Advertisements
Featuredஇலக்கியம்தொடர்கதை

தேர்ப்பாகன் மகன்…(பாகம்-2)

ராமஸ்வாமி ஸம்பத்

“யாரது துவரகாதீசரா?” என்று வினவிய கர்ணன், “தாங்களா இந்த எளியேனிடம் வரம் கோரி வந்திருப்பது? தங்களிடம் இல்லாதது எதேனும் இந்த தேரோட்டி மகனிடம் இருக்குமா?” என ஆச்சரியத்துடனும் ஏளனத்துடனும் கேட்டான்.

“ஆம் கர்ணா! உன்னிடம் தர்மத்திற்காக யாசிக்க வந்திருக்கிறேன்.”

“கண்ணா, நீங்கள் மாயாவி என்பது ஜகப்பிரசித்தம். இந்நேரத்தில் யார் எதனை விரும்பினாலும் அளிப்பேன் என்பதனைத் தெரிந்துகொண்டுதானே இங்கு வந்துள்ளீர்? நீங்கள் யாசிக்கும் முன் நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எனக்கும்  என் இனிய நண்பனான துரியோதனனுக்கும் இடையே மித்திரபேதம் செய்ய முயலாதீர்.”

“கர்ணா! நீ ’தானவான்’ எனப்பெயர் பெற்றுவிட்டாய். ‘கர்ணனுக்கு மிஞ்சிய கொடை வள்ளல் யாரும் இல்லை’ என்று உன்னை உலகம் புகழ்கிறது. தானவானாகிய நீ ’தர்மவான்’ என்று கீர்த்தி அடையவேண்டாமா?”

”நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?”

கண்ணன் சற்று அமைதியாக இருந்தான். பின்னர், “கர்ணா! தர்ம-அதர்மங்கள் பற்றி உனக்கு நான் விவரிக்க வேண்டியதில்லை. உனக்கும் அவை தெரியாததல்ல. விதிவசத்தால் நீ அதர்மத்திற்குத் ஆதரவு தரவேண்டிய  நிலையில் உள்ளாய். தர்மத்தைச் சார்ந்து நிற்கும் பாண்டவர்களுக்கு துரியோதனன் துவேஷ பாவத்தோடு தீமை இழைக்க நினைக்கிறான். அப்படிப் பட்டவனுக்கு நீ துணைபோகலாமா?” என்றான்.

”கண்ணா, பாண்டவர்கள்மீது என் இனிய நண்பன் துரியோதனனுக்கு மிக்க வெறுப்பு இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய அரியணை ஏறும் ஆசைக்கு அந்த ஐவர் ஒரு தடையாக இருப்பதாக நினைத்து அவர்களை வெறுக்கிறான். எனினும் என் நண்பனின் எதிரிகள் எனக்கும் விரோதிகளே,” என்றான் கர்ணன்.

“துரியோதனன் உன் உயிர்த்துணைவன் என்பதனை நான் அறிவேன். ஆனால் உண்மை நட்பின் இலக்கணத்தை நீ மறந்து விட்டாய். நட்பு என்பது  சிரித்து சல்லாபம் செய்வதற்கு மட்டும் பொருந்தாது. ஒருவன் தன் நண்பன் தவறு செய்யும்போது அதனைச் சுட்டிக்காட்டி, தேவையானால் உரிமையோடு இடித்துக்காட்டவும் சித்தமாக இருக்கவேண்டும். அதனை நீ செய்யத் தவறி விட்டாய்.”

“கண்ணா, நீங்கள் எதனைச் சுட்டிகாட்டுகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் மாமன்னர் திருதாஷ்டிரர் முன்னிலையில் நடந்த சூதாட்ட்த்தில் சகுனி மாமா தர்மபுத்திரனைத் தோற்கடித்து அவரையும் அவர் தம்பிமார்களையும் பாஞ்சாலியையும் துரியனுக்கு அடிமைகள் ஆக்கிய சம்பவம் எனக்கும் ஒப்புதல் இல்லைதான். மாயச் சூதாடி அவர்கள் உடைமைகளைப் பறித்துப் பெற்றது ஒரு ஈனமான வெற்றி என்றே நான் கருதுகிறேன். அதைவிட ஐவருடன் போரிட்டு அவர்களை புறமுதுகிடச் செய்து இந்திரப்ரஸ்தத்தைக் கைப்பற்றி இருந்தால் துரியனை உலகமே போற்றியிருக்கும். என் வார்த்தைகளை அவன் கேட்கவில்லை. சகுனி மாமாவின் குறுக்குவழி அவனைக் கவர்ந்துவிட்டது,” என்ற கர்ணனை கண்ணன் இடைமறித்தான்.

”அது போகட்டும். பாண்டவமகிஷியான பாஞ்சாலியை அந்த மன்னர் அந்த மாபெரும் சபைதன்னில் மானபங்கம் செய்யத் தூண்டியது நீ தானே? அது எவ்வகையில் நியாயம்?”

“கண்ணா, துரியோதனனை மகிழ்விப்பதுதான் எனது முதல் குறிக்கோள். இந்திரப்ரஸ்தத்தில் ராஜசூய யாகத்திற்குப்பின், அவன் தங்கியிருந்த மாளிகையில்  மயனால் நிர்மாணம் செய்யப்பட்ட விடுதியில் பாஞ்சாலியால் பரிகாசம் செய்யப்பட்ட நிகழ்வு அவன் மனதில் ஆழமாகப் பதிந்து, அவளைப் பழிவாங்கவேண்டும் என்ற ஒரு வெறி துரியனுக்கு ஏற்பட்டிருந்ததை நான் அறிவேன். அப்படிப் பழிவாங்கிவிட்டால் அவன் உள்ளம் உவகையடையும். அவனுக்கு அந்த மகிழ்ச்சி கிட்ட வேண்டும் என்று கருதியே நான் அவ்வாறு நடந்துகொண்டேன். அது அநீதி என்று தெரிந்தும் நண்பனின் மகிழ்ச்சிக்காக அப்பாபத்தினைச் செய்ய முற்பட்டேன்.”

“பார்த்தாயா கர்ணா அப்பாபத்தின் விளைவை? எண்ணித் துணிக கருமம் என்று சான்றோர்கள் வெறும் வார்த்தை ஜாலமா செய்தார்கள்? துரியனுக்கு மகிழ்வூட்டுவதாகக் கருதி அவனை எமலோகத்தின் வாயிலுக்கே அனுப்ப முனைந்திருக்கிறாயே!”

“என்னைப்போண்ற மஹாரதிகள் துரியனுக்குத் துணை நிற்கும்வரை அது ஒருநாளும் நடவாது. மாறாக பாண்டவர்களை நான் ஒருவனே எமனுக்கு இறையாக்குவேன்.”

இதைக்கேட்ட கண்ணன் மோஹன புன்னகை புரிந்தான். ”அங்க அரசனே! உன் தன்னம்பிக்கை போற்றுதற்குரியதே. ஆயினும், நீ தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வினாலும் எப்படியும் தர்மம் மட்டுமே வெல்லும் என்பதனை மறந்து விட்டாயா?” என்றான்.

”கண்ணா, தர்மம் அதர்மம் என்ற கவைக்கு உதவாத விஷயங்களைப் பேசி என்னைக் குழப்பவேண்டாம். எனக்குத் தெரிந்த ஒரே தர்மம் என் ஆருயிர் மித்திரனைச் சார்ந்திருப்பதே,” என்று கர்ணன் உறுதியாக உரைத்தான்.

கர்ணனின் நட்பு வெறி கண்ணனை வியக்க வைத்தது. “உன்னைப் போன்றவர் நட்பைப்பெற துரியோதனன் என் நோற்றான் கொலோ! உன்னை அங்கதேச அரசனாக்கினான் என்பதால் அவனை உன் எஜமானனாகக் கொள்வதில் தவறில்லை. அதுகூட உன்னைப் பாண்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் முயற்சிதான். ஆனால் இப்படிப்பட்ட கண்மூடித்தனமான விசுவாசம் தேவை தானா?” என வினவினான்.

