நிறுத்திச் சொன்னால் பாசம் தெரியும்
அழுத்திச் சொன்னால் அர்த்தம் அறியும்
மெதுவாய்ச் சொன்னால் கடினம் புரியும்
பணிவாய்ச் சொன்னால் கருணை விரியும்
கத்திச் சொன்னால் தனிமை தணியும்
கதறிச் சொன்னால் விலகல் சரியும்
நீட்டிச் சொன்னால் காரியம் முடியும்
காட்டிச் சொன்னால் கல்லும் கரையும்
பாடிச் சொன்னால் அன்பின் குளிர்ச்சி
வாடிச் சொன்னால் அருளின் வளர்ச்சி
அணைத்துச் சொன்னால் அதுவே உணர்ச்சி
அடுக்கிச் சொன்னால் எதுவோ கிளர்ச்சி
அப்பா என்றால் அப்பாலில்லை
அப்பாடி எனில் அடிப்பாரில்லை
அப்பா தெய்வம் இப்பாரிட்டால்
எப்போதும் பயம் இல்லை இல்லை
சொல்லிப் பாருங்கள் இதுபோல் இன்று
பொருளைக் காண்பீர் அனுபவம் கொண்டு.
சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY