இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்
“இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன் அவர்கள். பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மு.மாறன் ஒரு நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதன் திரைக்கதை அமைப்பு தான் இந்தப் படத்திற்கு பலம் என்று தோன்றுகிறது. இதன் திரைக்கதையைக் குறித்து முதலில் காண்போம். 1950களில் மிகவும் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அக்கிரா குரோசோவாவின் “ரோஷோமான்” என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்த திரைக்கதை உத்தி (ரோஷோமான் தாக்கம்/ Rashomon effect) தான் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது எனலாம்.
ரோஷோமான் தாக்கம்/Rashomon effect என்பது ஒரே நிகழ்வை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து பல்வேறு கோணங்களில் பிரித்துக் காட்டக்கூடிய ஓர் உத்தி எனலாம். சாத்தியக் கூறுகள், நோக்கம், சாட்சிகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த நிகழ்வானது எந்தக் கதாபாத்திரத்தால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்னும் சிந்தனைத் தளத்தை இந்த உத்தியின் மூலம் பார்வையாளர்கள் உணரலாம். ரோஷோமான் என்னும் ஜப்பானிய திரைப்படமே இந்த உத்தியை முதலில் திரையில் கையாண்டதால் இதற்கு அதன் பெயரே அமையப் பெற்றது. தமிழ்த் திரையில் பிரபல இயக்குநர் திரு எஸ். பாலசந்தர் அவர்கள் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” என்னும் திரைப்படமே இந்த உத்தியில் தமிழில் வெளியான திரைப்படம். இப்படிப் பட்ட திரைக்கதையைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்கிறது “இரவுக்கு ஆயிரம் கண்கள்.”
ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் பரத் (அருள்நிதி), அவரது காதலி சுசீலாவுக்குத் (மஹிமா நம்பியார்) தொல்லை கொடுக்கும் கணேஷை (அஜ்மல் அமீர்) தட்டிக் கேட்கத் துடிக்கிறார். தொழிலதிபர் வசந்த் (ஜான் விஜய்), அவரது மனைவி ரூபலாவை (சாயா சிங்) வெறுக்க, ரூபலாவுக்கு அறிமுகமில்லாத தொலைபேசி எண் மூலம் தொடர்பில் வரும் கணேஷ் ரூபலாவை ஏமாற்றித் தவறாகப் படம்பிடித்ததாகத் தற்கொலைக்கு முயற்சி செய்ய, இதற்கும் சேர்த்துப் பழிவாங்க முற்படுகிறார் பரத்.
முருகேசன் (ஆனந்த்ராஜ்) என்னும் முதியவர் ஆறுதலாகத் துணை தேவை என்று விளம்பரம் கொடுக்க, கணேஷும் அவரை ஏமாற்றத் தன் காதலி அனிதாவுடன் (வித்யா ப்ரதீப்) முருகேசன் வீட்டுக்குச் சென்று பணம் பறித்துத் தப்பித்து விடுகிறான். பணம் போன துக்கத்திலும் கோபத்திலும் கணேஷைப் பழிவாங்க நினைக்கிறார் முருகேசன்.
பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் மாயாவுடன் (சுஜா வரூணி) தனிமையில் இருக்க நினைக்கும் நரேன் வைத்தியநாதனும் (ஆடுகளம் நரேன்), கணேஷால் மிரட்டப்பட்டு பணத்தைப் பறிகொடுக்கிறார். மயக்கம் தெளிந்த நரேன் மாயமான மாயாவைத் தேடுகிறார். மாயாவுடன் அவரது மகிழுந்தும் காணாமல் போகிறது. சில நாட்களில் மகிழுந்து கிடைக்கவே, மாயாவையும் கணேஷையும் ஒன்றாகப் பார்க்கும் நரேன், இருவரையும் பழிவாங்க எண்ணுகிறார்.
இதற்கிடையில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவுடன் தனிமையில் இருக்கும் காணொலிக் காட்சியைக் காட்டி, வசந்திடம் பணம் பறிக்க முயல்கிறான் கணேஷ். வசந்திடம் ரூபலாவின் படத்தையும் காட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்கிறான், அவனைக் கொன்றேனும் அந்த ஆவணத்தைக் கைப்பற்றக் கிளம்புகிறார் வசந்த்.
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. அது கணேஷ் வீட்டில் நடக்கிறது? யார் கொலை செய்யப் படுகிறார்? யார் கொலை செய்கிறார்? என்னும் சூழ்ச்சி நிறைந்த முடிச்சுகளைத் திரைக்கதை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுத்தாளர் வைஜெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்) செய்திகள் மூலம் கவனமாகப் பார்த்துக்கொண்டு தனது அடுத்த கதையாக எழுத நினைக்கிறார். கதையின் திருப்புமுனையை அவர் யூகித்து ஒரு கதை சொல்லி முடிக்க, அடுத்த கணத்தில் அவரும் இறந்து போகிறார். இதுவே இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் கதைக்களம்.
ஒரு இயக்குநரின் முதல்படம் என்ற அளவில் இதனைப் பார்த்தால் ஆழ்ந்த வேலைப்பாடுகளும், மிகுந்த உழைப்பும் இயல்பாகவே இதில் அவர் செலவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. சாம் சீஎஸ் அவர்களின் பின்னணி இசை திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு மேலும் பலத்தைக் கூட்டி இருக்கிறது. சான் லோகேஷ் அவர்களின் படத்தொகுப்பு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களுக்கும் தனிப் பாராட்டு.
கதையின் போக்கில், முன்னாள் காதலியின் நினைவில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவின் வலையில் எப்படி விழுகிறார்? எழுத்தாளர் வைஜெயந்தி எதற்காகக் கொல்லப் படுகிறார்? என்ற கேள்விகள் அப்படியே இருக்கின்றன. முருகேசனாக வரும் ஆனந்த் ராஜ் பேசும் வசனங்கள் அனைத்திலும் ஏமாற்றத்தை விட நகைச்சுவை உணர்வே ஓங்கி இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அல்லது அவ்வளவு ஏமாந்ததாக உணர்வதைக் காட்டாமல் இருந்திருக்கலாம். இவை சில கேள்விகள். ஆக மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் நம் அன்றாட வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு.