும் அவர்கள் உற்சாகக் குறைவுக்கு ஒரு காரணம். மகத சாம்ராட்டின் யானைப்படை பவுரவ மன்னனின் படையைவிட பல மடங்கு பெரியது என்ற தகவல் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.  மேலும் பரத கண்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த முல்லைப் பிரதேசத்தில் உள்ள மரக்கிளைகளில் தலை கீழாகத் தொங்கியவாறு தவம் செய்யும் யோகிகள் அவர்களுக்கு வியப்போடு அச்சத்தையும் ஏற்படுத்தினர். “ஐயோ! இவர்கள் மாயாவிகளோ என்னவோ, என்ன செய்வார்க்ளோ?” என்ற பயம் அவ்வீரர்களைப் பீடித்து, ’போதும் இந்த ஓயாத சண்டை’ என்று எண்ண வைத்தது.

’என்ன வீரர்கள் இவர்கள்! நான் இவர்களுக்கு என்ன குறை வைத்தேன்? கை நிறைய ஊதியம் கொடுத்ததோடல்லாமல் மாசிடோனியாவில் உள்ள இவர்கள் குடும்பத்தாருக்கு உணவுப் பொருட்களோடு எல்லா வசதிகளையும் இலவசமாக அளித்திருக்கிறேன். இவற்றைத் தவிர, எனது திக்விஜயத்தில் வீழ்ந்த நாடுகளில் சூறையாடப்பற்ற விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் இவர்களுக்கே ஈந்தும் இவ்ர்கள் ஏன் இப்படி எனது ஆணையை மீறி நாடு திரும்ப விரும்புகிறார்கள்? நன்றி கெட்ட ஜன்மங்கள்!’ என அலெக்சாண்டர் பற்களைக் கடித்தான்.

அதே நேரத்தில், ஜீலத்தின் கீழ்க்கரையில் நடந்து முடிந்த அந்த உக்கிரமான போரில் ’தான் மெய்யாக வெற்றி பெற்றோமா?’ எனும் சந்தேகம் அவனுள் எழுந்தது. ’…இந்த நாட்டு மன்னன் எப்பேற்பட்ட வீரன்! என்ன உயரம், ஏழடி இருப்பானோ? அவன் முன் நான் ஒரு சித்திரக்குள்ளனே. போர் யானையின் மீது அமர்ந்து எவ்வளவு லாவகமாக அம்புகளையும் ஈட்டிகளையும் மாற்றி மாற்றி என் மீது எறிந்து என்னை இப்படிக் காயப்படுத்தி உள்ளான். குருதி சொட்டும் காயங்களுடன் தரையில் வீழ்ந்த என்னை ஏன் அவன் கொல்லவில்லை? அவனது தயக்கத்தைப் பயன்படுத்தித்தானே என் மெய்க்காப்பாளர்கள் அவனை சிறைபிடித்தனர்! அப்படி அவன் தயக்கம் காட்டாதிருந்தால் வெற்றி அவனுடையதாக இருந்திருக்கும் அல்லவா…’ என்றெல்லாம் அலெக்சாண்டரின் சிந்தனை ஓடியது.

‘கீழைநாட்டாரை எவ்வளவு குறைவாக எடை போட்டிருந்தோம். இங்கு வாழும் மக்கள் காட்டுமிராண்டிகள் என்றும் இவர்களை வீழ்த்துவது மிக எளிது என்றல்லவா நினைத்திருந்தோம். நாம் இதுவரை கண்டிராத இவர் யானைப்படை எவ்வளவு நாசத்தை நம் படைகளுக்கு உண்டாக்கி விட்டிருக்கிறது. நஞ்சு தோய்க்கப்பட்டக் கணைகளைத் துதிக்கைகளால் எறிந்து அந்த யானைகள் எத்தனை சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக என் உயிருக்கு உயிரான புரவி பூசிபாலஸ் இப்படையின் யானையால்தான் கொல்லப்பட்டது. என் வலது கை போன்ற தளபதி நினேயியாவை இந்த யுத்தத்தில்தானே காவு கொடுத்தேன். இந்த என் வெற்றிக்கு எத்தனை பெரிய விலையைக் கொடுத்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இப்படை யானைகள் சகதியான தரையில் சரியாகக் கால் ஊன்றமுடியாமல் பவுரவ நாட்டுப் படைகள் மீதே திரும்பிப் பாய்ந்ததால் அல்லவா அவர்கள் பக்கமும் பலத்த இழப்பு ஏற்பட்டது. கடந்த மாதங்களில் கிரேக்கம், எகிப்து, சிரியா, மத்தியதரைக் கடல் நாடுகள், பாரசீக நாடுகளெல்லாம் எவ்வளவு எளிதாக என்னிடம் சரண் அடைந்தன! இங்கு மட்டும் என் பராக்கிரமம் ஏன் செல்லவில்லை..?.’ என்று எண்ணி அந்த யவன அரசன் மனம் ஒடிந்து போனான்.

‘மேலும், பவுரவ நாட்டின் விரோதியான தக்‌ஷசீல சிற்றரசன் அம்பியின் உதவியில்லாமல் இந்த ஹைடஸ்பஸின் மேற்குக் கரையைக் கடந்து அதன் கீழ்க்கரையில் இப்போரினை நடத்தியிருக்க முடியுமா? பொற்குவைகளால் அவனை மயக்கி அல்லவா நான் கைபர் கணவாய் வழியாக இந்த பரத கண்டத்தில் கால் வைத்தேன். பவுரவ நாட்டிற்கு இந்த நதி இயற்கை அளித்துள்ள பெரிய அரண். அம்பியின் யோசனைப்படி இரவோடு இரவாக ஜீலத்தின் வடக்கு திசை நோக்கி படைகளை நகர்த்தி அகலக்குறைவான ஓரிடத்தில் பரிசல்கள் மூலம் கீழ்க்கரைக்கு வந்து சேர்ந்திராவிட்டால் மழை ஓயும்வரை நம்மால் எதுவும் செய்திருக்க முடியாது.’

இவ்வாறெல்லாம் ஆலோசனை செய்த அலெக்சாண்டருக்குத் தன் ஆசான் அரிஸ்டாடில் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது: ‘கீழைநாட்டவர்கள் ஆன்மீக பலம் மிகுந்தவர்கள். அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல.’ மேதை பிளாட்டோவின் முக்கிய சீடரான அவரது மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதனை உணர்ந்த நிலையில், மழையில் அதிக நேரம் நனைந்ததால் ஏற்பட்ட விழுப்புண்களின் வலி தாங்கமுடியாமல், உள்ளே வந்து மஞ்சத்தில் வீழ்ந்தான்.

“யாரங்கே? ரொக்ஸானாவைக் கூப்பிடுங்கள்” என்று உரத்த குரலில் கர்ஜித்தான்.

 “ஜீலம் நதி”  கிரேக்கர்களால் “ஹைடஸ்பெஸ்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி – 1)

 1. அலெக்ஸாண்டர் ஒரு மாவீரன் மட்டுமல்ல, நல்ல சிந்தனையும், விவேகமானவனும்கூட. போர்க்களத்திலே ஒரு மாவீரனான மட்டுமல்லாமல், பாமர மனிதனுக்குக் கூட நல்ல சிந்தனைகளைப் பாடமாக புகட்டியிருக்கிறான். மாவீரனை ஒரு உத்தமனாகச் சித்தரிக்கும் எழுத்தாளர் திரு ராமஸ்வாமி ஸம்பத் அவர்கள் இனி வரும் தொடர்களில், அலெக்ஸாண்டரைப் பற்றி  நாம் அறிந்திராத புதிய தகவல்களைத் தருவார் என்று நம்புகிறோம்

 2. நன்றி நந்திதா அவர்களே!
  அன்புடன்
  ஸம்பத்

 3. அலெக்ஸாண்டரைக் குறித்த பல புதிய தகவல்களை இந்தத் தொடர் மூலம் அறியக் காத்திருக்கிறேன். 

 4. பாதுகாப்புக் கேள்விக்கு பதிலளிக்கக் கட்டத்தை ஹைலைட் செய்தால் மட்டுமே தெரிகிறது.  முன்பெல்லாம் நன்றாய்த் தெரிந்து கொண்டிருந்தது. இப்போது வெறும் காலிக் கட்டம் மட்டுமே தெரிகிறது.  புதிதாய் வருகிறவர்களுக்குப் புரிய வேண்டும். :))))))))

 5. ஆரம்பமே நன்றாக உள்ளது. தொடருங்கள்! வாழ்த்துகள். 

 6. கீதா அம்மாவுக்கும் இனிய் நண்பர் நரசய்யா அவர்களுக்கும் நன்றி. தங்கள் எதிர்பார்ப்பு எனக்கு ஊக்கம் அளிக்கிறது.
  அன்புடன்
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *