இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
கடித இலக்கியம் என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதைப் பற்றிய ஒரு சில பதிவுகளும் என் வலைப்பூவில் உண்டு. கடிதம் எழுதுவதும் அதை ரசித்துப் படிப்பதுமே ஒரு கலை. ஆதியில் கடிதங்கள் பலவிதங்களாக அனுப்பப்பட்டதைப் பழைய காவியங்கள் பலவகையாக சொல்வதை நாமும் படித்திருக்கிறோம். எத்தனைதான் இக்காலத்தில் மிகப் புதுமையான அளவில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் வந்தாலும் உணர்ச்சிகரமான உள்ளத்தோடு, அந்த உணர்வில் பேனா மைகொண்டு கலந்து எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சியோ அல்லது திருப்தியோ, இந்த தற்கால வசதிகளில் கிடைக்காது என்பது என்னவோ வாஸ்தவம்தானே.
கடிதங்களால் மனத்தின் குறைகளை நம்மால் இறக்கிவைக்க முடியும் என்பதும் கடிதங்களால் உறவுகள் பலமடையும் என்பதும் நாம் அனுபவத்தில் கண்டதுதான். தேவன், குமுதினி போன்ற பெரிய எழுத்தாளர்கள் இந்தக் கடிதங்களைக் கொண்டே பல கதைகள் எழுதியுள்ளார்கள்., ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நீதி சொல்லும்
கடிதங்களில் காதல் கடிதம் மிகவும் ருசிகரமானவைதான். காதலி எழுதினாலும் சரி, காதலன் எழுதினாலும் சரி, அதன் தனித்துவம் மட்டும் அவர்கள் இருவருக்குமே தெரியும், அதன் மகத்துவமும் புரியும். உணர்ச்சிகளின் இதய ஓட்டத்தை அவர்களால் மிகச் சரியாக வெளிப்படுத்த இந்த கடிதங்கள் எழுதப்படுகின்றன என்பதோடு அவர்கள் காதலையும் கெட்டிப்படுத்துகிறது என்பது கூட உண்மைதான். ஆனால் இன்றைய அதிநவீன உலகில் இக்கடித இலக்கியம் அழிந்துவருவதாகத்தான் தோன்றுகிறது.இப்படி நினைக்கையில்தான் இந்த வாரத்தில் ஒரு தமிழ்மடல் கண்டேன்.. இதோ உங்கள் பார்வைக்கு.
என் உயிரானவரே…!
எப்பொழுது வருவீர்கள், பயணித்த களைப்பு தீரும் முன்னே திரும்பிவிடுங்கள், கதவடைத்த சன்னல்களும், உட்புறம் தாழிட்ட கதவும், நீங்கள் இல்லை என்று பொய் சொல்லுகிறது என்னிடத்தில். இதயத்தின் இரகசிய அறையில் ரம்மிய காதலுடன் தளும்பும் தங்களின் புன்னகை முகத்தை அவர்களிடம் காண்பிக்கவில்லை நான். விழிவிளிம்பில் வழியும் நீர் மேற்கூறையில் உங்கள் முக பிம்பம் கண்டு, மகிழ்ச்சியின் பன்னீர் மலர்களை மாலையாக்குகிறது இருபுறமும். இறுக்கத்தில் இடைபுகுந்த காற்றின் இளஞ்சூட்டில், தங்களின் மூச்சுக்காற்றோ என்று மகிழ்ந்து திரும்புகிறேன் நான். அங்கு வெற்றிடம் கண்டு வெந்து போகிறது மனது. இடப்பட்ட நெற்றி முத்தம் ஒன்று நினைவில் அரும்ப மகிழ்ந்து பின் கூம்புகிறது இதயம்.
தட்டென்று வைக்கப்பட்ட பாத்திரத்தில் அடிப்பட்டு தரை, நோகிறதென்று முகம் திருப்புகிறது. காகம் கரைந்ததில் கதவை திறந்து வைத்திருக்கிறேன் நான். என் இதய காவலனை வரவேற்கவென்று என் கூந்தல் மலர்கள் வாசற்கோலத்தில் தவங்கிடக்கிறது.
மஞ்சள் முகம் தழுவி, குங்குமத்தில் சிரிக்கிறது என் காதல். விழிகள் மையிட்டு ஏக்கமும் நேசமுமாய் வசீகரிக்க தவிக்கிறது தங்களை.
கொல்லை புற தென்றல், தங்கள் அருகாமை பொழுதை நினைவுட்ட வெட்கத்தில் கோலம் போடுகிறது கட்டைவிரல். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சும் கண்ணீர், கொஞ்சம் ஏக்கம், கொன்று போடும் எதிர்பார்ப்புமாக நகருகிறது நாழிகை. உங்களை பார்க்கும் அந்த நாழிகை என்ன செய்வேன். அழுவேனா? ஓடிவந்து அணைத்துக்கொள்வேனா? முகம் முழுவதும் முத்தங்கள் கொட்டி வெட்கம் துறப்பேனா? பிரிவு தந்த துயரில் அழுந்த பதித்த முத்தம் தங்களை வலிக்க செய்யுமோ…?
என் இளைப்பாறுதலுக்கு இதமாக உங்கள் நெஞ்சம் தயாராகுமா? உங்கள் விரல்கள் என் கூந்தல் கோதுமா? முத்தங்கள் வஞ்சனையில்லாமல் பரிமாறப்படுமா? என்னவளே என்று இதயம் அரற்றுமா? இதழ்கள் காதில் கிசுகிசுக்குமா? மீசையின் கிச்சுக்கிச்சு மூட்டுதலில், தேகம் சிலிர்த்தெழுமா?
