உத்தமன் அலெக்சாண்டர்!..(பகுதி-2)
ராமஸ்வாமி ஸம்பத்
அலெக்சாண்டரின் திக்விஜயத்தில் தோல்வியுற்ற பாரசீக நாடுகளில் ஒன்றான பாக்டிரீயாவைச் சேர்ந்த நாட்டியக்காரி ரொக்ஸானா அவனுக்குக் கிடைத்த போர்ப்பரிசு. பாக்டிரீயாவை வீழ்த்தியதும் அதன் சிற்றரசன் அளித்த ஒரு மாலை விருந்தின்போது பதினாறு வயது நிரம்பிய அப்பேரழகியைக் கண்டவுடன் அவள் மீது மையல் கொண்டான் முப்பது பிராயத்தை எய்திய அலெக்சண் டர்,அவன் விருப்பத்தைப் புரிந்துகொண்ட பாக்டிரீயக் காவலன் அவளை அன்றிரவு மாசிடோனிய மன்னனின் கூடாரத்துக்கு அனுப்பி வைத்த்தும், அவளுடன் தான் அன்றிரவு நடத்திய சம்பாஷணைகளும் அவன் நினைவில் வந்ததும றக்கமுடியாதுதான்!
அன்று அந்தக் கூடாரத்தில் உள்ள தீப்பந்த வெளிச்சத்தில், ரொக்ஸானா ஒரு தங்கச்சிலை போல் நின்றிருந்தாள். அலெக்சாண்டர் அந்த பதுமையின் அருகில் சென்று நோக்கினான். சற்றுமுன் பல இளம் பெண்டிர் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சியில் பார்த்தவளா இவள்! உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இப்பேரழகி உண்மையிலேயே எனக்கு ஒரு போர்ப்பரிசுதான் என யோசித்தவாறு அவளைச் சுற்றி வந்தான். அவன் எண்ணத்தை அவள் பூரணமாக ஆக்கிரமித்தாள்.
செம்பஞ்சு வண்ண மேனி, சிறிய பாதங்கள், அல்லித்தண்டுகளை ஒத்த கால்கள், குறுகிய இடை, பருவச் செழிப்பின் உந்துதலால் பூரித்திருந்த இனமலர்கள், கோலமயில் கழுத்து, அப்பொழுதே அலர்ந்த தாமரையை வெட்கிக்க வைக்கும் வதனம், படைத்த சிற்பியின் கைத்திறனால் நன்று செதுக்கப்பட்ட மூக்கு, செம்மை படர்ந்த இதழ்கள், தீக்ஷண்யமான கண்கள், மகுடம்போன்ற கரிய அளகம்… இவையெல்லாம் அவள் முன்னழகு என்றால், அவள் பின்னழகு அவனை மேலும் சொக்க வைத்தது.
அந்த மெய்மறந்த நிலையில் அக்கூடாரத்தில் சற்று நேரம் மவுனம் ஆட்சி செய்தது. அவ்வமைதியை முடிக்கும் வகையில் அவள் பேசலுற்றாள்.
“மாவீரரே! இப்போது நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். தங்கள் இன்ப வேட்கைக்கு பலியாகத் தயாராக வேண்டுமா? எப்பொழுதெல்லாம் உங்களைப் போன்ற அரசர்கள் போர்வெறி கொண்டு ஒரு நாட்டை வீழ்த்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் காமவெறி கொண்டு பேதைப் பெண்களைத் துன்புறுத்துவதுதானே வழக்கம்!” என்று கண்ணீர் மல்கும் கண்களோடு தழுதழுத்த குரலில் கேவினாள் ரொக்ஸானா.
”பெண்ணே! என்னை ஏன் ஒரு காமாதுரனாக நினைக்கிறாய்? அழகினை ஆராதிக்கும் ஒரு இளைஞனாக ஏன் கருதக்கூடாது? மாலை விருந்தின்போது நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் உன்னைக் கண்டது முதல் என் மனம் என்னை உன் அடிமையாக ஆக்கிவிட்டது. நான் ஈராஸின் பாணத்துக்கு பலியாகிவிட்டேன். உன்னை முறைப்படி மணம்புரிய வேண்டும் என்பதே என் முடிவு, உனக்கு சம்மதமா? ஒரு உண்மையை உன்னிடம் கூறியாக வேண்டும். எனக்கு ஏற்கனவே இரு மனைவியர் உண்டு. அரசர்கள் பல தாரங்களை மணப்பது புதிதல்லவே. உனக்கு விருப்பம் இல்லை என்றால் உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். உன்னை மிக்க கவுரவமாக திருப்பி அனுப்பி வைப்பேன்.”
