Tag: வித்தக இளங்கவி விவேக்பாரதி

  • கங்கை கண்ட கவி

    -விவேக்பாரதி

    ஸ்ரீதர ஐயாவாள் கதை

    காப்பு

    கட்டளை யிட்டுக் கவியெழு தென்ற கவிஞரிடம்
    தட்டா துடனே தனதொரு தந்தம் தனையுடைத்து
    விட்ட யிடத்தை விரைவி லெழுது விநாயகனே
    குட்டிக் கவிஞன் குறிக்கும் கதையில் குறையகற்றே!

    கதை

    திருவிசை நல்லூர் திருநக ரில்பொற் றிருச்சடையர்
    உருவரு வாகும் உடையவர் மீதே உளமுருகித்
    தெருவினில் பாடல் திரட்டு படைக்குந் திறமையுடை
    ஒருவ ரிருந்தார் உயர்ஶ்ரீ தரனெனும் உண்மையரே! (1)

    சிவன்புகழ் பாடும் தொழிலுடை யார்!பசிச் சீற்றமெனும்
    அவமது நீக்க அடுப்பெறிப் பார்!வரும் அன்பருக்குச்
    செவியும் வயிற்றையும் சேர்த்து நிறைக்கும் திருத்தொழிலே
    சிவத்தொழி லென்று செலுத்திவந் தார்தன் சிரத்தையையே! (2)

    ஊரார் புகழ உலகோர் புகழ உறுதியுடன்
    பேரார்ந் திருந்த பெரியவர் செல்வம் பெரிதிழைத்துத்
    தாரா ளமெனத் தணித்தார் பசிப்பிணி! தம்செயலால்
    நேரா யிறையவன் நெஞ்ச மடைந்தார் நிகழ்வினிலே! (3)

    ஐயர் பொறுமைக் களவையும் பக்தியின் ஆழத்தையும்
    மெய்யாய்க் கணிக்க மெலிதாய் யொருசிறு நாடகத்தை
    உய்வாய் எனச்சிவன் உள்ளத் தொருநினை வூன்றியதும்
    செய்வோம் எனப்பொழு தங்கே யிறங்கித் திகழ்ந்ததுவே (4)

    அதன்படி அன்றோர் அதிகா லைதனில் அரும்புதல்வர்
    முதற்கட னாகிய முன்னவர்க் காற்றும் முழுக்கருமம்
    விதிப்படி செய்யும் விசேஷத் திருநாள் விளைந்ததுவே
    அதுபொருட் டையரும் ஆறடைந் தாருடல் ஆடிடவே (5)

    மாமியும் போகும் வழியினில் நாமம் மடுத்துவிட்டால்
    சாமியென் றங்கே ஜகம்மறக் காதீர் சிரார்தமுண்டு
    தாமதம் வேண்டா தெளிநீர் குளித்துச் சிரத்தையுடன்
    நாமிதுச் செய்வோம் நலமென அன்பில் நவின்றனளே! (6)

    சரிசரி யென்றநம் ஸ்ரீதரர் ஆற்றில் திகழ்ந்திடும்போழ்
    தரசிவ என்னும் அரவம் ஒலிக்க அகம்மறந்தார்
    உரியநன் நேரம் உருண்டிட புத்தி உதித்தவராய்
    விரைந்து குளித்து விசுக்கெனச் சென்றனர் வீட்டினுக்கே! (7)

    சிந்தனை எங்கும் சிவன்புகழ் மட்டும் ஜனித்திருக்க
    வந்திருந் தங்கு வழங்கினர் பிண்டம் வழங்கியதும்
    முந்தி உணவிட முன்வந் தெழுந்த முதியவர்தாம்
    அந்தணர் தம்மை அகன்றுண விட்டார் அடுத்தவர்க்கே! (8)

    பித்துரு தோஷம் பிழையெனச் சொல்லிப் பிழையகற்ற
    சுத்தமே வேண்டும் சுடர்விடும் கங்கைச் சுனையினிலே
    இத்தரு ணம்நீர் இதன்பழி நீங்க இனிமுயல்வீர்
    சித்தம் சினந்து திகழ்ந்தவர் அந்தணர் செப்பினரே! (9)

    தங்கைப் பொருளால் தரணியோர் கொண்ட தணற்பசியை
    மங்க இயற்றிய மாதவம் செய்து வளமையெலாம்
    அங்கே இரைத்தவர் அன்றுதங் கைபொருள் அற்றமையால்
    கங்கைக் கரைதனைக் காணா நிலையாற் கலங்கினரே! (10)

    தன்னிலை மாறிச் சிவநினை வாலே திதிமறந்து
    முன்னிலை தீர்ந்த முதியவர் ஏங்கி முனகினராய்த்
    துன்ப முழன்று துயருடன் வீழ்ந்து துடிதுடித்து
    அன்பரின் அன்பரை ஆதியை எண்ணி அழுதனரே! (11)

    கிணற்றுக் கருகே கிடந்து சுருதிக் கிளரிசையும்
    உணர்ந்து படித்தே உயர்த்திய பாட்டும் உணர்ச்சியுமாய்
    மணத்தை இழந்த மலர்த்தா ரெனவவர் மண்விழுந்தார்
    அணங்கும் தலைவரும் அந்நிலை கண்டே அறிந்தனரே! (12)

    பக்தியின் ஆழமும் பாசமும் கண்ட பரசிவனார்
    அக்கணம் அங்கே அடியினில் தண்ணீர் அமைகிணற்றில்
    சக்தியின் ஆற்றல் சடுதியில் பாய்ச்சச் சரசரென
    அக்கிண றான தமுதகங் கையென ஆர்ப்பரித்தே! (13)

    நேசமும் நெஞ்சினில் நேர்மையும் தங்கி நிலைத்துவிட்டால்
    வாசலில் மாயம் வழங்கும் இறைவன் வருவனெனப்
    பூசைகள் ஆகமம் புண்ணிய நூல்கள் புகன்றமெய்யை
    ஈசனின் ஆடலை யிங்குகண் டாருணர்ந் தேத்தினரே! (14)

    ஸ்ரீதரர் ஈசன் சிறப்பை உணர்ந்து சிலிர்த்ததுபோல்
    கீத விரும்பிகள் கேட்கச் சிலிர்ப்பு கிடைத்திடவும்
    நாதன் இருக்கும் நலமுடைப் பாடல் நமக்களித்தார்!
    ஆதலி னால்நம் அருஞ்செயல் ஈசன் அருட்தடமே!! (15)

    -விவேக்பாரதி
    05.11.2018

    Share
  • வெடியற்ற விடியல்

    -விவேக்பாரதி

    வெடியற்ற விடியலைக் காணவேண்டும் – மண்ணின் 
       வேதனை கூடாதிருக்க வேண்டும் – கோர
    இடியற்ற திருநாளைக் காணவேண்டும்! – அன்று 
       இன்பமே வரமாய்க் கிடைக்கவேண்டும்! – நொந்து
    மிடியுற்ற தாய்பூமி மோட்சம்பெற – அசுரன் 
       மிரட்சியைக் கொன்றநாள் தீபாவளி – அன்று 
    விடியட்டும் நல்வாழ்த்தும் உற்சாகமும் – நம்மை 
       விலகட்டும் பொய்ப்புகை பிறதூசுகள்! 

    குப்பைகள் புகைகளும் அலங்காரமோ? – நிலம் 
       கொடுத்ததற் கேதரும் பரிகாரமோ? – இதனைத் 
    தப்பென்று தெளியாமல் வாழ்கின்றதால் – நம்மைத்
       தரிகெட்ட கரியபுகை சூழ்கின்றதே! – தேவை 
    முப்போதும் நெருக்கிடப் புகைவாகனம் – விட்டு 
       முந்திடுங் குதிரைகள் போலோடுவோம் – பல 
    குப்பைக்கு மத்தியில் உயர்கோபுரம் – கட்டி 
       கோடிகள் பெற்றதாய் நாம்பாடுவோம்! 

    விடுமுறை நாளிலும் வெடிமாசினால் – புவி 
       விக்கிட வைப்பதோர் விளையாடலோ? – வளம் 
    தடுத்திடும் செய்கைக்குப் பல்லாயிரம் – இங்கு 
       செலவுகள் செய்வதோர் அறிவாண்மையோ? – வையம் 
    அடுப்பெனப் புகையோடு நெருப்பைத்தர – அதனை 
       ஆனந்தம் ஆனந்தம் எனச்சொல்வமோ? – இதை 
    விடுத்துயர் வெய்தினோம் என்னும்புகழ் – நம் 
       வரலாற்றில் பெயர்மாற்றும்! அதையெண்ணுவோம்! 

    இனிப்புக்குத் தானிந்த தீபாவளி – மக்கள் 
       இதயங்கள் மகிழவே தீபாவளி – பச்சை 
    வனப்புக்குத் தானிந்த தீபாவளி – மாசின் 
       வாட்டங்கள் நீங்கவே தீபாவளி – நமது 
    மனப்புட்கள் பறக்கின்ற படிவாழ்த்துவோம் – புகையின் 
       மாசின்றி இந்நாளை நாமேத்துவோம்! – சத்த 
    நினைப்புக்குத் திரைபோட்டுக் கொண்டாடுவோம் – எந்த 
       நாளிலும் சந்தோஷப் பண்பாடுவோம்!!

    -06.11.2018.

    Share
  • வேழ கணபதி காப்பு

    -விவேக்பாரதி

    சந்தச் சிந்தியல் வெண்பாக்கள்

    மோன கணபதி ஞான கணபதி
    வான மருளிடு மாதி கணபதி
    கான கணபதி காப்பு!

    தீது விடுபட வாத மறுபட
    மோத வருமிட ரோடி விலகிட
    நாத கணபதி காப்பு!

    நாளு மடியவ ராழ வினைகெட
    ஆளு மரசுநி தான கணபதி
    தாளெ மதுகதி காப்பு!

    நீல நதிதவ மாழ வமரனு
    கூல கணபதி மூல அதிபதி
    கால கணபதி காப்பு!

    தேக முயர்நல மாக வழிசெயு
    மூக கணபதி மூட வினைதடு
    காக கணபதி காப்பு!

    ஆறு சடைதவ ழாதி சிவனொடு
    வீறு மிகவெதி ராடி வொருசிர
    மாறு கணபதி காப்பு!

    தேவி சிவனுல கான கதைசொல
    மேவி யொருகனி காணு மருநிதி
    தேவ கணபதி காப்பு!

    வேட ருயகுல நாத னெனவரு
    மேடு குகனுறு காத லுதவிய
    பீடு கணபதி காப்பு!

    தூய மதியிட னாய கடமைக
    ளோயு வரையினி லாக முயலுவ
    மேய கணபதி காப்பு!

    வாழ வொருவர மான பதகதி
    தோழ னெனவரு ளாதி கணபதி
    வேழ கணபதி காப்பு!! 

    -01.10.2018

    Share
  • என்றும் நிலையாய் இரு

    ஆசை உருவாகும் அச்சம் நமைச்சாய்க்கும்
    பாசம் தொடந்து பரிகசிக்கும் – வாசமெனுங்
    குன்றுவந்து முன்னே குழைந்தாலும் என்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    பொன்னாடை மாறும் புகழ்மாலை தாம்மாறும்
    சொன்மாலை மாறும் சுகம்மாறும் – என்றைக்கும்
    ஒன்று நிலையாம் ஒழுக்கமாம் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    கூட்டம் தொடர்ந்திருக்கும் கூப்பிட்டால் தான்தெரியும்
    ஈட்டம் எவரால் எனும்செய்தி – வாட்டத்தில்
    குன்றும் மனமிகவும் குற்றமடா நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    காலைச் சிவப்பொளிபோல் காட்சி அழகெல்லாம்
    காலம் கனிந்தால் கரைந்துவிடும் – காலமே
    நன்றும் நலிவும் நமக்கியற்றும் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    வேதாந்த தத்துவம் வேகப் புரட்சிகள்
    சேதார மில்லாச் செழுங்காதல் – தோதாக
    நின்றாலும் சென்றாலும் நீமட்டும் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    -விவேக்பாரதி
    29.09.2018

    Share
  • களியைத் தந்தாய்

    காலை 4 மணிக்கு பெங்களூருவின் ஒரு வீதியில் தங்குமிட விலாசம் தேடிக் கொண்டிருந்தேன். காலைப் பனியும் பயணக் களைப்பும் இப்படியொரு களியை எனக்குக் காட்டியது! காற்றினில் தெரிவதும் நம் குருவே!

    கண்ணை மறைத்திடும் கார்முகில் கூட்டத்தில்
    காலம் கழிந்திருந்தேன்! – ஒரு
    காலையும் மாலையும் பாலகன் ஆசையைக்
    கவ்விப் பிடித்திருந்தேன்,
    எண்ண மனைத்திலும் ஏறிய மோகத்தில்
    எம்பிக் குதித்திருந்தேன் – வந்த
    ஏணியைத் தள்ளி யிகழ்ந்திட நாணின்றி
    எப்படியோ திரிந்தேன்!
    உண்மைப் பொருளை உணர மறுக்கின்ற
    உச்சத்தில் நானிருந்தேன் – சிறு
    ஊறுவந் தாலும் தடுக்குற்று பள்ளத்தில்
    உச்சிவிட் டேவிழுந்தேன்
    வண்ண மறிந்திடா வாழ்வினில் கண்முன்னே
    வானவில் கொண்டுதந்தாய் – குருவே
    வாடு மனத்தினில் தேடல் பயணங்கள்
    வார்த்துக் களியைத்தந்தாய்!

    நீயொரு சத்தியம் நீயொரு தத்துவம்
        நீயே இறைவடிவம் – உன்
    நிழலும் ரகசியம் நீண்டிடும் சிந்தனை
        நீளம் பரமசுகம்
    தீயொரு கண்ணெனக் கொண்ட தலைவன்
        திரட்டிய அன்புமுகம் – ஒரு
    திவ்ய சுருதியில் நெஞ்சில் ஒலித்திடும்
        தீட்சண்ய தேவசுரம்
    வாயொரு தீவினை நெஞ்சொரு தீவினை
        மாற்றி மாற்றித்தொடவே – ஒரு
    வன்மையி லாத வலிக்கரம் சிக்குற்று
        வாட்டத் துழன்றிடவே
    தாயொரு பக்கம் தளிரினைக் கவ்வித்
        தடங்கொண்டு சேர்ப்பதுபோல் – குருவே
    தாவும் மனத்தினில் ஆவல் அறுத்துடன்
        தண்மைக் களியைத்தந்தாய்!

    என்றனை ஓர்கணம் நான்விட்டு நீங்கி
        எடுக்கின்ற பார்வையிலும் – சிறு
    ஏழையின் நெஞ்சம் படும்துயர் கண்டதும்
        ஏந்திடும் வேர்வையிலும்
    குன்றினைப் போலக் குணமற்ற பேதங்கள்
        கூட வருவதிலும், – பல
    குட்டிக் கரணங்கள் இட்டுத் தினமொரு
        குற்றம் இழைக்கையிலும்
    நின்றன் அருட்பதம் தேடிப் பலபல
        நீசரைக் காண்கையிலும் – பின்னர்
    நிம்மதி வேண்டி நிழலில் உறங்கிட
        நீவந்து தொட்டதிலும்
    ஒன்றினைக் கண்டனன் யாவையும் உன்கரம்
        ஓட்டும் திரைகளென்றோ – குருவே
    ஒற்றை மலர்க்கரம் பற்ற மனத்தினில்
        ஓங்குங் களியைத்தந்தாய்!

    வேண்டுவ தின்நிழல் வேண்டுவ துன்குரல்
        வேண்டுவ துன்றன்மடி – பல
    வேகத்திலும் வரும் சோகத்திலும் பட்டு
        வெந்தழி யாதமதி
    ஆண்டகை யேயுன தன்பின் இருக்கையில்
        ஆசையற் றுய்திடுதல் – என
    தாவி முழுதிலும் தேவி திருவுரு
        ஆழ்ந்து பதிந்திடுதல்
    மாண்டு துடிக்க மரணமே சூழினும்
        மாறிடா வுன்நினைப்பு – என்
    மனதுத் தடத்தினில் உனது பதமலர்
        மன்னும் திருச்சிரிப்பு
    காண்டிப னுக்குக் கிடைத்ததைப் போலுன்றன்
        காந்த முழுவுருவை – குருவே
    காட்டித் துயர்களை ஓட்டிக் கவிதையில்
        காலக் களியைத்தந்தாய்!!

    விவேக்பாரதி
    10.06.2018

    Share
  • தமிழின் சக்தி

    தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய தமிழ்நாடு பெயர்சூட்டல் பொன்விழாக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த கவிதைப் போட்டியில் சென்னை மாவட்டத்தின் அளவில் முதலிடத்தில் தேர்வான என் கவிதை.

    தமிழுக்குச் சக்தியுண்டு – அதைத்
       தாரணி கண்டிடும் நாளுமுண்டு!
    தமிழுக்குள் பக்தியுண்டு – தம்பி
       தாவிநீ பாடு தமிழிற்சிந்து!

    கம்பன் கவிதையைப்போல் – இந்தக்
       காசினி கண்ட கவிகளுண்டோ?
    உம்பர் வியந்தகவி – நம
       துள்ளத்தி லூறி யினிக்குங்கவி!

    வள்ளுவன் சொன்னதைப்போல் – புவி
       வாழ்க்கைக் குயரிய வேதநெறி
    கொள்ளுவ தெந்தமொழி – அன்புக்
       கொள்கை பரப்பும் தமிழையன்றி?

    ஓங்கு புகழ்ச்சிலம்பும் – நல்ல
       ஒண்டமிழ்ச் செல்வச் சிந்தாமணியும்
    தாங்கும் பெருமையெலாம் – வேற்றுத்
       தன்மை மொழிகள் பெறலெளிதோ?

    ஒலியின் குறிப்பளந்தே – வளர்ந்
       தோங்கிய யாப்புக் களஞ்சியம்போல்
    கலியில் பிரிதுமுண்டோ? – தமிழ்க்
       கவிதையைப் போற்பிற வெல்லமுண்டோ?

    வானக் கருத்துமுதல் – இந்த
       மண்ணகத் துள்ள அணுவரையில்
    ஆன தகவலெல்லாம் – நமக்
       கள்ளிக் கொடுத்ததும் ஆன்மசக்தி!

    தேர்ந்தவிஞ் ஞானச்சக்தி! – தமிழ்
       தெள்ளமு தான இசையின்சக்தி!
    சேர்ந்த பலமொழிக்கும் – எழில்
       சேர்ந்த தமிழ்நம் உரிமைச்சக்தி!

    பாரதிர் பாட்டுச்சக்தி! – கொண்ட
       பண்டைய நூல்கள் பழமைச்சக்தி!
    வீரத் திருவின்சக்தி! – தமிழ்
       வீரியம் கூட்டிடும் அன்புச்சக்தி!

    கட்டுரைப் புதினங்களாய்த் – தமிழ்
       காட்டிடும் சக்தி கருத்துச்சக்தி!
    கட்டிடும் நாடகத்தில் – நாம்
       காண்பது நாட்டுக் கலையின்சக்தி!

    இந்தப் புவிபிறந்த – சின்ன
       இம்மியைத் தொட்டுப் பிறந்தசக்தி!
    செந்தமிழ் தெய்வச்சக்தி – அந்தச்
       சீரினைப் போற்றிட வாழுவமே!!

    -விவேக்பாரதி
    28.06.2018

    Share
  • அர்த்தநாரி

    திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமான் அர்த்தநாரியாகக் காட்சி கொடுக்கும் கதையை நாம் பார்த்திருப்போம். அந்தக் கதையை, காட்சியை ஒரு நெடுங்கவிதையாக எழுதினேன்.

    துள்ளிவரும் தென்றலுடன் தோன்றுகின்ற கயிலையெனும்
    வெள்ளிப் பனிமலையில் மெல்லவந்த காலையது!
    மூன்று விழிகளையும் மூடி அமர்ந்தபடி
    ஆன்ற மௌனத்தில் ஆதிசிவன் வீற்றிருந்தான்!
    பக்கத்தில் தாட்சா யாணிநின்று கைவிரல்கள்
    தொக்கிப் பிசைந்தபடி தூயவனைப் பார்த்திருந்தாள்…
    தியானம் கலைத்த தலைவனவன் தேவியங்கு
    வியாபித்த கோல விசித்திரங்கள் தாங்கண்டு
    “என்ன வேண்டும்? எதற்கிந்த சந்தேகம்?
    சொன்னால் தெளியும் சொல்”லென்றான்! அம்மையுடன்
    “விருத்திப் பணிதான் விஜயத்தோ டேநடக்கத்
    திருத்திய ஓர்யாகம் தெற்கிலெம் தந்தை
    தட்சன இயற்றுகிறார் தாயழைத்தாள் அவ்விடத்தில்
    கிட்ட இருந்து கிடக்கு முதவிபல
    நானங்கு செய்து நலம்கூட்ட வேண்டித்
    தானுங்கள் அனுமதியை நாடி இருக்கின்றேன்!”
    என்றாள் சிவனுடனே எழுந்தான் “பாரம்மா!
    உன்றன் நினைப்பும் உயர்வுதான் என்றாலும்
    என்னை அழைக்காமல் ஏளனமா யெண்ணியவன்
    முன்னந்த வேள்வியினை மூட்டுகிறான் நீசென்றால்
    சொந்த மகளென்று சொல்லா தெனைக்கவிழ்க்கும்
    சிந்தையோ டுன்னைச் சினந்திடுவான் இன்னுமுனை
    ஏசி உரைமொழிவான் ஏங்கி மனஞ்சுளிப்பாய்
    ஆசை விளைக்குமிந்த ஆபத்து வேண்டா”மென்
    றுரைத்தான் எனினும் உலகம்மை மனத்தில்
    நிறைந்திருந்த ஆசை நிறுத்து மளவில்லை!
    “எந்தை எனையென்றும் ஏளனமாய் எண்ணுகிலார்
    பந்தம் உணர்ந்து பரிவோ டணைத்திடுவார்
    என்மனம் அங்கே இருக்க நினைக்கிறது
    சென்று வருகிறேன் சீக்கிரமே நான்வருவேன்”
    என்றுபல கூறி எடுத்த அடியிரண்டில்
    “சென்றால் திரும்பாதே சேராதே நான்சொல்லித்
    தட்டுகின்றாய் அங்கே தரம்குறைந்த சொல்லிலடி
    பட்டுத் திருந்தெ”ன்று பற்றிவரும் கோவத்தோ
    டீசன் மொழிந்தான் ஈஸ்வரியும் முகம்திருப்பி
    யாக சாலைக்குள் அடிவைத்தாள்! அங்கிருந்தோர்
    வேகும் தணலில் வெறுஞ்சுள்ளி இட்டிருந்தார்…

    (வேறு)

    யாவரும் அங்கிருந்தார் – நல்ல
    யாழிசை பாணர்கள் அங்கிருந்தார்
    தேவரும் அங்கிருந்தார் – பெருந்
       தேவியர் யாவரும் அங்கிருந்தார்
    பூவையர் அங்கிருந்தார் – பெறும்
       புண்ணிய வேத முனியிருந்தார்
    காவலர் அங்கிருந்தார் – உடற்
       கட்டுடை ஆண்களும் அங்கிருந்தார்!

    பிரம்மன் அமர்ந்திருந்தான் – மறை
       பிழையறச் சொல்லும் தவமுனிகள்
    அருகில் அமர்ந்திருந்தார் – அந்த
       அரியவன் திருவொடு நின்றிருந்தான்
    பெருகும் நெருப்பினிலே – அக்னி
       பேழை வயிற்றைத் திறந்திருந்தான்!
    குருக்களும் அங்கிருந்தார் – ஒரு
       குணமிலாத் தட்சனும் அங்கிருந்தான்!

    பார்வதி தேவிவந்தாள் – அந்தப்
       பண்பறி யாதவன் இல்லம்வந்தாள்!
    யார்வர வேற்கவந்தாள்? – தனி
       யாளென வேள்விச் சபைக்குவந்தாள்!
    வார்சடை வேதிகளும் – புவி
       வாழ்த்திடும் தேவரும் தெய்வங்களும்
    சீர்கெட்ட தட்சனுந்தான் – அவள்
       செய்கையைக் கண்டு திகைத்துநின்றார்!

    “எங்ஙனம் வந்தாயடி? – விடை
       ஏறு மொருத்தனைக் காதலினால்
    அங்ஙனம் சேர்ந்தவளே – உனை
       ஆரிங் கழைத்தனர்? எங்குவந்தாய்?
    மங்கல வேள்வியிலே – ஏதும்
       மாசியற் றாதொரு மூலைதனில்
    தங்கி உணவுண்டுபோ” – என
       தட்சன் எழுந்து சினந்துரைத்தான்!

    மேலும் மொழிந்திடுவான் – “ஒரு
       மேன்மையி லாதவன் காட்டுப்புலித்
    தோலை உடுத்தியவன் – உடல்
       தோறுமச் சாம்பலைப் பூசுபவன்
    ஆல மருந்தியவன் – வெறும்
       ஆவிக ளோடுகூத் தாடுபவன்
    சீலமிலாச் சிவனை – யான்
       சீர்பெரும் வேள்விக் கழைக்கவில்லை!

    என்ன சினந்தானா? – உள
       வாளியென் றுன்னை விடுத்தானா?
    என்ன கருதிவந்தாய்? – இன்னும்
       என்மக ளென்ற நினைப்புனக்கோ?
    சென்று தொலைந்துவிடு – இல்லை
       சேர்ந்தொரு மூலையில் நின்றுவிடு”
    என்று நகைபுரிந்தான் – சினம்
       ஏற்றிவிட்டான் உமை சீறிவிட்டாள்!

    (வேறு)

    பார்வதி யாளுஞ் சினந்தாள் – உரை
       பேசிய தந்தையை எண்ணிக் கனன்றாள்
    மார்பு துடிக்க இருந்தாள் – அவள்
       மங்கையென் றானதால் கண்ணீர் சொரிந்தாள்!

    நெஞ்சு திகைத்திட லாச்சு – அந்த
       நெருப்பைக் காட்டிலும் சுட்டிடும் பேச்சு
    கொஞ்சமும் எண்ணிட வில்லை – அவள்
       கொள்கை மழுங்கிய தந்தையின் சொல்லை!

    கண்களில் ஜ்வாலை பறக்க – சினம்
       கால்களைத் தூக்கி விசும்பில் நடிக்கப்
    பெண்ணவள் பேசிட வந்தாள் – ஒரு
       பேரடி தன்னைத்தன் சொல்லிடை தந்தாள்!

    “ஞானமி லாச்சிறு தட்சா! – ஒளி
       ஞாயிறும் திங்களும் கண்ணெனக் கொண்ட
    வானவர் கும்பிடும் தேவை – நீ
       வாழ்த்திடா திங்கொரு யாகமும் வைத்தாய்!

    அவரை வணங்குதல் விட்டு – நீ
       ஆயிர மாயிரம் ஏச்சுகள் இட்டுச்
    சிவனை இழிந்துரைக் கின்றாய் – அவர்
       சீதனம் என்னையும் நீசினக் கின்றாய்!

    உன்றன் அழிவிது கண்டாய் – இவ்
       வுயிரற்ற வேள்வி அழிந்திடு” மென்றே
    சொன்னவள் மேலே நடந்தாள் – தன்
       சோகத்தை ஈசனின் முன்னே மொழிந்தாள்!

    (வேறு)

    “சொல்லிய சொல்லைத் தாண்டி
       சோதனை இருக்கும் பக்கம்
    வல்லியே சென்றாய்! பட்ட
       வலியெலாம் உனதே! நீயென்
    இல்லாளு மில்லை சொன்னேன்
       இனிவர வேண்டா போபோ
    சொல்லினை மதிக்கா துற்றால்
       சோகமே வாய்க்கும்” என்றான்!

    கணவனின் பேச்சைக் கேட்டுக்
       கலங்கினள் தேவி! வாட்டம்
    அணங்கவள் நெஞ்சை வாட்ட
       அடுத்தினி மேலும் சொல்வாள்,
    “மணமுடை மலரில் லாமல்
       மாலையின் நாறும் நாறே!
    துணையென நானில் லாநீர்
       தோன்றுதல் கடினம்” என்றாள்

    “சிவனிலை நானில் லாமல்
       சிந்தனை செய்க” வென்றாள்!
    “சிவமின்றி சக்தி இல்லை
       ஜீவனும் இல்லை” என்றான்!
    அவர்களுக் குள்ளே கர்வம்
       அங்குகூத் தாடி நின்றான்
    தவறுகள் ஏச்செல் லாமும்
       சினமென மாறிற் றங்கே!

    இருவரும் சினந்து கொண்டார்
       இமயமே குலுங்கக் கண்டார்!
    ஒருவரை ஒருவர் தாக்கி
       ஆயுதம் விடுக்க லானார்…
    பெருவரை தோளும்! மின்னல்
       பேரிடி இடையும் ஆடப்
    பொருதினார்! சிவனெ ழுந்து
       பொற்புடை நடனஞ் செய்தான்!