இத்தனை வினாக்களுக்குள்ளும் நகராது நிற்கிறது நாழிகைகள். ஒவ்வொரு நொடியும் யுகமாய் நீள்கிறது. என் வேதனை பொறுக்காமல் நிலவு மேக முந்தாணையால் முகம் மறைத்து அழுகிறது. தழுவ வந்த காற்றும் தழுவாமல் கடந்து போகிறது. விண்மீன் கூட்டங்கள் கண்செய்கையால் தேற்றமுடியாமல் பரிதவிக்கிறது. அண்டசராசரங்களுக்கும் தெரிந்திருக்கிறது, என் உயிரான நீங்கள் இல்லாமல், தேகம் குலைந்து போகும் அணு அணுவாய் என்று.
என் அலங்காரங்கள் அழிந்து கலைந்த கூந்தலில் கவலை தொற்றகிறது. கண்ணீர் காய்ந்து தண்ணீர் அற்ற ஆறு போல் உப்புப்பாலங்களால் வெடித்துப்போகிறது கன்னம். எச்சில் வற்றி இதழ்களில் புன் நோகிறது. நான் வேதனை வெடித்து கதறும் முன் வந்துவிடுங்கள் என்னவரே”
உணர்ச்சிகள் இயல்பாகப் பொங்கும் இக்கடித இலக்கியத்தை எழுதியவர் தமிழ்ச்செல்வி அவர்கள். இவரின் தமிழ் இக்கடிதத்தில் சுகமாய் விளையாடி தாலாட்டுப் பாடி நம்மையும் சற்று மயக்கமடையச் செய்கிறதைக் காணலாம். அந்தத் தமிழ் மயக்கத்தைத் தந்த தமிழ்ச்செல்வியை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்!!
கடைசி பாரா: திரு க. சச்சிதானந்தத்தின் ‘குறவன் பாட்டு”
துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,
கலவரம் பூணும் கானுருக் கண்டு!
குலவறம் காக்கும் குறவனின் மனமோ
இலகுறக் கண்டு கானினை வெல்லும்!
தமிழ் மயக்கத்தைத் தந்த தமிழ்ச்செல்வி, திரு க. சச்சிதானந்தம் ஆகியோருக்கு வாழ்த்தும் வணக்கமும்!!
மென்மையான உணர்வுகளை எழுத்தில் அழகுற வடிக்கும் வல்லமையாளர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கும்;
‘குறவன் பாட்டு’ என்னும் சிறந்த கவிதைத் தொடரை வழங்கி கடைசி பத்தி சிறப்புப் பாராட்டைப் பெறும் கவிஞர் சச்சிதானந்தம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் படைப்புகளைத் தொடர்ந்து தருக.
அன்புடன்
….. தேமொழி
பிரிவுத் துயரை மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தி, காதல் இழையோட கடித இலக்கியம் படைத்திருக்கும் வல்லமையாளர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
“குறவன் பாட்டு” தொகுப்பை குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள திரு.திவாகர் ஐயா அவர்களுக்கும், இவ்வாய்ப்பை வழங்கிய வல்லமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
பாராட்டியுள்ள திரு.பழமைபேசி அவர்களுக்கும் திருமதி.தேமொழி அவர்களுக்கும் என் அன்பு நன்றியும் வணக்கமும்.
காதல் கடிதம் தீட்டி வல்லமையாளர் வரிசையில் இடம்பிடித்த தமிழ்ச்செல்வி அவர்களுக்கும்
குலவும் அறத்தைக் குறவறமாகக் கடைசி பாராவில்.படைத்த திரு க. சச்சிதானந்தம் அவர்களுக்கும் நெஞ்சு நிறை வாழ்த்துகள்!
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருமதி.ஆதிரா அவர்களுக்கு என் நன்றிகள்.
தெ. சச்சிதானந்தம்.
இந்த வார வல்லமையாளர்கள்,
உணர்ச்சிக் கடிதம் எழுதிய தமிழச்செல்வி (எனது முகநூல் நண்பர்) அவர்களுக்கும், குறவன் பாட்டு புகழ் நண்பர் சச்சிதானந்தம் அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்…!
ஆங்கிலக் கவிதாயினி எமிலி டிக்கின்சனுக்கு இணையாகத் தமிழில் உள்ளத்தைப் பளிங்குபோல் வடித்துக் காட்டும் கவிக்குயில் தமிழ்ச்செல்விக்குக் கிடைந்த்த ஒரு சிறு நோபெல் பரிசு.
சி. ஜெயபாரதன்
என்னால் எழுதப்பட்ட காதல் கடிதத்திற்காக வல்லமையாளர் விருது வழங்கிச் சிறப்பித்த வல்லமை மின் இதழுக்கும் தொகுத்து வழங்கிய
உயர் திரு.திவாகர்
நாடகக் கலைஞர், எழுத்தாளர்.
அவர்களுக்கும் என் பணிவுகளுடன் நன்றிகள்
பாராட்டுடன் வாழ்த்துரைத்த அன்பின் நெஞ்சங்கள், பழமை பேசி, தேமொழி, சச்சிதானந்தம், ஆதிரா, செண்பக ஜெகதீசன், சி.ஜெயபாரதன் ஆகிய அனைவருக்கும் என் நன்றிகளுடன் வணக்கங்கங்களும்.