அலெக்சாண்டரின் இந்த வெளிப்படையான கூற்று ரொக்ஸானாவின் மனத்தை நெகிழச் செய்தது.
”எனக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்டமா? மாமன்னர் அலெக்சாண்டருக்கு இந்த அபலை நாட்டியக்காரி மீது காதலா? இது என்னை ஏய்க்கும் பொருட்டு கூறப்படும் உபசார வார்த்தைகளா அல்லது மெய்யான சொற்களா?”
“பெண்ணே உன் பெயர் என்ன? நான் கூறுவது இறைவன் மீது ஆணையாக முற்றிலும் உண்மை. உன் ஒப்புதலுடன் உன்னை என் பட்டமகிஷியாக்கிக் கொள்ளவே நான் விரும்புகிறேன்.”
”மன்னர் மன்னரே, என் பெயர் ரொக்ஸானா. என்னை தங்கள் பட்டத்து ராணியாக்கப் போகிறீர்களா? உங்கள் மனைவியரும், உறவினர்களும், அரசாங்க ஆலோசகர்களும் மற்றும் உமது நாட்டின் சான்றோர்களும் இதனை ஒப்புக் கொள்வார்களா?”
“ரொக்ஸானா, என் விருப்பத்திற்கு விரோதமாக என் அன்னை ஒலிம்பியா ஏதும் சொல்லமாட்டார். மற்றவர்கள் அபிப்பிராயத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நம்முடைய திருமணம் என் அன்னையின் முன்னிலையில்தான் நடக்கவேண்டும். அதுவரை நீ காத்திருக்க வேண்டும்.”
“என் மனத்திற்கு இனியவராகிவிட்டவரே, மணம் எப்போது நடந்தாலும், இனி நான் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுக்குத்தான் சேவை செய்வேன். நீங்கள் எங்கு சென்றாலும் நானும் ஒரு தோழியாக உங்களை நிழல்போல் தொடர்வேன்.”
“ரொக்ஸானா, மிக்க மகிழ்ச்சி, நீ என் கூடவே இருந்தாலும், நம் திருமணம் நடக்கும்வரை நான் வரம்பு மீறமாட்டேன், ‘இது உறுதி’ என்றான் அலெக்சாண்டர்.
“எத்தனை உத்தமமானவர் நீங்கள்!” என்றாள் அவள் ஒரு பெருமூச்சோடு.
அன்றிலிருந்து அப்பாரசீகப் பேரழகி அலெக்சாண்டரின் பாசறையிலேயே வசித்தாள். அவ்வப்போது அவன் கூடாரத்துக்குச் சென்று அவனுக்கு உணவளிப்பது, போர்க்காயங்களுக்கு களிம்பு தடவுவது, உரிய காலத்தில் மருத்துவர் சொல்லியபடி மருந்துகளைக் கொடுப்பது, நடனம் மற்றும் இனிய பேச்சுகளால் அவனை மகிழ்விப்பது போன்ற சேவைகளைப் புரிந்து வந்தாள்.
கூடாரத்தின் வாயிலில் ஒரு இனிமையான வாசம் வந்து அவன் மூக்கைத் துளைத்த்தும் அவன் நிகழ்காலத்துக்கு வந்தான். அங்கே ரொக்ஸானா நின்றிருந்தாள்.
”ஈராஸ்” கிரேக்கர்களின் காதல் தேவன்.
(தொடரும்)
முற்றிலும் புதியதொரு கோணம். அறிந்திராத கோணம். அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன்.
பாதுகாப்புக் கேள்வியின் கணக்குப்போடக் கேள்வி மட்டும் ஹைலைட் பண்ணிப் பார்க்க வேண்டி இருக்கு! 🙁 இல்லைனா அது தெரியலை.
மிகவும் அருமை ஐயா! அலெக்சாண்டர் பற்றிய பல புதிய தகவல்களை அறியும் ஆர்வத்துடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன். நன்றி!
எளியேனை உற்சாகமூட்டும் கீதா அம்மாவுக்கும் சச்திதானந்த்ம் அவர்களுக்கும் நன்றி.
வணக்கத்துடன்
ஸம்பத்
முற்றிலும் புதிய தகவல்கள் நிறைந்த அருமையான தொடர். மேன்மேலும் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.
அன்புள்ள பார்வதி இராமச்சந்திரன் அவர்களே!
தங்கள் ஆவலும் ஆர்வமும் எனக்கு இறை அருளால் கிடைத்த பாக்கியம்.
நன்றி, வணக்கம்.
இவண்
ஸம்பத்