    தாண்டவம் ஆட லானான்
       தரணியை ஆட்டி விட்டான்
    ஆண்டவர் யாரும் அஞ்சி
       அவ்விடம் சூழ்ந்து விட்டார்
    மாண்டவர் கூட அஞ்ச
       மண்ணிலே உயிர்கள் அஞ்ச
    வேண்டுவோர் எல்லாம் அஞ்ச
       விரிகதிர் திங்கள் அஞ்ச

    (வேறு)

    வளியஞ்ச ஒளியஞ்ச வானஞ்ச மீனஞ்ச
       வாரிதியும் நிலமுமஞ்ச
    வரையஞ்ச நதியஞ்ச முகிலஞ்ச மரமஞ்ச
       வளமான மலர்களஞ்ச
    துளியஞ்சத் துறும்பஞ்சச் செடியஞ்சக் கொடியஞ்சத்
       தோன்றிடும் நிழலுமஞ்சத்
    துயரஞ்ச மகிழ்வஞ்ச உயிரஞ்ச உணர்வஞ்சத்
       துண்டாகும் துகள்களஞ்ச
    கிளியஞ்ச மயிலஞ்சக் குயிலஞ்ச நரியஞ்சக்
       கழுகுகள் தாமுமஞ்சக்
    கின்னரமும் அஞ்சிடக் கீழுலகும் மேலுலகும்
       கிடந்தஞ்சச் சிவனாடினான்!
    நெளிந்தாடி வளைந்தாடி நெற்றிவிழி திறந்தாடி
       நெருப்போடு சிவனாடினான்!
    நெஞ்சோடு நின்றிட்ட பார்வதியின் மேல்கொண்ட
       நேர்கோபத் தாலாடினான்!

    சிவனாட்டம் பேயாட்டாம் பூதங்கள் சேர்ந்தாடும்
       சினத்தாட்டம் தீயினாட்டம்
    சிவப்பேறி நின்றிட்ட வானத்தின் கோலத்தில்
       சீறிவரும் காற்றினாட்டம்!
    தவநாட்டம் கொண்டவரும் கலைநாட்டம் கொண்டவரும்
       தடுமாறும் ஊழியாட்டம்
    தாயற்ற சிவனாட்டாம் அழிவுக்குக் களியாட்டம்
       தரணிகளும் ஆடுமாட்டம்
    அவனாட்டம் கண்டவர்கள் எப்புறமும் அசையாமல்
       அவ்வாறே நின்றிருந்தார்!
    ஆதிசிவ காமியவள் சோகத்தில் கோபத்தில்
       ஆச்சர்ய மாகிநின்றாள்
    கவிநாட்டும் பார்வதியைக் கண்ணுதலின் தீக்கொண்டு
       கங்குவர பொசுக்கிவிட்டான்!
    கரையற்ற கோபத்தின் உச்சத்தில் ஆதிசிவன்
       கண்ணுதலில் சுட்டுவிட்டான்!
    யாகத்தைப் பொடியாக்க வீரபத்தி ரன்தம்மை
       எம்பிரான் உருவாக்கினான்!
    யாகமது நாசமுற பத்திரனும் வில்விட்ட
    அம்பாய்வி ரைந்துசென்றான்!

    வேகத்தில் வந்தகணை வென்றதைத் தேவர்கள்

       வேந்தனிடம் சொல்லிவைத்தார்
    வெந்துபொடி நீறான அம்மைக்கும் உயிரூட்ட.
       வேண்டியவர் கேட்டுவைத்தார்!
    சோகத்தில் நின்றசிவன் சினம்தீர்ந்து மனம்பூத்துச்
       சொன்னபடி கேட்டுவிட்டான்!
    சொல்கொண்டும் அருளென்னும் சுடர்கொண்டும் உமையம்மை
       ஜோதியுயிர் பெற்றுவிட்டாள்
    தேகத்தில் அவளுக்கும் இடந்தந்த சிவனங்கு
       தெய்வத்தின் தெய்வமானான்
    தெளிவிலும் உறுதியின் களியிலும் சமமென்று
       தானர்த்த நாரியானான்!!

    -07.03.2018

     

    Share
  • இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்

    -விவேக்பாரதி


    “இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன் அவர்கள். பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மு.மாறன் ஒரு நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதன் திரைக்கதை அமைப்பு தான் இந்தப் படத்திற்கு பலம் என்று தோன்றுகிறது. இதன் திரைக்கதையைக் குறித்து முதலில் காண்போம். 1950களில் மிகவும் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அக்கிரா குரோசோவாவின் “ரோஷோமான்” என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்த திரைக்கதை உத்தி (ரோஷோமான் தாக்கம்/ Rashomon effect) தான் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது எனலாம்.

    ரோஷோமான் தாக்கம்/Rashomon effect என்பது ஒரே நிகழ்வை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து பல்வேறு கோணங்களில் பிரித்துக் காட்டக்கூடிய ஓர் உத்தி எனலாம். சாத்தியக் கூறுகள், நோக்கம், சாட்சிகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த நிகழ்வானது எந்தக் கதாபாத்திரத்தால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்னும் சிந்தனைத் தளத்தை இந்த உத்தியின் மூலம் பார்வையாளர்கள் உணரலாம். ரோஷோமான் என்னும் ஜப்பானிய திரைப்படமே இந்த உத்தியை முதலில் திரையில் கையாண்டதால் இதற்கு அதன் பெயரே அமையப் பெற்றது. தமிழ்த் திரையில் பிரபல இயக்குநர் திரு எஸ். பாலசந்தர் அவர்கள் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” என்னும் திரைப்படமே இந்த உத்தியில் தமிழில் வெளியான திரைப்படம். இப்படிப் பட்ட திரைக்கதையைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்கிறது “இரவுக்கு ஆயிரம் கண்கள்.”

    ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் பரத் (அருள்நிதி), அவரது காதலி சுசீலாவுக்குத் (மஹிமா நம்பியார்) தொல்லை கொடுக்கும் கணேஷை (அஜ்மல் அமீர்) தட்டிக் கேட்கத் துடிக்கிறார்.  தொழிலதிபர் வசந்த் (ஜான் விஜய்), அவரது மனைவி ரூபலாவை (சாயா சிங்) வெறுக்க, ரூபலாவுக்கு அறிமுகமில்லாத தொலைபேசி எண் மூலம் தொடர்பில் வரும் கணேஷ் ரூபலாவை ஏமாற்றித் தவறாகப் படம்பிடித்ததாகத் தற்கொலைக்கு முயற்சி செய்ய, இதற்கும் சேர்த்துப் பழிவாங்க முற்படுகிறார் பரத்.

    முருகேசன் (ஆனந்த்ராஜ்) என்னும் முதியவர் ஆறுதலாகத் துணை தேவை என்று விளம்பரம் கொடுக்க, கணேஷும் அவரை ஏமாற்றத் தன் காதலி அனிதாவுடன் (வித்யா ப்ரதீப்) முருகேசன் வீட்டுக்குச் சென்று பணம் பறித்துத் தப்பித்து விடுகிறான். பணம் போன துக்கத்திலும் கோபத்திலும் கணேஷைப் பழிவாங்க நினைக்கிறார் முருகேசன்.

    பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் மாயாவுடன் (சுஜா வரூணி) தனிமையில் இருக்க நினைக்கும் நரேன் வைத்தியநாதனும் (ஆடுகளம் நரேன்), கணேஷால் மிரட்டப்பட்டு பணத்தைப் பறிகொடுக்கிறார். மயக்கம் தெளிந்த நரேன் மாயமான மாயாவைத் தேடுகிறார். மாயாவுடன் அவரது மகிழுந்தும் காணாமல் போகிறது. சில நாட்களில் மகிழுந்து கிடைக்கவே, மாயாவையும் கணேஷையும் ஒன்றாகப் பார்க்கும் நரேன், இருவரையும் பழிவாங்க எண்ணுகிறார்.

    இதற்கிடையில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவுடன் தனிமையில் இருக்கும் காணொலிக் காட்சியைக் காட்டி, வசந்திடம் பணம் பறிக்க முயல்கிறான் கணேஷ். வசந்திடம் ரூபலாவின் படத்தையும் காட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்கிறான், அவனைக் கொன்றேனும் அந்த ஆவணத்தைக் கைப்பற்றக் கிளம்புகிறார் வசந்த்.

    படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. அது கணேஷ் வீட்டில் நடக்கிறது? யார் கொலை செய்யப் படுகிறார்? யார் கொலை செய்கிறார்? என்னும் சூழ்ச்சி நிறைந்த முடிச்சுகளைத் திரைக்கதை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுத்தாளர் வைஜெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்)  செய்திகள் மூலம் கவனமாகப் பார்த்துக்கொண்டு தனது அடுத்த கதையாக எழுத நினைக்கிறார். கதையின் திருப்புமுனையை அவர் யூகித்து ஒரு கதை சொல்லி முடிக்க, அடுத்த கணத்தில் அவரும் இறந்து போகிறார். இதுவே இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் கதைக்களம்.

    ஒரு இயக்குநரின் முதல்படம் என்ற அளவில் இதனைப் பார்த்தால் ஆழ்ந்த வேலைப்பாடுகளும், மிகுந்த உழைப்பும் இயல்பாகவே இதில் அவர் செலவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. சாம் சீஎஸ் அவர்களின் பின்னணி இசை திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு மேலும் பலத்தைக் கூட்டி இருக்கிறது. சான் லோகேஷ் அவர்களின் படத்தொகுப்பு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களுக்கும் தனிப் பாராட்டு.

    கதையின் போக்கில், முன்னாள் காதலியின் நினைவில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவின் வலையில் எப்படி விழுகிறார்? எழுத்தாளர் வைஜெயந்தி எதற்காகக் கொல்லப் படுகிறார்? என்ற கேள்விகள் அப்படியே இருக்கின்றன. முருகேசனாக வரும் ஆனந்த் ராஜ் பேசும் வசனங்கள் அனைத்திலும் ஏமாற்றத்தை விட நகைச்சுவை உணர்வே ஓங்கி இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அல்லது அவ்வளவு ஏமாந்ததாக உணர்வதைக் காட்டாமல் இருந்திருக்கலாம். இவை சில கேள்விகள். ஆக மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் நம் அன்றாட வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

    Share