பனித்த விழிகளோடும் தழுதழுத்த குரலோடும் கர்ணன் கூறலுற்றான். “கண்ணா, எனக்கும் துரியனுக்கும் உள்ள நட்பின் ஆழம் புரிய என் பழங்கதையை உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கெளரவர்களும் பாண்டவர்களும் ஆச்சாரியர் துரோணரிடம் குருகுலவாசம் முடிந்ததும், மாமன்னர் திருதராஷ்டிரர் முன்னிலையில் தங்கள் தங்கள் போர்த்திறணை ஒரு போட்டி மூலம் தெரியப்படுத்தினர். அதன் இறுதியில் ‘வில்லுக்கோர் விஜயன்’ என்ற விருதினை துரோணாச்சாரியர் பார்த்தனுக்கு வழங்கினார். அவ்விழாவில் பார்வையாளனாக இருந்த நான் எழுந்து, ’அர்ஜுனன் என்னோடு விற்போட்டியிட்டு என்னை வெல்லும்வரை இந்த விருதுக்கு அருகதையற்றவன்’ என்று கூவினேன். அதனைக்கேட்ட பீமன் ஒரு தேரோட்டி மகனுக்கு அரசகுமாரனுடன் போட்டியிட உரிமையில்லை என கர்ஜித்தான். அந்த நேரத்தில்தான் துரியோதனன் எனக்கு அங்கதேச மன்னனாக ராஜ்யாபிஷேகம் செய்வித்தான். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஆச்சாரியர் என் அரசபரம்பரைபற்றிச் சொல்லச்சொன்னார். என் மூலம் தெரியாத நான் விழித்தேன். ‘க்‌ஷத்திரியன் இல்லாத நீ ஒரு அரசகுமாரனோடு எவ்வாறு போட்டியிட முடியும்?’ எனக்கேட்டு என்னை ஒதுக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து பீமன் ‘தேரோட்டிமகனே வெளியே போ’ என்று கூச்சலிட பல பார்வையாளர்களுட்ம் அவனுடன் சேர்ந்து கோஷமிட்டனர். அவமானத்தில் கூனிக்குறுகிப்போன என்னை துரியன் அணைத்தவாறு தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி:

http://4.bp.blogspot.com/-YLd7LRURDcc/T72NXtbwO2I/AAAAAAAAAHU/XGeohOTO3AI/s1600/krishna1.jpg

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (5)

 1. Avatar

  ம்ம்ம்ம்ம், கர்ணனும் க்ஷத்திரியன் தான்.   ஆகவே அவன் க்ஷத்திரியன் இல்லை என்பதற்காக யாரும் அவனை ஒதுக்கவில்லை. இந்த நிகழ்வைக் குறித்த என் பார்வையை வியாசரின் மூலத்தில் இருந்து இங்கே எழுதினால் நீளமாகப் போய்விடும்.  பின்னர் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு எழுதுகிறேன்.  ஆனாலும் கர்ணன் தன் செய்கையை நியாயப் படுத்துவது அவன் கோணத்தில் சரியாகவே இருக்கலாம். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கேன்.

 2. Avatar

  சிறிய வயதில் கர்ணன் படம் பார்த்தோ என்னவோ கர்ணன் நல்லவன் என்றே மனதில் பதிந்து விட்டது. அதனால் தெரிந்தே செய்தாலும் நண்பனுக்காகச் செய்தேன் என்பது கூட கொஞ்சம் ஆறுதலாய்த்தான் இருக்கிறது 🙂 அவனுடைய நட்புணர்விற்கும் நன்றியுணர்வுக்கும் அளவே இல்லை போலும். உரையாடல்கள் நிகழ்வை நேரில் பார்ப்பது போலவே அமைந்திருக்கின்றன. மிக்க நன்றி ஐயா.

 3. Avatar

  ஐயா !சம்பத் அவர்களுக்கு ,வணக்கங்கள் பல ,நீண்ட மண்ணிக்கவும் நீ….ண் ….,ட ,நாட்களுக்கு பிறகு ,ஒரு அற்புதமான ,மகாபாரத சொற்பொழிவை கேட்டது போல் இருந்தது மிக எளிமையான வார்த்தையை கொட்டி
  இருந்தது ,அதை அணைத்து தரத்து மக்களும் படிக்க கூடியதாக இருந்தமைக்கு,உங்கள் முதிர்ந்த முயற்ச்சியில்
  எங்கள் பயிற்ச்சி
  உங்கள் நண்பன்
  ****தேவா ****

 4. Avatar

  Going great! Keep it up
  Narasiah

 5. Avatar

  அன்புள்ள கீதா சாம்பசிவம் அவர்களே!
  கர்ணனைப் பற்றிய தங்கள் கருத்தினை (வியாசர் மூலத்திலிருந்து) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க