” திருக்குறளே தேசிய நூல் “
தமிழ்த்தேனீ
” திருக்குறளே தேசிய நூல் ”
இருவரியில் இணைத்தார் இதயங்களைப் பிணைத்தார்
ஒருவழியில் சொன்னால் உலகத்தையே வளைத்தார்
இருவரியில் முப்பாலும் அப்பாலுக்கும் அப்பாலும்
எப்பாலை உண்டாலும் அப்பாலும் மறுபடியும்
தமிழ்ப்பாலாய் உரு மாறும் தாய்ப்பாலாய்த் தரமேரும்
தமிழுக்கே உரித்தான தரமான அமிழ்தம் தருகின்ற இருவரிகள்
ஓரடியார் ஈரடியார் மூவடியார் நாலடியார் யாரடியால் அளந்தாலும்
தமிழ் வாமனனாய் குறுகி நின்று ஈரடியால் அளந்திட்ட வள்ளுவனின்
சீரடியால் பொன்னடியால் இவ்வுலகம் அளந்த ஈரடியாம் திருக்குறளே
அமிழ்தாய் தொடக்கமாய் நடுவாய் முடிவாய் மறுபடியும்
தொடக்கமாய் தொடர்ந்தே வாழுகின்ற வள்ளுவனின் ஈரடிகள் ஈரம் இருக்கின்ற
இதயங்களை வீரம் விளைகின்ற உதயங்களை மானம் காக்கின்ற
தமிழர்களை தலை நிமிர்ந்தே நிற்க வைத்த ஈரடிகள் காலம் கடந்து
நின்று ஜாதிமத பேதமின்றி தேசங்களைத் தாண்டி தேகங்களைத்
தீண்டி தன்னைத் தானுணரும் மனப்ரயாணம் மகிழ்ச்சியாய் மனிதர்
செய்ய, ஈரடியால் அமைந்த பாதை மனமயக்கம் தீர்க்கும் பாதை
இரு கரையும் ஈரடியாம் நடுவினிலே நாம் நடக்க அமைத்து
வைத்த நல்ல பாதை சாகாவரம் பெற்று நிற்கின்ற கோலத்தில் தானே
இருந்தாலும் திருக்குறளை காலமெல்லாம் நிற்க வைத்த
வள்ளுவனின் ஈரடியில் மனித நீதி புகழ்மணந்து
ஆறாய்ப் பெருக்கெடுக்க வயல் வெளியின்
இருமருங்கில் நியாயங்கள் பசுமையாய் ஓங்கி வளர பொது
மறையாய்ப் புகழ் பெற்ற இதுவன்றோ தேசிய நூல்
அத்துணை மாந்தருமே ஆகாவென்றே வாழ்த்துகின்ற
திருவடியாம் திருக்குறளே தேசிய நூல்
ஒருவழியில் சொன்னால் உலகத்தையே வளைத்தார். Arumai
’ஓரடியார் ஈரடியார் மூவடியார் நாலடியார் யாரடியால் அளந்தாலும்
தமிழ் வாமனனாய் குறுகி நின்று ஈரடியால் அளந்திட்ட வள்ளுவனின்
சீரடியால் பொன்னடியால் இவ்வுலகம் அளந்த ஈரடியாம் திருக்குறளே’
பொன்னான வரிகள். உள்ளத்தைத் தொட்ட வரிகள். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழ்த்தேனீ ஐயா!
அன்புடன்
ஸம்பத்
வள்ளுவனின் பெருமையையும், திருக்குறளின் பெருமையையும் எழில்மிகு வரிகளால் சந்த நயத்துடன் படைத்துள்ளீர்கள். மிகவும் இரசித்துப் படித்தேன். நன்றி.